ஹேப்பி வேலன்டைன்ஸ் டே!

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்  
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 16,617 
 

கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். பிப்ரவரி 13 நள்ளிரவு 11:59:55… 56… 57… 58… 59… 12:00:00. பீப் பீப்… பிப்ரவரி 14. காதலர் தினம். என் கல்லூரி விடுதி அறையில் நான் விட்டத்தைப் பார்த்துப் படுத்தபோது, ‘இந்த இரவு விடியாமலே இருந்துவிடக் கூடாதா?’ என்று இருந்தது.

கண்களை மூடியவுடன் நீரலை பிம்பங்களாக என் அப்பத்தா முகம் தோன்ற, விரிந்தது அந்த ஃப்ளாஷ்பேக். 21 வருடங்களுக்கு முன் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், கரிசங்குளத்தில் நான் பிறந்ததும் இதே பிப்ரவரி 14 நள்ளிரவுதான். தலை வெளிவந்து, தோள் நழுவி, இடுப்பு இறங்கியதும் அப்பத்தா கண்களில் மின்னல் ஒளி. உலகத்தைக் கட்டி ஆளப்போகிற தன் பேராண்டி, காதல் தூதன் வேலன்டைன் மறைந்த தினத்தன்று உதித்ததற்கான உற்சாகம் அல்ல அது; நான் ‘பேராண்டி’யாகப் பிறந்ததற்கான சந்தோஷ சமிக்ஞை. ‘மவராசி மதுர வீரனையே பெத்துப்புட்டால்ல!’ என்று என் அம்மாவுக்கு நெட்டி முறித்த கையோடு, ஒதுக்குப்புறமாக வைத்திருந்த நெல்மணிகளைத் தோட்டத்தில் புதைத்து, கிண்ணத்துக் கள்ளிப் பாலை அதன் மேல் ஊற்றிய கதையை நீட்டி முழக்கி 139 தடவையாவது என்னிடம் சொல்லியிருப்பாள்.

முத்துவடுகு டாக்கீஸில் ஜெமினி கணேசன் படத்துக்குத் தாமசமாகிவிட்டது என்று குரங்குப் பெடல் சின்னக் கருப்பனை நம்பி சைக்கிளில் ஏறாமல் இருந் திருந்தால், அப்பத்தா இன்னமும் கல்லுக்குண்டுகணக்காக வெத்திலை உரலை இடித்துக்கொண்டு இருந்திருக்கும். அப்படி இருந்திருந்தால், ‘நான் பேராண்டியா இருந்தாலும் பரவாயில்லைன்னு அன்னிக்கு எனக்கு நெல்லுமணி, கள்ளிப்பாலும் கொடுத்துக் கொன்னுருக்கலாம்ல!’ என்று அப்பத்தாவின் கண்டாங்கிச் சேலையை முகர்ந்தபடி அவள் மடியில் படுத்து அழுதிருப்பேன். என் சோகத் தைச் சொல்லி அழக்கூட யாரும் இல்லை; அல்லது, சொல்லி அழக்கூட யாரும் இல்லாததுதான் என் சோகம்.

இந்த உலகத்தில் ஏழையாகக்கூடப் பிறந்திருக்கலாம். தேதி தாண்டியும் காலேஜ் ஃபீஸ் கட்டாமல் அடிக்கடி பிரின்சிபாலை மரியாதை நிமித்தம் சந்திப்பதுகூட அவமரியாதை இல்லை. செமஸ்டர்களில் எப்போதும் 40-45க்குள் எம்பிக் குதித்துக் கண்டம் தாண்டுவதாலோ, கல்லூரி விளையாட்டுப் போட் டிகளில் பார்வையாளராகக்கூட இல்லாததாலோ, எந்தப் பிரத்யேக அடை யாளங்களும் இல்லாமல்கூட உலவலாம். ஆனால், பருவமெய்தி ஏழு வரு டங்களாக காதலர் தினத்தையே பிறந்த நாளாகக்கொண்டவன், அந்த நாளைத் தனியனாகக் கொண்டாடுவதுதான் இந்த உலகத்தில் கொடுமையிலும் கொடுமை… வன்கொடுமை. பிரபஞ்சமே என் பிறந்த நாளைக் கோலகலமாகக் கொண்டாடும். எனக்குப் பிறந்த நாள் வாழ்த்து சொல்லக்கூட யாரும் இருக்க மாட்டார்கள். ‘கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்… அவன் காதலர் தினத்துக்குக் காதலி இல்லாமல் தவிக்க வேண்டும்’ என்று அரற்றியபடியே தூங்கிப்போனேன்.

எதிரே எந்தக் கட்டடங்களும் இல்லாததால், ஏழு மணிக்கே சுள்ளென்று சூரியன் முதுகில் உறைக்கும் என் அறையில். தவிர்க்க முடியாமல் விழித்தெழுந்து தவிக்கத் தொடங்கினேன். மதுரையில் இருக்கும் மதுரை கல்லூரியில் பி.ஏ., எகனாமிக்ஸ் படித்து, எங்கள் கிராமத்துக்கே விடிவுக் காலத்தைக் கொண்டுவந்துவிடுவேன் என்று என் குடும்பம் கரிசங்குளத்தில் நம்பிக்கொண்டு இருக்கிறது. அப்பா கடலை போட்டு அனுப் பும் காசு, இங்கே நான் கடலைபோட செலவாகாமல் இருந்தாலும், மனது வெறுமையாக இருந்தது. வெந்த புண்ணில் வேல் கதையாக அன்று ஞாயிற்றுக்கிழமை வேறு. மருதமுத்து அண்ணன் செல்லுக்கு அடித்து அம்மாவிடம் பேசலாமா என்று தோன்றியது. ‘ராசா உடம்புக்கு எதுனா நோவா? கூடப் படிக்கிற சேக்கா ளிகளுக்குள்ள எதுனா பிரச்னையா? வாத்திமாரு பேப்பர் வாங்க அப்பார வரச் சொன்னாவளா?’ என்று வைரமுத்துவுக்குப் போட்டியாகக் கற்பனைக் குதிரையை வெறிகொண்டு அடிப்பாள். திடீர் முடிவெடுத்து மீனாட்சியம்மன் கோயிலுக்குக் கிளம்பினேன்.

தனிமையில் குடிகொண்டு இருந்த விபூதிப் பிள்ளையாரைப் பார்த்ததும், மனசுக்குள் சின்ன ஆறுதல். அவர் கன்னத்தில் கொஞ்சம் விபூதியைப் பூசிவிட்டுப் பொற்றாமரைக் குளப் படிக்கட்டுகளில் அமர்ந்தேன். ஞாயிற்றுக்கிழமைக்கு அந்த ஒன்பதரை மணிக்குக் கோயிலில் கூட்டம் அதிகம். படிக்கட்டுகள் முழுக்கத் தனித் தனித் தீவுகளாக காதல் ஜோடிகள். காட்டன் சுடிதார், தலையில் மல்லி, கழுத்தில் மஞ்சள், கையில் ஏதோ ஒரு சப்ஜெக்ட் புத்தகம். மொடமொட புதுச் சேலையின் நிமிடத்துக்கொரு முந்தானைச் சரிசெய்யல்கள், ரகசிய களுக், தொடைக் கிள்ளல்கள், விரல் ஸ்பரிசங்கள், நெற்றிக் குங்கும வைபவங்கள், மொபைல் க்ளிக்குகள்… ஹ்ம்ம்! அடுத்த இடைத் தேர்தலில் ஊரை சிங்கப்பூர் ஆக்குவதற்குப் பதில் மதுரைக்கு ஒரு பீச் கொண்டுவருவேன் என்று சொல்பவர்களுக்கு, யோசிக்காமல் ஆதரவு தெரிவிப்பார்கள் இந்த ஜோடிகள். ‘காதலர் தினத்தன்று கோயிலில் இளஞ்ஜோடிகள் குஷி!’ என்று நாளைய தினசரியில் இதில் எந்த ஜோடிகள் வருவார்கள் என்று பார்வையை ஓட்டியபோது… ஷாலினி!

பி.எஸ்ஸி., மேத்ஸ் ஷாலினி. ஒரு சாயலுக்கு ‘மகாநதி’ ஷோபனா போலவே இருக்கும் அதே ஷாலினி. அருகில் அமர்ந்து தேங்காயைச் சுரண்டிக்கொண்டு இருந்தான் ப்ரேம். அன்றொரு நாள்…

ரொம்ப ஹோம்லி, ரொம்ப மாடர்ன் என்ற வித்தியாசக் கலவைக்குள் அடங்கும் மிகச் சொற்ப தேவதைகளுள் ஷாலினியும் ஒருத்தி. முதல் ஆறு மாதத்துக்கு ஒரு பயலையும் பக்கத்தில் அண்டவிடவில்லை ஷாலினி. அவளிடம் காதல் சொல்பவர்களிடம், ”எனக்கு உங்களைப் பிடிக்கிறதுகூட முக்கியம்இல்லை. நீங்க இப்படி லெட்டர் கொடுத்தீங்கன்னு தெரிஞ்சாலே, உங்க கையை எடுக்கச் சொல்லிருவாரு எங்க அப்பா. ஒருவேளை எனக்கு உங்களைப் பிடிச்சு, நாம ஊரைவிட்டு ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக் கிட்டாலும், நம்மளைத் தேடிப்பிடிச்சு உங்களை மாறு கால், மாறு கை வாங்கிட்டு என்னை வீட்டு லயே சுத்திட்டு இருக்குற ஏதாவது ஒரு படிக்காத மாமனுக்குக் கட்டிவெச்சுருவாங்க. இதுக்காகவே ரெண்டு மூணு மாமனுங்களைச் சோறு போட்டு வளர்த்துட்டு இருக்காங்க!’ என்பாளாம். மென்று முழுங்கிப் புறமுதுகிட்டுவிடுவார்கள் பலர்.

ஆனாலும், காதல் வரலாற்றில் தனது பெயரை நிலைகொண்டுவிடும் முயற்சியில் குப்புறப்படுத்துக் குட்டிக்கரணம் அடித்து, அத்தனை திறமைகளையும் வெளிப்படுத்தி, அவளைக் கவர்வதற்காக ஒரு பெரும் கும்பல் அலைந்துகொண்டுதான் இருந்தது. அன்றைய தினத்தின் முதல் மூன்று பீரியடுகளுக்குள் அவளைச் சிறு புன்னகையாவது சிந்தச் செய்வதற்காக உடல், பொருள், ஆவியைப் பணயம்வைத்துப் போராடுவார் கள். புன்னகை பூக்கவைத்தவர்கள் அடுத்த இரண்டு பீரியடுகளை கேன்டீன், தியேட்டர், ராமமூர்த்தி தோசைக் கடை என வெற்றியைக் கொண்டாட, தோற்றவர்கள் கிரவுண்டில் மறுநாளுக்கான வியூகம் வகுப்பார்கள்.

இத்தனை சரித்திரப் பிரசித்தி பெற்ற ஷாலினி மெயின் பில்டிங் வராண்டாவில் வைத்து, என்னிடம் தமிழ் நோட்ஸ் கேட்டாள். மேத்ஸ், எகனாமிக்ஸ் பிரிவுகளுக்குத் தமிழ் வகுப்புகள் ஒன்றாக நடக்கும் என்பதால், என் கையெழுத்து நன்றாக இருக்கும் என்பதால், எந்த பீரியடையும் கட் செய்யும் துணி வில்லாத அம்மாஞ்சியான என்னிடம் அனைத்து நாள் பாடங்களும் இருக்கும் என்பதால்… தால், தால், தால் எனப் பல ‘தால்’கள் அதன் பின்னணியாக இருந்தன. ஆனால், அந்தத் தீப்பொறிச் சம்பவம் எங்களுக்குள் காதல் வேள்வி வளர்த்து, நாங்கள் மாட்டுத்தாவணியில் பஸ் ஏறி ஊரைவிட்டு ஓடி, எங்கள் கிராமத்துக் கீற்றுக் குடிசை அசௌகரியங்களை ஷாலினி சந்தோஷமாக ஏற்றுக்கொண்டு, குடும்பம் நடத்தி, கதறக் கதற என்னை சுமோவில் தூக்கிச் சென்று மாறு கால் – மாறு கை வாங்கி, ஏதோ ஒரு மக்கு மாமனுடன் ஷாலினி புல்லட்டில் அமர்ந்து சோகமே வடிவாகப் பயணிக்க… தமிழ் நோட்ஸை எங்கே வைத்தேன் என்று நான் யோசிப்பதற்குள் மேற்சொன்ன அத்தனை சம்ப வங்களும் எனக்குள் ஒரு காட்டு காட்டிவிட்டது. உள் ளங்கால் வியர்த்து, இதயத் துடிப்பு அதிகரித்து, நாக்கு குழறி… ஷாலினிக்கு ஒரு வார்த்தை பதில்கூட அளிக்க முடியவில்லை. விசித்திர ஜந்து ஒன்றைப் பார்ப்பது போல என்னைப் பார்த்துவிட்டுக் கடந்து சென்றுவிட் டாள். அன்று இதைக் கவனித்து என் தமிழ் நோட்ஸ் கவர்ந்து ஷாலினியிடம் டோக்கன் போட்டவன்தான் ப்ரேம். தெளிவாக, முதல் மூன்று பீரியடுகளைத் தவிர்த்து, போட்டியாளர்கள் இல்லாத கடைசி இரண்டு பீரியடுகளில் ஷாலினியைச் சாதித்து விட்டான்.

அன்று ப்ரேம் காலரியில் வைத்து தம்மடித்துக் கொண்டே கண்களில் வெறியுடன் பேசிக்கொண்டு இருந்தான். ‘எப்படில்லாம் என்னை அலையவெச்சா. சிக்கிட்டால்ல, இனி இங்கிலீஷ் கிஸ்தான்!’ இன்று கோயிலில் ஷாலினியை அத்தனைப் பாந்தமாகப் பார்க்கும்போது ஏனோ எனக்குப் பயமாக இருந்தது!

உச்சி வெயில். தல்லாகுளம். குழந்தைகளுக்கான ஈகோ பூங்கா. எதிர்காலத்தில் குழந்தைகளை உருவாக்கும் நம்பிக்கையுடன் புதர் மறைவுகளில் இடம்பிடித் திருந்தார்கள் காதலர்கள். இந்த மதுரையில் காதலர் களுக்கெனப் பிரத்யேக இடங்கள் இல்லாததால், எங் கெங்கு காணினும் நீக்கமற நிறைந்து இந்த துரதிர்ஷ்டசாலியின் வாழ்வைத் துன்பத் துயரக் கடலின் அடியாழத்துக்கு இழுத்துச் சென்றார்கள். சிங்கிள் ஜோடியாக வந்திருந்தவர்கள் ஒதுங்கி யாகம் வளர்க்க, மூன்று பெண் – இரண்டு ஆண், ஐந்து ஆண் – இரண்டு பெண் வகையறாக்கள் ஊஞ்சல், சறுக்கு, டிரெயின் முதலிய சங்கதிகளில் கடலையாடி நோட்டம் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். திறந்த தொந்திகளில் ‘யூஸ் மீ’ என்ற வாசகத்துடன் என்னை நக்கலாகப் பார்த்துச் சிரித்தன கரடிகள்.

வெறுத்து, தனிமை தேடிப் பக்கத்தில் இருந்த காந்தி மியூஸியத்தில் நுழைந்தபோது, ”ஏய்! நீ என்ன பண்ற இங்கே?” என்று ஒரு பெண் குரல் என்னை அதட்டியது. திடுக்கிட்டு நிமிர்ந்தால்… சசிகலா!

