அவன் இறந்துவிட்டதாகக் கூறிக் கொண்டு சொரேலென அந்த அறைக்குள் நுழைந்தவன் தான் மட்டும் அங்கு யாருமற்ற அறையில் நின்று கொண்டிருப்பதைக் கண்டு திடுக்கிட்டுப் போனான். அடக்கமாட்டாத தன் தவிப்பின் காரணமாக மீண்டுமொரு முறை பெரும் குரலெடுத்து அந்த மரணச் செய்தியை அறிவித்தவனுக்கு அதன் பிரதியுத்தரமாக எவரது முகமேனும் அதிர்ச்சியுறுவதைக் காணுமாவல் மிக்க இருந்தது. இனி அற்ப நிமிடங்கள் மட்டுமே தன்னால் காரியமாற்ற முடியுமென்பதால் கிடைத்த கால அவகாசம் சிறிது மட்டிலும் எதையேனும் செய்தாக வேண்டிய அவசரமும் பதட்டமும்மாய் அறைக்குள் அங்குமிங்குமாய் அலைந்து கொண்டிருந்தான்.
யாருமற்ற அந்த அறையில் அவன் நிகழ்த்தும் காரியங்கள் காரணமற்றதாகவும் ஒரு சிலருக்குப் பயமூட்டுவதாகவும் வேறு சிலருக்குப் பெரும் துயரத்தை உண்டு பண்ணக் கூடியதாகவுமிருக்கிறது. மிகவும் களைத்துப் போய்க் காற்றில் அலையும் தன் ஆடைகளையே பார்த்துக் கொண்டிருக்கும் அவன் தன் கட்டுப்பாட்டை மீறி வேறு எவற்றையோ உணர்த்தும் அதன் பீதியூட்டும் தன்மை குறித்து அதிர்சியுற்றான். இழந்த ஒன்றை இனி ஒருபோதும் மீண்டும் பெறவியலாத ஆற்றாமை அவனது மைய இருப்பை அரித்து அரித்துத் தீர்க்கிறது. தாளமாட்டாத வலியின் காரணமாகத் தனக்குத்தானே பலம் கொண்ட மட்டும் நெஞ்சில் குத்திக் கொண்டவன் ஒரு கட்டத்தில் பெரும் குரலெடுத்துக் கதறத் துவங்கினான். சப்தமற்ற அவனது கதறலொலி காற்றைக் கிழித்தூடுருவி அறையின் எல்லா ஜடப் பொருட்களையும் அசைத்துக் கீழே விழத் தட்டுவதாயிருக்கிறது.
யாருமற்ற அறையில் பொருட்கள் மட்டும் தடதடத்து விழுந்து கொண்டிருக்க வெளியே யாரோ இருவர் பேசிக் கொண்டு வரும் சப்தமும் தொடர்ந்தாற் போல் அந்த அறைக் கதவின் பூட்டைத் திறக்கும் ஓசையும் கேட்க அவன் சட்டென தன் அழுகையை நிறுத்திக்கொண்டான். தானிருப்பதை அவர்கள் பார்த்து விடுவார்களோ என்கிற காரணமற்ற பயத்துடன் அங்கிங்குமாய் மறைவிடம் தேடி ஓரிரு நிமிடங்கள் அலைந்த பிறகுதான் தன் காரியத்திலிருக்கும் அபத்தத்தை உணர்ந்தவனாகத் தன்னைத்தானே நொந்து கொண்டு சமாதானமாகிப் போனான். இன்னும் அவர்கள் தகவலறிவிக்கப்படாதவர்களென்பதைப் பார்த்த மாத்திரத்திலேயே கண்டு கொண்டவன் அவர்களுக்கு அந்தத் தகவலைச் சொல்லிவிட பெரும் ஆயத்தம் மேற்கொண்டான். மீண்டும் இரண்டொரு பொருட்கள் திருமென கீழே விழுந்ததைத் தவிர அவனால் காரியம் வேறேதும் நிகழ்த்திட முடியவில்லை. அனிச்சையாகக் கீழே விழும் பொருட்களைப் பார்த்த நண்பர்கள் இருவரும் தங்களுடன் இன்னுமொருவனும் அந்த அறையில் இருப்பதை உணரவில்லை.
தன் பிறந்த நாளான இன்று அவளிடம் எப்படியும் தன் காதலை ஒப்புக் கொடுக்கப் போவதாகத் தம்மிடம் சூளுரைத்து விட்டுப்போன நம் மூன்றாவது அறை நண்பன் குறித்து தகவலேதுமுண்டா எனச் சட்டையைக் கழட்டி ஹேங்கரில் மாட்டிக் கொண்டிருந்தவன் மற்றவனிடம் கேட்டான். மற்றவனோ இவனது கேள்வியால் வெறுப்புற்றவன்போல சற்றொரு நிமிடம் எதுவும் பேசாமல் லுங்கியிலிருந்து உள்ளாடையை உருவிக் கொடியில் போட்டபடி நாற்காலியில் அமர்ந்திருந்தவனை நோக்கினான். பின் தான் இன்று காலையில் தங்களது நண்பனை அவனது காதலியுடன் கல்லூரி வளாகத்தில் பின்புறம் தைல மரக்காடுகளுக்கிடையே நடந்து சென்றபோது பார்த்தாகவும் இருவருக்குமிடையே இடைவெளி சற்று அதிகமாகக் காணப்பட்டதகாவும் கூறினான். மேலும் தான் பாக்கும்போது அவனது கையில் கடிதம் இருந்ததாகவும் அவளது கையில் ஒரு கத்தி இருந்ததாகவும் ஆனால் அது தன் பார்வைக்குப் படவில்லை என்றும், ஒரு வேளை சேலைத் தலைப்புக்குள் அவள் மறைத்து வைத்திருப்பாள் என்பது தன் அனுமானம் என்றும் கூறினான். மேலும் தான் கூற வந்தது நிஜக் கதையல்ல என்றும் அதனை இங்கே வேறு மாதிரியாக அர்த்தம் கொள்ள வேண்டும் என்றும் தன் நண்பனிடம் விண்ணப்பித்துக் கொண்டான். மேலும் அவன் சிற்சில சந்தர்ப்பங்களில் அப் பெண் தன்னிடமும் சில ரகசியப் புன்னகைகளைச் சமர்ப்பித்துள்ளதாகவும் அதனால் தாங்கள் நினைப்பதற்கோ அல்லது பொறாமைப் படுவதற்கோ எதிரான சாத்தியங்கள்தான் அவர்களிடமும் அதிகமிருப்பதாகவும் கூறினான். இதன் பொருட்டாகப் பாதிப்பிற்குள்ளாகப் போவது தங்களது நண்பன் மட்டுமே எனக் கூறியபடி அருகிலிருந்த பானையிலிருந்த நீரையெடுத்துப் பருகிக் கொண்டான். அதுவரை இவர்களது சம்பாஷணையைக் கேட்டுக் கொண்டிருந்த (மூன்றாவது அறை நண்பானான) இவனுக்குத் திடுக்கென்றிருந்தது.
மற்ற எல்லாமும் கூட தன் சக ஜீவிகளிடம் எதிர்பார்த்தது தானென்றாலும் தன்னை நோக்கி அவள் புன்னகைத்ததாகக் கூறியதைத்தான் அவனால் ஜீரணிக்க முடியவில்லை. ஒரு வேளை அவள் நிஜத்தில் புன்கைத்திருப்பாளோ என நினைத்து மறு நொடியில் தன் கன்னத்தைப் பளாரென தானே அறைந்து எண்ணத்தை மாற்றிக் கொண்டான். இரண்டு முறை தலையை இடம் வலமாக அசைத்துக் கொண்டவன் தன் காதலின் உன்னதம் மாற்றுக் கைகளால் எவ்வளவு சுலபமாய்ச் சீரழிக்கப்படுகிறதென தனக்குத் தானே நொந்து கொண்டான். கீழ்த் தரமான இத்தகைய மனிதர்களிடமிருந்து தப்பித்துச் செல்லத் தனக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த தன் காதலியின் மறுதலிப்புக் குறித்தும் தொடர்ந்த சம்பவங்கள் குறித்தும் சற்றே ஆசுவாசப்பட்டவன் மறு நொடியில் மீண்டும் தன் துயரத்தில் சிக்கிப் பரிதவித்தான். வேறு யாரிடமும் சொல்லி அழ மாட்டாத தன் துயரத்தை அவள் முன்பாக மண்டியிட்டு கோர இன்னும் நெடுநாட்கள் காத்திருக்க வேண்டிய கால அவசியம் வேறு அவனது ஆற்றாமையை இன்னும் அதிகப்படுத்தியது. சட்டென செவிகளைக் கூர்மையாக்கிக் கேட்டவன் எங்கோ காற்றலைகளோடு தன்னை நோக்கி வரும் கொலுசுச் சத்தம் கேட்டு ஒரு நிமிடம் துணுக்குற்றான். மரணத்தை முன்னறிவிக்கும் பெரும் மணிச் சத்தமாகத் தன்னால் முன்கூட்டி உணர முடியாது போன குறித்த கால இடைவெளியிலான அந்தக் கொலுசின் ஓசை மேலும் தன் அறையை நோக்கி நெருங்கி வர பதட்டமடைந்தான். தட்டும் ஓசை கேட்டு நண்பர்கள் திறந்த கதவின் எதிரே அவன் எதிர்பார்த்தார் போல் அவள். தன் விழி முன் பெரும் கடலென பொங்கிவிட்ட நீரினூடே மங்கலாகத் தெரிந்த அவளது பிம்பம் அசைந்து கொண்டிருக்க ஒரு வேளை அவள் தகவலறிந்து ஊர்ஜிதம் செய்த கொள்ள வந்திருக்கிறாளோ என எண்ணிக் கொண்டான். கதவைத் திறந்து விக்கித்து நின்ற நண்பர்களிடம் ஏதும் பேசமாட்டாமல் தலை குனிந்து நிற்கும் அவளது நிதானத்திலிருந்து இன்னும் அவளுக்குத் தகவலறிவிக்கப்படவில்லை என்பதை மட்டும் அப்போதைக்கு அவன் உணர்ந்து கொண்டான்.
தங்களது மூன்றாவது அறை நண்பன் இன்னும் வரவில்லை என்றும் உள்ளே வந்து சற்று நேரம் காத்திருக்கும்படியும் அவர்கள் பதட்டத்துடன் அழைப்பு விடுத்தனர். நாற்காலியில் அமராமல் கதவில் சாய்ந்து கொண்டவள் பெரும் தவறிழைத்துவிட்டவள் போலப் பதட்டத்துடன் பேசத் துவங்கினாள்.
இன்று காலையில் நாங்கள் இருவரும் தைல மரக் காடுகளினூடே நடந்து சென்றதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். உஙகளில் ஒருவர் அந்த வழியாகக் கடந்து சென்றதையும் ஒரு மரத்தின் பின்னிருந்து எங்களைத் தொடர்ந்து கவனிக்க முற்பட்டதையும் நானறிவேன். இப்படிப் பெளதீகச் சூட்சுமங்களை அறியவல்ல என் புலனுணர்வுகள் அபெளதீகமான உங்களின் மூன்றாவது அறை நண்பனின் மனத் தேட்டையைச் சற்று நிதானித்து அறிய மறுத்துவிட்டன. என் முன் மண்டியிட்ட தூய ஆன்மாவை அதன் கம்பீரமிழந்த தன்மை காரணமாகவே மறுதலிக்க வேண்டியதாகிப் போனது. மாற்றாக நயமான வார்த்தைகளின் மூலம் உங்களின் மூன்றாவது அறை நண்பனுக்கு அதை உணர்த்தியிருக்க முடியும். ஆனால் கணப் பொழுதுகளில் சந்தர்ப்பம் சிறிதளவே கிட்டினாலும் தன் பரிகாசத்தைக் கோலாச்சிவிடும் ஆணவமானது என்னுள் தலையெடுத்தது குறித்தும் அதன் இன்பத்தில் நான் திளைத்தது குறித்தும் பிற்பாடு மிகவும் வருத்தமுற்றேன். மன்றாடும் சிறு பிள்ளையைத் தாயானவள் தன் காலால் எத்தி விடுவதைப் போன்ற என் செயல் குறித்துக் கால தாமதத்துடன் வெட்கம் கொள்கிறேன். உதாசீனம் எத்தனை வலிய குற்றமென என்னவென்றறிய முடியாத ஒரு வினோதச் சமிக்ஞை மூலம் -ன்று சாயங்காலம் உணர்ந்து கொண்டேன். மேலும் இன்றுதான் உங்களது மூன்றாவது அறை நண்பனின் பிறந்த நாளென எனக்குத் தோழியின் மூலமாகத் தெரிய வந்ததும் நீரூற்றைப் போல என்னுள் எழுந்த வினோத உணர்வு உடனே உங்களின் மூன்றாவது அறை நண்பனைப் பார்க்க இங்கே துரத்தியுள்ளது. அவன்முன் நான் மண்டியிட்டாக வேண்டிய சந்தர்ப்பத்தை எனக்கு உருவாக்கித்தந்த அந்த வினோதச் சமிக்ஞைக்கு நான் நன்றி கூறுகிறேன்.
மூன்றாவது அறை நண்பன் எப்போது வருவானென்பதைக் கூறி என் உணர்வுகளுக்கு தாங்கள் அனுமதியளிக்க வேண்டும். அவள் இதைச் சொல்லியதும் கணப்பிசகில் தான் எடுத்த அபத்த முடிவு குறித்து இவன் அதிர்ச்சியுற்றான். பெரும் ஆவேசத்துடன் பெளதீகமாய் ரூபம் கொண்டிருந்த அனைத்துப் பொருட்களிடமும் தனது ஆற்றாமையைத் தீர்த்துக் கொள்ள முயன்று தோற்றுப் போனான்.
சொரேலென அவ்வறையை விட்டு வெளியேறி மழை ஓய்ந்த இருளடர்ந்த வயல்வெளிகளில் ஓட, தன் பின் மூன்று கறுப்பு நாய்கள் துரத்தி வருவதை உணர்ந்தான்.
– அஜெயன்பாலா (டிசம்பர் 2000)