காதல் என்றால் மிஸ்டுகால் இல்லாமல் இருக்காது. அதே போல் ராங்நம்பர் போட்டு நட்பாக (?!) தொடங்கி காதலில் முடிந்தது என்று பேப்பரில் செய்திகளைப் படித்திருக்கிறோம்.
இரண்டு முறை ராங்நம்பர் போட்ட ஆசாமியை நம்பி நாகர்கோயிலில் இருந்து சென்னைக்கு ஒரு பெண் ஓடி வந்திருக்கிறாள். இந்த சம்பவத்தில் ஆச்சர்யம் என்னவென்றால் போனில் பேசிய அந்த நபரும் திருமணமாகாதவனாக இருந்திருக்கிறான். அதைவிட இன்னொரு வியப்பு, அந்த பையன் குடும்பத்தினரும் இந்த திடீர் காதலுக்கு ஆதரவாக இருந்திருக்கிறார்கள்.
இது மாதிரி சம்பவங்களின் சதவீதம் ஒன்றிரண்டு மட்டுமே என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததுதான். மொபைல் போன்களால் எவ்வளவு நன்மைகள் என்று எளிதாக பட்டியலிட்டுவிடலாம். ஆனால் தீமைகளை கணக்கெடுத்தால்ஸ்…அப்பாடா….இப்பவே கண்ணைக்கட்டுதே என்று புலம்ப வேண்டியதுதான்.
ஒரு மிஸ்டு காலை வைத்து எப்படி எல்லாம் காதல் வளர்கிறது, அதே சமயம் எப்படி எல்லாம் அந்த காதலுக்கு பிரச்சனை வருகிறது என்று நான் எழுதிய கதைதான் இந்த மிஸ்டு கால்.
***********************************
சுவாதிக்கு எப்படியாவது பிறந்தநாள் வாழ்த்து சொல்லியே தீருவது என்று பரமேஸ்வரன் நேற்றே முடிவு செய்து விட்டான். அவளிடமிருந்து பதில் நடவடிக்கையை எதிர்பார்த்து ஒரு மணி நேரமாக மிஸ்டு கால் கொடுத்துக் கொண்டே இருந்தும் பலன் இல்லாததால் பரமேஸ்வரனின் மனம் சோர்வடைந்து விட்டது.
தன்னுடைய இந்த நேர தவிப்பைப் பற்றி நினைக்கும் போதே அவனையும் அறியாமல் அவன் முகத்தில் சிறு புன்னகை. ‘சரி…சிறிது நேரம் கழித்து முயற்சித்துப்பார்க்கலாம்…’என்று தனக்குத்தானே பரமேஸ்வரன் சமாதானம் சொல்லிக்கொண்டான்.அதே நேரத்தில் திருவாரூர் மாவட்ட சிறப்பு காவல்துறை எஸ்.பி வஜ்ரவேலு தலைமையில் ஒரு குழுவே பரமேஸ்வரனைத் தேடிப்புறப்பட்டுக் கொண்டிருந்தது. அவனைத்தான் பிடிக்கப் போகிறோம் என்று தேடி வரும் காவல்துறையினருக்கே தெரியாதபோது பரமேஸ்வரன் மட்டும் இதை அறிந்து கொண்டு விட முடியுமா?
அதனால் அவன் எந்தக் கவலையும் இல்லாமல் சுவாதியும் அவனும் காதலர்களான இனியதருணத்தை மீண்டும் நினைத்துப்பார்த்து கனவுலகில் மிதந்து கொண்டிருந்தான்.
தானும் காதலிப்போம்…காதலிக்கப்படுவோம் என்று பரமேஸ்வரன் எப்போதுமே நினைத்ததும் இல்லை.எதிர்பார்த்ததும் இல்லை.சொல்லப்போனால் வயதுக்கோளாறால் காதல் என்றுநினைத்துக் கொண்டு சில பள்ளி மாணவிகள்,கல்லூரி மாணவிகள் திருவாரூர் நகரில் உள்ள ஒதுக்குப்புறமான தெருக்களில் நின்று யாருடனாவது பேசிக் கொண்டிருப்பதைப் பார்க்கும் இவன்,தன் நண்பர்களிடம், “பார்றா…சட்டி தீயுற அளவுக்கு கடலை வறுக்குறாங்க…”என்று கூறிச் சிரிப்பான்.
இப்போது செல்போன் சூடு உடல் முழுவதும் பரவினாலும் சுவாதியுடன் பேசிக்கொண்டிருப்பது அலுக்கவில்லை என்பது அவனுக்கு வியப்பான வியமாகத்தான் தோன்றியது.
கதைகளில் வருவது போல் பரமேஸ்வரனுக்கும் சுவாதிக்கும் முதல் பார்வையிலேயே காதல் வந்துவிடவில்லை. அதற்காக,அவன் சுவாதியைப் பல நாட்கள் பின்தொடர்ந்து சென்று சம்மதிக்க வைத்தான் என்று நினைப்பதும் தப்பு.
இருவரும் முதன்முதலாக சந்தித்துக் கொண்டபோது,வெளிப்பார்வைக்கு மிகச் சாதாரணமாகத் தோன்றிய சம்பவத்தால் வெகு இயல்பாக இருவரது மனங்களும் இடம் மாறின.
திருவாரூரில் பாதாள சாக்கடை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்கள் நான்கு நாட்களாக அந்த இரண்டு புங்க மர நிழலில்தான் அமர்ந்து மதிய உணவு உண்டு இளைப்பாறி வந்தார்கள்.
ஓர் இளம் தாய் தன்னுடைய கைக்குழந்தையை அந்த மரம் ஒன்றில் தொட்டில் கட்டி தூங்க வைத்திருந்தாள்.
அந்த வீட்டு உரிமையாளரான முத்துகிருஷ்ணன் அன்றுதான் வெளியூரில் இருந்து வந்திருப்பார் போலிருக்கிறது.
“யோவ்…இது என்ன சத்திரமா…சாவடியா…நான் என் வீட்டுக்கு காத்து வரட்டுமேன்னு இந்த மரங்களை விட்டு வெச்சா நீங்கள்லாம் வந்து குடியேறிடுவீங்கிளா?…முதல்ல தொட்டியை அவுறுங்க…பத்து நிமித்துக்குள்ள எல்லாரும் ஓடிடணும்…”என்று அவர் பேசவும், இப்படியும் இரக்கமே இல்லாமல் ஒரு மனுன் இருப்பானா என்ற எண்ணம் அவர்கள் மனதில் எழுந்தது.
அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் ஒருவன், “சார்…இன்னும் நாலு நாள்தான் இந்த தெருவுல வேலை இருக்கும்…அதுவரைக்கும் கொஞ்சம் பொறுத்துக்குங்க சார்…”என்றான்.
ஆனால் முத்துகிருஷ்ணனுக்கு மனம் இரங்கவே இல்லை.தன்னுடைய முடிவில் பிடிவாதமாக இருந்தார்.சிறிது நேரம் எல்லா தொழிலாளர்களுமே அமைதியாக இருந்தார்கள்.
திடீரென்று ஒருவன்,“சார்…இந்த மரம் ரெண்டும் உங்க வீட்டு காம்பவுண்டுக்குள்ளே இல்லை…ரோட்டோரமா பொது இடத்துலதான் இருக்கு…குழந்தை இந்த இடத்துலதான் தொட்டில்ல தூங்கும்…நாங்களும் இங்கதான் உட்கார்ந்து சாப்பிடுவோம்…உங்களால முடிஞ்சதைப் பார்த்துக்குங்க…”என்று சொல்லிவிட்டான்.
சட்டென்று திகைத்துப் போன முத்துகிருஷ்ணன் எதுவும் பேசாமல் உள்ளே சென்று விட்டார்.
மறுநாள் காலையில் வேலைக்கு வந்த தொழிலாளர்கள் அதிர்ந்தார்கள்.மேற்பார்வையாளராக வந்த பரமேஸ்வரனும்தான்.
அந்த தெருவில் இருந்த இரண்டே இரண்டு புங்க மரங்களின் கிளைகளை எல்லாம் முத்துகிருஷ்ணன் ஆள் வைத்து வெட்டி வீழ்த்தி இருந்தார்.மின்சாரக் கம்பிகள் எதிர்புறத்தில் இருந்ததால் மிகப்பெரிய குடை போல் பரவி நின்ற மரங்கள் இப்போது நினைவுத்தூண் போல ஒரு ஆள் உயரமாக குறைந்து பரிதாபமாக காட்சி அளித்தன.
எதுக்கும் அஞ்சாத மனுனா இருக்கானே என்று தொழிலாளர்கள் தங்களுக்குள்ளேயே முணுமுணுத்துக்கொண்டார்களே தவிர,அவரைக் கேள்வி கேட்க யாரும் துணியவில்லை.
அந்த தாய் தன் குழந்தைக்கு எங்கே தொட்டில் கட்டுவது என்று புரியாமல் கலங்கி நின்றாள்.
பரமேஸ்வரன் தன் சக ஊழியர் ஒருவரிடம் கைப்பேசி மூலம் அனுமதி பெற்று வேறு இடத்தில் நடக்கும் வேலைக்கு கைக்குழந்தையுடன் அந்தப்பெண்ணை அனுப்பி வைத்தான்.
“வடக்கு வீதியில இந்த அளவுக்கு மோசமான ஆளுங்க இல்லை… நீ தைரியமா போம்மா…”என்று சொல்லிவிட்டு முத்துகிருஷ்ணன் வீட்டு வாசலுக்கு வந்தான்.
அருவருப்பாகத் தோன்றும் வகையில் முகம் நிறைய கோபத்துடன் வெளியே வந்த அவர், “என்ன?…”என்றார்.
“சார்…வடக்கு வீதியில சில வருங்களுக்கு முன்னால குடியிருந்த ராமசாமி பையனுக்குதானே உங்க பொண்ணைக் கட்டிக் குடுத்தீங்க? ”என்று பரமேஸ்வரன் கேட்டதும் முத்துகிருஷ்ணனின் முகம் இன்னும் மோசமாக சுருங்கியது.
“அதுக்கு என்னய்யா இப்ப?…”என்று மிகவும் நாகரிகமாக (?!) கேட்டார் அவர்.
“எட்டு வருமா புள்ளை இல்லாம ரொம்பவும் மனசு உடைஞ்சு போய் இருந்த நேரத்துல உங்க பொண்ணுக்கு தாயாகுற பாக்கியம் கிடைச்சிருக்குன்னு எனக்கும் தெரியும்.
ஒரு கைக்குழந்தையை தொட்டில் கட்டி தூங்க வெச்சது உங்களுக்கு பிடிக்கலை…குழந்தையோட கை,கால்,தலையை எல்லாம் பிச்சு எறியுற மாதிரி மரத்தை வெட்டிட்டீங்கிளே…
உங்க வீட்டுல இருந்து ஒரு உயிர் வெளிஉலகத்துக்கு வர்ற நேரத்துல இப்படி செய்யலாமா?…இப்ப அடிக்கடி மின்தடை ஏற்படுது.கர்ப்பவதியா இருக்குற உங்க பொண்ணு பகல் நேரத்துல காத்து வாங்கக் கூட வழி இல்லாம பண்ணிட்டீங்கிளே…”என்ற பரமேஸ்வரனின் குரலில் உண்மையான வருத்தம் தெரிந்தது.
முத்துகிருஷ்ணன்,“யோவ்…ஒரு வேலை செய்ய வந்தா அதை மட்டும் கவனிங்க.கிராமத்தான் மாதிரி சாபம் குடுக்குற வேலை எல்லாம் வேண்டாம்…. என் குடும்பத்துல புள்ளை இல்லாம வரம் வாங்குன கதை எல்லாம் உனக்கு ஏன்?…பொம்பளை மாதிரி பொரணி பேசாம பொழப்பைப் பாரு…”என்று சிடுசிடுத்தார்.
இந்த மனிதரிடம் என்ன பேசினாலும் பலன் இருக்காது என்பதை உணர்ந்து கொண்ட பரமேஸ்வரன் தன் வேலையைக் கவனித்தான்.
சிறிது நேரத்தில் வெளியில் கிளம்பிய முத்துகிருஷ்ணனின் இளைய மகள் சுவாதி,போகிற போக்கில் ஒரு துண்டுச் சீட்டை அவன் கையில் திணித்து “ஒரு மிஸ்டு கால் கொடுங்க…திரும்பவும் நான் மிஸ்டு கால் கொடுத்தா மட்டும் நீங்க போன் பண்ணி பேசுங்க…செய்தி இருக்கு.”என்று அவசரமாக கூறிவிட்டு நகர்ந்தாள்.
சுவாதி பரமேஸ்வரனிடம் அவசரகதியாக ஏதோ பேசிவிட்டுச் சென்றாலும் இவன் அவளிடம் பேசியது பரஸ்பரம் ஒரு மிஸ்டுகாலுக்குப் பிறகுதான்.
இரண்டு மரங்களுக்காக பரமேஸ்வரன் கண் கலங்கி வருந்திப் பேசியது முத்துகிருஷ்ணன் மனதை அசைக்காவிட்டாலும் சுவாதியின் மனதை அவள் வசம் இல்லாமல் செய்து விட்டதை நினைத்து மகிழ்ச்சியில் திக்கு முக்காடிப் போனான் அவன்.
சுவாதியின் வீட்டில் சர்வாதிகாரியைப் போல் அதிகாரம் செலுத்திக் கொண்டிருந்த முத்துகிருஷ்ணனை எப்படியாவது மீறிவிட வேண்டும் என்ற எண்ணம் சுவாதி உட்பட அனைவருக்குமே அடி மனதில் ஓர் ஆசையாக இருந்திருக்கும் போலிருக்கிறது.
சுவாதி,பரமேஸ்வரனைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற உறுதியான முடிவுக்கு முதலிலேயே வந்து விட்டாள்.ஆனால் மனதை இன்னும் பக்குவப்படுத்திக் கொண்டுதான் தந்தையிடம் பேச வேண்டும் என்று நினைத்திருந்தாள்.
மிஸ்டு கால் கொடுத்தால் மட்டுமே பேச வேண்டும் என்று பரமேஸ்வரனிடம் உறுதியாக சொன்னதற்கு காரணம் இதுதான்.
அப்படி இருந்தும் அவன் அவளிடம் பேச நினைத்து மிஸ்டு கால் கொடுத்ததற்கு காரணம்,இன்று சுவாதியின் பிறந்தநாள்.இரவு பனிரெண்டு மணி ஆனதுமே வாழ்த்து சொல்ல ஆசைதான்.ஆனாலும் மரம்வெட்டி மாமனார் (?!) முத்துகிருஷ்ணனை நினைத்து பரமேஸ்வரனுக்கும் பயம் இருக்கத்தான் செய்தது.
ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அவன் மிஸ்டு கால் கொடுத்து விட்டு சற்று ஓய்ந்த போது சுவாதியின் கைப்பேசி திரையில் தவறிய அழைப்புகள் 46 என்று தெரிந்தது.
புகழ் பெற்ற ஆழித்தேர் திருவாரூரில் வலம் வரும் வீதிகளில் ஒன்று வடக்குவீதி.அங்கே உள்ள சினிமா தியேட்டருக்கு எதிரில் முப்பது வீடுகளுடன் பிரமாண்டமான வாடகைக்குடியிருப்பு இருந்தது.
அங்கே ஒரு வீட்டில்தான் பரமேஸ்வரனின் குடும்பம் வசித்து வந்தது.
திடீரென்று அங்கே சிறப்பு எஸ்.பி வஜ்ரவேலுவுடன் வந்த போலீசார் பரமேஸ்வரனைப் பிடித்து இழுத்துச் சென்று வேனில் ஏற்றினார்கள். அப்போதுதான் பரமேஸ்வரன் ஏற்கனவே அவன் நண்பன் விஜயகுமார் முகத்தில் பயத்துடன் உடல் முழுவதும் வியர்வையுடன் வேனுக்குள் அமர்ந்திருந்ததைப் பார்த்தான்.
இருவருக்குமே எதுவும் பேசத் தோன்றவில்லை.
பரமேஸ்வரனின் குடும்பத்தார் என்னவோ தெரியலையே என்ற பதட்டத்துடன் காவல்நிலையம் கிளம்பினார்கள்.
அப்போது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒருவர், “சார்… இருபது நாளைக்கு முன்னால வடக்கே வெடிகுண்டு நிறைய வெடிச்சதுல்ல…அதுல சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் நாடு பூராவும் தொடர்ந்து சிக்கிகிட்டே இருக்காங்களாம். இவ்வளவு போலீஸ் வந்ததைப்பார்த்தா எனக்கும் அப்படித்தான் தோணுது…”என்று அருகில் இருந்தவரின் வாய்க்கு அவல் தந்து கொண்டிருந்தார்.
‘முத்துகிருஷ்ணன் இவ்வளவு பெரிய ஆளா?….இவரை எதிர்த்துப் போராடி காதல்ல ஜெயிக்கணுமா?’ என்று நினக்கும் போதே பரமேஸ்வரனுக்கு பெருமூச்சு எழுந்தது.
அந்த வேன் கீழவீதியில் உள்ள நகர காவல் நிலையத்துக்குச் செல்லாமல் திருத்துறைப்பூண்டி சாலையில் உள்ள சிறப்பு முகாமுக்குச் சென்றது.வேனில் இருந்து இறங்கி அந்த முகாம் அலுவலகத்திற்குள் செல்லும்போதே பரமேஸ்வரன் முத்துகிருஷ்ணனைப் பார்த்துவிட்டான்.
‘உதை வாங்கப் போறது நான்…இவர் ஏன் பேயறைஞ்சது மாதிரி முகம் வெளிறிப்போய் நிக்கிறாரு…’என்ற குழப்பத்துடனேயே நடந்தான்.
உள்ளே சுவர் ஓரமாக நாற்காலியில் அமர்ந்து அழுது கொண்டு இருந்தவளைப் பார்த்ததும் இவனுக்கு அதிர்ச்சி.
‘சுவாதி நீ எங்கே?…உன் இப்பாதான் புகார் கொடுத்து என்னைய இழுத்துட்டு வர வெச்சிருப்பாருன்னு நினைச்சா…இப்ப கதை வேற மாதிரி போகுதே…’ என்று யோசித்த பரமேஸ்வரன் எந்த முடிவுக்கும் வர முடியாமல் திணறினான்.
அவள் அருகில் இருந்த இரண்டு பெண் போலீசாரைப் பார்த்தாலே போதும்…வயிறு கலங்கிவிடும் என்ற அளவுக்கு அவர்களின் முகம் கொடூரமாக இருந்தது.
எஸ்.பி.வஜ்ரவேலு, “மிஸ்டர் பரமேஸ்வரன்…இதே மரியாதை உங்களுக்குத் தொடர்ந்து கிடைக்கணும்னு நினைச்சா எல்லா உண்மையையும் சொல்லிடுங்க…எதுவுமே தெரியாத மாதிரி நடிச்சா என்னோட கொடூரமான முகத்தைப் பார்க்க வேண்டியது இருக்கும்…”என்று கர்ஜித்தார்.
“இப்ப மட்டும் என்ன வாழுதாம்…”என்று மனசுக்குள் சொல்லிக் கொண்ட பரமேஸ்வரன் சில நொடிகள் கண்களை மூடிக்கொண்டு நின்றான்.
பிறகு மெதுவாக கண்களைத் திறந்து,“சார்… என்னையப் புடிக்க இவ்வளவு பேர் வந்திருக்க வேண்டியது இல்லை.ஒரே ஒரு கான்ஸ்டபிள் வந்து கூப்பிட்டாலே ஓடி வந்திருப்பேன்…
சுவாதிக்கு பிறந்தநாள் வாழ்த்து அவ அப்பாவுக்குத் தெரியாம சொல்லணும்னு நினைச்சு மிஸ்டு கால் கொடுத்தேன்.இதுதான் செய்தி…நீங்க கேட்குற விஷயம் இதுதானான்னு எனக்குத் தெரியலை…”என்று பிசிறில்லாமல் பேசினான்.
“பிறந்தநாள் வாழ்த்து சொல்றதுக்காகதான் நாற்பத்தி ஆறு மிஸ்டுகால் கொடுக்குறியா…தீவிரவாதியோட தொடர்பு வெச்சுகிட்டு எவ்வளவு அழகா சமாளிக்கிற பாரு…
அவ என்னடான்னா அழுதே சாதிக்கிறா…இவன் பயமில்லாத மாதிரி நடிக்கிறான்.தூக்கிப்போட்டு நாலு மிதி மிதிச்சா எல்லா உண்மையும் வந்துடும்…”என்று வஜ்ரவேலு சொன்னதும் பரமேஸ்வரனுக்கு பகீர் என்றது.
“சார்…அங்கங்க குண்டு வெடிப்பு நடந்ததும் உங்க டிபார்ட்மெண்டுக்குதான் தேவை இல்லாத தலைவலியும் பணிச்சுமையும் அதிகம்னு எனக்கு நல்லா தெரியும்.அந்த மன உளைச்சல் தாங்காம உங்ககிட்ட சிக்குற அப்பாவி மேலயே எல்லா வழக்கையும் பதிவு பண்ணி ஃபைலை மூடிடலாம்னு நினைக்காதீங்க சார்… ”என்று அவன் சொன்னதும் அருகில் நின்ற கான்ஸ்டபிள் ஒருவர் அடிக்க வந்தார்.
சடடென்று கீழே அமர்ந்து தன் முழங்கால்களுக்கிடையே முகம் புதைத்த பரமேஸ்வரன், “சார்…ஒவ்வொரு கேள்வியா கேட்டுட்டு அப்புறமா ஒரு முடிவுக்கு வந்த பிறகு அடிக்கலாம் சார்…டிராபிக் போலீஸ் இல்லன்னா கூட நோ என்ட்ரிக்குள்ள போக நினைக்காத ஆள் சார் நான்… ”என்றான்.
இதைக் கேட்ட எஸ்.பி.யின் முக இறுக்கம் சற்று தளர்ந்தது.
“பரமேஸ்வரன்,நேத்து தி எர்த் ஹோட்டல்ல பதுங்கி இருந்த தீவிரவாதியைப் புடிச்சோம்.அவனோட சிம்கார்டு சுவாதியோட பேர்ல இருக்கு.அவனும் உண்மைய சொல்ல மாட்டேன்னு சாதிக்கிறான். இவ அழுதுகிட்டே இருக்கா…
ரெண்டு பேரோட போன்ல உள்ள நம்பர் எல்லாத்தையும் அட்ரஸ் லிஸ்ட்டோட தயார் பண்ணிகிட்டு இருக்கோம்.அந்த நேரத்துலதான் உன்கிட்ட இருந்து நாற்பத்தி ஆறு மிஸ்டு கால். சந்தேகம் வராம என்ன செய்யும்?…”
“சார்…உங்க சந்தேகம் நியாயமானதுதான்.ஆனா இந்தப் பொண்ணு எம்.எஸ்.சி படிச்சுட்டு வேலை பார்க்குது…இந்த மாதிரி வேலை எல்லாம் செய்யுமான்னு யோசிக்க வேணாமா சார்?…”
“எனக்கு அறிவுரை சொல்றியா…இந்தக்காலத்துப் பசங்க எல்லாரும் சினிமா பார்த்து ரொம்பவும் கெட்டுப்போய்தான இருக்காங்க…தாதாவை வாத்தியாரம்மா காதலிக்கிறது…இந்த மாதிரி மோசமான உதாரணங்கள் ஆயிரம் வரும்போது நல்லது ஒண்ணு ரெண்டை நீங்க எங்க கவனிக்கிறீங்க…”என்று கூறிய எஸ்.பி.யின் முகம் மீண்டும் கடுமையானது.
பரமேஸ்வரன் மறுபடியும் கண்களை மூடிக் கொண்டான்.
“என்னய்யா நீ…எதுக்கேடுத்தாலும் முனிவர் மாதிரி கண்ணை மூடிக்குறே?…ம்…இதெல்லாம் சரி வராது…தேர்ட் டிகிரிதான்… ”என்றார்.
இதைக் கேட்டு பட்டென்று பரமேஸ்வரன் எழுந்து நின்றான்.
“என்ன சார் நீங்க?…சுவாதியோட போன்ல இருந்து அந்த தீவிரவாதியோட நம்பருக்கு எத்தனை கால் போயிருக்குன்னு மொபைல் ஆப்ரேட்டர் கிட்ட கேட்டா உண்மை தெரிஞ்சிடும்.
அதிகமா சிம்கார்டு விற்பனை செய்யுற கடைக்காரங்களுக்கு மொபைல் நிறுவனங்கள் ஏகப்பட்ட பரிசு தருது…அதுக்கு ஆசைப்படுற சிலர்,பெரிய ஆஃபர் இருக்குற நேரத்துல கம்ப்யூட்டர் மூலம் சிம்கார்டை ஆக்டிவேன் செஞ்சு ஏதாவது போட்டோ,முகவரி சான்று கொடுத்து சமாளிச்சுடுறாங்க.
சுவாதி சிம்கார்டு வாங்குன கடைகாரனை விசாரிச்சுட்டு தீவிரவாதியோட சிம்கார்டுக்கு கொடுக்கப்பட்ட ஆவணங்களை சரி பார்த்தா தப்பு எங்கன்னு தெரிஞ்சுடப்போகுது…
அதை விட்டுட்டு ஏதோ அப்பாவி நாங்க சிக்கிட்டோம்னு வெச்சு அமுக்கப்பார்க்குறீங்கிளே சார்…
இந்த மாதிரி விசாரணை உங்களுக்கு சாதாரண பணி தான்…ஆனா எங்களுக்கு வாழ்க்கைப் பிரச்சனை. ப்ளீஸ் சார்… ”என்றான்.
சினிமாவில் மட்டும்தான் மேற்கூறியது போல சம்பவம் நடந்த மறுநாளே இவர்களை விடுதலை செய்யும்படி நீதிபதி உத்தரவிடுவார்.
நிஜத்தில் அது அவ்வளவு சுலபமா என்ன?
பரமேஸ்வரனும் ஒரு தவறு செய்திருந்தான்.அவன் நண்பன் விஜயகுமார் பெயரில் வாங்கிய சிம்கார்டைத்தான் அதுநாள் வரை பயன்படுத்தி வந்தான்.இதுவே சட்டப்படி குற்றம்.
பரமேஸ்வரன் கொடுத்த நாற்பத்தி ஆறு மிஸ்டு கால்களைப் பார்த்ததும் முதலில் விஜயகுமார் சிக்கியதற்குக் காரணம் இதுதான்.
இந்த வழக்கு முடியவே ஓர் ஆண்டுக்கும் மேல் ஆகிவிட்டது. அதனால் அபராதத்துடன் எச்சரிக்கை செய்து விஜயகுமாரையும் பரமேஸ்வரனையும் நீதிமன்றம் விடுவித்தது.
சுவாதியின் பெயரிலேயே வாங்கப்பட்ட சிம்கார்டு தீவிரவாதியிடம் இருந்ததற்குக் காரணம்,சில்லரை விற்பனையாளர்தான்.
சிலரிடம் புகைப்படம்,முகவரிசான்று நகல் வாங்கும் போது புகைப்படத்தில் கையயாப்பம் வாங்காமல் பெற்றுக் கொண்டு நிறைய போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்தது கண்டுபடிக்கப்பட்டது.
சுவாதி குற்றமற்றவள் என்று நீதிமன்றத் தீர்ப்பு வரும்போது இரண்டு ஆண்டுகள் கடந்திருந்தன.
***
பரமேஸ்வரன்,சுவாதி இவர்களின் திருமணம் முடிந்த பின்பு குற்றாலத்திற்கு சுற்றுலா சென்றார்கள்.
இருவரும் பிரதான அருவிக்கு குளிக்கச் சென்ற போது சுவாதி, “என்னங்க…நம்ம வாழ்க்கைளில ரெண்டு வருஷத்துக்குள்ள இவ்வளவு போராட்டம் நடக்கும்னு எதிர்பார்க்கவே இல்லை…எதிரிக்கு கூட இந்த நிலை வரக்கூடாதுன்னுதான் வேண்டிக்குறேன்.முதன் முதல்ல என்னைய போலீஸ் ஸ்டேனுக்கு கூட்டிட்டு போனப்ப நான் பட்ட அவமானம்,இப்பவும் ஞாபகம் வந்து என்னைய வேதனைப்படுத்துது…நீங்க மட்டும் இல்லைன்னா நான் குற்றவாளி இல்லன்னு நிரூபிக்க எவ்வளவு போராடியிருக்கணுமோ தெரியலை…”என்றாள்.
உடனே பரமேஸ்வரன்,“இதையே பாசிட்டிவா நினைச்சுப் பாரேன். இந்த சம்பவம் நடக்கக் கூடாதுதான்…ஆனா நடந்துடுச்சு…இதே மாதிரி நடக்கலைன்னா என்ன ஆகி இருக்கும்…உங்க அப்பா சம்மதம் இல்லாம நம்ம கல்யாணம் நடந்து,அவர் ஆசீர்வாதம் இல்லையேன்னு ஏக்கம் இருந்துருக்கும்.
இந்த வழக்கு விஷயமா ரெண்டு வருமும் நான் உன்னோடயும் உன் குடும்பத்தோடயும் பழகுனதுல எல்லாருடைய சம்மதத்தோட நம்ம கல்யாணம் நடந்துடுச்சு…ரெண்டு வரும் மனதளவுல நாம பட்ட கஷ்டம் வாழ்நாள் பூராவும் உன் குடும்பத்தோட சுமூகமான உறவுக்கு வழி சொல்லியிருக்குன்னு நினைச்சுக்கயேன்…”என்றான்.
‘அட…இதை நாம யோசிக்கலையே…’ என்று சுவாதி மனதில் சந்தோ சாரல் உருவானபோது குற்றாலத்திலும் சாரல் மழை பெய்யத் தொடங்கியது.