வெள்ளைப்புறா ஒன்று……!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: April 23, 2013
பார்வையிட்டோர்: 17,629 
 

மனசு குதூகலித்தது!

‘யுரேக்கா’ எனக் கூவியபடி அது நிர்வாணமாகக் குதித்தோடியது.
இளங்காலையில் மொட்டவிழ்ந்த ரோஜா முகம் – அதிலிருந்து திருட்டுத் தனமாக என்னையே ஆலிங்கனம் செய்யத் துருதுருக்கும் இரண்டு கண்கள் என்ற பொன்வண்டுகள் – பொன்னை உருக்கி உச்சந்தலையில் வழிந்தோட வார்த்தாற் போன்று, பாளம் பாளமாகப் பளபளக்கும் கழுத்தளவோடிய காந்தக் கூந்தல் – இவையாவும் சேர்ந்து என் நிஷ்டையைக் குழப்பிவிட்டன.

‘வாழ்நாள் பூராவும் அந்த அழகு தேவதையின் கடைக்கண் கடாட்ஷத்திற்காக, அவளது காலடியில் ஆயுட் கைதியாகவே கட்டுண்டு கிடக்கலாம்’

மனசு அங்கலாய்க்கிறது!

அந்த வெள்ளைக்காரப் பெண்புறாவின் தாபம் ததும்பும் கண்ணெறிகையை எதேச்சையாகக் கண்டுகொண்ட கணம் முதலாக என் இதயம் பீரங்கியாய், அவளுக்காக அடையாள அணிவகுப்பு மரியாதை வேட்டுக்களைத் தொடர்ந்தும் தீர்த்துக்கொண்டே இருக்கிறது.

‘சீ.. சீ மனசே, நீ திருந்தவே மாட்டாயா?’

மனசின் கீழ் மாடியிலிருந்து யாரோ குறுகுறுப்பது போன்று ஓர் அசூசை.

நான் கனடாவில் கரையிறங்கி, ரொறோன்ரோவில் நிரந்தரமாக நங்கூரமிட்டு மூன்று மாதமாகவில்லை. இந்த ‘ஈட்டன்ஸ் ஷொப்பிங் கொம்ப்ளெக்சுக்கு’ இன்று இரண்டாவது தடவையாக வந்திருக்கின்றேன்.

முதன் முறை என்னை இங்கு கூட்டி வந்து, மாரிகால அட்டைகள் போல சதா மேலும் கீழுமாக ஊர்ந்துகொண்டிருக்கும் தானியங்கி மாடிப்படிகளில் என்னை ஏற்றி இறக்கி, ‘கடை காட்டிப்போன’ என் நண்பன் இன்று வரவில்லை.

உலகிலுள்ள அனைத்து ஆடம்பரப் பொருட்களும் இந்த ஈட்டன்ஸினுள் அடக்கம் எனலாம். அந்தளவு பிரமாண்டமானது!
கனடிய அரசாங்கம் மாதாந்தம் அளந்து தரும் ‘வெல்ஃபெயர்’ பணத்தில் ஒட்டுண்ணிச் சீவியம் நடத்தும் இந்த நாட்களில் நான் ஈட்டன்ஸில் ‘ஷொப்பிங்’ செய்ய நினைத்ததற்கும், ஏழைச் சோமாலிப் பையன் ஒருவன் ‘சொக்ளேட்’ வாங்கிச் சாப்பிட ஆசைப்பட்டதற்கும் அவ்வளவு பெரிய வித்தியாசம் இல்லை!
ஏதோ தரங்கூடியதுகளுக்குள் விலை குறைந்தது ஏதாவது தட்டுப்படாதா என்ற ஆசையில், துணிமணிகளுக்கு நடுவே சுழியோடிக்கொண்டிருந்த என்னை நோக்கி…. மறுபடியும்…. மறுபடியும்…. அதோ, பெண்கள் பகுதியில் நிரை நிரையாகத் தொங்கிக்கொண்டிருக்கும் ஆடைகளினாலான வேலி இடுக்குகளின் ஊடாக அவள்………..

விழிகளால் என்னை விசாரித்தபடி!

சொல்லுக்குள் அகப்படாத இன்பக் கிளுகிளுப்புடன், நெஞ்சுக்குள் இலேசான படபடப்பு! ஒரே நேரத்தில் என் காதுக்குள் ஓராயிரம் உய்யலாக்கள்!

அருகாக சுவரில் பொருத்தப்பட்டுள்ள ஆளுயர நிலைக் கண்ணாடியில் தெரியும் என் மாயவிம்பம் ஆய்வுக்குட்படுகிறது.
அகதிகளுக்கே உரிய, அவநம்பிக்கை தோய்ந்த பயப்பிராந்தியையும் மீறி என் முகத்தில் ‘அறிவு ஜீவித்தனம்’ ஏதாவது பளிச்சிடுகின்றதோ? வாளிப்பான என் உடலின் வாலிப முத்திரைகளில் தன்னைப் பறி கொடுத்திருப்பாளோ? ஏன், பூர்வ ஜென்ம பந்தம் கூடக் காரணமாயிருக்கலாம் தானே?
விருப்பம் துளிர்ப்பதற்கான காரணங்கள் வேடிக்கையானவை! சில வேளைகளில் விநோதமானவையும் கூட!

‘முட்டாள்!…….. கண்டதும் காதல் கனடாவிலும் சாத்தியம் என்ற நினைப்போ, உனக்கு? ‘

மனசுக்கடியிலிருந்து வரும் எச்சரிக்கையா? அல்லது நையாண்டியா?

என் மனவீட்டுக்குள்ளேயே எனக்கு எதிரி வேறு!
நீலவான் ஆடைக்குள் முகம் புதைத்து நின்று, நிலவென்று அழகுகாட்டும் அவளது சுடர் விழிகளின் யாசிப்புக்கு வேறு என்னதான் அர்த்தமோ?

உடுப்புத் தேடும் பாவனையில் இப்போது என் கால்கள் அவளைத் தேடுகின்றன. நான் கிட்ட நெருங்குவதை உணர்ந்து கொண்டதாலோ என்னவோ, அவள் எட்ட எட்ட ஓடி, ஆடைகளின் வரிசைகளுக்குள் ஒளிந்துகொண்டு அடம் பிடிக்கின்றாள்.

‘இந்த நாட்டிலை, ஓராளை இன்னொராளுக்குப் பிடிச்சுக் கொண்டால் நேரடியாகப் பேசி, ஒரு ‘டேட்டிங்’ ஒழுங்கு செய்து, ஒரு ‘பார்’ அல்லது ஒரு ‘கிளப்’புக்குப் போய், தண்ணியில் சற்றே ஆளையாள் குளிப்பாட்டி, பின் ஆடிப்பாடி, வேண்டின மாதிரி அனுபவிச்சுப் போட்டு, அடுத்த நாளே விட்டிடலாம் – விருப்பமெண்டால் தொடரலாம். ஊரிலை வருசக் கணக்காக வேர்க்க விறுவிறுக்க சையிக்கிள் சீட்டிலை உழுந்தரைச்சு, அலைஞ்சு திரிஞ்சு சரக்குச் சுழட்டின மாதிரி இங்கை செய்யத் தேவையில்லையடாப்பா’

நான் இங்கு வந்து சேர்ந்த புதிதில் அனுபவசாலியான என் நண்பன் முன்கூட்டியே என் காதில் போட்டுவைத்த புத்திமதி.
இத்தனைக்கும் மாறாக இவளிடத்தில் மட்டும் எப்படி எங்கள் தமிழ்த்தனம் புகுந்துகொண்டதோ? இங்குமா காவியப் பாங்கில் கண்ணோடு கண்ணோக்கல்? இப்போதுமா? இவளிடத்திலுமா?
வந்த நோக்கம் திசைமாறி, நான் இப்போது அவளைத் தேடுகிறேனா? பெட்டிப் பாம்பாக அடங்கி ஒடுங்கியிருந்த ஓமோன்களைச் சீண்டி வேடிக்கை காட்டுகிறாளா, இந்தச் சிங்காரி?

மழைக்கால மின்னலாய்த் தோன்றி மறைந்தும், மறைந்து தோன்றியும் என்னை அலைக்கழித்துக் கண்ணாமூச்சி விளையாடுகிறாள்.

ரொம்பவும் பிடிவாதக்காரியாக இருப்பாளோ?

பிடிவாதக்காரிகளைத் தான் எனக்கும் வெகுவாகப் பிடிக்குமே!

‘ஒன்று மட்டும் நிச்சயம். ஏதோ ஒரு விதத்தில் நான் இவளுக்கு மிகவும் தேவைப்பட்டவனாகிவிட்டேன். நான் இங்கிருந்து வெளியேறும் போது இவள் என்னைப் பின்தொடர்ந்து வருகிறாளா பார்ப்போமே’. மனசு தனக்குள் மெதுவாகச் சொல்லியது.

‘காஷ்; கவுண்டர்’ அருகே ‘பெர்ஃபியூம்’ பகுதியில் ‘சாம்பிள்’ ஆக வைக்கப்பட்டிருந்த புட்டியை எடுத்து எனது ஜக்கெட்டுக்கு விசிறியடித்தேன். ரம்யமான ‘கல்வின் கிளெய்ன் – ஒப்ஸெஷன்’ வாசனை மயக்கத்தில் மீண்டும் அவளைத் தேடிக் கண்கள் சுழல்கின்றன.