‘இப்பூவுலகைக் காப்போம்’ என்ற வாசகம் பொறித்த டி- ஷர்ட் அணிந்த இளைஞர்கள் கூட்டம் ஒன்று ‘பசுமை நண்பர்கள்’ என்ற பேனரின் கீழ் குழுமியிருந்தது. நெற்றி வியர்வைத் துளிகளும் சேறு படிந்த டி-ஷர்ட்டுமாக சசிகலாவைச் சுற்றி ஒரு மின் சாரம். ”இல்லைங்க… சும்மாதாங்க. நீங்க இருப்பீங் கன்னு தெரியாது. இதோ கிளம்பிர்றேன்!” என்று நான் உளறிக்கொட்டியதற்குக் கலகலவெனச் சிரித் தாள். அன்றொரு நாள்…

சசிகலா எங்கள் கல்லூரியின் சகலகலாவல்லி. கல்லூரி பிட்ச் மார்க்கரில் இருந்து பிரின்சிபால் வரை எவரிடமும் எந்த நேரமும் துணிச்சலுடனும் உரிமையுடனும் பேசக்கூடியவள். அகில இந்திய ஜூனியர் ஹாக்கிப் போட்டிகளுக்கு கல்லூரியைக் களமாக்குவது முதல், ஸ்ரீமன் நாராயணன் புரொஃப சர் மேல் காதல்கொண்ட சரண்யாவுக்கு கவுன்சலிங் கொடுத்து மனம் மாற்றுவது வரை எதற்கும் தயார் பார்ட்டி. எந்தவிதத்திலும் கவனம் கலைக்காத, கவனம் கவராத ஒப்பனை, அடர் மங்கிய நிறங்களி லேயே சுடிதார், ஓட்டை எம்.80. டபடப என்று அந்த வண்டியில் சசி கல்லூரிச் சாலையில் வரும்போது எதிர்ப்படும் எல்லோரும் அவளுக்கு வணக்கம் வைப்பார்கள். ஆண், பெண் என்ற பேதம் எல்லாம் கிடையாது. நியாயம் எந்தப் பக்கம் இருக்கிறதோ, அதுதான் சசி பக்கம். எல்லாருக்கும் அவள் தோழ னாக, தோஸ்தாக வலம் வந்ததால், அவளைக் காத லிக்கலாமே என்று யாருக்கும் தோன்றவே இல்லை போலும். ஆனால், எனக்குத் தோன்றியது! தோதாக ஜெயப்பிரகாஷ் எனக்குத் தூபம் போட்டுக்கொண்டே இருந்தான். ”அந்த மாதிரி ஆக்டிவ்வா இருக்குற புள்ளைகளுக்கு உன்னை மாதிரி கைக்கு அடக்கமான பசங்களைத்தான் புடிக்கும். அந்தத் துடுப்புக்கு ஏத்த எடுப்பு நீதான். யோசிக்காம உன் லவ்வச் சொல்லிரு!” என்று என்னைச் சுதியேற்றிக்கொண்டே இருந்தான். அன்றொரு நாள்…

ரத்தத்தில் ஒரு காதல் கடிதம் எழுதி, ஜெயப்பிரகாஷிடமே கொடுத்துவிட்டேன். பயத்தில் ஜன்னி வருவது போல இருக்க, லைப்ரரியில் பதுங்கியிருந்த என்னைத் தேடி பியூன் வந்தான். ”உன்னை சசி கையோடு கூட் டிட்டு வரச் சொல்லுச்சு!” என்று என்னை நிஜமாகவே கையைப் பிடித்து இழுத்துச் சென்றான். கையில் ‘ரத்தச் சரித்திரம்’ படபடக்க, அலுவலகம் அருகே பதற்றமாக இருந்தாள் சசி.

”நிஜமாச் சொல்லு, இது உன் ரத்தமா?” மென்று விழுங்கிப் பொய் சொல்லத் தைரியம் இல்லாமல் ஆமோதித்தேன்.

”என்ன க்ரூப்?”

”ஏபி பாஸிட்டிவ்!”

‘என்கூட வா!” என்று என் கையைப் பிடித்து இழுத்துச் சென்றவள், அவள் எம்.80-ல் அமரவைத்து டபடப என்று கிளம்பினாள்.
பெரியாஸ்பத்திரியின் எமர்ஜென்சி வார்டில் இருந்து மணிக்கட்டைத் தேய்த்துக்கொண்டே வெளியே வந்தேன். ”உன்கிட்ட நிறைய ரத்தம் இருக் குன்னுதானே இப்படி விளையாடிட்டு இருக்க. அதான் இங்கே இழுத்துட்டு வந்தேன். பாவம் ஆறுமுகம்! பஸ்ல இருந்து கீழே விழுந்து தலையில நல்ல அடி. ரேர் குரூப் ப்ளட். நல்லவேளை நீ சிக்குன. பஸ் பிடிச்சுப் போய்க்கோ. ஏதோ ஸ்கேன் எடுக்க ணுமாம். போய்ட்டு வந்துர்றேன். தேங்க்ஸ்!” என்று கையில் ஐந்து ரூபாயைத் திணித்துவிட்டு ஓடினாள்.

அன்றில் இருந்து இதோ இந்த காந்தி மியூஸியப் பசுமை நிமிடம் வரை அந்த ரத்தச் சரித்திரத்தைப்பற்றி ஒரு வார்த்தை கேட்டதில்லை சசி. சிறிது நேரம் அந்த பசுமைக் குழுவின் பிரசங்கக் கோஷங்களைக் கேட்டு விட்டு, காந்தி மியூஸிய ஒதுக்குப்புற புல்வெளி புகலிடம் தேடினேன்.

பெரியார் பஸ் ஸ்டாண்டுக்கு வந்து இறங்கியபோது மசமசவென இருட்டத் தொடங்கிவிட்டது. கோவிந் தன் பெட்டிக் கடையில் நின்று தம்மைப் போட்டுக் கொண்டு இருந்த ஹரி, என்னைப் பார்த்ததும் முகம் மலர்ந்து விரைந்து வந்தான். ”என்னடா இந்தப் பக்கம்… சரி சரி, வா! காலேஜ் ஹாஸ்டலுக்குத்தானே போற. நானும் வர்றேன்!” என்று என்னை எதிர்பார்க் காமல் இழுத்துக்கொண்டு சென்றான்.

மதுரை கல்லூரியில் இருந்து பெரியார் பஸ் ஸ்டாண்டுக்கு ஒரு ஸ்டாப். இடையில் ஒரு பாலம். அந்தப் பாலத்தின் இருட்டு நிரம்பிய அடிமடி வழி யாகவும் பேருந்து நிலையத்தைப் பத்து நிமிட நடை யில் தொடலாம். ஃபிகர் மடிக்க வக்கில்லாத தைரிய சாலிகள் நகரப் பேருந்துகளில் வித்தவுட்டாகத் தொற்றி, அந்த ஒரு ஸ்டாப்பைக் கடந்துவிடுவார்கள். திறமையாகக் கிளி கொய்தவர்கள் தங்கள் இளவரசிகளுடன் பாலத்தின் அடியில் தேம்ஸ் நதிக்கரையில் நடப்பதைப்போலப் பெருமிதமாக நடந்து செல்வார்கள். அந்தப் பாதையில்தான் இப்போது ஹரி என்னை நடத்திக்கொண்டு சென்றான். எதற்கோ அலைபாய்ந்துகொண்டு இருந்த அவன் கண்களில் திடீர் மெர்க்குரி. நிமிர்ந்து நோக்கினால் பாலத்தின் அகலத் தூணின் பின் மறைந்துகொண்டு இருந்த சரண்யா முகத்திலும் அதே மெர்க்குரி. ”மாப்ள! நாங்க கொஞ்சம் பெர்சன லாப் பேசிட்டு இருக்கோம். யாராவது வந்தா சிக்னல் கொடு!” என்று பத்தடி முன்னரே எனக்கு நங்கூரம் அடித்துவிட்டு, முன்னேறினான் ஹரி. ‘தேங்க்ஸ்’ என்பது போல எனக்கொரு சிரிப்பைச் சிந்தினாள் சரண்யா. அன்றொரு நாள்…

டெனிகாய்ட், ஷட்டில் போட்டிகளில்

பி.காம்., சரண்யாதான் கல்லூரி சாம்பியன். மாநிறம் என்றாலும், களையான முகம். நெகுநெகு உயரம், துறுதுறு இயல்பு. ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வேலை வாங்கிவிட வேண்டும் என்று துடித்துக்கொண்டு இருப்பவள். ஞாயிற்றுக்கிழமை கல்லூரி இன்ட்ரா டோர்னமென்ட் வாலிபால் சாம்பியன்ஷிப் ஃபைனல். சரண்யாவின் அணிதான் ஜெயிக்கும் என்பது முன் கணிப்பு. சரண்யா புள்ளிகளைக் குவித்துக்கொண்டு இருந்தாள். வெற்றிக்குப் பாதி தூரம் தொட்டபோதுதான் அது நிகழ்ந்தது. உழைத்து உழைத்து ஓடாகத் தேய்ந்திருந்த சரண்யாவின் காலேஜ் டி- ஷர்ட்டில் வலது அக்குள் பகுதி ஒன்பது சென்ட்டிமீட்டருக்குக் குறை யாமல் சர்ரக்கெனக் கிழிந்தது. பந்தை அடிக்கக் கையை ஓங்கும்போதெல்லாம்…..

ஒரு சிலரைத் தவிர, கூட்டம் இல்லாததால் சரண்யா சகஜமாக விளையாடத் தொடங்கினாள். ஆனால், எப்படித்தான் றெக்கை முளைத்துத் தகவல் பறந்ததோ, ஒருவர், இருவர், ஐவராகப் பசங்களின் கூட்டம் அம்மத் தொடங்கியது. ‘வாவ்’, ‘சூப்பர்’, ‘கிளாஸிக் ஹிட்ல’ என்று சரண்யாவுக்கு மானாங்காணியாகப் பாராட்டுக்கள் குவிந்தன. ‘ச்சீ, என்ன மனுஷங்கடா!’ என்று எனக்குத் தோன்றினாலும், அந்த திடீர் குபீர் கும்பலை அதட்டும் தைரியம் எனக்கு வாய்க்கவில்லை. சுதாரித்த சரண்யா, தோளுக்கு மேல் கை உயர்த்தாமல் கட்டுப்படுத்தப்பட்ட எல்லைக்குள் ஆடத் தொடங்கி னாள். அவளது சுதந்திரம் அடக்கப்பட்ட தருணத்தைப் பயன்படுத்தி, எதிரணி குபுகுபுவென புள்ளிகளைக் குவித்து முன்னேறியது. சரண்யா வெளியேறினால் அடுத்த ஐந்தாவது நிமிடம் தோல்வி நிச்சயம். கண் ணுக்கெட்டிய வெற்றி கைநழுவிக்கொண்டு இருப்பதை சரண்யாவால் ஜீரணிக்க முடியாமல் விழியோரத்தில் ஈரம்.

எந்த சக்தி என்னை இயக்கியதோ தெரியவில்லை… விடுவிடுவென ஓடிச் சென்று ஹாஸ்டல் அறையில் புத்தம் புதுசாகவே இருந்த எனது கல்லூரி டி-ஷர்ட்டை எடுத்து வந்து சரண்யாவிடம் கொடுத்தேன். அதை அணிந்து விளையாடி வெற்றிப் புள்ளியை எட்டியதும் இன்றுபோலவே அன்றும், ‘தேங்க்ஸ்’ என்பதுபோல எனக்கொரு சிரிப்பைச் சிந்தினாள் சரண்யா. அந்த நன்றிக் கனிவு என்றாவது காதல் அருவியாகப் பிராவகமெடுக்கும் என்று உள்ளுக்குள் ஒரு நம்பிக்கை சுனை ஊறிக்கொண்டுதான் இருந்தது, இந்த சிக்னல் மேன் பதவி வரும்வரை!

தனிமையில் அமிழ்ந்து… வெறுப்பில் உமிழ்ந்து… கழிவிரக் கத்தில் கழிந்து… ‘பெயர் மாற்றம்போல கெசட்டில் பிறந்த நாளை மாற்றிக்கொள்ள முடியாதா?’ என்ற தீவிர யோசனை யுடன் கல்லூரிக்குத் திரும்பினேன். வாசல் பேருந்து நிறுத்தத் தில் காமாட்சி. ‘அன்றொரு நாள்’ என்று இவளுக்கெல்லாம் எந்த நினைவும் இல்லை. கிட்டத்தட்ட என்னைப்போலத்தான் இவளும். ரொம்பவே ஏழைக் குடும்பம். வீட்டிலேயே தறி ஓட்டி, ஜாக்கெட் தைத்துக் கொடுத்து தனது சம்பாத்தியத்தில் தானே படித்துக்கொண்டு இருக்கிறாள். எந்தச் சிறப்புக் கவனஈர்ப்புகளும் இல்லாததால் நான்கூட அவளைக் கண்டுகொள்ளமாட்டேன். இப்போதும் கண்டுகொள்ளாமல் கல்லூரிக்குள் நுழைந்துவிடலாம் என்று நடந்தவனை அழைத்தவள், பளீர் பச்சைக் கலரில் சுடிதார் அணிந்திருந்தாள்.

”என்னப்பா, இன்னிக்கு முழுக்க ரூம்லயே இல்லைபோல. மூணு தடவை வந்துட்டுப் போனேன். எப்படியும் ராத்திரிக்குள்ள வந்துடுவேன்னுதான் காத்துட்டு இருக்கேன்!” என்று என் முகத்தில் சிரிப்பு எதிர்பார்த்துச் சிரித்தாள். நான் அமைதியாக இருந்தேன்.

”இந்தாப்பா, இந்தியன் எகானமி புக்! நாளைக்கு இன்டர்ன்ல்ஸ்ல… நீ படிச்சிருக்க மாட்டியேன்னுதான் கொண்டுவந்தேன். நானும் படிக்கலை. ஆனா, பிரதீபா படிச்சுட்டாளாம். பக்கத்துல உக்கார வெச்சுக்கறேன்!” என்று மீண்டும் சிரித்தாள். இறுக்கமாகவே இருந்தேன்.

”ரிசர்வ் பேங்க் மறக்காமப் படி. நிச்சயம் அதுல இருந்து கேப்பாங்களாம்!” என்று மிச்சம் இருந்த உற்சாகத்துடன் சொல்லிவிட்டு நடந்து சென்றாள். இன்னும் அழுவாச்சி அழுவாச்சியாக வந்ததால், கால் போனபோக்கில் நடக்கத் தொடங்கினேன்.

பசி வயிற்றைக் கிள்ள, சுற்றுமுற்றும் பார்த்த போது, நாகர்கோவில் செல்லும் பேருந்து உடல் முழுக்க அழுக்குடன் கட்டபொம்மன் சிலை அருகே மெலிதாக உறுமிக்கொண்டு இருந்தது. இன்னும் சில நூறு கிலோமீட்டர் களுக்கான ஆயாசத்தை வெளிப்படுத்துவது போல இருந்தது அதன் முகப்பு. கையேந்தி பவனில் இட்லி சொல்லிவிட்டு, கையில் இருந்த இந்தியன் எகானமி புத்தகத்தைப் புரட்டினேன். ரிசர்வ் பேங்க் பக்கங்களில் ஒரு தாள் படபடத்தது.

‘மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்ப்பா. என்னை உனக்குப் பிடிச்சிருக்கா? – காமாட்சி’

தெரு விளக்கில் கைக்கடிகாரத்தைப் பார்த் தேன். பிப்ரவரி 14 நள்ளிரவு 11:59:55… 56… 57… 58… 59… 12:00:00. பீப் பீப்… பிப்ரவரி 15. பூமியெனும் பிரபஞ்சத்துக்குக் காதலர் தினம் முடிந்திருந்தது!

– பெப்ரவரி 2010

Print Friendly, PDF & Email

2 thoughts on “ஹேப்பி வேலன்டைன்ஸ் டே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *