லீலா மற்றும் லீலாவின் கதைகள்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: May 7, 2012
பார்வையிட்டோர்: 10,274 
 
 

லீலாவின் புகைப்படத்தைக் காட்டியது ஜேம்ஸ்தான். லீலா மேடைப் பாடகி என்றும் கேரளத் தொலைக்காட்சி நாடகங்களில் சிறுசிறு பாத்திரங்களில் நடித்துக்கொண்டிருக்கும் முக்கியமான நடிகை என்றும் தன் மனைவி ரோஸ்மேரிக்குத் தெரியாமல் சில தடவை லீலாவைப் பார்க்கச் சென்றிருப்பதாகவும் ஜேம்ஸ் சொன்னார். எல்.கே. பட்டியிலிருந்து என்னை மெயின் ரோட்டிற்கு அழைத்துக்கொண்டு வந்து பஸ் ஏற்றிவிடும்வரை லீலாவைப் பற்றியேதான் பேசிக்கொண்டுவருவார். லீலா என்ற பெயரை அப்போதுதான் நான் முதன்முதலாகக் கேட்டதால் அது எனக்கு வசீகரமாக இருந்தது. லீலாவைப் பார்த்துவிட வேண்டுமென்ற ஆசை அப்போதிருந்தே தொடங்கிவிட்டது. லீலா மேடையில் பாடிக்கொண்டிருக்கும் சமயம் அவள் இடது கையிலிருந்து வலது கைக்கு மைக்கை மாற்றும் அழகு பிரமாதம் என்பார் ஜேம்ஸ். அவளைப் பற்றி மேலும் தெரிந்து கொள்வதற்காக அவரிடம் விலாசம் கேட்டேன். தன்னிடம் அவளது விலாசம் இல்லை என்றும் வேறு ஏதேனும் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் ராமசுந்தரமூர்த்தி என்ற ஆர்.எஸ்.எம்.மிடம் கேட்க வேண்டுமெனவும் சொன்னார்.

ஆர்.எஸ்.எம். ஆண்டிப்பட்டியில் வசித்துவந்தார். லீலாவைப் பற்றி அவரிடம் கேட்டபோது, தனக்கு லீலாவின் விலாசம் தெரியும்; ஆனால் தான் சமீபகாலமாக அவள் எந்த மேடையிலும் பாடிக் கேட்டதில்லை; இப்போது எங்கு இருக்கிறாள் எனத் தெரியாது என்றார். லீலாவைப் பார்ப்பதற்கு வேண்டிய உதவிகள் செய்துதரும்படி கேட்டேன். 1988ஆம் வருட டைரியில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளுடன் லீலா அவளது கைப்படவே தனது விலாசத்தை எழுதித் தந்ததை என்னிடம் காட்டினார். லீலா கேரளாவிலுள்ள செங்கணாச்சேரியின் அருகே ஒரு கிராமத்தில் இருந்தாள். மதுரையில் பெருமாள் கோவில் அருகே கீத்மாலா அலுவலகம் இருப்பதாகவும் ஒருவேளை அங்கு வரும் பாடகிகள் யாருக்கேனும் லீலாவைப் பற்றித் தெரிந்திருக்கலாமெனச் சொன்னார். நான் மதுரை செல்வதென முடிவுசெய்து ஜேம்ஸிடம் சொல்லாமல் அங்கிருந்தபடியே பஸ் ஏறினேன். மேலப் பெருமாள் கோவில் வீதியில் உள்ள சின்னச் சந்தில் மேல்மாடியில் கீத்மாலா அலுவலகத்தில் லீலாவின் விலாசத்தைச் சரிபார்த்துக்கொள்ள அங்கு கீபோர்டு வாசித்துக்கொண்டிருந்தவரிடம் கேட்டேன்.

நான் மதுரைக்கு சென்றிருந்தபோது மழைக்காலமாக இருந்ததால் வேறு எங்கும் செல்ல முடியவில்லை. கீபோர்டு வாசித்துக்கொண்டிருந்தவர் தன் ஆர்க்கெஸ்ட்ரா உரிமையாளர் வாசுதேவனிடம் தமிழ்நாட்டிலுள்ள பாடகிகளின் விலாசங்கள் இருக்கலாமென்று சொன்னார். எனக்கு ஏனோ வாசுதேவனைச் சந்திக்கவே மனம் இல்லை. திரு. ஜேம்ஸ் எப்படியும் அடுத்த நிகழ்ச்சிக்கு லீலாவை அழைத்துக்கொண்டு வர வேண்டுமென்று என்னைவிட அதிக ஆர்வமாக இருந்தார். லீலா பாடும்போது இடது கையிலிருந்து வலது கைக்கு மைக்கை மாற்றும் அந்த நேர அழகைப் பார்க்க அவரும் என்னைப் போலவே ஆர்வமாயிருந்தார். இரவு திருநகரில் சர்ச்சுக்கு அருகே நடக்கும் நிகழ்ச்சிக்கு என்னை அவர் அழைத்தார். லீலாவின் விலாசத்தை ஒருவேளை அங்கு வரும் யார் மூலமாவது உறுதிசெய்து கொள்ளலாமென அவர் சொன்னார். சரி என்று திருநகருக்குச் சென்றேன். வழியிலேயே திருப்பரங் குன்றத்தில் இறங்கி ஒரு ஒயின் ஷாப்பில் மது அருந்திவிட்டுத் திருநகர் மூன்றாம் நிறுத்தத்தில் இறங்கினேன்.

சர்ச்சுக்கு எதிரே மேடை போட்டிருந்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக லைட்டின் வெளிச்சம் அதிகமாகிக்கொண்டேபோன அந்த இரவு வேளை எனக்குள் போதை ஏறியிருந்தது. அளவுமீறிப்போனது போதை. லீலாவின் பெயரை முதன்முதலாகக் கேட்டபோதிருந்த வசீகரம் இப்போதும் இருந்தது. இந்த வெளிச்சம், கீத்மாலாவில் பாடிய பச்சை நிறப் புடவைப் பாடகி என எல்லாமே போதையாக உடலில் ஊறுகின்றன. சாமிப் பாட்டு போதும் என்று ஒருவன் எனக்குப் பின்னாலிருந்து கத்துகிறான். அவன் சாதாரணமாகவே இப்படிக் கத்துகிறானா, இல்லை போதையில் கத்துகிறானா எனத் தெரியவில்லை. அவன் கத்தக் கத்தக் கூட்டமும் இன்னும் உற்சாகமானது. முன்னால் இருப்பவர்கள் தலையில் மண்ணை அள்ளிப்போட, அவன் திரும்பவும் மண்ணை அள்ளி வீசுகிறான். சாமிப் பாடல்கள் முடிந்தவுடன் சினிமாப் பாடல் தொடங்கியது. முதலில் பாடிய பச்சை நிறப் புடவைப் பாடகியே பாடினாள். அவளோடு எல்லாப் பாடகர்களும் போட்டி போட்டுக்கொண்டு மாறிமாறிப் பாடினார்கள். சிரித்துச் சிரித்துப் பேசினார்கள். பழைய பாடல் பாடுபவர் மேஜை மின்விசிறியை அவள் பக்கம் திருப்பியதும் கீபோர்டு வாசிப்பவர் அவரைக் கோபமாகப் பார்த்தார். மேடைக்குப் போக முடியாத அளவுக்குக் கூட்டம். மெதுவாக நெருங்க நெருங்க, கூட்டம் என்னைப் பின்னுக்குத் தள்ளியது. ஒருவன் தன் எதிரே நிற்பவனின் இடுப்பை வேண்டுமென்றே கிள்ளியதும் அவன் அசிங்கமான வார்த்தையால் கிள்ளியவனைத் திட்டினான்.

மேடையை நெருங்கியபோது யாரும் எதிர்பாராது அங்கு நின்ற எல்லோர் தலையிலும் மண் விழுந்தது. பிறகு சின்னச் சின்னக் கற்கள் விழுந்தன. கீபோர்டு வாசிப்பவர் என்னை அடையாளம் கண்டுகொண்டு சைகையால் மேடைக்கு வரச் சொன்னார். வாசுதேவனிடம் என்னை அறிமுகம்செய்தபோது ஜேம்ஸிற்கு அவரிடம் நல்ல மதிப்பு இருந்தது. பணம் வாங்காமலே சித்திரைத் திருவிழாவின்போது கச்சேரி செய்ய ஜேம்ஸ் வந்ததைத் தன்னால் இன்னும் மறக்க முடியவில்லை என்று வாசுதேவன் என்னிடம் கூறினார். டீ வந்ததும் எல்வோரும் குடித்தோம். ஒரு பாடலின் இடைவெளியில் பேச வந்த வாசுதேவனிடம் லீலாவின் விலாசத்தைக் கேட்டேன்.

லீலா, த.பெ. சதாசிவம், வன்னிமரப் பிள்ளையார் கோவில் தெரு, தேனி சாலை, கம்பம். லீலாவின் விலாசத்தை வாங்கிக்கொண்டு, செங்கணாச்சேரியிலிருந்து லீலா எப்போது தமிழ்நாட்டிற்கு வந்தாள் என்று கேட்டேன். எனக்குத் தெரிந்து அவள் கம்பத்தில்தான் இருக்கிறாள் என்றார் வாசுதேவன். ஜேம்ஸ் அவளைச் செங்கணாச்சேரியில் பார்த்ததாகச் சொன்னாரே என்றேன். அது பற்றித் தனக்கு ஏதும் தெரியாது என்றும் லீலாவின் விலாசம் இதுதான் என்றும் கூறிவிட்டு அடுத்தப் பாடலுக்குத் தயாராகச் சென்றார். லீலா தமிழ்நாட்டுக்குள்ளேயே இருப்பதை உடனடியாக ஜேம்ஸிற்குத் தெரியப்படுத்தியாக வேண்டுமென எல்.கே. பட்டிக்குச் சென்றேன்.

வீட்டில் ரோஸ்மேரி மட்டும் இருந்தாள். அவளுக்கும் ஜேம்ஸிற்கும் இடையே இணக்கமான உறவு இல்லையென்றபோதிலும் ஜேம்ஸ் அவளை அனுசரித்தேதான் வாழ்ந்திருந்தார். எல்.கே. பட்டியில் அவரிடம் ஆர்மோனியப் பெட்டியோடு இசை கற்க வரும் மாணவ மாணவிகளுக்கு ரோஸி தன் வசைச் சொற்களைத் தந்தபடியே இருந்தாள். ரோஸி தரும் தொல்லையின் பொருட்டே என்னைச் சின்னமனூர் மாரியப்பனிடம் அனுப்பினார் திரு. ஜேம்ஸ். ரோஸியைப் பற்றி ஊரில் பலரும் பல்வேறு வகையான பெயர்களை அவளோடு பொருத்திவைத்து ஊர்வம்பு பேசினார்கள். கடைசியாக ஜேம்ஸ்கூடக் குடிபோதையில் அவளை அலிபாபாவின் குகை என்ற பெயருக்குப் பொருத்திப் பேசினார். ரோஸி ஆரம்ப காலத்தில் அன்பான பெண் என்றுதான் பெய ரெடுத்துவந்தாள். ஜேம்ஸைத் திருமணம் செய்துகொண்ட பிறகு அவளது மனம் மாறிவிட்டதாக ஊரில் எல்லோரும் பேசினார்கள். ஒருமுறை குடும்ப விசயத்தைப் பற்றி ஜேம்ஸ் என்னிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, தனக்கும் தனது மனைவிக்கும் 12 வயது வித்தியாசமெனக் கூறினார். அந்த வித்தியாசம்கூடத் தன்மேல் காரணமற்ற கோபத்தை உண்டாக்கியிருக்கலாம் என்றார். மேலும் அவர் ரோஸியைப் பற்றித் தன் பால்ய கால வாழ்நாளைக் குடிபோதையில் நினைவு கூர்ந்தவராகச் சொன்னது இன்னமும் ஞாபகத்தில் உள்ளது. ரோஸ்மேரி தூத்துக்குடி எபினேசர் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி முடித்துத் திரும்பியபோது அவளது தகப்பனார் பிச்சைமுத்து இறந்துபோனார். பிச்சையின் சகோதரி மகனான திரு. ஜேம்ஸ், டீயை மட்டும் மூன்று வேளை குடித்துவிட்டு, சர்ச்சில் ஆர்மோனியப் பெட்டி பழகிக்கொண்டிருந்தார். எலிசபெத் என்ற பெண்ணைக் காதலித்த குற்றத்திற்காக அவரை ஆரோக்கியசாமி வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டார். ஏற்கனவே ஆசிரியர் பயிற்சி முடித்து வேலை தேடிக் கொண்டிருந்த ஜேம்ஸ் தன் உணர்வுகளைப் புரிந்துகொண்ட சூசையப்பர் கோவில் பாதிரியாரிடம் அழுது புலம்பி வழி கேட்டார். பாதிரியாருக்குத் தெரிந்த நபர்களிடம் வேலைக்கு ஏற்பாடு செய்யச் சொல்லிக்கொண்டே ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைக் கூட்டத்திற்கு ஆர்மோனியப் பெட்டி வாசிக்கப் பழகிவிட்டார்.

ஆசிரியர் பயிற்சிச் சான்றிதழை ஆரோக்கியசாமி எடுத்துவைத்துக்கொண்டு தராது இருந்தார். ரோஸியைத் திருமணம் செய்துகொண்டால் மட்டுமே சர்டிபிகேட் கிடைக்கும் என்று எல்லோரிடமும் சொல்லிவந்தார். சர்டிபிகேட் இல்லாமல் எந்த ஊருக்கும் பிழைக்கப் போக முடியவில்லை. சர்ச் தெருவில் ஒரு டீக்கடையில் அமர்ந்திருந்த காலை வேளையில்தான் ஜேம்ஸ் சூசையப்பர் கோவிலில் ஒளிந்திருப்பதை எப்படியோ ஆரோக்கியசாமி தெரிந்துகொண்டார். தன் நண்பர்களையும் அழைத்துக்கொண்டு அவர்களின் உற்சாகத்திற்குச் சாராயத்தை ஊற்றிவிட்டு சூரிக்கத்தியோடு கோவில் வாசலுக்கே வந்துவிட்டார். பாதிரியாரின் மத்தியஸ்தம் எடுபடவில்லை. உச்சக்கட்டத்தில் எலிசபெத்தின் அம்மாவிற்கும் பாதிரியாருக்கும் கள்ளத் தொடர்பு உண்டு என்று சொல்லிச் சிரித்த ஆரோக்கியசாமி, தான் சரியான இடத்தில் பொய்யைச் சொல்லிப் பிரச்சினையைப் பெரிதுபடுத்தியதற்காகத் தன்னையே மெச்சிக்கொண்டார். அதன் பிறகு ரோஸிக்கு நாகலாபுரம் ஆரம்பப் பள்ளியில் தற்காலிகமாக வேலை கிடைத்தது.

அவளுக்கு வேலைக்குப் போக உள்ளூர ஆசையே இல்லை. தன்னைவிடப் பெரிய பணக்காரக் குடும்பத்திற்கு மருமகளாகப் போக வேண்டுமென்ற ஆசை தூத்துக்குடி உப்பு வாசனையோடு வளர்ந்திருந்தது. தன் பயிற்சிக் காலத்தின் இரண்டாம் வருடத்தில் பெய்த மழையின் குளிரில் படுத்தபடியே இதைப் பற்றி முதன்முதலாகக் கற்பனை செய்துவைத்திருந்தாள். அவளுக்கு ஜேம்ஸைப் பிடிக்கவில்லை. ஒன்றுமில்லாத குடும்பத்திற்குத் தான் போக முடியாது என்று தன் அம்மாவிடம் சண்டைபோட்டாள். செருப்புப் பிய்ந்து விடும் என்று செருப்பைக் காட்டினாள் அவளது அம்மா. பதிலுக்கு அவளும் செருப்பு பிய்ந்துவிடும் என்று தூத்துக்குடிக் கடைவீதியில் வாங்கிய செருப்பைக் காட்டினாள். இப்படியே மாறிமாறிச் செருப்பைக் காட்டிக்கொண்டே காலையில் வேலைக்குக் கிளம்பிப் போவதுவரை சண்டை போடுவதும் திரும்ப மாலையில் விட்ட இடத்திலிருந்து ஆரம்பித்ததையும் கண்டு பக்கத்து வீட்டுக்காரர்கள் எப்போது அடித்துக்கொள்வீர்கள் என்று கேட்டதற்கு அவர்களின் வாழ்நாளில் இதுவரை கேட்டிராத ஆபாசச் சொல்லை நடுவீதியில் பிரயோகித்தாள் ரோஸ்மேரி.

ஏசுவின் குழந்தை அழகையும் கன்னிமேரியின் கருணை உள்ளத்தையும் திரு. ஜேம்ஸிற்கு அருகே நின்று பாடிக்கொண்டிருந்தாள் நீல நிறச் சுடிதார் அணிந்த பெண். பிரார்த்தனைக் கூட்டம் கலையலாம் என்று பாதிரியார் சொன்னதும் சப்தம் கூடிக் கூட்டம் எழுந்தது. திரு. ஜேம்ஸ் அருகே சென்று நின்றுகொண்டேன். அவர் என்னைக் கண்டதும் உணர்ச்சி மேலிடக் கட்டிக்கொண்டார். லீலாவின் கம்பம் விலாசத்தைக் காட்டினேன். செங்கணாச்சேரியிலிருந்து லீலா கம்பத்திற்கு வந்துவிட்டாளா என ஆச்சரியப்பட்டவராக என்னுடன் வந்தார். குமுளி வண்டியில் ஏறிக் கம்பத்திற்கு டிக்கெட் எடுத்தோம். வழிநெடுக லீலாவைப் பற்றியும் அவளுடன் பழகிய நாட்களையும் ஜேம்ஸ் என்னிடம் சொல்லியபடியே வந்தார். தேயிலைத் தோட்டத்தின் ஊடே ஆர்.எஸ்.எம்.மும் ஜேம்ஸும் லீலாவுமாக நடந்து சென்றதிலிருந்து லீலாவைப் பற்றிய தன் ஞாபகத்தைத் தொடர்ந்தார் ஜேம்ஸ். இரண்டு பேருக்கு நடுவே வந்த லீலா திடீரென்று இருவரின் மேலும் கைகளைப் போட்டபடி நடக்கத் தொடங்கினாளாம். ஆர்.எஸ்.எம்.மும் அவரும் இதை எதிர்பார்க்கவில்லை. ஜேம்ஸ் நடப்பதைச் சற்று நிறுத்திவிட்டார். சிறிது தூரம் நடந்த பிறகு சிரித்துக்கொண்டே பொதுவாகச் சொல்லியிருக்கிறாளாம், நீங்கள் உங்கள் வீட்டுப் பெண்களில் ஒருத்தியாகவோ உங்களில் வேலை செய்யும் ஒருத்தியாகவோ என்னைக் கருதவில்லை என்பது இப்போது எனக்குப் புரிந்துவிட்டது என்று.

லீலாவின் வீட்டிற்குச் செல்லும்வரை இரண்டு பேரும் ஒன்றும் பேசவில்லை. வழியெல்லாம் தேயிலைத் தோட்டத்தின் வாசமும் அளவான குளிரில் தங்களுக்கு மத்தியில் அவள் நடந்த கதகதப்பும் என்றும் தன் வாழ்நாளில் திரும்ப வராதென ஜேம்ஸ் சொன்னார். லீலா மெதுவாக ஒரு மலையாளப் பாடலைப் பாடியபடி சிரித்துக்கொண்டே வந்தாளாம் அவர்களுடன். தென்னை மரங்களுக்கு மத்தியில் சிவப்பு ஓடு போட்ட மலை வீட்டில் லீலா தனது தாயுடனும் சகோதரனுடனும் வசித்துவந்தாள். அவளுடைய தாயார் மலையாளத்தில் பேசி உள்ளே உட்காரச் சொன்னாள். மாலை நேரத்திற்குப் பின் குளித்துவிட்டு மஞ்சள் புடவையில் வந்த லீலா தன் தாயாருடன் சப்பாத்தி செய்வதற்கு உதவியாகச் சமையலறைக்குப் போனாள். லீலாவும் அவளது தாயாரும் மலையாளப் பாடல்களையும் ஹிந்திப் பாடல்களையும் மாறிமாறிப் பாடிக்கொண்டேயிருந்தார்கள். இரவு நேரம் வந்து சேர்ந்த லீலாவின் சகோதரன் லீலாவையும் அவளது தாயாரையும் மலையாளத்திலேயே திட்டினான். ஆர்.எஸ்.எம்.மையும் ஜேம்ஸையும் கண்டதும் சத்தம் போட்டபடி அவனது அறைக்குச் சென்றுவிட்டான். முன் வராண்டாவில் கம்பளி போர்த்தியபடி மூன்று பேரும் தாங்கள் சென்று வந்த கச்சேரியைப் பற்றியும் பாடிய பாடல்களைப் பற்றியும் பேசியபடி இருந்தனர். காலையில் ஒன்பது மணிக்கெல்லாம் தயாராகிவிட்ட லீலா தொலைக்காட்சித் தொடர் ஒன்றுக்கான முதல் நாள் படப்பிடிப்புக்காகத் திருவனந்தபுரம் ஸ்டுடியோவிற்குச் செல்ல ஆயத்தமானாள். லீலாவுடன் எப்போதும் கூடவே இருக்க ஆசை கொண்ட ஜேம்ஸ் திருவனந்தபுரத்திற்குத் தானும் வரலாமா என அவளிடம் கேட்டிருக்கிறார். பதில் ஒன்றும் பேசவில்லையாம் அவள்.

இருந்தபோதிலும் லீலா சிறிது நேரம் கழித்து அவர்களிடம் இந்த நாடகம் இயக்குநரின் முதல் நாடகம்; நானும் அவரும் வேலை செய்யும் முதல் நாள் இது; ஆரம்பமே அவருக்கு ஏதேனும் வகையில் நான் தொந்தரவாக இருக்கக் கூடாது என்று நினைக்கிறேன், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்றாளாம்.

“இந்த நாடகத்தில் உனக்கு என்ன வேடம், லீலா?”

“கதாநாயகியின் விடுதி அறையில் அவளுடன் ஒன்றாகத் தங்கியிருப்பவள். பெயர் தெரியவில்லை.”

“வசனம் அதிகமாகப் பேச வேண்டுமா?”

“தெரியவில்லை.”

“கதாநாயகியைவிட உனக்கு முக்கியமான கதை கொண்ட நாடகமா?”

“தெரியவில்லை.”

“வேறென்ன விசயம் உள்ளது நாடகத்தில்?”

“கதாநாயகிக்கு நான்தான் பின்னணிக் குரல் கொடுக்கிறேன்.”

நாங்கள் மதிய உணவு நேரத்திற்குப் பின் கம்பத்திற்குச் சென்றுவிட்டோ ம். லீலாவின் விலாசத்தைக் கண்டடைவது வெகு சுலபமில்லையென்றபோதிலும் திரும்பவும் நானாக வரும் சமயத்தில் எப்படி வருவதென வழிகளைக் குறித்துக் கொள்வதுதான் எனக்குக் கஷ்டமாக இருந்தது. லீலாவின் வீட்டின் முன்னால் இரட்டைத் திண்ணை முழுக்க ஆட்கள் கூடியிருந்தார்கள். அவர்களில் சிலர் எங்களுக்கு இடம் தர முன்வந்தார்கள். நாங்கள் இடையே உட்கார்ந்து கொண்டதும் முன்னாலும் பின்னாலும் உட்கார்ந்து இருந்தவர்கள் தள்ளித்தள்ளி உட்கார்ந்துகொண்டார்கள். லீலாவிற்கான கூட்டமாக இது இல்லை என்று தோன்றியது ஜேம்ஸுக்கு. தனக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தவர்களிடம் இது லீலாவின் வீடுதானே என மெதுவாகக் கேட்டார். ஆமாம் என்றார் அவர். லீலாவின் வீடாக இது இருக்கும் பட்சத்தில் இவ்வளவு கூட்டம் எதற்கு என்ற சந்தேகம் ஜேம்ஸிற்கு வந்ததுபோலவே எனக்கும் வந்தது. எங்களுக்குப் பின் வந்த வெளியூர்க்காரர்கள் வீட்டிற்குள் இருந்த ஒருவரைக் கண்ட பின் சீக்கிரமாக அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் வழியாக நாங்களும் உள்ளே போகப் பிரயாசைப்பட்டோ ம். ஆளுக்கு ரூபாய் ஐம்பது வீதம் தந்துவிட்டு இன்னொரு அறைக்கு நுழைந்தோம். லீலா எல்லோருக்கும் நடுவே அமர்ந்திருந்தாள். ஒருவேளை எல்லோருக்கும் நடுவே அமர்ந்திருப்பவள் தான் லீலாபோல. திரு. ஜேம்ஸால் லீலாவைக் கண்டு கொள்ள முடியாத அளவுக்கு லீலாவைச் சுற்றிக் கூட்டம்.

ஆசீர்வாதமும் அருள்வாக்கும் வாங்கிய ஒவ்வொரு வரும் தங்கள் எதிர்காலப் பலனை எண்ணி மகிழ்ந்தவாறு லீலாவிற்குக் காணிக்கையை மஞ்சள் துண்டில் அள்ளிப்போட்டு நகர்ந்தனர். பெண் குழந்தை இல்லாத தம்பதியினர் தங்களுக்குப் பெண் குழந்தை வேண்டுமென லீலாவின் முன் அழுது புலம்பினர். லீலாவின் மேல் இப்போது வெங்கடகிரியம்மாள் இருப்பதால் குழந்தை பெண்ணாகவே பிறக்கும் என்ற அவள், வெள்ளிக்கிழமை தோறும் அம்மாவுக்கு விளக்குப்போட வேண்டுமெனக் கட்டளையிட்டாள். அவர்கள் சரி என்றனர்.

திரு. ஜேம்ஸிற்கும் எனக்கும் இப்போது சந்தேகம் வந்தது. அது உண்மையிலேயே பாடகி லீலாவா வேறு யாரேனுமா என்று அறிய ஆவல் கொண்டு அறையின் உள்ளே நுழைந்தோம். லீலாவின் முன் நின்றவர்களை விலக்கிவிட்டு முகத்தைக் கண்டோ ம். ஜேம்ஸ் அப்படியே மூச்சுக்கூட விடாமல் வெளியேறிப் பின்னாலேயே என்னையும் வரச் சொன்னார். பஸ் ஏறும்போது ஜேம்ஸ் பேசவே இல்லை. லீலாவைக் காணாத ஏமாற்றம் அவரிடம் தெரிந்தது.

அவரிடமிருந்து லீலாவைப் பற்றி மேலும் ஏதேனும் அறியும் ஆவலில் இரண்டு பேரும் அருகருகே அமர்ந்து செல்லும் இருக்கைகளைத் தேர்வுசெய்தேன். ஜேம்ஸ் எல்.கே. பட்டியில் பஸ் ஏறும்போது இருந்த சந்தோஷத்தின் அடையாளங்கள் சாமி லீலாவைக் கண்டதும் மறைந்துபோயிருந்தன. அவரது சந்தோஷங்கள் எல்லாம் பறிபோய்விட்டதாக நினைத்துக்கொண்டு பஸ்ஸில் அமைதியாக அமர்ந்திருந்தார். பஸ் புறப்பட்டதும் ஜன்னலைத் திறந்துவிட்டேன். மாலை நேரக் காற்று லேசான பனியுடன் வீசியது. முதலில் தூங்கியது யார் என்று தெரியவில்லை.

விழித்தெழுந்தபோது ஜேம்ஸ் உற்சாகமானவராக, லீலாவிற்குப் பிச்சிப் பூக்கள் என்றால் மிகவும் பிடிக்கும் என்றார். அவராகவே லீலாவைப் பற்றிய நினைவுகளைச் சொல்லத் தொடங்கினார். அப்போதும் ஆர்.எஸ்.எம். உடனிருந்தாராம். தேயிலைத் தோட்டங்களின் ஊடே நிழலும் வெயிலும் சம அளவில் பரவியிருந்த இடத்தில் ஜேம்ஸிற்கும் ஆர்.எஸ்.எம்.முக்கும் பிடித்தமான மது பாட்டிலுடன் லீலா அமர்ந்திருந்தாள். ‘லீலா, உன்னை இப்போது அடையாளம் தெரியாத சிலர் நாசமாக்க வருகிறார்கள்; அதாவது கற்பழிக்க வருகிறார்கள். அப்போது என்ன செய்வாய்?’ இப்படி ஆர்.எஸ்.எம். கேட்டதும் பயந்துபோன ஜேம்ஸ் சிகரெட்டைப் பற்றவைத்துக் கொண்டாராம். ஆர்.எஸ்.எம். முந்திக்கு இப்போது பரவாயில்லை. மதுவிடுதியில் ரகளை குறைந்திருக்கிறது. முக்கியமாகப் புலம்பல் நின்றிருக்கிறது. அவரது கேள்வியைக் கேட்டதுபோலவும் கேட்காததுபோலவுமிருந்த லீலா, தன் கையிலிருந்த மது பாட்டிலை உருட்டியபடி இருந்தாள்.

லீலா மண் தரையில் மலையாளத்தில் ஏதோ எழுதியபடி இருவரையும் பார்த்தாள். பிறகு ஆர்.எஸ்.எம்.மிடம் ‘உங்களுக்கு அந்த ஆசை இப்போது இருக்கிறதா?’ எனக் கேட்டாள். அவர் பரபரப்புடன், ‘இல்லவே இல்லை’ எனப் பதில் சொன்னதும் லீலா, ‘சிரமப்படவே வேண்டாம், உங்கள் உடலையும் என் உடலையும் எதற்காக வருத்திக்கொள்ள வேண்டும். நீங்கள் தயாராகும் போது நானும் தயாராகிவிடுவேன்’ என்றாளாம். இதைக் கேட்டபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தபோதிலும் கூடவே லீலாவைப் பார்க்க வேண்டுமென்ற ஆர்வம் பெருகியபடிதான் இருந்தது. ஜேம்ஸை எல்.கே. பட்டியில் விட்டுவிட்டு லீலா என்ற பெயரைச் சில நாட்கள் மறந்தவனாக இருந்தேன். இருந்தபோதிலும் எப்போதாவது எந்தப் பெண் பெயரைக் கேட்டாலும் லீலா என்ற பெயரும் ஞாபகத்திற்கு வந்துவிடுவது தவிர்க்க முடியாததாகிவிடும்.

ஆர்.எஸ்.எம்.மைச் சந்தித்தால் ஒருவேளை லீலாவைப் பற்றிய புதிய தகவல்கள் ஏதேனும் தருவார் என அவரைப் பார்க்கச் சென்றேன். ஆர்.எஸ்.எம். வீட்டில் இல்லை. அதனால் அவர் ஊரில் இருக்கக்கூடிய இடங்களுக்குச் சென்று பார்த்தேன். கடைகள், சில நண்பர்களின் அலுவலகங்கள் என எங்கும் இல்லை. திரும்பவும் ஊருக்கே கிளம்பலாமென ஆண்டிப்பட்டிப் பேருந்து நிலையத்திற்கு வந்து நின்றபோது மதுரையிலிருந்து வந்த பேருந்திலிருந்து அவர் இறங்கினார். அவரிடம், ‘உங்களைச் சந்திப்பதற்காகத்தான் வந்தேன். நீங்கள் வீட்டில் இல்லாததால் ஊருக்குக் கிளம்பவிருந்தேன். நீங்கள் வந்துவிட்டீர்கள்’ எனச் சொன்னேன். தனக்குத் தெரிந்த ஒரு பாடகிக்கு உடல் நலமில்லாமல் மருத்துவமனையில் சேர்த்திருப்பதால் மதுரை சென்று பார்த்து வருகிறேன் என்று சொன்னார்.

இருவரும் டீக்கடைக்குச் சென்றோம். ஆர்.எஸ்.எம். டீயைப் பருகியபடி அந்தப் பாடகிக்குத் திடீரென யாரோ தன் காதில் வந்து பாடுவதுபோலவும் தான் பாடிக்கொண்டிருக்கும்போது பாடியது போதும் நிறுத்து எனச் சொல்லுவதுபோலவும் இருக்கிறது; மேடையில் பாடிக்கொண்டிருக்கும்போதே மயங்கிக் கீழே விழுந்து விட்டாள் என்றார். பிறகு நானும் ஜேம்ஸும் செங்கணாச் சேரிக்குப் போய் வந்தது குறித்துக் கேட்டார். நான் நடந்ததை முழுதும் சொன்னேன். லீலா என்ற பெயரில் தமிழ்நாட்டில் நிறைய பாடகிகள் இருப்பார்கள்போல. இப்போது மருத்துவமனையில் உள்ள பாடகியின் பெயர்கூட லீலாதான் என்றார்.

லீலா என்ற பெயரைக் கேட்டதும் ஆர்வம் கொண்டவனாக அப்பாடகியைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டி அவரிடம் கேட்டேன். ஒருவேளை நான் புகைப்படத்தில் பார்த்த லீலாவாகக்கூட அவள் இருக்கலாமென அவரிடம் விலாசத்தை வாங்கிக்கொண்டு சென்றேன். மதுரையில் போடி ஜமீன் பங்களாத் தெருவிற்கு அருகே லீலாவின் வீடு இருந்தது.

அவள் வீட்டு வாசலில் அவளது அப்பா அமர்ந்திருந்தார். மேடைப் பாடகி லீலாவின் வீடு இதுதானே எனக் கேட்டேன். லீலாவின் வீடு இதுதான், ஆனால் இப்போது மேடையில் பாடுவது கிடையாது என்றார். நான் ஏன் எனக் கேட்டேன். ஞாபக மறதி அதிகமாக இருப்பதால் தற்சமயம் ஓய்வில் இருக்க டாக்டர்கள் சொல்லியிருக்கிறார்கள்; அதுதான் அவள் வீட்டிலேயே இருக்கிறாளென அவர் சொன்னார். நாங்கள் பேசிக் கொண்டிருந்த சப்தத்தில் உள்ளிருந்து ஒரு பெண் வந்தாள். அவள் ஜேம்ஸ் காட்டிய புகைப்படத்தில் இருக்கும் லீலாவைப் போல இல்லை.

அந்தப் பெண்ணின் கூந்தல் உதிர்ந்துபோயிருந்தது. அவள் என்னைப் பார்ப்பதுபோல இருந்தபோதிலும் யாரையோ பார்ப்பதுபோலக் கண்கள் வெறித்திருந்தன. என்னைக் கடந்து வேறு எங்கோ இலக்கற்று நின்றிருந்தன அவளுடைய கண்கள். லீலா எல்லாப் பாடகிகளையும் போலத்தான் அவரவர்களுக்குப் பிடித்தமான பாடகிகளின் பாடல்களைப் பாடிப் பழகிப் பாடகியாகியிருந்தாள். அவள் ஒரு மேடையில் கச்சேரியில் பாடிக் கொண்டிருந்தபோது, அவள் காதில் யாரோ ஆண் பாடகனின் குரல் கேட்பதுபோல இருந்தது. கச்சேரியின் இரைச்சலில் தனக்கு இப்படிக் கேட்பதாகத் தன்னைச் சமாதானம் செய்துகொண்டவள் வீட்டிற்குச் சென்ற பிறகும் ஆணின் குரல் எப்போதும் கேட்டபடி இருப்பதை விரும்பாதவளாகக் காதைப் பொத்தத் தொடங்கினாள். அதையும் மீறி அந்தக் குரல் தொடர்ச்சியாகக் கேட்டபடி இருந்தது. காதை அடைத்தபடியேதான் தூங்கினாள். காதுகளை அடைத்தபடியேதான் சாப்பிட்டாள். இப்போதுகூடத் தன் காதில் கேட்கும் குரலின் திசையைக்கூட அவள் பார்த்தவளாக இருக்கலாம். நான் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன். திடீரென என்னைப் பார்த்து, ‘தங்க திங்கர சங்கர சிங்கர பிங்கர பிங்கர கங்கர குங்கர அங்கர ஆங்கர போங்கர ஏங்கர பேங்கர இன்னா செய்தாரை ஒருத்தர் அவர் நாண ஏங் கப்பக்கிழங்கே’ என்று பாடினாள்.

திரு. ஜேம்ஸைப் பார்க்க எல்.கே. பட்டிக்குச் சென்றேன். சமையல் செய்யும் பொருட்களால் மிகவும் கொடூரமான முறையில் ரோஸியினால் தாக்கப்பட்டுத் தனியார் மருத்துவமனையில் சேர்ந்திருந்தார். மருத்துவமனைக்கே சென்றுவிட்டேன். ரோஸி தன்னைப் பிறர் ஏசிவிடக்கூடாது என ரோஜாப்பூச் செடிகளுக்கு வைத்திருந்த மருந்தை மிகவும் குறைச்சலாகப் பருகி வாந்தி எடுத்து ஜேம்ஸின் அருகிலேயே படுத்திருந்தாள். அவரது இடது கண்பட்டையில் தையல் போட்டிருந்தார்கள். முன் பற்களில் ஒன்று உடைந்திருந்தது. தொடையில் இரண்டு பற்கள் பதியக் கடிபட்டிருந்தது. ரோஸியின் தாக்குதலில் நிலைகுலைந்திருந்தவர் இன்னும் அதிலிருந்து மீண்டெழவேயில்லை.

நடந்ததை நான் ரோஸியிடம் மெல்ல விசாரிக்க ஆரம்பித்தேன். ஜேம்ஸ் தொடர்ந்து நான்கு நாட்களாக லீலா லீலா என்று புலம்புவதாகவும் லீலாவைப் போலத் தன்னைப் பாடச் சொல்லி இரவு நேரங்களில் தொந்தரவு செய்வதாகவும் ரோஸி சொன்னாள். முதலில் இதை நான் நம்பவேயில்லை. ரோஸி அழுவதை நிறுத்தட்டுமெனக் காத்திருந்தேன். என்னை விட்டு செங்கணாச்சேரிக்குப் போகப்போவதாகச் சொன்னார்; அங்கு யார் இருக்கிறார்கள் எனத் தெரியவில்லை என்றாள். நான் வாய் தவறி அங்குதானே லீலா இருக்கிறாள்; அடிக்கடி ஆர்.எஸ்.எம்.மும் இவரும் சென்று வருவார்கள் என்றேன். அதற்கு ரோஸி, இருவரும் பார்த்துவரும் லீலா மதுரையில் போடி ஜமீன் பங்களாத் தெருவில் இருக்கிறாள்; செங்கணாச்சேரியில் யார் இருக்கிறார்களோ என திரும்பவும் அழுக ஆரம்பித்தாள்.

என்னால் எதையும் நம்ப முடியவில்லை. தலைசுற்றுவதுபோல இருந்தது. அப்படியே உட்கார்ந்துவிட்டேன். திரு. ஜேம்ஸ், உண்மையைச் சொல்லுங்கள்; நீங்கள் புகைப்படத்தில் காட்டிய லீலா எங்கு இருக்கிறாள் என்று சட்டையைப் பிடித்துக் கேட்க வேண்டும்போல ஆத்திரமும் கோபமும் கூடியது. ஆனால் ஜேம்ஸோ ஏதும் அறியாதவராகப் படுக்கையில் தூங்கியபடி கனவு காண்பவர்போலப் படுத்துக் கிடந்தார்.

ஒரு மாதம்வரை நான் ஜேம்ஸைப் பார்க்கவே இல்லை. அவரைப் பற்றிய செய்திகள் ஏதும் என் காதை எட்டாத வண்ணம் நடந்துகொண்டேன். ஜேம்ஸையும் லீலாவையும் மறக்க வேண்டுமென வேறு எங்காவது சென்று வரலாம் எனக் கன்னியாகுமரிக்குச் சென்றேன். கிரீன் பேலஸ் லாட்ஜில் ரூம் எடுத்து இரவு தங்கினேன். அந்த அறையிலிருந்த வாசனையும் கழிப்பறையில் இருந்த ஸ்டிக்கர் பொட்டுகளும் மதுபாட்டில்களின் மூடியும் லீலாவை ஞாபகப்படுத்தின. திரும்பத் திரும்ப என் மனம் ஜேம்ஸ் காட்டிய புகைப்படத்திலுள்ள முகத்தை நினைவுக்குக் கொண்டுவருவதற்கு என்னை அறியாமலேயே விரும்பியது. அன்றிரவுதான் லாட்ஜில் வேலை செய்யும் நடராஜனைச் சந்தித்தேன். தற்செயலான சந்திப்புதான். பாட்டிலைத் திறப்பதற்கு ஒருவரின் உதவி தேவைப்படும்போது அது யாராக இருந்தால் என்ன என்று அவரை அழைத்தேன்.

நடராஜன் அவசரத்தில் இந்த அறையை எனக்குத் தந்ததாகவும் அதனால் சுத்தப்படுத்தாமல் விட்டுவிட்டதாகவும் என்னிடம் சொன்னார். அவருக்கும் பாட்டிலின் மூடியைத் திறப்பதற்குச் சிரமமாகத்தான் இருந்தது. என் முகத்தைப் பார்த்தபடியே பேசிக்கொண்டிருந்தார். பிறகு திறந்துவிட்டார். வேண்டாம் என்று சொல்லச் சொல்ல அவரே எனக்கு ஊற்றித் தந்தார். டம்ளரை எடுத்து வாயில் வைத்துக்கொண்டு எதிரேயிருக்கும் மனிதனைப் பார்த்தபடி ‘உங்களுக்கு?’ என்று ஒரு வார்த்தைகூடக் கேட்காமல் எப்படி இருக்க முடியும். அவரும் சரி என்றதும் இன்னொரு டம்ளருக்கும் இருக்கைக்கும் ஏற்பாடு செய்துவிட்டு வந்தார். நாங்கள் இருவரும் குடித்தோம்.

அரை பாட்டில் மது உள்ளே ஆளுக்குப் பாதியாகச் சென்றதும் போதை ஏறியவர்களாக ஒருவரையொருவர் பார்க்க முடியாத வெட்கத்துடன் பார்த்துக்கொண்டோ ம். அவராகவே எதற்காக இங்கு வந்திருக்கிறீர்களெனக் கேட்டார். ஜேம்ஸைப் பற்றியும் நான் தேடிக் கொண்டிருந்த லீலாவைப் பற்றியும் சொன்னேன். போதையோடு கேட்டுக்கொண்டிருந்தவர் லீலாவின் பெயரைக் கேட்டதும் தெளிந்தவராக, இந்த லாட்ஜில்கூட லீலா என்ற பெண் தற்கொலை செய்துகொண்டாள் எனச் சொன்னார். நானும் போதையில் பாடகி லீலாவா எனக் கேட்டேன். அவள் பாடகியா என்று தெரியாது; ஆனால் இங்குதான் தற்கொலை செய்துகொண்டாள் எனத் திரும்பவும் சொன்னார். இறந்துபோன லீலாவைப் பற்றி அவர் சொல்வதற்கு மேலும் அரை பாட்டில் மது தேவைப்பட்டது.

இப்போதும் நடராஜன் அந்தப் பெண்ணின் ஞாபகமாகத்தான் இருந்தார். அவள் மேலும் சில நாட்கள் தங்கியிருந்தால் தான் அவளைத் திருமணம் செய்து கொண்டிருந்தாலும் ஆச்சரியமில்லை என்றார். பழைய துணிகளை வாங்கிக்கொண்டு புதிய எவர்சில்வர் பாத்திரங்களை விற்க, தெருத் தெருவாகவும் ஊர் ஊராகவும் அலைந்து திரிந்த பாத்திரக்காரனின் மகளான லீலா தன்னைவிட ஏழு வயது குறைவாக இருந்த கணேசனைக் காதலித்தாள். வீதியிலிருந்த முருங்கைமரத்தின் கீழ் நின்றபடி காற்றில் உதிர்ந்து கிடந்த முருங்கைப் பூக்களைப் பரீட்சை விடுமுறையில் எண்ணிக்கொண்டே இருந்த கணேசன் வழியில் போன எல்லாப் பெண்களையும் விடுத்து லீலாவை மட்டும் கண்ணில் மனம் வைத்துப் பார்த்தான். முதலில் மனமற்ற அவள் அவனைத் தன் சகோதரனாய் எண்ணிப் பேசினாள். பரீட்சையில் தோற்றால் இன்னொரு பரீட்சை இருக்கிறதென்றும் மற்ற பாடங்களை அதோடு எழுதி நிறைய மார்க்குகள் வாங்கலாமெனப் பரீட்சையில் தோற்றுப்போய்விடுவதாய் இருந்த கணேசனுக்கு ஆறுதல் சொன்னாள்.

வேறு நபர்கள் தங்களைக் கடந்து போனபோது பாடத்தைப் பற்றிய சந்தேகங்களையும் அவர்கள் ஊர் ஆசிரியர்களின் திறமைகளையும் சத்தமாய்ப் பேசினர். அப்போதும் முருங்கைமரம் பூக்களை உதிர்த்தபடிதான் இருந்தது. என்றும்போலவே ஊரிலிருந்து வீட்டிற்கு வந்த பாத்திரக்காரன் தன் மகளைத் தேடி வரும் பையனை அவளுக்குத் தம்பிபோல நினைத்துத் தன் மகளோடு பாடப் புத்தகங்களைப் பற்றிப் பேச முருங்கைமரத்திற்கு அனுப்பிவைத்தான். எப்போதும் போலவே யாருமில்லாத வேளையில் உள்ளங்கையைப் பற்றிக் கொண்டிருந்தவன் அன்று அக்கைகளுக்கு முத்தம் தந்தான். அவன் முத்தத்தின் ஈரம் உலர்வதற்கு முன்பே ஈரமற்ற தன் உதடுகளால் அவனுக்கு முத்தம் தந்தாள் லீலா. உப்பின் கரிப்போடிருந்த அந்த முத்தம் அவனுக்குப் பிடிக்கவில்லை. இனிப்பான முத்தத்தையே அவளிடமிருந்து வேண்டி நின்றான்.

பனி நிறைந்த காலை நேரத்தில் கணேசனின் ராத்தூக்கமற்ற கண்களில் இன்னும் போதை எஞ்சியிருந்தது. பற்றவைத்துக் குடிக்கப் பழகியிருந்தான். அவளைச் சந்திக்காத வேளையில் சிகரெட்டை ஊதி விட்டான். சினிமாவுக்குப் போவதாகச் சொல்லி, காசு வாங்கி சிகரெட் குடித்தான். கீழ் உதடு கருக்கத் தொடங்கிவிட்டது. பூக்கள் உதிராத காலத்தில் அவனுக்காகக் காத்திருந்தாள் லீலா. அவளது மதியநேரத்து நிழல், மரத்தின் கிளைகளைப் போல நெளிந்திருந்தது. பிறகு வீடு வந்து சேர்ந்த நேரம் அவன் அங்கிருந்தான். அவன் அம்மாவோடு சுவாரசியமாகப் பேசிக்கொண்டிருந்ததைக் கண்டு கோபம்கொண்டாள்.

அந்தத் தம்பி உனக்காக எவ்வளவு நேரம் காத்திருக்கிறது தெரியுமா என்று அம்மா சொல்வதையும் கேட்காமல் வீட்டிற்குள் சென்றாள். அவன் நாளை வருவதாகச் சொல்லிப் போனான். அவள் பயந்தது போலவே பரீட்சையில் தேர்ச்சிபெற்று இனிப்போடு வீட்டிற்கு வந்தான். வெளியூரில் படிக்கப்போவதாகச் சொன்னவுடன் இருவருமே இனி பேச வேண்டியது நிறைய உள்ளது என்பதுபோல முருங்கைமரத்தைப் பார்த்துக்கொண்டேயிருந்தனர்.

அவனது நினைவாகவே இருந்தவள் தனக்குச் சட்டி விற்பவனோ பெட்டி விற்பவனோ ஒருவனைத் திருமணம் செய்துகொள்ளத் தயாராக வேண்டுமெனத் தினந்தோறும் வேறுவேறு கோலங்களைப் போட்டுப் பழகிப் பொழுதுபோக்கிக்கொண்டிருந்தாள். ஊர்களில் வியாபாரத்தை முடித்துக்கொண்டு வீடு திரும்பிய பாத்திர வியாபாரியின் இரு பாதங்களும் சிவந்திருந்தன. எப்போதும்போல அவனுக்காக வெந்நீர் காய்ந்துகொண்டிருந்தது. இந்தமுறை எஞ்சிவிட்ட பாத்திரங்கள் தனது மகளுக்காக என்றும் தான் இனி எந்த ஊருக்கும் வியாபாரத்திற்குச் செல்லப்போவதில்லையெனவும் ஊருக்குள் எதிர்ப்பட்டவர்களிடம் சொல்லிக் கொண்டான்.

அவன் மனைவி கிளி வளர்த்ததை அப்போதுதான் பார்த்தான். கிளியின் கூண்டினுள் சிதறியிருந்த பழங்களின் வீச்சம் அறை எங்கும் இருந்தது. அந்த வீடே கிளிக்காகக் கட்டப்படடதுபோல ஜன்னல்களும் திறந்திருந்தன. வெளிச்சத்தால் வீடு முழுவதும் உஷ்ணம் நிரம்பி யிருந்தது. கிளி வளர்த்த ஒருவனின் ஞாபகம் அவனுக்கு வந்தது. கிளியை வளர்த்த அந்த ஆள் கடன்பட்டு ஊரைவிட்டு ஓடிப்போனான். கடன் கொடுத்தவன் ஊரெல்லாம் தேடி அலுத்துவிட்டபின் எங்கிருந்தோ தாடியோடு ஊர் திரும்பினான். தன்னிடம் ஒன்றுமில்லை என்றும் இருக்கிற கிளிக்கூண்டு யாருக்கேனும் வேண்டுமா எனவும் வீதியெல்லாம் கேட்டபடி போனான். தான் சாப்பிட்டுப் பல நாட்களாகிவிட்டது என்றும் கிளியை வாங்க வந்தவனிடம் சொன்னான். கிளியை வாங்க வந்தவன் ஊருக்குப் போகிற அவசரத்தில் கையில் காசைத் தந்துவிட்டு நடந்தான் தெரு வழியாக. அந்தக் காசைத் துப்பித் தூக்கி எறிந்தவன் இப்போதும் கிளியை வைத்துக் கொண்டுதான் திரிகிறானா என்று தெரியவில்லை. அவன் சொந்தக்காரர்களில் சிலர் பழைய துணியைத் தந்துவிட்டு அவர்களுக்குத் தேவைப்பட்ட பாத்திரங்களை வாங்கியபோது, கிளி வந்ததிலிருந்துதான் அந்தக் குடும்பம் நொடித்துப்போனது என்று பேசிக்கொண்டனர்.

அவனைப் போலவே தானும் கடன்காரனாக மாறி விடுவோமோ என்று அஞ்சினான். அவன் அச்சம் ஒரு கொடியென அவனுள் படர்ந்தது. இரவுகள் தோறும் தூக்கமற்றுப் புலம்பினான். பகலில் தூக்கம் கொள்ள, உடல் சோம்பலானது. எங்கும் செல்லாது வீடே கதியெனக் கிடந்தான். உறக்கமற்ற உடலுக்கு உணவு செல்லவில்லை. மூத்திரம் பெய்வதுகூடச் சோம்பலானது. தண்ணீர் குடிப்பதைக் குறைத்து நா வறண்டு கிடந்தான்.

மனைவியும் மகளும் என்றும்போலிருக்கிற அப்பாவைக் கவனிக்காது இருந்தனர். மகளற்ற வேளை தன் மனைவியின் முன் வெகுநேரம் நின்று பின் எப்போதும் உட்கார்ந்திருக்கும் இடத்திற்கு நகர்ந்தான். அவன் குணம் புரியாது திகைப்புற்றுப் பயந்தாள் அவன் மனைவி. யாருமில்லாத வேளையில் அவனாகச் சிரித்ததைச் சொன்ன அடுத்த வீட்டுப் பெண்ணின் வார்த்தைகளை அவள் பொருட்படுத்தாமல் இருந்தாள். ஒரு வார்த்தை பேசியே கோபமாக எல்லோரையும் பார்த்தவன் நேற்றிலிருந்து ஒரு வார்த்தையும் பேசாது கண்களில் நீர் வடியக் கிடந்தான். தன் அப்பாவின் மேல் லீலாவிற்குக் கோபம் வந்து திட்டிவிடக்கூடத் தோன்றியது. தன்னைக் காணும் வேளையில் அழுதுவிடுவதைக் கண்டு அவள் வெறுப்புற்றாள். தன்னோடு படித்த எல்லோருக்கும் மாப்பிள்ளை பார்க்க அவரவர்களின் அப்பாமார்கள் ஓடோ டி பஸ் ஏறிப்போவதைக் கண்டு வயிறு எரிந்து தன் அப்பாவின் மீது கோபங்கொண்டாள். தன்னை யாருமே பொருட்படுத்தாது இருப்பதைக் கண்டு பயந்தாள் லீலா. என்றும்போல் முருங்கைமரத்தின் கீழ் இலைகள் உதிர்வதைக் கண்டபடி நின்றாள். வீட்டின் உள் அறையில் படுத்துக் கிடந்த பாத்திர வியாபாரி கிளியின் விழிகளையே பார்த்துக்கொண்டிருந்தான். கிளியின் ஆட்டத்தில் கூண்டு ஆடி ஆடி நின்றது. கிளி தன் உணவு நேரத்தைப் பிறருக்கு உணர்த்தியபடியிருந்தது. அதன் குரலில் கோபமுற்றுக் கூண்டைத் திறந்தான்.

வெளியில் பறக்கவிடவே நினைத்து எழுந்தவன் கூண்டின் வீச்சத்தில் வெறுப்புற்றுக் கிளியைக் கொல்ல அதன் கழுத்தைக் கடித்துத் துப்பினான். ரத்தப் பிசுபிசுப்போடு அதன் இளம்பசுமை நிறம் கொண்ட இறக்கையைக் கடித்தான். ஒவ்வொரு இறகாய்ப் பிய்த்துப் பிய்த்துத் தரையில் வீசினான். யாரும் காணாத இடத்தில் புதைக்க எண்ணி வெளியேறிய சமயம் அவன் மனைவி இன்னது நடந்திருக்கிறது என்று புரிந்துகொண்டாள். ஆத்திரத்தில் வாசலிலேயே ஆங்காரமாய்த் திட்ட, வாசல்தோறும் அமர்ந்திருந்த பெண்கள் அவள் வீட்டின் முன் கூடிவிட்டனர். அவள் தன்னை அறியாமலேயே தன் கணவனின் பலவீனத்தை ஒரு வசைச் சொல்லாக்கி எல்லாப் பெண்களின் முன்னும் அவனை ஏசினாள். இனி, தன் வீட்டில் தனக்குக் குடிக்கத் தண்ணீர்கூடக் கிடைக்காது என்று பாத்திர வியாபாரி முருங்கை மரத்திற்கு வெகு தொலைவில் ஒற்றையடிப் பாதையில் முடியும் இடமான விஷக் கிணற்றில் விழுந்து இறந்து போனான்.

கிளியின் துக்கத்தைவிடத் தன் கணவன் இறந்த துக்கம் தனக்குப் பெரிதாக இல்லையென்ற நினைப்பில் எஞ்சிய ஒரு துளிக் கண்ணீரையும் கிளிக்காக விட்டுத் துக்கம் முடித்தாள். யாரும் அறியாத அந்த வசைச் சொல்லின் அர்த்தத்தை எல்லாப் பெண்களும் அவரவர் சௌகரியங்களுக்கு அர்த்தமாக்கி வாசல்தோறும் லீலாவின் பிறப்பைப் புதிதான வழிகளில் பேசித் தீர்த்தனர். லீலாவிற்குத் தன் அம்மாவின் மீதும் அவ்வூரின் மீதும் கோபம் பெருகியபடி இருந்தது. அவள் ஊரைவிட்டு ஓடிவிட எண்ணிய வேளையில் பூக்கள் பூக்க ஆரம்பித்தன. தான் பிறந்து வளர்ந்து படித்துத் திரிந்த ஊரில் இறந்துவிடக் கூடாதென்று தொலைதூர நகருக்குத் தன் அம்மாவை அழைத்தாள். வராத அம்மாவோடு சண்டைபோட்டுச் சாப்பிடாது அன்று இரவு தூங்கினாள். விடியற்காலையில் தன் தோடுகளை ஜோடியாகக் கழற்றித் தந்து பால் வேனில் பயணமானாள் அவள் நினைத்திருந்த நகரத்திற்கு. அவள் சென்றடைய வேண்டிய நகரத்தின் விளக்குகள் விடிகாலையில் அணைந்திருந்தன. லாட்ஜ் இருக்கும் வீதிகளில் தன்னை இறக்கி விடும்படி பால்காரனிடம் கேட்டுக்கொண்டாள். அப்போது நடராஜன் மானேஜராக இருந்த வேளை. அவளுக்கான மேல்மாடி அறையில் மின்விசிறியை அடிக்கடி வேகமாகச் சுழலவிட்டுப் பின் நிறுத்திச் சரிபார்த்துக் கொண்டாள். தன் பள்ளி நாட்களில் தாவணி அணிந்து சென்ற முதல் நாளைத் திரும்பத் திரும்ப நினைவு கொண்டவளாக அன்றிரவு இறந்துபோனாள்.

நடராஜன் லீலாவைப் பற்றிக் கூறியதும் நம்ப முடி யாதவனாக, என் எதிரே யாருமேயில்லை என்பது போன்ற பிரமையோடு அமர்ந்திருந்தேன். திரும்பத் திரும்ப லீலா என்ற பெயரும் ஏதேனும் ஒரு லீலா பற்றிய தகவல்களும் எனக்குக் கிடைக்கின்றனவே எனக் காலையில் அறையைக் காலிசெய்வதென முடிவுசெய்தேன்.

காலையில் அறையைக் காலிசெய்துவிட்டு பஸ் ஸ்டாண்டிற்குச் சென்றேன். கூட்டம் அதிகமில்லாத பேருந்தாகப் பார்த்து ஏறி அமர்ந்துகொண்டேன். வழி நெடுக நடராஜன் சொன்ன லீலாவைப் பற்றியே நினைத்துக்கொண்டு வந்தேன். லீலாவை மறப்பது எப்படி என்றுதான் எனக்கு யோசனையாக இருந்தது. ஒரு லீலா போய் இரண்டு மூன்று லீலாக்கள் இப்போது ஞாபகங்களில் சேகரமாகிவிட்டார்கள்.

மதுரைக்கு வருவதற்கு மாலையாகிவிட்டது. பேருந்தை விட்டு இறங்குவதற்கு முன்பாக ஜேம்ஸ் தந்த லீலாவின் புகைப்படத்தை நான் அமர்ந்திருந்த இருக்கைக்கு அடியில் கிழித்துப்போட மனமில்லாமல் கீழே போட்டு விட்டுப் பேருந்தைவிட்டுக் கீழே இறங்கினேன். திரும்பிப் பார்க்காமல் நடந்து பேருந்து வாசலில் நின்றேன். யாரேனும் புகைப்படத்தை எடுத்து என்னிடம் தந்து விடுவார்களோ என்று பயந்தபடி நடந்தேன். கொஞ்ச தூரம் சென்று திரும்பிப் பார்த்தேன். நன்றாகத் தெரிந்தது. ஒரு பெண் நான் விட்டுவிட்டு வந்த புகைப்படத்தை எடுத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் லீலா மாதிரிதான் இருந்தாள்.

Print Friendly, PDF & Email

1 thought on “லீலா மற்றும் லீலாவின் கதைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *