திருநெல்வேலி ரயில்வே ஜங்க்ஷன்.
நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் சென்னைக்குப் புறப்படத் தயாரானது.
அவசர அவசரமாக ஓடிவந்து S6 கோச்சில் ஏறிக்கொண்டேன்.
என்னுடைய பர்த் நம்பரைத் தேடிப்போய் அதில் அமர்ந்துகொண்டேன்.
ஓடி வந்ததில் வியர்வை வழிந்தது.
சற்று நிதானமாக சுற்றியுள்ளவர்களை நோட்டமிட்டபோது திடுக்னு நெஞ்சுக்குள் ஏதோ கனமா பரவி அடைக்கிற மாதிரி இருக்கு. திகைத்துப்போய் மறுபடியும் அவளைப் பார்க்கிறேன்.
ஆமாம் அவளேதான்… என்னுடைய சுமிதாதான்.
ஒரு நிமிஷம் உச்சந்தலையில் உணர்ச்சியெல்லாம் ஸ்தம்பித்துப்போன மாதிரி இருக்கு. எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியல.
ஓ காட்… இவள் முன்னால் எப்படி விடிய விடிய சென்னை வரை நான் போகப் போகிறேன்? என்னுடைய நெஞ்சு படபடன்னு துடிக்குது. ரயில் கிளம்பி மெதுவாக பிளாட்பாரத்தை விட்டு வெளியேறியது.
எனக்கு உள்ளுக்குள் பதட்டம் அதிகரித்தது.
ஒரு காலத்தில் அவளுக்காக ஏங்கி அவளையே சுத்தி வந்து விரட்டி விரட்டிக் காதலித்த அதே சுமிதாதான்; ஆனால் இப்போது அவள் முகத்துக்கு எதிரா உட்காரவே பயப்படுவது அவமானமாக இருந்தது.
கண்டக்டர் எல்லோரிடமும் டிக்கெட்டை செக் செய்கிறார். .
ரயில் சீரான வேகத்தில் ஓடிக்கொண்டிருக்க சுமிதா ஏதோ ஒரு ஆங்கில நாவலை எடுத்துப் படிக்க ஆரம்பித்தாள்.
இன்னும் இவளுக்கு நாவல் படிக்கிற பைத்தியம் மட்டும் மாறலைன்னு நினைத்துக் கொள்கிறேன். அவள் படிக்க ஆரம்பிக்கிறது எனக்கு வசதியாக இருக்கிறது. அவளும்கூட என்னைத் தவிர்க்கும் வசதிக்காகத்தான் படிக்கிறாள் போலும்… .
இப்ப சுமிதாவை நான் நன்றாக நிதானமாகப் பார்க்கிறேன். காலில் மெட்டி. கழுத்தில் தாலி. அவள் கணவர் வரலேன்னு புரியுது. அவளுக்குப் பக்கத்தில் ஒரு சிறுவன். அவளுடைய மகன் போலும். மொபைல் வீடியோவில் எதையோ விளையாடிக்கொண்டு இருக்கிறான்.
சுமிதா புத்தகத்தை மூடி வைக்கிறாள்.
என்னோடு பேசாமல் இப்படி முன்னே பின்னே தெரியாதவள் மாதிரி இருக்கிறது அசிங்கம்னு நினைக்கிறாள் போல…
என்னை நேராகப் பார்க்கிறாள். நான்தான் அவளிடம் முதலில் பேசணும்.. அதுதான் மரியாதைன்னு எனக்குத் தோன்றுகிறது.
“உன்னோட பையன்தானே?”
“யெஸ்…”
“வெரி ஸ்மார்ட்…”
“தேங்க்ஸ்.”
ரெண்டுபேருக்குமே இயல்பா பேச்சு வரவில்லை.
சிறிது தயக்கத்திற்குப் பிறகு “அபீஷியல் விஸிட் வந்தீங்களா?” என்றாள்.
“ஆமாம்…”
“அதே கம்பெனிதானே?”
டீச்சர் கேட்கிற கேள்விக்கு ஒரு மாணவன் பதில் சொல்லுகிற மாதிரி, திருநெல்வேலிக்கு நான் வந்த விஷயம் பூராவையும் ரொம்ப சின்ஸியராகச் சொல்லுகிறேன்.
எனக்கு தயக்கமெல்லாம் போய் சிறு உற்சாகம் வருகிறது. “நீ எங்கே இப்படி?”
“ஒரு கல்யாணத்திற்கு அம்பாசமுத்திரம் வந்தேன்.”
“உன் ஹஸ்பன்ட் வரலையா…?”
இந்தக் கேள்வியை அவளிடம் நான் கேட்டிருக்கவே கூடாது. அவர் ஏன் வரலைங்கற காரணத்தை சுமிதா மெனக்கிட்டு விரிவாகச் சொல்லுகிறாள். ஏனோ எனக்கு அதைக் கேக்கறதுக்குப் பிடிக்கலை. அந்த ஆள் பெரிய ஏரோநாட்டிக்கல் இஞ்சினியராம்… ஜெர்மனிக்கெல்லாம் போய் வந்திருக்காராம்..
சுமிதா மறுபடியும் நாவலைத் தொடருகிறாள்.
ஆறு வருஷத்துக்கு முன்னால் இவளும் நானும் மெட்ராஸில் ஒரு இடம் பாக்கியில்லாமல் சுற்றித் திரிந்ததெல்லாம் நினைத்துப் பார்க்கிறேன். அந்த நாட்கள் திரும்ப வராதான்னு மனசு ஏங்குது…!
அவளுக்கு பாலவாக்கம் பீச் மிகவும் பிடித்த இடம். புடவைகள் நனைய கடற்கரையில் ஓடி ஓடி லூட்டி அடிப்பாள்… அவ்வப்போது அடிக்கும் பெரிய அலைகளின் பயத்தில் என்னைக் கட்டிக்கொண்டு சிரிப்பாள்.
லூட்டி அடித்து முடிந்ததும், “ஐயோ புடவை எப்படி ஈரமாச்சுன்னு அம்மா கேட்பாளே” என்று விசனப்படுவாள். ஒவ்வொரு தடவையும் லூட்டி அடித்தபிறகு இதையேதான் சொல்லுவாள்.
அங்கிருந்து நேராக தி.நகரில் இருக்கும் சரவணபவனுக்குச் சென்று நன்றாக டிபன் சாப்பிடுவோம். தனியாக லிப்டில் போகும்போதும் வரும்போதும் ரகசியமாக உரசிக்கொள்வோம்.
சுமிதாவுக்கு ரொமான்டிக் பீலிங் ரொம்ப அதிகம். கற்பனை வளத்துடன் திடீர் திடீரென்று காதல் ஆச்சர்யங்களைக் கொடுப்பாள். எதையும் முனைப்போடு செய்வாள்.
காதலித்த காலங்களில் நாங்கள் தினமும் அடிக்கடி மொபைலில் பேசிக் கொள்வோம். அதுதவிர ஏகப்பட்ட எஸ்.எம்.எஸ் வேறு. அவள்தான் என்னுடைய மொபலில் வைபர் மூலமாக வீடியோவில் பேசிக்கொள்வதை ஆக்டிவேட் செய்தாள்.
நன்றாகச் சமைப்பாள்.
ஒரு ஞாயிறு என்னை மொபைலில் தொடர்பு கொண்டு, “வீட்டில் அனைவரும் திருப்பதி போயிருக்கிறார்கள். நீ சாப்பிட நம்ம வீட்டுக்கே வந்துடு… நான் சமைத்து வைக்கிறேன். என்ன சமைக்க?” என்றாள்.
நான் ஜோக்காக, “ரொம்ப சிரமப்படாதே. சிம்பிளா ஒரு அவியல்; முருங்கைக்காய் சாம்பார்; தக்காளி ரசம்; வடை; பாயாசம், பண்ணி வை. அது போதும்” என்றேன்.
அவள் வீட்டுக்கு போனபோது நான் சொன்ன அனைத்தையும் சமைத்து வைத்திருந்தாள். அவளின் அன்பில் நான் சொக்கிப் போய்விட்டேன்.
வாழ்க்கையில் அவளிடமிருந்து நான் பல நல்ல பழக்கங்களை கற்றுக் கொண்டேன். இன்றும் அவைகளைத் தொடர்கிறேன்.
சுமிதாவுக்கு கர்நாடக சங்கீதம் என்றால் உயிர். அவளும் நன்றாகப் பாடுவாள். சுதா ரங்கநாதனின் கச்சேரி என்றால் விரும்பிக் கேட்பாள். .
எத்தனையோ முறை சுமிதா பாடும்போது, அவள் மடி மீது தலை வைத்துப் படுத்தபடி அவள் குரலில் உருகியிருக்கிறேன். ஒருமுறை என்னைப் பாடச் சொன்னாள். நான் ரொம்ப சீரியஸாக “ஸ்ரீ ரகுபதி உந்தன் திருமலரடிகளை….” என்று ஆரம்பித்து ராமர் மீது ஒரு பக்திப்பாடலை பாட, அவள் விழுந்து விழுந்து சிரித்தாள்.
காதலைத் தாண்டி என்மீது மிகுந்த பாசமும் அன்பும் வைத்திருந்தாள். அனால் அவளின் உண்மையான பாசத்திற்கும் அன்பிற்கும் நான் என் தகுதியை வளர்த்துக் கொள்ளவில்லை. எனக்கு ஆண் என்கிற திமிர் அதிகம் இருந்தது.
அவளிடம் சண்டை போட்டுப் பிரியவில்லை என்றாலும், எங்களின் விரிசலுக்கும் பிரிவிற்கும நான்தான் முழு முதல் காரணம். அவள் என்னிடம் ஒளிவு மறைவின்றி நேர்மையாக இருந்த அளவிற்கு நான் இல்லை. அவளிடம் நிறையப் பொய்கள் சொல்லி மாட்டிக்கொண்டு முழித்திருக்கிறேன். ஆனால் அப்படியும் அதையெல்லாம் தாண்டி என்னை விட்டு விடாமல் தொடர்ந்து அன்பு காட்டினாள்.
சமிதாவுடன் நான் பழகிய நாட்கள்தான் என் வாழ்வின் மிக ரம்மியமான பகுதி.
அவளின் பெரிய மனசைப் புரிந்துகொள்ளாது அவளை இழந்துவிட்ட அடிமுட்டாள் நான். காதலில் பொய்கள் மட்டும் கூடவே கூடாது என்பது அவளை இழந்த பிறகுதான் எனக்குப் புரிந்தது.
ரயில் மதுரையில் நிற்கிறது.
பிளாட்பாரத்தில் ஒரே இரைச்சல். சுமிதா மகனைச் சாப்பிட வைக்கிறாள்.
என்னிடம், “பால் வேணுமே…” என்கிறாள்.
இறங்கிப்போய் வாங்கி வருகிறேன்.
காலி கிளாஸைத் திருப்பித் தரும்போது, “எவ்வளவு ஆச்சு?”ன்னு கேக்கிறாள்.
“இட்ஸ் ஓகே… நான் கொடுத்துட்டேன்…”
‘இப்ப நீ வேற ஒருத்தனோட மனைவி என்கிறதுக்காக நான் ஒரு பால்கூடவா வாங்கித் தரக்கூடாது?’ ன்னு மனசுக்குள் வருத்தமாக இருந்தது.
சுமிதா ‘தேங்ஸ்’னு சொல்லிவிட்டு பர்ஸை தலையணைக்கு அடியில் வைத்துக் கொள்கிறாள்.
அவள் தேங்க்ஸ் சொன்னதும் ஒரு வினாடி ரெண்டு பேருமே ஒருத்தரை ஒருத்தர் அர்த்தத்தோடு பார்த்துக் கொள்கிறோம். அவள் சட்டுனு தன் முகத்தை திருப்பிக் கொள்கிறாள்.
ஒருத்தருக்கு ஒருத்தர் ஆத்மார்த்தமான அன்போ அபிமானமோ இல்லாவிட்டால்தான் இந்த தேங்க்ஸ் அல்லது ஸாரியெல்லாம் சொல்லனும்னு எனக்கு கத்துக் கொடுத்ததே சுமிதாதான்.
ஆனா இப்ப? எல்லாமே தலைகீழா மாறிப்போச்சே; ஒரு பத்து ரூபாய் பாலுக்கு தேங்க்ஸ் சொல்றாளே என்கிற ஆத்திரம் வருது.
ரயில் மதுரையை விட்டுக் கிளம்புகிறது.
பையனை லோயர் பர்த்தில் படுக்க வசதி செய்து அவனை தூங்கச் செய்கிறாள். ஆனால் சுமிதா படுக்கவில்லை. ஜன்னலுக்கு வெளியில் தெரிகிற இருட்டைப் பார்த்தவாறு உட்கார்ந்திருக்கா. அவள் முகத்திலும் இருட்டு அப்பிண்டிருக்கு.
எனக்கு தேங்க்ஸ் சொன்னாளே அந்த நினைப்பால் பழசெல்லாம் நினைவுக்கு வந்துதான் அவள் முகம் இருட்டடிச்சிருக்குன்னு நெனைக்கிறேன்.
சுமிதா திடீர்னு என்னைத் திரும்பிப் பார்க்கிறாள்.
“உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?”
“எனக்கும் ஒரு பையன்தான்…” சிரிச்சுண்டே சொல்கிறேன்.
நான் கல்யாணம் பண்ணிண்டேனா இல்லையான்னு தெரிஞ்சுக்கிறதுக்கு இப்படி சுற்றி வளைத்துக் கேட்டாள் போல.
பெரிய பாரம் அவள் மனசிலிருந்து இறங்கிவிட்டது போலிருக்கு. இதுவரைக்கும் அன்-ஈஸியாக இருந்தவள், கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகிறாள். காற்றுக்கு இதமாக புடவையை நன்றாக இழுத்து தோள்களை மூடிக்கொண்டு சப்பணமிட்டு உட்கார்ந்துகொண்டு கேட்கிறாள்.
“உங்க மேரேஜுக்கு எனக்கு ஒரு இன்விடேஷன்கூட அனுப்பலையே?” ன்னு வருத்தப்படுகிறாள். அவள் வருந்துவதைப் பார்க்க எனக்கு வருத்தமாக இருக்கிறது.
“உன் அட்ரஸ் எனக்குத் தெரியாதே சுமி…”
அவளைச் சமாதானப்படுத்துகிற மாதிரி சொன்னேன்.
ரயில் ஏறினதில் இருந்து இப்பத்தான் முதல் தடவையா ‘சுமி’ன்னு அவள் பெயரை உச்சரிக்கிறேன்.
“உங்க வைப் சென்னையா… இல்ல வெளியூரா? அவங்க பேரென்ன?”
“சென்னைதான்…. பேர் சரஸ்வதி…”
“எனக்கு அவங்களைப் பார்க்கணும். ஒருநாள் அவங்களையும், குழந்தையையும் எங்கள் வீட்டுக்கு அழைச்சிட்டு வாங்களேன்… “ ஆசையாகச் சொல்கிறாள்.
“கண்டிப்பா…”
அவளின் தாம்பரம் வீட்டு முகவரியைச் சொன்னாள்.
எனக்கு அவள் தாம்பரத்திலேயே இறங்கிவிடுவாளே என்கிற வருத்தம்தான் முதலில் வருகிறது.
அவ்வளவுதான்… சுமிதா தன் வாட்சைப் பார்க்கிறாள். எழுந்துகொண்டு பெட்ஷீட்டை எடுத்து மிடில் பர்த்தில் விரிக்கிறாள்.
அவள் படுத்துக்கொள்ளப் போகிறாள். ஆனால் எனக்கு இரவு முழுதும் தூங்காமல் அவளோடு பேசிண்டே இருக்கணும்னு உள்மனசு ஏங்குது.
“காலையில் பார்ப்போம்…” பர்த்தில் ஏறிப் படுத்துக்கொண்டுவிட்டாள்.
இனிமே அவளோடு எதுவும் பேச முடியாது. விடிந்ததும் தாம்பரத்தில் இறங்கிவிடுவாள்.
காலம் மாறிப்போச்சே என்கிற வருத்தத்துடன் நானும் எதிர் அப்பர் பர்த்தில் ஏறிப் படுத்துக்கொள்கிறேன்.
திரும்பி சுமிதாவைப் பார்க்கிறேன். அதற்குள் தூங்கிவிட்டாள். தைரியமா அவள் முகத்தைப் பார்க்கிறேன்.
காலத்தால் என்னிக்குமே அழிய முடியாமே; என் மனசோட மனசா; நெனப்போட நெனப்பா உறைஞ்சு போயிருக்கிற அந்த ‘ஸன் ப்ளவர்’ முகத்தைப் பார்த்திண்டே இருக்கேன். ஜன்னல் வழியா வீசற காற்றில் அவள் தலைமயிர் நெற்றியில் புரள்கிறது. கடற்கரைக் காற்றில் இதேமாதிரி அவள் தலைமயிர் நெற்றியில் புரளும் போதெல்லாம் என் கையால் ஒதுக்கி விடுவேனே…!
ஒவ்வொண்ணா என் நினைவுகளில் புரள்கிறது…
அவளைச் சந்திக்க தினம் தினம் அவளுக்காகக் காத்திருப்பேனே – அதை நினைக்கிறேன். தினம் தினம் பீச்மெல்பா சாப்பிடும்போது, ஒரே ஒரு ஸ்பூன் அவளுக்கு நானே வாயில் ஊட்டி விடுவேனே – அதையும் நினைக்கிறேன்.
அவளோடு காதலை பகிர்ந்துகொண்ட ஆயிரம் தினங்களையும்; ஆயிரமாயிரம் சம்பவங்களையும் நினைக்க நினைக்க தாங்கமுடியாத துக்கம் என் மனசிலும் தொண்டையிலும் அடைத்துக் கொள்கிறது.
காதலின் சுகத்தைவிட; பிரிவின் இம்சை மிக வேதனையானது.
சரியாக விடியக்கூட இல்லை. ரயில் செங்கற்பட்டில் நிற்கிறது.
சுமிதா தூக்கம் கலைந்து எழுந்து உட்காருகிறாள்.
அவளுக்கு மொபைல் வருகிறது. “ஆமாம்…. ட்ரெயின் ஆன் டைம்…”
“அவர்தான்… அபீஷியலா பாம்பே போயிருக்கார்…” என்று என்னிடம் சொல்கிறாள்
எங்கள் பகுதியில் இருந்தவர்கள் எல்லோருமே செங்கற்பட்டில் இறங்கி விடுகிறார்கள்.
நான் சுமிதாவிடம், “காபி வேண்டுமா?” என்று கேட்கிறேன். அவள் ‘ஓயெஸ்’னு சொல்றாள். அவள் ஓயெஸ் சொன்னது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ஓயெஸ் அவளின் பிரத்தியேக வார்த்தைகள். நான் எது சொன்னாலும் அவளுக்கு ஓயெஸ்தான்.
மதுரையில் பால் வங்கித் தந்ததற்கு தேங்க்ஸ் சொன்ன மாதிரி, இப்ப காப்பி வாங்கித் தந்ததற்கும் தேங்க்ஸ் சொல்லிடுவாளோன்னு பயப்படறேன். மைகாட்… அவள் தேங்க்ஸ் சொல்லவில்லை.
ரயில் கிளம்புகிறது. தாம்பரத்தில் இறங்கிடுவாள்னு நெனைக்கிற போதே மனசை என்னவோ பண்ணுது. மறுபடியும் இவளை எப்போது பார்க்கப் போகிறேனோ என்ற ஏக்கம் நெஞ்சில் கனக்கிறது.
நான் சுமிதாவின் முகத்தையே பார்க்கிறேன். ஆனால் அவளால் என்னை அந்த மாதிரி பார்க்க முடியலை. பையனை எழுப்பி அவனை இறங்குவதற்கு தயார் செய்கிறாள்.
இறங்கப் போறாளேன்னு துடிக்கிறேன்.
உண்மையைச் சொல்லிடலாமான்னு தவிக்கிறேன்.
அவளோட பையனைப் பார்க்கிறேன். அப்படியே சுமிதாவை உரிச்சு வச்ச மாதிரியே இருக்கான். அன்புடன் அவனுடைய கன்னத்தை தடவி, “உன் பேரென்ன?” என்று கேட்டேன்.
வெட்கத்தோடு அம்மா மடியில் சாஞ்சுண்டே சொல்றான்.
எனக்கு மனசில் பெரிய மின்னல் பாய்ந்த மாதிரி இருக்கு.
‘இவனுக்கு என்னோட பெயரா?’
அப்படின்னா என் சுமிதா இன்னும் என்னை மறக்கலை. என் மனசு நெகிழ்கிறது.
நான் உண்மையைச் சொல்லிடப் போறேன். என் மனசை அவளுக்கு திறந்து காட்டிவிடப் போகிறேன்.
என் உயிரையெல்லாம் திரட்டி அவளிடம், “சுமி…” என்றேன்.
“தாம்பரம் வருதா பார்…” குழந்தையை ஜன்னலுக்கு அனுப்புகிறாள்.
சுமிதா என்னைப் பார்க்கிறாள்.
“நான் உன்கிட்ட பொய் சொல்லிட்டேன் சுமி…”
தாம்பரம் நெருங்குகிறது.
“எனக்கும் ஒரு பையன்னு சொன்னேனே…அது பொய் சுமி…
என் மனைவியோட பெயர் சரஸ்வதின்னு சொன்னேனே… அதுவும் பொய்தான் சுமி… உண்மையா நான் கல்யாணமே பண்ணிக்கலை. ஏன் தெரியுமா? உன்னை என்னால் மறக்கவே முடியலை….”
வெளியில் மஞ்சளாக ‘தாம்பரம்’னு போர்டு தெரியுது.
“உன்னை மறந்து என்னால் இன்னொருத்தியை மனசால்கூட நெனைக்க முடியலை…”
ரயில் நின்றுவிட்டது.
“நீயும் என்னை மறந்துட மாட்டியே..”ன்னு அலை மோதுகிறேன்.
சுமிதா வருத்தமாக சிரித்தபடி, “வரட்டுமா..?”னு கைகூப்பி விடை பெறுகிறாள்.
ஒரு காலத்தில் நான் என்ன சொன்னாலும் ‘ஓயெஸ் ஓயெஸ்’ ன்னு சொல்வாளே – அதை இப்ப நான் சொல்றேன்.
“ஓயெஸ்… சுமி; போய் வா… டேக் கேர்..”
அவள் பிளாட்பாரத்தை விட்டு வெளியே போகும்வரை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.
என் மனம் உண்மையில் கனத்து அருமையான கதை
Fantastic narration brother…All the best for your career.