“மிஷியா” உள்ளே நுழைந்து விட்டாள் என்பது அவள் போட்டிருந்த லாவண்டரின் மணமே அன்பழகனுக்கு உணர்த்தியது. கண்களால் அவளை திருட்டுத்தனமாக இரசித்தான். அவளின் பார்வை சட்டென இவனை நோக்கி திரும்ப இவன் தன் பார்வையை ஏதோவொரு பக்கம் திருப்ப முயற்சித்து தோல்வியில் கண்களை தாழ்த்திக்கொண்டான்.
“மிஷியா”வுக்கு இவனின் பார்வை புரிந்த்து, ஆனால் ஒரு பெருமூச்சுடன் தன்னுடைய வேலைகலை கவனிக்க காபினுக்குள் நுழைய போனவளை “ஹாய் மிஷி” திரும்பினாள். ரமேஷ் நின்று கொண்டிருந்தான். என்னம்மா சும்மா கும்முனு வந்திருக்கே? அவனின் கிண்டலுக்கு அவள் ஏன் நீ கூட்த்தான் போடற “டிரெச்சுலயாவது” பர்சனாலட்டிய காட்டலாமுன்னு போட்டுட்டு வந்துருக்கே ? சந்தடி சாக்குல எனக்கு பர்சனாலிட்டி இல்லைங்க்றே ! அப்படி நீ நினைச்சுக்காதே.
என்னப்பா மிஹியோட கட்லை போட்டுட்டு இருக்கே, எட்மண்ட அங்கு வந்தவன், அவர்கள் இருவரையும் கலாய்க்க, ஆமா காலையில அடிக்கற வெயில்ல கடலை வறுக்கற்து வேணா ஈசியா இருக்கலாம், போடறது கஷ்டம்தான் மிஷியா வெடுக்கென்று சொல்ல, எட்மண்ட அசட்டு சிரிப்பொன்றை உதிர்த்து விட்டு நகர்ந்தான்.
அன்பழகன் இவர்கள் உரையாடலை கேட்டுக்கொண்டிருந்தான். அவனுக்கும் மிஷியாவிடம் பேசவேண்டும், பழகவேண்டும் என்று ஆசை இருந்தாலும், அவனின் கூச்ச உணர்வு பழக விடாமல் தடுத்தது. அது மட்டுமல்ல, மிஷியா அவன் மனதுக்குள் எப்பொழுதோ போய் உட்கார்ந்து கொண்டாள். மணந்தால் அவளைத்தான் மணக்க முயற்சிக்க வேண்டும் என்று மனதுக்குள் ஒரு முடிவையும் போட்டுக் கொண்டிருக்கிறான். ஆனால் எங்கே அவளை கண்டால் போதும் மனசு போடும் தாளத்துக்கு இவனுக்கு கை கால் நடுங்குவதுதான் மிச்சம்.
அன்று மாலை ஆறு மணிக்கு மேல் ஆகி விட்ட்து, அலுவலகம் வெறிச்சென்று இருந்தது, அப்பாடா என்று தனது கணினியை அணைத்து சோம்பல் முறித்தவாறு எழுந்தவன் நான்கைந்து கேபின் தள்ளி அனிச்சையாக பார்வை செல்ல “மிஷியா” தீவிரமாய் தன்னுடைய கணினியில் ஏதோ தட்டிக்கொண்டிருந்தாள். யாருமே இல்லை, மிஷியா மட்டும் தனியாக இருக்கிறாள். இதை பார்த்தவுடன் அன்பழகனது நெஞ்சு “திடும்”திடும்” என்று மத்தளமிட ஆரம்பித்தது. இதுதான் நல்ல சந்தர்ப்பம் அவளுடன் பேச, ஆனால் எப்படி பேசுவது அவனுக்கு நினைக்கும்போதே குலை நடுங்கியது. சீ ஒரு பெண்ணிடம் பேச இப்படி நடுங்குவது அவனுக்கே அவமானமாய் தெரிந்தது, இதற்கும் கல்லூரியில் பேச்சு போட்டி, பாட்டு போட்டி அனைத்திலும் பங்கு பெற்றிருக்கிறான். இருந்தும் ஒரு பெண்ணிடம் பேச..இப்படி ஒரு தயக்கமா? அவன் இப்படி நினைத்துக் கொண்டிருக்கும்போதே….
தன்னுடைய கணிணியை அணைத்து விட்டு எழுந்த “மிஷியா” சற்று தூரத்தில் அன்பழகன் நின்று கொண்டிருப்பதை பார்த்தவள் “ஹலோ, உங்க வேலை முடிஞ்சுதா?”. அவளின் பட்டென்ற கேள்வி இவனது தயக்கத்தை சற்று உடைத்து தடுமாறியவாறு இப்பத்தான் முடிச்சேன் எப்படியோ சொல்லி விட்டான்..
“கமான் வாங்க, போய் நம்ம காண்டீன்ல ஒரு காப்பி சாப்பிட்டுட்டு போகலாம், தலை வலிக்குது, கணக்குல ஒரு சைபர் விட்டுட்டு…” அவள் பேசிக்கொண்டே அவனருகில் வர இவனது உடல் சற்று நடுங்கி சமநிலைக்கு வந்தது. அவள் முன்னால் நடக்க இவன் பின்னால் தயங்கி வந்தான். அப்பொழுது கூட யாராவது பார்த்து விடுவார்களோ என்ற எண்ணமே அவன் மனதுக்குள் வந்தது.
“மிஷியா” சற்று கூட்டம் குறைந்து காணப்பட்ட காண்டீனில் ஒரு டேபிளில் உட்கார்ந்தவள், இப்படி உட்காருங்க, எதிரில் காண்பித்தாள். அன்பழகனுக்கு மிஷியாவுடன் கனவில் எவ்வளவோ பேசியிருக்கிறான், இப்படி எதிரில் வந்து உட்கார்ந்து பேச் வாய்ப்பு கிடைப்பது இப்பொழுது மட்டும்தான். மெல்ல உட்கார்ந்தான்.
என்ன சாப்பிடறீங்க? அவள் கேட்க இவன் தயக்கமாய் காப்பி மட்டும் போதும் என்றான். நோ..நோ..இன்னைக்கு என்னுடைய சார்பா வேற ஏதாவது சாப்பிடலாம், சொன்னவள் சர்வரை கூப்பிட்டு இரண்டு காப்பி அது வருவதற்குள் சூடா என்ன இருக்கிற்தோ அதை கொண்டு வர சொன்னாள்.
அப்புறம் உங்க எதிர்கால பிளான் என்ன சார்? அவளின் கேள்வி புரியாமல் பார்க்க, இல்லை உங்களுக்குன்னு ஏதாவது “ஆம்பீசன்” வச்சிருபீங்க இல்லை, அதைய சொல்லுங்க கேப்போம். அவனுக்கு என்ன ஆம்பீசன் இருக்க போகிறது, இதவரை “மிஷியாவை” காதலிப்பதை தவிர, ஆனால் அதுவும் கனவில் மட்டுமே நடந்திருக்கிறது. இதோ அவளே எதிரில் உட்கார்ந்து கேட்கிறாள். சொல்லிவிட வேண்டியதுதானே உன்னைத்தான் திருமணம் செய்து கொள்ளப்போகிறேன் என்று. ஆனால் மனம் இருக்கிறதே…அட்டா..வாய் மட்டும் மெல்லிய குரலில் உங்க ஆம்பீசன் என்னன்னு சொல்லுங்க முதல்ல…
எனக்கென்ன..இன்னும் ஆறு மாசம் இங்க இருப்பேன், அதுக்கப்புறம், லண்டன்…ஸ்..ஸ்..பிளைட் போவது போல் சைகை காண்பித்தாள். லண்டனா? இவனின் கேள்வி திகைப்புடன் இருந்தது, யெஸ்..ஏன் சார் ஏகப்பட்ட கோர்ஸ் செலவு பண்ணி படிக்க வச்சிருக்காங்க, அங்க போய் கொஞ்சம் சம்பாரிச்சு கொடுப்பமே..
கல்யாணம் பண்ணி…அவன் இழுக்க யெஸ்..யெஸ்…கண்டிப்பா பண்ணுவேன், எனக்கு ஏத்த மாதிரி பையனை தேடிக்கிட்டு இருக்காங்க, சொல்லிவிட்டு சிரித்தாள். இவன் மனம் இதுதான் நல்ல சமயம், உன் மனசுல இருக்கறதை சொல்லிடு அவசரப்படுத்தியது. இவன் சொல்லி விட வாய் திறக்க முயற்சிக்கையில்..
சர்வர் சூடான வடையுடன் காப்பியையும் கொண்டு வர அவள் அதை வாங்கி அவனருகில் தள்ளி வைத்தவள்..சாப்பிடுங்க..ம்..நான் என்ன சொல்லிகிட்டு இருந்தேன், என் கல்யாணம், அதுக்கென்ன சார் அவசரம் இப்போ, அதுக்குன்னு வீட்டுல பார்த்துக்குவாங்க, ஏன்னா அவங்களுக்கு தெரியும் என்னோட கேரக்டர் என்ன? எனக்கு வர்றவன் எப்படி இருக்கனுமுன்னு இல்லையா? இவனுக்கு குரல் அமுங்க கேட்டது காதலை பத்தி…நல்ல வேளை இவன் வாயில் வடை இருந்த்தால் அவளுக்கு தப்பாக எடுத்துக்கொள்ள தெரியவில்லை.
காதலை பத்தியும் தப்பான எண்ணமெல்லாம் இல்லை, ஆனா, அங்க நிறைய போலித்தனம் இருக்குன்னு நினைக்கிறேன். இப்ப உங்களுக்கு பிடிச்சமாதிரி நான் நடிக்கணும், இன்னொன்னு நான் இப்படித்தான் அப்படீன்னு அதுல சொல்ல முடியுமான்னு தெரியலை.
அப்ப நிறைய பேரு காதலிச்சு நல்லாத்தானே இருக்கறாங்க, நான் இல்லையின்னு சொல்லலையே, அவங்க “கேரக்டர் வைசா” ஒத்து போனதுனால அவங்க வாழ்க்கை நல்லா இருக்குது. இப்ப உதாரணமா எடுத்துங்குங்களேன், உங்களை பாக்கறப்பவே தெரியுது, உங்க பேமிலி கொஞ்சம் கட்டுப்பாடான பேமிலி, உங்க குடும்பத்துல ஒரு வரைமுறையாத்தான் இருப்பீங்கன்னு.
ஆனா எங்க பேமிலி ஆங்கிலோ இண்டியன்ஸ், நாங்க ஆண் பெண் பேதங்களை எடுத்துக்க மாட்டோம். அது எங்க பழக்கம், அதே மாதிரிதான் எல்லா பழக்க வழக்கங்க்ளிலும் இருப்போம். இப்ப நான் கல்யாணம் பண்ணிக்கப்போற பையனும் எங்க குடும்பத்தை மாதிரி இருக்கறவங்க கிட்ட இருந்து வந்தா எங்களுக்குள்ள ஒரு புரிதல் இருக்கும் இல்லையா? இல்லை கட்டுப்பாடா இருக்கற குடும்பத்துல இருந்து வந்த பையன் காதலிச்சுட்டான்னு அவனை கல்யாணம் பண்ணிகிட்டு அவங்க பழக்க வழக்களோட ஒத்து போகாமல் அப்ப்ப்பா…அது நரக வாழ்க்கை.
காதலிச்சுவங்க அதையெல்லாம் சகிச்சுக்கணும்தானே? இவனின் கேள்விக்கு சப்தமிட்டு சிரித்தாள் மிஷியா. எதுக்கு சார் சகிச்சுக்கணும்? ஒருத்தரோட எண்ணங்கள் மாதிரி ஒருத்தருது எப்பவுமே இருக்கறதில்லை, அப்படீங்கறப்ப இந்த சகிச்சுக்கணும்கறதே கட்டாயப்படுத்தற மாதிரி. அவ்வளவு சிரமம் எதுக்கு சார்? சினிமாவுல பார்த்தீங்கன்னா அந்த காலத்துல இருந்து ஹீரோ கெட்டவனா ரவுடியா, இல்லை அரகண்டா இருப்பான், அவனை கதாநாயகி காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கறதா காண்பிச்சு கதைய முடிச்சுடுவான். அதுக்கப்புறம் அவங்க வாழ்க்கையை காட்ட மாட்டான், காரணம் அவ்வளவு கொடுமையா இருக்கும். இப்படி சம்பந்தமே இல்லாதவங்க, சேர்ந்து அதை படமாக்கி உங்களை கனவுல வச்சுகிட்டாத்தான் அடுத்த கதைய எடுக்க முடியும்.
அன்பழகனுக்கு இப்பொழுது பேசவே வாய்ப்பு கொடுக்காமல் பேசிக்கொண்டிருந்தாள். இப்ப உங்களையே எடுத்துங்குங்க சார், நான் ஜோவியலா எல்லார்கிட்டேயும் பழகறேன், இது என்னோட பழக்கம், என்னோட பழகற எல்லா ஆம்பிளைகளும் நல்ல எண்ணத்தோட பழகறாங்கன்னு நான் சொல்ல வரலை, ஆனா நான் “ஒரு லிமிட்டுல” வச்சுக்கறதுனால, அவங்களும் எச்சரிக்கையா இருக்கறாங்க. இப்ப உங்களை மாதிரி இருக்கறவங்க என்னைய மாதிரி பெண் கூட காதல் அப்படீன்னு நினைச்சு உங்க மனசை “இவ யார் கூடவும் பேசக்கூடாது, பழக கூடாது அப்படீன்னு” உங்க மனசை இறுக்கி ஒரு சித்ரவதைக்கு போயிடுவீங்க, இது உண்மையா இல்லையா சார்..
அவளின் கேள்விக்கு என்ன சொல்வது என்று இவனுக்கு புரியவில்லை, இல்லை அவங்க அப்படித்தான்னு நினைச்சுகிட்டா பிரச்சினையில்லை. எப்படி சார் நினைக்க முடியும், ஒரு பொண்ணோ, ஆணோ காதலிக்க ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி நார்மலா இருக்கறவங்க, காதலிக்க ஆரம்பிச்ச பின்னால “ஒரு பொச்சிவ்னசுக்கு” போயிடறாங்க, இது உண்மையா இல்லையா?
ஆம் வேறு வழியின்றி தலையசைத்தான்.
அதுதான் எதுக்கு? இருக்கறவரைக்கும் நாம் நாமளா இருப்போம், நமக்குன்னு ஒரு கட்டம் வரும்போது அது காதல் கல்யாணமா இருந்தாலும் சரி, கட்டி வச்ச கல்யாணமா இருந்தாலும் சரி என்ன சொல்றீங்க சார்?
ம்..ம்… தலையசைத்தான், அச்சச்சோ டைமாயிடுச்சு, வாங்க சொல்லிக்கொண்டே கைப்பையில் இருந்து பணத்தை கவுண்டரில் கொடுத்து விட்டு பை..பை..சார் காலையில் பார்ப்போம். அவள் வண்டியை நோக்கி பறந்தாள்.
மறு நாள் காலை “மிஷியா வின்” லாவண்டரின் மணம் இவனை சலனப்படுத்தவில்லை, அவளை கண்ணுக்கு நேராய் பார்த்து கையசைத்தான். அவளும் இதை எதிர்பார்த்தே நேற்று மாலை இவன் வேலை முடியும் வரை காத்திருந்து நாசுக்காய் உணர்த்தினாள்.