அவள் என்னை ஏமாற்றவில்லை. அதோ, சுழல் தாங்கிகளில் தொங்கும் ‘ஸ்வெட்டர்’களுக்கு நடுவே நின்று என்மீது கடைக்கண்ணால் கணை தொடுக்கிறாள். ‘பெர்ஃபியூம்’ புட்டியைத் தூக்கிக் காட்டி, அவளுக்கு ‘ஸ்ப்றே’ பண்ணுவது போல, சின்னதாய் ஒரு சில்மிஷம்!

தோளில் தொங்கப்போட்டிருந்த ‘ஹாண்ட் பாக்’கினால் தன் முகத்தை மூடியபடி நாணத்தால் முறுவலித்துப் பின் மீண்டும் மறைந்துகொள்கிறள்!

நான் புறப்படத் தயாரானேன்.

நான் எனக்கெனத் தெரிவு செய்த ஒரேயொரு ‘ரீஷேட்’டைக் கவுண்டரில் கொடுத்துப் பணம் செலுத்துகின்றேன்.

மனசு என்னவோ இன்னமும் அவளைத் தேடி அலைகிறது!

‘ஈட்டன்ஸ் பாக்’ ஒன்றினுள் ரீஷேட்டையும் ‘றிஸீட்’டையும் போட்டு மிச்சச் சில்லறைகளை என் கையில் திணிக்கும் போது, ‘ஈட்டன்ஸில் ஷொப்பிங் செய்தமைக்கு நன்றி;’ என்று ‘காஷியர்’ சிட்டு உதிர்த்த வார்த்தைகள் கூட இலேசாகத்தான் காதில் விழுகிறது. ஆர்வமற்ற நன்றிச் சிரிப்புடன் வாசலை நோக்கி அடியெடுத்து வைக்கின்றேன்.

என்ன அதிசயம் இது!

என்னைச் சுற்றிச் சுழன்ற அந்தச் சுந்தரி, எங்கிருந்தோ பறந்து வந்து என் கையைப் பற்றிக்கொண்டாள்.

இதயம் ஒரு கணம் தரித்துத் துடித்தது!

ஆவெனத் திறந்தவாறு அணிந்திருந்த என் ‘ஜாக்கட்’ சற்று பொருமியிருக்கத் தக்கவாறு, உள் பையினுள் சொருகி வைத்திருந்த ‘வின்ரர் க்ளவுஸ்’ சோடியை அவள் வெளியே எடுக்கும்படி கட்டளையிட்டாள்.

கட்டளைக்கு அடிபணியும் இயந்திரமாய், எடுத்து நீட்டுகின்றேன். அவற்றை மேலும் கீழுமாகப் புரட்டிப் பார்க்கிறாள்.

‘என்ன செய்கிறாய் நீ?’

இறுகி உறைந்து போன என் முகத்தைப் பார்த்தே, என் கேள்வியை அவள் ஊகித்திருக்க வேண்டும்.

தனது ‘ஹாண்ட்பாக்’கிலிருந்து அட்டை ஒன்றை எடுத்து என் முகத்துக்கு நேராகப் பிடித்தாள்.

அவளது அழகான படத்துக்கு அருகாகப் பெயரும் பதவியும் பொறிக்கப்பட்ட அடையாள அட்டை, அது.

‘ஈட்டன்ஸ் களவு தடுப்பு அதிகாரி’

எலும்பை உறைய வைக்கும் இந்த ‘வின்ரர்’ குளிரிலும் எனக்கு வியர்த்துக் கொட்டியது.

மூன்று மாதமாக நான் பாவித்து, புதுமெருகை இழந்துபோன குளிர்க் கையுறையான எனது ‘க்ளவுஸை’ப் பார்த்தவுடனேயே அவளுக்கு உண்மை தெளிவாகிவிட்டது.

ஆனாலும் ‘நான் உனக்காக வருந்துகின்றேன்’ என்று சிறு மன்னிப்புக் கோரல்கூடக் கிடையாது.

எனது பழைய ‘க்ளவுஸை’ என் கைகளுக்குள் திணித்துவிட்டு, தொடர்ந்தும் இன்னொரு நிறத்தோலைத் தேடி வலைவிரிப்பதற்குப் போலும், உள்ளே நடக்கத் தொடங்கியது, அந்த வெள்ளைப் புறா!

என் மனசின் கீழ்மாடியிலிருந்து யாரோ ஈனமாய் அழுதபடி……!

கூடி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அத்தனைபேர் கண்களிலும் ஓர் அற்ப ஜந்துவாய்க் கூனிக் குறுகிச் சமைந்துபோய் நிற்கிறேன், நான்!

நன்றி:
நான்காவது பரிமாணம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *