காதல் முதலும் முடிவாய் போகுமென்று அறியாமல்
சந்தோஷமாக கேட்டுக்கொண்டிருந்தேன்
அவள் கூறுவதை.
‘இங்க பாருங்க என்மேல உங்களுக்கு ஒரு அபிப்ராயம் இருக்குன்னு நினைக்கிறேன்
ப்ளீஸ் மன்னிச்சிடுங்க அன்ட் என் பின்னால இப்டி வராதிங்க எனக்கு வருத்தமா இருக்கு. வீட்ல எனக்கு கல்யாணம் பேசிற்றுக்காங்க
எனக்கு மேரேஜ் ஃபிக்ஸாகப்போகுது
இன்னும் இரண்டு மாசத்துல அனேகமா எங்கேஜ்மென்ட் முடிவாகலாம் ‘ என்று
அவள் சொல்லிக்கொண்டிருக்க
எனக்கோ…
அவள் சொல்வது பொய்யா மெய்யா என்பதை சிந்திப்பதற்கில்லை
இதுவரை என் கண்களுக்கெட்டிய நிலாவாக
இருந்தவள் அவளின் நினைவில்
தென்படாத தூரத்தில் நான் இருந்ததே
ஒரு தித்திப்பான தகவலாக அவள் பேச்சில் அவளே அதை கசியவிட
மனம் இன்பமாய் முகிழ்ந்துகொண்டிந்தது
மேலும் உச்சி குளிர ஒரு நந்தவனம்
கரிசனமாக என் மீது தென்றல் பொழிந்து அசைந்துகொண்டிருக்க
அதில் நான் இறகாக மிதந்துகொண்டிருக்கிறேன் இந்த நிகழ்வை ஒரு குழப்பத்தில் மூழ்கடிக்க
மனம் வரவில்லை என்றாலும்
அவள் தரப்பை அவள் மீதிருந்த மதிப்புக்கூட்டு காதலினால் கவனித்துக்கொண்டிருந்தேன்.
… ‘So sorry again உங்கள பாத்தா நல்லவரா தெரியுது அதான் நீங்க புரிஞ்சிப்பிங்கன்னு இவ்வளவும் சொல்றேன் ‘ என்று அந்த இடத்தைவிட்டு
நழுவிட ஏனோ என் விடைகொடுத்தலுக்கு
காத்திருப்பதுபோல் பதற்றம் பற்றிக்கொண்டாள்
அவளின் அந்த சங்கடத்தை காணும்போது
எல்லைமிறிய
ஒரு சிட்டெறும்பு விழியை நெருங்கி ஊர்ந்துவர அதை மெல்லிய விரல்கள் பட்டாக நுள்ளியெடுத்து
இறக்கிவிடும் ஒரு கண்ணியத்தை அவளிடம் கண்டேன்
அப்போதுதான் என் காதலின் வலியை
இனம்புரியாத தோல்வியை நிதானித்தேன்
என்னையும் மன்னிச்சிடுங்க என்று வார்த்தைகள் தொண்டையைவிட்டு தத்தி தத்தி வெளியேற
சிறு புன்னகையுடன் ‘அட்வானஸ் விஷஸ் ‘ என்று கூறி
செவிவழி நெரிசலில் எந்த அரவமுமில்லாது
மனக்கண்ணில் உக்கிரமான ஒரு கும்மிருட்டு மூல
தொண்டைக்குழியில் வலி
நெரிகட்ட
மூர்ச்சையான நடையில் மனமறதியாய் வீட்டையடைந்தேன்
மூளைமுடுக்கு நீரெல்லாம் நதிபதி அடைந்து அழுது ஆறுதல் தேடுவதுபோல்
மனதின் ஆற்றாமை அம்மாவின் மடிக்கு
அடிக்கடி குழந்தையானது
மீண்டுவர மனம் உள்ளுவதெல்லாம் கிள்ளுக்கீரையாய் தோன்றியது
வாழ்க்கை புளிப்புதட்டியது
வாய் குளிர நண்பர்களின் ஆறுதல்கள் வந்தது வேறு வழியின்றி சலித்து மனம் சகசநிலைக்கு வந்தது
என் சஞ்சாரத்தின் தனிமையெல்லாம்
அவள் என் கண்களிலேயே நிர்பதை நிலவை பார்த்து ஊர்சித்து
ஆறுதலித்துக்கொள்வேன்.
இரண்டுமாதம் போனது
நீண்ட நெடிய வற்புறுத்தல்களுக்கு பிறகு
பிறரைப்போல திருமண வாழ்க்கைக்கு
என்னை பொறுப்பாளியாக்கிக்கொள்ள
சம்மதித்து அம்மாவின் பேராசை முடிவுக்கு
ஒத்துழைத்தேன்
காதலின் வலி எல்லாம் இரண்டுமாதம்தானா என்ற குரல்வளை நெரிக்கும் மனதின் கேள்விக்கு
வாழ்வின் அறியாமைதானே பதில்.
அம்மா பெண்ணை பற்றி சொல்ல வந்த எந்த விபரமும் கேட்காமல் சம்மதித்தேன் பெண் பார்த்து அப்போதே நிச்சயமும் செய்துவிடுவதென இரு வீட்டாரும்
ஏகாதேசமாய் சம்மதித்து முன்னதாகவே முடிவுசெய்யப்பட்டிருந்தது
உறவுகள் குவிந்த பெண்ணின் வீட்டு
கூடத்தில் ஒரு பெண்மைத்தனத்தை முழிங்கியபடி யாரோவாக நுழைந்தேன்
பொதுவாக எல்லோருடைய வீட்டிலும்
வக்கணையாக காட்சிதரும் செளகர்யமான
ஒரு நார்காலி இருக்கும் அதுதான் எனக்கும் சகல மரியாதையுடன் அமர
தரப்பட்டது.
தலைகுணிந்து எந்த ஆர்வமுமின்றி அமர்ந்திருந்தேன்
மனமுழுவதும்
அவள் வாசனையாகவே இருந்தது
சுற்றியமர்ந்திருந்த பெரியவர்கள் மத்தியில் சலசலப்பான குறுஞ்சிறுப்பொலி வாயும் காதுமாக
இருவீட்டார்களின் சங்கதிகளை ஓதிக்கொண்டிருந்தது
சட்டென அரவமடங்கி அமைதி நிலைகுத்தியது.
அம்மா. ‘ பொண்ணு வந்திருக்கு பாருடா..’ என்றதும்
ஒரு பெருமூச்சோடு இயல்புநிலைக்கு வர
எத்தனித்தவாறு
தலைநிமிர்த்தினேன்
‘ரெண்டு மாசத்துல எனக்கு எங்கேஜ்மென்ட் ‘ என்று சொன்ன
ஒரு மீள் ஒலிப்பு அவள் முகம் பார்த்துக்கொண்டிருக்க ஒலித்துக்கொண்டிருந்தது செவிகளில்
அவ்வுண்மையை நேரில் நிருபிப்பதுபோல எதிரே கைகளில் காஃபி டம்ளோரோடு
நின்று தரிசனமளித்துக்கொண்டிருந்தாள்.
என் நிலா
என் முகம் பார்த்து சங்கேதமாய் புன்முறுவினாள்
ஒரு அகால பாக்கியம் வாய்க்கப்பெற்றவனாய்போனேன்
நிதானிக்க முடியாத
ஒருநாளுமில்லாத திருநாளை
கொண்டாட கொடுத்துவிட்டு அருகில் ஏதுமறியாமல் வழக்கமான வெள்ளந்தி அன்புடன்
என் அம்மா ‘ பேரென்னமா ‘ என்றதும்
அகத்திணை ஒழுகியபடி
அவள் சொன்னாள் ‘ மீராகிருஷ்ணன் ‘ என்று என் பெயரையும் சேர்த்து.