சேது என் பைக்கின் பின்னால் உட்கார்ந்திருந்தான். அவன் என் கூட வருவது எனக்குப் பிடிக்கவில்லை. நான் அவனை அழைத்து வரவில்லை. வரும் வழியில் பஸ்-ஸ்டாப்பில் நின்று ஏறிக் கொள்கிறான். தினமும் எனக்குத் தொல்லையாயிருந்தது. யோசித்துக் கொண்டிருந்தேன். ஒரே பேச்சில் முறிக்க நினைத்தேன்.
பஸ் வந்தவுடனே ஏறிப் போக வேண்டிதானே… …என்றேன்
நீதான் வர்றியே… எதுக்கு பஸ்…என்றான். அவனுக்கு வெட்கமில்லை. இப்படி நான் கேட்டபிறகும் வருகிறானே…? மானங்கெட்டவன்…. மனது திட்டியது.
இவனை ஏற்றிக் கொள்ளாமல் செல்ல என்ன வழி என்று யோசித்தேன். என் வீட்டிலிருந்து கிளம்பி நேர் சாலையில் வந்து, வலது பக்கம் திரும்பியவுடன் பஸ்-ஸ்டாப். அங்குதான் அவன் நிற்பான். திரும்பாமல் நேரே எதிர்த் திசையில் கடந்து அடுத்த வலதில் ஒரு நாள் திரும்பினேன். சற்று தூரம் வந்த போது அங்கு நின்று கொண்டிருந்தான்.
திரும்ப மறந்திட்டியா? என்றான்.
தெரியாத மாதிரி நடிக்கிறான் என்று புகைந்தது எனக்கு. கள்ளன் என்று மனசு கறுவியது.
உனக்கு ரோஷமேயில்லையா? என்றேன்.
எதுக்கு ரோஷம்? என்றான் பதிலுக்கு.
உன்னைத் தவிர்க்கத்தான் நான் இப்டி வந்தேன், தெரியுமா? என்றேன்.
எதுக்குத் தவிர்க்கணும்? நான்பாட்டுக்குப் பின்னாடி உட்காரப் போறேன்…எடம் வந்தவுடனே இறங்கிப் போயிடப்போறேன்….வண்டிதானே கொண்டு விடறது…” என்றான்.
நான் ஓட்டலைன்னா அது எப்படிக் கொண்டு விடும்….உளறாதே…வண்டி கொண்டுவரல்லைன்னா? -எது சாக்கிட்டாயினும் அவனைத் திட்டத் தோன்றியது. பேசாமலிருந்தான். எனக்குள் சந்தோஷம். அவனை இன்னும் கடுப்பேற்ற நினைத்தேன்.
எனக்கு உன்னை ஏத்திக்கிறது பிடிக்கலை…என்றேன்
நீ எங்கே ஏத்திக்கிறே…? வண்டிதானே ஏத்திக்கிறது?-
கிண்டலா? வண்டி, நான் நிறுத்தினாத்தானே ஏத்திக்கும்?
எடம் வர்றபோதுதான் நான் கையைக் காட்டுவனே…. என்றான்.
நீ என்ன போலீஸா? கையைக் காட்டியதும் நான் நிற்க?
நான் உன் ஃப்ரன்ட்டு….அதனால நிப்பே…..-சொல்லிவிட்டுச் சிரித்தான்.
என்ன இப்படிப் பேசுகிறான் என்று எரிச்சலாயிருந்தது எனக்கு.
எப்படிச் சொன்னால் கோபம் வரும் என்று மேலும் யோசித்தேன்..
வேறு எந்த வழியில் திட்டுவது? உரைக்கிற மாதிரி இருக்க வேண்டும். இன்றோடு விட்டொழிக்க வேண்டும். மனசு படபடத்தது.
இனிமே என் பின்னாடி வராதே… என்று சொல்லு…! மனசு சொல்லியது. வெளிப்படையாகச் சொல்லாமல் புரிய வைக்க வேண்டும். அதற்கு என்ன வழி? மனசைக் கேட்டேன்.
அவனை உட்கார்த்தி வைத்து மேட்டிலும் பள்ளத்திலும் டம் டம் என்று ஏற்றி இறக்கு…சட்டுப் புட்டென்று இஷ்டத்துக்கு வளை…வேகமாய்ப் போய் திடீரென்று பிரேக்கடி….தடுமாறுவான். அல்லது கீழே விழுவான். விழட்டும். உனக்கென்ன? கண்டுக்காத மாதிரிப் பறந்திடு. பிறகு வரப் பிடிக்காமல் நின்று விடுவான் என்றது. அப்படியே ஒரு நாள் செய்தேன்.
என்ன இப்படிப் பேயா ஓட்டுறே…? மெதுவாப் போ….என்றான். கையை என் தோளின் மேல் வைத்துக் கொண்டான். பட்டென்று தட்டி விட்டேன். அந்த அடி கூட உரைக்கவில்லை. சுரணையத்தவன்.
தோளைத் தொட்டால் பாலன்ஸ் கிடைத்து விடுமா? முட்டாள்….
அது அப்படியில்லை என்றது மனசு.
பின்னே?
உன்னையும் சேர்த்துக் கீழே தள்ளிக் கொண்டு விழத்தான் ஐடியா…!
செய்தாலும் செய்வான்….கடன்காரப்பய…
மறுநாள், வண்டில உனக்கு சரியா உட்காரத் தெரிலயே? உன்னை பின்னாடி உட்கார்த்தி வச்சு ஓட்டுறது எனக்குப் பெரிய கஷ்டமாயிருக்கு…! என்றேன் எரிச்சலுடன்.
சரியாத்தான் உட்கார்ந்திருக்கேன்….நீ பார்த்து ஓட்டு…என்றான். அவனைக் கொண்டு விடுவது என் கடமை என்று நினைப்பானோ…?
வர்றது ஓசி. இதில பேச்சைப் பாரு…-என் முகம் கடுவன் பூனை போல் ஆனது. மூச்சு சூடானது. கண்கள் சிவந்தது.
ஓட்டுற எனக்குத் தெரியாதா? நீ எப்டி உட்கார்ந்திருக்கேங்கிறது வண்டி மூவ்மென்ட்ல காண்பிச்சுக் கொடுத்திடும்…உனக்கு என்னமாச்சும் வண்டியப்பத்தித் தெரியுமா? சரியா உள்ளே தள்ளி உட்காரு… இல்லன்னா கீழே தள்ளிட்டுப் போயிடுவேன்… என்றேன்.
சரி, சரி… கோவிக்காதே….என்று சீட்டுக்குள் நன்றாய் நகர்ந்து பதியப் பதிய உட்கார்ந்தான். பச்சென்று சம்மணமிட்டதுபோல். உரல் போல் உட்கார்ந்து விட்டான். பின் டயரில் காற்று இறங்கியதுபோலிருந்தது.
வேண்டுமென்றே வண்டியைச் சுற்றுப் பாதையில் விட்டேன்.
எதுக்கு இப்படிப் போறே?
வழக்கமான பாதை பயங்கர டிராஃபிக்…எனக்கு பயமாயிருக்கு….எங்கயாச்சும் மோதிட்டேன்னா… யாரு பதில் சொல்றது?
அதெல்லாம் மோத மாட்டே….நீ நல்லாத்தான் ஓட்டுறே…என்றான்.
ஐஸ் வைக்கிறானோ….என்ன பேசியாவது கூட வந்து தொலைக்க வேண்டும். மான ரோஷம் கிடையாது. சரியான கழுத்தறுப்பு.
இப்டிச் சுத்திப் போனா பெட்ரோல் வேஸ்ட்…. என்றான்.
யாராச்சும் டபிள்ஸ் உட்கார்ந்தாலும் பெட்ரோல் வேஸ்ட்தான்….. டயர் தேயுதே…அது பரவால்லியா…? என்றேன். காதில் விழுந்த மாதிரிக் காட்டிக் கொள்ளவில்லை.
சுத்துப் பாதைக்கு இது பரவால்ல….என்றான் பிறகு.
என்ன சொன்னாலும் இவனுக்கு உரைக்காதா? புரியாதா? என்று கருவினேன். சரியான விளக்கெண்ணையா இருப்பான் போலிருக்கு. எருமை மாட்டு மேல மழை பேய்ஞ்ச மாதிரித்தான்.
நீ சொன்னதெல்லாம் பத்தாது என்றது மனசு.
இன்னும் எப்படித்தான் சொல்றதாம்?
நான் என்ன உனக்கு மாமனா, மச்சானா? பகுமானமா பின்னாடி வந்து உட்கார்ந்துக்கிறே? பஸ்ல போடான்னு வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டாச் சொல்லு… சுளீர்னு கேள் என்றது.
கேட்டுவிட்டேன் மறுநாள். லேசாய் அதிர்ந்திருப்பானோ? அவன் சொன்னான்.
இத்தனை நாளா வந்திட்டிருக்கேன்ல….மச்சான்னுதான் வச்சிக்கயேன்….என்ன குறைஞ்சு போச்சு…
அவன் பதில் எனக்கு வேறு ஒன்றை ஞாபகப்படுத்தியது. அவனைத் தவிர்க்க முடியாமல் எது என்னைத் தடுக்கிறது?.
அது பிரமீளா… அவன் தங்கை. அங்கதான் இருக்கு உன் கொக்கி என்று மனசு சொல்லியது. அவளை வளைக்க என்ன வழி? ரொம்ப நாளாகவே மனசு அதில் படிந்து போயிருந்தது. இவன் சகோதரி என்று நினையாமலேயே அவளோடுடனான கற்பனையில் இருந்திருக்கிறேன். அவளோடு ஊர் சுற்றியிருக்கிறேன்.
இவ்வளவுதான்…நான் இங்க திரும்பிடப் போறேன்….இறங்கு…என்று அந்த இடத்தில் இறக்கி விட்டேன்.
தினமும் என் ஆபீஸ் வழியா வருவே…இன்னைக்கு இப்டி வந்திட்டே…பரவால்லே…நடந்து போய்க்கிறேன். ஒரு பர்லாங்தானே…என்றுவிட்டு நடக்க ஆரம்பித்து விட்டான். அவன் செல்வதைப் பார்க்க எனக்கு ஆறுதலாய் இருந்தது. நல்லா வேணும்…
போகட்டும்…அதென்ன தெனம் ஓசிச் சோத்துல ஒடம்பை வளர்க்கிறது? நடந்தாத்தான் தெரியும் கஷ்டம்…..
டேய் யோகி…..என்ன இந்தப் பக்கம் வர்றே? – ஆபீஸ் கிளம்பிய சேது வாசலுக்கு வந்ததும் என்னைப் பார்த்து விட்டான். வீட்டு வாசலில் வண்டியை நிறுத்தினேன். யோகநாதன் என்ற என் பெயரை யோகி, என்றுதான் கூப்பிடுவான். அது என்னவோ அப்படிக் கூப்பிடுவது பிடித்திருந்தது. அதனால் விட்டு விட்டேன். இல்லையென்றால் அதற்கும் ஒரு கடி கடித்திருப்பேன்.
புதுசா தார் ரோடு போட்டிருக்காங்க, நல்லாயிருக்கு… என்றேன்.
நீ வழக்கமா வர்ற ரோடு கூடத்தான் நல்லாயிருக்கும்….என்றான்.
இல்ல…அங்க கேபிள் போடத் …தோண்டிட்டு இருக்காங்க…. மழை வேறே பேய்ஞ்சிருக்கு…சத புதன்னு கிடக்கு….
அப்பச் சரி, தினமும் இப்டியே வந்திடு….வீட்டு வாசல்லயே ஏறிக்கிறேன்…நல்லதாப் போச்சு…..
நானென்ன நீ வச்ச ஆளா…? சமயம் வரட்டும்…வசமாப் போட்டுப் பார்க்கிறேன்…மனசு கறுவியது.
கொஞ்சம் தண்ணி கொண்டாயேன்….
என்னடா, காலைல தண்ணி தவிக்குதா?
ஆமா, தோசை சாப்பிட்டேன்…அதான்….
உள்ளே போனான். பிரமீளா தெரிகிறாளா பார்த்தேன். கொல்லைப் புறத்தில் வெளிச்சமாயிருந்தது. அவள் அங்கிருந்தாள். தற்செயலாய்த்தான் இங்கே பார்த்தாள். . சிரித்தாளோ? ஆஉறா, என்னைப் பார்த்துச் சிரிக்கிறாள். இங்கேயிருந்து கையைக் காண்பித்தேன். பதிலுக்குக் கையெடுத்தது போலிருந்தது. அண்ணா சேதுவைப் பார்த்துவிட்டு அப்படியே இறக்கி விட்டாள்.
மச்சான்னுதான் வச்சிக்கியேன்…. சேது சொன்னது நினைவுக்கு வந்தது.
இந்தா குடி…ஐஸ் வாட்டர்…ஒத்துக்குமில்ல…..?
ஐயையோ…ஆகாது….தொண்டை கட்டிடும்…வெந்நீர் இருந்தா கொண்டா…
என்னடா நீ… -இப்பப் போய் வெந்நீர் கேட்கிறே…? – சலித்துக் கொண்டே உள்ளே போனான். அம்மாட்டச் சொல்லிப் போடணுமே…! அதுக்குள்ளயும் இவன யாரு வரச்சொன்னா? முட்டாப்பய…வேணும்னேதான் வெந்நீர் கேட்டேன். சற்று நேரம் ஆகுமே?
அவளை மீண்டும் பார்க்கும் சாக்கில்தான் அப்படிச் சொன்னேன். வழக்கமாய் ஐஸ் வாட்டர் மட்டுமே சாப்பிடும் பழக்கம்தான். இப்போது எனக்கு நன்றாய்த் தெரிவது போல் நின்றாள் அவள். அப்படியே கட்டி அணைத்து முத்தம் கொடுக்க வேண்டும் போலிருந்தது. அப்பாடி…என்ன அழகு? பாவி…பொத்திப் பொத்தி வச்சிருக்காளே….! சரியான திமிசுக்கட்டை…
வண்டியை விட்டு இறங்கினேன். விடுவிடுவென்று உள்ளே பாய்ந்தேன். நேரே கொல்லைப்புறம் போய் அவளைப் பிடித்து இழுத்தேன். பொட்டுச் சத்தமில்லை அவளிடம். இடையை அப்படியே வளைத்து என் பக்கம் இழுத்து, இறுக்க அணைத்தேன். காற்றுக் கூடப் புக முடியாத இறுக்கம்.
நீண்ட கழுத்துப் பகுதியின் குளிர்ச்சியான சதைப்பிடிப்பில் மெல்லிய வியர்வைக் கோடுகளின் மேல் அப்படியே உதடுகளைப் பதித்தேன். அவள் நெளிய நெளிய அடக்க மாட்டாமல் வலது இடது என்று அழுந்த முத்தமிட்டுக்கொண்டேயிருந்தேன். அத்தனையையும் அனுபவித்து வாங்கிக் கொண்டாள். மனசுலதான் எம்புட்டு ஆசை? கள்ளி….இல்லன்னா இப்படி அட்ஜஸ்ட் பண்ணுவாளா?
உன் உடம்பென்ன இப்படி மணக்குது? சந்தனக்கட்டை மாதிரி…என்று அவள் இடையில் முகத்தைப் பதித்தேன். தெளிந்த நீரோடை….சரளமாய் இறங்கியது.
கூசுது….கூசுது…..வேண்டாம்…! அலறினாள். கத்தினாளே ஒழிய என்னை விடுவிக்க முயலவில்லை. என்னைச் சுற்றியிருந்த அவள் கைகள் பின்னிக் கொண்டு இறுக்கித்தான் இருந்தன..
டே…டேய்….என்ன அதுக்குள்ளேயும் அங்க போயி்ட்ட….இந்தா வெந்நீர் கேட்டியே……
இதோ வந்துட்டேன்…. என்று அவளை விடுவித்துக் கொண்டு, வாசல் வந்து சேது கையிலிருந்த தண்ணீர் டம்ளரை வாங்கினேன்.
யப்பா….என்னா சூடு…? ஏண்டா இப்டியா குடிக்கக் கொண்டு வருவாங்க… பதமாக் கொண்டு வரத் தெரியாதா? இந்தா பிடி…நீயுமாச்சு, உன் தண்ணியுமாச்சு…-சுய உணர்வு வரப்பெற்றவனாய் கையை உதறினேன். என்னாச்சு இவ்வளவு நேரம்? மனசை எதுவோ அலைக்கழித்தது. உடம்பு குப்பென்று வியர்த்திருந்தது.
ஏண்டா இப்டிப் பதட்டமா இருக்கே…? கேட்டுவிட்டு வெந்நீரோடு உள்ளே போய் விட்டான். கொல்லைப்புறத்திற்கு மீண்டும் பார்வை போனது. பிரமீளாவைக் காணவில்லை.
ச்சே…!! கொஞ்ச நேரத்தில் என்ன பாடு படுத்திவிட்டாள். இப்படியெல்லாமுமா பகல் கனவு லபிக்கும்.
வண்டி போய்க் கொண்டிருந்தது. பின்னால் சேது.
நெருக்கி உட்காராதே…எனக்குக் கூச்சமா இருக்கு…
சற்றுத் தள்ளிப் பின்னால் போனான்…வண்டி அலம்பியது.
என்னடா, உன்னோட பெரிய ரோதனையாப் போச்சு…கீழ விழுக்காட்டிருவ போலிருக்கே… சலித்துக் கொண்டேன்.
எதுக்குமே பதில் சொல்லவில்லை அவன்.
நீ கற்பனைல என் தங்கையைக் கட்டிப் பிடிச்சு முத்தம் கொடுத்தது எனக்குத் தெரியாதுன்னா நினைக்கிறே? திருட்டுப் பயலே….இரு உன்னை வச்சிக்கிறேன்….
என்னடா சொல்றே…? என்றேன் திடீரென்று.
ஒண்ணும் சொல்லலியே… என்றான் சேது. தடுமாறிய வண்டியைச் சரி செய்தேன். நாக்கைக் கடித்துக் கொண்டேன். பிரமையா இப்படி ஒலிக்கிறது? அவனே பேசினது போலிருந்ததே…!
மாலை ஆபீஸ் முடிந்து வரும் வழிக்கு என் ஆபீசுக்கு வந்துவிட்டான். சீட்டுக்கு அருகே வந்து நின்று போகலாமா? என்றான். இதென்ன புதுப் பழக்கம். ஆபீஸ் வருவது? இதுநாள்வரை இப்படிச் செய்ததில்லையே?
எனக்கு நேரம் ஆகும். வேலையிருக்கு….லேட்டாத்தான் கிளம்புவேன்…
சரி, அப்ப நானும் இருக்கேன். எதிரே அமர்ந்து விட்டான்.
இந்த பாரு, திரும்பும்போதெல்லாம் உன்னைக் கூட்டிட்டுப் போயிட்டிருக்க முடியாது. எனக்கென்ன வேறே வேலையில்லைன்னு நினைச்சியா? எதிர்க்க உட்கார்ந்து டென்ஷன் பண்ணாதே… கிளம்பு…என்றேன்.
பதில் பேசாமல் அமைதியாயிருந்தான். பக்கத்து சீட் பணியாளர்கள் சிலர் தலை நிமிர்ந்து பார்த்தனர். என்ன நினைத்தானோ, சரி… கிளம்பறேன்….என்று விட்டு சேரைச் சத்தமாய் நகர்த்தி எழுந்தான்.
நான் ஒன்றும் சொல்லவில்லை. போய்க் கொண்டிருந்தான்.
மறுநாளிலிருந்து அவன் பஸ் ஸ்டாப்பில் இல்லை. என்ன காரணம் தெரியவில்லை. அவன் வீட்டுப் பக்கமாய்ப் போய்ப் பார்த்தேன். வீடு பூட்டியிருந்தது.
தண்ணி கேட்ட அன்று அவன் தங்கையை உறுத்துப் பார்த்தேனே, அது பிடிக்கவில்லையோ…?
மனதில் ஓடிய வக்கிரக் காட்சியைக் கண்டு பிடித்து விட்டானோ?
பிரமீளாவே ஏதேனும் சொல்லியிருப்பாளோ?
எப்படியோ, வண்டி பாரம் குறைந்தது.. பெரிய ரிலீஃப்பாக உணர்ந்தேன். மனசுக்குப் பிடிக்காமல், தவிர்க்கவும் முடியாமல் பொங்கிப் பொசுங்கிக் கொண்டிருந்ததற்கு ஒரு முடிவு வந்தது. ஆனால் ஒன்று.
நான் உஷ்ணமாய் பேசியபோதெல்லாம் ரோஷப் படாதவன், பதிலுக்குக் கோபப்படாதவன், எனக்குக் கிளம்ப லேட்டாகும் என்று சொன்னதிலா முறுக்கிக் கொண்டு விட்டான்? அன்று ஆபீசில் நாலு பேர் பார்த்தார்களே…அது பிடிக்கவில்லையோ? முகம் தெரிந்த என் வார்த்தைகளையே இதுகாறும் லட்சியம் பண்ணாதவன், அவர்கள் வெறுமே பார்த்ததையா பெரிசு பண்ணப்போகிறான்? சல்லிப்பயல்.
எதுக்கு இந்த அநாவசிய யோசனை? ஒழிந்தது ஒருவழியாய். பிரமீளாவைத் தொடர்ந்து கணக்குப் பண்ணுவதைப்பற்றி பிறகு யோசிப்போம்.
போய்க்கொண்டேயிருந்தேன். சற்றுத் தள்ளி ஒரு கும்பல். டிராஃபிக் ஜாம் ஆகியிருந்தது. வண்டியை மெதுவாய் உருட்டினேன். ஒரு டிராபிக் போலீஸ் கூட்டத்தை விலக்கிக் கொண்டிருந்தார்.
மோதறதையும் மோதிப்புட்டு ஓடவா பார்க்கிற?
அந்தாள்தான் சார் தடுமாறிட்டாரு…
மோதியவன் கையேந்தி நின்று கெஞ்சிக் கொண்டிருந்தான். விழுந்தவன் கீழே கிடந்தான். கூட்ட இடுக்கு வழியாய்த் தெரிந்தது. ரத்தப் பொட்டுக்கள் அங்கங்கே சிதறிக் கிடந்தன. விழுந்திருந்தவனுக்கு நல்ல அடி போல. யாரோ தண்ணீரை முகத்தில் அடித்துக் கொண்டிருந்தார்கள். விலக்கி உள் நுழைந்தேன்.
யாரென்று உற்றுப் பார்த்தேன். அட, நம்ம சேது….அடப் பாவி….பக்கத்தில் ஒரு மொபெட்…..முன் சக்கரம் கோணி நெளிந்திருந்தது. சரியான இடிதான். கண் திறக்காமல் கிடந்தான்.
யாராச்சும் தெரிஞ்சவங்க இருக்கீங்களா…? இந்த வழியாத்தான் வந்தாரு… யாருக்காச்சும் இவரைத் தெரியுமா சார்….. – போலீஸ் சத்தமாய்க் கேட்டார். ஒருத்தனும் வாய் திறக்கவில்லை. நான் வெறித்துப் பார்த்துக் கொண்டேயிருந்தேன்.
திருப்பத்துல இருக்கிற பக்தமீரா உறாஸ்பிடல் கொண்டு போயிடலாம்…. ஒருவர் சொன்னார். நான் அப்படியே நின்றேன். அங்கு யாருக்கும் தெரியாது நான் அவனுக்கு நண்பன் என்று. தெரிந்தவர்கள் கூட்டத்தில் எவரும் இல்லை. அதுதான் எனக்கு வேண்டும். வேறு எவரும் வரும் முன் அங்கிருந்து கிளம்பி விட வேண்டும். சட்டென்று ஒரு யோசனை ஃப்ளாஷ் அடித்தது.
வண்டியைத் திருப்பினேன். சேது வீட்டுக்கு விட்டேன். பிரமீளா தனியாய் இருப்பாள்…? இதுதான் சான்ஸ்…..! அவள் அம்மாவும் இருப்பாளே…?
மாமி…மாமி……- அப்படிக் கூப்பிட்டது சரியா என்ற எண்ணத்துடனேயே அழைத்தேன். உள்ளிருந்து, இதோ வந்துட்டேன்….குரலைத் தொடர்ந்து பிரமீளா வந்தாள்.
அம்மா இல்லே….? – எத்தனை ஜாக்கிரதையான கேள்வி.
கோயிலுக்குப் போயிருக்காங்க…. கடைக்கும் போயிட்டு வர நேரம் ஆகுமே….என்ன விஷயம்?
ஒண்ணுமில்லை பிரமீளா….நீ வீட்டைப் பூட்டிட்டு வந்து என் வண்டில ஏறு…சொல்றேன்…..
ஐயோ…எதுக்கு? என்னத்துக்குச் சொல்லுங்க…..அம்மாயில்லையே…?
பக்கத்து வீ்ட்டுல சாவியைக் கொடுத்துட்டு வா…. கிளம்பு …போற வழிக்குச் சொல்றேன்…
நீங்க சொல்லுங்க…என்னன்னு சொல்லுங்க…..? எனக்குப் பயமாயிருக்கு– படபடத்தாள் பிரமீளா. யாராவது பார்க்கிறார்களா என்று பார்வை மிரண்டது.
வேறு வழியில்லைதான். சொல்லி விட்டேன்.
ஐயையோ……அப்டியா…? அண்ணா நேத்திக்குத்தான் புது வண்டியோட வந்தான்…இன்னிக்கு ஆக்சிடென்டா? அட கடவுளே….! அம்மா வேறே இல்லையே…? அழ ஆரம்பித்து விட்டாள். உடனே அழணும் என்று யாரோ சொன்னதுபோல் இருந்தது. .
ஒண்ணும் பயமில்லே…ஆஸ்பத்திரிக்கு ஏத்தி அனுப்பிட்டுத்தான் வந்திருக்கேன். பயப்படாதே…நானிருக்கேன்…ஏறு….-என் பொய்யை நம்பி, வீட்டைப் பூட்டி, சாவியைப் பக்கத்து வீட்டில் கொடுத்துவிட்டு ஓடி வந்தாள்.
சில கண்கள் எங்களையே கவனித்துக் கொண்டிருந்தன.
நல்லா உட்காரு…விழுந்திடப்போறே…. – என்னையறியாமல் ஒருமையில் விளித்தேன். ரொம்ப நேரமாய் அப்படித்தானே சொல்லிக் கொண்டிருக்கிறேன். இப்பொழுதுதான் அது உறுத்தியது.
சைடு கம்பியைப் பிடிச்சிக்கோ…
நான் வண்டில உட்கார்ந்ததேயில்லை. .நெருங்கி உட்கார்ந்தாள். பயம் போலும்…போதாதென்று என் தோளில் கை வைத்துக் கொண்டாள். அதுதான் ஆச்சரியம்…? சேது போலவே அண்ணாவாய் நினைத்து விட்டாளோ? மனசுக்குள் ஒரே உதைப்பு.
அந்த ஸ்பரிஸம் என்னை எங்கோ கொண்டு சென்றது. வண்டியை மெதுவாக ஓட்டினேன்.. எங்கே ஓட்டினேன். உருட்டினேன்.
வேகமாப் போங்களேன்….
என்னையும் ஆக்ஸிடென்ட் பண்ணச் சொல்றியா? உன்னை பத்திரமாக் கொண்டு இறக்க வேண்டாமா? பேசாம வா…..என்னை டென்ஷனாக்காதே…
. என் அதிர்ஷ்டம் சேது விபத்தில் சிக்கியது. என் அதிர்ஷ்டம் அவன் என் கண்ணில் பட்டது.. என் அதிர்ஷ்டம் அவனை அப்படியே விட்டு விட்டு இவளைப் பிக் அப் பண்ணும் யோசனை வந்தது. என் அதிர்ஷ்டம் அவள் அம்மா இல்லாமலிருந்தது. என் அதிர்ஷ்டம் அவள் என் வண்டியில் வரச் சம்மதித்தது.. என் அதிர்ஷ்டம்…இதோ அவள் உடம்பின் ஸ்பரிசங்கள் என் மேல் பட்டுப் பட்டு, பட்டுப் பட்டு…பஞ்சு மெத்தையாய்….ஆஉறா…என்ன அருமையான சந்தர்ப்பம்…என்ன அற்புதமான நிகழ்வு….சொர்க்கமே என்றாலும்……
நான் இப்போது அந்த பக்தமீரா ஆஸ்பத்திரிக்குச் சுற்று வழியில் சென்று கொண்டிருக்கிறேன்…!!! வேண்டுமென்றேதான். எந்த ஆஸ்பத்திரி என்று பதட்டத்தில் அவள் கேட்கவில்லையே…! வண்டியை எங்கேனும் வழியில் நிறுத்தி, ஏதோ ரிப்பேர் போலக் கூடப் பாசாங்கு பண்ணி, இன்னும் கொஞ்ச நேரம் என் பிரமீளாவுடன் இருக்க முயற்சிப்பேன். யார் என்னைக் கேட்பது? அது என் இஷ்டம்….பிரமீளாவின் மணம் என்னைக் கிறங்கடித்துக் கொண்டிருந்தது. வண்டி மெல்ல உருண்டு கொண்டிருந்தது.
அட…நம்ம சேது…! என்று பார்த்தவுடனேயே மனதில் விபரீதக் கற்பனை ஓட ஆரம்பித்து விட்டது. அதில் உதித்ததுதான் மேலே நான் சொன்னது. ஆனால் நான் அப்படிச் செய்யவில்லை. என் வண்டியை ஓரமாய் ஒரு பெட்டிக் கடையை ஒட்டி நிறுத்திப் பூட்டினேன். கடைக்காரரிடம் பார்த்துக் கொள்ளச் சொன்னேன். கூட்டத்தை விலக்கிக் கொண்டு உட்புகுந்தேன்.
தெரிஞ்சவங்க யாராச்சும் இருக்கீங்களா…. – போலீஸ் கேட்க, நானிருக்கேன் சார்… என்றேன்.
நீங்க யாரு….அவர் நண்பரா…?
ஆமாம் சார்….நான் இவரை உறாஸ்பிடல்ல சேர்த்துர்றேன்… – என்று விட்டு ஒருவர் வாங்கி வந்த சோடாவைப் பீய்ச்சி அடித்து, சேதுவின் முகத்தில் தெளித்தேன். மயக்கம் தெளியவில்லை அவனுக்கு.
தூக்குங்க சார்…தூக்குங்க சார்… என்றார் ஒருவர். வழியில் சென்ற ஒரு ஆட்டோவை நிறுத்தினேன். ரெண்டு பேராய்ச் சேர்ந்து தூக்கி ஆட்டோவில் படுக்க வைத்தோம். எதிரில் கம்பியில் நான் உட்கார்ந்து அவனைப் பிடித்துக் கொண்டேன். ஞாபகமாய் சேதுவின் வண்டியைப் போலீஸ்காரரிடம் சொல்லிவிட்டு, அவன் பையை மட்டும் எடுத்துக் கொண்டு கிளம்பினேன்.
பக்தமீரா ஆஸ்பத்திரிதான் செலவு அதிகமில்லாதது. அங்கேயே வண்டியை விடச் சொன்னேன். யோசனையாய் பின்பக்கம் சென்று, ஸ்டெரெச்சர் கொண்டு வந்து, சேதுவைத் தூக்கிப் படுக்க வைத்து, உள்ளே அறைக்குள் கொண்டு சென்றாயிற்று. . என்னைத் தடுத்து வெளியிலேயே நிறுத்தி விட்டார்கள். அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் நின்று கொண்டிருந்த போது பிரமீளா அரக்கப் பரக்க ஓடி வந்தாள். வரும்போதே அழுகை பொத்துக் கொண்டு வந்தது அவளுக்கு. உனக்கு யார் சேதி சொன்னது? என்றேன் அவளிடம். நீ சொல்லலீன்னா, யாரும் சொல்ல மாட்டாங்களா? வேறே ஆளே இல்லியா? எதற்கு இப்படி ஒருமையில் கடிக்கிறாள்?
வண்டி வேண்டாம்….உனக்குச் சரியா ஓட்டத் தெரியாதுன்னு எச்சரிச்சேன்……கேட்கலியே….….அநியாயம்….அநியாயம்…கடவுளுக்கே அடுக்காது….
உன்னாலதான் எங்கண்ணாவுக்கு இப்படியாச்சு….உங்க முகத்துலயே முழிக்க நான் விரும்பல…போயிடுங்க இங்கிருந்து- சாபமிடுவதுபோல் கையை நீட்டி, கடைசியாக இப்படிச் சொன்னாள் பிரமீளா…!!!