தெருவில் நுழையும் போதே மக்கள் ஆங்காங்கு நின்று பேசியவாறு இருந்தனர். ஏதோ வித்யாசமாய் உணர்ந்தேன். வண்டியை நிறுத்தி விட்டு அருகில் சென்றேன்.
“வித்யா தீ வச்சுகிட்டா சார் !” அதிர்ந்தேன்.
வித்யா என் பக்கத்து வீட்டு பெண். கல்யாணமாகி ஏழு வருடமாகிறது. ஒரு பெண் பள்ளியில் படிக்கிறாள்.
“இப்போ வித்யா?”
“ஆஸ்பத்திரிலே இருக்கா “
“அவங்க அம்மா அப்பாவுக்கு சொல்லியாச்சா?’
“வந்துட்டாங்க… வீட்டுக்குள்ளே போலீஸ் இருக்காங்க. நாங்க உள்ளே போகலை. நீங்க வக்கீல்னு சொல்லிட்டு கொஞ்சம் போலீசில் பேசி பாருங்க. “
நான் அவள் வீட்டுக்குள் நுழைந்தேன். போலீஸ் அதிகாரியிடம் என்னை அறிமுகப்படுத்தி கொண்டேன். அவர் என்னிடம் விசாரிக்க தொடங்கினார்.
“அடிக்கடி சண்டை வருமா சார்?”
“ஆமாம். வழக்கமா உள்ளது தான்”
“அவங்க ஹஸ்பண்ட் குடிப்பாரா?”
தயங்கினேன். “சும்மா சொல்லுங்க”
“ஆமாம். அதனால் தான் பல நேரம் சண்டை”
“ம்ம்..நான் இப்ப ஹாஸ்பிட்டல் போறேன். நீங்க வர்றீங்களா?’
“சரி.. வீட்டில் சொல்லிட்டு வந்துடுறேன்”.
வழியில் சப் இன்ஸ்பெக்டர் பொதுவான சில விஷயமும் வித்யா பற்றியும் பேசி கொண்டிருந்தார். வித்யா, கணவனிடம் பட்ட கஷ்டங்களை எனக்கு தெரிந்த வரை சொல்லி கொண்டிருந்தேன்.
“சில நாள் குடி போதையில் தெருவிலயே விழுந்து கிடப்பார். பல நேரம் அவர் அடிச்சு வித்யா, பொண்ணு ரெண்டு பேருக்கும் காயம் ஆயிருக்கு”
“வாரத்துக்கு ரெண்டு கேசாவது பாக்கிறோம் சார். அநேகமா ஒன்னு புருஷன் பொண்டாட்டி சண்டை.. இல்லாட்டி மாமியார் நாத்தனார் கொடுமை..அந்த பொண்ணோட புருஷன் நம்பர் இருக்கா? “
“இல்லை சார்”
“பாருங்க.. பக்கத்துக்கு வீட்டு காரங்க நம்பர் கூட இல்லாம வாழ்றோம்”.
மருத்துவ மனை வந்து விட்டது. வித்யா பெற்றோர் கதறியவாறு இருந்தனர். என்னை பார்த்ததும் அழுகை அதிகமானது. “நீங்க எல்லாம் இருக்கீங்கன்னு இருந்தோமே!! அந்த சண்டாள பாவி தான் இப்படி பண்ணிட்டான். பணம் வேணும்ன்னு கேட்டுருக்கான். இவள் பீஸ் கட்டணும்னு தரலை. எரிச்சுட்டான் படு பாவி”
“உங்க மருமகன் எங்கே?”
“தெரியலே சார். போன் பண்ணா சுவிட்ச் ஆப்-ன்னு வருது”.
“அநேகமா அந்த ஆள் வேலையா தான் இருக்கும். … உங்க பொண்ணு ஏதாவது பேசினாளா? “
“உள்ளே விடலை சார்”
சப் இன்ஸ்பெக்டர் எங்களை உள்ளே அழைத்து போனார். தீ காயம் அதிகம் என்றும் பிழைப்பது கடினம் என்றும் தெரிய வந்தது.
வித்யாவை அந்த நிலையில் பார்ப்பது கொடுமையாக இருந்தது. கழுத்துக்கு கீழ் அநேகமாய் எரிந்திருந்தது.
சப் இன்ஸ்பெக்டர் குனிந்து மெல்ல பேசினார். “ஏம்மா.. எப்படி நடந்தது?”
வித்யா ஏதும் பேசலை. விழித்து எங்களை பார்க்க முயற்சித்தாள்.
“சொல்லும்மா.. அந்த படு பாவி தானே.. சொல்லு…அந்த சண்டாளன் தான்னு சொல்லு;”
வித்யா முதலும் கடைசியுமாய் மெல்ல முனகினாள். “அவுக தான்.. அவுக தான்.. அவுக தான்.. “
– நவம்பர் 2009, சர்வேசன்500 – நச்னு ஒரு கதை போட்டி 2009.