(1949 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“நீங்களா, சீல் பாபு?”
ஐந்து வருஷங்களுக்குப் பின் ஒலித்த அந்தக் குரல் அவனுடைய மனதை என்னவோ செய்தது.
அவன் மௌனமாக நின்று கொண்டிருந்தான், ஒரு காலத்தில் மிகவும் நெருங்கிப் பழகிய ஆசாவுக்கெதிரே அன்று அவன் அறிமுகமற்றவன் போல நின்று கொண்டிருக்கவேண்டியிருந்தது. “ஆம்” என்ற ஒரு சொல்லைத் தவிர அவன் வாயிளின்றும் வேறொரு சொல்லும் எழவில்லை.
“இன்று இந்தப் பக்கம் எங்கே வந்தீர்கள்?”
“சும்மா உன்னைப் பார்த்துப் போவதற்காகத்தான்.”
அவன் ஏதோ நினைவில் அப்படிச் சொல்லிவிட்டான். ஆனால் அடுத்த கணமே அம்மாதிரியான சொற்களை உபயோகிப்பது-அதுவும் விவாகமான பெண்ணைப் பொறுத்தவரை அவதூறுக் கிடமாகும் என்பது அவனுக்கு நினைவுக்கு வந்தது. அவன் அவளுக்கு என்ன வேண்டும்? ஏதோ பால்ய நண்பன். அவ்வளவு தானே!
பல பேருக்கு மத்தியில் தன்னை யாரோ அவமானப்படுத்தியது போலத் தோன்றியது அவளுக்கு. அவளுடைய குழிந்த சிவந்த கன்னங்கள் இன்னும் அதிகமாகச் சிவந்தன.
“ஒரு விஷயம் கேட்கலாமா?”
சீல் பாபு உட்கார்ந்து கொண்டே அவளைப் பார்த்துக் கேட்டான்.
“கேட்க வேண்டிய அவசியம்?”
அவள் குரலில் கொஞ்சம் கடுகடுப்பு தொனித்தது.
“ஏனெனில் அந்தக் கேள்வியின் பதிலைப் பொறுத்துத்தான் என் வாழ்ச்கையில் சுகமோ துக்கமோ அடைய முடியும்!”
“ஓகோ. அப்படியா?”
“ஆமாம்.”
“சரி, அப்படியானால் உங்கள் கேள்விக்கு, நீங்கள் கேட்காமலேயே நான் பதில் சொல்லிவிடுகிறேன்.”
“உன்னால் சொல்ல முடியாது, ஆசா!”
“இல்லை. என்னால் சொல்ல முடியும். நான் உங்களைக் காதலிக்க முடியாது. ஏனெனில் நான் விவாகமானவள்.”
சாய்வு நாற்காலியில் சாய்ந்திருந்த சீல் பாபுவின் கால்கள் சங்கோசம், வருத்தம் வெறுப்பு இவற்றினால் நடுங்கத் தொடங்கின. அவனால் வாய் திறந்து பேச முடியவில்லை. ஆனால் ஆசா மேலும் சொல்லிக் கொண்டே போனாள்: “கல்யாணம் ஆகாமல் காதலிப்பதும் ஒரு விதத்தில் மானஸீக விபசாரமாகும்.”
“எனக்கு அது தெரியும். ஆனால்….”.
“ஆனால் என்ன?”
”நான் கேட்க நினைத்தது வேறு”
“அதென்ன?”
ஆரா ஆதுரத்துடன் கேட்டான்.
“ஆமாம். இந்த டாக்டர் உன்னை..”
நாணமுற்ற ஆசாவின் நீண்ட விழிகள் பலவீனமான அவனுடைய முகத்தை ஒரு முறை ஏறிட்டுப் பார்த்தன. பிறகு தானாகவே தரையை நோக்கலாயின.
சீல் பாபு மறுபடியும், “காமமில்லாத காதல் ஒன்று இருப்பதாக உங்கள் விவேக புத்திக்கு எட்டவேயில்லை யல்லவா?” என்று கேட்டான்.
தோல்வியே கண்டறியாத ஆசாவினால் வெட்கத்தை விட்டு இத்தடவை தன்னைச் சமாளித்துக் கொள்ள முடியவில்லை. அவள் கடகட வென்று நகைத்தாள்.
***
ஐந்து வருஷங்களுக்கு முன்பு அவர்கள் மசூரியில் இருந்தனர்.
ஒருநாள் காலைப்பொழுது வானம் தனிச் சோபையுடன் விளங்கியது. அவ்வளவு எழிலுடன் காட்சியளித்த அந்தக் காலையின் மாலை இன்னும் எவ்வளவு எழிலுடனிருந்திருக்குமோ, தெரியாது. அவன் ஜன்னலருகே உட்கார்ந்து ஏதோ எழுதிக் கொண்டிருந்தான். ஜன்னலுக்கு வெளியே இயற்கையின் காதல் நாடகம் எப்பொழுதும் போலவே நடந்து கொண்டிருந்தது.
“மேகம் ஓடியது. ஓடிப் போய்த் தலை நிமிர்ந்து நின்று கொண்டிருந்த மலையரசனின் சிகரத்தைப் பிடித்துக் கொண்டது. சிறிது நேரத்துக்கெல்லாம் மலையரசனின் சிகரம் மறைந்துவிட்டது. மலையிலிருந்து இறங்கிய அருவி ‘சலால’ சப்தத்துடன் கீழ் நோக்கி ஓடி ஒரு பெரிய பள்ளத்தில் ஐக்கிய மடைந்து விட்டது.”
இவ்வாறு எழுதிக்கொண்டிருந்த அவன் அதை நிறுத்திவிட்டுத் திடீரென்று தன்னுடைய ‘டயரி’யில் ஏதோ குறித்துக் கொண்டான்.
“காதலுக்கு இரண்டே இரண்டு முக்கியமான முடிவுதான் உண்டு.”
அவள் மெதுவாகப் பின்புறமாக வந்து தனது தளிர்க் கரங்களால், அவனுடைய கண்களை இறுகப் பொத்தினாள். அவன் அந்தக் கைகளை மெதுவாகத் தொட்டுத் தடவிப் பார்த்தான். ஆகா! எவ்வளவு மிருதுவான கரங்கள்! அந்தக் கர ஸ்பரிசத்தில்தான் என்ன சுகம்! இன்றும் அதை நினைத்தாலே மனம் புல்லரிக்கிறது. அவன் அந்தக் கைகளை நகர்த்தவே முயற்சிக்கவில்லை. ஆனால் சிறிது நேரத்துக்கெல்லாம அவளாகவே சிரித்துக்கொண்டு அவனெதிரே வந்து நின்றாள். “சீல் பாபு! என்னை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை யல்லவா?- ஆமாம், என்ன எழுதிக் கொண்டிருந்தீர்கள்?” என்று அவள் தன் தேமதுரக் குரலில் கேட்டாள்.
“ஒன்றும் இல்லை!” என்று அவன் அலட்சியமாகப் பதில் சொன்னான்.
“சொல்ல மாட்டீர்களா, சீல் பாபு?” என்று கேட்ட வண்ணமே அவள் அவனருகில் மேஜை மீது உட்கார்ந்தாள்.
“ஊஹும்!”
“அதெல்லாம் முடியாது. சொல்லித் தான் ஆகவேண்டும்” என்று குறுநகையுடன் அவள் பிடிவாதம் பிடித்தாள்.
கடைசியில் அவன் அவளுக்கு அந்த டயிரியையே எடுத்துக் காண்பித்து விட்டான்.
“மனிதனுடைய மிகப் பெரிய பலவீனம் காதல்தான். தேவதைகள் மனிதனுக்கு அளித்த பெரிய சாபமும் அதுவே” என்று அதில் எழுதியிருந்தது.
“பொய்!”
ஆரா அழுத்தந் திருத்தமாக இந்த ஒரே ஒரு வார்த்தையை மட்டும் சொன்னாள்.
***
அப்படிக் ‘கட கட’ வென்று நகைத்த ஆசாவுக்குத் திடீரென்று “என்ன இருந்தாலும் சீல் பாபு இன்று விருந்தாளி. அவரை உபாரிப்பதுதான் நமது கடமை” என்று நோன்றியது. உடனே அவள் தன் குரலில் சாந்தத்தை வரவழைத்துக் கொண்டு, “டீ கொண்டு வரச் சொல்லட்டுமா?” என்று கேட்டான். அந்தக் கேள்விக்கு அவன் ஏதாவது பதில் சொல்லுவான் என்று அவள் எதிர் பார்த்தாள். ஆனால் பழைய நினைவுகளில் உழன்று கொண்டிருந்த சீல் பாபு வாய் திறந்து ஒன்றும் சொல்லவில்லை.
‘விவேகத்துக்கும் காதலுக்கும் என்ன பந்தம்? ஒன்று இருக்கும் பொழுது இன்னொன்றுக்கு இடம் ஏது? காதலோ, விவேகமோ இரண்டுக்குள் ஒன்றுதானே இருக்க முடியும்? அப்படியிருக்கும் பொழுது, காதலும் காமமும் ஒன்றா அல்லது வெவ்வேறானவையா?’ என்று யோசிக்க யாருக்கும் பொழுதிருக்கிறது?
இவ்வாறு சிந்தித்த வாறு ஆசா தேநீர் கொண்டுவர உள்ளே சென்றாள்.
“பேஷ்! ரொம்ப நன்றாயிருக்கிறது! உண்மையைக் கண்டால் காத தூரம் ஓடும் – கற்பனை உலகத்தில் சஞ்சரிக்கும் கவி இந்தப் திரை விடுவிப்பதென்றால்… ரொம்ப அழகுதான்!”
இதை நினைக்கவே அவளுக்கு மறுபடி சிரிப்பு வந்தது.
உள்ளே சென்ற பிறகும் ஆசா சிரிக்கும் சத்தம் கேட்கவே, “சீ! என்ன அவமானம்!” என்று ரொல்லி சீல் பாபு குனிந்தான். தனது கோட்டுப் பைகளில் கையை விட்டுக் கொண்டு பக்கத்திலிருந்த மேஜை யினருகில் போய் நின்றான். அந்த மேஜையின் மேல் ஒரு பூந்தொட்டி பூத்திருந்தது. அந்தப் பூந்தொட்டிக்குக் கீழே ஆசாவின் படம் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. நடந்து நடந்து களைத்துப்போன ஆசா அந்தக் கல்பதருவின் கீழே களைப்பாறிக் கொண்டிருப்பது போல் இருந்தது. அவள் முகத்தோற்றத்திலும் ரப்புத் தோன்றியது. அவளுடைய கூந்தல் சிதறிக் கிடந்தது. இரண்டொரு கேசம் அவள் முகத்தில் விழுந்து களைப்பை சோபையை இன்னும் அதிகரித்துக் கொண்டிருந்தது. அவன் அந்தப் படத்தைக் கையில் எடுத்துப் பார்த்தான். ஒரு ஓரத்தில் அவளுடைய பெயர், மூன்று வருஷங்களுக்கு முன்பு ஒரு தேதியும் எழுதியிருந்தது. சீல்பாபு அந்தப் படத்தைப் பார்த்தவாறே. “ஆசா!” என்று கூப்பிட்டான்.
“ஆனால் இன்று இந்தப் புது ஆசா என்னை எப்படி அவமானப்படுத்துகிறாள், பார்த்தாயா? என்னைப் பார்த்துக் ‘கட கட’ வென்று சிரிக்கிறாள். அலட்சியமாகப் பேசுகிறாள். காதல் என்பது வேறு; காமம் என்பது வேறு. காதலுக்கு ஆத்மாவுடன் தான் சம்பந்தம். காமத்துக்கும் ஆத்மாவுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லையென்று சொன்னால் அவளுக்கு நம்பிக்கை ஏற்பட மாட்டேன் என்கிறது.
“நான் உன்னைக் காதலித்தேன். மூன்று வருஷத்துக்குப்பின் இன்னும் உன்னைக் காதலிக்கிறேன். ஆனால் என்னை மன்னித்துவிடு, ஆசா! என்னால் உன்னுடைய இந்தப் புதிய உருவத்தை அறிய முடியவில்லை; முடியவும் முடியாது. மூன்று வருஷங்களுக்குப் பின், சிறைக் கூடத்துக்குள்ளிருந்து வெளியேற்றப்பட்டதும், உனக்குக் கல்யாணம் ஆகிவிட்டது என்ற செய்தியைக் கேள்விப்பட்டேன். எனக்கு அப்பொழுது மூளை குழம்பிவிட்டது. ஆனால் ஏழையான நான் உனக்கு உன் விவாகத்தின் ஞாபகார்த்தமாக என்ன வெகுமதியளிக்க முடியும்? என்னுடையது என்றிருந்ததைத்தான் நான் உனக்கு முன்னமேயே வெகுமதியாக அளித்து உள்ளத்தைத் தவிர உயர்ந்த வஸ்து வெகுமதியாக அளித்து விட்டேனே! வேறு என்னிடம் எது?” என்று என்னென்னவெல்லாமோ தன் மனசுக்குள் சொல்லிக் கொண்டான்.
கோட்டுப் பையிலிரு ஒரு பாக்கெட்டை எடுத்து மேஜையின்மீ வைத்துவிட்டுப் பித்தனைப் போல அவன் வெளியேறினான். வாசற்படியில் மௌனச் சிலையாக நின்று அவனுடைய புலம்பலைக் கேட்டுக் கொண்டுதானிருந்தாள். “சீல்பாபு! சீல்பாபு! டீ சாப்பிட்டு விட்டுப் போங்கள். சொல்வதைக் கேளுங்கள்” என்று அவள் அவனை வருந்தி வருந்தி அழைத்தாள். ஆனால்…
தேர்க் கோப்பையை மேஜைமீது வைத்துவிட்டு அவசர அவசரமாக அவன் அந்தப் பாக்கெட்டை அவிழ்த்தாள். அது ஒரு கவிதைப் புத்தகம். “முல்லை” என்ற பெயரில் சீல் பாபு எழுதிய கவிதைகளின் தொகுதி!
ஆசாவுக்குத் துயரம் தாங்கவில்லை. பக்கத்திலிருந்த சோபாவில் அப்படியே ‘தடால்’ என்று உட்கார்ந்து விட்டாள். இதயத் துடிப்பில் ஒரு மாறுதல்! உடல் உதறல் எடுத்தது. ஆசாவின் தேகத்தில் ஒரு பெரும் பூகம்பமே ஏற்பட்டது போவிருந்தது.
அவள் எத்தனை நேரம் அப்படிப் பேசாமல் உட்கார்ந்திருந்தாளோ, தெரியாது. பிறகு அதைப் பிரித்தாள், முதற் பக்கத்தில் “கடல் சிப்பியிடம் காட்டும் அன்பை – சிப்பி முத்தினிடம் காட்டும் அன்பை – உள்ளத்தைத் துளைத்துத் தன்னை மாலையாக அணிந்து கொள்பவளிடம் முத்து காட்டும் அன்பை – இந்த ஏழை ஆசாவிடம் காட்டுகிறான். அப்படிப்பட்ட ஆசாவுக்கு இந்நூல் சமர்ப்பணம்” என்று எழுதியிருந்தது.
ஆசாவின் கண்களில் இரு கண்ணீர்த் துளிகள் முத்துப் போல் கோத்து நின்றன. சீல்பாபுவின் படம் இருந்த அடுத்த பக்கத்தை அவள் பிரித்தாள். அதே சமயம் அக் கண்ணீர் முத்துக்கள் சீல்பாபுவின் அந்தப் படத்தின் மீது விழுந்து தெறித்தன.
‘டிக்டிக்’ என்று ஓயாமல் ஒழியாமல் ஓடும் கடிகாரம் எப்பொழுது மணி ஐந்தடித்ததோ, அவளுக்குத் தெரியாது. டாக்டர் சிரித்த முகத்துடன் ஆசாவின் அறைக்குள் “இன்று ஒரு வேடிக்கையான சம்பவம் நடந்தது” என்று சொல்லியவாறே நுழைந்தார்.
“ஒரு பைத்தியக்காரன் ஆஸ்பத்திரிக்குள் நுழைந்து கல்பாணம் ஆகி மூன்று வருஷத்துக்குப் பிறகு எனக்கு வாழ்த்துக் கூற வந்திருந்தான். நான் கம்பவுண்டரிடம் ஒரு ரூபாய்க்குத் தீன்பண்டம் வாங்கி அவனுக்குக் கொடுக்குமாறு சொல்லி அவனை மெதுவாக வெளியே அனுப்பின பாடு பெரும்பாடா விட்டது!” என்று சொல்லிச் சிரித்தார்.
பிறகு உடையைக் களைந்து மாற்று உடை அணிந்து கொண்டிருந்த டாக்டர் திடீரென்று ஆராவை திரும்பிப் பார்த்து, “என்ன படித்துக் கொண்டிருக்கிருய்?” என்று கேட்டார்.
“முல்லை மலர்” என்றாள் ஆசா.
டாக்டர் அவளுடைய கையிலிருந்து புஸ்தகத்தை வாங்கிக் கொண்டார். வெகு நேரம் வரை அந்தப் பக்கமே திறந்திருந்ததனால், சீல்பாபுவின் படம் இருந்த பக்கமே திரும்பவும் பிரித்துக் கொண்டது. “சீல்பாபு யார்?” என்று டாக்டர் தயக்கத்துடன் கேட்டார். அவர் கண்களுக்கெதிரே அதே பைத்தியக்காரனின் உருவம் காட்சியளித்தது.
“முல்லை மலரை எழுதியவர்!”
“என்ன, உனக்கு அவரைத் தெரியுமா”
“அவரையா?” என்று கேட்ட போது அவள் நாத் தழுதழுத்தது. “தெரியும். என்னை அவர் காதலிக்கிறார்” என்று எப்படியே சொல்லி முடித்தாள்.
“காதலிக்கிறாரா?” என்று கேட்ட டாக்டர் அதிசயத்தினால் அசையாமல் அப்படி சிலை போல நின்றார்.
“ஆமாம்” என்று சொன்ன ஆசா “காமம் இல்லாத காதல் ஒன்று இருக்கிறது என்பது உங்கள் விவேக புத்திக்கு எட்டவேயில்லை யல்லவா?” என்று சீல்பாபு கேட்ட அதே கேள்வியை டாக்டரிடம் கேட்டாள். அதைக் கேட்டதும் டாக்டர் ‘கட கட’ வென்று சிரித்தார்.
– 1949-07-03, ஹிந்திக் கதையின் மொழிபெயர்ப்பு