வெளிநாட்டுப் பயணங்கள் என் வாழ்வில் அன்றாடம் ஆகிப்போன இக்காலக்கட்டங்களில் ஒவ்வொரு முறை விமானத்தில் ஏறி அமர்ந்ததும் அவளை நினைக்காமல் இருந்ததில்லை. அவளுக்கு நான் கொடுத்திருக்கும் கவுரவம் என்னுடைய கடைசி காதலி என்பதுதான். அவளுக்குப்பிறகு யாரையும் காதலிக்க தோன்றவில்லை, ஏனெனில் நான் காதலிக்கப்பட்டது அவளிடம் மட்டும் தான். காதலிப்பதை விட, காதலிக்கப்படுவது எவ்வளவு சுகம் தெரியுமா!! உலகத்திலேயே வேகமான விடயம் இந்த நேரம் தான்… சடுதியில் ஐந்து வருடங்கள் ஓடிவிட்டனவே!! என்னுடைய முதல் வெளிநாட்டுப்பயணத்தின் போது நான் அவளுடன் பேசிக்கொண்டிருந்ததை மனம் அசை போடுவது என்னையும் அறியாமல் நான் விமான இருக்கையில் வந்தமர்ந்ததும் நடக்கும்.
வெற்றிகளை நான் துரத்துகின்றேனா…இல்லை வெற்றிகள் என்னைத் துரத்துகின்றனவா என்றதொரு நல்ல நிலையில் நான் இப்போது இருக்கிறேன் என்றால் அதற்கு அவள்தான் காரணம். எனக்கான பெண் என்று நான் நினைத்திருந்தவர்களில் என்னிடம் மிகக்குறைந்த காலம் இருந்தவள் அவள் தான். இருந்தாலும் அவள் வந்தபின் அவளின் நினைவு என்னை ஆக்கிரமிக்காத நாளே இல்லை..
நிறைய விடயங்களின் உயிர்ப்பு, கிடைத்தலை விட கிடைக்காமல் இருக்கும்போது தான் அதிகம் உணரப்படுகிறது. யுத்தமின்றி ரத்தமின்றி நாட்டுப்பிரிவினைகள் எப்படி சாத்தியமில்லையோ அது போல, வன்மமான வார்த்தைகள் இல்லாமல் காதல் பிரிவும் சாத்தியமில்லை என்று நினைத்துக்கொண்டிருந்ததை அவளின் அந்தக் கண்ணிர் உப்புக்கரித்த கடைசி முத்தம் மாற்றியது. சாத்வீகமாக பிரிந்த என்னுடைய ஒரே காதல் அவளுடையதுதான். அவளுக்கான நினைவுகளை மறுவாசிப்பு செய்து முடிப்பதற்கு முன்பாகவே விமானம் பிராங்க்பர்ட்டை அடைந்தது. வழக்கமான விமான நிலைய சோதனைகளை முடித்தாகியது. ஒரு மணி நேரம் காத்திருப்புக்க்குப்பின் கோபன்ஹேகனுக்கான விமானம் பிடித்தாகவேண்டும், அவளுக்கான எண்ண அலைகள், இளையராஜா பாடல்களை காதில் கேட்டுக்கொண்டே தொடர்ந்தது. ஆங்காங்கே சில தமிழ் குரல்கள் பாடலையும் மீறி காதில் விழுந்து கொண்டிருந்தது. அதில் ஒரு குரல் மிகவும் பரிச்சயமான குரல். ஆமாம்.. என்னுடைய இருக்கையில் இருந்து சில அடிகள் தூரத்தில் அவளேதான். கையில் குழந்தையுடன் குடும்பம் சகிதமாய்.. ஐந்து வருடங்களுக்கு முன்னர் பார்த்திருந்ததை விட சற்று குண்டாகி இருந்தாள். பேசலாம் என மனம் ஆசைப்பட்டாலும், அவளின் கடைசி வார்த்தைகள்
“கார்த்தி, உனக்காக தினமும் ஒரு நொடியாவது வேண்டிக்கொள்வேன், ஆனால் கல்யாணத்துக்கு பின்னாடி உன்னை எப்படி எதிர்கொள்றதுன்னு தெரியல, இனிமேல் நாம பார்க்கவேண்டாம், பேசவேண்டாம், ஈமெயில்ஸ், எதுவுமே வேண்டாம்” நினைவுக்கு வந்து எச்சரித்தது.
என்னை அவள் பார்த்துவிடக்கூடாது என்பதற்காக வேறு இடம் பார்க்க எத்தனித்தபோது, “ஹேய் கார்த்தி ” குரல், அவளின் குரல் .. ஐந்துவருடம் பின்னோக்கி சென்றதுபோல ஒரு உணர்வு.
“என்னங்க , நான் அடிக்கடி சொல்லுவேன்ல, கார்த்தி, அது இவர் தான்” ஐந்துவருடங்கள் “ன்” விகுதியை “ர்” விகுதியாக மாற்றிஇருப்பது இயல்புதான்.
நான் அவளின் கணவருக்கு வணக்க்ம் சொல்லிவிட்டு “எப்படி இருக்கீங்க” இரண்டுபேருக்கும் பொதுவாக கேட்டேன்.
“நாங்க ஜம்முன்னு இருக்கோம் கார்த்தி, நீங்க எப்படி இருக்கீங்க, வொய்ஃப், குழந்தைங்க”
“ம்ம் எல்லோரும் நல்லா இருக்காங்க, ஒரு பொண்ணு, ஒரு பையன்”
“பேரு எல்லாம் சொல்ல மாட்டிங்களோ!!” அதே கிண்டல் தொனி. எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. கணவனின் எதிரில் தன்னுடைய பழைய தோழமையை சினேகம் பாராட்டுவது.
நான் சிரித்துக்கொண்டே “வளன் பையன் பேரு, வள்ளி பொண்ணு பேரு”
“நல்ல தமிழ் பேருங்க” இது அவளின் கணவன்.
“எந்த பிளைட்டுக்கு வெயிட்டிங்”
“சியாட்டில் கார்த்தி, இன்னும் ஏழுமணி நேரம் இருக்கு”
என்னுடைய கோபன்ஹேகன் விமானத்திற்கான முதற் அறிவிப்பு வர, வேண்டும் என்றே சீக்கிரமாக விடைபெற்றுக்கொண்டு , நகரப்பேருந்துகளை விட பாடாவதியாக இருந்த கோபன்ஹேகனுக்கான விமானத்தில் ஏறி அமர்ந்தேன். அதுவரை என் கண்களில் அடக்கி வைத்திருந்த கண்ணீர் குபுக்கென வெளிவந்தது. பொய்யில்லாமல் பழகியது அவளிடம் மட்டுமே. ஆனால் அவளிடமும் இன்று ஒரு பொய் சொல்லியாகிவிட்டது. எனக்கு திருமணம் ஆகிவிட்டது, குழந்தைகள் உண்டு என்பதுதான் அந்த பொய். நட்பான கணவன், அழகான குழந்தை என மகிழ்ச்சியான வாழ்க்கை நடத்திக்கொண்டிருப்பவளிடம் , உன் நினைவுகள் மட்டுமே என்னை வழிநடத்தி செல்கின்றன, உன்னிடத்தில் வேறு ஒருத்தியை வைத்துப் பார்க்க மனம் வரவில்லை எனஎப்படி சொல்ல முடியும். அது அவளைக் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிவிடாதா? நானும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று காட்டிக்கொண்ட பொய் , அவளுக்கு நேர்ந்திருக்கக்கூடிய சங்கடத்தை தவிர்த்தது என்ற எண்ணம் என் மனபாரத்தை சற்றுக்குறைத்தது. அவளுடைய மகிழ்ச்சியான வாழ்க்கையில் என் சந்திப்பு எந்த வித சலனத்தையும் ஏற்படுத்திவிடாது என்பது திருப்தியாக இருந்தது.
இரண்டு நாட்கள் கழித்து மின்னஞ்சல் பெட்டியைத் திறந்தபோது ஒரு வியப்பு. அவளிடம் இருந்து தமிழில் ஒரு மின்னஞ்சல். அதுவும் நான் அவளுக்காக ஏற்படுத்திக்கொடுத்து இருந்த மின்னஞ்சல் முகவரியில் இருந்து. இன்னும் அதை செயலில் வைத்திருக்கிறாள் என்பது மகிழ்ச்சியைக் கொடுத்தது.. முன்பு அவள் எனக்கு அனுப்பிய மின்னஞ்சல்களில் அவளின் பெயரை மின்னஞ்சலின் முடிவில் எழுத மாட்டாள். இதிலும் அவள் பெயரை இடவில்லை. அந்த மின்னஞ்சல் இதுதான்,
ooOoo
அன்புடன் கார்த்திக்கு,
‘பொய்மையும் வாய்மையிடத்து’ என ஆரம்பிக்கிற திருக்குறள் உனக்கு பிடித்த குறள் என நீ அடிக்கடி சொல்லுவாய். நீ உன் குழந்தைகளின் பெயர்கள் அர்ஜுன், அஞ்சலி என இல்லாமல் வளன்,வள்ளி எனச்சொல்லும்பொழுதே நீ பொய் சொல்லுகிறாய் எனப்புரிந்தது. எத்தனை வருடங்கள் ஆனாலும் உன்னை என்னால் புரிந்து கொள்ள முடியும். நீ எனக்காக சொல்லிய பொய், விரைவில் உண்மையாகாத வரை அது எனக்கான தண்டனையாகவே இருக்கும். ஒருவொருக்கொருவர் தண்டனைக் கொடுத்துக்கொள்ள மாட்டோம் என்பதுதான் நமது உடன்பாடு என்பதை நான் நினைவுப்படுத்த தேவையில்லை.
பின் குறிப்பு : நீ என்னுடைய குழந்தையின் பெயர் அஞ்சலி எனத் தெரிந்து கொள்ளாமாலேயே போய்விட்டாய்.. பெயருக்கான காரணமும் என் கணவருக்குத் தெரியும்.
ooOoo
சாட்டையடியாக இருந்தது அவளின் வார்த்தைகள்.. நேசித்த உறவுக்கு எத்தனைப் பெரிய தண்டனை தர இருந்தேன். பெருமூச்சுவிட்டு விட்டு எனது கட்டிடத்தை விட்டு வெளியே வந்தேன்.. பனிமழையில் நனைந்தபடி, எனது அலுவலத்தின் இன்னொரு கட்டிடத்தை நோக்கி கேத்ரீனாவைப் பார்க்க நடந்தேன். கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக கேத்ரீனா என்னைத் திருமணம் செய்து கொள்வதற்கான விருப்பத்தை தொடர்ச்சியாக சொல்லிக்கொண்டிருக்கிறாள். கேத்ரீனாவிடம் “யாக் அல்ஸ்கார் தீக்(jag älskar dig)” என சுவிடீஷ் மொழியில் சொல்லி எனது சம்மதத்தை தெரிவிக்கத்தான் கேத்ரீனாவை தேடிக்கொண்டிருக்கிறேன்.. “யாக் அல்ஸ்கார் தீக்” என்றால் சுவீடிஷ் மொழியில் நான் உன்னைக் காதலிக்கிறேன் எனப்பொருள்.
– டிசம்பர் 11, 2008