முகத்தை ஏனடி கவிழ்த்தாய்?

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: February 13, 2020
பார்வையிட்டோர்: 29,351 
 

தலைப்பு – கண்ணதாசனின் பாடல் வரிகளில் இருந்து..

எதிரே வந்த அவளை என்னையறியாமலே நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் அதைக் கவனித்திருக்க வேண்டும். அவளது நடை மெல்லத் தளர்ந்த போது, கண்களில் தயக்கம் தெரிந்தது.

‘சுருண்டகூந்தல்காற்றினில்ஆட

துள்ளும்கால்கள்சிறுநடைபோட

மருண்டுநின்றாய்மானெனவிழித்தாய்

மஞ்சள்முகத்தைஏனடிகவிழ்த்தாய்’

ஏன் தலை கவிழ்ந்தாள் எனத் தெரியவில்லை. என்னைக் கடந்து செல்லும் போது தலையைக் குனிந்தபடியே சென்றாள். பௌர்ணமி நிலவை கரு மேகம் மூடியது போல அவளது கருங்கூந்தல் காற்றோடு விளையாடிக் கொண்டிருந்தது.

ஒரே ஒரு முறையாவது என்னை அவள் திரும்பிப் பார்ப்பாளா என்ற ஆதங்கம் எனக்குள் துளிர்த்தது. அவளது சினேகிதி ஏதோ சொல்ல அவள் தலை குனிந்தபடி அதைக் கேட்டுக் கொண்டே உதட்டில் புன்சிரிப்புடன் மெல்ல நடந்தாள்.

சினேகிதி சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தாளா அல்லது கேட்பது போல நடித்துக் கொண்டிருந்தாளா தெரியவில்லை. ஆனால் எனக்குள் ஏதோ ஒரு வகை ஈர்ப்பை அவள் சட்டென்று ஏற்படுத்தியிருந்தது மட்டும் புரிந்தது. அவள் விலகி விலகிச் செல்ல, எனக்குச் சொந்தமாக வேண்டிய ஒன்று என்னை விட்டுப் பிரிந்து போவது போல உணர்ந்தேன்.

‘உன்னைநான்பார்க்கும்போது

மண்ணைநீபார்க்கின்றாயே

விண்ணைநான்பார்க்கும்போது

என்னைநீபார்க்கின்றாயே..’

சில நாட்களாக அவளை நான் தொடர்கிறேன் என்பதை அவள் அறிந்திருக்கலாம். என்னை அவள் பார்த்தாளோ இல்லையோ தெரியவில்லை. ஆனால் சற்றுத் தூரம் சென்றபின் திரும்பிப் பார்த்தாள் என்பது மட்டும் நிச்சயம்.

அவள் என்னிடம் பேசாவிட்டாலும் பரவாயில்லை, அந்தக் கணத்தில் நான் அவளிடம் எதிர் பார்த்ததெல்லாம்,

‘மௌனமேபார்வையால்ஒரு

பாட்டுப்பாடவேண்டும்

நாணமேஜாடையாய்ஒரு

வார்த்தைபேசவேண்டும்’ என்பதுதான்.

நான் நினைத்ததுபோல எதுவும் நடக்கவில்லை. பார்வையோ, ஜாடையோ எனக்குக் கிடைக்கவில்லை.

‘அவள் என்செய்வாள், யாரென்றே தெரியாத ஒருவனை எப்படிப் பார்ப்பாள்?’ என்று எனக்குள் சமாதானம் செய்து கொண்டேன்.

என் காதல் ஒருதலைக் காதலாய் இருக்கலாம். என்னைப்போல எத்தனை பேர் தங்கள் காதலை வெளியே சொல்லமுடியாமல் இதுபோல் தவித்திருக்கலாம்.

சட்டென்று காதலைச் சொல்வது நாகரிகமாக இருக்க மாட்டாது என்று தெரியும் ஆனாலும் எப்படியாவது ஒரு நாள் காதலைச் சொல்லித்தானே ஆகவேண்டும்!

‘உனைத்தான்கண்டுசிரித்தேன் – நெஞ்சில்

ஏதோஏதோநினைத்தேன்

உனைத்தான்எண்ணித்துடித்தேன் – எண்ணம்

ஏனோஏனோவளர்த்தேன்.’

எண்ணத்தை வளர்த்தேனே தவிர, காதலைச் சொல்லத் துணிவு இருக்கவில்லை. சொல்லாத காதல் குழந்தைகள் ஆடும் பொம்மைக் குதிரைபோல, எப்பொழுதுமே மேற்கொண்டு நகரப் போவதில்லை!

காதலைச் சொல்லும் துணிவில்லாதவன் நிச்சயமாகக் கோழைதான் என்பது எனக்குத் தெரியும்.

காதலைச் சொல்லத் தயங்குபவன், காதலிக்கத் தகுதி அற்றவன் ஆகிவிடுகிறான். அவன் ஆசைகளை மட்டுமே மனதில் வளர்த்துக் கொண்டிருப்பவன்.

‘எதுவாக இருந்தாலும் முதலில் துணிந்து காதலைச் சொல்லிவிட வேண்டும்’ என்று நண்பன் சொன்ன அறிவுரை கேட்பதற்கு நன்றாகத்தான் இருந்தது. ஆனால் அதை எப்படி செயற்படுத்துவது.

முதலில் அவளைப் பார்த்த அன்றே அவள் மீது எனக்கு ஈர்ப்பு வந்தது. அப்புறம் அது அன்பாய் பின் காதலாய் மாறியது.

அவள் என்னைவிட்டு விலக விலக அதுவே காதலாய் மாறிவிட்டது.

ஓவ்வொருவர் மனதிலும் எதிர்ப்பால் மீது ஒரு வகை ஈர்ப்பு இருந்திருக்கலாம்.

மனதுக்குப் பிடித்த அவள் ஒரு வார்த்தையாவது கனிவாய் பேசமாட்டாளா என்ற ஏக்கம் துளிர்க்கலாம்.

‘சித்திரத்தோகைசெவ்விதழ்க்கோவை

சேதிசொல்லாதோ – இந்த

பத்தரைமாற்றுப்பாவைமேனி

பங்கயம்ஆகாதோ?’

ஆனால் எட்ட நின்று வெறும் கற்பனையை வளர்த்துக் கொள்வதால் மட்டும் இதெல்லாம் சாத்தியமாகி விடுமா?

‘ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொள், அவள் படிக்கும் இடத்திலாவது அல்லது தொழில் பார்க்கும் இடத்திலாவது அடிக்கடி சந்திக்க முயற்;சி செய்து பார்’ என்றான் நண்பன்.

‘எப்படி?’ என்றேன்.

‘அதற்கு முதலில் அவள் எங்கே போகிறாள் என்பதைக் கண்டறிந்து கொள், அதன் பின் அதற்கு ஏற்ற மாதிரி உன்னையும் இணைத்துக் கொள். உனக்கு அவள் மீது ஈர்ப்பு ஏற்பட்ட மாதிரி அவளுக்கும் ஏற்பட வேண்டும். அப்படி ஏற்படக் கூடிய வகையில் நடந்து கொள். காதல் மிகவும் மென்மையான மலரைப் போல, அன்பாலேதான் அதை அடைய முடியும், பலாத்காரத்தால் அல்ல!’

‘எப்படி?’ என்று மீண்டும் கேட்டேன்.

‘எல்லாவற்றையும் நானே சொல்லித் தருவதானால், நானே காதலிச்சிருப்பேனே, விடா முயற்சி தான் உதவும். தெரியுமா முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார், முயற்சி செய்து பார், குட் லக்;’ என்றான் நண்பன்.

வெளியே சொல்லாத அந்தக் காதல் அந்த ஒருவருடனேயே மடிந்து போகும். வேறு யாருக்கும் தெரியப் போவதில்லை, ஏன் யாரைக் காதலிப்பதாக நினைத்தார்களோ அவர்களுக்கே தெரியாமல்தான் இருக்கும். பிறிதொருநாள் வேடிக்கையாகச் சொன்னால் ‘அப்படியா?’ என்று அவர்களையே ஆச்சரியப்பட வைக்கும். காலாகலமாய் இதுதான் தொடர்கதையாய்த் தொடர்கின்றது. சொல்லாத காதல்தான் சங்க இலக்கியத்து ஒருதலைக் காதலாகிறது.

மனசுக்குள் பூட்டிவைத்த ஆசைகள் எல்லாம் அவரவருக்கு மட்டும்தான் சொந்தம். காதலைச் சொல்லி இருக்கலாமே என்று ஏக்கத்துடன் காலமெல்லாம் வாழ்வதைவிட, என்றாவது ஒருநாள் காதலைச் சொல்லச் சந்தர்ப்பம் கிடைத்தால் சொல்லியே தீருவேன், எனக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதைச் செய்வேன், ‘ஏற்பதும் விடுவதும்’ அவரவரைப் பொறுத்தது.

நிலவேஉன்னைஅறிவேன் – அங்கே

நேரேஒருநாள்வருவேன்

மலர்ந்தால்அங்குமலர்வேன் – இல்லை

பனிபோலநானும்மறைவேன்.

ஆதவனைக் கண்டதும் எப்படி பனி மறைந்து விடுகின்றதோ அது போலத்தான் காதலும். ஓவ்வொருவரும் மனதுக்குள் காதலிக்கிறார்கள், ஆனால் ஒரு சிலரைத்த தவிர மற்றவர்களால் அதை அடையத்தான் முடிவதில்லை.

காதல் நிறைவேறாமல், வேறு கலியாணம் காட்சி என்று வந்துவிட்டால் இந்தக் காதலும் பனியைப்போல மறைந்துவிடும். எல்லாம் நன்மைக்கே என்று எடுத்துக் கொள்வதுதான் எதிர்கால வாழ்க்கைக்கு நல்லது.

ஆனாலும் என்னதான் சொன்னாலும், அடிமனதில் தீராத அந்த ஏக்கம் இருபாலாருக்கும் இறுதிவரை உறைந்துதானிருக்கும். வெளியே சொல்ல முடியாவிட்டாலும், அதுதான் காதல்!

Print Friendly, PDF & Email

1 thought on “முகத்தை ஏனடி கவிழ்த்தாய்?

  1. ஆனாலும் என்னதான் சொன்னாலும், அடிமனதில் தீராத அந்த ஏக்கம் இருபாலாருக்கும் இறுதிவரை உறைந்துதானிருக்கும். வெளியே சொல்ல முடியாவிட்டாலும், அதுதான் காதல்!
    100 சதவிகிதம் உண்மையான கருத்து.
    கண்ணதாசனின் காலத்தால் அழிக்க முடியாத காதல் வரிகளின் பின்னணியோடு கதையை அழகாக நகர்த்திய ஆசிரியர், குரு அரவிந்தன் அவர்கள் அருமையான பொன்மொழியோடு முடித்தது மனதைக் கவர்ந்தது. இந்தக் காதலர் தினத்தில் இந்தக் கதையைப் படிக்க வாய்ப்புக் கிடைத்ததை பேறாகக் கருதுகிறேன்.
    14.02.23 காதலர் தினம்
    ஜூனியர் தேஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *