கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: அமானுஷம் கிரைம்
கதைப்பதிவு: January 24, 2024
பார்வையிட்டோர்: 17,904 
 
 

(1992ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-5 | அத்தியாயம் 6-10 | அத்தியாயம் 11-15

அத்தியாயம்-6

ராமநாதன் உடனே தன் கதையை ஆரம்பித்தான். “என் தந்தை சபாபதி, சென்னையில் ஒரு போட்டோக் கடை வைத்திருந்தார். ஆனால் என் தாயோ. ஒரு பெரிய லட்சாதிபதியின் மகள். பொருளாதார நிலைப்படி பார்த்தால், என் தாய்க்கும் தந்தைக்கும் திருமணம் நடந்திருக்கவே முடியாது, ஆனால் காதல் என்பது பொருளாதாரம், மதம், சாதி முதலியவைகளுக்கு அப்பாற்பட்டதல்லவா? 

சென்னைக்கு விடுமுறைக்காக வந்திருந்த என் தாய், என் தந்தையைச் சந்திக்க நேர்ந்தது. என் தந்தை சபாபதி அழகான தோற்றமும், கவர்ச்சியான பேச்சும் உடையவர். அவருடைய கண்கள். பார்ப்பவர் உள்ளத்தைக் காந்தம் போல் கவர்ந்து இழுக்கும் தன்மையுடையதாக இருந்தது என்று சொல்வார்கள். காந்தக் கண்கள், பாதாம் பருப்பு போன்ற கண்கள், மனோவசியக் கண்கள் என்று சொல்லப்படும் வகையைச் சேர்ந்தது என் தந்தையின் விழிகள். 

அந்த விழிகளின் காந்தத்தால், என் தாயின் மனம் இழுக்கப்பட்டதில் ஆச்சரியமில்லை. என் தாய் ஒரு போட்டோக் கடைக்காரரை மணப்பதில், என் மாமா ராமலிங்கத்துக்கோ, என் பாட்டனாருக்கோ விருப்பம் இல்லை. 

ஆனால் என் தாய் பிடிவாதமாக என் தந்தை சபாபதியை மணந்து, சென்னைக்கு வந்து சேர்ந்தாள். என் தாயைப் பெற்ற பாட்டனார் தன் ஒரே மகளுக்குப் பெரிய ஜமீன்தார் வீட்டு மாப்பிள்ளையைப் பார்த்திருந்தார். ஆகையால் ஏமாந்து போனார். அந்த ஏமாற்றமே, அவரை நாளடைவில் கொன்றுவிட்டது. 

என் தந்தையின் தோற்றம் தான் கவர்ச்சியாக இருந்ததேயல்லாமல், அவரது குணம், நடத்தை எல்லாம் நேர்மாறாக இருந்தன. கல்யாணமான மறுமாதமே, அவர் என் தாயை இம்சிக்கத் தொடங்கிவிட்டார். 

அவருடைய குடி, சூது முதலிய கெட்ட பழக்கங்களுக்கு, பணம் சம்பாதிக்கும் கருவியாக என் தாயை உபயோகப்படுத்த ஆரம்பித்தார். 

என் தாயோ, தான் விரும்பி மணந்த கணவனைப் பற்றித் தன் சகோதரனிடம்கூட அவதூறு சொல்லக்கூடாது; சொன்னால் தனக்குத் தான் அவமானம் என்று என் தந்தையின் நடத்தையை மூடி மறைத்து வந்தாள். 

நாட்கள் செல்லச் செல்ல, என் தந்தையோடு என் தாய் நடத்திய வாழ்வு நரகமாகிக் கொண்டே வந்தது. உள்ளம் உடைந்துபோய், உடல் மெலிந்துபோன என் தாய், நான் மூன்று வயதாக இருக்கும்போது, இந்த உலகத்தைவிட்டே சென்று விட்டாள், 

என் தாய் சாகும்போது அவள் சகோதரன் ராமலிங்கத்திடம், “அப்பாவின் உள்ளத்தை முறித்து, நான் காதல் திருமணம் செய்துகொண்டேன். அதன் பலன்தான், நான் இப்போது மனமுடைந்து சாகிறேன். என் குழந்தை ராமநாதனையாவது நீ உன்னோடு எடுத்துப் போய், உன் மகனைப் போல் வளர்த்து வா.” என்று சொல்லிவிட்டு இறந்தாளாம். 

ஆனால் என் தந்தை என்னை என் மாமாவுடன் அனுப்ப மறுத்தாராம். என் தாய் அணிந்திருந்த லட்ச ரூபாய் நகைகளையும், இருபத்தைந்தாயிரம் ரூபாயும் கொடுத்தால் தான், என்னை அனுப்ப முடியும் என்று பிடிவாதம் செய்தாராம். நகைக்கும், பணத்துக்கும் மகனை விலை பேசும் மனிதனிடம் குழந்தையை விடுவது ஆபத்து என்று நினைத்து, தாயின் நகைகளையும், கேட்ட பணத்தையும் கொடுத்துவிட்டு என்னைத் திருச்சிக்கே அழைத்து வந்துவிட்டார் என் மாமா. 

அன்று முதல் நான் என் மாமா வீட்டிலேயே வாழ்ந்து வந்தேன். என் தந்தை என்ன ஆனார், அவர் மறுபடியும் மணந்துகொண்டாரா என்ற விஷயங்கள் எதுவும் எங்களுக்குத் தெரியாது. நானும். என் மாமாவின் தாயில்லாப் பெண் சீதாவும் ஒன்றாக வளர்க்கப்பட்டோம். எங்கள் இருவருக்குமே, தாயும் தந்தையும் ராமலிங்கமே. 

வருடங்கள் பல சென்று, நான் காலேஜில் படித்துப் பட்டம் பெற்று, பின்பு, சென்னை சட்டக் கல்லூரியிலும் படித்துப் பட்டம் பெற்றேன். வக்கீலாகத் திருச்சியிலேயே வாழ்க்கை தொடங்க வேண்டும் என்று என் மாமா தீர்மானித்தார். 

இந்த நிலையில் என் மாமாவுக்கு ஒரு தந்தி வந்தது. அதில், “ராமநாதனின் தந்தை இறந்து விட்டார். ராமநாதனை 7, சோலைத் தெரு, சிந்தாதிரிப்பேட்டைக்கு அழைத்து வரவும். மீனாட்சி அம்மாள்” என்று எழுதி இருந்தது. 

எனக்கோ என் மாமாவுக்கோ மீனாட்சியம்மாள் யார் என்ற விவரம் ஒன்றும் புரியவில்லை. முதலில் மாமா அந்தத் தந்தியைப் புறக் கணித்து விடுவது என்றே நினைத்தார். 

ஆனால் சீதா, தந்தையிடம், “அப்பா! சபாபதி என்னதான் கொடியவரானாலும், அத்தானுடைய அப்பா. அவருக்கு உடலும் உயிரும் கொடுத்தவர். அவர் உடலுக்குத் தீ வைக்கும் இறுதிக் கடமையையாவது அத்தான் செய்துதான் ஆகவேண்டும்,” என்று சொன்னாள். 

ஆனால் என் மாமா, “சீதா! எனக்கு அந்தச் சபாபதியை நினைத்தாலே பயம் ஏற்படுகிறது. அவன் இருந்தபோது, உன் அத்தையின் வாழ்க்கையைப் பாழாக்கினான். இப்போது அவன் செத்தும் நம்மைக் கெடுப்பானோ என்ற பயம் உண்டாகிறது. அதுதான் யோசிக்கிறேன்.” என்றார். 

எனக்கு என் அப்பாவின் முகத்தை ஒருமுறையாவது பார்க்க வேண்டுமென்ற ஆசை இருந்தது. ஆகையால் நாங்கள் இருவரும் ரயிலேறிச் சென்னைக்கு வந்தோம். 

உடனே சிந்தாதிரிப்பேட்டை சோலைத் தெருவுக்குக் கார் எடுத்துக் கொண்டு போனோம். சோலைத்தெரு என்பது. மிகவும் குறுகிய சந்து. அதனுள் கார் புகவே முடியாது. காரை விட்டு இறங்கி, ஏழாம் நம்பர் வீட்டை நோக்கிச் சென்றோம். அந்த வீட்டு ரேழியில், இறந்துபோன உருவம் கிடந்தது. அது என் தந்தையாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதன் பக்கத்தில் மீனாட்சியம்மாள் தனியாக உட்கார்ந்து அழுதபடி இருந்தாள்.நாங்கள் உள்ளே நுழையவும், எங்களை ஆச்சரியத்தோடு பார்த்தாள் மீனாட்சி அம்மாள். உடனே என்னை யார் என்று ஊகித்துக் கொண்டு, “வா ராமநாதா.வா. நான்தான் உன்னுடைய சிற்றன்னை. உன் தாய்க்குப் பின், இவரைக் கைப் பிடித்தவள்,” என்று கூறி என் தந்தையின் உடலைக் காட்டினாள். என் தந்தையின் உடையும், உடலும், அவர் வாழ்க்கையில் தாண்டி வந்திருக்கும் சோதனைகளைத் தெளிவாக விளக்கின. என் தாயின் மனத்தைக் கவர்ந்து, என் தந்தையானவரின் முகத்தை அப்படியே விறைத்துப் பார்த்தபடியே இருந்தேன். 

என் மனத்தில் அவர்மீது இரக்கம் ஏற்படவில்லை. ஆனால் அவரை என்னால் வெறுக்கவும் முடியவில்லை. அப்போது அந்த இடத்தில் அழுத கண்களோடு ஓர் இளைஞன் வந்தான். அவனும் என்னைப் பார்த்தான். நானும் அவனைப் பார்த்தேன். அதற்குள் மீனாட்சியம்மாள், “திலீபா! இதுதான் ராமநாதன்! அண்ணன். ஒன்றுவிட்ட அண்ணன்”, என்று கூறினாள் 

திலீபன் ஓர் ஏளனச் சிரிப்போடு என்னைப் பார்த்துவிட்டு, “பரவாயில்லை. மரணம் பிரிக்கவும் செய்கிறது. இணைக்கவும் செய்கிறது,” என்றான். அப்போதுதான் முதன்முறையாகத் திலீபனைப் பார்த்தேன். 

அவன் அணிந்திருந்த கிழிந்த சட்டையும், கறைகள் படிந்த வேட்டியும் நான் அணிந்திருந்த சில்க் சூட்டும் கோட்டும், எங்கள் இருவரின் வித்தியாசமான பொருளாதார நிலைகளைக் காட்டின. 

எங்கள் இருவரையும் இணைத்தது, அந்த உயிரில்லாத பிரேதம். அந்த இணைப்பின் விளைவுகளை என்னவென்று சொல்வது!” என்று சொல்லிவிட்டு ராமநாதன் தன் பேச்சை நிறுத்தினான் 

அப்போது நீதிபதி, “நீங்கள் சுட்ட திலீபன், உங்கள் சகோதரனா?” என்று கேட்டார். 

அதற்கு ராமநாதன், “ஒரு விதத்தில் திலீபன் என் சிற்றன்னை வயிற்றில் பிறந்த சகோதரன்தான். ஆனால் நான் சுட்டது திலீபனை அல்லவே அல்ல,” என்று சொல்லி நிறுத்தினான். 

நீதிபதி திகைப்போடு ராமநாதனை நோக்கினார். அவரது திகைப்பைப் புரிந்துகொண்ட ராமநாதன், “இப்போது நான் கூறுவது முரணாகத்தான் தோன்றும். அர்த்தமில்லாத, புரியாத வார்த்தைகளாகத்தான் தோன்றும். ஆனால் முழுக் கதையையும் கேட்டதும், உங்களுக்கு நான் கூறுவதன் அர்த்தம் தெரியும்,” என்றான். 

மேலும் ராமநாதன் தொடர்ந்தான், “என் தந்தையின் ஈமக்கடன்கள் முடிந்ததும், நானும், திலீபனும், என் மாமாவும், என் தந்தையின் விடுதிக்கே திரும்பினோம். 

கணவனை இழந்த துக்கத்தின் நடுவேயும், மீனாட்சி அம்மாள், தான் அந்த வீட்டுக்குரியவள் என்ற பொறுப்பை மறக்கவில்லை. எனக்கும் என் மாமாவுக்கும் சமையல் தயார் செய்து வைத்திருந்தாள். எனக்கு அந்த வீட்டில் உணவருந்தவே கூச்சமாக இருந்தது. 

தட்டிக் கழிக்க முடியாத நிலையில், சாப்பிட்டோம். திலீபனும் எங்களிடம் அதிகமாகப் பேசவில்லை. மெளனமாகவே, உணவருந்திவிட்டுத் தெருத் திண்ணைக்கு வந்தோம். திண்ணையில் கொசுக்கடி உபத்திரவம் தாங்கவில்லை. திலீபன் வீட்டிற்குள் சென்றதும், என் மாமா என்னிடம் ரகசியக் குரலில், “வீட்டின் நிலையைப் பார்த்தால், உங்கப்பா ஒன்றும் மிச்சம் வைக்கவில்லை என்று தெரிகிறது. அந்தம்மா – உன் சித்தி – உன்னை ராமநாதா, ராமநாதா. என்று உபசரிப்பது அதன் காரணமாகத்தான். திக்கற்ற இந்த நிலையில், நம்மிடம் ஒட்டிக்கொள்ள நினைத்தாலும் நினைக்கலாம்”, என்றார் 

நான், ”இல்லை மாமா. மீனாட்சி அம்மாளைப் பார்த்தால், ரொம்ப சாதுவாகத் தெரிகிறது,” என்றேன் 

உடனே மாமா, “ராமநாதா! உனக்கென்ன தெரியும்! ஏதோ எதிர் பார்த்துத்தான் நமக்குத் தந்தியே கொடுத்திருக்கிறார்கள். உங்கப்பா உயிருடன் இருக்கும்போதே, இவர்களோடு எந்த உறவும் இல்லை. அவர் போனபிறகு, இவர்களிடத்தில் என்ன உறவு வேண்டியிருக்கிறது? மற்ற ஈமக் கடன்களையெல்லாம் ஊரிலே போய்ச் செய்து கொள்ளலாம். இரவு வண்டிக்கே ஊருக்குப் போய்விடுவோம்” என்றார். 

அவர் கூறியது எனக்குச் சற்றுக் கடுமையாகப்பட்டது. இருந்தாலும் நான் எந்தவித மறுப்பும் சொல்லவில்லை. “அப்படியே செய்வோம். மாமா” என்றேன். 

தெருத் திண்ணையை அடுத்த ரேழியில், யாரோ நகரும் சப்தம் கேட்டு, திரும்பிப் பார்த்தேன். திலீபனும், அவன் தாய் மீனாட்சி அம்மாளும் நின்று கொண்டிருந்தார்கள். திலீபன் எங்கள் இருவரையும் கோபமாகப் பார்த்ததிலிருந்து, நாங்கள் சற்றுமுன்பு பேசியதை அவர்கள் மறைந்துநின்று கேட்டிருப்பார்களோ என்று தோன்றியது. 

மீனாட்சி அம்மாள் முகத்தில் ஒருவித அமைதியும், சோகமும்தான் தென்பட்டன. 

எங்களைப் பார்த்து அந்த அம்மாள். “நீங்கள் பங்களாவில் வசதியாக வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள். இந்தச் சாக்கடைச் சந்தில், இந்தச் சின்ன வீட்டில், பத்துப் பதினைந்து நாள் தங்கியிருந்து இறுதிச் சடங்கெல்லாம் நடத்தி முடிப்பது மிகவும் கஷ்டம். நீங்கள் திருச்சிக்கே போய்ச் செய்யுங்கள். இறந்து போன வருக்கும் காவிரிக் கரையில் கருமாதி நடந்தால் ரொம்பப் புண்ணியம் கிடைக்கும். அவர் வாழ்ந்தபோது தான் எப்படி எப்படியோ இருந்து விட்டார். ராமநாதா! உன்னைப் போன்ற ஒரு நல்ல பிள்ளையினாலாவது அவர் நல்ல கதி அடையட்டும். அவரை எப்படியாவது நல்ல கதிக்குக் கரை ஏற்றி விட்டு விடப்பா,” என்று அழுதபடி கேட்டுக் கொண்டாள். 

மீனாட்சியம்மாள் யாரோ நான் யாரோ என்று இருந்தாலும், அவள் பேசிய வார்த்தைகள், என் மனத்தில் ஒருவிதமான வேதனையைத்தான் தந்தன. அந்த அம்மாளிடத்தில் எவ்வளவோ ஆறுதல் வார்த்தைகள் கூற வேண்டும் என்ற ஆசை எழுந்தது. திலீபனிடத்திலும், ‘நீ என்ன படிக்கிறாய், எப்படி இருக்கிறாய், எதிர்காலத்தில் என்ன செய்யப் போகி றாய்?” என்றெல்லாம் ஓர் அண் ணன் தம்பியிடம் பரிவுடன் கேட்கும் கேள்விகளையெல்லாம் கேட்க வேண்டும் என்று தோன்றியது. 

ஆனால், என் மாமாவின் முகத்தைப் பார்த்ததும், என் மனத்தில் எழுந்த கேள்விகள் எல்லாம் மனத்தோடு நின்றுவிட்டன. என் மாமா எந்தவிதப் பதிலும் சொல்லாமல், செருப்பை அணிந்துகொண்டு புறப் படத் தயார் ஆனார். 

நான் மட்டும் மீனாட்சி அம்மாளை ஒருமுறை நோக்கினேன். நாற்பது வயதுத் தோற்றம் – திலகத்தை இழந்த நெற்றி – கிழிந்த புடவை, அதிலும் விதவை என்ற நிலை! பொதுவாக, ஒருவருக்கு இரண்டாவது மனைவியாக வாழ்க்கைப்படும் பெண்களுக்குக் கல்யாணத்தன்றே, தாங்கள் வாழ்க்கையில் ஒரு நாள் விதவையாவோம் என்பது ஓரளவு நிச்சயமான விதிதானே? 

அந்த விதியிலிருந்து தப்பி, மஞ்சள் குங்குமத்தோடு அவள் காடு வரை செல்ல வேண்டுமானால், ரயில் விபத்து, காலரா, மாரடைப்பு – இம்மாதிரியான அதிர்ஷ்ட நிகழ்ச்சிகள் கைகொடுக்க வேண்டும். கைம்பெண் நிலையிலும் கேடுகெட்ட நிலை ஏழைக் கைம்பெண் என்ற நிலை. அந்தப் பரிதாப நிலையிலிருந்த திலீபனின் தாயிடம், “போய்விட்டு வருகிறேன்ம்மா”, என்றாவது ஒரு வார்த்தை சொல்ல என் மனம் விரும்பியது. 

நான் விடை பெற்றுக் கொள்ள வாய் அசைப்பதற்கு முன் என் மாமா, ”ராமநாதா! இறந்த வீட்டிலிருந்து போகும்போது ‘போய் வருகிறேன், என்று சொல்வது கூடாது”, என்று எனக்கு, சம்பிரதாயப் பழக்கத்தை எடுத்துச் சொன்னார். 

நான் சொல்ல நினைத்ததையும், சொல்லாமல் செருப்பை அணிந்து கொண்டு, திலீபனையும், மீனாட்சி அம்மாளையும் ஒருமுறை பார்த்து விட்டு, கொசுக்கள் வாழ்ந்த அந்தச் சாக்கடைச் சந்தில் இறங்கினேன். 

அதே சமயத்தில், வீட்டின் ரேழியிலிருந்து திலீபன் கூறும் வார்த்தைகள் என் செவியில் விழுந்தன. “எங்கிருந்தோ வந்தான் ஒரு மகன் – தந்தையின் உடலை எரித்துவிட்டுச் சென்றான்.” 

மீனாட்சி அம்மாள், “திலீபா! சும்மா இரு,” என்றாள். 

திலீபன், “விழுந்தால் என்னம்மா?” என்று பதில் அளித்தான். 

நானும்,மாமாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு பேசாமல் நடந்து சென்றோம். 

அத்தியாயம்-7

திருச்சி நோக்கிச் செல்லும் ரயிலில் உட்கார்ந்த படி நான் சிந்தனையில் ஆழ்ந்திருந்தேன். என் மனம் ஓயாமல் என் தந்தையைச் சுற்றியே வட்டமிட்டது. அவர் படுத்திருந்த நிலை, அவர் தோற்றம், அவர் வாழ்ந்தபோது அவர் என் தாய்க்கு இழைத்த கொடுமை – இம் மாதிரி நினைவுகள் என் மனத்தில் தோய்ந்து நிறைந்தன. 

திருச்சி வந்து சேர்ந்ததும், சில நாட்களில், என் மனம் தந்தையை மறக்க ஆரம்பித்தது. மீனாட்சி அம்மாள், திலீபன் ஆகியோரின் நினைவும், ரயில் பிரயாணத்தில் நமக்கு ஏற்படும் நட்பைப்போல் சில நாட்கள் இருந்து மறைந்தது. 

எதிர்காலத்தில் எனக்கு நடக்க விருந்த நிகழ்ச்சிகளில்தான், என் கவனம் அனைத்தும் சென்றது. காலையில் என்னுடைய சீனியர் வக்கீல் வீட்டுக்குச் செல்வது, நடுப்பகலில் கோர்ட்டுக்குச் சென்று அங்கு என் சீனியருக்கு உதவியாக இருப்பது, இரவில் வீடு திரும்பி சீதாவின் சங்கீதத்தை அவள் வீணையோடு பாடும் பாட்டைக் கேட்பது இப்படியே என் காலம் கழிந்தது. 

சீதா வீணையை வைத்துக் கொண்டு அற்புதமாகப் பாடுவாள். அவள் பாடும்போது அவள் தந்தை – மாமா ராமலிங்கம் – தன்னை மறந்து விடுவார். அவரது கண்கள் மூடிய படியே, சீதாவின் கானத்தில் லயித்த படி இருக்கும். அவரது மூடிய கண்களிலிருந்து கண்ணீர்கூட வழியும். சங்கீதத்தை அழுதபடியே ரசிக்கும் இனத்தைச் சேர்ந்தவர் மாமா. 

என்னைப் பொறுத்தவரையில், சங்கீதம் என்பது ஒரு விளங்காப் பொருளாகத்தான் இருந்தது. ஏதோ சில ராகங்கள்தான் என்னைக் கவரும். சிந்து பைரவி, காபி போன்ற ராகங்களில் சீதா தமிழ்ப் பதங்கள் பாடும்போதுதான், என் மனம் உண்மையிலேயே மயங்கும். மற்றப்படி, நான் ஒப்புக்காகத்தான் சீதா பாடும்போது உட்கார்ந்திருப்பேன். 

இசை என்னைக் கவரவில்லை என்று சொல்லிக் கொள்ள எனக்கு வெட்கம். சங்கீதத்தை ரசிக்கத் தெரியாதவன் பாமரன்! நான் வெறும் பாமரனாக இருக்க விரும்பவில்லை. ஆகையால், அவ்வப்போது திருச்சி மலைக்கோட்டை நூற்றுக்கால் மண்டபத்தில் நடக்கும் சங்கீதக் கச்சேரிக்கு, சீதாவை அழைத்துப் போவேன். கச்சேரி முடியும் வரை நான் பொறுமையுடன் இருந்து, அவளை மறுபடியும் அழைத்து வருவேன். அந்த நாட்களில் நான் கற்ற பொறுமைதான் எனக்கு வாழ்வில் சகிப்புத் தன்மையைக் கொடுத்தது என்று கூடச் சொல்லலாம். 

என் மாமா. சீதாவின் கானத்தை ரசிக்க வேறு காரணமும் உண்டு. சீதா உருவத்திலும், சுபாவத்திலும் அத்தையைப் போலவே அதாவது என் தாயைப் போலவே இருக்கிறாள் என்று என் மாமா அடிக்கடி சொல்வார். சீதா பாடும்போது, இறந்து போன தன் சகோதரியே திரும்பி வந்து பாடுவதாக நினைப்பார் மாமா. அதனால்தான், அவள் பாடும்போதெல்லாம் மாமாவின் கண்கள் கலங்கும். 

அவர் அடிக்கடி, “சீதா! எல்லா விதத்திலும் நீ உன் அத்தையைப் போலவே இருக்கிறாய். அவள். அழகு, அவள் பிடிவாதம், அவளுடைய பாடும் திறமை எல்லாம் இருக்கின்றன உன்னிடம். ஆனால் அவள் வாழ்க்கை துக்கமாக அமைந்தது போல், உன் வாழ்வு அமையக் கூடாது என்றுதான் ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்”, என்று சொல்லுவார். 

அவர் சொன்ன வார்த்தைகளின் உண்மை, எனக்கு அப்போது விளங்கவில்லை. சீதாவை எல்லோருமே சிறந்த அழகி என்றுதான் சொல்லுவார்கள். அவளது மின்னும் தங்கமேனி, உருண்டு திரண்ட உடல், எந்த ஆடவன் மனத்திலும் ஆசை என்னும் ஆவேசத்தை உண்டு பண்ணாமல் இருக்காது. 

சீதாவின் உடலில் எலும்பு மூலைகளே கிடையாது என்று சொல்லிவிடலாம். தெருவில் அவளோடு நடந்து சென்றால், மற்றவர்கள் திரும்பிப் பார்ப்பது பெரிய வேதனையாக இருக்கும். அத்தகைய சீதாவை நாம் மனைவியாக அடையப் போகிறோம் என்று அகமகிழ்ந்திருந்தேன். 

சீதாவின் அழகு, மற்றவர் மனத்தில் உணர்ச்சிப் புயலை எழுப்பக்கூடியதாயிருந்தாலும், சீதா என்னவோ தன் அழகின் பலத்தை அறியாதவளாகவே இருந்தாள். குழந்தை போல் என்னிடம் வந்து அடிக்கடி என் மேல் உராய்ந்தபடி கொஞ்சிப் பேசுவாள். சிறு விஷயங்களுக்காகச் சண்டை போடுவாள். அவளுடைய ஸ்பரிசம் எனக்கு ஏற்படும்போதெல்லாம், என் மனம் கலக்கமடையும். என் உணர்ச்சிகளை நானே அடக்கிக் கொள்வேன். எதிர்காலத்தில் என்னை வந்து அடையவேண்டியவள் தானே என்று பொறுமையோடு இருப்பேன். 

மாமாவுக்குத் தெரியாமல், படித்தால் உள்ளத்தை வியர்க்க வைக்கும் காதல் வர்ணனை நிறைந்த சில காதல் புத்தகங்களைக் கொண்டு வந்து அவளிடம் கொடுத்துப் படிக்க வைத்தேன். அப்போதாவது . அவளுக்கு உடல் அடைந்த பருவத்துக்கேற்ப மனமும் பக்குவம் அடையும் என்று எண்ணினேன். ஆனால் அந்தப் புத்தகங்கள் அவளுக்கு சோர்வைத்தான் கொடுத்தன. 

“என்ன அத்தான்! இந்தப் புத்தகங்களையெல்லாம் நீங்கள் எப்படிப் பொறுமையாகப் படிக்கிறீர்கள்? ஒரே போரிங்காக இல்லை?… இந்த ஆசிரியர் சுத்த முட்டாள் அத்தான். புத்தகம் பூராவும், காதலன் காதலியை முறைத்துப் பார்க்கிறான், காதலி தலைகுனிந்து கொண்டு தரையைக் கீறுகிறாள் என்றே எழுதியிருக்கிறாரே!” என்றெல்லாம் கேட்பாள். 

நான் அவளிடம் என்ன சொல்வதென்றே தெரியாமல் திகைத்தேன். “புத்தகத்தில் பத்தாவது அத்தியாயம் படித்தாயா?” என்று கேட்டேன். 

அந்தப் புத்தகத்தில் பத்தாவது அத்தியாயத்தில்தான். கதாநாயகன் ஓடும் கதாநாயகியின் தோளைப் பிடித்து நிறுத்துகிறான். அவன் கையில், அவள் அணிந்திருக்கும் சோளி கிழிந்து வந்து, அவள் உடலை வெளிப்படுத்துகிறது. கதாநாயகி தன் கைகளால் மார்பை மூடியபடி,கதாநாயகனை நெருங்குகிறாள். கதாநாயகன் அவளை அணைத்துக் கொள்கிறான். கதாநாயகி ஆனந்தப் பெருமூச்சு விடுகிறாள் என்று ஒரு வர்ணனை ஆசிரியர் தந்திருந்தார். 

சீதா அந்தக் காட்சியின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டதாகவே தெரியவில்லை. உடனே என்னிடம், “அந்தச் சோளியைக் கிழிக்கிற அத்தியாயம்தானே? தன் சோளியைக் கிழித்தால் அவன் கன்னத்தில் ஓங்கி அறையாமல் எதற்காக அவள் ஆனந்தப் பெருமூச்சு விடணும்? இந்த ஆசிரியருக்கு எப்போதுமே துணியைக் கிழிக்கிற வேலைதான் அத்தான்! இவர் கதை எழுதுவதை நிறுத்திவிட்டு, எங்காவது ஜவுளிக் கடையிலே போய்த் துணியைக் கிழிக்கச் சொல்லுங்கள்!” என்றாள். 

உண்மையிலேயே அவளுக்கு ஒன்றும் புரியவில்லையா, அல்லது ஒன்றும் தெரியாதவள் போல் நடித்து, நான் அம்மாதிரி புத்தகங்கள் படிப்பதைக் குறித்துக் கண்டிக்காமல் கண்டிக்கிறாளா என்றும் புரியவில்லை. என் எதிர்கால மனைவியின் வெள்ளை உள்ளத்தை நாமே ஏன் கெடுக்க வேண்டும் என்று நினைத்து, அன்று முதல் அவளுக்கு அம்மாதிரி புத்தகங்கள் வாங்கி வருவதை நிறுத்திக் கொண்டேன். 

என் மாமாவோ, எனக்கும் சீதாவுக்கும் சீக்கிரமே கல்யாணம் செய்துவிட வேண்டும் என்று ஏற்பாடுகள் செய்யத் தொடங்கினார். ஆனால் என் தந்தையின் மரணம் நடுவில் வந்து குறுக்கிட்டதால், என் திருமணத்தைச் சில மாதங்களுக்குத் தள்ளிப் போடும்படி ஆகிவிட்டது. 

என் தந்தை இறந்த ஒரு மாதம் கழித்து, ஒரு நாள், நான் ஆடையணிந்து என்னுடைய சீனியர் வீட்டுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தேன். என் மாமாவும் ஒரு கண்டிராக்ட் விஷயமாகக் கலெக்டர் ஆபீஸுக்குச் செல்ல வேண்டுமென்று புறப்பட்டபடி இருந்தார். எதேச்சையாக நான் ஜன்னல் வழியாகப் பார்த்தேன். எங்கள் பங்களா வாசலில் ஒரு குதிரை வண்டி வந்து நின்றது. அதிலிருந்து திலீபன் ஒரு தகரப் பெட்டியுடன் இறங்கினான். அவன் பின்னால் மீனாட்சி அம்மாளும் இறங்கினாள். என் மாமாவும், ஜன்னல் பக்கம் வந்து அவர்களைப் பார்த்தார். அவர் முகம் வேதனையால் சுருங்கியது. 

“என்ன ராமநாதா! நான் சொன்னது என்ன? உன் சித்தியும் ஒன்றுவிட்ட சகோதரனும் வந்துவிட்டார்கள். நிச்சயமாக நம்மிடம் பண உதவி கேட்கத்தான் வந்திருக்கிறார்கள்.”, என்றார். 

எனக்கும் அவர் சொன்னது உண்மை என்றே தோன்றியது. “என்ன செய்யப் போகிறீர்கள் மாமா?” என்று கேட்டேன். மாமா யோசித்தார். 

பிறகு என்னைப் பார்த்து, “என்ன செய்வது? லட்ச ரூபாய் நகையும், இருபத்தைந்தாயிரம் ரூபாயும் அப்போது உங்கப்பாவிடம் தொலைத்தேன். அதோடு சேர்த்து, இன்னமும் ஓராயிரத்தையும் தொலைத்துவிட வேண்டியதுதான். நீ ஒன்றுமே பேசாதே ராமநாதா. அந்த அம்மாள் பெரிதாக அடிபோடுவதற்குள்ளே, நானே ஏதாவது கொடுத்து வீட்டைவிட்டு அனுப்பி விடுகிறேன்,” என்றார். 

நானும் சிந்தித்தபடி நின்றேன். மீனாட்சி அம்மாள், “ராமநாதா!” என்று கூப்பிட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தாள். 

அவளோடு, அவள் பின்புறம் திலீபனும் அந்தப் பழைய தகரப் பெட்டியைத் தூக்கியபடி வந்தான். என் மாமா பேசாமல் நின்றார். 

நான், “வாங்கம்மா. வா திலீபா!அப்படி சோபாவில் உட்காருங்கள்,” என்றேன். 

மாமா ஒன்றுமே பேசவில்லை. இன்னொரு சோபாவில் திலீபனும், மூன்றாவது வகுப்பில் இரவுப் பிரயாணம் செய்த களைப்பினால் அயர்ந்துபோய் சோபாவில் கொட்டாவி விட்டபடி உட்கார்ந்தான். 

மீனாட்சி அம்மாள் உட்காராமல் நின்றபடி இருந்தாள். மீனாட்சி அம்மாளுக்கு அந்த வீட்டில் தான் ஒரு வரவேற்கப்படாத விருந்தாளி என்று நன்றாகத் தெரிந்தது. அவளுக்கு அதைக் கண்டு வருத்தமோ கோபமோ ஏற்பட்டதாகவும் தெரியவில்லை. 

அமைதியான குரலில், மீனாட்சி அம்மாள் பேசத் தொடங்கினாள், என் மாமாவைப் பார்த்து.

”உங்கள் மனத்தில் இருக்கிற வேதனை, எனக்குத் தெரியாமல் இல்லை. உங்கள் ஒரே தங்கை எவ்வளவோ சீரும் சிறப்புமாக வாழ்ந்திருக்க வேண்டியவள்.. அவளை நரகத்திற்குத் தள்ளும்படியாக ஆகி விட்டது. உங்கள் தங்கைக்குப் பிறகு அந்த இடத்தைப் பிடித்த நானும், ஒன்றும் நன்றாக வாழ்ந்துவிடவில்லை. வசவும் திட்டும்தான் நான் கண்ட சுகம். உங்கள் தங்கை செல்லமாக வளர்ந்தவள். அதனால்தான். தாங்கிக் கொள்ளாமல் அவள் இறந்து விட்டாள். பிறவியிலிருந்தே ஏழையான நான், அதைச் சகித்துக்கொள்ள முடிந்தது. அதனால்தான் நான் இன்னும் உயிரோடு இருக்கிறேன். ராமநாதனுக்கு ஆதரவாக மாமன் என்று நீங்கள் இருக்கிறீர்கள். ஆனால் என் திலீபனுக்கு யாரும் இல்லை. அதனால்தானோ என்னவோ கடவுள் என்னை இன்னும் உயிரோடு வைத்திருக்கிறார்!” 

மாமா. உணர்ச்சியே இல்லாத குரலில், “அந்தப் பழங்கதை எல்லாம் எதுக்கம்மா! என் தங்கை இறந்த அன்றைக்கே, எனக்கும் சபாபதிக்கும் இருந்த சம்பந்தம் அறுந்து போய்விட்டது. உங்களுக்குள்ள கஷ்டத்தை எல்லாம் நான் தீர்க்க முடியாது. எவ்வளவோ தர்மம், யார் யாருக்கோ செய்கிறேன். அதுபோல் உங்களுக்கும் என்னால் முடிந்ததைக் கொடுக்கிறேன். இந்த ஆயிரம் ரூபாயை எடுத்துக்கொண்டு போய்ச் சேருங்கள்.” என்று கண்டிப்பாகக் கூறினார். 

மாமா வியாபாரத்தில் எப்படிப் பல லட்சங்களைச் சம்பாதிக்க முடிந்தது என்பதன் ரகசியம். அப்போதுதான் எனக்குப் புரிந்தது. 

மனத்தின் உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காமல், சட்டென்று ஒரு முடிவுக்கு வரும் சாமர்த்தியமே அவரை லட்சாதிபதியாக்கியது என்பதை உணர்ந்தேன். 

மாமா பேசி முடித்ததும், திலீபன் நகைத்தான். அவன் குரலில் ஹாஸ்யமும், துக்கமும் சேர்ந்து ஒலித்தன. திலீபன் தன் தாயிடம், கேலியாகச் சிரித்தபடியே சொன்னான்: ”அம்மா, நான் சொன்னபடியே ஆகி விட்டது. பார்த்தாயா? ஆயிரம் ரூபாயை வாங்கிக் கொண்டு போகலாமா அம்மா?”

பிறகு அந்தப் பழைய தகரப் பெட்டியை எடுத்துக்கொண்டு சோபாவிலிருந்து எழுந்தான். 

மீனாட்சி அம்மாள், “திலீபா! உட்கார். இது பெரியவர்கள் விஷயம். நீ ஒன்றும் பேசாதே!” என்றாள். 

திலீபன் மறுபடியும் இஷ்டமில்லாமல் உட்கார்ந்தான். 

திலீபனின் தாய் என் மாமாவைப் பார்த்து, “நீங்கள் தப்பர்த்தம் செய்து கொண்டு விட்டீர்கள். நாங்கள் ஏழைதான். எங்கு போவது. எப்படி வாழ்வது என்று புரியாத நிலையில் இருக்கிறோம் என்பது உண்மை தான். ஆனால் நான் உங்களிடம் பணம் வாங்க வரவில்லை. உங்களிடம் சேர வேண்டியதைக் கொடுத்து விட்டுப் போகவே வந்தேன். திலீபா! அந்தப் பெட்டியைத் திறந்து காட்டு,” என்றாள். 

திலீபன் அந்தப் பழைய தகரப் பெட்டியைத் திறந்து காட்டினான். 

பெட்டியினுள் வைர அட்டிகை, வைர வளையல்கள், நாகொத்து, ஒட்டியாணம், காசு மாலை, வங்கி போன்ற பழங்காலத்து நகைகள் எல்லாம் மின்னின. அவைகளைப் பல வருஷங்கள் அணியாத காரணத்தால், அவைகளின் மீது மாசு படிந்து இருந்தது. 

என் மாமா பிரமிப்புடன் நகைகளைப் பார்த்தபடி ஒன்றும் பேசாமல் இருந்தார். 

மீனாட்சி அம்மாள் மாமாவைப் பார்த்து, “உங்கள் தங்கைக்கு நீங்கள் போட்ட நகைகள் எல்லாம். சரியாக இருக்கின்றனவா, பார்த்துக் கொள்ளுங்கள், என்றாள். 

என் மாமாவின் கரங்கள்,ஒவ் வொன்றாக நகைகளைத் தூக்கிப் பார்த்தன. “என் தங்கையின் நகைகள்தான்! ஒன்றுகூடக் குறையாமல் எல்லாம் அப்படியே இருக்கின்றன!” என்று கூறிவிட்டு ஆச்சரியத்தோடு மீனாட்சி அம்மாளைப் பார்த்துக் கேட்டார்: “சபாபதி இது நாள் வரை இந்த நகைகளை விற்காமல் வைத்திருந்தானா? ஏழ்மை வந்த பின்பு கூடவா அவன் இவைகளை விற்கவில்லை?” 

அதற்குத் திலீபன், “அப்பாவுக்கு இந்த நகைகள் இருப்பது தெரிந்தால், எப்போதோ விற்றிருப்பார். ஆனால் நகைகள் திருட்டுப் போய் விட்டது என்று நினைத்தார்,” என்று விளக்கினான். 

நானும் மாமாவும் ஒன்றும் புரியாமல் விழித்தோம். 

மீனாட்சி அம்மாள். “திலீபன் சொல்வது உண்மை. நான்தான் அவரிடம் இந்த நகைகள் திருட்டுப் போய்விட்டதாகப் பொய் சொல்லி, இதுநாள் வரை பாதுகாத்து வந்தேன். அவர் இருக்கும்போதே இவற்றை உங்களுக்கு அனுப்பியிருப்பேன். ஆனால் அது பெரிய ஆபத்தாய் முடிந்திருக்கும். எனக்கு முன்னால் வாழ்ந்தவளின் நகைகள் அவள் மகனையே சேர வேண்டும் என்பது என் ஆசை. ராமநாதனுக்கு வாய்க்கப் போகும் மனைவிதான் இவற்றை அணிய வேண்டும் என்றிருந்தேன். நீங்கள் அன்று எங்கள் வீட்டுக்கு வந்த போதே, இதைக் கொடுத்திருப்பேன் ஆனால் கணவனை இழந்த துக்கத்திலும், அதிர்ச்சியிலும் மறந்து போய்விட்டேன். ராமநாதனுக்குச் சேர வேண்டியதைச் சேர்த்துவிட்டால், ஆண்டவன் என் மகனைக் கைவிட மாட்டான் என்ற நம்பிக்கையால்தான், இதைக் கொண்டு வந்தேன்.” என்று சொல்லிவிட்டு, “வா திலீபா, போகலாம்.” என்று திலீபனை அழைத்தாள். 

திலீபன் பெட்டியை வைத்து விட்டுத் தாயோடு புறப்பட்டான். லட்ச ரூபாய் நகைகளைத் தூசிபோல் நினைத்துவிட்டு, கந்தல் துணியோடு தள்ளாடி நடந்து செல்லும் அந்த உத்தமியைப் பார்த்தபடி நின்றேன். என் வாய், பேசும் சக்தியை இழந்தது. 

என் மாமாவும் சிலை போல், நகைகளைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தார். 

அத்தியாயம்-8

உலத்லே நாம் அசையாத நம்பிக்கை வைத்திருக்கும் மனிதன் நம்பிக்கைத் துரோகம் செய்யும்போது ஏற்படும் அதிர்ச்சி, எங்களுக்கு மீனாட்சி அம்மாள் என் தாயின் நகைகளைத் திருப்பித் தந்தபோது ஏற்பட்டது. 

மீனாட்டி அம்மாள் என்னையும் மாமாவையும் திகைப் பூட்டுமளவுக்கு ஏமாற்றிவிட்டாள். நாங்கள் நினைத்தது ஒன்று நடந்தது வேறு. திடீரென்று நாம் விரும்பாத ஒருவர் நல்லது செய்தால்கூட நமக்கு அதிர்ச்சிதான் ஏற்படுகிறது. இந்த அதிர்ச்சியின் விளைவாக நாங்கள், அந்த அம்மாளுக்கு ஒரு நன்றி வார்த்தைகூடக் கூறாமல் இருந்தோம். திடீரென்று என் மாமா தன் இடத்திலிருந்து எழுந்தார். 

“மீனாட்டு அம்மாள். மீனாட்சி அம்மாள்!” என்று அழைத்தபடி வாயிற்புறம் நோக்கிச் சென்றார். 

திலீபன் குதிரை வண்டியில் ஏறிவிட்டான். மீனாட்சி அம்மாள் வண்டியில் ஏறப் போகும் நிலையில் இருந்தாள். மாமாவின் குரல் கேட்டு நின்றாள். என் மாமா அவள் அருகில் சென்று, ”அம்மா, நான்… நான்… உங்களைத் தப்பாகக் கணக்குப் போட்டுவிட்டேன். என் தங்கை வாழ்ந்த இடத்தை நிரப்பியவள் என்ற அசூயை, என் புத்தியைக் குழப்பிவிட்டது. உங்களைப் போன்ற தன்னலமற்றவர் இந்த உலகில் பார்ப்பது அரிது. சிந்தாதிரிப்பேட்டை சந்து வீட்டில் ஏழ்மையிலும்,பட்டினியிலும் வாழ்ந்தபோதுகூட இந்த லட்ச ருபாய் பெறுமான நகைகளை உங்களுக்கென்று எடுத்துக் கொள்ளாமல், பாதுகாத்து இருக்கிறீர்களே. உங்கள் பண்பு கையெடுத்துக் கும்பிட வேண்டிய பண்பம்மா, நீங்கள் எங்கள் வீட்டில் சில நாட்களாவது தங்காமல் போகக் கூடாது” என்று வேண்டிக் கொண்டார். 

மீனாட்சி அம்மாள் எந்தவித பதிலும் சொல்லாமல் திலீபனை நோக்கினாள். நானும் மாமாவும் வற்புறுத்தியதன் பேரின் திலீபனும், அவன் தாயும் எங்கள் வீட்டில் தங்குவது என்று முடிவு செய்தனர். திலீபனும், மீனாட்சியம்மாளும் வீட்டுக்குள் நுழைந்ததும், மாமா அவர்களைத் தன் மகள் சீதாவுக்கு அறிமுகப்படுத்தினார். சீதாவுக்குப் பார்த்தவுடனேயே மீனாட்சியம்மாளை மிகவும் பிடித்துப் போய் விட்டது. மீனாட்சி அம்மாளுக்கும் சீதாவின் மீது ஒருவகை பாசம் ஏற்பட்டுவிட்டது. 

திலீபன் வந்த மறுநாள் காலை சீதா ஒரு டம்ளர் காபியுடன் என்னிடம் வந்து “அத்தான், இந்தக் காபியை நீங்கள் மாடிக்கு எடுத்துச் செல்லுங்கள்,” என்றாள். 

நான் “யாருக்கு அந்தக் காபி?” என்று கேட்டேன். 

சீதா தயக்கத்துடன், “அதுதான், விருந்தாளியாக வந்திருக்கிறாரே உங்கள் சகோதரர், அவருக்கு” என்றாள். 

நான் குறும்பாசு, “காபியைத் தூக்கிப்போக நான் என்ன உன் வேலைக்காரனா? நீயே கொண்டு போய்க் கொடு” என்றேன். 

உடனே சீதா, “இல்லை அத்தான். அவரைப் பார்த்தால் எனக்குப் பயமாக இருக்கிறது. அவர் கண்கள், பார்க்கும் போது என்னவோபோல் இருக்கின்றன” என்று கூறினாள். 

எனக்குச் சிரிப்பாக வந்தது அவள் பேச்சு. அதே சமயத்தில் என் மனத்தில் மாமா கூறிய வார்த்தைகளும் நினைவுக்கு வந்தன. “திலீபன் அப்படியே உங்கள் அப்பாவைப் போலவே இருக்கிறான். அதுவும் அவன் கண்கள் சபாபதியின் கண்களைப் போலவே இருக்கின்றன” என்று சொல்லியிருந்தார். 

திலீபனின் கண்களில் ஓர் அமானுஷ்யமான ஒளி வீசியது என்னவோ உண்மைதான். திலீபன் எங்கள் வீட்டில் விருந்தாளியாக இருந்த ஆரம்ப நாட்களில் அதிகம் யாருடனும் பேசுவதில்லை. எப்போதும் புத்தகமும் கையுமாகவே அவன் இருப்பான். மாலை வேளைகளில் காவிரிக் கரைக்குச் சென்று விடுவான். அவனுடைய ஏழ்மை நிலையே அவனது கூச்சத்துக்கும் காரணம் என்று நினைத்தேன். அதனால் நானே அவனிடம் வலுவில் சென்று அன்போடு நெருங்கிப் பழகினேன். அவன் அப்போது தான் பி.ஏ. படித்து முடித்திருந்தான். அவனிடம் அவனுடைய எதிர்காலத் திட்டங்களைப் பற்றி விசாரித்தேன். 

அவன் விரக்தியோடு, “என் எதிர்காலம்! என் எதிரி காலம்! என் எதிர்காலம்! அதில் எனக்கு அக்கறையில்லை. என் தாயின் எதிர்காலம்தான் எனக்கு முக்கியம். சீக்கிரம் ஒரு வேலை தேடி நான் சம்பாதிக்க வேண்டும். என் தாயை இன்பமாக வைத்திருக்க வேண்டும். அப்பாவோடு வாழ்ந்த போது அம்மா அழுது அழுது ஓய்ந்துவிட்டாள். பிள்ளையோடு வாழும் போதாவது அவள் அமைதியையும் இன்பத்தையும் உணர வேண்டும்” என்றான். 

அவனது பேச்சு என்னையும் என் மாமாவையும் உறுத்தியது. மேலும் அவன், “போதையோடு வீடு திரும்பும் தந்தையை நீ பார்க்கவில்லை அண்ணா. பெற்ற தாயை, தந்தை பெல்ட்டால் அடிக்கும் கொடுமையை, நீ காணவில்லை அண்ணா. ஒவ்வொரு அடியையும் தாங்கிக்கொண்டு, வாய் விட்டு அழுதால் அயலார் கூடிவிடுவார்களோ என்று அழுகையை அடக்கிக் கொண்டு ஒரு தாய் சிரிக்க முயலும் பரிதாபம் காட்சியை நீ பார்த்திருக்க முடியாது. இவ்வளவையும் பார்த்தபின் அந்தத் தாப்பனைக் கொன்று விடலாம் என்று என் மனம் எரிமலையாக வெடிக்கும். ஆனால், அம்மா தடுப்பாள். ‘குடியும் கோபமும் சேர்ந்த கணவனை அடைந்த மகராசி என்ற பட்டம் போதுமடா. கொலைகார மகனையும் பெற்றாள் என்று ஊரார் சொல்ல வேண்டாமடா திலீபா’ என்பாள், பொறுத்துப் பொறுத்து என் மனம் புண்ணாகியது. . ஒவ்வொரு சமயம் அப்பா அம்மாவைப் பார்த்து, ‘என் மூத்த சம்சாரத்து நகைகளை எல்லாம் எவனோ ஆசைநாயகனுக்குக் கொடுத்துவிட்டு, அவைகள் திருட்டுப் போய்விட்டன என்று பொய் சொல்கிறாயாடி?’ என்று கூறி அடிப்பார். உண்மையிலேயே நகைகள் யாவும் வீட்டில் இருந்த விஷயம் எனக்குத் தெரிந்திருந்தால், நான் அந்தப் பழைய தகரப் பெட்டியை எடுத்துத் தந்தையிடமே கொடுத்திருப்பேன். என் தாயைத் தந்தையின் கோபத்திலிருந்து காத்திருப்பேன். ஆனால், அம்மா நகைகள் இருக்கும் விஷயத்தை என்னிடம் கூட அப்பா இறந்த பிறகுதான் கூறினாள்” என்று கூறினான். 

மூத்த தாரத்தின் நகைகளைக் காப்பாற்ற மறு அவதாரமாக வந்த மீனாட்சியம்மாள் அடி, திட்டு, நடத்தை கெட்டவள் என்ற பட்டம் இவ்வளவையும் பெற்றிருக்கிறாள் என்பதை உணர்ந்த என் மாமாவுக்கும் எனக்கும் மீனாட்சி அம்மாளின் மீது மரியாதையும் அன்பும் அதிகமாயின. 

என் சிற்றன்னையின் வருகை சீதாவைப் பொறுத்த வரையில், அவன் இழந்திருந்த தாயையே திரும்ப பெற்றது போல் ஆகிவிட்டது. சீதா எப்போதும் காரில் மீனாட்சியம்மாளை ஸ்ரீரங்கத்துக்கு அழைத்துப் போவது, திருவானை காவலுக்கு அழைத்துப் போவது இப்படியே காலம் கழித்தாள். 

மீனாட்சியம்மாள் சிரித்தபடி ஒரு நாள் என் மாமாவிடம், ”உங்களை விட நான்தான் சிறந்த வியாபாரி. நீங்கள் லட்ச லட்சமாகச் சம்பாதிக்கலாம். ஆனால் நான் ஒரு லட்ச ரூபாய் தரையை உங்களிடம் கொண்டு வந்து கொடுத்துவிட்டு, பல லட்சங்களுக்கு அதிபதியாகப் போகும் தங்க விக்கிரகத்தை போன்ற உங்கள் பெண்ணை என் மகளாகிவிட்டேன்” என்று கூறினாள். 

மாமாவின் கண்கள் கலங்கின. “ஆமாம் அம்மா, சீதாவுக்கும், ராமநாதனுக்கும் உங்களைவிடச் சிறந்த தாயார் கிடைக்க முடியாது. நகைகளைப் பணம் வாங்கலாம். ஆனால் உங்களைப் போன்ற மனிதர்களை விலை கொடுத்து வாங்க முடியுமா? நீங்களும் திலீபனும், இனிமேல் இந்த வீட்டிலேயே தான் தங்க வேண்டும். ராமநாதனைப் போல் திலீபனும் இனி எனக்கு ஒரு மருமகன் தான்” என்று கூறினார். 

இந்தச் சம்பாஷணை நடந்த பின் எங்கள் வீடு ஒரு சொர்க்கலோகம் போல் காட்சியளித்தது. எனக்குத் திலீபனிடம் நாள் செல்லச் செல்லப் பற்று அதிகமாயிற்று. காரணம், திலீபனுடைய சில ஆச்சரியமான குணங்கள். திலீபன் படிக்காத விஷயமே கிடையாது என்று சொல்லி விடலாம். அவனுக்குச் சிற்பம் தெரியும், இலக்கியம் தெரியும், சங்கீதம் தெரியும், வேதாந்தம் தெரியும்! எல்லாம் தெரியும். திலீபனின் புத்தி ஒரு மையொற்றியைப்போல், பார்க்கும் பொருள்கள் அனைத்தையும் அப்படியே ஒற்றியெடுத்துக் கொள்ளும். நாம் படிக்கும் வேகத்தில், திலீபன் ஒரு புத்தகத்தையே பாடம் செய்து விடுவான். 

பெரிய பெரிய ஆங்கில நாவலாசிரியர்களின் நாவல்களை அத்தியாயம் அத்தியாயமாக, வரிவிடாமல் சொல்லுவான். இமயமலையின் உயரம், பசிபிக் மகாசமுத்திரத்தின் ஆழம், லண்டன் நகரத்தின் ஜனத்தொகை.. இம்மாதிரி புள்ளி விவரங்களையெல்லாம் அள்ளி வீசுவான். 

அவனது ஞாபசு சக்தியைப்பற்றி ஒரு நாள் ஆச்சரியத்தோடு புகழ்ந்தபோது, திலீபன் அந்தப் புகழ்ச்சியை ஏற்றுக் கொள்ளவில்லை. “அண்ணா, என்னைப்போல் நீயும் ஆகிவிடலாம். எல்லோருமே ஆகலாம். ஆனால், எல்லோரும் முயலுவதில்லை, மனிதன் சிரத்தை மயமானவன். அவன் ஆவி எதை நினைக்கிறதோ அதாகவே அவன் ஆகிவிடுகிறான். 

உடல், மனம், ஆவி மூன்றையும் சேர்த்து ஒருங்கே ஒரு விஷயத்தில் செலுத்தினால், அந்த விஷயமாகவே மனிதன் மாறிவிடுவான். அதுதான் பழைய ஞானிகளின் சித்தாந்தம். பழைய சித்தர்களின் வழி, பசுவத்கீதையின் உட்பொருளும் அது தான். சாதாரணமாக மனிதர்கள் எந்த விஷயத்திலும், ஆழமான சிரத்தை காட்டுவதிவலை. அதனால்தான் விஷயங்களை அரைகுறையாகப் புரிந்து கொள்கிறார்கள். ஆழமான சிரத்தை காட்ட முதலில் கற்றுக்கொள்ள வேண்டும், அதைத்தான் ஆங்கிலத்தில் ‘கான்ஸன்ட்ரேஷன் அஃப் மைண்ட்’ என்று கூறுவார்கள். அது வந்து விட்டால் மனிதனால் முடியாதது ஒன்றுமில்லை. சர் ஜார்ஜ் நியூட்டன், ஆஸ்பர்ட் ஐன்ஸ்டைன் போன்ற விஞ்ஞானிகள், பீத்தோவன், மோசர்ட் போன்ற சங்கீத மேதைகள் – இவர்களும் யாவரும் சில விநாடிகள் உடல், மனம் ஆவி இவற்றை ஒன்று சேர்த்து ஒரு முளையில் சிரத்தையுடன் பிரயோகம் செய்ததால்தான் பல விஷயங்களைக் கண்டு பிடித்தார்கள் ஆனால் நம் நாட்டில் மனம், ஆவி இவைகளைப்பற்றி ஆராய்ச்சி செய்த பல சித்தர்கள் விளம்பரம் இல்லாமலே மன்றந்து விட்டார்கள்.” 

திலீபன் கொடுத்த இந்த விளக்கம் எனக்குக் குழப்பமாகவே இருந்தது. இம்மாதிரி ஆராய்ச்சிகளெல்லாம் உபயோகமில்லாத ஆராய்ச்சிகளாகவே எனக்குப் பட்டன. “எல்லாம் படித்த நீயே இப்படி அநாகரிகமான விஷயங்களள நம்புவது அபத்தமாக இல்லையா?” என்று சொன்னேன். 

முதலில் திலீபன் சிரித்தான். “எந்த விதமான முன்னேற்றமும், அநாகரிகமாகத்தான் தோன்றும். ஏனென்றால் சமூகத்தில் சராசரி மனிகர்கள்தான் அதிகம். அவர்கள் நம்புவது, விரும்புவது எல்லாம் சராசரி விஷயங்களே. சராசரி நிலைக்கு அப்பாற்பட்ட விஷயம் எல்லாமே புரியாத விஷயந்தான். புரியாத விஷயங்களைக் கண்டால் எல்லோருக்குமே பயம். மரணத்துக்கு அப்பால் உடலில் கட்டுப் பிரியும் ஆவி. அந்த ஆவியின் சட்டங்கள் இதையெல்லாம் புரியாதனவையாக இருப்பதால்தான் மக்கள் பயப்படுகிறார்கள். பயப்படாதவர்கள் புரளி செய்கிறார்கள். மோட்டாரின் சட்டங்கள் தெரியாதவர்களுக்கு, அது மாடுகள் இல்லாமல், குதிரைகள் இவ்வாமல், யாரும் தள்ளாமல் ஓடுவது ஆச்சரியமாய்த்தான் இருக்கும். மின்சாரம் என்பது என்ன என்று யாருக்கும் தெரியாது. ஆனால் அதன் உபயோகங்கள் மட்டும் எல்லாருக்கும் தெரியும். விஞ்ஞானத்தின் போக்கே நாளுக்கு நாள் செப்பிடு வித்தையாக மாறிக் கொண்டிருக்கும்போது, நாம் செப்பிடு வித்தை, கண்கட்டு வித்தை, சித்தர்கள் ஜாலம் இவற்றை நம்பத்தானே வேண்டும்!” என்று கூறினான். 

எனக்கு அவன் கூறியது திருப்தியாக இல்லை. ஆகையால் நான் அவனைப் பார்த்துச் சிரித்தேன். திலீபன் ஒன்றுமே பேசவில்லை. நான் சிரித்தது பைத்தியக்காரத்தனம் என்பது எனக்கு மறுநாளே தெரிந்தது. ஒரு சிக்கலான கேஸை – என் சீனியர் வக்கீலுக்கே புரியாத சட்டக் குழப்பமுள்ள கேஸை – நான் படித்துக் கொண்டிருந்தேன். திலீபன் என் அருகில் வந்து தயாரித்துக் கொண்டிருக்கும் கேஸைப் பற்றிக் கேள்விகள் கேட்டான். நான் அதன் விவரங்களைச் சொல்லி, சட்டம் என்பது அவனுக்குப் புரியாத விஷயம் என்று பெருமையோடு சொன்னேன். திலீபன் என்னிடம், “உண்மை எனக்குப் புரியவில்லைதான். ஆனால். என் புதை மனதுக்குப் புரியாத விஷயங்களே கிடையாது” என்று சொன்னான். எனக்குச் சிரிப்பாக வந்தது. 

“புதை மனமா?” என்று ஆச்சரியமாகக் கேட்டேன். 

திலீபன் அதற்கு, “ஆம். நாம் விழித்துக் கொண்டிருக்கும் போது வேலை செய்வது மேல் மனம். ஆனால், தூங்கும்போது கூட விழிப்பாக இருக்கும் பகுதிதான் நம் புதை மனம், நம் மனத்தின் அடித்தளம். இதைத்தான் ஆங்கிலத்தில் ஸப்கான்ஷியஸ் மைண்ட் என்று சொல்வார்கள். புதை மனத்துக்குத் தெரியாத விஷயங்களே இருக்க முடியாது” என்று கூறினான். 

திலீபன் அதற்கு, ”ஆம், நாம் விழித்துக் கொண்டிருக்கும்போது வேலை செய்வது மேல் மனம். ஆனால், தூங்கும்போதுகூட விழிப் பாக இருக்கும் பகுதிதான் நம் புதை மனம். நம் மனத்தின் அடித்தளம். இதைத்தான் ஆங்கிலத்தில் ஸப்கான் ஷியஸ் மைண்ட் என்று சொல்வார் கள். புதை மனத்துக்குத் தெரியாத விஷயங்களே இருக்க முடியாது”, என்று கூறினான். 

உடனே நான், “உன் புதை மனம் இந்த விவகாரத்துக்குச் சட்டப் பாயின்ட் தேடிக் கொடுக்குமா?” என்று கேட்டேன். 

திலீபன் ஒரு வினாடி திகைத்தான். அடுத்த வினாடியே என்னிடம், “அந்தக் கேஸ் சம்பந்தமான காகிதங்களை என்னிடம் கொடு. நான் இரவு அவைகளைப் படித்து விட்டுத் தூங்கப் போகிறேன். மறு நாள் காலை ஒருவேளை எனக்கு ஏதாவது தோன்றலாம்,” என்றான். 

அப்போது நான், அவன் ஒரு பைத்தியக்காரன் என்று நினைத்தேன். மறுநாள் காலை நான் பல் துலக்கும்போதே திலீபன் எழுந்து காப்பி சாப்பிட்டுவிட்டு, தயாராயிருந்தான். அவன் கையில் ஒரு காகித சுருள் இருந்தது. திலீபன் அதை என்னிடம் கொடுத்தான். நான் ஆச்சரியத்தோடு அந்தக் காகிதச் சுருளைப் பிரித்துப் பார்த்தேன் காகிதத்தில், ‘கல்கத்தா 1936’ என்று எழுதியிருந்தது. நான், கேலியாகத் திலீபனிடம், “உன் புதை மனம் வேறு ஒன்றும் சொல்லவில்லையா?” என்று கேட்டேன் 

திலீபன் தயங்கினான். பிறகு “சட்டம் எனக்கு முன்பின் தெரியாத ஒரு விஷயம். விவரங்களை எப்படி குறிப்பது என்று தெரியாமல், விழிக்கிறேன். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். நீ நடத்தப்போகும் கேஸ் போலவே ஒரு கேஸ் கல்கத்தா ஹைகோர்ட்டில் 1936-ஆம் வருஷம் நடந்திருக்கிறது. அதன் தீர்ப்புக்கூட உனக்கு உதவியாக இருக்கலாம்” என்றான். 

நான் உடனே 1936-ஆம் வருஷத்துச் சட்ட மஞ்சரியைப் புரட்டிப் பார்த்தேன். என்ன ஆச்சரியம் பாயிண்ட்டுக்குப் பாயின்ட் அப்படியே அந்தக் கல்கத்தா கேஸ், நாங்கள் வாதாட இருக்கும் கேஸ் போலவே இருந்தது. அந்தக் கேசின் பேரில் அளிக்கப்பட்ட தீர்ப்பும் எங்கள் வாதத்துக்குச் சாதகமாகவே இருந்தது.

உடனே நான் அந்தக் கேசை எடுத்துக்கொண்டு என் சீனியரிடம் ஓடினேன். அவர் சந்தோஷமும் ஆச்சரியமும் அடைந்தார். எனது ஆழ்ந்த படிப்பைப் பாராட்டினார். அவரிடம் நான் எப்படி உண்மையைச் சொல்வது? சட்டக் கல்லூரிக்குள்ளேயே நுழையாத, சட்டப் புத்தகத்தைப் புரட்டக்கூடத் தெரியாத என் சகோதரன் தன்னுடைய புதை மனத்திலிருந்து எடுத்துக் கொடுத்த கேஸ் என்று நான் எப்படிக் கூறுவது என் சீனியரிடம்? 

அன்று முதல் எனக்குத் திலீபனிடத்தில் மதிப்பு ஏற்பட்டது. அதோடு கொஞ்சம் பயமும் ஏற்பட்டது. ஆனால் சீதாவுக்குத் திலீபனிடம் பயம், கூச்சம் யாவும் குறைய ஆரம்பித்தன. திலீபனுக்குச் சங்கீதத்தில் இருந்த பற்று சீதாவின் நன்மதிப்பைப் பெற்றது. ‘சங்கீதம் கலைமகளின் ஆவி’ என்று விக்டர் ஹ்யூகோ கூறிய வாக்கியத்தைத் திலீபன் அடிக்கடி கூறுவான். “தெய்வீக சங்கீதத்தால் கவர முடியாதது உலகத்தில் ஒன்றுமே இல்லை”, என்பான். சீதாவுக்குத் தெரியாத சங்கீத நுணுக்கங்களையெல்லாம் திலீபன் அவளுக்குக் கற்றுக் கொடுத்தான். சீதா பாடுவாள்; நானும் திலீபனும் எதிரே உட்கார்ந்து கேட்டுக்கொண்டு இருப்போம். இந்தச் சிறு வயதுக்குள், எல்லா விஷயங்களிலும் மேதை என்ற அளவுக்குக் கற்று வைத்திருக்கும் திலீபனிடம், மாமாவுக்கும் பெரிய மதிப்பு ஏற்பட்டது. ஆனால் திலீபன் மட்டும் எப்போதும் தனிமையையே விரும்பிக் காலத்தைப் போக்கி வந்தான். அவனுக்கு இருந்த சாமர்த்தியங்களைப் பற்றி அவன் கொஞ்சமும் கர்வம் கொள்ளவில்லை. அவனது லட்சியம் எங்கோ தொலை தூரத்தில் இருப்பது போலவும், அதை எட்டிப் பிடிக்க முயலுபவன் போலவும் திலீபன் தோன்றினான். 

என் மாமா என் திருமணத்தைக் குறித்து எல்லா ஏற்பாடுகளும் செய்யத் தொடங்கினார். நாங்கள் எல்லோரும் என் திருமணம் முடிந்த பின் சென்னையிலேயே வாழ்வது என்று ஏற்பாடுகளும் செய்தார். அதற்காகச் சென்னையில் ஒரு பங்களாவையும் ஏற்பாடு செய்தார். சென்னையில் உள்ள என் மாமாவின் கம்பெனியிலேயே திலீபன் வேலை பார்ப்பது என்றும் நாங்கள் எல்லோரும் சேர்ந்து வாழ்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. எங்கள் வாழ்விலேயே மிகவும் இன்பமான நாட்கள், மீனாட்சி யம்மாள் வந்த பின்பு கழிந்த ஒரு மாத காலம்! எந்த இன்பமும் நீடிப்பது இல்லையே!” இதைச் சொல்லி விட்டு ராமநாதன் தன்னுடைய வாக்குமூலத்தை நிறுத்திக் கொண்டான். 

ஜட்ஜ் மணிவாசகம் அவனை உற்று நோக்கினார். அப்புறம் என்ன நடந்தது, ராமநாதன்?” என்று கேட்டார்.

ராமநாதன் தயக்கத்துடன் “அப்புறம் நடந்த விஷயங்களை பற்றிய விவரம் திலீபனின் டயரியில் எழுதப்பட்டிருக்கும் குறிப்புகளிலிருந்துதான் எடுத்துக் கொள்ள வேண்டும். நான் சொல்ல வேண்டிய விஷயங்களைத் திலீபனின் டயரியே கூறும்”, என்று சொல்லி திலீபனின் டைரியில் உள்ள ஒரு பக்கத்தை எடுத்துக் கொடுத்தான். 

அதில் பின்வருமாறு எழுதியிருந்தது, திலீபனின் கையெழுத்தில்- 


இன்று சித்ரா பௌர்ணமி நிலவொளியில் காவிரி வெள்ளம் தங்க நதியாகத் திகழ்ந்தது. 

காவிரிப் பாலத்தைக் கடந்து செல்லும் போக்குவண்டிகளின் சப்தம் எங்கிருந்தோ தொலைவிலிருந்து ஒலித்தது. ஓர் அரச மரத்தினடியில் நின்றேன். அரச மரத்து இலைகளின் சல சலப்பு, என் முகத்தைக் கிள்ள வரும் குளிர்ந்த காற்று என்னை அப்படியே இன்ப போதையில் ஆழ்த்தியது. என் உணர்வு அப்படியே என் உடலை விட்டுப் பிரிந்து எதிரே உள்ள நதியில் பாய்வது போல் இருந்தது. அடுத்த வினாடி நான் அந்தக் காவிரி நதியானேன். அதிலுள்ள ஆயிரக்கணக்கான மீன்கள் மற்றும் பலபல பொருள்களை நானே என் உடலில் தாங்கிக் கொண்டு போவதுபோல் உணர்ந்தேன். 

காதலனின் அன்பு அணைப்பை எதிர்நோக்கி, முதல் இரவில் படுக்கையில் துவண்டு படுத்திருக்கும் ஒரு கன்னிப் பெண்ணைப்போல் நான் காவிரி ஆறாகப் பரந்த வெளியில் படுத்திருந்தேன். என்க்குமேல் ஆகாயத்தில் சந்திரன் பிரகாசித்துக் கொண்டிருந்தான். சந்திரனின் கிரணங்கள் எல்லாம் பல்லாயிரம் கரங்களாக மாறி, என்னை நோக்கி அணைக்க வருவது போல் எனக்குத் தோன்றியது. அந்தக் கரங்கள் எல்லாம் கொழுத்த தங்கக் கரங்கள். எல்லாக் கரங்களிலும் வளையல்கள் மின்னின. 

வியப்போடு ஒளி வீசும் சந்திர வட்டத்தை நோக்கி, ஆகாயத்தின் பக்கம் நோக்கிக் கண்களைத் திருப்பினேன். அங்கே சந்திரனைக் காணோம். ஆகாயத்தில் மஞ்சள்நிறச் சேலையும், சிவப்புப் பட்டு ரவிக்கையும் அணிந்த ஒரு பெண் உருவம் படுத்திருந்தது போல் தெரிந்தது. அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்த்தேன். முகத்தின்மீது மேகம் படர்ந்து மறைத்திருந்தது.ஆனாலும் அது தெரிந்த முகம் போன்ற எண்ணம் எழுந்தது. 

என் உடலின் ஒவ்வொரு பகுதியிலும் இன்ப உணர்ச்சி மின்சாரம் போல் பாய்ந்தது. நரம்புகள் முறுக்கேறித் துடித்தன. வானத்து உருவம் மெல்ல மெல்ல என்னை நோக்கிக் கீழே இறங்கி வந்தது. என்னுடைய இன்பமும் அதிகமாகிக் கொண்டே போயிற்று. அத்தோடு, மல்லிகைப் பூ மணமும் கம்மென்று வீசியது. மல்லிகை மணம் மெல்ல மெல்ல அதிகமாகிக் கொண்டே போயிற்று. அந்தப் பெண் உருவம் கீழே இறங்க இறங்க, அதன் முகத்தைப் பார்க்கலாம் என்ற ஆவலோடு துடித்துக் கொண்டிருந்தேன். 

அந்த உருவத்தின் நிமிர்ந்து திரண்ட தேகம் என் உடலைத் தொட்டது. அய்யோ! அந்த இன்பத்தை என்னால் தாங்க முடியவில்லை. நான் ஒரு பெண்ணைப் போல் முனகினேன். பெருமூச்சு விட்டேன். ஆனால் அந்த எழில் உருவத்தின் முகப்பகுதி மட்டும் மேகத்தால் மூடியபடியே இருந்தது. 

அதே சமயத்தில் டணார். டணார், டணார், டணார் என்று ஆலய மணி ஓசை கேட்டது. திருச்சி மலைக்கோவிலிலுள்ள மணியின் ஓசை – இரவு பத்து மணி ஆகிவிட்டது என்று அறிவிக்க அடிக்கப்படும் மணி யின் ஓசை – காதுகளில் விழுந்தது. உடனே அந்த உருவம் மறைந்தது. என் உடலில் இன்பமும் குறைந்தது. என் கனவும் கலைந்தது. 

நான் அரச மரத்தடியில் நின்றிருந்தேன். எதிரே காவிரி நதி அமைதியாக ஓடிக் கொண்டிருந்தது. என் உடல் வியர்த்துவிட்டு இருந்தது. ஆனால், கனவிலே நான் நுகர்ந்த அந்த மல்லிகை மணம் மட்டும் தொடர்ந்து வீசிக் கொண்டிருந்தது. 

சுற்றுமுற்றும் பார்த்தேன். மல்லிகைச் செடியோ மல்லிகை மணத்துக்குக் காரணமாக அமையக்கூடிய எந்தவிதமான அறிகுறியோ அங்கு இல்லை. சற்றுத் தூரத்தில் இருளில் நெருப்பு எரிந்து கொண்டிருப்பது மட்டும் தெரிந்தது. அப்போதுதான் நான் காவிரிக் கரையை அடுத்த சுடு காட்டுக்கருகிலே நின்று கொண்டிருப்பதை அறிந்தேன். உடனே வீடு திரும்ப நினைத்தேன். அந்த மல்லிகை மணம் என்னையும் பின் தொடர்ந்தது. 

அரச மரத்தை விட்டு நான் சாலையில் கால் வைத்ததும், அந்த மல்லிகை மணமும் மறைந்துவிட்டது. அதற்குப் பதிலாக உள்ளிப் பூண்டின் நெடிதான் என் நாசியில் நின்றது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. திகில் பிடித்தது.உடனே வீடு நோக்கி வேகமாக நடந்தேன். 

ராமலிங்கம் என்னை எவ்வளவுதான் அன்பாக நடத்தினாலும் நான் பெரிய மனிதர்கள் வீட்டு ஏழை விருந்தாளிதானே! இப்படி நேரங் கெட்ட நேரத்தில் வந்து அவர்களுக்குத் தொந்தரவு கொடுக்கலாமா என்று யோசித்தேன். நினைத்தபடியே நின்றேன். அப்போது என் கைவிரல்கள் கதவு மணியின் விசையின் அருகில் இருந்தன… 

ஆனால், விசையை அழுத்தினேனோ இல்லையோ எனக்கே தெரியாது. யாரையும் எழுப்ப வேண் டாம் என்ற முடிவுக்கு வந்து வாசல் புறத் தோட்டத்தில் போட்டிருந்த பெஞ்சில் கால் நீட்டி மல்லாந்து படுத்தேன். 

எவ்வளவு நேரம் நான் தூங்கினேன் என்று எனக்குத் தெரியாது. மல்லிகை மணம் என் நாசியில் பாய, என் உணர்வு மட்டும் விழித்துக் கொண்டது. ஆனால், நான் கண்களைத் திறக்கவில்லை. விதி மனிதனின் வாழ்வில் தொடர்வதைப் போல், இந்த மல்லிகை மணம் ஏன் என்னை இன்று அரசமரத்தடியிலிருந்து தொடர்கிறது என்று நினைத்தேன். 

ஒருவேளை, அந்த மல்லிகை மணம் உள்ளிப் பூண்டின் மணமாக மறுபடியும் மாறுமோ என்று பயந்து கண்களை மூடியபடியே இருந்தேன். அர்த்தமில்லாத பயம் ஏற்படும் போது. கண்களை மூடிக் கொண்டிருப்பதில் ஓர் ஆறுதல். விரும்பாத காட்சியை மனம் பார்க்க மறுத்துக் கண்களை மூடச் செய்கிறது. 

என் மார்பு மட்டும் ‘திக் திக்’ என்று அடித்துக் கொண்டது. ஏதோ ஒன்று இன்று நடக்கப் போகிறது என்று என் ஆறாவது அறிவு எனக்கு உணர்த்தியது. அதே வினாடி என் முகத்தின் மீது உஷ்ணமான மூச்சு உராய்வது போன்ற உணர்ச்சியும் ஏற்பட்டது. 

என்னையும் அறியாமல் வீரிட்டலறியபடி கண்களைத் திறந்தேன். 

அத்தியாயம்-9

வீரிட்டலறியபடி கண்களைத் திறந்து எழுந்தவுடன் நான் பார்த்த உருவம் என்னைத் தலைகுனியச் செய்தது. என் எதிரே சீதா நின்று கொண்டிருந்தாள். ”என்ன, உங்கள் உடல் வியர்த்து இருக்கிறது! கைகள் நடுங்குகின்றன! ஏதாவது பயங்கரக் கனவு கண்டீர்களா?” என்று அவள் கேட்டாள். சீதாவின் முன்னிலையில் ஒரு குழந்தை போல் ஆகிவிட்டோமே, ஒரு கோழை போல் ஆகிவிட்டோமே என்று நினைத்தவுடன் வெட்கத்தால் என் முகம் சுருங்கியது. நான் அணிந்திருந்த மெல்லிய சட்டை நன்றாக நனைந்து என் உடலோடு ஒட்டியபடி இருந்தது. நான் தலை குனிந்தபடியே, “எனக்கு ஏற்பட்டது கனவுமல்ல, நனவுமல்ல. இரண்டுமில்லாத ஒரு அனுபவம்! என்னாலேயே அதை விவரிக்க முடியவில்லை,” என்றேன். 

அதற்கு அவள், “எல்லாம் தெரிந்த உங்களால்கூட விவரிக்க முடியாத அனுபவமும் இருக்கிறதா?” என்று கூறி, கேலியாகச் சிரித்தாள். அவள் சிரிக்கும்போது உதடுகள் சற்று விலகி, அவளது பற்களை நன்கு வெளிப்பட்ட கறையேது மில்லாத வைரக் கற்களாக அவை மின்னின. நிலவொளியிலே அவள் உதடுகளும் பற்களும் சேர்ந்து என்னை என்னவோ செய்தன. 

”அப்படியே என்னை வெறித்துப் பார்க்கிறீர்களே?” என்றாள் சீதா. 

“பார்த்தால் என்ன சீதா?” என்று நான் கேட்டேன். 

“எனக்கு என்னவோ போல் இருக்கிறது. உங்கள் கண்களைப்! பார்க்கவே எனக்குப் பயமாக இருக்கிறது.” என்றாள். 

“நம்மைக் கவர்ந்து இழுக்கும் பொருளே நம்மைப் பயப்படுத்துகிறது”, என்றேன். 

“என்ன!”

”உளறவில்லை; உண்மையைத்தான் சொல்லுகிறேன். ஆண்டவனிடம் ஏற்படும் பயமே பக்திக்கு அடிப்படை. வேலையாள் எஜமானிடம் காட்டும் விசுவாசத்தின் அடிப்படை பயம்தான். அதேபோலத் தான், முதல் இரவும். காதலிக்குக் காதலனிடம் ஏற்படும் முதல் உணர்ச்சியே பயம்தான்.” 

இந்த வார்த்தைகளை நான் பேசவில்லை. என்னுள் இருந்த ஏதோ ஒன்று பேசியது. 

செல்வந்தர் ராமலிங்கத்தின் ஒரே மகளிடம் நான் சுய உணர்வோடு துணிந்து இவ்வாறு பேசியிருக்க மாட்டேன். காவேரிக் கரை அரச மரத்திலிருந்து ஒரு சக்தி என்னைத் தொடர்ந்து வந்து என்னை அப்படிப் பேசச் செய்திருக்க வேண்டும் என்று தோன்றியது. 

ராமநாதன் மணக்கப் போகும் பெண் சீதா. அவள் தந்தையின் வீட்டில் அடைக்கலம் தேடி நுழைந்தவன் நான். அவளிடம் நான் பேசக் கூடிய வார்த்தைகளா இவை என்ற கேள்வியோ கூச்சமோ என் மனத்தில் கொஞ்சம்கூட எழவில்லை.

கூச்சத்திற்குப் பதிலாக ஓர் அசட்டுத் தைரியம் என்னைப் பற்றிக் கொண்டது. என் கண்கள் சீதாவின் கண்களையே நாடின. அவளது இருண்ட விழிகள் நிலவொளியில் சோபையோடு விளங்கின. அவள் இமைகொட்டாமல் என்னை ஆச்சரியத்தோடு பார்த்தாள். அவள் பார்வையில் ஆச்சரியம் மட்டும் இல்லை.பயமும் இருந்தது. ”சீதா!” என்று சொல்லியபடி நான் அவள் கைகளைப் பிடித்தேன். அவள் உடல் சிலிர்த்தது. அப்போதுதான் நான் உணர்ந்தேன், அவள் மஞ்சள் நிறப் புடவை உடுத்தியிருப்பதை. 

இரவு சற்று முன்பு நான் காவி ஆற்றங்கரையை அடுத்த சுடுகாட்டில், அரசமரத்தடியில் நின்றபோது நான் நதியாக மாறுவது போன்றும், அந்தரத்திலிருந்து என்னை நோக்கி ஒரு பெண் இறங்கி அணைக்க வருவது போலவும் ஒரு பிரமைத் தோற்றம் ஏற்பட்டது என் ஞாபகத்துக்குப் பளிச்சென்று வந்தது. அந்தப் பிரமைத் தோற்றத்தில் வந்த பெண்ணும் மஞ்சள் புடவை அணிந்திருந்தாள். அந்தத் தோற்றம் போலவே சீதாவும் மஞ்சள் புடவை அணிந்து சிவப்பு ரவிக்கையும் அணிந்திருந்தாள். அந்தத் தோற்றத்தின் கைகள் போலவே சீதாவின் கைகளும் உருண்டு தந்தம் போல் இருந்தன. அவள் தந்தக் கரத்தில் அடுக்கடுக்காக நின்ற கறுப்பு வளையல்கள், நிர்மலமான நல்லவன் மனத்தில் எழும் தீய எண்ணம் போல் காட்சியளித்தன. 

“சீதா! சீதா! நீ மிகவும் அழகாயிருக்கிறாய்!” என்று உணர்ச்சியால் உளறியபடி சொன்னேன். 

அவள், “என்னமோ பேசுகிறீர்கள். உங்களுக்குப் புத்தி சரியில்லை”, என்றாள். 

“அழகான உன்னைப் பார்க்கும்போது எனக்கு எப்படி புத்தி சரியாக இருக்க முடியும்?” என்று சொல்லியபடி அவளை நெருங்கினேன். என் கைகள் அவள் தோளைப் பிடித்தன. என் இதயம் நெருப்புப் போல் எரியத் தொடங்கியது. அதன் வெப்பம் என் உடலெங்கும் பரவுவது போன்ற ஓர் ஆனந்த உணர்வு ஏற்பட்டது. என் கரங்கள் என்னையும் அறியாமல் அப்படியே சீதாவை நெருங்கி அணைத்தன. அந்த அணைப்பின் இறுக்கத்தில் இருதயத்துக்கு அவள் இருதயத்தின் துடிப்பு நன்றாகக் கேட்டது. என் முகம் அவள் முகத்தைத் தேடியது. உதடுகள் அவள் உதடுகளை நெருங்கின. அதே சமயம், “நீங்கள் ஒரு மிருகம்! நீங்கள் ஒரு மிருகம்!” என்ற சீதாவின் கூச்சல் என் காதுகளில் ஒலித்தன. 

அடுத்த வினாடியே சீதா என் கன்னத்தில் பளீர் பளீரென்று பலமுறை அறைவதை உணர்ந்தேன். அவள் அறைந்தபோது அவள் விரல்களில் அணிந்திருந்த மோதிரத்தின் முனை என் கன்னத்தைக் கீறியது. ஆத்திரம் தீர அடித்தவள் அழுதபடியே வீட்டினுள் சென்றாள். 

சீதா சென்ற பிறகுதான் நான் எவ்வளவு பெரிய தவறைச் செய்து விட்டேன் என்பதை உணர்ந்தேன். அன்றுவரை நான் பெண்கள் விஷயத்தில் இம்மாதிரி நடந்து கொண்டவன் அல்ல. சீதாவின் பருவமும், வனப்பும் என் மனத்தை, அந்த வீட்டில் நுழைந்த நாள் முதல் கவர்ந்த போதிலும், அவளிடம் இம்மாதிரி நடந்து கொள்ள நான் நினைத்ததே கிடையாது. 

என் படிப்பு, என் ஆராய்ச்சிகள் தவிர வேறு எந்த விஷயத்திலும் அக்கறை இல்லாமல் வளர்ந்தவன் நான். என் தந்தையின் தவறான நடத்தை பற்றிய பல கதைகளை அக்கம்பக்கத்தில் பேசக் கேட்டதிலிருந்து, பெண்ணின் இனக் கவர்ச்சிக்கு பலியாகக் கூடாது என்று உறுதியோடு வாழ்ந்தவன். என் தந்தையின் நகலாக நான் இருக்கக் கூடாது என்பதே எனக்கு லட்சியமாயிருந்தது. 

அதனால் நான் காலேஜில் மாணவிகள் வலுவில் வந்து பேசினாலும் பதில் பேசாமல் ஒதுங்கிவிடுவேன். எனக்கு ‘மிஸ்டர் பிரம்மசாரி.’ என்று கேலிப் பெயரும் கலாசாலையில் உண்டு. இப்போது நான் நடந்து கொண்ட விதம் என் தந்தையின் நடத்தையை ஞாபகப்படுத்தியது. 

அத்தியாயம்-10 

என்னை வெட்கமும், கோபமும் பிடித்து வாட்டின. என்றும் இல்லாத இயற்கை ஏன் என்னை இன்று வந்தடைந்தது? அதுவும் திடீரென்று முன்பின் யோசிக்காமல் நான் ஏன் இப்படி நடந்து கொண்டேன். நான் தான் இப்படி நடந்து கொண்டேனா? இல்லை, வேறு யாராவது என்னுள் புகுந்து என்னை இப்படி ஆட்டி வைத்தார்களா? ஒருவேளை மகன் தந்தையின் அம்சம் என்கிறார்களே. நானும் ஒருவேளை என் அப்பாவைப்போல் தான் இருப்பேனோ என்று நினைத்தேன். 

என் எதிர்காலத்தைப் பற்றி நினைக்கவே எனக்குப் பயமாக இருந்தது. இனிமேல் இந்த வீட்டில் எப்படி வாழ்வது? வீட்டை விட்டு ஓடி விடலாமா? வீட்டை விட்டு ஓடிவிடலாம். ஆனால் என் இயற்கையை விட்டு நான் எங்கு ஓடுவது? இது என் இயற்கையல்லவே? 

நிலவொளியில் அந்த அரச மரத்தடியில் நான் போய் நின்றதிலிருந்து தான் எனக்கு இந்த எண்ணங்கள் எழுந்தன. நான் ஒரு வெறியனாக மாறினேன். வீட்டுக் கதவு திறந்தபடியே இருந்தது. எனக்கு உள்ளே நுழையவே பயமாயிருந்தது. தாயை அந்த வீட்டில் தனியே விட்டுச் செல்வதும் தவறாகப் பட்டது. ராஜ மரியாதையோடு நடத்தும் அந்த வீட்டிலிருந்து தாயை என்ன சொல்லி வெளியே அழைத்துச் செல்வது? ஒன்றுமே புரியாது நின்றேன். 

நடப்பது நடக்கட்டும் என்ற முடிவுக்கு வந்து வீட்டினுள் சென்று படுக்கையில் படுத்தேன். மறுநாள் காலை சீதா நிச்சயம் தன் தந்தையிடம் சொல்வாள் என் நடத்தை பற்றி. அப்புறம் ராமலிங்கத்தையும் ராமநாதனையும் எப்படிச் சந்திப்பது? அவர்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்? நெடுநேரம் படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தேன். முடிவில் என் கண்கள் தானே மூடிக்கொண்டன. நான் நித்திரையில் ஆழ்ந்தேன். 

விடிந்ததும் கண் விழித்தேன். விழித்து எழுந்ததும் கவலை என்னை மறுபடி பிடித்துக் கொண்டது. இத்தனை நேரம் விஷயம் வெளியாயிருக்கும் என்ற பீதியோடு பல் தேய்த்து விட்டு என்னுடைய அறையிலேயே புத்தகத்தைப் படித்தபடி காத்திருந்தேன். கண் புத்தகத்திலே.. ஆனால் மனம் என்னுடைய அறை வாசலிலேயே நின்றது. ராமலிங்கம் வருவார், அவருடன் ராமநாதன் வருவான் இருவரும் என்னைப் பார்ப்பார்கள். நான் அவர்களைப் பாராமல் தரையைப் பார்த்தபடி இருப்பேன். ராமலிங்கம் தொண்டையைக் கனைத்துக் கொண்டு “திலீபா… நீ…நீ… இவ்வளவு மட்டமான முறையில் நடந்து கொள்வாய் என்று நான் நினைக்கவே இல்லை”, என்று ஆரம்பிப்பார். 

இல்லை, அவர் வரமாட்டார். ராமநாதனும் வரமாட்டான். அவர்களுக்கு என்னைப் பார்க்கவே வெட்கமாயிருக்கும். என் தாய்தான் வருவாள். அவள்தான் கதறி அழுவாள். “திலீபா, உன் புத்தி ஏண்டா இப்படிக் கெட்டுப் போச்சு. அப்பாவுக்கேத்த மகன்னு சொல்லும்படியாச்சேடா,” என்று வருந்துவாள். 

இதை நினைக்கவும் வயிற்றில் ஒரு வேதனை சூழ்ந்தது. ஆனால் மணி எட்டு அடித்தும் யாரும் என் அறைப் பக்கம் வரவில்லை. வீட்டு சமையல்காரன்தான் ஒரு பிளேட்டில் இட்லியையும் ஒரு டம்ளரில் காப்பியும் எடுத்துக் கொண்டு வந்தான். 

அவன்.. அவன் பார்த்த பார்வை ஒரு மாதிரி இருந்தது. ஒரு வேளை அவன் வரையில் விஷயம் எட்டியிருக்குமோ? இருக்கும். ராமலிங்கமும் ராமநாதனும் என்ன செய்வது என்று யோசித்தபடி இருப்பார்கள். அதனால்தான் யாரும் வரவில்லை. சீக்கிரமே ஒரு முடிவுக்கு வந்த பின்பு இருவரும் வருவார்கள். முடிவு தெரியாமல் எத்தனை நேரம் தவிப்பது! 

குற்றம் செய்தவனுக்கு அது வெளிப்படும்வரை ஏற்படும் குழப்பத்தைவிட வேறு தண்டனை வேண்டியதில்லை. 

இவ்வாறு நான் சிந்தித்தபடி இருக்கும்போது என் அறை நோக்கி யாரோ வரும் காலடி ஓசை என் காதுகளில் விழுந்தது. 

நான் மூச்சை அடக்கியபடி முடிவுக்குக் காத்திருந்தேன். கதவு திறந்தது. வீட்டு வேலைக்காரன் மாணிக்கம் நின்றிருந்தான். ”எஜமான் உங்களைக் கூப்பிடறாங்க. ஹால்லே இருக்காரு,” என்று சொல்லி விட்டு அவன் சென்றுவிட்டான். 

நான் விசாரணை மண்டபத்துக்குச் செல்லும் குற்றவாளியைப் போல் மெல்ல நடக்க ஆரம்பித்தேன். ஒவ்வொரு படிக்கட்டையும் தாண்டி இறங்கும்போது பெரிய அவமானத்தை நோக்கி நான் இறங்குவது போல் இருந்தது. அவர்கள் கேட்குமுன்பே நான் என் குற்றத்தை ஒப்புக் கொண்டு மன்னிப்புக் கேட்பது என்று தீர்மானத்துக்கு வந்துவிட்டேன். 

ஹாலின் கதவைத் திறந்து நுழைந்தேன். ராமலிங்கம் ஹாலில் போட்டிருக்கும் நடு சோபாவில் உட்கார்ந்திருந்தார். சற்றுத் தூரத்தில் ஒரு மேஜையின் முன் ராமநாதன் உட்கார்ந்திருந்தான். சீதா தந்தை முன் காப்பியை வைத்து விட்டு நிமிர்ந்தாள். 

அவள் பார்வை என் மேல் விழுந்தது. உடனே தலையைக் கவிழ்த்துக் கொண்டு ஒருவித வெறுப்போடு விலகிக் கொண்டாள். நான் திகைத துத் தடுமாறியடியே முன் நடந்தேன். 

ராமலிங்கம் என்னை ஒரு முறை நோக்கினார். பிறகு ஒன்றும் பேசாமல் காப்பியைச் சாப்பிட்டார். வழக்கமாகச் சொல்லுவது போல் ‘உட்காரு,’ எனறு கூடச் சொல்லவில்லை. 

ராமநாதனோ தன் கவனத்தை தினசரிப் பேப்பரிலேயே செலுத்திய படி இருந்தான். 

அறையில் நிசப்தம் நிலவியது. அவர் என்னைக் கேட்க வேண்டிய கேள்வியைக் கேட்டுத் தொலைக்காமல் ஏன் இப்படி என்னை ஊசி முனையில் காக்க வைக்கிறார் என்று ஆத்திரப்பட்டேன். இம்மாதிரி ஒரு சம்பவம் ஓர் ஏழைப் பெண்ணுக்கு நேர்ந்திருந்தால் இந்நேரம் வீடு இரண்டாயிருக்கும், போடும் கூச்சலிலும், அடிதடியிலும். 

இது பணக்கார வீடல்லவா. எல்லாம் கட்டுப்பாடுடனே நடக்கிறது. ராமலிங்கம் காதும் காதும் வைத்தாற்போல் விஷயத்தைக் கண்ணியமாக முடிக்கப் போகிறார். இது என்னைக் கண்டிக்கும் விஷயம் மட்டுமல்லவே. அவர் பெண்ணின் கெளரவமும் இதில் அடங்கியிருக்கிறதல்லவா?. அதனால்தான், ஜாக்கிரதையாக நடந்து கொள்கிறாரோ? 

“திலீபா, உட்கார்,” என்றார். உட்கார்ந்தேன். உடனே ராமலிங்கம் “இன்று பூரா எனக்குக் கலெக்டர் ஆபீஸில் வேலை இருக்கிறது. ராமநாதனும் அவசியமாகக் கோர்ட்டுக்குப் போக வேண்டுமென்கிறான். அதனால் நீதான் சீதாவை இன்று தேவர் ஹாலுக்கு அழைத்துப் போக வேண்டும். தேவர் ஹாலில் அவள் பாட்டுப் போட்டியில் பங்கெடுத்துக் கொள்ளப் போகிறாள்.” என்றார். 

எனக்கு அப்படியே தூக்கி வாரிப் போட்டது. அவர் என்னை வேண்டுமென்றே பதம் பார்க்கிறாரா அல்லது உண்மையிலேயே நேற்று இரவு நடந்த நிகழ்ச்சி அவருக்குத் தெரியாதா? 

கதவின் மறைவிலிருந்த சீதா, “அப்பா, நானே தனியாகப் போய் விட்டு வருகிறேன்.” என்று பதில் கொடுத்தாள். 

ராமலிங்கம், “தனியாகப் போகிறதா? சே! சே! திலீபன்கூட வந்தால் அதே உனக்கு ஒரு தெம்பாயிருக்கும்மா! போட்டியிலே நீ பாடற பாட்டு ஒவ்வொன்றும் மணி மணியா அமையும்!” என்றார். 

சீதா கதவின் மறைவில் இருந்தபடியே, “அத்தான், கோர்ட் கேஸை மாத்திட்டாப் போகுது. நீங்களே வாங்களேன்,” என்றாள். 

ராமநாதன், “அது முடியாது சீதா, என்னாலே இன்னிக்கு வரவே முடியாது. திலீபன் சங்கீத மேதை. அவன் வருவதுதான் சரி!” என்று சொன்னான். இன்னமும் சீதா இரவு நடந்தது பற்றி யாரிடமும் சொல்லவில்லை என்பது ஊர்ஜிதமானதும், நான் நிம்மதியோடு பெருமூச்சு விட்டேன். 

அன்று பகல் சாப்பாட்டின் போது சாப்பிடும் அறையில் நான் மட்டும் தனியே சாப்பிட்டேன். சீதா என் கண் எதிரே தென்படவில்லை. நான் சாப்பிட்டு முடிந்தபின் என் தாய் சாப்பிட உட்கார்ந்தாள். அப்போது என் தாய்க்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்த சமையல்காரனை அனுப்பிவிட்டு, சீதாவே பரிமாற அங்கு வந்தாள். 

நான் சாப்பிட்டுவிட்டுப் போகும்வரை சீதா வேண்டுமென்றே எங்கோ மறைந்திருந்தாள் என்பது தெளிவாயிற்று. அவள் என்னைப் பார்த்த பார்வையில் வெறுப்புதான் இருந்தது. அன்று பிற்பகல் சங்கீதப் போட்டிக்குப் புறப்படும்போது என் தாயும் காரில் சீதாவின் அருகில் உட்கார்ந்திருந்தது ஆச்சரியமாக இருந்தது. 

“போட்டிக்கு நானும் வர வேண்டுமென்று சீதா வற்புறுத்துகிறாள். நான் எதுக்கடா வரணும் திலீபா,” என்று தாய் என்னைக் கேட்டாள். ‘என்னோடு தனியாகப் போக விரும்பவில்லை. அதற்காக உங்களைத் துணை கூப்பிடுகிறாள் அம்மா’, என்று நான் சொல்ல முடியுமா? 

கார் தேவர் ஹால் வரும் வரையில் சீதா ஒருமுறைகூட என்னை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. எனக்கு ஏன் மனிதப் பிறவியை எடுத்தோம் என்றிருந்தது. சீதா அன்றிரவு கூச்சல் போட்டு என்னைக் காட்டிக் கொடுத்திருந்தால்கூடப் பரவாயில்லை. விஷயத்தை மூடி வைத்து விட்டு, என்னைப் புழுப் போல் நடத்துவது எனக்குப் பெரும் அவமானமாக இருந்தது. 

பாட்டுப் போட்டியில் சீதாவின் குரல் ஒன்றே அவளுக்கு வெற்றியைத் தரும் என்று நிச்சயமான நம்பிக்கை எனக்கு இருந்தது. அதோடு அவள் தன்னுடைய நெஞ்சத்தையே பாடலில் பிழிந்து பாடினாள். பாடும் போது ஒருமுறைகூட என் பக்கம் திரும்பவில்லை. ஆனால் என் கண்கள் அவளையே விட்டு விலகாதபடி நின்றன. ஆண்டாள் பாசுரமாகிய வாரணமாயிரம் என்ற பாடலை ராக மாலிகையில் பாட ஆரம்பித்தாள் சீதா. 

மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத 
முத்துடைத்தாமம் நிறை சூழ்ந்த பந்தற் கீழ் 
மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழி நான். 

என்ற பாடலைக் காபி ராகத்தில் சீதா பாடும்போது என் மனத்தில் தோன்றிய காட்சியில் மத்தளம் கொட்டிற்று. வரிசங்கம் நின்றூதியது. சீதா மணப்பெண்ணாகி நின்றாள். நான் அவள் கைப்பற்றி நின்றேன். 

பாடியபடி சீதா எதேச்சையாக என் பக்கம் திரும்பினாள். உடனே நான் புன்முறுவல் செய்தேன். அவள் நான் என்ன நினைக்கிறேன் எனபதைப் புரிந்து கொண்டவள் போல் தன் முகத்தை வேறுபுறம் திருப்பிக் கொண்டாள். 

போட்டியில் முதல் பரிசாகச் சீதாவுக்கு வெள்ளிக் கோப்பை பரிசளிக்கப்பட்டது. நாங்கள் வீடு திரும்பும்போது என் தாய் சீதாவின் சங்கீதத் திறமையை வானளாவப் புகழ்ந்தாள். “திலீபா, சீதா பாடியதிலே உனக்கு எந்தப் பாட்டுடா பிடித்தது?” என்று கேட்டாள். 

நான் திரும்பிப் பாராமல் “காபி ராகத்தில் பாடிய ‘மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து என்னைக் கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழி’, என்ற அடிகள்தான் எனக்கு மிகவும் பிடித்தது அம்மா”, என்று கூறிவிட்டுக் காரின் முன்னால் மாட்டியிருக்கும் கண்ணாடியில் சீதாவின் முகத்தைப் பார்த்தேன். சீதா வெறுப்போடு என்னைப் பார்ப்பது தெரிந்தது. 

அன்றிரவு சாப்பிட்டுவிட்டு நான் என் அறைக்குப் போகும்போது படிக்கட்டில் சீதா என்னைச் சந்திக்க நேர்ந்தது. பக்கத்தில் யாருமில்லை என்று தெரிந்ததும் நான், “சீதா. என்னை மன்னித்துவிடு. நான் கெட்டவனல்ல. நேற்று நான் ஏன் மிருகமாக மாறினேன் என்று எனக்கே புரியவில்லை”, என்று மன்னிப்புக் கேட்டேன். சீதா படபடப்புடன், “நான் உங்களை வெறுக்கிறேன். மனப்பூர்வமாக வெறுக்கிறேன்,” என்றாள். 

“நான் என்னை வெறுப்பதை விட நீ அதிகமாக என்னை வெறுக்க முடியாது சீதா.” என்றேன். 

சீதா, “நான் அப்பாவிடம் எல்லாவற்றையும் சொல்லிவிடலாம் என்றிருந்தேன். ஆனால் உங்கள் அம்மாவை நினைத்ததும் எனக்குத் துணிவு வரவில்லை. அந்த உத்தமியின் மனம் வருந்தக் கூடாதே என்று தான் பேசாமலிருக்கிறேன்,” என்று சொல்லிவிட்டுக் கீழே இறங்கிச் சென்று விட்டாள். 

ஒருநாள் ராமநாதன் என்னிடம் வேதனையோடு சொன்னான். “வர வரச் சீதா என்னோடு கூடச் சரியாகப் பேசுவதில்லை… ஏதோ ஒன்று அவள் உள்ளத்தை வாட்டி வருகிறது. உன்னால் காரணம் சொல்ல முடியுமா. திலீபா!” என்று என்னையே கேட்டான். 

எனக்கு என்ன பதில் சொல்வது என்றே புரியவில்லை. நான் இந்த வீட்டில் இருப்பது அவளுக்குப் பிடிக்க வில்லை என்று ராமநாதனிடம் எப்படிச் சொல்வேன்? “ராமநாதா, சீக்கிரம் அவளை மணம் செய்துகொண்டு தேன்நிலவு சென்றால் அவள் பழைய சீதா ஆகிவிடுவாள்,” என்று சொன்னேன். ராமநாதன் பதில் ஒன்றும் சொல்லாமல் சென்றுவிட்டான். 

ஒரு நாள் மாலை நான் கடைத் தெருவுக்குச் சென்று பற்பசையும், பிரஷும் வாங்கிக் கொண்டு வீடு திரும்பினேன். வீட்டில் ராமலிங்கமோ, ராமநாதனோ இல்லை. என் தாயும் கோவிலுக்குச் சென்றிருப்பதாக வேலைக்காரன் மாணிக்கம் சொன்னான். வீட்டில் நானும் சீதாவும் மட்டுமே இருக்கிறோம் என்பதை உணர்ந்தேன். என் மனத்தில் ஒரு விதக் கலக்கம் ஏற்பட்டது. ஒருநாள் நான் தவறி நடந்து கொண்டதை நினைத்துச் சீதா ஏன் இப்படித் தன் வாழ்வை நரகமாக்கிக் கொள்ள வேண்டும்? சீதாவிடமே இதைப் பற்றிப் பேசிவிட்டால் என்ன என்று எனக்குத் தோன்றியது. மெல்லச் சத்தம் செய்யாமல் அவள் அறையை நோக்கிச் சென்றேன். சீதா கட்டிலில் படுத்திருந்தாள். 

அவளது ஒரு கை அவள் தலையைத் தாங்கியபடி தலையணை மீது கிடந்தது. 

அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து பளிங்குக் கன்னத்தில் வைரக் கறையாக மின்னியது. நான் வந்ததை அவள் கவனிக்கவில்லை. அவள் துக்கத்தோடு படுத்திருந்தாலும் அதன் அழகு என் மனத்தில் ஆசை அலையை ஏற்படுத்தியது. 

இவளை மணக்கப் போகும் ராமநாதன் உண்மையிலேயே கொடுத்து வைத்தவன்தான், என்று எண்ணினேன். என் மனத்தில் குமுறி எழுந்த ஆசைகளை அடக்கிக்கொண்டு, ”சீதா”, என்று அழைத்தேன். பாம்பால் கடிக்கப்பட்டவள்போல் சீதா படுக்கையிலிருந்து துள்ளி எழுந்தாள் அவளையே பார்த்து நிற்கும் என் பார்வை அவளைச் சுட்டெரித்தது போலும். சட்டென ஆடையைச் சரி செய்துகொண்டு, “இங்கு ஏன் வந்தீர்கள்?” என்று கேட்டாள். 

“சீதா, என்னை மன்னித்து விடு. இந்த வீட்டில் நான் இருப்பது உனக்கு எவ்வளவு வேதனை தருகிறது என்று தெரியாமல் இல்லை. செல்வத்தில் பிறந்து செல்வத்தோடு வாழ வேண்டிய உன்னை மணக்கவோ விரும்பவோ எனக்குத் தகுதியில்லை என்பது தெரியும். உன் வாழ்க்கையை விட்டு விலகத்தான் நானும் முயலுகிறேன். என்னைப் பற்றி நீ பயப்பட வேண்டாம். உனக்கும் அண்ணா ராமநாதனுக்கும் கல்யாணம் ஆகும் வரையில்தான் நான் இந்த வீட்டில் இருப்பேன். அதுவரையில் நீ பழையபடி குழந்தை போல் குதூகலமாக இருக்க வேண்டும். அதுதான் என் பிரார்த்தனை” என்றேன். 

அன்றிரவு நாங்கள் எல்லோரும் சேர்ந்துதான் சாப்பிட்டோம். சீதாவும் தலைகுனிந்தபடியே சாப்பிட்டாள். 

சாப்பிட்டு முடிந்ததும் சீதாவின் தந்தை ராமலிங்கம் சீதாவின் கல்யாணத்தன்று அவளுக்குப் பூட்டுவதற்காக வாங்கிய புதுமாதிரி வைர நெக்லஸை எங்களுக்குக் காட்டினார். வரிசையாக எல்லோர் கைகளுக்கும் நெக்லஸ் மாறியது. அது என் பார்வைக்கு வந்ததும் அதைப் பார்த்தபடி இருந்தேன். 

ராமலிங்கம் என்னைப் பார்த்து, “திலீபா, நெக்லஸ் எப்படி?’ என்று கேட்டார். 

நான், “வைர நெக்லஸைப் பற்றி அபிப்பிராயம் சொல்ல எனக்கு என்ன யோக்கியதை இருக்கிறது சார். ஒன்றுமட்டும் நிச்சயம் சார். இந்த நெக்லஸால் சீதாவுக்குப் பெருமை ஏற்படப் போவதில்லை. சீதாவின் கழுத்தை அடைவதால் இந்த நெக்லஸுக்குத்தான் பெருமை ஏற்பட வேண்டும்.” என்றேன். 

ராமநாதன் என்னை ஒருவிதமாகப் பார்த்தான். அதேசமயத்தில் சீதாவும் பெருமூச்சு விட்டபடி அறையை விட்டு அப்புறம் சென்றாள். 

அறையில் அமைதி நிலவியது. நெக்லஸ் நன்றாக இருக்கிறது என்று சொல்லிவிட்டுச் சும்மாயிராமல், ஏன் சீதாவைப் பற்றிப் பச்சையாக அப் படிப் புகழ்ந்தேன் என்று வருந்தினேன் நான். சிந்திக்காமலே பேசிவிட்டேன் என்பதை உணர்ந்தேன். உடனே நான் என் அறைக்குப் போய்ப் படுத்துக் கொண்டேன். சீக்கிரமே இந்த வீட்டை விட்டுச் சென்றுவிட வேண்டும். இல்லாவிட்டால் ஏதாவது விபரீதம் என்னையறியாமலே நிகழ்ந்துவிடும் என்று பயந்தேன். ஏதாவது பொய் சொல்லிவிட்டு, மறு நாளே சென்னைக்குப் புறப்பட்டுவிடுவதுதான் சரி என்று தீர்மானித்தேன். இந்தப் புதுத் தீர்மானத்தோடு நான் அமைதியாகக் கண்களை மூடித் தூங்க ஆரம்பித்தேன். ஆனால்- 

சற்று நேரத்துக்கெல்லாம் அறைக் கதவு திறந்தது. சீதா உள்ளே நுழைந்தாள். நான் ஆச்சரியத்தோடு கண்களைப் பாதி மூடியபடியே பார்த்தேன். அழுத கண்களோடு அவள் என்னை நெருங்கினாள். அது மட்டுமல்ல, என் படுக்கையில் என் அருகில் அமர்ந்தாள். நான் தூங்குகிறேன் என்று நினைத்து என்னை அப்படியே விழுங்கி விடுவதுபோல் பார்த்தாள். என் உடலில் மின்சாரம் பாய்வது போல் தோன்றியது. நான் மூச்சை அடக்கிக் கண்களை மூடிக் காத்திருந்தேன். வந்தது சீதாதானா அல்லது இதுவும் ஒரு ஜாலக் காட்சியா?

– தொடரும்…

– உடல் பொருள் ஆனந்தி, குமுதம் வார இதழில் (29-10-1992 முதல்) வெளியான தொடர்கதை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *