இதோ இன்னொரு மனிதன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: June 14, 2016
பார்வையிட்டோர்: 14,520 
 
 

அந்த மண்பாதை சட்டென தன்னை குறுக்கிக் கொண்டு ஒத்தையடி பாதையாக வளைந்து நெளிந்து நீண்டு கிடக்க, உயிர் வலிக்க வெளிவரும் அலறலோடு, கிழிந்த உடையுடன் அவள் காற்றோடு கலந்து காற்றை விட வேகமாக ஓடிக் கொண்டிருந்தாள்….நான்கு மனிதர்கள்… அவளை விரட்டிக் கொண்டிருந்தார்கள்… விரட்ட விரட்ட விரட்டுதல் எளிது என்பது போல……. இரைக்கும் மூச்சை கச்சிதமாக அளந்து கொண்டு ஓடுவதாகத் தெரிந்தது……. காதுக்கெட்டிய தூரம் வரை கண்ணாய் தெரிந்த பூமியில் குதிரையோட்ட தட… தட….. பட…பட…காற்றுப் புரவியோ…? என்று அவளின் வழி -விட்டது அவளை…

விரட்ட விரட்ட…ஒவ்வொரு முறை கிடைக்கையிலும்.. அவளின் மேலாடை.. கீழாடை. என்று ஒவ்வொன்றாக பிரிந்து, கிழிந்து அவர்கள் கையில் கிடைக்க…..கிடைக்க…. உள்ளாடை கொஞ்சம் கொண்டு… உள்ளாகவே தனை மறைக்கத் தடுமாறும்…அவள்… கத்தி அழுது கொண்டே.. புறப்பட்ட கத்தியைப் போல எதிர் முனையில் வீசப் பட்டுக் கொண்டே இருந்தாள்…

ஓரத்தில் இருந்த செடிகள்..மரக் கிளைகள்… பிடித்து கிழிக்க…….தட்டுத் தடுமாறி… தவம் மாறிய பிழை போல…விழுந்து எழுந்தவள், எதிரே இருந்த முள்வேலிக்குள் விழுந்து புரண்டதில்.. மிச்ச ஆடையும்… துச்சமெனக் காணாமல் போனது…..நிர்வாணக் கதறலை… ரத்தமாக்கி சொட்டிக் கொண்டே… மறைக்க ஒன்றுமில்லை போடா என்பது போல……மீண்டும் ஓடிக் கொண்டே இருந்தாள்….. ஓடுவது பாதங்கள் எனில்…நிற்பதும் பாதங்களே… சட்டென ஏற்பட்ட இடைவெளியில்… விரட்டி வந்தவர்கள் எங்கேயோ நின்றிருக்க வேண்டும்… காணவில்லை…. வானவில்லைத் தேடியவள் போல்.. கழுத்தை திருப்பிப் பார்த்துக் கொண்டே ஓடியவளின் முன்னால் இப்போது பூஞ்சோலைகள் கண் வேய்ந்தன… கடலும்.. அலையும்.. மணலும்.. நுரையும்.. புது கீதம் சொல்லும்.. புன்முறுவலைக் கொண்டதாக அவளை மாற்றிக் கொண்டே நகர, அவள் உடல் பூரித்து புது அழகை விரித்துக் கொண்ட பறவையாக தன்னை உணர்ந்தாள்…..

ஒரு விடுதலைக் கவிதையைப் போல…. காகிதம் தாண்டி குதித்த மனதோடு… அந்தக் கடற்கரையில்.. உல்லாசக் கூக்குரலோடு.. கத்திக் கொண்டே அங்கும் இன்னும் ஓடினாள்.. கேட்கின்ற சப்தங்களில் பறவைகளின் மௌனம்… கண்கள் விரிய மீன்கள் கொத்தித் தின்னும் கடல் மலைகள்…அவள்.. கண்டிப்பாக சிறகானாள்…. வண்ணத்துப் பூச்சியின் நிறத்தில் அவள் உடல் மெல்ல மாறுவதை உணர்ந்தாள்… ஈரக்காற்று.. சுகந்த வாசம்… தன்னை ஒரு தென்றலைப் போல உணர்ந்தாள்… ஒரு வெளியைப் போல காட்டிக் கொண்டாள்… அவள் யோனியில் பூத்திருந்த புது மலரை மெல்லத் தடவிப் போன இளங்காற்றில்…தலையசைத்தன கருப்பு மினுங்கல்கள்….. துள்ளிக் குதித்த முயல் குட்டிகளின் மதில் சுவறுகள் மேல் எழும்பி ததும்பின…தொட்டுத் தடவிய காற்றுக்கு… அவள் மொழி தெரிந்திருக்கும்…திறந்திருக்கும் திரவியக் காடுகளின் சுவாசங்களில் அவள் உளி பிறழ்ந்திருக்கும்… அவள் தன்னைக் கிடத்திக் கொண்டாள்… வானம் பூத்து விட்ட, நீல சோலையாகி விட… தாலாட்டி நிறைந்திருந்த நுரைக் கடலின் தரைக் கவிதை அவளாக கிடந்தாள்…

டக் டக் டக்……டக் டக் டக்…….

சட்டென விழித்தான்… அவன் விடியல் நிஜம்… பின் எது பொய்… எது மாயம்… காயமா…?…. நிர்வாணக் காற்றுக்குள் யோனிப் பூக்கள் என்ன செய்யும்…? தலை….அசைக்கும்….. அப்படியா….! மௌனத்தின் மறைவிடக் குமுறலை கம்பிகளாக்கி அவன் மெல்ல வெறித்தான்….

“என்ன நாள்னு தெரியும்ல……..எழுந்திருப்பா….”

அவன் கண்களைத் தேய்த்துக் கொண்டான்… ஆமாம்… இன்று ஞாயிறு…. சயோலாவுக்கு ஞாயிறு தோறும் வெளியே எங்கேயாவது போக வேண்டும்..

எழுந்தவன் அருகிலிருக்கும் தண்ணீரைக் குடித்தான்.. அதற்குள் அவள் தேநீர் கொண்டு வந்திருந்தாள்.. அவன் முகம் வேர்த்திருந்தது…

“என்னப்பா… இப்படி வேர்த்திருக்கு…?” என்றபடியே தன் புடவைத் தலைப்பால் அவன் முகத்தை ஒத்தி எடுத்தாள்…

“இன்னைக்குமா…..?” என்று சிணுங்கியபடியே, அவன் முதுகில் லாவகமாக கை வைத்து அவள் கால்களை அவன் கால்கள் மீது சரித்து வைக்க… அவன் எண்ணிக் கொண்டே தண்டால் அடிக்கத் துவங்கினான்… 80,81,82….

தண்டால் அடிக்கும் போது வேண்டுமென்றே வழுக்கி முதுகோடு உடல் சறுக்கி விழுவது அவளுக்குப் பிடிக்கும்… அவனுக்கும் பிடித்ததுதான்…. அப்படி விழும் போது அவள் உடலில் ஒரு எட்டு வயது சிறுமி வந்து புகுந்து கொள்வாளே…. அதைப் உணரவே அவன் தண்டால் செய்வான்… கள்வெறி கொல்லுதடி என்பது போலதான் புன்னகைப்பான்…புன்னகைத்தான்…

“அயே… பாருப்பா…. தாடி குத்துது என்ற அவள் அவனின் கன்னத்தை வருடி இசை மீட்டினாள்… அவனும் ஒரு முறை வருடிப்பார்த்து இல்லாத இசையை திசை மாற்றினான்….எப்போதுமே அவளின் விருப்பங்களே அவனின் திருப்பங்களாக இருக்கின்றன… அவனுக்கும் அதுதான் விருப்பங்களாக பறக்கின்றன… காதலில் மட்டும் விட்டுக் கொடுப்பது வெகு சுலபமாக இருப்பது எப்படி என்று நெற்றி முட்டிக் கேட்டுக் கொள்வார்கள்… முட்டு முட்டு… முட்டு என்று குழந்தைகள் கேட்பது போல…

மெல்லிய வெளிச்சத்தில் மினுமினுக்கும் அவள், தேவதைகளின் தலைவி என்று வெற்றிடம் வாசித்துக் காட்டுவான்…. மேலாடை இன்றி கன்னக் குழி சிரிப்புடன் ஒரு குழந்தையின் தொலைதலைப் போல தலை சாய்த்து மடிக்குள் காணாமல் போகும் அவனை காதலின் தெய்வம் என்பாள்….அவனின் உடைகளை அணிவது அவளுக்கு பிடித்தமான இரவு…இன்று பகலிலும் அணிந்திருந்தாள்….அவன்… அவளையே உற்றுப் பார்த்தான்… அவள் தன்னைப் போலவே சாயல் கொண்டவளாக இருக்கிறாளோ என்று தோன்றிய நொடியை திருப்பி திருப்பி பார்த்த அவன்…தானும் அவள் போலவே ஆகி விட்டோமோ என்று நம்பினான்…

“காதல் கடவுளைக் காண்கிறது… கருணையைத் தூவுகிறது… எல்லாக் காலங்களிலும்… காதலை மட்டுமே கொண்டாடுகிறது உலகம்…… வரையறுக்க முடியாத வண்ணங்களினால் காதல் உயிராகிறது…. உணர்வாகிறது…. சயோலா…. புன்னகைக்க பிறந்தவள்… அவளின் அழுகையைக் காணாத தேசத்தில்தான் நான் வாழ்கிறேன்… பசி மாற்றி உணவு கொள்ளும் உடல் கொண்டவர்கள்…நாங்கள்…”

நாட்குறிப்பில்… எப்போதும் போல எழுதிக் கொண்டிருந்தான்…

“டைம் ஆச்சுடா… காலம் ஓடிக் கொண்டிருக்கிறது….” என்ற சயோலாவைப் பார்த்து கண்ணடித்து விட்டு…..”இருடி அழகி…….வந்தறேன்…. அதுக்குள்ள நீ ட்ரெஸ் பண்ணு…. எனக்கு பிடிச்ச ப்ளு கலர் சுடி …… போடு…” என்றவன்…… மீண்டும் எழுத, குனிந்து விட்டான்…

“வாழ்க்கை தொடங்குவதுமில்லை… முடிவதுமில்லை.. அதில் காதலும்.. காதலுக்கு உரியவளும் நிறைந்திருக்கிறார்கள்… சயோலா… என் வாழ்வின் பயணங்கள்….என் வானத்தில் நீல வண்ணம்…. ஈரக் காற்றைப் போல… என் வெளிக்குள் சுழன்றடிப்பவள்… தூசுகளின் தெறித்தலாக என் கண்கள் குளமாக்கும்… குறுங்கவிதைக் துணுக்குகள்…அவள்……அவள் வாழ்ந்தால் நான் வாழ்வேன்… அவள் மரணமுற்றால்… நானும் மரணிப்பேன்…உடன் உயிர் ஏறுவது எங்கள் இருவருக்குமே பிடிக்கும்…தூரத்து ரயிலோசையை பிடித்து கொண்டு ஓடி வரும் சிறுமியைப் போல.. என் பூந்தோட்டம்… திறக்கிறாள்….. அவள் ஆகி விடுவது மிக சுலபம்.. நானாகி விட்டால்….. போதும்…. ஆகி விட்டவன்…. ஆனதும் அவள் என்பதில்தான் அந்த ஆவதின் சூட்சுமம் விரிகிறது… ஒரு ஆக்கத்தின் அழிவாகவும்….. மறு அழிவின் ஆக்கமாகவும்…..நாங்கள், கடந்தவர்கள்….’

-ஜீவா-

நாட்குறிப்பை மூடி வைத்தான்… மடிக்கப்படாத பக்கமாக அவன் கடைசியாக எழுதிய பக்கம் தன்னை மூடிக் கொண்டது..

“ஜீவா போலாமா…. டைம் ஆச்சு…”

“ம்ம்…. போலாம்….”

கால்கள் முன்னோக்கி சென்றன… முன்னால் சயோலா… பின்னோக்கி ஜீவாவைப் பார்த்தபடியே சென்றாள்… அவளின் புன்னகை மாறவே இல்லை… சட்டென கை பிடித்து நாடி பார்த்தாள்.. இதயத் துடிப்பை பரிசோதித்தாள்…கண்ணடித்து.. நாக்கு கடித்து….” சும்மா…” என்றாள்…. அவள் அப்படித்தான்.. அவனுக்காக பார்த்து பார்த்து எல்லாம் செய்வாள்… செய்பவை எல்லாமே அவனுக்காக இருந்தால் எப்படி இருக்கும் என்று பின்னிரவுக் கவிதைகள் செய்வாள்….”உன்னைச் சேரும் நேரம் என் இதயம் துடிப்பது கொஞ்சம் அதிகமென்று எப்போதும் உனக்கு தெரியாதது போலவேதானே இருப்பாய்”- என்று மெல்லினக் கனவுகள் தூவிக் கொண்டே.. அவளை நுகர்ந்தான்.. அதே வாசத்தில் அவள் ஒரு இளம்பிறையாய் மலர்ந்தாள்…

“ஏதாவது கேளேன்” என்றாள்…. சயோலா…

“மீண்டும் நீ வேண்டும்…..”- என்றான் … ஜீவா…..

விழிகள் நான்கும் வீணையானது….. வினோத இசைக்குள் அவர்களின் நினைவுக் கூடு… நிறைந்த நிர்வாணங்களை சூழ்ந்திருந்தன……. அவள் ஜீவாவின் கழுத்தில் தன் கைகளை மாலை போல் போட்டுக் கொள்ள…போட்டுக் கொள்ள…… கொள்ள..கொள்ள…….. கொல்ல…கொல்ல…கொல்ல…….. தத்தரிகிட…… தத்தரிகிட….தத்தரிகிட………. என்று அதிகாலை போர்த்திக் கொண்டு.. பாரதி, கத்திப் பாடுவது போல…..அந்த அறை முழுக்க நிறைந்தது…. நிறைவுக்குள் மரணம்.. ஒன்று பிறந்தது…….

“சயோலா… சயோலா.. சயோலா….. சையோ… செ… ச…” என்று பாதி கத்தியும்… மீதி துப்பியும்….முடிந்த வார்த்தைகள்… .. முடியாமல்.. துடித்து.. தவித்து.. தடுமாறி… கழுத்திறுகி… ஜீவா…கால்கள் உரச… அவனின் உலகம் மெல்ல இருளத் துவங்கியது…. அவனின் பார்வை மெல்ல மயங்கித் திணறியது……

“மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ…”- ஊர் கூடி குழுமியிருந்த கோவில் திடலில்.. மைக் செட்டில் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது……. இன்னும் வீட்டுக்குள்… காட்டுக்குள் இருக்கும் ஊர்க்காரர்களை……”வா…. வா….. வா……”. என்று இழுக்கும்.. திருவிழாக் கலை அது…சிறுவர்கள்…. வயது மீறிய வேலையைப் பார்த்துக் கொண்டிருக்க….இளைஞர்கள் வயதுக்கு தகுந்த வேலையைப் பார்க்க… தோழிகள், பலரை ‘வாலி’களாக்கிக் கொண்டிருக்க…ஆங்காங்கே பெரியவர்களின் கூட்டமும்… பேச்சும்.. சிரிப்பும்… என… பூத்து தெறித்த பட்டாசு மலர்களைப் போல… கவனங்கள்… சிதறிக் கொண்டேயிருக்க அந்த மாலை.. தன் நிறத்தைக் கூட்டிக் கொண்டிருந்தது…….

கூட்டம் ஒதுக்கிய கர கர குரல் ஒன்று எப்பவும் போல கத்தியது மைக்கில்……..

“ஏய்……கரகாட்ட கோஷ்டி வந்தாச்சுப்பா….”

கூட்டம் ஒரு கணம் ஸ்தம்பித்தது…

“கொஞ்சம் வழி விடுங்கப்பா….”

கூட்டம் முண்டியடித்துக் கொண்டு சூழ்ந்தது…

“ஏய்…. கூட்டம் போடாதிங்க…. முதல்ல…..அவுங்கள… ரூம்க்குள்ள போக விடுங்க…..”இரைச்சல் தாண்டி… இன்னிசையாய் அவர்கள் வந்த செய்தி மைக்கில் தேன் சொட்டிக் கொண்டிருந்தது…….

மூச்சு வாங்க.. விலகல் விரித்தது கூட்டம்…….பெண் இடை போல… வழி பிறக்க…. நடுவில்… ஒய்யாரமாய்… சிவப்பு கம்பள நடையைக் கொண்டு மிதந்து வந்து கொண்டிருந்தார்கள்… அர்க்காணி… ஸ்ரீ தேவி…. குமரன்….செங்கான் ….. ‘குந்தாணி’ ராசாத்தி…

வரிசையில் திக் என்று நின்று மேல் இருந்து கீழ் வரை.. மிதந்த பார்வையை ஒரு கட்டத்தில் பெரியதாக நிறுத்தி…”யாருப்பா இது… பளபளன்னு மின்னுதா….டேய் குமரா… யாரு இது புதுசா..” என்று முணங்கி… மைண்ட் வாய்சை வெளியே கொட்டி விட்ட ஒரு அறுபது வயது… வெள்ளை மீசைக்காரர் கோட்டை விட்டவர் போல கேட்டு சிரித்தார்….

“ஆமாங்க… புதுசு… வயசு 21 தான்..”-என்றபோது… முகம் ஒரு மாதிரி கோணியது குமரனுக்கு… நல்ல ஆட்டக்காரி… பேரு சயோலா…..” என்ற போது உடல் ஒரு மாதிரி கோணியது…கேட்டவருக்கு…….

“என்ன சரோஜாவா….?” என்று கேட்டது கூட்டத்தில் இருந்து கண நேரத்தில்.. எதிரொலி…..

“இல்ல சயோ….லா….”- குமரன் கூறுவதை யாரும் கேட்பதாக தெரியவில்லை..

“பார்க்க மட்டுமல்ல…..பார்ப்பதற்கென்றே பிறந்த கண்கள் கொண்ட சரோஜா இவள்….” என்று எவனோ, ஒரு கோட்டைத் தாண்டிய கவிதைக்காரன்…கத்தினான்…. ஹோ-வெனக் கத்தியக் கூட்டத்தில்…..:” சரோஜா….. சரோஜா……. என்று சச்சினைப் பார்த்து கத்துவதைப் போல.. கத்தினார்கள்… அவர்கள் அப்படித்தான்…… அது அவர்களின் உலகம்…. அங்கே…. கட்டிப் பிடித்தாலே குழந்தை பிறந்து விடும் என்று நம்புவோர் ஏராளம்….

“அட மெல்ல நட…. மெல்ல நட…. மேனி என்னாகும்…?” என்று ஒரு குரல் சயோலாவின் பின்னால் பதுங்க….. சட்டென திரும்பி.. “ம்ம்ம்ம்….. புண்ணாகிடும்…” என்றபடியே விசுக்கென்று பின்னால் கிடந்த ஜடையை முன்னால் தூக்கிப் போட்டுக் கொண்டு கழுத்தை ஒரு வெட்டு வெட்டியபடி நடந்தாள்…..

“குட்டி புதுசுல்ல..அதான்…” என்றது… ஒரு குடிகாரனின்.. பழைய மொழி…

அத்தனை கூட்டத்தையும் விலக்கிக் கொண்டே அவர்கள் முன்னோக்கி நடக்க… கடைசியில் ஒரு கதாநாயகியைப் போல ஜல் ஜல் என ஆடாமல் அலுங்காமல் நடந்து சென்றாள் சயோலா …. பின்னால் உருண்ட கண்கள் ஒரு கட்டத்தில் கதவடைத்து நின்றன…..

கரி சோறு கமகமக்க…. நவீன சாராயம் சுருசுருக்க .. ஊரெல்லாம் மின்சார விளக்கின் தோரணங்கள்..காரணமே இல்லாமல் வந்து போய்க் கொண்டிருக்கும் பாதங்கள்… மனித தலைகள் காட்டும் வெற்றிட வியர்வைகள்… எல்லாவற்றுக்குள்ளும் புகுந்து வந்து கொண்டிருந்தது ஒலிபெருக்கியின் குரல்…

“இதோ நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த கரகாட்ட நிகழ்ச்சி இதோ.. இன்னும் சில மணித் துளிகளில்.. உங்கள் கண்களைக் கொள்ளை கொள்ளப் போகிறது…”

திக்கென நின்ற கனவைப் போல.. ஒரு மாயத் திரை விலகியது….

“ஹே… வந்தனம்.. வந்தனம்… வந்த சனம் குந்தனம்…” தட தடவென வந்து நிறைத்த பாடல் செவியைக் கிழிக்க.. மத்தளமும்.. சேர்ந்து அதிர்ந்து குலுங்க.. குமரனும்.. ‘குந்தாணி’ ராசாத்தியும்.. பட்டையைக் கிளப்பத் துவங்கினார்கள்…. ஊர் கலை கட்டியது…. ஒரு கூட்டம் திடலுக்கு பின்னால் நின்று கொண்டும், ஆடிக் கொண்டும்.. இருக்க.. இனம் புரியாத உற்சாகத்தில் ஊர் திளைத்துக் கொண்டிருந்தது……. எட்டிப் பார்த்த ஒரு கூட்டம் வியர்த்துக் கொட்டியது….. எட்ட நின்று பார்க்காதது போல…. ஒரு படித்த கூட்டம்…கண்கள் தாண்டி மனதால் நழுவிக் கொண்டிருந்தது….

“தயவு செய்து கோவிலுக்கு முன்னால் நிற்பவர்கள் அமரவும்… பின்னால் இருப்பவர்களை மறைக்காமல் இருக்குமாறு….. கோயில் கமிட்டி சார்பாக கேட்டுக் கொள்ளப் படுகிறது.. உங்கள் வீட்டு எல்லா விஷேசங்களுக்கும் ஒளி அண்ட் ஒலி அமைத்துக் கொடுக்க “நியந்தா சவுண்ட் சர்வீஸ்…..”-கிடைத்த இடைவெளியில்…. பாடல் சத்தத்தை மெல்ல குறைத்துக் கொண்டே.. மைக்கின் அறிவிப்பை.. பலமாக காற்றில் உலவ விட்டு பின்..பாட்டு சத்தத்தை மெல்ல உயர்த்திய எதிரொலி… நுட்பத்தில்… ஒரு வித ஆனந்த அதிர்வை உருவாக்கிக் கொண்டிருந்தது…”நியந்தா சவுணட் சர்வீஸ்- முனியாண்டி….

“நான் எழு வயசுல எளனி வித்தவ…” என்று அர்க்காணி.. ஆட… “ஆமா…… ஆமா….. அந்தக் கதைதான் எங்களுக்கு தெரியுமே….”- என்று… ஒரு கூட்டம் கத்தி சொல்லி விட்டு.. “இது எப்டி இருக்கு” என்பது போல மேடையை வெறுமனே பார்த்தது….ஒரு வழக்கம் போல…

அதே சமயத்தில் ஒருவன் ஓடிச் சென்று 50 ரூபாய் தாளை அர்க்காணியின் மேலாடையில் குத்தினான்..

மார்பை உள் இழுந்து கண்கள் சுருக்கி பெரு மூச்சு விட்டபடி ஒரு எதிர்வினையை மக்களுக்குக் காட்டியபடியே…”இன்னும் எத்தன வருசத்துக்குடா இப்பிடி குத்திகிட்டே இருப்ப…”என்று காதில் கிசு கித்தாள்..அர்க்காணி…

“அதென்னமோ தெர்ல என்ன மாயமோ தெர்ல.. நீ வந்தாலே..”–அவன் வாய்க்குள் சாராய மாயக் குவளை இருக்க…”சரி மூடிட்டு போ….” என்று பீப் போட்டது…. அர்க்காணி….

இவனோடு பேசியதில்,….மைக்கில்.. ஸ்ரீதேவி பாடிக் கொண்டிருந்த பாடல் அர்க்காணியை விட்டு விட்டு ஓடி விட.. வேகமாய் ஓடிச்சென்று பாட்டைப் பிடித்து…. வாயசைத்துக் கொண்டே விட்ட இடத்தில் இருந்து ஆடத் தொடங்கினாள்… அடி வெளுத்துக் கொண்டிருந்தார் மத்தளக்காரர்… அவர் கன்னங்கள் தாறுமாறாக மேல் எழும்பி குதித்துக் கொண்டிருந்தன… காதோரம் வியர்த்து ஒழுகும்… வேகத்தில்.. காது வரை வாயை இழுத்துக் கொண்டு… “ஆஹ்.. ஆஹ்.. அப்படித்தான்.. வா. வா…” என்று வார்த்தையே இல்லாமல் தலையை மத்தளமாக ஆட்டி ஆட்டிக் சத்தம் எழுப்பிக் கொண்டிருந்தார்……அத்தனையும்…. ஆட வைக்கும்… கிர் கிர்….

வருடம் ஒரு முறை.. மாமாவின் வற்புறுத்தலுக்கு இணங்க….. சொந்த ஊருக்கு வரும் ஜீவா….. ஒரு மூலையில் பழைய நண்பனுடன் நின்று பேசிக் கொண்டும்… அப்படியே கரகாட்டம் பார்த்துக் கொண்டும் இருந்தான்…. அவனுக்கு இந்த கரகாட்டத்தில் அவ்வளவாக ஈடுபாடு இல்லை…

“இல்லடா….. கரகாட்டங்கறது வேறரடா…..இவுங்க கெடுத்துட்டு இருக்காங்க.. ரெட்டை அர்த்த வசனம்.. சில நேரத்துல நேராவே.. கெட்ட வார்த்தை பேசறது…அசிங்கமா உடம்ப காட்றது…அவுங்கலாவே பாட்ட மாத்தி மாத்தி பாடறது…இதெல்லாம் இல்லாம ஒழுங்கா… ட்ரெஸ் பண்ணிட்டு சினிமா பாட்டுக்கு இல்லனா நாட்டுபுற பாட்டுக்கு ஆடினாவே போதும்… .. ஊரே கூடி..பாக்கும் போது என்னமோ மாதிரி இருக்குடா… பாரு எத்தனை சின்ன பசங்க பாக்காறாங்கனு……. இந்த மாதிரி விஷயத்தை ஊக்குவிக்கிற நம்ம ஊரு பெரிய மனுஷங்களை என்னனு சொல்றது……”

அடுத்தடுத்து பாடல்கள்… பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்தன…

“அவுங்களயும் தப்பு சொல்ல முடியாதுடா…இது அவுங்க பொழப்பு….எங்கையோ எப்படியோ இந்த கலை கொஞ்சம் கொஞ்சமா மாறி இப்ப இந்த நிலைமைக்கு வந்துருக்கு…. இதுக்கு ஏற்பாடு பண்றவங்க…அசிங்கமா பேசி கூடாது…..அசிங்கமா நடந்துக்க கூடாதுன்னு சொல்லி கூட்டிட்டு வரனும்.. ஆனா பாரு… அவுங்க அரை குறையா உடம்ப காட்டறதுதான் என்ஜாய்மென்ட்ன்னு இளைஞர் கூட்டம் கூட நினைக்குது.. பாரு சத்தத்தை…”

“கிடைச்ச வாய்ப்ப பயன் படுத்திகிட்டு ஆடி சம்பாரிக்க வேண்டிய கட்டாயம் அவுங்களுக்கு…அதை இவுங்க பயன் படுத்திக்கிறாங்க…இது பசிக்கும் ருசிக்கும் இடையில நடக்கற போராட்டம்… ஒரு தீர்வுக்குள்ள அடைச்சிர முடியாது……”

அவர்களின் உரையாடலைக் கூட சற்று கவனம் சிதற வைத்தது… அடுத்த பாடல்…

“ஆளுமா டோலுமா….

“ஆளுமா டோலுமா….. ஐசாலக்கடி மாளுமா…”அடுத்த பாடல் சும்மா தெறிக்க விட…

“ச…..ரோஜா ……..சரோ……ஜா………” என்று கூட்டம் அமளி துமளி ஆனது……

இந்தப்பாட்டுக்கு எப்படி ஆடுவார்கள் என்று பார்க்க ஓர் ஆர்வம் பிறந்தது… கண நேரத்தில்…ஜீவாவின் சிந்தனை கலைந்தது…ஏனோ ஆடுபவளைப் பார்க்கத் தூண்டியது… ஜீவா தன் நண்பனோடு கொஞ்சம் கூட்டம் விளக்கியபடிய சற்று முன்னால் வந்து எட்டிப் பார்த்தான்…

சின்ன கண்கள்.. மாநிறம்… பூசிய கன்னம்.. சீவியும் சீவாமலும் தொங்கும் கூந்தல்…என்று அவளின் தோற்றம் பார்க்க பார்க்க பரவசமானது…அவளைப் பார்க்கையில் ஏதோ ரசவாதம் ஜீவாவின் மனதுக்குள் நடந்தது… நொடிக்குள் நிமிடமாய் இதயத்தை..சுண்டியது சயோலாவின் தோற்றம்… அவள்… ஆடிக் கொண்டே நடப்பது போலவும்.. நடந்து கொண்டே ஆடுவது போலவும் ஒரு வித மிதப்பு நிலையை செய்துக் கொண்டிருந்தாள்… சாரல் மழையின் ஜன்னல் திறப்பாக……அவன் கண்கள் அவனை மெல்ல ஏமாற்றுவதாக அவன் கண்கள் நம்பத் தொடங்கியது… மெய்ம் மறத்தலின் விதை அவனை சுற்றி வட்டமிட்டது… இப்படி ஒரு வசீகரம்… இதுவரை தனக்குள் ஏற்படாத உள்ளார்ந்த வரைபட நிகழ்வு…. அவளைத் தொடர்ந்து பார்க்கத் தூண்டியது…அவன் பாடலை விட்டு விட்டான்.. ஆட்டத்தை விட்டு விட்டான்….அவள் சட்டென்று நின்று அவனையே தலை சாய்த்து பார்ப்பதாக அவனின் உலகம் புது வண்ணம் தூவியது…

‘சரோஜா… சரோஜா…’- என்று ஊரே சல்லாப பட.. அவன் மட்டும் ‘சயோலா’- என்று வாய்க்குள் முணுமுணுத்தான்….கண்களால் ஊரே அவளை வன்கலவி செய்ய அவன் கண்களால் அவளை வருடிக் கொடுத்தான்….

“சும்மா சொல்லக் கூடாதுயா……சிட்டாட்டம் ஆடறா….. சரோஜா…”- என்று சொல்லிக் கொண்டே தள்ளாடியபடியே ஆட்டக் களத்துக்குள் கயிறு குனிந்து உள்ளே சென்ற பெருமாள் சயோலாவின் ஜாக்கெட்டில் ஒரு முனையில் 100 ரூபாய் தாளை குத்தி விட்டார்…கண்கள் மேய்ந்த சொட்டுதலில் நெற்றி வியர்வை தவற விட்டாள் சயோலா… அவர் குத்தும் வரை.. ஆடுவதை சற்று நிறுத்தி விட்டு.. அவர் வேலை முடிந்து திரும்பியதும் வேண்டுமென்றே வரவழைத்துக் கொண்ட சிரிப்பை….. “ஹே…. என்பது போல கத்தியபடியே ஆட்டத்தைத் தொடர்ந்தாள்… அவள் முகம்.. கணம் ஒன்றில் கறுத்து பின் மீண்டும் ஒளிர்ந்தது……

ஜீவாவின் மனதுக்குள் ஊசி குத்தியது போல வலித்தது… ஏன் என்ற கேள்விக்குள் புகும் நினைவில்… இத்துடன் இன்றைய ஆட்டம் நிறைவு பெறுகிறது.. மீண்டும் காலை பத்து மணிக்கு தொடங்கும்…. சரோஜாவின்… சாத்துக்குடி ஆட்டம்…. (ஊர் கத்தியது) ஒலி அண்ட் ஒளி அமைக்க ‘நியந்தா’ சவுண்ட் சர்வீஸ்…..நீங்கள்.. ஆவலோடு… கண்டு களித்த …….

“என்ன விதமான ஆசைடா இது….. சாத்தியமா..?… அவளுக்கும் உனக்கும்… எப்படிடா…!..இந்த ஊர் உலகம் எப்படி ஒத்துக்கும்… என்ன கருமம் புடிச்ச காதல்டா இது.. ?…கண்ட நொடில வர்ற காதல்.. அதும் யார் மேல.. சத்தியமா உனக்கு பைத்தியம்தான்….”- நண்பன்…. வெறித்த பார்வையில்.. தெறிக்க விட்டான் வார்த்தைகளை…

“சில நொடில எடுக்கற முடிவுதான்….. உலகத்தையே தீர்மானிக்குது…..ஜனிக்கறதுக்கும்….மரணிக்கறதுக்கும் ஒரு நொடி தொடர்பு தான்… எப்பவுமே முதல் எண்ணம் ஆக்க பூர்வமாக இருக்குன்டா… உள் மனசுக்குள்ள ஒரு உணர்வு தோணும்.. எது சரி எது தப்புன்னு….. அது காட்ற வழி பெரும்பாலும் சரியா இருக்கும்னு நான் நம்பறேன்…”

மாற்றி மாற்றி பேசிக் கொண்டார்கள்.. நண்பன் எப்போது தூங்கினான் என்று தெரியவில்லை…. ஜீவா.. சயோலாவின் தூக்கத்தை கனவு கண்டான்.. அது ஆடிக் கலைத்த பசியின் ஆழமாக நிறைந்து கொண்டேயிருந்தது……அந்த நிறைதலின் வலி… வேறு ஒரு திரையை மூட யத்தனித்த விஷயம் அவனுக்கு தெரிய வாய்ப்பில்லை…ஆனாலும்…. நிகழ்வுகள்… தொடரத்தானே செய்யும்…

“இப்படி சுத்தி நின்னா எப்டிங்க நாங்க துணி மாத்தறது….” என்ற குமரன், கிட்டத்தட்ட கெஞ்சினான்…

“ஏன் துணி மாத்தறத பார்த்தா என்ன குறைஞ்சிடும்…”-பிராந்திக்காரன், பல் இளித்தான்….

கரகாட்டக் குழு சில நொடி ஸ்தம்பித்தது… இந்த மாதிரி மனிதர்களிடம்… என்னவென்று பேசுவது என்று யோசித்துக் கொண்டே தலை கவிழ்ந்து நிற்கும்போதே.. பட்டென வெடிக்கத் துவங்கினாள் சயோலா…

“அது எங்க தொழிலு…. அது முடிஞ்சா நாங்களும் உங்கள மாதிரிதான்… தயவு செஞ்சு தொந்தரவு பண்ணாதீங்க…புரிஞ்சுக்கோங்க… இல்லனா….ஊர்ப் பெரியவர்கிட்ட பேச வேண்டிருக்கும்…” என்று முகத்தை சுவற்றுப் பக்கம் திருப்பிக் கொண்டு பட படத்தாள்…

“அயோ.. ஊர்ப் பெரியவரா……..!….. நாங்க பயந்துட்டோம்.. அட போம்மா… அவரு இன்னாரம்….” என்று சொல்ல சொல்லவே குபுக்கென வாந்தி எடுத்தான்…ஒருவன்…

“நானும் ஒரு நாலாவது அந்த அதியசத்த பாத்தர்ணும்னு பாக்கறேன்.. முடியமட்டேங்குதுடா மச்சி…” என்றபடியே இரு பதின் பருவத்து நாயகர்கள், பேசிக் கொண்டே வெறித்தார்கள்……

“என்ன மாப்ளைங்களா.. கரகாட்டகாங்க கூடயே போய்டாதிங்கடா…. இந்த வருஷம் 12வது…. கவனம் இருக்கட்டும்” என்றபடியே தள்ளாடிக் கொண்டு போனார்… வராண்டாவை அளந்த வேலுசாமி…

சுர்ரென ஏறிய கோபத்தில்.. சுவற்றிலிருந்து முகம் திருப்பிய சயோலா…”ஏன்டா இப்டி இருக்கீங்க….பாக்க சின்ன பசங்களா இருக்கீங்க…இவ்ளோ மோசமா நடந்துக்கறீங்க……”-என்று அவள் தொடர்ந்து வசை பாட,

சயோலாவின் வாயை மூடச் செய்ய குமரன் எவ்ளோவோ முயன்றும்….. அவள் விட்டபாடில்லை..

“பஸ்ல வந்தா மேலயும் கீலயும் உத்து உத்து பாக்கறீங்க… ஒன்னுக்கு போனா ஒளிஞ்சிருந்து பாக்கறீங்க… குளிக்க போனா கம்பத்து மேல நின்னு பாக்கறீங்க… இதுல என்னடா அதிசயம்… எல்லாமே கண்ணு மூக்கு காது மாதிரி உறுப்பு தான்டா…”- அவள் கத்தத் துவங்கினாள்…

அதற்குள்…. கருப்பு சட்டைக்கார இளைஞர்கள் இருவர்..கரகாட்ட கோஷ்டி தாங்கும் விடுதியில், ஏதோ சல சலப்பு என்பதைப் புரிந்து கொண்டு….அறையை நோக்கி வர வரவே… அவர்களைக் கண்ட கூட்டத்தில் ஒரு பாதி மெல்ல கலையத் துவங்கியது…..

“என்னடா.. லொள்ளு பண்ணிட்டு இருக்கீங்க… கிளம்பு கிளம்பு.. கரகாட்டம் காலைல பாக்கலாம்” என்று மீசை முறுக்கிக் கொண்டே.. கண்கள் உருள சொல்ல..மிச்சக் கூட்டமும்… எங்களுக்கு எதுவும் தெரியாது என்பது போல நழுவத் துவங்கியது…..

“அததுக்கு ஆளு வேணும்…”என்று முணங்கிக் கொண்டே..’ நன்றிங்க” என்றான்.. குமரன்…..

சயோலாவின் கண்கள் சிவக்க, கன்னம் அழுகையை உருட்டிக் கொண்டே…ஒரு நிழலைப் போல அறைக்குள் கூனி குறுகினாள்…மற்றவர்கள்… ஆளாளுக்கு ஒரு மூலையில் சுருண்டார்கள், வழக்கம் போல…..

“வெங்காயங்களா… போய் வேற வேலை ஏதாவது பாருங்கடா.. வருஷ வருஷம்…. கலைய காப்பாத்தறேன்… கடவுள காப்பாத்தறேன்னு வந்து அவமான பட்டுட்டு…..’. என்று சொல்லி கொண்டே.. கோவில் திடலை நோக்கி சென்றார்கள்…அவர்கள்…

கரகாட்ட கோஷ்டி காலையிலேயே ஆத்தங்கரையை நோக்கி… அதே ஜில் ஜில் நடையோடு மிதந்து போக.. இன்னமும்.. போகாத முகப் பூச்சுகளும், ஜிகினா ஒட்டல்களும்…. அதே வசீகரத்தை இன்னமும்.. தூவிக் கொண்டே இருப்பது போல ஒரு தன் உணர்வுக் குவித்தலை பார்க்கும் கண்கள் தானாகவே எடுத்துக் கொண்டன…… கவனித்துக் கொண்டே கை தட்ட.. குரல் கொடுக்க.. பின் செல்ல….. என்று அவர்களை ஒரு அதிசயப் பொருள் போல பார்த்தார்கள், ஊர் மக்களில் பலர்……

“யக்கா நைட் ஆட்டம் செம்ம…’ என்றான் ஒரு 12 வயது சிறுவன்… வெற்றுப் புன்னகையை உதிர்த்தாள்…குந்தாணி…

“ஹெலோ சரோஜா.. என்ன படிச்சிருக்கீங்க….” என்று கத்தினான் ஒரு குறுந்தாடி இளம் வாலிபன்..

“ஏன் பாடம் கத்துக்க வரியா…’ என்று ராசாத்தி பதில் கேள்வி கேட்டாள்,சயோலா…

“என்ன பொண்ணுங்களா.. இன்னைக்கு எங்க வீட்டுக்கு சாப்ட வரீங்களா..?” என்று விஷமத்தோடு கேட்டது, 50 வயது மிலிட்டரிக்காரர் மஞ்சுநாத்…

“வரலாமே… ஆனா ஆளுக்கு ஒரு பவுன்ல வளையல் போடணும்….சரியா…?” என்று பதிலுக்கு நக்கல் அடித்தாள் அர்க்காணி…

ஏதோ தேரைப் பார்ப்பது போல.. வீட்டுக்குள்ளிருந்து ஜன்னல் வழியாக… வீதியில் இரு பக்கமும் நின்று என்று, ஆங்காங்கே கூட்டத்தோடு.. தனியாக என்று பெரும்பாலைய ஆண்கள்…கண்களால் வலையை வீசிக் கொண்டே இருந்தார்கள்…. பார்க்கும் பார்வையில்… ஒரு வித வேகம் இருக்க……எல்லாரையும் கடந்த பார்வையில்.. ஒரு வித வருடலை சட்டென கவிந்த கணத்தை மீண்டும் தலை திருப்பி பார்த்தாள் சயோலா…

இபோதும் ஜீவா அவளை மட்டும் அவள் கண்களை மட்டும் பார்த்துக் கொண்டே நின்றான்..

கவனம், நொடி கலைத்த பின்னும் சயோலா தலை கவிழ்ந்தே சென்றாள்…. …யோசனையற்று நடந்தாள்…

ஆற்றுக்கருகே வந்த பின்னும் பின்னால் வந்து கொண்டிருந்த கூட்டத்தை…ஊர்க்கோடியில்…. ஆற்றோரமாய் அய்யனார் சிலைக்கருகே தனித்து வாழும்…மாயா கிழவி திட்டத் துவங்கினாள்…அவள் கண்கள்… ஏதோ… சரி இல்லை… என்பதை உருட்டியது….

“அலையறானுங்க……’ என்ற முணங்கல் அவள் வெற்றிலை எச்சிலோடு தெறித்தது…

அதற்கு பின் ஏதோ வார்த்தை விழுந்தது…. கேட்காத அசரீரியாய்… அது….கொப்பளிக்கும் ஆற்றுக்குள்… மூச்சடைத்து எழும்… சயோலாவுக்கும் அவளின் குழுவுக்கும் கேட்கவில்லை…

ஆட்டம்… வழக்கம் போல பட்டையைக் கிளப்பி கொண்டிருந்தது… பகலில் பெண்கள் கூட்டம் அவ்வளவாக இல்லை… இளைஞர்கள் கூட்டம் நிரம்பி இருக்க.. ஆடல் பாடல்.. என அடி வெளுத்துக் கொண்டிருந்தார்கள்.. பத்து ரூபாய், இருபது ரூபாய், ஐம்பது ரூபாய் என்று சயோலாவின் ஜாக்கெட் நிரம்பிக் கொண்டிருந்தது… அர்க்காணி வேண்டுமென்றே கழுத்தை வெட்டி வெட்டி ஆடினாள்….

“அலோ… நாங்களும்.. ஆடத்தான் செய்யறோம்….. எங்களுக்கும் குத்தலாம்”- என்று அர்க்காணி மார்பை சற்று மேல் தூக்கி நையாண்டி செய்யவும் தவறவில்லை………கூட்டம் ஹோவென கத்தியது..

“போக்கா…. நீ பழசு.. அது புதுசு’ என்று சிலர் கண்கள் கக்கும் காமத் தீயில் சயோலா சற்று ஒதுங்கிக் கொண்டு ஆடினாள்…

பொதுவாகவே இவர்கள் ஆடும் கரகாட்டம் பார்ப்பது ஜீவாவுக்கு பிடிக்காது…ஆனால் சயோலாவுக்காக அவன் ஒரு ஓரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்தான்..கூட நின்ற நண்பன் தலையில் அடித்துக் கொண்டான்….

ஏதேட்சையாக அவன் பக்கம் பார்த்து விட்ட சயோலா….. மற்றவர் பார்வையில் இருந்து அவன் பார்வை வித்தியாசப் படுவதை உணர்ந்தவளாக சட்டென தன் பார்வையைத் திருப்பிக் கொண்டாள்.. அவள் கால்கள் ஆடிக் கொண்டிருக்க, மனம்…. ஆற்றங்கரையில் தனியாக ஒரு மாலை நேரத்தை தூவுவது போல… ஒரு நிலைக்குள் நின்றது……..என்னடா இது, புது மாதிரி மனதுக்குள் ஒரு நதி ஓடுகிறதே என்பது அவள் மொழியில் கால் சலங்கை குதிக்க….. அவள்… நிலை கொள்ளாத வெளியில்.. ஓரடி உயர்ந்து ஆடுவதாக மண் சொல்லியது….

ஒரு பக்கம் அர்க்காணி….. சயோலா… எதிர் பக்கம்… குமரன்…. குந்தாணி.. என்று இரு அணிகள் போல். எதிர் திசையில் ஒருவரையொருவர் கடந்து கொண்டே ஒரு குதி குதித்து நின்று பின் திரும்பி ஆடிக் கொண்டே ஒருவரையொருவர் இடுப்போடு சேர்த்து ஓர் அணை அணைத்துக் கொண்டு விலகி மீண்டும் ஆடிக் கொண்டே நகர்ந்தார்கள்…..அவர்கள்.. இடுப்பு இணையும் போதெல்லாம் சுற்றி வேடிக்கை பார்ப்பவர்களிடமிருந்து ஒரு வித உற்சாக கத்தல் பீறிட்டு எழுந்தது…. மனம் வலிக்க கண்கள் மூடி, ஏதோ கஷ்டத்தை திறப்பது போல…பார்த்தான். மௌனம் என்றொரு தலை கவிழ்தலைக் கொடுத்தபடியே ஆடிக் கொண்டிருந்த சயோலா…ஒரு குதி குதித்து விட்டு பின் எதிர் திசையில் ஓடி வந்து ஒரு குதித்தலோடு திரும்பி ஆடவும்…. ஒரு சேர கூட்டம் ஒரு பக்கமாக சரிந்து பின் ‘ஹா………..” என்று கத்தி அடங்கியது…. பேரலை வந்து போவது போல……

அவன் பார்த்துக் கொண்டேயிருந்தான்… அவளும் பார்க்க பார்க்க பார்க்க முகம் திருப்பிக் கொள்வதும்… கொண்ட முகத்தை.. காற்றில் விடுவதும் என்று ஆடிக் களைத்த நேரத்தில்..நேரம் மதியம் 2 மணி…

அது அப்படித்தான் என்பது போல.. அவளருகே அவன் எப்படியோ அமர்ந்து விட்டான்..அன்னதானத்தில்..

“கொஞ்சம் தள்ளி உக்காருங்க..”என்றபடியே உடலைக் கொஞ்சம் சரி செய்தபடியே நன்றாக அமர்ந்த சயோலாவின் குரலில்.. ஓர் அழுத்தம் நிரம்பி வழிந்தது……. அவளின் வியர்வை வாசத்தில் தெறித்த சூடு..அவனைக் குளிரச் செய்தது. அது ஒரு மாய ஜாலத்தின் மௌன விரதம் உடைபடுவது போல். அத்தனை நெருக்கத்தில் அவளின் தேகம் ஒரு சிற்பத்தைப் போல இருந்தது…

ஜீவாவுக்கு ஜீவன் போனது .. “என்ன விதமான மனது இது…….கொஞ்சம் கூட வெட்கமே பட மாட்டேங்குது”-என்று நினைத்துக் கொண்டே சோற்றைப் பிசைந்து சாப்பிடத் துவங்கினான்…மெல்ல இடப்பக்கம் கண்களை மட்டும் திருப்பிப் பார்த்தான், பூனையின் நிறத்தை பார்வையாக்கி…. அவள் ஒரு பேயைப் போல சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்…..அத்தனை பசி… காலை 10 மணியிலிருந்து இந்த வெயிலுக்குள் ஆடிக் கொண்டேயிருந்தவளின் பசி கடவுளுக்கான பசியாகவா இருக்கும்….அது ஒரு பாதாளத்துக்கானதாகத் தானே இருக்கும்.. அவன் மனம் அருவியாய் சரிந்தது…..

“ஏய்.. கரகாட்டக்காரங்கள கவனிங்கப்பா…… ஏய் அர்க்காணி சும்மா வெக்க படாம தட்டி வீசு.. அட கறி நிறையா வைங்கப்பா….” என்றபடியே ஊரின் முக்கியப் புள்ளி வடிவேலு இடம் தேடினான் அடுத்த பந்திக்கு…..

“சரி சரி… அதே சாக்குல நீயும் கொட்டிக்கப்பா…..” என்ற அர்க்காணியின் பதிலில் பந்தியில் சிரிப்பொலி அதிர்ந்தது…

மருந்துக்கு கொஞ்சமாய் சிரித்தாள் சயோலா…. மீசை இருக்கும் இடத்தில் இருந்த பூனை முடி மெல்ல விரிந்தது.. இதழ் விரிகளில்… கோழி குழம்பில் மிதந்த எண்ணை பள பளத்தது……

இந்த சந்தர்ப்பத்தை விடக் கூடாது என்று புன்னைகையோடு யோசித்த ஜீவா.. சட்டென பேச்சைத் தொடங்கி விட்டான்……

“உங்ககிட்ட ஒன்னு கேக்கணும்…. கேக்கலாமா….?” என்று அவள் பக்கம் கழுத்தை சற்று சரித்துக் கேட்டே விட்டான்…

வாய்க்குள் சோற்றை அள்ளிக் போட்டபடியே மெல்ல திரும்பிய சயோலா… ‘உங்ககிட்ட…’ என்ற வார்த்தையை திரும்ப திரும்ப யோசித்துக் கொண்டே, “அவனவன் பச்சையாவே கேக்கறான்… நீங்க இவ்ளோ மரியாதையா கேக்கறீங்க….. கேளுங்க….”என்றபடியே மீண்டும் அடுத்த கவளத்தை எடுத்து வாய்க்குள் போட்டாள்…

மொத்த தவமும் கலைந்தது போல….. “என்ன கல்யாணம் பண்ணிக்கறீங்களா…” என்று பட்டென கேட்டான்….. அவன் கண்களில் சத்தியம் இருந்தது……

கையில் இருந்த சோறு கையிலேயே இருக்க.. மெல்ல திரும்பிய சயோலா……சற்று கவனத்தை கூர் படுத்தி… “ஓ இதுக்குதான் அப்டி பாத்துட்டே இருந்தீங்களா….?… ஏன் வேற நல்ல பொண்ணு கிடைக்கலயா…..” என்றாள்… காந்தக் குரல் கரகரத்தது………

மீண்டும் சகஜ நிலையோடு… சாப்பிடுவது போலதான் இருந்தது…. ஆனால் அவள் உடல் ஒரு வித அனலுக்குள் நெளிந்தது…. பார்வை மொழி கூட தடுமாறியது….

சில வினாடி யோசனைக்குப் பின்…” இங்க எல்லாமே தப்பாதான் இருக்கு…. சரியா வராது….. வேண்டாம்…”என்றாள்… சோற்றைப் பிசைத்து கொண்டே இருந்தாள்…

“அதெல்லாம் நான் பாத்துக்கறேன்…… என்னை பிடிச்சிருக்கா இல்லையா…?” என்றான்.. மீண்டும் அழுத்தமாக…அவனின் மெல்லிய குரலில்…

அவள்.. அவனை உற்றுப் பார்த்தாள்…அவன் கண்கள் அத்தனை அருகே ஏதோ செய்திருக்க வேண்டும்.. சட்டென திரும்பிக் கொண்டாள்…தலை குனிந்த படியே…”எங்கள மாதிரி ஆளுங்கள எப்பவும் கேவலமாவே பேசற ஜனங்க மத்தில உங்கள மாதிரி பெரிய மனச நான் மதிக்கறேன்.. ஆனா….வேண்டாங்க….. செட் ஆகாது…….நடக்கவும் செய்யாது….அது சரியாவும் இல்ல..” என்று சொல்லிக் கொண்டே இலையை எடுத்துக் கொண்டு எழுந்து விட்டாள்…

அடுத்த ஆட்டம்.. தொடங்கி விட…அவளை நெருங்க முடியவில்லை… ஆனாலும்… ஆடிக் கொண்டே அவள் பார்க்கும் பார்வையில் அவளின் மொத்தத் தடுமாற்றமும் தெரிந்தது… அவளையும் தண்டி அவளின் பார்வை ஜீவாவை நிறைத்துக் கொண்டேயிருந்தது……

ஜீவன் காதலோடு நிறைந்து நின்றான். அவள் கடவுளைக் கண்டவன் போல் மிரண்டு பார்த்துக் கொண்டே ஆடினாள்.. இரண்டு நாட்களும் வெறும் பார்வையில்…. முடிய… விசுக்கென அன்றோடு அந்தத் திருவிழா முடிந்து போனது…

திக்கென்றது… விடிந்தால்…. கரகாட்ட கோஷ்டி கிளம்பி விடும்….

“சயோலா….. உன்ன பிரிய முடியாது….’- உள் மனம் கொதித்தது ஜீவாவுக்கு…..

ஊரே அமைதிக்குள் மூழ்கியிருந்தது……. எதுவுமற்ற இரைச்சல் போல ஊர் கத்தும் புது ஓசையை உள் வாங்கியபடியே சயோலா விழித்துக் கிடந்தாள்…

“இதுவரை படுக்கைக்கு கூப்ட்டவன்தான் அதிகம்.. ஆனா முதல் முறையா தாலி கட்ட ஒருத்தன் கூப்டறான்.. இது கனவா.. இல்ல..நிஜமா….என்ன மாதிரி புரிஞ்சுக்கறது..”

மனிதர்கள் மேல் இருந்த மொத்த வெறுப்பும்,.. ஒரு நொடியில் தீர்ந்து விட்டது போல உணர்ந்தாள் சயோலா…இது வரை அவளை ஏமாற்றுவதற்கு கூட யாரும் கேட்காத கேள்வி அது.. “கல்யாணம் பண்ணிக்கிறயா என்பது…”

“தன்னைக் கூட ஒருவன் விரும்புவானா இந்த உலகத்தில்” என்று அவளின் எண்ணம் புது புது கேள்விகளால் நடை பயின்று கொண்டிருந்தது……துக்கம் நிறைந்து வழிந்த விழிகளில் முதல் முறை புதுப் புன்னகை அரும்பியது……

“தவறுகளின் உச்ச பட்சமும் இருக்கிறது.. சரிகளின் உயர்ந்த பட்சமும் இருக்கிறது.. அவன் மிக உயர்ந்த இடத்தில் ஒரு கடவுளைப் போல அவளுக்குத் தெரிந்தான்…..

ஆனால் என்ன தந்து விட முடியும் அவளால் என்று மினி மினிக்காட்டில்.. யோசித்தாள்…அவனைக் காதலிக்காமல் இருந்தால்தான் அது பாவம்..என்பதை வாய் விட்டுப் புலம்பினாள்… ஆனால் கல்யாணம் செய்து கொண்டு இந்த சமுதாயத்தில்… ஒரு நல்ல பெயரை அவனுக்கு கொடுத்து விட முடியும் என்று அவளால் நம்ப முடியவில்லை..அவள் கண்கள் மெல்ல கரைந்தன…

“சயோலா…. எந்திரி…நேரமாச்சு…ஆத்துக்கு போயிட்டு வந்தர்லாம்… இன்னைக்கு நாம கிளம்பனும்…”- என்றாள் அர்க்காணி, படுக்கையை மடித்து வைத்துக் கொண்டே..

திக் கென்று தலையில் கொட்டியது போல.. கண்கள் சிமிட்ட உதிர்ந்த கண்ணீரை யாருக்கும் தெரியாமல் துடைத்துக் கொண்டே எழுந்தாள்…இப்படி ஒருவனை பார்த்ததே புண்ணியம் என்று போய் விட வேண்டும் என்று மனம் ஒரு மாதிரி அமைதிக்கு வந்தது…

ஆற்றுக்குள்… குளிக்கத் துவங்கி இருந்தார்கள்… கரகாட்ட பெண்கள்… குமரன்…. பணம் கொடுங்கள் வாங்கல் என்று ஊர்ப் பெரியவரை பார்க்க போய் விட்டான்…..செங்கான், சாமான் செட்டுகளைக் கட்டிக் கொண்டிருக்கிறான்…

ராசாத்தி,அர்க்காணி ஸ்ரீ தேவி, மூவரும் சற்று முன்னாலேயே குளிக்க… சயோலா மட்டும்.. நீச்சல் அடித்தபடியே கொஞ்சம் பின் பக்கம் சென்று விட்டாள்..அது அவளுக்கு அப்போதைய தேவையுமாக இருந்தது…. மரங்களின் நடுவே.. அழகாய் வளைந்து வளைந்து செல்லும் ஆற்றுக்குள் காலை வேளை சல சலத்துக் குதித்தது….. மனம் முழுக்க இருந்த கவலையை இனம் புரியாத இயற்கை கொஞ்சம் மீள செய்யும்…திறவு போல… புது மீனாய்.. வாழும் நிமிடங்களை நீந்தியே செய்தாள்……ஆற்றோடு பின் நோக்கி போய்க் கொண்டேயிருந்தாள்…

“ஆறு போல இருந்து விட்டா அழுக்கில்லையே மனசு..
அவன் கூட வாழத்தான் கொடுக்கலயே எனக்கு….”

அவள் புலம்பிய மனதுக்குள் நீர் மட்டும் தெளிவாக ஓடிக் கொண்டிருந்தது…..நீந்திக் கொண்டே சென்றவள்… கொஞ்சம் உள் நோக்கி தூரமாகவே சென்று விட்டிருந்தாள்…மேகம் மூடும் வானத் திரைக்குள் இருட்டிக் கொண்டு வந்திருந்தது….. திடும்மென முடிவெடுத்த மேகம் மழையைக் கொட்டத் துவங்கியது…..திடும்மென வந்து விட்ட மழைக்குள்… முதலில்.. பின் வாங்கினாலும்.. பின்.. உள் வாங்கத் துவங்கினாள்… முகம் தூக்கி வானம் நிறைத்தாள்… விழுந்த துளிகள் எல்லாம் முக்குத்தி செய்தன…அந்த மழை ஆற்றுக்குள் ஒரு வகை சூட்டை பரப்பின…அவள் உணர்ந்தாள்…… உடல் முழுக்க….விரவும்… பரவச நிலைக்குள் மெல்ல மெல்ல தள்ளியது.. அவள் தவழ்ந்தாள்…கண்கள் மூடி மழையை வாங்கி…. உடலை நதியாக்கினாள்……அவள் நீந்திக் கொண்டே மீனாகி விட ஆசை கொண்டாள்… மழையும் பார்த்து பார்த்து அவள் மீதே விழுந்ததோ என்று உவமை, அருகே இருக்கும் கிளைக்கு தலையாட்டிய காற்று கிசு கிசுத்தது….

“சயோலா…மழை அதிகமாகுது… மேல வா…” என்று கத்திக் கொண்டே மற்றவர்கள் ஓடிக் கொண்டிருந்தார்கள்…… அவள் சிரித்துக் கொண்டே “வர்…….ரே………..ன்க்கா…. நீங்க போ………ங்க…” என்று கத்திக் கூறிய படியே மீண்டும் நீரை சுழற்றிக் கொண்டிருந்தாள்….. மழை கனத்தது.. ஆற்றின் மௌனம் உடைந்தது….. காற்று வெளியில் கண்ணம்மாவைப் போல… பாரதியின் கவிதை ஒன்றாய் எரிந்து கொண்டிருந்தாள்.. அவள் தீர்க்கம் சுமந்தவளாய்….. அழகே பூத்தது போல.. ஐந்தடி தாமரையாய் முளைத்திருந்தாள்…. துளிகளின் வண்ணங்கள் சிலிர்த்தன……

“சரி கரை ஏறிவிடலாம்” என மனம் கூற.. நீந்திக் கொண்டே கரைக்கு வந்தவளுக்கு காத்திருந்தது அதிர்ச்சி….அங்கே வைத்திருந்த அவளின் ஆடைகளைக் காணவில்லை…நன்றாக எல்லா இடங்களிலும் கண்களைப் பரவ விட்டாள்…….இல்லை… ஆடைகள் அங்கு எங்குமே இல்லை… “ஒருவேளை..அர்க்காணிக்கா எடுத்துப் போயிருக்குமோ”- என்று மனம் கேட்ட கேள்விக்கு மூளை உடனே பதில் கூறியது….. நிர்வாணமாக, தான் தண்ணிக்குள் இருக்கையில் அர்க்காணிக்கா எப்படி துணிகளை எடுத்துக் கொண்டு போவாள்…?

அவள் கூப்பிட்டாள்.. கத்தி கத்தி அழைத்தாள்…. அங்கே யாரும் இல்லை…..தூரத்தில் தெரிந்த அய்யனார் சிலை அருகே மங்கலாக ஓடிக் கொண்டிருந்த அர்க்காணிக்கோ, மற்றவர்களுக்கோ ஆற்றுக்குள் மழையினூடாக கத்திக் கொண்டிருக்கும் சயோலாவின் குரலைக் கேட்டு விட வாய்ப்பே இல்லை….

“கண்டிப்பாக அர்க்காணிக்கா எடுத்துப் போயிருக்க மாட்டாள்… அப்படி என்றால் துணி எங்கே….!…. ஆற்றோடு அடித்து போகவும் வாய்ப்பில்லை.. துணையை சற்று தள்ளி கரையில்தானே வைத்தேன்….”-சுற்றும் முற்றும் பார்த்தாள்.. பார்வைக்குள் இருட்டிக் கொண்டிருந்தது.. வெளி…

“இனி இங்கிருந்து எப்படி போவது….?” உடம்பில் ஒரு வித குளிர்ச்சி மெல்ல பயத்தை விதைத்தது……

மீண்டும் வலு கொண்டு பலம் கொண்டு கத்தினாள்.. அவளின் குரல் மெல்ல உடையத் துவங்கியது… ஒரு காட்டுக்குள் அகப்பட்டுக் கொண்ட ஒற்றையடிப் பாதையாய் தடுமாறியது….

“யாராவது இருக்கீங்களா…. என் ட்ரெஸ் பாத்திங்களா…?”

பதிலுக்கு அரிசி இரைத்த மழை இடைவெளி இல்லாத வெள்ளிக் கம்பிகளாய் வீழ்ந்து கொண்டே இருந்தது….. மனதுக்குள் பயம் அப்பிக் கொண்டிருந்தது……

சுற்றும் முற்றும் திரும்ப திரும்ப வேக வேகமாய் பார்த்தாள்…..என்ன செய்வதென்றே தெரியவில்லை.. அளவுக்கு மிஞ்சிய மழை மெல்ல கசந்தது.. எழுந்து விடவும் தைரியமில்லை…. “யாராவது பார்த்தால் என்ன செய்வது?….. அயோ கடவுளே.. யாரோ என்னமோ பண்றாங்க… காப்பாத்து….”- அழுகை தொண்டைக்குள்… நெளிந்தது…..

“ஆத்துக்குள்ள நிர்வாணமா குளிச்சது தப்பா போச்சே… பேசாம துணி கட்டிட்டே குளிச்சிருக்கணும்…” தன்னையே நொந்து கொண்டாள்…

சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே…..”மெல்ல எழுந்து ஓடி விடலாம்…. கோவிலுக்கு பின்னால், திடலில் மறைந்து கொண்டு கூப்பிட்டால்.. அர்க்காணிக்காவுக்கோ மற்ற யாருக்கோ நிலைமை புரிந்து விடும்…. ஆனால்.. அது வரைக்கும் யாரும் பார்க்காமல் இருக்க வேண்டுமே..” என்று யோசித்து கொண்டே.. ஒரு முடிவுக்கு வந்தவளாய்… மெல்ல நீரை விட்டு எழ முற்….பட முற்பட…………”ஹ……..ச்ச்ச்சு…..” என்று ஒரு தும்மல் மழையை மீறிக் கொண்டு தெறித்தது.. ஒலியின் வேகத்தில்.. பலியான… விழியை வேகமாய் மூடிக் கொண்டு மீண்டும் சட்டென்று நீருக்குள் அமிழ்ந்தாள் சயோலா…ஓர் அனிச்சை செயலாக…

நீருக்குள் அமிழ்ந்தவளின் உடல் நடுங்கத் துவங்கியது…. பெரும்பயம் சூழ்ந்த நீர்ப்பரப்பில்… பூதங்கள் மிதப்பதாக மூளை நம்பத் துவங்கியது….. அவள் தலை முழுக்க வழிந்த நீரில்.. மழை பயமாய் நுரைத்து தளும்பியது…..

அவள் கண்கள் துடைத்துக் கொண்டே பார்க்க பார்க்க….. எதிரே கரையில்…தொப்பலாக நனைந்தபடியே மூன்று பேர் நின்று கொண்டிருந்தார்கள்… கண்களை நன்றாக தேய்த்துக் கொண்டே பார்த்தாள்…….சட்டென நினைவுக்கு வந்தது….. அன்று அதிசயம் பார்க்க வேண்டும் என்று கூறிய 12வது படிக்கும் அந்த இளைஞர்கள்தான்…..

ஒன்றும் புரியாமல் அவர்களை பார்த்து… பயந்து கொண்டே…”தம்பிகளா என் ட்ரெஸ் எடுத்திருந்தா குடுத்ருங்க…… நான் போகணும்… பிளீஸ்….” என்றாள் மிரட்சியின் பிடியில்…

கரையில் நின்ற மூவரும் அர்த்தத்தோடு பார்த்துக் கொண்டே…பின்னால் கைகளில் மறைத்து வைத்திருந்த துணிகளை காட்டி…… “சரோஜாக்கா இது தானே… உன் துணி…” என்று சிரித்தபடியே ஒருவன் காட்ட….. இன்னொருவன்… “அக்கா… ஒன்னும் பெரிய மேட்டர் இல்ல.. நீ ஒரு டைம் எந்திரிச்சு நில்லு… நாங்க ட்ரெஸ் குடுத்துட்டு போய்ட்டே இருக்கோம்…” என்றான்… மற்றவன், “இது எப்டி இருக்கு” என்று சம்பந்தமே இல்லாமல்… மழையை அடித்தான்…

அவள் கண்கள் விரிய கண்ணீர் நிறைய… தடுமாறி தகர்ந்தாள்… கை எடுத்துக் கும்பிட்டாள்…”தப்புப்பா…. இது பெரிய தப்பு…. விட்ருங்க….”அவள் கெஞ்சினாள்…அவள் கெஞ்சிக் கொண்டிருக்கும் போதே.. பின்னால் மரத்துக்கு பின்னால் இருந்து ஒரு பத்து பதின் பருவத்து இளைஞர்கள் திடும்மென முளைத்த காளான்களாய் வந்து கொண்டிருந்தார்கள்…

அவள் மூளை பிறழ்வுக்கே போய் விட்ட மாதிரி துடித்தது… மனம் கசிந்து ஏங்கியது… இத்தனை நேரம் இவர்கள் அனைவரும் மறைந்திருந்து அவளைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்பதை உள் வாங்க உள் வாங்க உடம்பில் கம்பளி பூச்சிகள் ஊறியது போல துடித்தாள்……

“ஒரே ஒரு தடவ எந்திரிக்கா… ப்ளீஸ்…. ஒன்னும் பண்ண மாட்டோம்….. பார்த்துட்டு போய்டுவோம்.. ப்ளீஸ் ப்ளீஸ்…’ என்று மாறி மாறிக் கேட்டார்கள்…

என்ன செய்வதென்றே தெரியவில்லை.. கிட்டத்தட்ட அழுது விட்டாள் … மரண பயத்தில்… மிரண்ட உடல் கூனிக் குறுகியது……

“ப்ளீஸ்க்கா…………….. ப்ளீஸ்க்கா…..சரோஜா…. பிளீஸ்….ஒரே ஒரு டைம்… நாங்க வெளிய யார்ட்டையும் சொல்ல மாட்டோம்… பிளீஸ்…”

தீ எரிந்து கொண்டேயிருக்கும் நரகத்தில் மாட்டிக் கொண்ட அவஸ்தையில் காதை இரு கைகளாலும் அடைத்துக் கொண்டு அடித்தொண்டையில் இருந்து ரத்தம் கசியக் கத்தினாள்..

“நிறுத்துங்கடா…… டேய்…….” என்று கத்தினாள்…மழையை விட வேகமாய் பொழிந்தது வலி…….கணம் ஒன்றில் கெஞ்சுவதை நிறுத்தினார்கள்…ஒரு சேர அனைவரும்…

“என்ன மாதிரி பசங்கடா நீங்க.. ஏன்டா இப்டி இப்பவே கெட்டு குட்டி சுவரா போறீங்க… அது தப்புடா…..நீங்கல்லாம் படிக்கற பசங்கடா…..இந்த மாதிரி கேவலமா நடந்துக்க கூடாது…. மரியாதையா என் ட்ரெஸ குடுத்துருங்க……இல்லன்னா பிரச்சினை ஆகிடும்…..சொன்னா கேளுங்க… கிளம்புங்க…….”-ஒரு மாதிரி தைரியம் வரவழைத்துக் கொண்டு பேசினாலும் சயோலாவின் மனதில் ரத்த மழையே பொழிந்து கொண்டிருந்தது….. அவமானமாக இருந்தது….

எதையும் காதில் வாங்காமல் மீண்டும் ஒரு சிறுவன்….’பிளீஸ்க்கா….. ஒரே ஒரு டைம்…..எந்திரிக்கா…..நாங்க போயர்றோம்” என்று கெஞ்சினான்…

‘…..த்தூ…..” என்று துப்பினாள்…. யோசிக்காமல்….

” அடிங்………..துப்பரியா….? காசு, ஆடறக்கு மட்டும் தரல…எல்லாத்துக்கும்தான்… பெரிய இவளாடி நீ…. ஒம்போது………எந்திரிடி……பொட்ட…. நானும் பாக்கறேன்….. ரெம்ப மினுக்கிட்டு திரியற… பசங்க பாவம்……. கேக்கறானுங்கல்ல… காட்டிட்டு போக வேண்டியதுதானே…என்ன மசுரா குறையும்….. மரியாதையா எந்திரி… இல்ல….. இங்கயே சோலிய முடிச்சு ஆத்தோட விட்ருவோம்……” என்று கத்திக் கொண்டே எகிறினான்…. கும்பலில் மூத்தவன்…

சுற்றி நின்ற கூட்டம்… ஒரு திருவிழாவைப் பார்ப்பது போல…..ஹோ வெனக் கத்திக் கொண்டு…ஆர்வத்தில் மிதந்தன… மழை வேகம் கொண்டு…. மடை திறந்த வெள்ளமாய் கொட்டித் தீர்க்க, அவள் வேறு யோசிக்க முடியாமல் குலுங்கி அழத் தொடங்கினாள்…… பயம் அவளின் உடல் முழுக்க மின்சாரத்தைப் பாய்ச்சிக் கொண்டிருந்தது… மிரண்டு போயிருந்தாள்…

“என்ன செய்வது. கடவுளே… காப்பாத்து……” மனம் வேண்டுதல் துளிகளால் சேர்ந்து கொண்டே இருக்க, எழ மறுத்து… இன்னும் நீருக்குள் தன்னை அழுத்தமாக அழுந்திக் கொண்டாள்…

“ஒரே ஒரு வாட்டி உன்ன அம்மணக்குண்டியா பார்த்துக்கறோம்….. ப்ளீஸ்க்கா… காசு வேணாலும் தர்றோம்…” என்று குடை கொண்ட ஒருவன்.. பத்து பத்து ரூபாயாக ஒரு கத்தையை எடுத்து…..”டேய் குடுக்காதவன்லாம் குடுங்கடா” என்று கேட்டுக் கொண்டே வசூல் வேட்டையை நடத்தவும் தயங்கவில்லை….அவள் காது மூடி.. நீருக்குள்.. குலுங்கினாள்…

சுற்றி நின்ற கழுகு கூட்டம் கொத்த காத்து நின்றன…வேறு வழியே இல்லை… அவளின் அழுகை தேம்பி தேம்பி. ஒரு வித கோபமாய் மெல்ல அவள் மீது படறத் துவங்கியது…

மனம் பலவாறு யோசித்தது…வேறு வழியே இல்லை… இவர்கள் விடப் போவது இல்லை… இருட்டிக் கொண்டு வந்த நீருக்குள்…. மீனின் குளிரை உணர்ந்தவளாய்…திடும்மென முடிவெடுத்தாள்……கண்களில் வழிந்த கண்ணீரை மார்பு வரை போக விட்டாள்….. அது மார்பு தண்டி.. மடி தாண்டி.. கடவுளைச் சேருவதாக கரைந்து போனது…..

“த்தூ…. கிறுக்கனுங்களா…… வெறும் உடம்பை பாக்கத்தான…இத்தனை அலைச்சல்….. இந்தாங்கடா..முட்டாப் பசங்களா….. பாத்துக்கோங்கடா…பாத்துக்கோங்கடா……….. இந்தா பாத்துக்கோ……வா.. வா… பாரு…. பாருடா….இது காயன்டா..அப்டியும் இல்லாம.. இப்டியும் இல்லாம.. இது வலிடா….. வாழ்க்கையில் எல்லாரும் ஒதுக்கி விட்ட….மூத்திரக் குழிடா….. தேவிடியா பசங்களா……”என்று கத்திக் கொண்டே மழைக்குள் நிர்வாணமாக… ஒரு வெறி பிடித்த மிருகத்தைப் போல.. கரையேறி நடக்கத் துவங்கினாள்….ஒரு மனநிலை பிறழ்ந்தவளின் வேகத்தைக் கொண்டு அவள் உடல் சுழன்றது……உடலில் விழுந்த பார்வைத் துளிகள்..அம்மைத் தழும்புகளாக அணத்தின …

அவளின் இருபக்கமும்… அந்தக் கூட்டம்.. கூச்சலிட்டுக் கொண்டும்.. சிரித்துக் கொண்டும்.. ஒரு பொம்மையிடம் விளையாடுவது போல விளையாடிக் கொண்டு… கண்கள் விரிய… ‘டேய்… டேய்..’ என்று அவர்களுக்குள் பேசிக் கொண்டும்.. கிசு கிசுத்துக் கொண்டும் வர… சிலர்..பேயறைந்தது போல….. ஏதோ விபரீதம் என்பதை உள்வாங்கியபடியே மெல்ல தயங்கிக் கொண்டு நடக்க……

“வாடா…. வா.. வந்து பாரு.. உத்து பாரு.. உத்து உத்து பாருங்க…..நல்லா பாருங்க.. உங்க சந்தேகம் தீந்துடுச்சா….. பாரு சாத்தானே….பாரு….”

“ஹே.. ஹே.ஹே.. ஹே.ஹே.. ஹே.ஹே.. ஹே.ஹே.. ஹே.ஹே.. ஹே……”

“டேய் பொறம்போக்கு….. பாரு…… கேடு கெட்ட பொருக்கி…. நீ பாரு……”

“ஹே.. ஹே.ஹே.. ஹே.ஹே.. ஹே.ஹே.. ஹே.ஹே.. ஹே.ஹே.. ஹே.ஹே.. ஹே.”

“இன்னு மீசைகூட முளைக்கல.. உன் ஆசையைப் பாத்தியா…பாரு விளங்காதவனே…..” என்று நாக்கை துருத்தி….. பேய் பிடித்த பைத்தியக்காரியாய்……கதறி கதறி அழுது கொண்டே ஒரு பிணத்தைப் போல நடந்து கொண்டேயிருந்தாள்.. அந்த கூட்டம் ஒரு நாயை விரட்டுவது போல……….ஹே.. ஹே.. என்று கத்திக் கூச்சலிட்டுக் கொண்டே,…. கை தட்டி… பின்னால் தட்டி….. அவளுக்கு முன்னும் பின்னும்….. கூடவே நின்றும் நடந்தும்….வினையை விதைத்துக் கொண்டிருந்தார்கள்…

கூட்டத்தில் சிலர்…முன்னால் ஆடிக் கொண்டே.. இடுப்பை ஆட்டி ஆட்டி..கலவிக்கான செய்கைகளை காற்றில்… செய்து கொண்டே…. கல்யாண ஊர்வலத்தில் பெண்ணை கூட்டிக் கொண்டு போவதைப் போல நடக்க……

கண்களில் எரியும் கொடுமையைப் பார்த்தபடியே “அயோ….. அர்த்தநாரியை.. இப்படி பண்ணிட்டிங்களேடா..”- என்று சத்தம் போட்டு அழுதபடியே அய்யனார் சாமிக்கடியில் கிடக்கும் மாயா கிழவி…. தன் முந்தானையை விரித்துக் கொண்டே ஓடி வந்து சயோலாவை மழையோடு போர்த்த அப்படியே கூனி குறுகி சரிந்தாள்…. சயோலா…

“இது கடவுளோட பொறப்புடா……… இது உங்களுக்கே அடுக்குமா……..?” என்று சயோலாவை அணைத்துக் கொண்டே அவளை இன்னும் இன்னும் மறைத்தாள் மாயா கிழவி…….

“ஆமா.. கடவுளு பொறப்பு.. கத்திரிக்கா பொறப்பு……போ கிழவி…..” என்று கத்திக் கொண்டே.. அந்தக் கூட்டம் ஏதோ வழக்கமாக செய்யும் வேலையை செய்வது போல…”சூப்பர்டா மச்சி… ஹாய் சரோஜா…… பாய்… அடுத்த வருஷம் பாக்கலாம்” என்று கோரசாக… சொல்லிக் கொண்டும்.. கத்திக் கொண்டும்… விளையாடிக் கொண்டும்… மழையைப் பிடித்துக் கொண்டும் களைய முற்பட்டுக் கொண்டிருக்க……மழைக்குள்….. பேரழுகையாய்…….. வேகமாய் ஓடி வந்து சேர்ந்திருந்தான்…ஜீவா…

வந்தவன்.. தன் சட்டையை கழற்றி கிழவியோடு சேர்த்து…. சயோலாவை மறைக்க, மறைக்க மறைக்கவே சட்டென்று கிழவியை விலக்கி விட்ட..சயோலா, ஜீவாவை… தள்ளி விட்டு.. ஓடிச் சென்று….அய்யனார் சிலையில் இருந்த கத்தியை உருவி கரக் என்று கழுத்தை அறுத்துக் கொண்டு விழுந்தாள்….

மழை சிவப்பில் அழுதது…. ஒன்றும் புரியாமல்.. திகைக்க, கீழே விழுந்தான் ஜீவா….. ஒன்றுமே புரிய வில்லை… கனவு மாதிரி கலைந்து போனதை கண் முன்னால் மாயம் என்றே ஸ்தம்பித்தான்….

இத்தனை நேரம்.. அவள் வருவாள் என்று கோவிலுக்கு பின்னால் நின்று கொண்டிருந்ததை, இப்படியே கூட்டிக் கொண்டு வந்து இதே அய்யனார் முன் தாலி கட்டி விடலாம் என்று யோசித்ததை….. ஒரு கணம்.. ஏங்கிய பெருமூச்சாய் நினைத்துப் பார்க்க…… பார்க்க…..மழையைக் கடிப்பவன் போல… கத்தினான்….

கத்திக் கொண்டு விளையாடியபடியே களைந்து கொண்டிருந்த கூட்டம்… அவள் கழுத்தறுபட்டு துடிப்பதைக் கண்டு அதிர்ந்து சிதறியது….. பயம் கொண்டு.. மிரண்டு ஓடத் துவங்கியது……..சிலர் என்ன ஆகிறது என்று பயத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள்…

கண நேரத்தில் குபுக் குபுக் என்று கொப்பளித்த ரத்தத்தில்…சயோலா…. மழையாகி கிடக்க…மரணத்தை சுற்றி… அர்க்காணியும், குந்தாணியும், ஸ்ரீ தேவியும் … .. அழுது புரள.. கண்கள் சிவந்த கிழவி, நொடி கூட யோசிக்காமல்…,அய்யனாரின் அருவாளை எடுத்து ஜீவாவிடம் நீட்டியது…..

விபரீதம் ஆகி விட்டதை உள் வாங்கிய பதற்றம் அந்த கூட்டத்திடம் இருந்தது…நின்று பார்த்த சிலரும்….ஒருவரையொருவர் முண்டி அடித்துக் கொண்டு ஓடினார்கள்….

எப்போதெல்லாம் அதர்மம் தலை விரிக்கிறதோ அப்போதெல்லாம் தர்மம் தனை நிலை நாட்ட வேண்டியிருக்கிறது….” என்பது போல…அந்த அருவாள்… மின்னியது…

மழை இன்னும் தீவிரமாகி இருந்தது… அந்த இடத்தை கழுகுகளும் காகங்களும் வட்டமடிக்கத் துவங்கின..ஆற்றில் வெள்ளம் கரை புரளத் ஆரம்பித்தது…

கத்தியை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு எழுந்த ஜீவா,……ஒரே தாவலில் கொஞ்சம் முன்னோக்கி சரிந்து,சற்று முன்னால் பயந்து கொண்டே ஓடிய ஒருவனை காலோடு சேர்த்து வெட்டினான்…..இந்தப்பக்கம் தெறித்த ஒருவனை . காதோடு சேர்த்து வெட்டி கழுத்தை துண்டாக்கினான்……சட சடவென கிடைத்தவனை எல்லாம் வெட்டிக் குவித்தான்…. கூச்சல் குழப்பத்தில்… மழை ரத்த துளிகளை கழுவிக் கொண்டே இருந்தது…… வெட்ட வெட்ட..பாவங்கள்… செத்துக் கொண்டே இருந்தன..விரட்டி விரட்டி வெட்டினான்… ஓடிப் பிடித்து வெட்டினான்…. தர தரவென இழுத்துக் கொண்டு வந்து அய்யனார் முன்னால் வெட்டி வீசினான்…

“வெட்டு…….. வெட்டு.. வெட்டுடி …. ஜீவா.. வெட்டு…. ……ஆம்பளையா பொறந்து பொம்பளையா மாறுன அவளோட வலி…. பொம்பளையா பொறந்து ஆம்பளையா மாறுன உனக்கு புரியுதுல்ல… வெட்டுடி… வெட்டி சாயி….. இவனை வெட்டு…” என்று கத்திக் கொண்டே கிழவி ஒருவனை கழுத்தோடு மடக்கி… பிடித்துக் கொண்டு…. காட்ட…

ஜீவா… என்கிற ஜீவஜோதி….

ஜீவா… என்கிற ஜீவஜோதி….மெல்ல நடந்து சென்று ரசித்து… சிரிக்கும்.. மூளை விரிய… அருவாளைக் கொண்டு, காட்டிக் கொண்டு வளைந்து தெரிந்த கடைசிக் கழுத்தை ‘கரக் கரக்’ என்று அறுத்தான்… வெறி பிடித்த அய்யனாரின் மறு உருவம் போல அவன் உடல் முழுக்க சிவப்பு ஊறிக் கிடந்தது…. சயோலாவைக் கொடுமைப் படுத்திய அத்தனை சிறார்களையும் வெட்டி வீசி விட்டு.. சரிந்த கால்கள்… அவனுக்கு வலிக்கத் துவங்கியது….. ஓ வென கத்தி அழத் துவங்கினான்…

அவன் கால்கள் ஒன்றோடு ஒன்று உரசி…. அடங்கியது….

கடற்கரையில்…. வானம் பார்த்துக் கிடந்த சயோலா அருகே… ஜீவா…ஓர் அரூபத்தைப் போல தோன்றினான்….

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *