“நீங்கள் மதராஸியா?’ என்று அவள் கேட்டபோது, “இல்லை நான் தமிழ்நாடு’ என்று சொல்லியிருக்க வேண்டாம் என்று இப்போது தோன்றியது. இப்படியொரு விளக்கம் கொடுத்து அவளுடைய கேள்வியை மறுத்துவிட்டோமே என்று வருத்தமாக இருந்தது. சலீமுடன் காஷ்மீர் வருவது உறுதியானதும் இங்கே எனக்கான ஒரு காதலி பிறந்து வளர்ந்து கொண்டிருக்கிறாள் என்று என்னால் எப்படி யோசித்திருக்க முடியும்? ஒரு தேசத்தின் இரு எல்லையில் பிறந்தவர்களுக்கு ஏற்படப் போகும் பிணைப்பை நினைத்தபோதே சிலிர்த்தது. ஒருவாரம் கல்லூரி விடுமுறை என்ற காரணத்தால்தான் வந்தேன். இங்கு வருவதற்கு வேறு ஒரு காரணமும் எனக்கு இருக்கவில்லை. சலீமுக்கு மிகப்பெரிய பூ வனம் சொந்தமாக இருந்தது. அதில்தான் நான் மெஹரைச் சந்தித்தேன். கை நிறைய பூக்களோடு அவள் அந்தப் பூவனத்தில் இருந்தாள். சலீம் என்னை அவளுக்கு அறிமுகப்படுத்தினான். செக்கச் சிவந்த அவளுடைய முகத்தில் கரிய இமைகளோடு அந்த விழிகளைப் பார்த்தேன். வியப்பும் வினாக்களும் பொதிந்து கிடந்த அபூர்வமான கண்கள்.
பைத்தியக்காரத்தனமாக இருந்தாலும் மிகச் சிறந்த யோசனை ஒன்று அப்போது தோன்றியது. நாம் இங்கேயே தங்கிவிடலாமா, அல்லது அவளை அழைத்துச் சென்றுவிடலாமா?.. படபடவென அவள் இமைச் சிறகு அடித்துக் கொண்ட அந்த நொடியில் மிக இயல்பாக ஏற்பட்ட யோசனை அது.
காஷ்மீரில் சம்பிரதாயமான சில நடவடிக்கைகளை செய்ய வேண்டியிருந்தது. அங்கிருக்கிற தால் ஏரி, ரோஜா தோட்டம், அரசு வனப் பூங்கா, படகு சவாரி, ஹூக்கா என.. ஆனால் எனக்கு மெஹர் இருக்கும் இடத்தைவிட்டு அதிகதூரம் விலகியிருக்கும் எந்த இடத்தையும் பிடிக்கவில்லை. சலீம் காட்டிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் எல்லாம் எனக்குச் சாதாரணமாக இருந்தன. பனித் தொப்பி அணிந்த மலைச் சிகரங்கள், ஸ்வெட்டர் போட்ட மனிதர்கள், ஆவி பறக்கும் ஆனால் சூடாக இல்லாத டீ… எல்லாமே சாதாரணமாகத்தான் இருந்தது. “மோதிலால் நேரு படித்த பள்ளி இதுதான்’ என்றான்.
எல்லோரும் எங்காவது படிக்கத்தானே செய்கிறார்கள்? நானும் சலீமும் இப்போது தில்லிக்கு வந்து படிப்பதுமாதிரி. “இது எந்தப் பிரபலமும் படிக்காத பள்ளிக்கூடம்’ என ஒன்றைக் காட்டினாலாவது ஆச்சர்யப்பட்டிருப்பேன். புத்தி பேதலித்துதான் போய்விட்டது எனக்கு. அவன் மெஹர் படித்த பள்ளியைக் காட்டியபோது அதை ஆச்சர்யமாகவும் தவிப்புடனும் பார்க்கத் தவறவில்லை. “தினமும் இந்தப் பள்ளிக்குத்தான் போவாளா?’ என்ற அசட்டுத்தனமான கேள்வியைக் கேட்டுவிட்டு சலீம் பார்த்த பார்வையை எதிர் கொள்ள முடியாமல் வெட்கத்தால் திக்கிப் போனேன். மேற்கொண்டு இது போன்ற உளறல்களைத் தவிர்க்க நான் அங்கிருந்த அத்தனை நாளும் படாத பாடுபட்டேன்.
எனக்கு ஏற்பட்ட மாதிரி மெஹருக்கும் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. அவளை வசீகரிக்கக் கூடிய சிறந்த அம்சம் எதுவும் என் தோற்றத்தில் இல்லை. அவளுடைய அழகின் முன்னால் எனக்கு இவ்வளவு நாளாய் இருப்பதாக நினைத்திருந்த திறமையும்கூட துச்சமாக இருந்தது. சலீம் என்னை அறிவாளியாகப் போற்றிப் பழகி வருகிறான். அதற்காக நான் அவள் தங்கைக்கு அறிவாளியாகத் தோன்ற வேண்டுமா என்ன? அவள் மீது காதல் கொள்வதற்கு என்னிடம் என்னதான் தகுதி இருக்கிறது என்று தத்தளித்தேன். அவளோ தேவதையாகத் தோன்றினாள். கவிஞர்கள் பொய்யாக வர்ணிக்கவில்லை என்பதைச் சத்தியமாக இதோ என் இருபத்தி இரண்டாவது வயதில்தான் முதல் முறையாக ஏற்றுக் கொள்கிறேன். அவளைச் சுற்றி எப்போதும் ஒளிவீசிக் கொண்டிருந்தது. பெரும்பாலும் எனக்கு எதிர்பட்ட நேரங்களில் அவள் கருப்பு அங்கி அணிந்திருந்ததால் நான் அவள் விழிகளை மட்டும்தான் பார்க்க முடிந்தது. அதைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று நான் துடித்தேன். ஆனால் ஒரு வினாடியில் பத்தில் ஒரு பகுதி நேரம்கூட அவள் விழியை நான் பார்க்க முடிந்ததில்லை.
பூர்வீகமான பழைய வீடு. பூந்தோட்டத்தை ஒட்டி அமைந்திருந்தது. மெஹர், அவளுடைய அப்பா, அம்மா, தம்பி ஆகியோர் பின் கட்டில் இருந்தனர். சலீமின் அறை முகப்பிலேயே இருந்தது. அதிலேதான் நானும் இருந்தேன். வந்த மூன்றாம் நாள்தான் அவள் “நீங்கள் மதராஸியா?’ என்று கேட்டது. ஆனால் நான் அந்த வாய்ப்பை அப்படியா பயன்படுத்திக் கொள்ள வேண்டும்? ஏதாவது முக்கியமான ஒரு சொல்லை அந்த நேரத்தில் நான் பதிலாகத் தந்திருக்க வேண்டாமா? எனக்கு அறிவு அவ்வளவுதான். காதலின் தெய்வீகத்தைச் சுருக்கமாகச் சுண்டக் காய்ச்சிய “ஒரு சொல் கவிதை’ ஒன்றைச் சொல்லியிருக்க வேண்டும். தமிழ்நாடு என்று திருத்துவதுதான் அத்தனை முக்கியமா? அவளுக்குத் தமிழ்நாடு எந்தத் திசையில் இருக்கிறது என்பதுகூட அத்தனை உறுதியாகத் தெரியுமா என்று தெரியவில்லை. சரி என்று தலையசைத்து… தலையசைத்தாள் என்று சொல்ல முடியாது.
சரி என்றது போல ஏதோ ஒரு எதிர்வினை அவளிடம் வெளிப்பட்டது. “பேச்சுக்குக் கேட்டேன்… இவ்வளவு உறுதியாக எனக்குத் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை’ என்ற எள்ளல் பாவனை போலவும் இருந்தது. அடுத்த நாள் அவளைப் பார்க்க முடியவில்லை. அவள் காலடி ஓசையை நான் சுலபமாகக் கணிக்கக் கூடியவனாக மாறியிருந்தேன். அவளது குரலும்கூட எனக்கு நன்றாக அடையாளம் தெரிந்தது. மொழி புரியவில்லை. ஆனால் அவள் என்ன பேசினாலும் கேட்டுக் கொண்டிருக்கலாம். அது இசையின் ஒரு வடிவம்.
நீங்கள் மதராஸியா என்பதை அவள் எனக்காக இன்னொருதரம் சொல்வதாக இருந்தால் அதை ஒலி நாடாவில் பதிவு செய்து வைத்துக் கொள்ளச் சித்தமாக இருந்தேன். அல்லது அது போல ஏதாவது வேறு ஒரு வார்த்தை என்னிடம் பேச வேண்டியிருந்தால் அதை…
ஐந்தாவது நாள் அவளைத் தோட்டத்தில் பார்த்தேன். பூக்களைப் பறித்துக் கொண்டிருந்தாள். பூக்கள் அவளால் பறிக்கப்படுவதை எதிர்பார்த்துக் கிடப்பதை நான் பார்த்தேன். அந்த விரல்கள் பூக்கள் பறிப்பதற்கென்றே பிரத்யேகமாக உருவானவை போல இருந்தன. மிக நளினமான, மென்மையான விரல்கள். அது அசைவது வழக்கமாக எல்லோரது விரல்களின் அசைவு போல இல்லை. பூக்களுக்கும் அந்த விரல்களுக்குமிடையே சிறிய உடன்பாடு இருப்பதாகத் தோன்றியது. இல்லையென்றால் அத்தனை மென்மையான விரல்களால் அந்தப் பூக்களைப் பறித்திருக்க முடியாது என்பது என் எண்ணம். பூக்கள் தானாகவே தங்களை அவளிடம் வழங்கிக் கொண்டிருந்தன. அத்தகைய விரல்களை நான் வெகு நேரம் பார்த்துக் கொண்டிருக்கிற வாய்ப்பு கிடைத்தது. சலீம் கடைக்குப் போயிருக்கிறான் இப்போது வந்துவிடுவான் என்ற தகவலை இந்தியில் சொன்னபடி அவனுடைய அம்மா தேநீர் கோப்பையை என்னிடம் கொடுத்தார். “”உன் அம்மா, அப்பால்லாம் மதராஸ்லதான் இருக்காங்களா?” }இதுவும் இந்தியில். மற்றபடி அவர்கள் வீட்டில் எப்போதும் உருது பேசினார்கள். சாப்பிடும்போதும் அவர்கள் வரை உருதிலும் சப்பாத்தி வேண்டுமா என்பது போன்றவற்றை என்னிடம் இந்தியிலும் பேசினார்கள்.
ஆறாவது நாள்…
அறையில் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தேன். அன்று பார்த்து தூர்தர்ஷனின் மதிய ஒளிபரப்பாக ஒரு பாடாவதி தமிழ்ப் படத்தைப் போட்டிருந்தார்கள். ஆனாலும் அப்போது அதை நான் இப்போது போல பாடாவதி படம் என்று நினைக்கவில்லை. 80 களில் அதை வரம் போல பார்த்தேன். அசாமி படம் போட்டாலும் அதை நகராமல் பார்த்துக் கொண்டிருப்பேன்.
மெஹர் வந்து அண்ணன் இல்லையா என்று கேட்டுவிட்டு அதற்கான பதிலை அறையில் தேடித் தெரிந்து கொண்டு புறப்பட்டாள். அண்ணன் வந்ததும் சொல்கிறேன் என்ன விஷயம் என்றேன்.
“இல்லை எழுதுவதற்கு பேனா வேண்டும், அதற்காகத்தான்” என்றாள்.
அவளுடைய சிவந்த உதடுகள் அந்த வார்த்தைகளை எப்படித் தயாரிக்கின்றன என்று ஆழ்ந்து பார்த்தேன்.
“என்னிடம் கேட்டால் தரமாட்டேனா?” என்று என் சட்டைப் பையில் இருந்து பேனாவை எடுத்துக் கொடுத்தேன்.
பெண்கள் நாணத்தால் கால் விரல்களால் தரையில் கோலமிடுவது பொது அம்சம் போலிருக்கிறது. அவள் பாதங்களில் மிளகாய்ப் பழச் சிவப்பில் மிளகாய் போலவே மருதாணி அலங்காரம். பேனாவை வாங்கிக் கொண்டு “ஏன் என்னை அப்படிப் பார்க்கிறீர்கள்?” என்றாள்.
என்னால் தகுந்த பொய்யைத் தயாரிக்க முடியவில்லை. உண்மையையும் சொல்ல முடியவில்லை. தலையிறங்கி நின்றேன். நான் வித்தியாசமாகப் பார்க்கவில்லையே… சாதாரணமாகத்தான் பார்த்தேன் என்று சொல்ல நினைத்தேன். அதைச் சொல்வதற்கு எனக்கு இந்தியில் புலமை போதாது என தயங்கினேன்.
காஷ்மீரில் இருந்து ஏழாம் நாள் நானும் சலீமும்தான் புறப்படுவதாக இருந்தோம். மதப் பிரச்சினை முற்றிக் கொண்டிருப்பதாகக் கூறி என்னை மட்டும் பாதுகாப்பாக டாக்ஸி பிடித்து அனுப்பி வைக்க முடிவெடுத்தான்.
தயாராக இருக்கச் சொல்லிவிட்டு டாக்ஸிக்கு ஓடினான். அவனுடைய அம்மா அந்த நேரத்திலும் குங்குமப் பூ, ஸ்வெட்டர், பாதாம் இருந்தால் வாங்கி வா என்றார்கள். சலீம் சற்று நேரம் நின்றான். “கடையெல்லாம் அடைத்துவிட்டார்கள்’ என்ற தகவலைச் சொன்னான்.
“எங்காவது இருக்கிறதா பார்’ என மெஹரும் “எதற்கு அதெல்லாம்?’ என நானும் ஒரே நேரத்தில் சொன்னோம். எனக்குச் சிலிர்ப்பாக இருந்தது.
மெஹர் என்னைவிட மூன்று வயதாவது இளையவளாக இருக்கக் கூடும். ஆனால் அவள் பார்வையில் என்னைப் பணிய வைத்துவிடும் மிடுக்கு இருந்தது. “மெஹர் சொல்கிறபடியே செய்’ என்று சலீமை அழைத்துச் சொல்லிவிடுவேன் போல இருந்தது. நல்லவேளையாக அப்படி நான் சொல்வதற்குள் சலீம் அங்கிருந்து போய்விட்டான்.
நான் துணிகளை எல்லாம் சுருட்டி பைக்குள் சொருகிவிட்டு, தோட்டத்தில் போய் நின்றேன். காஷ்மீரையும் மெஹரையும் அப்படியே மனதுக்குள் பருகிவிடவேண்டும் என்று பரபரத்தது.
உடனே ஒரு சிகரெட் பிடிக்க வேண்டும்போல இருந்தது. புகையோடு சேர்த்து நினைவுகளையும் உள்வாங்கிக் கொள்ளும் அரிய அனுபவம். பாக்கெட்டைத் துழாவிய போது சிகரெட் மட்டும் இருந்தது. தீப்பெட்டி? அடடா… சலீம் வருவதற்குள் சிகரெட் குடித்தால்தான் நான் மெஹரையும் காஷ்மீரையும் மனதுக்குள் பருக முடியும் என்ற நம்பிக்கை வளர்ந்தது. ஐயோ நான் எங்கே போவேன்? சாலைக்கு மறுபுறம் ஓடி தீப்பெட்டி வாங்கிக் கொண்டு வந்து புகைக்கலாம் என்றாலும் கடைகளை அடைத்துவிட்டார்கள் என்கிறார்களே? சலீம் வந்துவடுவானோ என்ற பயமும் சூழ்ந்தது. பதட்டம்… என் நம்பிக்கை முட்டாள்தனமானதாக இருக்கலாம். ஆனால் சிகரெட்டின் மூலம் அது சாத்தியமாகும் வாய்ப்பு இருந்தால் அதைத் தவறவிடக் கூடாதல்லவா?
யாரும் எதிர்பார்க்க முடியாத ஒரு நிகழ்ச்சி அப்போது என் வாழ்வில் நடந்தது. வாயில் சிகரெட்டுடன் நான் பாக்கெட்டுகளைத் துழாவிக் கொண்டிருப்பதைப் பார்த்து அவளே வந்தாள். அவள் கையில் தீப்பெட்டி இருந்தது.
“ஒரு நாளைக்கு எத்தனை?” என்றாள் கிண்டலாக. நியாயமான உண்மையான பதிலைச் சொல்வதற்காக நான் மனதில் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் நான் பதில் சொல்வதற்குள் அவள் “உங்களுக்குத் தங்கை இருக்கிறாளா?” என்றாள். தலையசைத்தேன். “எத்தனை பேர்?” என்றாள். “மறுபடியும் எண்ண ஆரம்பித்துவிடாதீர்கள்” என்று சிரித்துக் கொண்டே ஓடினாள்.
வாழ்நாளெல்லாம் நான் காதலித்து மகிழ எனக்கான முகம் அது என்பதில் எனக்கு எந்த மாற்றமும் இல்லை. என்னிடம் கேமிரா இல்லாமலேயே அவள் முகத்தை என் கண்களால் விழுங்கிக் கொண்டேன். டேப் ரிக்கார்டர் இல்லாமலேயே அவளுடைய குரலை என் காதுகளால் பதிவு செய்து கொண்டேன். கண்களும் காதுகளும் எவ்வளவு முக்கியமானவை என்பது அந்தக் கணத்தில் எனக்கு வலுவாகப் புரிந்தது. என்னுடைய கண்களும் காதுகளும் தவம் செய்தவை என்று தோன்றியது. முக்கால் நிமிட நேரம் நாங்கள் இருவரும் பேசியிருப்போம். ஆனால் அது பொக்கிஷ நிமிடமல்லவா? யோசித்துப் பாருங்கள்.. நமக்குச் சற்றும் தேவையற்ற பேச்சை நாம் நாளெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறோம். எதிரில் இருப்பவர் பேசுகிறாரே என்பதற்காக நாமும் பேசுகிற பேச்சா இது? ஒரு நாளில் நாம் ஆத்ம சுத்தியோடு எத்தனை வார்த்தை பேசுகிறோம்? தினம் ஒரு வார்த்தையாவது தேறுமா? எல்லாமே யாரையோ வசை பாடுவதற்காக, தேவைக்கு அதிகமாகப் புகழ்வதற்காக, ஒருவர் பேச்சை ஒருவர் விஞ்சி நிற்பதற்காக, கூழைக் கும்பிடு போடுவதற்காக… எல்லாமே குப்பை வார்த்தைகள்.
மெஹர் என்னிடம் பேசியவை இரண்டு ஆத்மாக்களின் கோடி வாக்கியங்களின் சுருக்கம். அதை வேறு வார்த்தைகளால் விவரித்து இட்டு நிரப்பவும் வழியிருப்பதாகத் தெரியவில்லை. அந்தக் கோடி வாக்கியங்களை விஸ்தரிப்பது மொழிகள் சொல்லும் சொற்களால் சாத்தியமில்லை என்று தோன்றியது. அது மனதின் மொழி. அதாவது சம்பந்தபட்ட எங்கள் இருவரின் மனதின் மொழி. ஒருவேளை மெஹரால்கூட இது முடியுமா என்று தெரியவில்லை. என் ஒருவனுக்கான மொழி. அதே போல அந்த முகம். அது என் வாழ்நாளுக்கெல்லாம் போதுமானதாக இருந்தது.
டாக்ஸி புறப்படும்போது சலீமின் அப்பாவுக்குப் பின்னால் அவளுடைய முகம் வழியனுப்பியது. அதில் இன்னும் சொல்லப்பட வேண்டிய எத்தனையோ வார்த்தைகள் ஏக்கத்தோடு நின்றன.
– ஜூன் 2009