அந்த அடுக்குமாடி குடியிருப்பில் 7வது தளத்தில் அன்றைக்கான விடியல் காதலாய் பூத்தது.
அவள் என்றால் அது அவனும் அவளும்….
அவன் என்றால் அது அவளும் அவனும்…
ஒரு கை ஜன்னல் திறக்க ஒரு அவளை நெஞ்சோடு அணைத்துக் கொண்டிருந்தது. நெற்றிகள் இரண்டும் மெல்ல முட்ட கலைந்த ஓவியத்தின் இரு பகுதிகள் போல இருவரும்…ஒருவரையொருவர் பார்த்தார்கள்.
காதலை எந்த மொழியில் கூறினாலும் காதலே… அதுவும் காதோரம் கிசுகிசுக்கும் உன்னை நான் காதலிக்கிறேன் என்பது பழைய மொழி என்றாலும் ஆதி மொழி. இருவரும் குளித்து வந்தார்கள்.குளிர்ந்து வந்தார்கள். அவன் தேநீர் தயாரித்தான். மாற்றி மாற்றி கொஞ்சலும்.. கெஞ்சலுமாக எச்சிலும் முத்தமுமாக தேநீர் கவிதையானது. அவ்வப்போது உரசிக் கொண்டார்கள். பற்றுதல் நலம் என்று இருக்கலாம்.
அவள் இட்லிக்கு மாவெடுத்து ஊற்றி வைத்தாள். அவன் வீடு கூட்டினான். அப்படியே சட்னிக்கு தேங்காய் துருவினான். கடலையோடு சேர்த்து மிக்சியில் அரைத்தான். துவைக்க வேண்டிய துணிகளை வாஷிங் மெஷினில் போட்டான். அவள் இருவருக்குமான ஆடைகளை இஸ்திரி செய்தாள். மதியத்துக்கான சாதம் ஒரு பக்கம் வெந்து கொண்டிருந்தது. காய்கறி நறுக்கினான் அவன். பொரியல் செய்தாள் அவள். ஷூவுக்கு பாலிஷ் போட்டு விட்டு அவளின் செருப்பையும் துடைத்து வைத்தான் அவன்.
இளையராஜா வீடு முழுக்க காதலை விதைத்துக் கொண்டிருந்தார்.
இடையே அவள் படித்த பிடித்ததை பகிர்ந்து கொண்டாள். அவன் பார்த்ததை பகிர்ந்து கொண்டான். இடையே சில முத்தங்கள்… சில தழுவல்கள். சில மௌனங்கள்.
அழகு கூடுகிறது காதலில் என்றான். ஆயுளும் கூடும் காதலில் என்றாள்.
இருவரும் மதிய உணவை பேக் செய்தும் அவரவர் பையில் வைத்துக் கொண்டு ஜம்மென்று உடை உடுத்தி கதவை பூட்டிக் கொண்டு வெளியேறினார்கள்.
கீழே வாசலில் இருவரும் நிற்க… ஒரு சேர இந்த பக்கமிருந்து அவன் ஐ டி கம்பெனி பஸ்ஸும் அந்த பக்கமிருந்து அவள் வேலை செய்யும் துப்புரவு தொழிலார்கள் வண்டியும் வர… இருவரும் காற்றில் முத்தமிட்டபடியே “பாய் பியூட்டி… டேக் கேர்… யு டூ மை டியர்” என்றபடியே ஏறி சென்றார்கள்.
பகல் நீண்டு கிடந்தது….வாழ்வும் அதன் அர்த்தமும் கூட.
அருமை …