விபரீதக் காதல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: December 27, 2022
பார்வையிட்டோர்: 7,582 
 
 

(1943ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அசோகனிடமிருந்து அந்த வரத்தைப் பெற்றதுமே அவளுடைய அயர் வெல்லாம் எங்கோ போய் விட்டது. அரசனுடைய வியாதிக்காலத்தில் அவருக்கு இடைவிடாமல், இராப்பகலின்றி பணி செய்ததால் அவன் உடம்பு மிகவும் துர்ப்பலமாகிவிட்டது. அந்த சுச்ரூஷையால் வியாதி நீங்கி உடல் நலம்பெற்ற அரசன் திஷ்யரக்ஷையை வேண்டியதைக் கேட்கச் சொன்னார். ‘நான் ஒரு வருஷம் ராஜ்யபாரம் செய்ய வேண்டும்!” என்று அவள் கேட்டாள். அரசன் உடனே சரி என்றான்.

அரசாட்சி அதிகாரம் கைக்கு வந்ததும் திஷ்யரக்ஷை முன்போல ஆகிவிட்டாள். அதற்குத்தானே அவன் அவ்வளவு பாடுபட்டது ? அது கிடைத்தவுடன் தான் தன் மனோரதத்தை எப்படியாவது நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று திடம் கொண்டிருந்தாள் அவள்.

அதற்கு முன் குணாளனுடைய உள்ளத்தைக் கவர என்ன வெல்லாமோ தான் செய்து பார்த்தாள். முடியவில்லை. ஆனால், அவள் தளரவில்லை. அவள் தன் உள்ளத்தை அவ்வளவு வேகத்துடன் குணாளனுக்குப் பறிகொடுத்துவிட்டது அவளுக்கே ஒரு சமயத்தில் திகைப்பாகவும், ஒரு சமயத்தில் ஏக்கமாகவும், ஆனால் சதா சர்வகாலமும் உயிர் ஊக்கமு மாகவும் இருந்தது.

அவள் தன் உள்ளத்தில் பொங்கிய அந்த விபரீதமான காதலுக்கு அணைபோட முயலவில்லை. தன்னுடைய கணவன் அசோகனுடைய மகன் குணாளன் என்ற நினைப்பே அவளுக்கு உதிக்கவில்லை. அவளுடைய உள்ளம், முதல் முதலாக அவள் வாழ்க்கையில் குணாளனைக் கண்டதும், கொண்ட விரிவை அதற்குமுன் அவன் அறியாததால், அறிந்து பரிசயம் பெறாததால், அவளை அடிமையாக்கி விட்டது. அந்த அபூர்வ உணர்ச்சிக்குத் திருப்தி அளிக்க எதை வேண்டு மானாலும் செய்யலாம் என்று ஓர் அசாதாரணமான துணிச்சலைக் கொண்டாள். அந்தப் பெண்ணுள்ளக் கிளர்ச்சிக்கு இடம் கொடுத்த பொழுது தான் ஒரு பெண் என்பதையே மறந்தாள். இல்லாவிட்டால் அப்படி மட்டற்ற முறையில் தன் கட்டழகை அவன் காலடியில் வீழ்த்திக் கெஞ்சுவாளா சாதாரணமாக? அவன் அதை உதைத்தெறிந்துவிட்டுப் போன பிறகும் அவன் மனதை மாற்ற முடியும் என்று பேராசை கொள்ளுவானா?

ஆதிமுதலே அவள் வாழ்க்கை ஒரு விபரீதம்; நாவிதப் பெண்ணாக எங்கோ இருந்தவன் அசோக சக்கரவர்த்தியின் மனைவியானாள். அரசன் மனைவியாக வேண்டும் என்ற விபரீத எண்ணம் அவளை ஆட்கொண்டு ஆட்டிய வேகத்தில், தன் சக்தி முழுமையும் பிரயோகம் செய்து அரசன் மனதைக் கவர்ந்து அவன் மனைவியானாள்.

அதன் பிறகு குணாளன், அவன் கண்ணில் பட்டான். அவனுடைய உருவம், முக்கியமாக அவனுடைய கண்களிலிருந்த ஏதோ ஓர் ஒளி, அவளை மறுபடியும் மற்றொரு விபரீதத்தில் ஆழ்த்திற்று. அதிலும் வெற்றிபெற்று விடுவோம் என்று அவன் இயற்கை முழுவேகத்துடன் மூண்டு எழுந்தது. ஆனால், குணாளனுடைய திடத்தின் முன் அதன் பலம் சாயவில்லை.

குணாளன் ஏன் தன்னைப் புறக்கணித்தான் என்று அவளுக்குத் தெரிய வில்லை. தான் அவனுக்குத் தாய் முறை என்றதால்தான் இருக்குமோ என்ற சந்தேகம் ஒரு கணம் கூட அவள் மனதில் பதியவில்லை. அந்தப் பெரும் தடங்கல் ஒன்று தனக்கும் அவனுக்கும் நடுவில் இருப்பதாகவே, அவளுக்குப் படவில்வை. குணாளன் ஓரிரண்டு தடவை அதை லேசாகச் சூசனை செய்து சொன்னபோதும் கூட அவள் அதைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை. அது பொய் என்பது அவன் உள்ளத்தின் துணிவு. அது நிஜமானால் தன் மனம் ஏன் அப்படி அந்த அத்துக்கு மீறி நின்றது என்று அவள் வாதாடி இருக்கவேண்டும் தனக்குள். தன் இயற்கையில்தான் அவளுக்கு நம்பிக்கை. அதைப்போலத்தான் புற இயற்கைகளும் இருக்க வேண்டும் என்று தீர்மானித்தான்.

பின் ஏன் குணாளன் அவளைப் புறக்கணித்தான்? தன் யௌவனமும் வனப்பும் அவனுக்கு ஒரு சோதனைதான் என்பதைப்பற்றி அவள் சந்தேகிக்கவில்லை. அவளுக்கு அந்தத் துணிவு இல்லாவிட்டால் ஏன் செய்யாத முயற்சிகள் எல்லாம் செய்கிறாள்? எல்லாத் தடங்கல் களையும் ஒரு சிறு குழி போலக் கருதித் தாண்டிக் கொண்டு அவன் தன்னிடம் வர வேண்டியவன் என்று எண்ணினாள்.

பின் ஏன் வரவில்லை? தன் பத்தினி காஞ்சனமாலையின் மெல்லிய அழகில் அவன் கட்டுண்டு கிடந்திருக்க முடியாது. சக்கைபோன்ற ஓர் ஒழுக்கத்தில் அவனுடைய யௌவனம் வெகுகாலம் குன்றிக் கிடக்க முடியாது நிச்சயம். காஞ்சனமாலை பௌத்த மதத்தைச் சேர்ந்தவன். குணாளனும் பௌத்த மதத்தில் மெய்மறந்து லயித்து விட்டான். தானும் அதில் சேர்ந்தால்?

அந்த எண்ணம் உதித்ததுமே திஷ்யரக்ஷை தானும் பௌத்த தர்மத்தைத் தழுவினாள். நிரந்தரமாகத் தன் பேரவாவைத் தீர்த்துக் கொள்ளச் சிறிது தன் அகங்காரத்தையே மறந்து பௌத்த மத சேவை செய்தாள் அவ்விதமாகவாவது அவன் பிரியத்தைச் சம்பாதிக்கலா மென்று. அதிலும் தன் முயற்சி பலன் பெறாமல் போனதால்தான், பெண் நாகம் போலச் சீறி எழுந்து பெருத்த சூழ்ச்சியில் இறங்கினாள் அவள்.

அரசாட்சி அதிகாரத்தை அரசனிடமிருந்து பெற்று குணாளனுக்கு மேல் உயர்ந்து நின்றுகொண்டு அவனைக் கூப்பிட்டாள்.

“நான் சர்வாதிகாரிணி, எல்லாம் உன்னுடையது, வா!” என்று அழைத்தாள். பெண்ணின் பேரெழில், பொங்கும் காதல், ராஜ்யபதவி- எல்லாம் ஒருங்கே திரண்டு வந்து காலைப் பிடித்துக் கொண்ட பொழுதும் அதைக் குணாளன் உதறித் தள்ளின பொழுதுகூட அவளுக்குப் புத்தி வரவில்லை. அவள் பிடிவாதம் போகவில்லை.

அவனுடைய ஒளிக் கண்களைக் கவராத தன் எழிலையும் காதலை யும் அப்பொழுது அவள் வெறுத்தாள். அவை உபயோகமில்லை என்று தூரத் தள்ளித் தன் அதிகாரத்தை மட்டும் கைக்கொண்டு தன் பிடிவாதத்தைச் செலுத்தலானாள்.

கண்களில் விரலைவிட்டு ஆட்டுவது, என்பார்கள் உலகத்தில். அவன் கண்கள் என் உயிரில் ஒளியிட்டு ஆட்டுகின்றன. அந்தக் கண் களில் நான் கவர்ந்து கொள்ளுகிறேன்!’ என்ற கொடிய தீர்மானத்துக்கு வந்தாள்.

அரசி என்ற முறையில் திஷ்யரக்ஷையின் உத்தரவுக்கு உட்பட்டு சேனாதிபதி பதவியேற்று, தக்ஷசீலத்தில் நடந்த கலகம் ஒன்றை அடக்கு வதற்காகக் குணாளன் அங்கே போயிருந்தான். பௌத்தர்களுக்கும், ஹிந்துக்களுக்கும் நேர்ந்த அந்தக் கலகத்தில் குணாளன் ஹிந்துக்களை ஒடுக்கி பௌத்த மதத்தை நிலை நிறுத்தினான்.

அப்போது ராஜதானியாகிய பாடலிபுரத்திலிருந்து திஷ்யரக்ஷையின் உத்தரவு ஒன்று வத்தது. அதன்படி குணாளன் சிறை செய்யப்பட்டான். சேனை பலமாக ஆட்சேபித்தும் அரசியின் உத்தரவிற்குக் குணாளன் கீழ்ப்படிந்துவிட்டான். உடனே மற்றோர் உத்தரவும் வந்தது. அதன்படி குணாளனின் கண்கள் பிடுங்கப்பட்டுவிட்டன. அதற்கும் அவன் மறுமொழி சொல்லாமல் சம்மதித்தான். இவைகளில் ஒன்றுமே அசோகனுக்குத் தெரியாது.

அன்று, எப்பொழுதும்போல இல்லாமல், நிஷ்யரக்ஷை விபரீதமாக அலங்காரம் செய்துகொண்டது தாதிகளுக்கும் ஆச்சரியமாக இருந்தது. காதலனை வரவேற்கப்போகும் காதலிபோல ஆவலுடன் திஷ்யரக்ஷை புன்முறுவல் கொண்டு அங்குமிங்கும் போய்க் கொண்டிருந்தாள்.

“அப்ப! இவ்வளவு பிரயாசையா ஒரு பெண் உள்ளத்தின் ஆசை தணிவதற்கு? ஒரு ராஜ்யமே இதற்காகச் சிதைந்துபோய் விட்டதே!…. பொங்கும் என் உள்ளம் இன்று தணியும்!” என்று திஷ்யரக்ஷை தனக்குள் சொல்லிக்கொண்டாள் மெதுவாக.

பெண் புலிபோல இவ்வளவு நாட்கள் அட்டகாசம் செய்தவள் அன்று மான்போலத் துள்ளி விளையாடினாள். தாதிகளுடன் கொஞ்சிக் குவாவினான். பெண் அடக்கத்துடனும் வெட்கத்துடனும் அடிக்கடி தன்னையே கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள்.

அப்பொழுது தக்ஷசீலத்திலிருந்து யாரோ வந்திருப்பதாக ஆள் வந்து சொன்னான். உள்ளத் துடிப்புடன் உடனே அவனை உள்ளே வரும்படி உத்தரவிட்டாள் திஷ்யரக்ஷை. திடீரென்று ஏதோ நினைத்துக்கொண்டு தாதிகளை எல்லாம் வெளியே போகச் சொன்னாள்.

ஆன் உள்ளே வந்து அரசிக்கு வணங்கிவிட்டு ஒரு சிறிய பெட்டகத்தை அவள் முன் வைத்தான்.

“சரி, நீ போகலாம்!” என்று அவனை வெளியே அனுப்பினாள்.

ஒரே பாய்ச்சலாய்ப் பாய்ந்து பெட்டியை எடுத்து ஆவலுடன் திறந்து அப்படியே மார்பில் அணைத்துக்கொண்டாள். அவன் அதுவரையில் அறியாத ஓர் இன்பம் அவனை நடுநடுங்கச் செய்தது. மூடிய கண் களுடன் சிறிய நேரம் மெய்ம் மறந்து நின்றாள்.

பிறகு மார்பிலிருந்து பெட்டியை எடுத்துக் கண்களில் ஒத்திக்கொள்ளத் தூக்கினாள். ஒரு நிமிஷம் உள்ளே பார்த்தாள். உள்ளே, நீலம் பாய்ந்து ரத்தம் தோய்ந்த இரு விழிகள் இருந்தன. வேறொன்றும் காணோம்!

அவன் உயிரில் ஊடுருவிப் பாய்த்து அவள் தேகத்தை ஆட்டிவைத்த ஒளி அவற்றில் காணோம்! வெறும் மாமிசத் துண்டுகள் இரண்டு குப்பென்று நாற்றம் வீசின அவளது முகத்தில், அலறிக்கொண்டு கீழே விழுந்தாள் திஷ்யரக்ஷை. கண் விழிகள் இரண்டும் கீழே விழுந்து நீராயின!

“என்னை வாட்டிய ஒளி எங்கே?” என்று பிதற்றிய அரசியைத் தாதிகள் தூக்கி அசுவாஸப்படுத்த முயன்றார்கள்.

– 1943

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *