21G-யில் ஏறுவது என்பது இப்போதெல்லாம் பெரும் போராட்டமாக ஆகிவருகிறது. யார்யாரோ எங்கிருந்தோ வந்து இந்த நகரத்தில் குடியேறிக்கொண்டே இருக்கிறார்கள். இந்த நகரம் அத்தனைப் பேரையும் முகம் சுழிக்காமல் தாங்கிக்கொள்கிறது. அவ்வளவு பேருக்கும் இங்கு இடமிருக்கிறது என்பது ஆச்சர்யம் தான். ஆனால் பேருந்தில்தான் இடமிருப்பதில்லை. அதுவும் 21G-யில் இரண்டு கால்களையும் ஊன்றி நிற்க இடம் கிடைத்தாலே போதும். ஆனந்தம் தான். அமர இடம் கிடைத்தால் பேரானந்தம். ஆனால் ஆனந்தம் போதும். இந்த நகரத்தின் பேருந்துகள் ஆசையை அடக்கக் கற்றுத்தரும் போதிசத்த்துவர்கள்.
பேருந்து கிண்டி எஸ்டேட் ஸ்டாப்பில் நிற்பதற்கு முன்பே ஏறிவிட வேண்டும். கிண்டி எஸ்டேட் வளைவினுள் நுழையும் போது ஏதாவது ஷேர் ஆட்டோ பேருந்தின் முன் வந்து நின்று ஆள் ஏற்றும்.
“யோவ். TN 22 1587 ஆட்டோவ எடுயா…” நேரக்காப்பாளர் கத்துவது வழக்கமாக நடக்கும் ஒன்றுதான்.
அந்த ஒருநிமிடத்தில், ஆட்டோவை கடந்து சென்று பேருந்தில் ஏறிக்கொள்ள வேண்டும். பேருந்து ஸ்டாப்பில் நிற்கட்டும், ஏறிக்கொள்ளலாம் என்ற நினைப்பெல்லாம் நின்றுகொண்டே காணும் பகல் கனவு. நிறுத்தத்தில் ஒரு பெரும் கூட்டம் அடித்துப்பிடித்து ஏறுகிறது. சித்தாள் வேலைக்குச் செல்லும் பெண்கள், மேஸ்திரிகள், ஒல்லியான ஆசாமிகள், பள்ளிக்கூடப் பிள்ளைகள், இயர்போன் மைக்கை உதட்டில் கடித்து ரகசியம் பேசும் இளம்பெண்கள், கழுத்தில் தங்கச் சரடு இருக்கிறதா என்று தொட்டுப்பார்த்துக் கொள்ளும் நடுத்தர வயது பெண்கள், போனை சப்தமாக பேசிவரும் வயதானவர்கள், கையில் பைல் வைத்திருக்கும் வேலைத்தேடுபவர்கள், நிறம் வெளுத்துப்போன மஞ்சள் கயிறு மட்டும் அணிந்தவர்கள், முதுகில் பெரிய குழாய் ஒன்றாய் மாட்டியிருக்கும் பொறியியல் கல்லூரி மாணவர்கள், சப்பாத்தி-தால் கட்டிய டிப்பன் பையை இறுகப்பிடித்துக் கொள்ளும் வெளிமாநில தொழிலாளர்கள், இந்த பஸ் கோட்டூர்புரம் போகுமா என்று கேட்கும் புதியவர்கள், இன்னும் யாரோ யாரோ.
இவர்கள் அனைவரையும் கடந்து ஏறுவதற்கு தனி மனபலம்
வேண்டியிருக்கிறது. பெண்கள் முதலில் ஏறட்டும் என்று வழிவிட்டு நின்றால், அதே இடைவெளியில் பல ஆண்களும் ஏறிக்கொள்கிறார்கள். நாமும் பேருந்தை தொற்றிக்கொள்ளலாம் என்று நினைக்கும் போது தான் கட்டம்போட்ட சட்டையும் காதில் கடுக்கனும் போட்ட, ஆறேழு பள்ளிக்கூட மாணவர்கள் புட்போர்டில் ஏறி நிற்கிறார்கள்.
தொங்கும் சாகசம் அறியாதவர்கள், 21G என்ற பலகை கண்முன் மறைவதை பார்த்துக்கொண்டே நிற்கவேண்டும். அதனால் தான் பேருந்து, ஸ்டாப்புக்குள் நுழைவதற்கு முன்பே ஏறவேண்டியிருக்கிறது.
“இறங்குனோன ஏறுங்க… ” யாரவது ஆணோ பெண்ணோ சொல்லக்கூடும். அதை காதில் வாங்கிக்கொள்ளாமல், உடம்பை குறுக்கிக்கொண்டு உள்ளே நுழைந்துவிட்டால், கியர் பெட்டி அருகே போய் நின்றுகொள்ளலாம். கோட்டுர்புரம் வரை சமாளித்தால் போதும். அதன்பின் பிரச்சனையில்லை. கூட்டம் குறைந்துவிடும்.
ஆனால் உடம்பை குறுக்கிக்கொண்டு ஏறுவதும் எளிதல்ல. யாராவது விடாபிடியாக இடம்விடாமல் வழியை மறைத்துக்கொண்டு நிற்பார்கள். போதாக்குறைக்கு பக்கத்தில் இருப்பவன் பெரிய பையை முதுகில் சுமந்துகொண்டு நிற்பான். தள்ளும் திசைக்கு மனிதன் நகர்கிறான். பைகள் நகர்வதில்லை.
“பேக கழட்டுயா… நிக்கவே இடமில்ல…” யாராவது சண்டையை ஆரம்பிக்கும்வரை அவன் பையைக் கழட்டப்போவதில்லை. பை ஆசாமிகளை, அல்லது விடாபிடியான ஆசாமிகளை கடந்து உள்ளே நுழைவதற்குள் சட்டை கசங்கி விடுகிறது. இதுதான் இப்போதெல்லாம் பெரும் மன வருத்தத்தை தருகிறது.
இஸ்திரி கடை குட்டி சட்டைக்கு எட்டு ரூபாய் வாங்குகிறான். பேண்ட்டை கையிலேயே இஸ்திரி செய்துகொள்கிறேன். சட்டையை அப்படி செய்ய முடிவதில்லை. ஆறுநாளைக்கு நாற்பத்தெட்டு ரூபாய். ஐம்பது ரூபாயை நீட்டினால், சில்லறை இல்லை என்று இரண்டு ரூபாயையும் குட்டியே வைத்துக்கொள்கிறான். இல்லை, வைத்துக்கொள்கிறார் பெயர்தான் குட்டி. பள்ளிக்கூட வயதில் என் அப்பாவின் சட்டையை ஒரு ரூபாய்க்கு இஸ்திரி போடக் கொடுப்பேன். அப்போதே குட்டிக்கு காதுமுடி நரைக்கத் தொடங்கி இருந்தது. இப்போது தலையெல்லாம் கருப்பு சாயம் பூசி நிற்கிறார். வயது என்னைவிட இரண்டு மடங்காவது அதிகம் இருக்க வேண்டும். மளிகைக்கடையாக இருந்தால் மீதம் இரண்டுரூபாய்க்கு மிட்டாய் கொடுப்பார்கள். குட்டி கரித்துண்டுகள் தான் வைத்திருக்கிறார். அம்மாவை ஒரு பைசா ஏமாற்றமுடியாது. நான்தான் குட்டி தொடங்கி பேருந்து நடத்துனர் வரை எல்லோரிடமும் ஏமாந்துவிடுகிறான்.
“மந்தைவெளி பதினேழு ரூபாய், ரெண்டு ரூபாய் தா…” என்றவரே என் இருபதுரூபாய் நோட்டை வாங்கிக்கொள்கிறார்கள் நடத்துனர்கள்.
“இல்ல…”
“ஹான்…”
“சில்லறை இல்ல…” எவ்வளவு சில்லறை மாற்றி வைத்துகொள்வது. ஒருநாள் போல் ஒருநாள் இருப்பதில்லை.
“சரி சரி, இறங்கும்போது வாங்கிக்கோங்க…”
மந்தைவெளி சுபம் கணேசன் கடையிடம் வரும்போது, முன்னிருந்து, அசையும் பேருந்தில் அசைந்தவாறே நிதானமாக கம்பியைப் பிடித்து நடந்து, பின்னிருக்கும் நடத்துனரிடம்,
“மூன்றுவா சில்லறை பாக்கி” என்று சொல்ல வேண்டும். ஒரு நிமிடம் புரியாதவர் போல் பார்த்துவிட்டு, பஸ் நிறுத்தத்தை அடையும் போது, விசிலை ஊதியவாறே கையில் சில்லறையைத் திணிப்பார். கீழே இறங்கிப் பார்த்தால் இரண்டு ஒரு ரூபாய் நாணயங்கள் தான் இருக்கும். ஒரு ரூபாய்க்காக பேருந்து பின்னே ஓடமுடியாது. அடுத்தமுறை சுதாரிப்பாக இருக்க வேண்டும். ஆனால் நிறைய அடுத்தமுறைகள் வந்து போகின்றன, கூடவே ஒருரூபாய்களும்.
சில்லறை பிரச்சனையைக்கூட சமாளித்து விடமுடியும். சட்டை கசங்கும் பிரச்சனை நம் கையில் இல்லை. சுதாரிப்பாக கம்பியில் சாய்ந்தவாறே நின்றுகொள்ள வேண்டும். அப்படியே யாரவது இடித்தாலும், சட்டை கசங்கினாலும், பாலிஸ் செய்து அணிந்துகொண்ட ஷூ அழுக்கானாலும் அமைதியாக நிற்கவேண்டும். பேருந்து பயணம் ஆசையை அடக்க மட்டுமல்ல, பொறுமையையும் கற்றுத் தருகிறது. ஆனால் கம்பியின் அருகே. கியர் பெட்டியின் அருகே இடத்தைப் பிடித்துக்கொள்ள நமக்கிருக்கும் அவகாசம் சிலநிமிடங்கள் மட்டும்தான். சில நிமிடங்கள் தவறினால் உங்களுக்கு கிடைத்திருக்க வேண்டிய எதுவும் உங்களுக்கு கிடைக்காது என்று சொல்லி பயமுறுத்துவதே இந்த நகரத்தின் நோக்கமோ!
ரயில் வர சில நிமிடங்கள் தாமதாகும்போதும் இந்த பயம் தொற்றிக்கொள்கிறது. சானடோரியத்தில் 8.20-க்கு வந்திருக்க வேண்டிய ரயில், 8.25க்கு வந்தது. கிண்டி சுரங்கப்பாதையில் ஓட்டமும்நடையுமாக ஏறி, வெளியே வரும் போது, பேருந்து எஸ்டேட் நிலையத்திற்குள்ளிருந்து வெளியே திரும்பியது. உள்ளே கூட்டம் குறைவாக இருப்பதாக தெரிந்தது. சில நாட்கள் மட்டும் நிகழும் அதிசயம்.
யோசித்தேன். அடுத்த பேருந்து வர இன்னும் அதிக நேரமாகலாம். சரியாக 9.45-க்கு நிர்வாக மேலாளர் அறைக்குள் இருக்க வேண்டும். ஹெட்ஆபிஸ் ஆசாமிகளோடு பத்துமணிக்கு வீடியோ கான்பரன்ஸ் தொடங்குவதாக சொல்லியிருந்தார்கள். உள்ளே எல்லோரும் அமர்வதற்கு இருக்கைகள் இருக்காது. வெளி அறையிலிருந்து தான் இழுத்துக் கொண்டு செல்ல வேண்டும். எல்லோரும் அறையினுள் அமர்ந்தபின், நான்மட்டும் தாமதமாக என் இருக்கையை இழுத்துக் கொண்டே சென்றால், எல்லோரும் கேலியாக பார்க்கக் கூடும். அவமானத்தை தவிர்க்க வேண்டுமெனில் பேருந்தில் ஏறியாக வேண்டும். ஆனால், இப்போதும் எனக்கு இருக்கும் அவகாசம் சில நிமிடங்கள்தான். இல்லையேல் ஓட்டுனர் கதவை சாத்திவிடுவார். பேருந்து நோக்கி ஓட்டமெடுத்தேன்.
ஓட்டுனர், கதவை பூட்டுவதற்கான பொத்தானை அழுத்துகிறார். கதவின் இடுக்கிலிருந்து வரும் ‘உஷ்’ என்ற சப்தம் அதை உறுதி செய்கிறது. என் வலது காலை படிகட்டில் வைக்கும் போது கதவு அருகாமையில் வருகிறது. வேகமாக உள்ளே தாவிவிட்டேன். கதவு மூடிக்கொண்டது,
ஓட்டுனர் சொன்ன வார்த்தை அம்மா காதில் விழுந்திருந்தால், அவள் பேருந்தை வெட்டி ஊறுகாய் போட்டிருப்பாள். நான் அந்த வார்த்தை என் காதில் விழாதது போல் அமைதியாக நின்றேன். சகிப்புத்தன்மையையும் கற்றுத்தருகிறது இந்நகரின் பேருந்துகள்.
“அடுத்த பஸ்ல எறினாதான் என்ன?” அந்த நடுத்தரவயது பெண்மணி கேட்டாள்.
நான் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தேன். ஏனோ அவளிடம் அதிகம் பேச எனக்கு விருப்பமில்லை.
“இப்ப கஷ்டப்படுறது நீதான!” என்றவாறே கொதித்துக்கொண்டிருக்கும் மெழுகினுள்ளிருந்து துணியை எடுத்து என் முட்டி மீது வைத்து ஒத்தடம் கொடுத்தாள். அதிகம் சுட்டது. தாங்கிக்கொள்ள பல்லைக் கடித்துக் கொண்டேன்.
“கொஞ்சம் பொறுத்துக்கோ…! முட்டி ஸ்ட்ரைன் ஆகிருக்கு” அவள் சொன்னாள். நானும் பேச வேண்டுமென்பதற்காக பதில் சொன்னேன்.
“ஆமா மேடம். டாக்டர் சொன்னார்”
“நத்திங் மேன். இட்ஸ் ஜஸ்ட் ஏ ஸ்ட்ரைன்”
என்று சொல்லிவிட்டு சம்ப்ரதாயமாக சிரித்தார் அந்த குறுந்தாடிக்கார டாக்டர்.
அவரைப் பார்ப்பதற்காக இரண்டு மணிநேரம் காத்திருக்க வேண்டிருந்தது. மருத்துவமனையிலும் பேருந்து போல் அவசரகதி கூட்டங்கள். ஏதோ ரோபோ போல் இயங்கிய அந்த டாக்டர், முட்டியை தொட்டுப்பார்த்துவிட்டு,
“பைவ் டேய்ஸ் பிசியோ கொடுத்தா சரியாகிடும்” என்றார். டாக்டர் அறையின் உள்ளே நுழைந்ததற்கும் வெளியே வந்ததற்குமிடையே இரண்டேமுக்கால் நிமிடங்கள் மட்டும் தான். ஆர்த்தோ டாக்டர் என்பதால் ஐநூறு ரூபாய் பீஸ். இது இல்லாமல் பிசியோவிற்கு தனியாக கொடுக்க வேண்டும். ஒரு நாளைக்கு முந்நூறு ரூபாய் என்றால், ஐந்து நாட்களுக்கு ஆயிரத்தைநூறு ரூபாய் அழ வேண்டும். காலையில் நூற்றி ஐம்பது கொடுத்து ஆட்டோவில் போயிருக்கலாம். எதுவும் நம் கையிலில்லை. இயன்முறை மருத்துவம் என்ற பலகையை தாங்கிய அறையின் வாசலிலும் பெரும்கூட்டம்.
இப்போதெல்லாம் என்ன நோய் என்று போனாலும் பிசியோதெரப்பி கொடுக்க சொல்லிவிடுகிறார்கள். ஒவ்வொரு நோய்க்கும் ஒருவகையான பிசியோதெரப்பி கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள். மூக்கு வலி என்று போய் நின்றால் என்ன செய்வார்கள் என்று பார்க்க வேண்டும்.
“பைல கொடுங்க…” பின்னிருந்து ஒரு மெல்லிய குரல். திரும்பினேன். அவள் நின்றுகொண்டிருந்தாள்.
‘அப்படியே நம்ம போட்டு தாக்கனும்’ ஒருகணம் கல்லூரியில் பார்த்த படம் நினைவுக்கு வந்து மறைந்தது.
அவள் பைலை பார்த்தாள், நான் அவளைப் பார்த்தேன்.
அவளுக்கு என்னைவிட வயது குறைவாக தான் இருக்கும். அழகாக இருந்தாள். திருமணம் ஆகாதவளாக தான் இருக்க வேண்டும். அதை உறுதி செய்திகொள்ள அவளை பார்வையால் துலாவினேன்.
கழுத்தில் தாலி இல்லை. மெல்லிசான செயின் ஒன்று இருந்தது. செயினில் ஒரு ஆர்ட்டின் டாலர். அவள் வெள்ளை சீருடைக் கழுத்தில் நடுநாயகமாக அமர்ந்திருந்த சிகப்பு ஆர்ட்டின் எனக்கு ஏதோ செய்தி சொல்லியது. கையில் மோதிரம் அணிந்திருக்கவில்லை. இதெல்லாம் இல்லாமல் கூட அவளுக்கு… அதிகம் யோசிக்காதே என்றது மனம். அவள் வரிசையாக ஒவ்வொருவரிடமும் பைலை வாங்கினாள்.
நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். அதுவரை கடுக்கென்று வலித்துக்கொண்டிருந்த முட்டி சரியானது போல் ஓர் உணர்வு. அவளிடம் பிசியோதெரப்பி செய்துகொள்ளவே ஒரு பெரும் கூட்டம் நின்றாலும் ஆச்சர்யமில்லை.
“ஏண்டா உன் டேஸ்ட் இப்படி இருக்கு. இவளைவிட லட்சணமா உனக்கு ஒரு பொண்ண பாத்து வைக்குறேன்” என்று அம்மா சொல்லக் கூடும். இப்படி சொல்லியே எனக்கு வயதாகிவிட்டது. ஆனால் இதுதான் அழகு என்று யார் சொல்ல முடியும். என் பார்வைக்கு அழகாக இருந்தாள். எனக்கு பிடித்திருந்தது. அம்மாவிடம் இப்படி போய் சொல்லலாம். அதற்கு முன்பு இவளிடம் பேச வேண்டும்.
அவளோ கடைசி இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு சிறுவனை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தாள். அவனுக்கு ஏழெட்டு வயதுதான் இருக்கும். தன் இடது தோள் பட்டையை பிடித்து கொண்டு,
“வலிக்குதுமா” என்று அலறினான். கொஞ்ச நேரம் அவன் அலறல் மட்டுமே மருத்துவமனயை நிறைத்தது. அவன் தாய் அருகில் பதட்டமாக நின்றுகொண்டிருந்தாள்.
“கிரௌண்ட்ல விழுந்துட்டான்…” அவன் அம்மா சொன்னாள்.
“ஒன்னும் இல்ல தம்பி, சரியாகிடும்….” இவள் அந்த சிறுவனின் மோவாயை பிடித்து நிமிர்த்தி சொன்னாள். நான் அந்த சிறுவனாக இருந்திருக்கலாம். அதுவரை அலறிய அந்த சிறுவன் அமைதியாகி விட்டான். அவளிடம் ஏதோ மந்திரம் இருக்கிறது. பார்த்தால் வலி தீர்க்கும் மந்திரம்.
“ரிப்போர்ட்லாம் நார்மல் தான் மேடம். டாக்டர் அல்ட்ரா சவுண்ட் கொடுக்க சொல்லிருக்கார்….” அவள் பேசிக்கொண்டே இருந்தாள். சுற்றிலும் இருள் கவிந்து, அவள் மட்டும் ஒளிர்வது போல் இருந்தது. நான் பார்த்துக் கொண்டே இருந்தேன். காலம் பின்னோக்கி சுழல்கிறது. நினைவுகளுக்கு வயதாவதில்லை. மகிழ்ச்சியான தருணங்களை நினைக்கும் போது நமக்கும் வயது குறைந்து கொண்டே போகிறது. எல்லாத் தருணங்களும் கண்முன்னே காட்சிகளாக ஓடுகின்றன. கல்லூரியின் நிரஞ்சனி, டியூஷன் சென்டர் பார்கவி, பள்ளிகூடத்தின் கோதை…
“மச்சி உன் ஆளு போறாடா…” ஏழாம் வகுப்பில் கோதை கடந்து போன போது ராமு தான் கத்தினான். இப்போது ராமு இருந்தால் நன்றாக இருக்கும். இவள் பெயரை சொல்லி கத்துவான். ஆனால் இவள் பெயர் என்ன!
மீண்டும் அங்கே ஒளிவந்தது.
நான் அவள் அணிந்திருந்த ஐடி கார்டில் பேர் என்ன என்று பார்க்க முயன்றேன். அவள் என்னை கவனித்ததும் தலையை திருப்பிக் கொண்டேன். அருகில் வந்தவள்,
“உள்ள, லாஸ்ட் ரோக்கு போங்க… வரேன்…” என்றாள்.
உள்ளேச் சென்று, திரைக்கு பின் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்துகொண்டேன். பக்கத்தில் உலை போல் மெழுகு கொதித்துக் கொண்டிருந்தது.
சிறிது நேரம்தான். யாரோ வருவது போல் இருந்தது. அவள் வந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள் என்று பாடவேண்டும் போல் இருந்தது. என் இதழில் ஒரு புன்னகை. வெட்கத்தின் வெளிப்பாடாக இருக்கலாம்.
திரையை விலக்கிக் கொண்டு நடுத்தரவயது பெண் வந்தாள். அவள் நிறைய பேசினாள். ஏனோ அவளிடம் அதிகம் பேச எனக்கு விருப்பமில்லை.
அவங்க வரலையா என்று கேட்கலாம். எவங்க என்று இந்த பெண் கேட்கக்கூடும். ஒருவேளை நான் கண்கொட்டாமல் கவனித்ததை அவள் கவனித்ததன் பேரில்தான் அவள் வரவில்லையோ என்றுத் தோன்றியது. எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தேன்.
பத்துநிமிடம் முட்டியில் துணியை சுற்றி சுற்றி எடுத்தாள். முட்டி அதிகம் வலித்ததா அல்லது எறிந்ததா என்று தெரியவில்லை. ஆனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதை உணர்த்தவள் மெழுகு கொதிக்கும் களத்தில் இருந்த பொத்தானை அழுத்தினாள். அதன் சூடு குறைவதை உணர முடிந்தது. தன் கை கிளவுசை சரி செய்து கொண்ட அவள், மீண்டும் துணியை மெழுகில் போட்டு எடுத்து என் முட்டி மீது வைத்தாள். இப்போது கால் வலியும் கொஞ்சம் குறைந்தது போல் இருந்தது.
“உங்களுக்கு கை சுடாதா!” என்று கேட்டேன்.
“பழகிருச்சு… உனக்கு என்ன வயசாகுது?”
“முப்பது…”
“பாத்து பஸ் ஏறி இறங்கு…” என்று சொல்லிவிட்டு துணியை ஓரமாக உலற வைத்தாள்.
எதற்கு என் வயதை கேட்டாள் என்று தெரியவில்லை, ஒருவேளை முப்பது வயதாகியும் பேருந்தில் சரியாக ஏறத் தெரியாமல் அவளிடம் சிகிச்சைக்கு வந்த முதல் ஆள் நானாக இருக்கலாம். இருபத்தைந்து வயது என்று சொல்லியிருக்கலாம். எனக்கு என்ன குறை. கொஞ்சம் முடிதான் கொட்டிவிட்டது. என் யோசனையை கலைக்கும் விதத்தில் அவள் பேசினாள்.
“என்ட்ரன்ஸ்ல ஜெனிப்பர் சிஸ்டர் இருப்பாங்க. அவங்க முட்டிக்கு வைப்ரேசன் வைப்பாங்க, போ” என்றாள்.
இருக்கையில், கண்ணாடி அணிந்த ஒரு வயதான பெண்மணி அமர்ந்து ரெஜிஸ்டரில் ஏதோ எழுதிக் கொண்டிருந்தாள். அவள் என் வயதை கேட்டால் இருபத்தைந்து என்று சொல்ல வேண்டும் என்று எண்ணியவாறே, “ஜெனிப்பர் சிஸ்டர்!” என்றேன்.
என்ன என்பது போல் பார்த்தாள்.
“வைப்ரேசன்…” என்று இழுத்தேன்
“உக்காருங்க வருவாங்க…” என்று என் பைலை மட்டும் வாங்கி மேஜையில் வைத்துக் கொண்டாள். நான் அருகாமையிலிருந்த மெத்தையில் அமர்ந்தேன். அவள் எழுந்து மெத்தையை சுத்தி இருந்த திரையை மூடிவிட்டு மீண்டும் தன் இருக்கையில் அமர்ந்துகொண்டாள். மெத்தையில் மேலேறி சாய்ந்த வாக்கில் அமர்ந்தவாறே காலை நீட்டிக் கொண்டேன். சிறிது நேரம் வெகு நேரம் போல் கடந்தது. என்ன செய்வது என்று தெரியாமல், போனை எடுத்து கிண்டிலுக்குள் நுழைந்தேன். மாசற்ற காதல் என்றொரு கதை கண்ணில் பட்டது. இப்போது காதல் கதை படிக்க வேண்டுமென்று போலிருந்தது. கதையை திறந்தேன்.
மனிதனை மிருகத்திடமிருந்து மாறுபடுத்திகாட்டுகிற ஒரே விடயம் காதல். மிருங்களுக்குள்ளும் காதலுண்டு. ஆனால் அதன் மையப்புள்ளி வேறு. அதற்கு பகுத்து உணர்கிற சக்தி கிடையாது. ஒரு நாய் ஒரே நேரத்துல நிறைய நாய்களோடு காதல் கொள்ளும். ஆனா மனிதன் அப்படி இல்லை. அப்படி இருந்தா அவன் மனிதனும் இல்லை, அது காதலும் இல்லை
காதலுக்கு மனோதத்துவரீதியான விளக்கத்தை ஆராய வேண்டியதில்லை. அப்படி ஆராய முற்பட்டால் காதல் என்கிற கேள்விக்கு காமம் என்பதே பதிலா கிட்டும். ஆனால் அதை தவிர்த்து, சமுக ரீதியா மனிதனுக்கு ஏற்பட்ட பந்தம், பற்று போன்ற உணர்வுகள அடிப்படையாக கொள்ளும்போது காதல் புது வடிவம் பெறுது. தனி மனித உணர்வுகளுக்கேற்ப தனி வடிவம் பெறுது….
“ஜெனிப்பர், வைப்ரேசனுக்கு ஒருத்தர் வெயிட்டிங்…” வயதான பெண்மணியின் குரல்.
எதிர்புறத்தில் பதில் ஒன்றும் இல்லை. திடிரென்று திரை விலகியது.
கொஞ்சம் சந்தோசமான அதிர்ச்சி. நான் நிமிர்ந்து அமர்ந்தேன்.
“ஜெனிப்பர்..” என் மனம் முணுமுணுத்தது.
அவள் வந்துவிட்டாள். அவள் வந்துவிட்டாள். ஐ என்றால்
அது அழகு என்றால் அந்த
ஐகளின் ஐ அவள்தானா !
நான் பாடவில்லை. யாரோ என் காதில் பாடுகிறார்கள்.
என் கண்கள் அந்த சிகப்பு ஆர்ட்டினை தேடியது.
“என்ன சார்…?”
“ஒண்ணுமில்ல…” நான் தயங்கினேன்.
“நீங்க ஏதோ சொல்ல வர மாதிரி இருக்கே…” அவள் உரிமையாக பேசினாள். அவள் பேசுவது கொஞ்சுவது போல் இருக்கிறது. பிரம்மையாகவும் இருக்கலாம். ஆனாலும் இது நன்றாக இருக்கிறது.
“கழுத்துல ஒரு ஆர்ட்டின் இருந்துச்சே…” நான் தயங்கி தயங்கி கேட்டேன். அவள் சப்தமாக சிரித்தாள்.
“பயங்கரமான ஆள் போல நீங்க…. பாக்க அமைதியா இருக்கீங்க. எவ்ளோ நோட் பண்றீங்க…!” அவள் மீண்டும் சிரித்தாள்.
“ஒரு சின்ன பையன். அழுதுகிட்டே இருந்தான்… அதான் ஹார்டின கொடுத்தேன்…” அவள் கொஞ்சுவது போல் தான் இருக்கிறது. நான் அந்த சிறுவனாக இருந்திருக்கலாம்.
“நானும் தான் உள்ளே அழுகுறேன். ஹார்ட் கிடைக்குமா…!” இப்படி பேசும் அளவிற்கு அதிக தைரியம் இல்லை. ஆனாலும் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, என் பெயரை சொல்லி கைகொடுத்தேன்.
கை காற்றில் நின்றது. அவள் ஆச்சர்யமாகப் பார்த்தாள்.
“என்ன?”
“இல்ல இப்படிலாம் எந்த பேசன்ட்டும் இன்ட்ரட்யூஸ் பண்ணிக்க மாட்டாங்க. அவங்க பாட்டுக்கும் வருவாங்க, போவாங்க.. நீங்க கொஞ்சம் டிபரன்ட்…” மீண்டும் அவளிடம் புன்னகை. என்னிடமும் தான்.
என் கை காற்றிலே நின்றதைப் பார்த்தவள்,
“ஒ! சாரி ஐ அம் ஜெனிபர்” என்று கை குழுக்கினாள்.
ஜெனிபர், ஜெனிபர், ஜெனிபர். என் மூளைக்குள் அவள் குரல் எதிரொலித்துக் கொண்டே இருந்தது. அம்மா ஒத்துக்கொள்ள மாட்டாள். எனக்கு ஜெனிப்பர் ஜானகி எல்லாம் ஒன்றுதான். அம்மா ஏதாவது சொன்னால், ஜெனிப்பராவது ஏனடி, ஜானகியாவது ஏனடி, இறைச்சி தோள் எழும்பிலும் இலக்கமிட்டிருக்குதோ என்று பாடலாம். அம்மா பயந்துவிடுவாள்.
“கால நல்லா நீட்டி படுத்துக்கோங்க….” அவள் என் காலில் சில நாடாக்களை சுற்றினாள். அருகே இருந்த எந்திரத்தில் ஒரு மூடியை திருகினாள். முட்டியில் ஏதோ மின்சாரம் பாய்வது போல் இருந்தது. மனதிலும் தான்.
அவளிடம் ஏதாவது பேசவேண்டும். என்ன பேசுவது!
“ஐ வில் பி பேக்” என்று நகர்ந்தாள். பத்து நிமிடங்கள் எந்திரம் ஓடிக்கொண்டே இருந்தது. எந்திரம் நின்றது கூட எனக்குத் தெரியவில்லை. என் மன எந்திரம் தான் ஓடிக்கொண்டே இருக்கிறதே!
பார்த்ததும் காதல் வருகிறது. அல்லது பழகி அறிவில் மயங்கி காதல் வருகிறது. இப்படி வரும் காதல்தான் சரி, இது தவறு என்றெல்லாம் யார் சொல்லக்கூடும். Beauty lies in the eyes of the beholder என்ற கூற்றில் உண்மை இல்லாமல் இல்லை. மனம் விரும்புகிறது. அவ்வளவுதான். ஜெனிபருடன் பேசுவதற்காகவே, இன்னும் நான்கு நாட்கள் இங்கே வரவேண்டும். அடுத்த காலும் வலிப்பதாக சொல்லலாம். குறுந்தாடிக்காரர் இன்னும் ஐந்து நாட்கள் வரச் சொல்லுவார். எனக்கு நல்லதுதான். ஆனால் அவளைப் பார்த்தும் பேச நினைக்கும் தைரியம் எப்படி எனக்கு வந்தது என்று தெரியவில்லை. இவ்வளவு தைரியம் பள்ளிக்கூடத்தில் இருந்திருக்கலாம். அல்லது டியூஷன் சென்டரில் இருந்திருக்கலாம். பார்கவி இந்நேரம் உடன் இருந்திருப்பாள். காதலை சொல்ல தைரியம் வரும் காலத்தில் வயதாகிவிட்டிருக்கிறது. ஆனால் வயதெல்லாம் காதலை நிறுத்திவிடுமா என்ன! வயதாகும் போது பேசாமலும் அன்பையும், காதலையும் பரிமாறிக் கொள்ள முடிகிறது. நான் எதுவும் பேசாமலேயே ஜெனிபர் என்னிடம் ஏதோ சொன்னதை போல இருக்கிறது. அவளுக்கும் என்னை பிடித்திருக்கிறதா! தெரியவில்லை. பிடிக்கவில்லை என்று உறுதியாக சொல்ல முடியாது. அப்போது பிடித்துப்போக வாய்ப்பிருக்கிறது. காதலிலும் நிகழ்தகவுகள் உண்டு.
ஜெனிப்பர் வந்தாள். நீல நிற சுடிதாரில் இருந்தாள். ட்யூட்டி டைம் முடிந்து விட்டது என்று புரிந்துகொண்டேன்.
“வலி இன்னும் இருக்கா…” எந்திரத்தையும் என் காலையும் இணைத்த நாடாக்களை கழற்றியவாறே கேட்டாள்.
இல்லை என்று சொன்னால், எங்கே வரவேண்டாமென்று சொல்லிவிடுவாளோ என்று பயம்.
“நிறைய இருக்கு…” என்றேன்.
என்னைப் பார்த்து புன்னகைத்தவாறே, “கதை… கொஞ்சமாவது குறஞ்சிருக்கும்…” சொல்லிவிட்டு சிரித்தாள்.
“இன்னும் நாலு நாள் வரணும்…. மார்னிங் 8 டூ ஈவனிங் 8. எப்ப வேணும்னாலும் வரலாம்”
நான் சரி என்று தலை அசைத்தேன்.
“டேக் கேர்” என்றவாறே அங்கிருந்து நகர்ந்தாள்.
“யூ டூ டேக் கேர்” என்றேன்.
அப்படியே நின்றாள். ஒரு நொடிதான். ஏதோ யோசித்தவள் மீண்டும் திரும்பி என் அருகே வந்தாள்.
“நாளைக்கு எனக்கு Weekly off. வெட்னஸ்டே தான் வருவேன்…” சொல்லிவிட்டு என் முகத்தை பார்க்காமல் நகர்ந்தாள்.
என்னை அறியாமாலேயே என் உதடுகள் புன்னகைப் பூத்தன. தவறவிட்ட தருணங்களை வாழ்ந்து பார்க்கும் வாய்ப்பை ஏசுநாதர் கொடுத்திருக்கிறார் போல.
“ஹே அவசரத்துக்குப் பொறந்தவனே. எவளப் பாக்க போற…” காலையில் 21G டிரைவர் கேட்டது நினைவுக்குவந்தது.
நாளைக்கு அவனிடம் கெத்தாக சொல்ல வேண்டும், “ஜெனிப்பர பாக்க போறேண்டா” என்று.
– ஆகஸ்ட் 2019