மெய்க்காப்பாளன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 11,011 
 
 

இதெல்லாம் நடந்தது ஒரு சாதாரண நாளில் பின்னேரம் சரியாக நாலு மணிக்கு. எப்படித் தெரியுமென்றால் அந்த பஸ் தரிப்பு நிலையத்துக்குப் பின்னாலிருந்த மணிக்கூண்டு டங்கென்று சத்தமிட்டது. நான் ரோட்டுக்கு இந்தப் பக்கம் நின்றேன். பஸ் தரிப்பு எதிர்ப்பக்கம் இருந்தது. மணியை நிமிர்ந்து பார்த்த என் கண்கள் கீழே இறங்கின. இப்படித்தான் என் வாழ்நாளை மாற்றவிருந்த சம்பவம் தொடங்கியது.

பின்மதியம் மூன்று மணிக்கு மச்சாள் அந்தரிக்கத் தொடங்கிவிடுவார். அண்ணர் சரியாக ஐந்தரை மணிக்கு அலுவலகத்திலிருந்து வருவார். அவருடைய அலுவலகம் மூடுவது ஐந்து மணிக்கு. ஐந்து மணி அடிக்கும்போது அன்றைய கோப்புகளை மூடிவிட்டு, பேனாவைத் திருகி சேர்ட் பாக்கெட்டில் செருகிவிட்டு, லாச்சியைப் பூட்டிச் சாவியைப் பத்திரப்படுத்திவிட்டு அலுவலக வாசலில் நிற்பார் என்றுதான் நினைக்கிறேன். அல்லாவிட்டால் எப்படிச் சரியாக ஐந்தரை மணிக்கு அவரால் வீட்டுக்கு வர முடியும்.

அண்ணர் வீட்டு வாசலை மிதிக்கும்போது அவித்த முட்டை ரெடியாக இருக்க வேண்டும். அதற்குத்தான் மச்சாள் இந்தப் பாடு. அப்படிச் செய்யாவிட்டால் இலங்கைப் பாராளுமன்றத்தை யாராவது தரைமட்டமாக்கிவிடுவார்கள் என்பதுபோலக் காரியங்கள் நடக்கும். நாலு மணிக்குப் பத்து நிமிடம் இருக்கும்போது மச்சாள் காசைத் தந்து ஒரு முட்டை வாங்கி வரச் சொல்லுவார். அது சிவப்பு முட்டையாக இருக்க வேண்டும். அண்ணர் வெள்ளை முட்டை சாப்பிடமாட்டார். அரசாங்கத்தில் தலைமை லிகிதராக உத்தியோகம் பார்க்கும் ஒருவர் வெள்ளை முட்டையை எப்படிச் சாப்பிட முடியும்? அடுத்த நாளும் மச்சாள் ஒரு முட்டை வாங்குவார். அதற்கு அடுத்த நாளும். எத்தனையோ தடவை கேட்டுவிட்டேன், ஒரு பத்து முட்டையை ஒரே தரமாக வாங்கலாம்தானே என்று. மச்சாளுக்குக் கோபம் வரும். அவர் கண்கள் பெரிதாகி நான் தினம் தினம் வாங்கிவரும் சிவப்பு முட்டை சைசுக்கு வந்துவிடும். “ஒரு கோழி எப்பவாவது ஒரு நாளைக்கு பத்து முட்டை இடுமா? ஒரு நாளைக்கு ஒன்றுதான்” என்பார். நான் கேட்டதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? மச்சாள் சொன்னால் இரண்டாம் பேச்சு பேசக் கூடாது, இல்லாவிட்டால் அண்ணரிடம் சொல்லிவிடுவார். நான் கிட்டத்தட்ட அடிமை என்ற விசயம் எனக்கு ஞாபகத்துக்கு வரும்.

