(1971ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம்-5-6 | அத்தியாயம்-7-8 | அத்தியாயம்-9-10
அத்தியாயம்-7
அன்றிரவு கணேஷ் வெகுநேரம் எழுதிக் கொண்டிருந்தான். எழுதி எழுதி அடித்தான். சக்கரங்கள் ஒன்றுடன் ஒன்று குறுக்கிட்டு மலர்களாக மலர்ந்து மேலும் சிக்கலாகி மேலும் சுற்றி மேலும் மேலும் சுழன்றன.

யோசித்தான்.
டெலிபோனைப் பார்த்தான். அனிதாவின் வீட்டு நம்பரைச் சுழற்றினான்.
வெகுநேரம் அடித்தது. அவன் சலித்து வைத்தபிறகு மணி அடித்தது.
‘கணேஷ் பேசுகிறேன்.’
டெலிபோனில் மோனிக்கா வெடித்தாள். ‘கணேஷ், நான் உனக்கு எவ்வளவு பணம் தரவேண்டும்? கணக்கு தீர்த்துவிடுகிறேன்.’
‘அவ்வளவு சுலபத்தில் தீர்க்கிற கணக்கில்லை இது. எங்கிருந்து பேசுகிறாய்?’
‘உன் தாத்தாவின் வீட்டிலிருந்து’.
‘அவர் சொர்க்கத்தில் இருக்கிறார். அங்கே எல்லாம் சௌகரியமாக இருக்கிறதா?’
‘ஹா ஹா ஹா? எவ்வளவு ஹாஸ்யம்!’
‘கேள் மோனிக்கா, கேள், நான் சைக்காலஜி தெரிந்தவன். எனக்கு நீ மறுபடி டெலிபோன் செய்வதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? என்னுடன் நீ சமாதானம் செய்துகொள்ள விரும்புகிறாய் என்று’.
‘தவறு. நான் உன்னை நேரில் பார்க்க விரும்பவில்லை. அதனால் தான் டெலிபோனில் கூப்பிடுகிறேன். நீ ஒரு…’
‘ஸ்ட்ராங் வோர்ட்ஸ் மை டியர் கர்ல். நிச்சயமாகச் சொல். நீ என்னைப் பார்க்க விரும்பவில்லை’.
‘இந்த யுகத்தில் இனி இல்லை.’
‘சரி, நான் இப்போதே அங்கே வரப் போகிறேன்.’
‘நோ அட்மிஷன்.’
“மோனிக்கா!”
‘என்ன?”
‘தனியாகத்தானே இருக்கிறாய்? ‘
‘ஆம். நான் இப்போதுதான் வந்தேன். என் சினேகிதனுடன் வெளியே போயிருந்தேன். சினேகிதன்!’
‘குட் மோனிக்கா, மற்றொரு சிநேகிதன் என்கிற முறையில் எனக்கு ஒரு உதவி செய்வாயா?’
‘முடியாது. மாட்டேன்.’
‘என்ன உதவி என்றால்…’
‘முடியாது. அனிதா வந்ததும் கேட்டுக்கொள்’.
‘மோனிக்கா, நான் இன்னும் உன்னுடைய லாயர்தான். உன் நலனுக்காகத்தான் அல்லும் பகலும் உழைக்கிறேன்’.
‘எங்கே உழைக்கிறாய்? பெட்ரூமிலா?’
‘ஸ்ட்ராங் வோர்ட்ஸ் பார்ட்டனர். நான் என்ன செய்யவேண்டும்? இதோ மண்டியிட்டுக் கொண்டிருக்கிறேன். ‘என்னை நீ மன்னிப்பாயா ப்ளீஸ்’ என்று கேட்க வேண்டுமா? ரோஜாப்பூ அனுப்பவேண்டுமா?’
‘கணேஷ், சோப் போடுவதை நிறுத்து. என்ன வேண்டும் என்று சொல்’.
‘உன் அப்பாவின் அறையை நான் சோதனை போடவேண்டும். அப்புறம் அனிதாவின் அறையை.’
‘சரி, நானும் உடனிருப்பேன்.’
‘சரி’ என்று கணேஷ் ஒப்புக்கொண்டான்.
‘இதுதான் என் அப்பா’ என்று மேஜை மேல் மாலை போட்டுக் கொண்டிருந்தவரை போட்டோவில் காட்டினாள். அவர் காலர் இல்லாத இந்திய கோட்டு அணிந்திருந்தார். தலைமயிர் அதிகமில்லை. இரண்டு பக்கத்திலும் பின்வாங்கியிருந்தார். பெரிய நெற்றி, அடர்த்தியான புருவங்கள், மிக மெல்லிய உதடுகள், அவரது பொதுவான தோற்றம், நினைத்துச் சாதிக்கும் ஒருவரைத்தான் ஞாபகப்படுத்தியது.
அறையில் தூசு படிந்திருந்தது ஒரு வாரம் ஒருவரும் உள்ளே வரவில்லை என்பதை உணர்த்தியது. கணேஷ் மேஜையின் அறையை இழுத்துப் பார்த்தான். அதில் சில பேனாக்களும் ஒரு ஸ்டேப்ளர், ஒரு செக் புத்தகம், ஒரு எங்கேஜ்மெண்ட் புஸ்தகம் (அதை விசிறினான். துல்லியமாக, உபயோகப்படுத்தப்படாமல் இருந்தது), சில காகிதங்கள்.
மேஜை மேல் ஒரு ஹிந்துஸ்தான் டைம்ஸ் இருந்தது. கணேஷ் அதன் தேதியைப் பார்த்தான். 19. தூக்கிப் போட்டான். மறுபடி எடுத்தான். தேதி என்ன? 19, அந்த 19 உறுத்தியது.
‘போட்டோ ஆல்பம் ஏதாவது இருக்கிறதா?’
‘எதற்கு?’
‘அந்த கோவிந்தன் போட்டோ தென்படுமா என்று பார்க்க வேண்டும்?’
‘பார்க்கிறேன்.’
அலமாரியில் பிஸினஸ் மேனேஜ்மெண்ட் புத்தகங்கள்தான் அதிகம் இருந்தன. அப்புறம் பீரோவில் நிறைய ஸூட்களும் டிரஸ்ஸிங் கவுன்களும் தொங்கின.
மோனிக்கா கன்னா பின்னாவென்று பொருள்களை இறைத்தாள்.
‘அந்த இரும்புப் பெட்டியின் சாவி யாரிடம் இருக்கும்?’
‘அனிதாவிடம் என்று நினைக்கிறேன்’.
‘வேறு போட்டோ அல்லது டைரி எதுவும் கிடைக்கவில்லை;.
எல்லாவற்றையும் கலைத்துவிட்டாய்!” என்றாள் மோனிக்கா.
‘கலைத்தது நீதான். ஆனால் எனக்கு உபயோகமாகக்கூடிய எதுவும் எனக்குத் தென்படவில்லை. இந்தப் போட்டோவை நான் எடுத்துக்கொள்ளலாமா?’
‘அப்பாவின் போட்டோவா? அது எதற்கு?’
‘சும்மா!’
மோனிக்கா சொன்னாள், ‘அனிதாவின் அறையைச் சோதனை போடலாமா?’
‘அனிதா வந்துவிட்டால்?’
‘நான் ஜன்னல் வழியாகப் பார்த்துக்கொள்கிறேன். கார் வரும் சத்தம் கேட்டால் நிறுத்திவிடலாம்.’
‘காரில் போயிருக்கிறாளா, எங்கு?’
‘தெரியாது. சொல்லவில்லை. நானும் அவளும் பேசுவதே இல்லையே.’
‘தனியாகவா போனாள்?’
‘பாஸ்கருடன்’.
‘தட் ரேட்!’
‘வா, அவள் அறையைச் சோதனை போடலாம்’ என்றாள் மோனிக்கா ஆவலுடன்.
அனிதா இல்லாத அனிதாவின் அறையில்கூட அனிதாவின் சில பிரத்யேக சுபாவங்கள் பரவி இருந்தன.
சுவரில் ஒரு காகிதத்தில் ஒரு சில வரிகள் எழுதி லூஸாக ஆணியில் அழுத்தப்பட்டது.
வஸந்தம் சென்றுவிடும். ஆனால் பூக்கள் திரும்ப மலரும்.
யௌவனம் சென்று விடும். அந்த நாட்கள் திரும்பி வாரா.
அப்புறம் அவள் படுக்கை மிகச் சுத்தமாக இருந்தது. பாம்பே டையிங்கின் மிக அழகான விரிப்பு, படுக்கை அருகில் புத்தகம், (கபீரின் பாடல்கள் – தாகூர் ஆங்கிலப்படுத்தியது) அப்புறம் சுவரில் ஒரு படத்தில் ஒரு சிறிய பெண், இருபுறமும் சிறிய பையன்கள் நிற்க நடுவில் உட்கார்ந்திருந்தாள். அனிதா ஏழு வயதில்.
மேஜை மேல் காகிதங்கள் சிறப்பாக மஞ்சளில் இருந்தது. அவளுக்குப் பிடித்த வர்ணம் போலும். மைக்கூடு வினோதமாக இருந்தது. மேஜையின் அறைகள் பூட்டப்பட்டிருந்தன. எல்லா அறைகளும், அவள் செருப்பு வெல்வெட் மோகாஸின் ஜிகினா வுடன் அவள் மென்மையான கால்களை ஞாபகப்படுத்தின. பாத்ரூமில் ஆச்சரியமான அலங்கார சாதனங்கள் மிகவும் கம்மியாக இருந்தன. இருந்தவை மிகவும் உயர்ந்த பண்டங்கள். கண்ணாடி அலமாரிக்குள் சின்னச் சின்ன அழகான பொம்மை கள். வார்ட்ரோப் நிறையப் புடைவைகள், பெரும்பாலும் மஞ்சள் அல்லது நீற நிறம். பகட்டு அதிகமில்லாத விலை அதிகமான புடைவைகள். ஸல்வார் கமிஸ் அணிவாளா என்ன? அப்புறம் ஒரே சீராகத் தைக்கப்பட்ட எவ்வளவு ரவிக்கைகள்! அவற்றை விலக்கி, அவற்றின் பின்னே உள்ளே ஏதாவது கதவு தெரிகிறதா என்று பார்த்தான்.
‘இந்த டிராயருக்குள் என்ன இருக்கும்?’ என்று கேட்டாள் மோனிக்கா.
‘பூட்டி இருக்கிறதே’.
‘சாவி இல்லை.’
‘சாவி இல்லாமல் நான் திறப்பேன். ஓர் ஆணி வேண்டும்’.
‘ஆணி தருகிறேன்.’
‘அப்புறம் ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக்கொண்டிரு, யாராவது வருகிறார்களா என்று’.
கணேஷ் அந்த மேஜையை சுலபமாகத் திறந்தான். முதல் அறையில், ஒரு டயரி இருந்தது. முதல் பக்கத்தில் ‘அனிதா அந்தரங்கம்’ என்றிருந்தது. அதைப் படிக்க அவன் முற்படவில்லை. மூன்று இன்ஷ்யூரன்ஸ் பாலிஸிகள் இருந்தன. மூன்றும் ஷர்மாவின் ஆயுள் இன்ஷ்யூரன்ஸ். பாலிஸிகளின் தொகையைக் கவனித் தான். மூன்றும் சேர்ந்து மூன்றரை லட்சத்துக்கானது. மூன்றிலும் வாரிசுதாரர் பெயர் சமீபத்தில் மாற்றப்பட்டிருக்கிறது. அனிதா ஷர்மா. அப்புறம் அந்த பாலிஸிகளுடன் சம்பந்தப்பட்ட சில காகிதங்களும் இருந்தன.
அடுத்த செருகறையில் சில சம்பந்தமில்லாத பொருள்கள் இருந்தன.
திடீரென அதைப் பார்த்தான். திடுக்கிட்டான். உடனே மூடி விட்டான்.
மேஜையின் மற்றொரு அறையில் அழகான பச்சை அட்டை போட்ட போட்டோ ஆல்பம் இருந்தது. அதைத் திறந்தான். உதறந்த முதல் பக்கத்தில் ஷர்மாவும் அனிதாவும் மாலை அணிந்து கொண்டு பெரிய என்லார்ஜ்மெண்ட். அடுத்த பக்கங்களில் மேலும் ஷர்மாவும் அனிதாவும், மலைப்பிரதேசங்களில், படகுகளில், ஹோட்டல்களுக்குமுன், விமான நிலையத்தில், நீர் வீழ்ச்சிகளுக்கு முன், பார்ட்டிகளில்.
எவ்வளவோ போட்டோக்கள். எவ்வளவோ மனிதர்கள். மோனிக்கா ஒரு சில போட்டோக்களில் இருந்தாள். இன்னும் சின்னவளாக காதில் வளையத்துடன், நீண்ட கூந்தலுடன். எவ்வளவு மாறி இருக்கிறாள்!.
‘மோனிக்கா, இங்கே வா, ஒரு நிமிடம்.’
‘என்ன?’
‘இந்த போட்டோ ஆல்பத்தை முழுவதும் பார். இதில் எனக்கு ஒரே ஒரு போட்டோ வேண்டும். அந்த கோவிந்தனின் போட்டோ. இவற்றில் ஏதாவது ஒன்றில் இருக்கிறானா? சீக்கிரம்’.
மோனிக்கா அவசர அவசரமாகப் புரட்டினாள்.
‘இதுதான்’ என்று சுட்டிக்காட்டினாள்.
‘எனக்குத் தேவை கோவிந்த்’.
‘இதோ இவன்தான்.’
எஜமானருக்கு அருகில் பய பக்தியுடன் மறைந்து நின்று கொண் டிருந்தான் கோவிந்த். வெயிலுக்கு நெற்றியைச் சுருக்கிக் கொண்டு நெருக்கமாகத் தலை வெட்டிக்கொண்டு வெள்ளை ஷர்ட் அணிந்து மெல்லிய மீசையுடன் அவர் அருகில் சற்றுப் பின் தங்கி நின்றுகொண்டிருந்தான்.
கணேஷ் அந்தப் புகைப்படத்தைச் சட்டென்று உருவிப் பைக்குள் போட்டுக் கொண்டு, ஆல்பத்தை மூடி அதை மேஜை அறைக்குள் திரும்ப வைத்து அதையும் மூடினான்.
‘கடிதங்கள் இல்லையா ஏதும்?’ என்றாள் மோனிக்கா.
‘நிறைய இருக்கின்றன. டயரிகூட இருக்கிறது’.
‘எங்கே, பார்க்கலாம்’.
‘வேண்டாம், கூடாது, நியாயமாகாது’.
‘கள்ளச் சாவி போட்டுத் திறப்பது மட்டும் நியாயம்! நான் பார்க்கத்தான் போகிறேன். வெளியே கார் ஹார்ன் சப்தம் கேட்டது. ‘ஓ நோ!’ என்றாள்.
‘க்விக், விளக்கை அணை. அறையை விட்டு வெளியே செல்’ என்றான்.
அனிதாவும் பாஸ்கரும் உள்ளே நுழைந்தபோது கணேஷ் ஹாலில் ஒன்றுமறியாதவன் போல வீக்லியைப் புரட்டிக் கொண்டிருந்தான்.
‘ஹலோ மிஸ்டர் கணேஷ்!’
‘ஹலோ அனிதா! இந்த பாஸ்கரை நம்பி இவனுடன் வெளியே செல்கிறீர்களே, இது நியாயமா?’
‘எங்கே மோனிக்கா?’
‘அவள் என்னுடன் பேசுவதில்லை. உள்ளே இருந்தே என்னைப் பார்க்காமல் பதில் சொன்னாள்’.
‘எதற்கு வந்தீர்கள்?”
‘உங்கள் காவலுக்காக. உங்களைத் துஷ்டர்களிடமிருந்து காப்பாற்றுவதற்காக’ என்று பாஸ்கரைப் பார்த்துச் சொன்னான்.
அந்த டிராயர் பூட்டப்படவில்லை. அதை அவள் திறக்க முற்படக்கூடாது. அவன் அதைப் பார்த்தது அவளுக்குத் தெரியக் கூடாது. பார்த்ததின் அதிர்ச்சி அவனுக்கு இன்னும் அடங்க வில்லை. அந்த அதிர்ச்சி அதிகப்படியான இதயத்துடிப்பாக வெடித்துக்கொண்டிருக்கிறது.எதிரே பேசுபவரின் வார்த்தைகளில் கவனமில்லாது எண்ணங்கள் சுழல்களாக விரிந்து கொண்டிருந்தன.
‘கணேஷ், நீ இங்கேயே படுத்துக்கொள்ளப் போகிறாயா?’
கேட்டது பாஸ்கர். ‘ஆம்’ என்றான் கணேஷ்.
‘அதற்கு அவசியம் இருக்காது’ என்றான் பாஸ்கர்.
‘இதைச் சொல்லவேண்டியது நீயில்லை.’
அனிதா மேலே சென்றபோது அவனுக்கு இன்னும் இதயம் படபடத்தது. அவள் மேஜைக்கு இப்போது செல்வாளா? ஏதா வது எழுதவேண்டும் என்றால்தான் மேஜைக்குப் போகும் அவசியம் ஏற்படும். இந்த இரவு நேரத்தில் அவள் எழுத முற்படுவாளா?
நான் பார்த்தது தப்பு.
இல்லை, நான் பார்த்தது நல்லது. இனிதான் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். யாரிடம், பாஸ்கரிடமா, அனிதாவிடமா, மோனிக்காவிடமா? இந்த மூவரையும் தவிர வெளியே இருக்கும் – இருப்பதாக அவன் நினைக்கும் அந்த நான்காவது ஆசாமியிடமா? அவன் அல்லது அவள் யார்…
‘கணேஷ், சற்று மேலே வாருங்கள்’ என்று அனிதா கூப்பிட்டாள்.
‘கண்டுபிடித்துவிட்டாள். நான் அவள் அறையைச் சோதனை போட்டதைக் கண்டுபிடித்துவிட்டாள். என்ன கேட்கப் போகிறாள்? என்ன பதில் சொல்லப் போகிறேன்?’
அவள் தன் டிரஸ்ஸிங் டேபிள் அருகில் உட்கார்ந்துகொண்டு தன் கழுத்து மாலையைக் கழற்றிக்கொண்டிருந்தாள். அந்த மேஜை அருகே இல்லை.
‘கணேஷ், ஏதாவது தகவல் தெரிந்ததா?’
‘எதைப்பற்றி அனிதா?’
‘அவர் மரணத்தைப் பற்றி விசாரித்துக்கொண்டிருந்தீர்களே.’
‘நான் போலீஸ் ஆபீசரையும் சந்தித்தேன். எல்லோரும் சந்தேகிப் பது அந்த கோவிந்தைத்தான். எனக்கும் அவனைக் கண்டுபிடிப்பதுதான் முதல் பிரயத்தனமாக இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. போலீஸாருக்குக் கொடுக்கப்பட்ட வர்ணனை போதாது என்கிறார்கள். போட்டோ கேட்கிறார்கள். அவன் போட்டோவே இந்த வீட்டில் கிடையாதா?’
‘எனக்குத் தெரிந்தவரை கிடையாது. நான் அவன் போட்டோ எதையும் பார்த்ததாக ஞாபகமில்லை.’
கணேஷ் தன் பையில் இருந்த போட்டோவைத் தொட்டுக் கொண்டான்.
எதற்காகப் பொய் சொல்கிறாள்? அந்த ஆல்பத்தை அவள் பார்த்ததே இல்லையா? அனிதாவின் முதல் பொய்! எல்லோரும் பொய் சொல்கிறார்கள். மோனிக்கா? அவளுடைய முதல் பொய் என்ன? என்ன?
அனிதா அவன் முன்னாலேயே ஸாரியிலிருந்து நைட் கவுனுக்கு மாறிக்கொண்டிருந்தாள். அந்த மாறுதலை அவள் நிகழ்த்தும் பாணி இயல்பாக, இயற்கையாக இருந்தது. அதே சமயம் அவ்வப்போது தெரிந்த அவள் உடலமைப்பின் அந்தரங்க வளைவுகள் கணேஷின் நரம்புகளைச் சோதித்தன.
அனிதா தன் படுக்கையில் போய்ப் படுத்துக்கொண்டு ஒரு பூனைக் குட்டி போல் சோம்பல் முறித்தாள். எவ்வளவு மெல்லிய கவுன் அணிந்திருக்கிறாள்!
‘கணேஷ், இங்கே வாருங்கள்’.
போகாதே! போகாதே, மறந்துவிட்டாயா? அந்த மேஜை இழுப்பறையில் நீ என்ன பார்த்தாய் கணேஷ்? என்ன பார்த்தாய்?
நான்கு நாக்குகள் படைத்த சிறிய சவுக்கு!
‘குட்நைட், அனிதா!’
கணேஷ் வெளியேறினான்.
அத்தியாயம்-8
தன் வீட்டு முகப்பில் கார் நின்றதும் எதிரே காத்திருந்த அந்த நோக்கி வருவதை கணேஷ் கவனித்தான். அவன் உயரம், கனம் அவன் உடை அமைப்பிலிருந்து அவன் சமூக மட்டம் எல்லாவற்றை யும் கணித்தான்.
காரின் கதவைப் பூட்டும்போது அவனைக் கவனித்ததாகக் காட்டிக்கொள்ளவில்லை. உதட்டில் ஒரு மெட்டைப் பொருத்திக் கொண்டு தன் பையிலிருந்து சாவி எடுத்து முள் கதவைத் திறக்கையில்…
‘ஒரு நிமிஷம்!’ என்றான் அவன்.
கணேஷ் திரும்பி அவனைப் பார்த்தான். அவன் ஒன்றும் அப்படி அழகனாக இல்லை. உண்மையைச் சொல்லப் போனால் சில ஆக்ரோஷமான காரியங்களுக்கு என்றே படைக்கப்பட்டவன்போல தோல் ஜாக்கெட் டும், கையில் தொள தொள என்று கடிகாரச் சங்கலியும், காதருகில் சூடு போட்டதுபோல இறங்கின கிராப் மயிரும், கட்டுப்பாடில்லாத மீசையும்… கணேஷ் கவனித்தது ஒன்று மட்டும்தான்; இவன் என்னைவிடச் சுத்தமாகப் பத்துகிலோ அதிக எடையுள்ளவன்.
‘என்ன வேண்டும்?’ என்றான்.
‘உன்னுடன் பேசவேண்டும்.’
‘வியாபாரம். கதவைத் திற.’
‘என்ன வியாபாரம்?’
‘சொல்கிறேன். கதவைத் திற’.
‘என் பெயர் கணேஷ்.’
‘உன் பெயர் கணேஷ். எனக்கு நன்றாகத் தெரியும் கணேஷ். என் மச்சானே! கதவைத் திற. உனக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது.’
கணேஷ் அவனை அனுமதிக்கத் தயங்கினான். அவன் தான்தான் சொந்தக்காரன்போல உள்ளே நுழைந்தான். சுவரில் இருந்த விளக்கின் பட்டனை அழுத்த, ஒளி வெள்ளத்தில் இன்னும் தெளிவாக அவனைப் பார்க்க முடிந்தது. பார்த்த காட்சியை அவன் ரசிக்கவில்லை. வந்தவன் கனமாக சோபாவில் உட்கார்ந்து, ‘ஃபேனைப் போடுகிறாயா?’ என்று கேட்டான்.
‘என்ன வேண்டும் உனக்கு?”
‘நான் கேட்கவேண்டிய கேள்வி. உனக்கு என்ன வேண்டும்?’
‘எதற்கு?’
‘எல்லாவற்றையும் மறப்பதற்கு. பேசாமல் இந்த கேஸிலிருந்து லீவு எடுத்துக்கொண்டு சும்மா இருப்பதற்கு’.
‘எந்த கேஸ்?’
‘நீ ஒரு ஈ ஓட்டி லாயர். நீ எடுத்துக்கொண்டிருப்பது ஒரே ஒரு கேஸ்தான். அனிதா’.
‘அனிதா? ஓ! மிஸஸ் ஷர்மா.’
‘மிஸஸ் ஷர்மா! அந்த மனிதர் உயிரோடிருந்தால் உன்னை வெட்டிச் சாய்த்திருப்பார்.’
‘அவர் உயிரோடு இல்லாததால்தானே நான்…’
‘அதிகம் பேசாதே. எவ்வளவு வேண்டும் கேள்’ என்று பேண்ட் பைக்குள் கை விட்டான் அவன்.
‘எதற்கு?’
‘இந்தக் கேலிக்கூத்து வி-ல-குவதற்கு. இந்த நிமிஷத்திலிருந்து முழுமையாக விலகிவிடவேண்டும். அந்த வீட்டுப் பக்கம் நீ அடியெடுத்து வைக்கக்கூடாது. அந்தப் பெண் மோனிக்காவை பார்க்கக்கூடாது. அவ்வளவுதான். சுத்தம். க்ளோஸ். என்ன கேட்கிறாய்?’
‘ஒரு கேள்வி, நீ இதில் யார்?’
‘ஒரு நண்பன்’.
‘யாருக்கு?’
‘இப்போது உனக்கு. உன்னை ஆபத்திலிருந்து காக்க வந்த நண்பன் நான். எண்ணிக்கையைச் சொல். செக் கிழிக்கிறேன். எவ்வளவு ஆயிரம் வேண்டும். சொல்.’
‘உன் பெயர் என்ன?’
‘சாஸ்திரி.’
கணேஷ் சிரித்தான். ‘மறுபடியும் முயன்று பார்? சாஸ்திரியாம் சாஸ்திரி!’
‘சிரிக்காதே. பணம் எவ்வளவு என்று சொல்’ அவன் ஒரு செக் புத்தகத்தை உருவித் தயாராக வைத்திருந்தான். ஸிண்டிகேட் பாங்க்கின் புத்தகம் அது.
‘செக் ரப்பராக இருந்தால்?’
‘கேஷ் வேண்டுமா? அரை மணியில் தயார் செய்கிறேன். எவ்வளவு என்று சொல் முதலில்.’
‘யோசித்துச் சொல்லவேண்டும்’ என்றான் கணேஷ்.
‘இதில் என்ன யோசனை உனக்கு? நூறுக்கு மேல் எண்ணத் தெரியாதா?’
‘சாஸ்திரி! கெட் அவுட்!’
‘என்ன? என்னைச் சரியாகப் பார்த்தாயா? கெட் அவுட் என்கிறாயே? என்னைச் சரியாகப் பார்த்துச் சொன்னாயா? எழுந்து நின்று அழகுப் போட்டியில்போல் உடம்பைக் காண்பித்தான் சாஸ்திரி.
கணேஷ், ‘கெட் அவுட்!’ என்றான் மறுபடியும்.
‘டேய், உனக்கு சாக ஆசையா? ‘
‘சாஸ்திரி, இதோ பார், இதுதான் வழி. வெளியே போகும் வழி. எக்ஸிட்டுக்கு ஸ்பெல்லிங் தெரியுமா உனக்கு?”
சாஸ்திரி வீசினான். கணேஷ் ஒதுங்கிக்கொள்ள அந்த வீசல் சோபாவின் முனையில் பட்டது. நன்றாகப் பட்டிருக்க வேண்டும். சாஸ்திரிக்கு மேலும் கோபம் ஏற்பட்டு மதயானைபோல் கணேஷின்மேல் பாய்ந்தான். கணேஷ் தப்பித்து அந்த சோபாவைச் சுற்றிச் சுற்றி வந்தான். சாஸ்திரி இரண்டு கைகளையும் அகல விரித்துக்கொண்டு அவனைக் கோழி பிடிக்கிறவன் போல அணுகினான். கத்தியை உருவினான்.
கணேஷ், ‘சோட்டேலால்! சோட்டேலால்!’ என்று கத்தினான்.
சரியான கத்தல் அது. எதிர் வீட்டில் சைக்கிள் கடைக்குமுன் உட்கார்ந்திருந்த சோட்டேலாலுக்கு ஸ்பஷ்டமாகக் கேட்டது. ஓடி உள்ளே வந்த சோட்டேலால் அப்படியே அந்தக் கையைப் பற்றிக் கத்தியை உதிர்த்து முழங்காலால் அவன் முதுகில் தைக்க, இருவரும் சேர்ந்துகொண்டு சாஸ்திரியை ‘யக்ஞம்’ செய்தார்கள்.
அவனை உட்காரவைத்து சோடா உடைத்துக்கொடுத்து, கீழே விழுந்துகிடந்த அவன் செக் புத்தகத்தைத் திருப்பி அவன் பையில் போட்டுவிட்டு, ‘சாஸ்திரி! இப்போது சொல்’ என்றான் கணேஷ்.
சாஸ்திரி, ‘என்ன?’ என்று கேட்க நினைத்தான். குரல் எழும்ப வில்லை. அவனால் எழுந்திருக்க முடியவில்லை.
‘சாஸ்திரி, நான் போலீஸ் கம்ப்ளெய்ண்ட் கொடுத்து உன்னை நேராகச் சிறைக்கு அனுப்ப முடியும். இத்தனை பேர் சாட்சி. போங்கப்பா போங்க! என்ன வேடிக்கை இங்கே? போ… ஊம்… சொல்லு’ என்றான் கணேஷ்.
‘என்ன சொல்ல?’
‘உன்னை யார் அனுப்பி வைத்தார்கள்?’
‘ஒருவருமில்லை’.
‘சோட்டேலால், போலீசுக்கு ஃபோன் செய்து ஃப்ளையிங் ஸ்க்வாடைக் கூப்பிடு. அவர்கள் தீர்த்து வைக்கட்டும் இதை. என் வீட்டில் நுழைந்து என்னை அடித்தான். கத்தியால் குத்த வந்தான். இதோ பார் ரத்தம், சட்டை கிழிந்திருக்கிறது…சாஸ்திரி, யார் உன்னை அனுப்பிவைத்தார்கள்?’
‘பாஸ்கர்’ என்றான் சாஸ்திரி.
‘தாங்க்யூ சாஸ்திரி, இன்னொரு சோடா சாப்பிடுகிறாயா?’
மறுநாள் காலை சுமார் பத்து மணி அளவில் கணேஷ் மூன்று தடவை தொலைபேசியில் பேசினான். அவை வருமாறு.
முதலில் இன்ஸ்பெக்டர் ராஜேஷுக்கு:
‘இன்ஸ்பெக்டர் ராஜேஷ்? கணேஷ் ஹியர்… ஞாபகம் இருக் கிறதா? எனக்கு ஒரு சின்ன உதவி செய்ய வேண்டும்… இறந்து போன ஷர்மாவின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வேண்டும்… யாரைக் கேட்கவேண்டும்? ஒரு நிமிஷம். குறித்துக் கொள் கிறேன், சொல்லுங்கள். (எழுதிக்கொண்டான்). ஒன்றுமில்லை. அதை நான் பார்க்கவேண்டும். ஒரு தடவை அதைப் பார்க்க அனுமதித்தால் போதும். கோவிந்த் அகப்பட்டானா? இல் லையா? சிக்கல்தான்… இல்லை சார், எனக்கு ஒரு சர்ட்டிபிகேட் வேண்டும். அந்த அளவில்தான் என்னுடைய இண்ட்ரெஸ்ட்.. நான் வந்து பார்க்கிறேன் உங்களை, பை.’
இரண்டாவது இந்திய விமானப் படையின் தலைமைச் செயலகத்துக்கு:
‘ஏர் ஹெட்க்வார்ட்டர்ஸ்? எக்ஸ்டென்ஷன் 239 ப்ளீஸ்… ஸ்க்வாட்ரன் லீடர் ராமலிங்கம்… தாங்க்யூ… ராமலிங்கம்! கணேஷ் ஹியர். (புன்சிரிப்பு). ஓ. எஸ்… ஓ. எஸ். ஹௌ இஸ் ப்ரேம்? நீங்கள் எல்லாம் பெரிய ஆசாமிகள். அப்படி இல்லை. பை த வே உங்களிடமிருந்து ஒரு சமாச்சாரம் வேண்டும். கொஞ்சம் வினோதமாகப் படும் உங்களுக்கு… விஷயம் இது தான். ஃப்ளைட் லெஃப்டினண்ட் ராஜா என்று ஒரு ஆசாமி பற்றிய ராஜா…ஆர் ஏ சில தகவல்கள் வேண்டும். ராஜா… ஆர் ஏ ஜே ஏ ஆர் ஃபார் ராதிகா – ஏ ஃபார் அன்ஜெலா – ஜே ஃபார் ஜானகி – ஏ பார் அருணா… (சிரிப்பு) ராஜா. அந்த மாதிரி ஒரு ஆள் சில வருஷங் களுக்கு முன்பு ஆக்ராவில் ஒரு டிரான்ஸ்போர்ட் விமான விபத்தில் இறந்துபோயிருப்பதாக எனக்கு ஒரு பார்ட்டி தகவல் தந்தார்கள். இது எவ்வளவு தூரம் நிஜம் என்று தெரிய வேண்டும். அதெல்லாம் இல்லை. ஒரு க்ராஸ் செக்… எப்போது இந்தத் தகவல் கிடைக்கும் எனக்கு? ஓகே, இன்று மாலை 4.30-க்கு வாயுபவன் வாசலில் வந்து காத்திருக்கிறேன். ஃப்ளைட் லெஃப்டிண்ெட் ராஜா… ஆர் ஃபார்… ஓகே! தாங்க்ஸ்.’
மூன்றாவது, வெளி நாட்டுத் தபால் தந்தி நிலையத்துக்கு.
‘ஓ.ஸி.எஸ்? என்க்வயரிஸ் ப்ளீஸ்… என்க்வ்யரிஸ்? டில்லி யிலிருந்து அமெரிக்காவுக்கு கேபிள் அனுப்பினால் அது அங்கு போய்ச் சேர எத்தனை நேரமாகும்? என் பெயர் கணேஷ். நான் ஒரு லாயர். எத்தனை மணி நேரம் ஆகும் என்று சொல்லுங்களேன். தாங்க்யூ வெரி மச் மிஸ்! உன் குரல் அழகாயிருக்கிறது!’
தலை வாரிக்கொண்டான். இரண்டு ப்ரோட்டின் பிஸ்கட்டுகளைக் கடித்துக்கொண்டான். கிளம்பினான்.
‘உங்களுக்கு யார் வேண்டும்?’ என்றான் வேலையாள்.
‘பாஸ்கர் இல்லையா?’ என்றான் கணேஷ்.
‘இல்லையே, அவர் ஷர்மா ஸாபின் வீட்டில் இருப்பார்’.
கணேஷ் தன்னைச் சுற்றிப் பார்த்தான். பாஸ்கரின் அறை சுத்தமாக இருந்தது. ‘தி மணி கேம்’ என்கிற புஸ்தகம் தென் பட்டது. ‘மானார்க்’ பவுடர் டப்பா, பச்சையில் குப்பைக் கூடை, மேஜை நாற்காலி, விவேகானந்தர், ஹேமமாலினி.
‘நீ அவர் வேலைக்காரனா?’ க்ரூப் ஃபோட்டோ… டெலி ஃபோன்…’
‘ஆமாம்… நீங்கள்?’ சுத்தமான ஒற்றைப் படுக்கை, பத்திரிகைகள்.
‘அவர் சினேகிதன். ஆக்ராவிலிருந்து வருகிறேன்’.
‘உங்கள் பெயர் சொல்லுங்கள். வந்தால் சொல்கிறேன்.’
‘நானே போய்ப் பார்க்கிறேன். உன் பெயர் என்ன?’ கார்டுராய் ஷுக்கள். கறுப்புப் பெட்டி, இரும்பு அலமாரி.
‘ராம் ஸ்வரூப்.’ நடு மேஜையில் சீட்டுக் கட்டில் நிர்வாணம்.
‘நல்ல பெயர். ராம் ஸ்வரூப், ஒரு நிமிஷம்’.
‘என்ன சார்?’
‘பத்து நாளைக்கு முன்னால் பாஸ்கர் ஆக்ரா வருவதாக எனக்குக் கடிதம் எழுதியிருந்தார். நான் அப்போது ஆக்ராவில் இல்லை. திடீரென்று வேலை விஷயமாக வெளியூர் போக வேண்டி யிருந்தது. உன் எஜமான் ஆக்ரா சென்றிருந்தாரா என்று தெரிய வேண்டும்.’
‘எப்போது?’
‘சென்ற பதினெட்டாம் தேதி அல்லது பதினேழாம் தேதியில்…’
‘இல்லையே! அவர் எங்கேயுமே போகவில்லை’.
‘டில்லியைவிட்டு எங்கேயுமே போகவில்லை’.
‘இல்லையே! சென்ற நாலைந்து மாதங்களாக டில்லியில்தானே இருக்கிறார்?’
கணேஷ் பாஸ்கரின் வீட்டைவிட்டு வெளியே வந்து தன் காரைக் கிளப்பி, சாலையில் வாகனங்களின் ஓட்டத்தில் கலந்து கொண்டான். மெதுவாக யோசித்துக்கொண்டே ஓட்டினான். பாஸ்கர்,நீ அப்படிப்பட்டவனா? பொய் சொல்லியிருக்கிறாயா? என்னை விலக வைக்கப் பணம் கொடுக்கிறாயா? என்னை அடித்து உதைக்க முயற்சி செய்கிறாயா? ஏன் பாஸ்கர், ஏன்? கண்டுபிடிக்கிறேன். கவலைப்படாதே…
கணேஷ் வசந்த் விஹாரை அடைந்து உள்ளே நுழைந்ததும் மோனிக்கா வரவேற்றாள்.
‘ஹலோ! யூ லுக் க்ரேட். யாருக்காக இந்த அலங்காரம்? என்றாள்.
‘குட் மார்னிங்’ என்றான் சிக்கனமாக.
‘கணேஷ்,உனக்கு என்ன வயது?’ ‘உன் வயதுடன் பத்தைச் சேர்த்துக்கொள்.
‘நான் அதைத்தான் விரும்புகிறேன்.’
‘எதை?’
‘என்னைவிட அதிக வயது உள்ளவனை. அதிக அனுபவம் உள்ளவனை’.
‘நேசிப்பதை…’ என்றான் கணேஷ் அவசரமாக. ‘உன்னைவிட அதிக வயதுள்ளவன், அதிக அனுபவம் உள்ளவன் – சற்று அவசரத்தில் இருக்கிறான். அனிதா எங்கே?’
‘தரிசிக்க வேண்டுமா? ஸாரி, அவள் இல்லை.’
‘இல்லை என்றால்?’
‘நேற்று இரவு எங்கேயோ வெளியில் சென்றாள். இதுவரை திரும்பி வரவில்லை.’
கணேஷ் கைக்கடிகாரத்தைப் பொறுமையுடன் பார்த்துக் கொனடான.
கணேஷ், உன்னிடம் நான் ஒரு முக்கியமான செய்தி சொல்ல வேண்டும்’ என்றாள் மோனிக்கா.
‘சொல், தனியாகத்தான் இருக்கிறோம்.’
‘எனக்கு நேற்று ஒரு டெலிபோன் கால் வந்தது. யாரோ ஒருவன் என்னைக் கூப்பிட்டான். பெயர் தெரியவில்லை. என் அப்பாவின் உயில் மூலம் எனக்கு வரப்போகும் கம்பெனி ஷேர்களை ம விற்கிறாயா என்று கேட்டான். நல்ல விலைக்கு விற்கச் சம்மதம் என்றால் இன்று 11 மணிக்கு கனாட் ப்ளேஸில் ஒரு ஓட்டலுக்கு என்னை வரச் சொன்னான்.’
‘குரல் பழக்கமானதாக இருந்ததா?’
‘இல்லை, புதுக்குரல்’.
‘வா, போகலாம்’ என்றான் கணேஷ்.
ஒரு எடிஸன் காலத்து கிராமஃபோன் அந்த ஹோட்டல் வாசலில் அவர்களை வரவேற்றது. உள்ளே நுழைந்ததும் எதிரே சுவரில் சிவப்பு பெயிண்ட் அடித்த சைக்கிள் ஒன்று அமைக்கப் பட்டிருந்தது. ஒரே புகை மண்டலம். ஜூக் பாக்ஸ் அலறிக் கொண்டிருந்தது. திடும் திடும் என்று டபிள் பேஸ் வெடித்துக் கொண்டிருக்க – ஹிப்பிகள் – இந்திய ஹிப்பிகள், மேல் நாட்டு ஹிப்பிகள், ஹிப்பியாக ஆவதற்கு ஆசை இருந்தும் பாதி நேர்ந்ததும் பெற்றோர்களால் முடிவெட்டிக் கெடுக்கப்பட்ட இளைஞர்கள். அரை ஹிப்பிகள் .
ஒரு வெள்ளைக்காரன் காலில் கட்டைச் செருப்பு, இடுப்பில் ஒரு டவல், அதில் செருகின ஒரு பாக்கெட் சார்மினார், வெறும் உடம்பு, செம்பட்டைக் காடாகத் தலைமயிர்க் காட்டுக்குள் இரண்ட மரகதங்கள் போல் பச்சைக் கண்கள், இவற்றுடன் அவன் எதிரே இருந்த அந்தப் பெண்ணுக்கு கீதையைப் போதனை செய்துகொண்டிருந்தான்.
பாப் டைலனின் பாட்டு அந்த அறை முழுவதும் பரவியிருந்தது. கணேஷ் அந்தக் கூட்டத்தில் மிக அந்நியமாக உணர்ந்தான். அவர்கள் உட்கார்ந்தார்கள். மோனிக்கா மெதுவாக மேஜையில் தாளம் போட ஆரம்பித்தாள்.
கணேஷ் மிக உரக்க, ‘இந்த இடத்துக்கா வரச் சொல்லி இருந்தான்!”
‘ஆம்’ என்றாள் மோனிக்கா.
‘இங்கே, எதுவும் பேச முடியாது. என் தொண்டை வற்றிவிடும்’.
‘ம்ஹும். தலையாட்டினாள் மோனிக்கா.
அந்த இடத்தில் இளமையின் உஷ்ணம் வரவர ஏறிக்கொண்டே சென்றது. மோனிக்காவின் மினி ஸ்கர்ட் சற்று அபாய மட்டத்தில் இருந்ததை அவளைத் தவிர மற்ற எல்லோரும் கவனித்துக் கொண்டிருக்க, கணேஷ் வாசலையே கவனித்துக் கொண்டிருந்தான். வந்திருந்தவர்கள் எவரும் ஷேர் வாங்கக் கூடியவர்களாகத் தெரியவில்லை.
ஒரு இப்பி (இந்திய ஹிப்பி) வந்து மேஜை மேல் உட்கார்ந்து கொண்டு, ‘பேபி!’ என்றான்.
கணேஷ் மோனிக்காவைப் பார்த்தான். அவள் சளைக்காமல், ‘இய்யா ஷூகர் டால்!’ என்றாள்.
கணேஷ், ‘பையா, நீ தான் இவளுக்கு ஃபோன் செய்தாயா?’ என்றான்.
இளைஞன் திரும்பி அவனைப் பார்த்தான். ‘நீ யார்? என் அப்பாவா?’ என்றான்.
‘உன் தாத்தா’ என்றான் கணேஷ்.
‘ஹலோ, க்ராண்ட்ஃபாதர்! ப்ளீஸ்ட் டு மீட் யூ!’
கணேஷ் தன் மூக்கைக் சுண்டு விரலால் தேய்த்துக்கொண்டான். மோனிக்கா சிரித்தாள். தைரியமடைந்த அவன் அவள் இடுப்பைச் சுற்றிக் கை வளைத்து, ‘வா மாடிக்குச் செல்லலாம். அங்கே ஒரு பில்லியர்ட்ஸ் மேஜை இருக்கிறது’ என்றான்.
கணேஷ் எழுந்து அந்த ஹிப்பியை அவளிடமிருந்து பறித்துத் தூர எறிந்தான். எறியப்பட்ட ஹிப்பி அதனால் கோபமடைந்தான் என்பது மிகையாகாது. வெய்ட்டர் ஒருவனின் ட்ரேயிலிருந்து ஒரு கனமான பீங்கான் தட்டை எடுத்துக் கணேஷின் பக்கம் வீசினான்.
ஹிப்பிகள் எவ்வளவோ விதத்தில் நவீனமானவர்கள். ஆனால் கோபத்தில் பீங்கான் தட்டு எறிவதில் அவ்வளவு சாமர்த்திய மில்லை போலும். எறியப்பட்ட தட்டு அப்போதுதான் கல் யாணம் செய்துகொண்டு தன் இளம் மனைவியுடன் உள்ளே நுழைந்து கொண்டிருந்த ஜர்னைல் சிங் என்கிற சர்தார்ஜியின் தலைப்பாகையைத் தட்டிவிட்டது. சாதாரணமாகவே சர்தார்ஜி கள் சண்டைப் பிரியர்கள். ஜ.சிங் புதிதாகக் கல்யாணமான, தலைப்பாகை இழந்த சர்தார்ஜி -அவன் அதிகக் கோபமடைந் தான் என்பது மிகையாகாது.
சிங் மின்னல் போல் ஹிப்பியின் மேல் பாய, சில உப ஹிப்பிகள் அதில் சேர்ந்துகொள்ள, கணேஷ், சிங், ஹிப்பி 1, ஹிப்பி 2, வெய்ட்டர், சிங், ஹிப்பி 3 என்று பொதுவாகவே அந்த ஓட்டலின் ‘அமைதி’ கலைந்துவிட்டது என்று சொல்வதும் மிகையாகாது.
ஐஸ்கிரீமின் மேல யாரோ உட்கார்ந்தார்கள். கோல்ட் ஸ்பாட்டில் யாரோ குளித்தார்கள். மோனிக்கா மேஜை மேல் ஏறி நின்று கொண்டு கணேஷைத் தேடினாள். அந்த மேல் நாட்டு ஹிப்பி (சார்மினார், துண்டு) தன் எதிரே இருந்த சிஷ்யைக்கு இன்னும் கீதை போதித்துக்கொண்டிருந்தான்.
மேனேஜர் டெலிஃபோனைப் பற்றிக்கொண்டு மேஜை அடியில் சென்று பார்லிமெண்ட் தெரு போலீஸ் நிலையத்துக்கு ஃபோன் செய்தார்.
– தொடரும்…
– அனிதா – இளம் மனைவி (தொடர்கதை), வெளிவந்த ஆண்டு: 1974, குமுதம்.