இரண்டுதரம் நான் சோதனையில் பெயிலாகிவிட்டதால் எனக்கு வேறுகதி கிடையாதென்று என்னைப் பொலிடெக்னிக்கில் சேர்த்திருந்தார்கள். அண்ணர்தான் பணம் கட்டுகிறார். அவர்தான் சாப்பாடு போடுகிறார். அவர்தான் தங்க இடம் கொடுக்கிறார். வருடத்துக்கு ஒரு புது சேர்ட்டும் தனது பழைய சேர்ட்டும் தருகிறார். எனக்குப் பதினேழு வயது தொடங்க இரண்டு மாதம் இருக்கிறது. சரியாக நாலு மணிக்கு ஒரு முட்டை வாங்கிக் கொடுத்து சொந்த அண்ணரைக் கொழுக்கவைப்பதில் என்ன பிழை இருக்கிறது? காசை எறிந்து எறிந்து ஏந்திக்கொண்டே முட்டை வாங்கக் கடைக்குள் நுழைந்தேன். அப்பொழுது அடித்த நாலு மணிக்குக் கீழ் தான் அவள் பஸ்சுக்காக நின்றுகொண்டிருந்தாள். பள்ளி மாணவி. வெள்ளைச் சீருடை. வெள்ளைச் சப்பாத்து. நீலமும் வெள்ளையும் கோடுபோட்ட டை. இரட்டைப் பின்னல் பின்னி நீல ரிப்பனால் பூப்போட்டுச் சடையை முடிவுக்குக் கொண்டுவந்திருந்தாள். புத்தகங்களை, கைகளை மடித்து அதற்கு மேல் வைத்துக் காவினாள். அவளைப் பார்த்துக்கொண்டு வந்த கண்கள் அவள் கழுத்துக்கு வந்ததும் நின்றன. நீளமான கழுத்து. வாத்தின் கழுத்தைப் போல் நீள்வதும் சுருங்குவதுமாக வழுவழுவென்றிருந்தது. உடனேயே அவளுடைய கழுத்துக்கும் என்னுடைய இருதயத்துக்கும் ஒருவிதமான தொடர்பு ஏற்பட்டது. அவளுடைய கழுத்து நீண்டு தலை உயர்ந்த ஒவ்வொருமுறையும் என் இருதயம் ஒரு துடிப்பைத் தவறவிட்டது.

இரண்டு நிமிடம் கழிந்தது. பார்த்தால் நான் அவளுக்குப் பக்கத்தில் நின்றேன். பஸ் வந்ததும் அவள் ஏறினாள். நானும் ஏறினேன். அவள் எந்த இடத்துக்கு டிக்கட் எடுத்தாள் என்பது எனக்குத் தெரியவில்லை. ஆகவே பஸ் கடைசியாகப் போய் நிற்கும் இடத்துக்கு முட்டைக் காசைக் கொடுத்து டிக்கட் எடுத்தேன். பஸ்சிலே நான் பின்னால் இருக்க அவள் நாலைந்து இருக்கைகள் தள்ளி முன்னால் உட்கார்ந்தாள். அவளுடைய தலை, இரட்டைப் பின்னல், பாதிக் கழுத்து, தோள்மூட்டின் ஒரு பகுதி எனக்குத் தெரிந்துகொண்டிருந்தன. அரை மணிநேரம் கழித்து அவள் மணி அடிக்காமலே பஸ் நின்றது. அவள் திடீரென்று இறங்கிப் போனாள். நான் அடுத்த தரிப்பில் இறங்கி பஸ் பிடித்து வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.

என் மச்சாளின் முகத்தைப் போல் ஒரு முகத்தை ஒருவரும் கண்டிருக்கமாட்டார்கள். அவருடைய முகத்தோல் நல்லாய் பாவித்த செருப்புத் தோல்போலத் தடிப்பாக இருக்கும். சிரித்தாலும் கோபித்தாலும் முகத்தின் தசைகளில் மாற்றமிராது. ஆனாலும் குரலில் வித்தியாசம் தெரியும். கோபிக்கும்போது பொய்க்குரல் வந்துவிடும். “எங்கே முட்டை?” என்றார். “உடைஞ்சுபோச்சுது” என்றேன். “அதுக்கு இவ்வளவு நேரமா?” “நான் எங்கை உடஞ்சுது என்று பார்க்கத் திரும்பவும் தேடிக் கொண்டு போனன். அப்பிடியும் கண்டுபிடிக்க முடியேல்லை.”

“காசு எங்கே?”

“அதுவும் துலைஞ்சுபோச்சுது. எத்தனை தரம் ஒன்றையே திருப்பித் திருப்பிச் சொல்லுறது.” எனக்குக் கோபம் வந்ததுபோல மூச்சைப் பெரிசாக உள்ளேயும் வெளியேயும் விட்டேன். சில வேளைகளில் இந்தத் தந்திரம் வேலைசெய்யும். அண்ணர் காத்திருந்து கடைசியில் முட்டை இல்லாமல் சாப்பிட்டு விட்டு உள்ளுக்குள் என்னையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார். அவருக்கும் எனக்கும் பதினைந்து வருட வித்தியாசம். அந்த நிமிடம் அவர் என்னை “வெளியே போடா” என்று சொன்னால் நான் இரவு ரோட்டில்தான் படுக்க வேண்டும். ஆனால் அவர் சொல்லவில்லை. மச்சாள் “பொலிடெக்னிக்கில் படிக்கிற இதுக்கு இவ்வளவு கெறுக்கு” என்று புறுபுறுத்தபடி உள்ளுக்குப் போனார்.

வழக்கமாக மச்சாளுக்குக் கோபம் புரளும் நாட்களில் அடியிலே சீனப்பூ வரைந்த சீனத் தட்டில் சோறும் கறியும் பரிமாறி அதை இன்னொரு தட்டால் மூடி மேசையிலே வைத்துவிடுவார். நான் சீனப்பூ தெரியுமட்டும் சோற்றை அள்ளித் தின்று தண்ணீர் குடித்துக் கோப்பையைக் கழுவிக் கவிழ்த்து வைத்துவிட்டுப் படுக்கப் போவேன். சத்தங்களில் இனிமையானது மேசையில் கோப்பையை வைக்கும் சத்தம். அன்றைக்கு அந்தச் சத்தம் எழவில்லை; மச்சாள் கோப்பையை வைக்கவில்லை. இரண்டு மூன்று தடவை மேசைக்கு வந்து பார்த்து ஒன்றும் இல்லையென்று உறுதிப்படுத்திவிட்டுத் திரும்பப் போய் படுத்துவிட்டேன். முட்டை இல்லாமல் ஒரு கோப்பை நிறைந்த சோற்றைச் சாப்பிடுவதற்குத் தலைமை லிகிதர் ஒருவர் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்? இது என்ன கஷ்டம் என்று மனத்தைத் தேற்றிக்கொண்டு அன்றைக்குப் படுக்கச் சென்றேன். வெகுநேரத்துக்குப் பிறகு நித்திரை வந்தது.

இரண்டு நாள் கழிந்தபின் அண்ணர் முட்டை சாப்பிட்ட திருப்தியில் சுவரில் கதிரையைச் சாத்தி வைத்து அதிலே உட்கார்ந்து இரண்டு கால்களையும் தொங்கவிட்டுப் பேப்பரில் சிறுவர் பகுதியில் வந்த கார்ட்டூனைப் படித்து மகிழ்ந்துகொண்டிருந்த நேரத்தில் மெல்லப் பேசத் தொடங்கினேன். “எனக்கு இந்தப் படிப்பு இறங்குவதில்லை. பொலிடெக்னிக்கில் ஸ்பெசல் கிளாஸ் இருக்கு. அதுக்குப் போக வேணும்.” அண்ணர் திடுக்கிட்டுவிட்டார். அவருடைய வாய் குளறியது. நானாக வந்து படிப்பைப் பற்றிப் பேசியது அதுவே முதல் தடவை. “எவ்வளவு காசு கட்ட வேணும்?” என்றார். “காசு இல்லை. எல்லாம் இலவசம். பஸ் காசு மாத்திரம்தான்” என்றேன். அண்ணருக்கு நான் கட்டடக்கலை படிக்க வேண்டும் என்ற விருப்பம். பெரிய கட்டடங்களைச் சிறிய தாளிலே வரைவது. மச்சாளுக்கு நான் தாவரவியல் படிக்க வேண்டும். சின்னப் பூக்களை பெரிய தாளிலே வரைவது. எனக்கோ படம் வரையத் தேவையில்லாத எந்தப் படிப்பும் சம்மதம். என் மூளையைத் திறமாக வேலை செய்யவைத்து ஒரு மாதிரியாக இருவரையும் சமாளித்து, காலையிலேயே மச்சாளுக்கான முட்டையை வாங்கிக்கொடுத்துப் பின்னேரத்துக்கான நேரத்தை எனக்காக அபகரித்துக்கொண்டேன்.

பதினெட்டு பத்தொன்பது வயது தாண்டியவர்களுக்கு நான் சொல்வது ஒருக்காலும் விளங்காது. சரியாக நாலு மணிக்குப் பளபளவென்று மின்னும் வெள்ளைச் சீருடையில் அவள் பஸ் தரிப்புக்கு வருவாள். வரும்போதே தென்றல் வீசும். நான் அவளையே பார்த்தாலும் அவள் என்னைப் பார்ப்பது கிடையாது. அப்படித் தவறி அவள் கண்பார்வை என்மீது விழுந்தாலும் அது என் உடம்பைக் கிழித்துக் கொண்டு மறுபக்கம் போய்விடும். அந்தப் பார்வை என்னால் தாங்க முடியாததாக இருக்கும். இரண்டு பின்னலில் ஒன்று முன்னுக்கிருக்கும், மற்றது பின்னுக்கிருக்கும். தன் அழகை முன்னுக்கும் பின்னுக்கும் சமமாகப் பிரித்துக்கொடுக்கும் எண்ணமாக இருக்கலாம். இரண்டு பின்னல்களையும் பின்னால் விட்டால்கூட அழகு குறையாது. பஸ்சுக்குக் காத்திருக்கும்போது முகத்தில் எரிச்சலோ பதற்றமோ இல்லாமல் கண்கள் சாந்தமாகவே இருக்கும். தலைகுனிந்து அவளுடைய வெள்ளைச் சப்பாத்தைப் பார்க்கும் அல்லது மார்போடு ஒட்டியிருக்கும் புத்தகங்களைப் பார்க்கும். அவை இயற்பியல், தாவரவியல் போன்ற புத்தகங்கள். அவள் கண்களில் தெரியும் புத்திக் கூர்மையை வைத்து அவள் மருத்துவப் படிப்புக்குத் திட்டமிடுகிறாள் என்பதை ஊகிக்க முடியும். ஆனால் வாத்துபோல் கழுத்தை நீட்டினால் உடனேயே செய்தி என் இருதயத்துக்குப் போய், துடிப்பு ஒன்று தவறிப்போகும்.

பஸ் வந்ததும் அவளை ஏறவிட்டுப் பின்னர்தான் நான் ஏறுவேன். அவள் வழக்கம்போல் முன்னுக்கு உட்கார நான் பின்னுக்கு அவளைப் பார்க்கக்கூடிய தூரத்தில் உட்காருவேன். இறங்க வேண்டிய இடம் வந்ததும் அவள் இறங்கிச் செல்வாள். அவளைப் போகவிட்டுச் சிறிது நேரம் கழித்து நானும் தொடர்வேன். அவள் திரும்பிப் பார்க்காமல் நடப்பாள். பெரிய கேட் வைத்த வீடு வரும்போது கேட்டைத் திறந்து உள்ளே போவாள். கேட்டின் நடுவிலே தகரம் வைத்து மறைப்புக்காக அடித்திருக்கும். அந்த வீதியின் கடைசி வீடுமட்டும் நான் ஏதோ வேலையிருப்பதுபோலப் போய்த் திரும்பி அடுத்த பஸ் பிடித்து வீடு வந்து சேருவேன். இது தினம் தினம் நடக்கும்.

ஒரு நாள் நாலு மணிக்கு அவள் பஸ் தரிப்புக்கு வரவில்லை. எனக்கு மூச்சடைத்துவிடும்போல் இருந்தது. ஆறு பஸ்கள் வந்து போய்விட்டன. அவளுக்கு ஏதாவது உடல் சுகமில்லையோ என்று மனம் தவித்தது. சரியாக 5:15க்கு அவள் வந்தாள். அவள் கையிலே புத்தகங்களுடன் பாட்மிண்டன் விளையாடும் ராக்கெட்டும் இருந்தது. முகம் வியர்த்துத் துடைத்துப் பளிச்சென்று இருந்தது. ரத்தம் கூடியிருந்தது. புத்தகத்துடன் ராக்கெட்டை அணைத்துப் பிடித்து அவள் நடந்து வந்தபோது என் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அன்று பார்த்து பஸ் தரிப்பில் ஒருவருமே இல்லை. அவளுக்கும் எனக்கும் இடையில் இரண்டடி காற்று மட்டுமே. ஏதாவது பேச வேண்டுமென்றால் அதுதான் கடவுள் எனக்குத் தந்த சந்தர்ப்பம். “நீங்கள் பாட்மிண்டன் விளையாடுவீர்களா?” இப்படி ஒரு சின்னக் கேள்வியைக் கேட்டிருக்கலாம். கேட்கவில்லை. அவள் உதடுகளைத் திறந்து பேசும்போது என்ன சத்தம் வரும் என்பதைத் தெரிந்திருக்கலாம். அன்று இருபது நிமிடங்கள் வீணாயின. ஒரு சமயம் சற்றுக் குனிந்து சீருடைக்குக் கீழே, சொக்சுக்கு மேலே இருந்த சின்ன இடைவெளியில் கையிலே வைத்திருந்த ராக்கெட்டால் சொறிந்தாள். அந்தச் செய்கைகூட எவ்வளவு அழகாக இருந்தது. அழகில்லாத ஒரு வேலைகூட இவளால் செய்ய முடியாதா என்று நான் அந்தத் தருணம் நினைத்தேன்.

வியாழக்கிழமை அவள் பாட்மிண்டன் விளையாடும் நாள். ஆனால் என் மனம் கேட்காது. மற்ற நாட்களைப் போல் நாலு மணிக்கே போய் பஸ் தரிப்பில் காத்திருப்பேன். அவள் நாலு மணிக்கு வராமல் 5:15க்கு அல்லது 5:20க்கு வருவாள். ஒரு மணிக்கு மேலே அங்கே காத்திருக்கும் என்னைச் சில நேரங்களில் கண்ணெறிந்து பார்ப்பது போலத் தோன்றும். ஆனால் ஒரு கண்ணாடியைப் பார்ப்பதுபோல் அந்தப் பார்வை என்னைத் துளைத்துக்கொண்டு மறுபக்கத்துக்குப் போய்விடும். நான் நிற்பது அவளுக்குத் தெரிவதில்லை. எனினும் நான் கடமை தவறாமல் அவளை வீட்டிலே சேர்த்து விட்டுத் திரும்புவேன்.

அவள் படிக்கும் பள்ளிக்கூடம் எதுவென்று இன்னொரு நாள் கண்டுபிடித்தேன். அவள் கழுத்தில் கட்டித் தொங்கவிட்டிருக்கும் டை அதைச் சொல்லிக்கொடுக்கும். கொழும்பில் உள்ள அத்தனை பெண்கள் பள்ளிக்கூடங்களையும் ஒவ்வொன்றாக ஆராய்ந்து, தகவல்களைத் திரட்டித்தான் அதை என்னால் செய்ய முடிந்தது. என்னுடைய புத்திக்கூர்மை அடைவு எண் என்னுடைய செருப்பு சைசைத் தாண்டவில்லை என்று அண்ணர் என்னைப் பலமுறை திட்டியிருக்கிறார். அப்படியிருந்தும் என்னுடைய விடாமுயற்சியால் அதைக் கண்டுபிடித்தேன். அவளுடைய வீட்டைக் கண்டுபிடித்தேன். அவர்கள் வீட்டில் எத்தனை பேர் என்பதைக் கண்டுபிடித்தேன். அவள் எத்தனையாம் வகுப்பு படிக்கிறாள், என்ன படிப்பு படிக்கிறாள் போன்ற சகல விசயங்களும் எனக்குத் தெரிந்தன. அவளுடைய தகப்பன் பெயர்கூடத் தெரியும். அது கேட் பலகையில் எழுதியிருந்தது. அவளுடைய பெயர் மட்டும் தெரியவில்லை. அதையும் ஒரு நாள் கண்டுபிடித்தேன்.

அவளுடைய பள்ளிக்கூடத்தில் கார்ணிவல் என்று பேப்பர்களில் விளம்பரம் வர ஆரம்பித்திருந்தது. அந்த நாளுக்காக நான் ஆவலுடன் காத்திருந்தேன். ஏனென்றால் பள்ளிக்கூடத்தில் நடக்கும் கார்ணிவலுக்கு அவள் கட்டாயம் வருவாள். தினம் சீருடையில் வரும் அவளை வேறு உடுப்பில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். அவள் கவுண் அணிந்து வரலாம், சேலையில் வரலாம், சுரிதாரில் வரலாம் என்றெல்லாம் கற்பனையில் சோடித்துப் பார்த்தேன். கார்ணிவல் அன்று வாசல் திறந்ததும் உள்ளே நுழைந்து அங்குலம் அங்குலமாக முழுநிலத்தையும் அளந்து தேடினேன். இரண்டு மணிநேரமாக இப்படித் தேடி அலைந்து களைத்த சமயத்தில் வாத்துக் கழுத்தில் வளையம் போடும் இடத்தில் சத்தம் வந்தது. அந்த விளையாட்டு நடத்துனர்களாக இரண்டு பெண்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருத்தி இவள். அந்த இடத்துக்கே இவளால் ஒளி கூடியிருந்தது.

அரைத் தாவணியில் அவள் இருந்தாள். நான் அதைக் கற்பனை செய்யவில்லை. அவள் உடல் லாவண்யம் அரைத் தாவணியில் வளைந்து நெளிந்து என்னை வேறு ஒன்றையும் பார்க்கவிடாமல் செய்தது. ஒருத்தி மேசையில் இருந்தாள். இவள் கீழே விழும் வளையங்களை மீட்டு மேசையில் வைக்கும் வேலையைச் செய்தாள். அவள் குனிந்து குனிந்து வளையங்களைப் பொறுக்கியபோது அவள் உடலில் தோன்றிய வளைவுகள் என் மனத்தில் அழியாதபடி பதிந்தன. இருபத்தைந்து சதத்துக்கு ஐந்து வளையங்கள். நான் பஸ் காசை எடுத்துப் பிறிம்பாக வைத்துவிட்டு வளையங்களை வாங்கி எறிந்துகொண்டிருந்தேன். இவளுடைய கழுத்தைப் போலவே வாத்துகள் கழுத்தை நீட்டுவதும் சுருக்குவதுமாக இருந்தன. அவள் தொட்ட அதே வளையங்களை அதே இடத்தில் நானும் தொட்டேன். காசு முடியுமட்டும் விளையாடினேன். வாத்துக் கழுத்தைப் பார்த்ததிலும் அவள் கழுத்தையே அதிகம் பார்த்தேன். ஒருமுறை வாத்தின் கழுத்தில் விழுந்த வளையம் கீழே இறங்கும் முன்னர் வாத்து அதைக் கழற்றிவிட்டது. அப்பொழுது அவள் கல்லென்று மெல்லிய ஓசையில் சிரித்தாள். ஒருமுறைதானும் அவள் என்னை நிமிர்ந்து பார்க்கவில்லை. மேசையில் இருந்த பெண் “ஸ்வேதா” என்று அவளை அழைத்தாள். அப்படித்தான் அவள் பெயரை இரண்டு ரூபா செலவழித்துக் கண்டுபிடித்தேன்.

என் அண்ணர் தேவையில்லாமல் வாய் திறக்கமாட்டார். நல்லாய் அவித்த முட்டையை உண்பதற்கும் என்னைத் திட்டுவதற்கும் மட்டுமே திறப்பார். ஒரு நாள் மச்சாளிடம் அவர் சொன்னது கேட்டது. “இவனில நல்ல மாற்றம் தெரியுது. இப்படிக் கிரமமாக அவன் ஸ்பெசல் கிளாசுக்குப் போவான் என்று நான் நினைக்கவில்லை.” அதற்கு மச்சாள் “அது பெரிசா ஏதோ பிளான் போடுது. இப்போதைக்கு உங்களுக்கு விளங்காது” என்றார். என்னை எத்தனை சரியாக அவர் கணக்குப் போட்டிருந்தார் என்பதை நினைக்கத் திகைப்பாயிருந்தது. அன்றைக்கு ஒரு மணி நேரமாக மண்டையைச் சுவரில் உடைப்பதா மேசையில் உடைப்பதா என்று தீர்மானிக்க முடியாமல் தவித்தேன். சிவப்பு நிற எண்ணங்கள் மனத்தை நிறைத்தன. கிட்டத்தட்ட ஒரு வருட காலம் நான் அவளை நாள் தவறாமல் வீடு வரைக்கும் பக்குவமாகக் கூட்டிச் சென்று விட்டுவிட்டு வந்தேன். நான் அவளுக்குப் பக்கத்தில் நிற்கவோ இருக்கவோ முயலவில்லை. பார்த்துச் சிரிக்கவில்லை. பேசவில்லை. கடிதம் கொடுக்கவில்லை. நாளுக்கு ஓர் அணுவாக எங்களிடையே வளர்ந்த காதல் முடிவுக்கு வந்தவிதம்தான் மிகவும் பரிதாபகரமானது.

ஆரம்பத்திலிருந்து ஒரு நாள் நல்லாய்ப் போய்க்கொண்டிருந்தால் அன்றைய நாள் பிழையான திசையில் சென்றுகொண்டிருக்கிறது என்பது அர்த்தம். காலையில் அண்ணர் எழும்பி இரண்டு நிமிடமாகியும் என்னிடம் சத்தம் போடவில்லை. பாணில் ஒருவரும் சாப்பிட முடியாத முரட்டுப் பகுதியைச் சாப்பிடுவதற்கு மச்சாள் சுடவைச்ச குழம்பை ஊற்றினார். உதட்டில் கொஞ்சம் சிரித்ததுபோலவும் கிடந்தது. அன்பொழுக, மெசினில் மாவு அரைத்துக்கொண்டு வரச் சொன்னார். திரும்பிவந்தபோது நண்பன் ஒருவன் வீட்டிலே காத்துக்கொண்டிருந்தான். என்னைத் தேடி வீட்டுக்கு யாரும் வருவது மச்சாளுக்குப் பிடிக்காது. எம்.ஜி.ஆர் நடித்த மர்மயோகி படத்தை நாலு தரம் பார்த்திருந்தேன். அவர் அப்போது கோல்ஃபேஸ் ஹொட்டலில் வந்து தங்கியிருந்தார். “அவர் ஹொட்டல் மாடிக்கு வருவார், வா பார்க்கலாம்” என்று நண்பன் அழைத்தபோது நான் நாலு மணிக்கு வேலை இருக்கிறதென்று மறுத்துவிட்டேன். அவன் என்னை ஒரு மாதிரிப் பார்த்தபடி திரும்பினான். இப்படி ஒருவனா என்று அவன் திகைத்துப்போனது தெரிந்தது.

மூக்கில் ரத்தம் ஒழுகுவதுபோல் மச்சாள் முகத்தைத் தூக்கிவைத்துக் கொண்டு முன் விறாந்தையில் உலாத்தினார். அன்று மச்சாள் உதடுகள் அசையாமல் கதைக்கும் நாள். இரண்டு கைகளையும் தன் இடுப்பில் வைத்துக்கொண்டு சாரியை அயர்ன் பண்ணித் தந்துவிட்டுப் போகும்படி கேட்டார். கைகள் இடுப்பில் வேலையாக இருந்ததுதான் காரணம் என்று நினைக்கிறேன். எந்த சாரி என்று கேட்டேன். மைசூர் சில்க் என்றார். அதைவிடக் கொடிய தண்டனையை ஒருவர் உண்டாக்க முடியாது. இன்னும் அவர் குரலை உயர்த்தவில்லை. அதற்கு அரை நிமிடம் இருந்தது. உரஞ்ச உரஞ்ச நழுவிப் போகும் சாரி அது. சாரிக்குக் கீழே மச்சாள் இருக்கிறார் என்று கற்பனை செய்ததில் ஒருவாறு அழுத்தித் தேய்க்கக்கூடியதாக இருந்தது. வேறு ஒரு வேலையை மச்சாள் உண்டாக்கும் முன்னர் ஓடியோடி பஸ் தரிப்புக்கு வந்தால் பஸ் புறப்பட்டுவிட்டது. எப்படியோ ஓடிப்பிடித்து அதில் தொத்தி ஏறிக்கொண்டேன்.

அவளுடைய பின்னலையும் ரிப்பனையும் பார்த்தபடி பின்னால் இருந்தேன். ‘ஸ்’ என்று தொடங்கும் அவளுடைய பெயரை உச்சரித்தால் அது எப்படிக் கேட்கும் என்று நான் சோதித்துக்கூடப் பார்த்தது கிடையாது. மனத்துக்குள் அடிக்கடி சொல்லிப் பார்ப்பேன். ‘ஸ்’ எழுத்தே ஒரு ரகஸ்யமான எழுத்துதான். அந்த வருடம்தான் என் வாழ் நாளில் ஆகத்திறமான வருடம். பஸ் நிறுத்தத்தில் அவள் இறங்கியதும் நானும் இறங்கினேன். என்றுமில்லாத மாதிரி அவளுடைய பிறங்கை என்னுடைய பிறங்கையில் மெல்லிசாக உரசியது. அவளைக் கொஞ்ச தூரம் நடக்கவிட்டுப் பின்னால் நானும் நடந்தேன். அவள் என்னைக் கடைக்கண்ணால் திரும்பிப் பார்த்தாள். நான் நம்பவில்லை. அந்த ஒரு வருடகாலத்தில் அவள் அப்படிச் செய்தது கிடையாது.

அன்று எனக்கு என்ன தோன்றியதோ அவளை மனனம் செய்தேன். அவளுடைய உயரம், பருமன், நிறம், பின்னல், ரிப்பன், கழுத்து, உடல் வளைவு, கால்கள் சகலத்தையும் மனப்பாடம் பண்ணினேன். வழக்கத்திலும் பார்க்க வேகமாக நடந்தாள். ஏதோ பொதுமலசல கூடத்தைக் கடப்பதுபோல். நானும் நடந்தேன். அவளுடைய வீடு வந்ததும் பாதி மறைத்திருந்த கேட்டைத் திறந்து உள்ளே போனாள். நான் என்பாட்டுக்கு வீதியின் நுனிக்குப் போய் மறுபடியும் வந்த வழியால் திரும்பினேன். அவளுடைய வீட்டுக் கேட்டைத் தாண்டும்போது திரும்பிப் பார்த்த நான் திடுக்கிட்டேன். அவளுடைய அப்பாவும் அம்மாவும் நின்றார்கள். அவர்களுடைய மார்பும் தலையும் தடுப்புக்கு மேலால் தெரிந்தன. அவளுடைய பாட்டியும் அவளும் அவளுடைய தங்கச்சியுங்கூட அங்கே நின்றது தெரிந்தது. தங்கச்சி கேட்டின் அடியில் குனிந்து என்னைப் பார்த்தாள். முழுக் குடும்பமும் நின்று என்னை வேடிக்கை பார்த்தது. என் நெஞ்சு ‘படக்படக்’ என்று அடித்தது. அவர்கள் வாய் திறந்து ஒன்றுமே கேட்கவில்லை, பார்வை மட்டும்தான். எப்படி கேட்டைக் கடந்து பஸ் பிடித்து வீடு வந்து சேர்ந்தேனோ தெரியாது. வீட்டுக்கு வந்தபிறகும் இருதயம் விலா எலும்பில் விட்டுவிட்டுக் குத்தியது. முகத்தைப் பார்த்த அண்ணர் திடுக்கிட்டு “என்னடா?” என்றார். நான் ஒன்றுமில்லை என்று கத்தினேன். அந்தச் சத்தம் மச்சாளுக்குக் கேட்டது. வெள்ளவத்தைக்குக் கேட்டது. எம்.ஜி.ஆருக்குக் கேட்டது.

o

“அப்பா, எறும்பு நைஜீரியாவைக் கடந்துவிட்டது” என்றான் மகன்.

“சரி, நீ அதை ஒன்றும் செய்யாதே.”

மேசையின் ஒரு விளிம்பிலிருந்து மறு எல்லைவரை உலகப்படம் கண்ணாடியில் வரையப்பட்டுக் கிடந்தது. ஆங்கிலேயரின் ஆட்சி உச்சத்தில் இருந்தபோது உண்டாக்கிய வரைபடம் என்பதால் இப்போது இருக்கும் நாடுகள் சில அப்போது இல்லை. அப்போதிருந்த நாடுகள் சில ஒன்றாகச் சேர்ந்துவிட்டன. எறும்பு வரைபடத்தில் ஓடிக்கொண்டிருந்தது. என் மகனின் விரல் அதன் பின்னால் ஊர்ந்தது.

“எறும்பு இத்தாலிக்குப் போய் விட்டது.”

“சரி.”

கிட்டத்தட்ட ஒருவருட காலம் அவள் போன பஸ்சில் நான் அவளைப் பின்தொடர்ந்தேன். யாராவது கணக்குப் போட்டுப் பார்த்தால் 1,600 மைல்கள், 290 மணித்தியாலங்கள். எனக்கு அவள் மேல் பெரிய கோபம் இருந்தது. இப்பொழுது யோசித்துப் பார்க்கும்போது அந்தப் பெண் வேறு என்ன செய்திருக்க முடியும் என்று தோன்றுகிறது. நான் சிரித்தால் முகத்தை வேறுபக்கம் திருப்பியிருக்கலாம். பேசினால் தனக்கு அது பிடிக்கவில்லை என்று சொல்லியிருக்கலாம். கடிதம் கொடுத்தால் அதை வாங்கி என் முன்னால் கிழித்துப் போட்டுத் தன் கோபத்தைக் காட்டியிருக்கலாம். நான் மௌனமாகத் தொடர்ந்தேன். அவள் மௌனமாகத் தன் எதிர்ப்பைக் காட்டினாள். அவள் நல்லவளாகத்தான் இருப்பாள்.

“அப்பா, நீங்கள் பயணம் போயிருக்கிறீர்களா?”

“போனது மாதிரித்தான்.”

“எங்கே?”

“ஏதோ இடத்துக்கு.”

“அது எவ்வளவு தூரம் அப்பா?”

“1,600 மைல்கள்.”

வார்த்தைகளைக் கண்டுபிடிக்கும் முன்னர்தான் மனிதன் உண்மையாக இருந்தான். வார்த்தைகள் மனத்தைச் சொல்லப் பயன்படுவதில்லை. மனத்தை மறைக்கவே பயன்பட்டிருக்கின்றன.

“எப்பப் போனீங்கள்?”

“எனக்குப் பதினேழு வயது நடந்தபோது.”

“பயணத்துக்கு எவ்வளவு நேரம் பிடித்தது?”

“290 மணித்தியாலங்கள். அதாவது 12 நாட்கள்.”

“12 நாட்களா?”

“ஓர் உண்மையைக் கண்டுபிடிக்க 12 நாட்கள் என்பது சிறிய கால அவகாசம்தான்.”

எங்கள் சம்பாசணையில் கலந்துகொள்ளாமல் எறும்பு ஒருவர் உதவியுமின்றித் தனியாக அட்லாண்டிக் சமுத்திரத்தைக் கடந்துகொண்டிருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *