மிகக் கடைசியில்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 10,082 
 
 

ஏழாவது முறையாக கூறிக் கொண்டிருந்தேன். நீ என்ன சொல்வது நான் என்ன கேட்பது என்பது போல் பேசிக் கொண்டே இருந்தாள். எனக்கென்னவோ கழுத்து வலித்தது உண்மைதான். ஆனால் மிகநீண்ட சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த அந்த காவல்துறை அதிகாரி என்னை ஒருமாதிரியாக முறைத்துக் கொண்டிருந்தார். அதற்கு மேலும் நான் கழுத்தை வளைத்தபடி கைப்பேசியில் பேசிக் கொண்டே சென்றால் அவர் துப்பாக்கியால் சுட்டாலும் சுட்டுவிடுவார் என்கிற காரணத்தால் வண்டியை ஓரம்கட்டி அவளிடம் இவ்வாறு கூறிக் கொண்டிருந்தேன்.

நான் : சரி நான் அப்புறம் பேசுறேன்.

அவள்: அப்புறம்னா… இப்ப யார்கூட பேசப்போற.

நான்: இப்ப யார்கூடயும் பேசல, நான் டிராபிக்ல இருக்கேன்

அவள் : ட்ராபிக்ல இருந்தா பேசகூடாதுன்னு எந்த சட்டமும் இல்லையே,

நான் : நான் வண்டியில போய்கிட்டு இருக்கேன்.

அவள் : ஓரம்மா நின்னு பேசு

நான் : ஐயோ போலிஸ் நிக்கிறாங்க.

அவள் : அவர் நின்னா நின்னுட்டு போகட்டும். அதற்கென்ன.

நான் : உனக்கு அறிவே இல்லையா, புரிஞ்சுக்கவே மாட்டியா

அவள் : ஆமா உன்னை புரிஞ்சுக்கவே முடியலை. இப்பயெல்லாம் உன்னை புரிஞ்சுக்கவே முடியலை

நான் : சரி வை நான் அப்புறம் பேசுறேன்.

அவள் : அப்புறம் ஒன்னும் பேச ‍வேண்டாம்.

போலீஸ் காரர் : நோ பார்க்கிங்ள வண்டிய நிறுத்திருக்கியே உனக்கு எவ்வளவு தைரியம்.

நான் : தயவு செஞ்சு சொல்றத கேளு.

போலீஸ் : நீ சொல்றத நான் என்னடா கேட்கனும். ஒழுங்கா வண்டிய விட்டு இறங்கு.

அவள் : நல்லா புரிஞ்சுகிட்டேன். உன்னை பத்தி..

நான் : என்னத்தை புரிஞ்சுகிட்ட நீ.

போலீஸ் : எல்லாத்தையும் புரிய வைக்கிறேன். இறங்கு

நான் : சார், சார் சாவிய ஏன் சார் எடுத்துட்டு போறீங்க

அவள் : இனிமே என் கூட பேசாத

போலீஸ் : உன்னோட பைக் சாவி ரொம்ப அழகா இருக்கு அதான் எடுத்துட்டு போறேன்.

அவள் : நீ உன் அம்மா பார்த்த பெண்ணையே கல்யாணம் பண்ணிக்க

நான் : ????????

இருமுனைத் தாக்குதலில் குளம்பிப் போன என் மூளைக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. அந்த முரட்டு போலீஸ் காரரிடம் இவ்வாறு கூற வேண்டும் போல இருந்தது. அழகாக இருந்தாலும் அது அடுத்தவர் பொருளாக இருந்தால், அதை அவர் அனுமதி இல்லாமல் எடுத்துச்செல்லக் கூடாது. அப்படி எடுத்துச் சென்றால் அது திருட்டு.

என்னை கோபமடையச் செய்தது என்னவோ அந்த நயமான பதில்தான். நான் அவமானப்படுத்தப்பட்டது போல் உணர்ந்தேன். என் சாவி அவருக்கு பிடித்திருக்கிறதாம். அதனால் எடுத்துச் சென்றாராம். இந்த பதில் போதாது இன்னும் காரமாக அவர் என் சட்டையை பிடித்து குலுக்கி என்முகத்தில் ஓங்கி ஓங்கி குத்தும் அளவுக்கு அவருக்கு பதில் சொல்ல வேண்டும். எப்படி?

“எனக்குக் கூடத்தான் அழகான பெண்களை பிடிக்கும். ஒரு வேளை உங்கள் மனைவி அழகாக இருக்கலாம். எனக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் போல தோன்றலாம்.”

இது போதும் என்று நினைக்கிறேன். அவரது இரத்தக் கொதிப்பு அடுத்த லெவலை அடைய இது போதும் என்றே நினைக்கிறேன். போலீஸ்காரராக இருந்தால் அடுத்தவரை மதிக்க தேவையில்லை என்று ஏதேனும் நிர்பந்தமா என்ன? என் சாவி அவருக்கு பிடித்திருக்கிறதாம். அவர் மேல் திருட்டு கேஸ் போட ஏதேனும் வாய்ப்பிருக்கிறதா? என என் வக்கீல் நண்பனிடம் கேட்க வேண்டும். அவனிடம் கேட்டால் அவன் கொட்டாவி விட்டுக்கொண்டு பதில் கூறுவதற்குள் அவனை சுட்டுவிட வேண்டும் போல் எரிச்சல் வரும். நிலைமையை என்றுமே என் நண்பர்கள் மட்டும் புரிந்து கொள்ளவே மாட்டார்கள். மற்றவர்களின் நண்பர்கள் மட்டும் எப்படித்தான் நண்பனுக்கு ஒன்று என்றதும் வாரி சுருட்டிக் கொண்டு வருகிறார்களோ? தெரியவில்லை.

அவர் சாவியை எடுத்துக் கொண்டு அவர் வேலையை பார்க்கச் சென்றுவிட்டார். ஏ‍தோ நான் அவர் பின்னாடியே கெஞ்சிக் கொண்டு செல்ல வேண்டும் என்பது அவரது நினைப்பு. என்னிடம் மட்டும் இன்னொரு சாவி இருக்குமானால் நான் யோசிக்காமல் அதைப் பயன்படுத்தி அவர் முன்னால் வேகமுள் 10ல் மெதுவாக அவர் கண்முன் அவரை பார்த்துக் கொண்டே ஆங்கிலப்பட ஹீரோ போல சென்று கொண்டிருப்பேன். என்ன சாபம் இதுவோ எனக்கு தேவையான பொழுது என்னிடம் எனக்குத் தேவையானது இருப்பதில்லை.

அவன் என்னை பரம்பரை எதிரியாக நினைத்து என்ன? என்ன? சொல்லப் போகிறானோ தெரியவில்லை. இவர்களுக்கு அழுவதற்கு என்றே மாதம் ஆயிரத்து 500 ரூபாயை என் சம்பளத்திலிருந்து நான் ஒதுக்க வேண்டியிருக்கிறது. இதில் அவர்களிடம் அவமானம் வேறு பட வேண்டும்.

இதனால் தான் சிறுவயதில் நான் ஒரு கூலிப்படை தலைவனாக ஆக வேண்டும் என ஆசைப்பட்டேன். குறைந்த பட்சம் ஒரு காவல்துறை அதிகாரி பயப்படும் அளவுக்கு, குறைந்த பட்சம் ஒரு காவல்துறை அதிகாரியிடம் அவமானப்படாமல் இருக்கும் அளவுக்கு, குறைந்த பட்சம் ஒரு காவல்துறை அதிகாரி என் பைக் சாவியை எடுத்துக் கொண்டு என்னை அவமானப்படுத்தாமல் இருக்கும் அளவுக்கு நான் பயங்கரமானவனாக இருந்திருப்பேன்.

திடீரென போன் கால் ஒலித்தது.

நான் : ஹலோ!

(எதிர்பார்க்காமல் அலைபேசியை ஆன் செய்தது நான் செய்த மாபெரும் தவறுகளுள் ஒன்று என எனது தங்க நிற டைரியில் குறித்து வைத்துக்கொள்ளும் அளவுக்கு)

அவள் : இனிமே என் கூட பேசாத, நீ உங்க அம்மா பாத்து வச்ச பொண்ணையே கல்யாணம் பண்ணிக்க…

நான் : ??????

என் மூச்சு, பேச்சு, அவமான உணர்வு எல்லாம் அடங்கிப் போனது.

அவர் (அந்த போலீஸ் காரர்) என்னைத் திட்டினார். அவர் என்னை அவமானப்படுத்தினார். அவர் என் சாவியை திருப்பிக் கொடுத்தார். அவரால் நான் அனுப்பி வைக்கப்பட்டேன். எல்லாம் சுமுகமாக நடந்தேறியது. எதுவுமே என் அதிர்ச்சியை தாண்டி உள்ளே செல்ல முடியவில்லை.

—————–

வெகு நேரமாக சிந்தித்துக்கொண்டிருந்தேன். என்ன நடந்தது. சகித்துக்கொள்ள முடியாத சில நிமிடங்கள் சகஜமாக கடந்து செல்லும் அளவுக்கு என்னவிதமான உணர்வை அவள் கொடுத்தாள். அவள் என்மீது அன்பு வைத்திருக்கிறாள். நிச்சயமாக என்றென்றைக்குமாக என்னை கோபித்துக்கொண்டு செல்வதற்காக அந்தவார்த்தைகளை அவள் சொல்லவில்லை. அவள் எனது அட்டென்ஷனை தன்பக்கம் எந்த நிமிடம் வைத்துக்கொள்வதற்காக முயற்சிசெய்து கொண்டிருந்தாள் என்பதை அப்பட்டமாக என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால் அது என்ன விதமான உணர்வு. எப்பொழுதும் இரண்டு கண்கள் என்னை கண்காணித்துக்கொண்டிருப்பது போன்றதொரு டார்ச்சரான உணர்வு. அவள் ஒரு மணித்துளியும் என்மீதிருந்து அவளது பார்வையை விலக்கவில்லை என்பதை என்னிடம் விளக்க நினைக்கிறாள் என்பது எனக்கு நடுமண்டையில் அடிப்பது போல் நன்றாக உறைக்கிறது. அவளை நான் திட்டிக்கொண்டாவது நினைத்துக்கொண்டிருக்க வேண்டுமாம். அப்படி நினைக்காமல் போய்விட்டால் அது அன்பாகிவிடாது.

அவளையே ஒவ்வொரு நொடியும் நினைத்துக்கொண்டு தியானம்செய்து கொண்டிருக்க ‍வேண்டுமானால் என் அப்பா என் பெயரில் 2 கோடி ரூபாயாவது பேங்க் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும். சோறு என்று ஒன்றை தின்ன வேண்டும் என்றால் வேலை என்ற ஒன்றை செய்தாக வேண்டும் அல்லவா? வேலை என்ற ஒன்றை செய்தால் அவளையே நினைத்துக் கொண்டிருக்க முடியாதல்லவா? இதையெல்லாம் அவளிடம் சொன்னால் அவள் என்ன சொல்வாள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.

அது என் பிரச்னை இல்லை…………

————–

அதிகாலை வேளை…

தலையனைக்கு அருகில் உள்ள செல்போன் ஒலித்துக் கொண்டிருந்தது. அது அலாரமா அல்லது யாராவது என்னை அழைக்கிறார்களா? என்பதை மூளை கிரகித்து உணருவதற்குள் அது நின்று விட்டது. திடீரென்று ரத்தத்தில் ஒரு சுறுசுறுப்பும், சூடும் பரவியது. அய்யோ அது அவளாக இருந்தால்…… கடவுளே அது அவளுடைய இரண்டாவது அழைப்பாக இருந்தால்….. காலையிலேயே அரைமணி நேரம் பேசுவாளே…….

ஐயோ……. அது மூன்றாவது அழைப்பு. அது என் அருமைக் காதலிதான். கடவுளே…. கொலைகாரப் பாவி….. மனசாட்சி இல்லாதவனே….. உனக்கு ஒரே நேரத்தில் மூன்று காதலிகள் வாய்க்க…..

ஒருமணி நேரத்திற்குப் பிறகு, என்முடிகள் எல்லாம் குத்திட்டு நின்றன என்பதை என் அறை நண்பன் கூறிய பிறகுதான் கவனித்தேன். நல்ல வேலை செல்போனில் சார்ஜ் தீர்ந்துவிட்டது. அவள் கூறுகிறாள் அவளை நான் காதலிக்கவில்லையாம். அவள் மேல் எனக்குஅன்பில்லையாம். அவளை நான் ஒதுக்குகிறேனாம். என் அம்மா பார்த்து வைத்த பெண்ணை நான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேனாம். அப்படி ஒருவேலை என் அம்மா பெண் பார்க்கவில்லை என்றால், அவளே ஒரு சேட்டு பொண்ணாக பார்த்து சொல்கிறாளாம். அவளை நான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமாம். அவளை காதலிப்பது போல் நடிக்க வேண்டாமாம்.

அவள் பேசிக் கொண்டிருந்த பொழுது இடையே நான் ஒரே ஒருடயலாக் பேசிய நியாபகம் நன்றாக என் நினைவில் இருக்கிறது.

கந்தன் கருணை படத்தில் சிவாஜி (வீரபாகு) பேசிக் கொண்டிருந்த போது, இடை இடையே பயந்து கொண்டே சிவக்குமார் (முருகன்) வசனம் பேசுவது போல் அல்லாமல் நான் அந்த வசனத்தை மிகத் தைரியத்துடன் கூறினேன் என்பது என் நியாபகத்தில் மிக நன்றாக உள்ளது. நமது வாழ்க்கையின் தைரியமான தருணங்கள் நமது நியாபத்தில் இருப்பது சகஜம் தானே.

நான் இவ்வாறு கூறியிருந்தேன்….

“நான் உன்னை மிகமிக உண்மையாக காதலிக்கிறேன். என்னை நம்பு தயவு செய்து.”

அப்பொழுது தான் அவள் அழுதாள். நான் சிவாஜியை விட மிக நன்றாக நடிக்கிறேனாம். அந்த ஆண்டவன் என்னை சும்மா விடமாட்டானாம்.

அது என்னவோ உண்மைதான். அந்த ஆண்டவன் என்னை சும்மா விடுவதில்லை. அவர் கிரிக்கெட், புட்பால் விளையாட்டு போல திருவிளையாடல் விளையாடிக்கொண்டிருக்கிறார். அவரது சதுரங்கத்தில் அடிவாங்கும் காய்களாக இருப்பது யார். எங்கே கூறுங்கள் பார்க்கலாம் என்று யாராவது என்னிடம் கேட்டால், நான் மெதுவாக சிரித்துக் கொள்வேன். அந்த துர்பாக்கியசாலி வேறு யாராக இருக்க முடியும். என்னைத் தவிர…

அவள் மேலும் கூறினாள். எனக்கு குழந்தை பிறந்தால் தயவு செய்து அவளது பெயரை வைக்கக் கூடாதாம். அப்படி வைத்தது தெரியவந்தாள் என்னை போன மாதம் பிய்ந்து போன செருப்பால் அடிப்பாளாம். அதில் தயவு செய்து அடித்துவிடாதே என்றுஅவளிடம் (அவளை வெறுப்பேற்றுவதற்காக) கூறினேன். அதில் தான் அடிப்பேன் என்று பிடிவாதமாக மற்றும் ஒரு சின்ன சினுங்கலான சிரிப்புடன் கூறினாள். எனக்குத் தெரியும் அவளை எப்படி சிரிக்க வைப்பதென்று.

(ஆம் நான் செருப்படி வாங்கினால் அவளுக்கு சிரிப்பு வரும்)

அப்போதுதான் சார்ஜ் தீர்ந்து போனது.

அவள் கையில் மட்டும் இந்நேரம் அணு ஆயுதம் இருந்திருந்தால் அதை என்னை நோக்கி வீசியிருப்பாள் என்று என்னால் உறுதியாக கூற முடியும்……

அவளுக்கு வருங்காலத்தில் ரத்தக் கொதிப்பு சீக்கிரம் வந்து விடும் என்பதை இப்பொழுதே யூகித்து விட்டேன்… கடவுளே அவளது வைத்திய செலவுக்கு என்னை அலைய வைத்து விடாதே….

————–

சாய்ங்காலம் ஏழரைமணிக்கு கால் வரவில்லை என்றால் ஆச்சரியப்பட்டு போகிறார் என் உயரதிகாரி. என்ன இந்த உலகத்தில் ஒரே அதிசயங்களாக நிகழ்ந்து கொண்டிருக்கின்றன என பொதுப்படையாக அவர் பேசுவது எனக்கு புரியாது என்று நினைத்துக் கொள்வார் போல. அவருக்கும் காதலிகள் இருந்திருக்கலாம். அவரது அருமை மனைவியிடம் அவர் திட்டு வாங்குவதை நான் பலமுறை கேட்டிருப்பதால், அவருக்கு பல இளம் காதலிகள் இருக்கலாம் என அதிகாலை சூரியன் போல் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. காதலிகள் எப்பொழுதுமே அபாயமான தேவையாக இருக்கிறார்கள். அவர்களின் அருகாமையும், அவர்களின் பார்வையிலிருந்து பதுங்குவதும் மிக மிக அடிப்படைத் தேவைகளுள் ஒன்றாக இருக்கிறது.

ஒரு முரட்டு சிங்கம் போன்ற என் மேலதிகாரி, நான் ஒன்றும் முரட்டு சிங்கம் அல்ல என தனது கழுத்தில் போர்டு போட்டு தொங்க விட்டிருப்பது பளிச்சென்று தெரிகிறது. அல்லது அவரது நெற்றியை உற்று பார்த்தால் அதில் தெளிவாக எழுதியிருக்கும்.

“நான் ஒரு டப்பாசு” என்று

மணி 7.45

என் மேலதிகாரி கூறினார். உங்களுக்கு கால் வருகிறது, எடுத்து பேசிவிட்டு வாருங்கள். அவர் சொல்லவில்லை என்றால் நான் கவனித்திருக்க மாட்டேன். அவருக்கு அந்த அட்டென்ஷனை கொடுத்த புண்ணியவதி வாழ்க.

நான் எடிசனைப் போல என்னை மறந்து வேலை செய்து கொண்டிருந்தேன் என்பதை அவளுக்கு எப்படி புரிய வைக்கப்போகிறேன் என்ற கவலையுடன், கைப்பேசியை ஆன் செய்தேன். அவள்தான்…. ஆனால் பேசவில்லை……

நான் ஹலோ, ஹ‍லோ, ஹலோ. என்று 20 முறை கூற வேண்டுமாம். அதை அவள் கவனித்துக்கொண்டிருப்பாளாம். நான் இடையில் கட் பண்ணவும் கூடாது. அப்படி கட்பண்ணினால் திரும்ப அழைப்பு வரும். நான் வேலை செய்ய முடியாது. ஸ்விட்ச் ஆஃப்செய்தாலோ தொலைந்தேன். இரவு தூங்க முடியாது. அதனால் நான் தொடர்ச்சியாக 20 முறை ஹலோ….. ஹலோ….. என்று சீரியசாக குரலில் வேதனையுடன் சொல்லிக்கொண்டிருக்க வேண்டும். நான் அதிகமாக வருத்தப்பட்டதாக அவளுக்கு எப்பொழுது தோன்றுகிறதோ, அப்பொழுதுதான் அவள் பேசுவாள். அவள் சொல்லும் வரை ஹலோ சொல்ல எனக்கு சங்கடமாக இருந்தது. அதனால் நானும் நிறுத்திக் கொண்டு அமைதியாக இருந்தேன். அவளும் அமைதியாக இருந்தாள். 3 நிமிடங்களுக்கு பிறகு அவளாக ஆஃப் செய்தாள். எனக்குத் தெரியும் மீண்டும் 3 நிமிடங்களுக்குப் பிறகு கூப்பிடுவாள் என்று. ஏன் என்றால் அப்பொழுதுதான் நான் வேலை செய்ய உட்கார்ந்திருப்பேனாம். அப்பொழுது கூப்பிட்டால் நன்றாக வெறுப்பேற்றியது போல் இருக்குமாம். நான் பாத்ரூம் ஓரமாக அங்கேயே நின்று கொண்டிருந்தான். இன்னொருவன் செல்ஃபோனில் வகையாக திட்டு வாங்கிக் கொண்டு அங்கே வந்து கொண்டிருந்தான். என்னை பார்த்துக்கொண்டே திட்டு வாங்கிக்கொண்டிருந்தான். நான் பரவாயில்லை. குறைந்த பட்சம் தப்பித்துக் கொள்வேன்.

மீண்டும் அழைப்பு வந்தது. நான் உடனே அலைபேசியை ஆன்செய்தேன். அவள் சுதாரித்துக் கொண்டாள். இவன் தயாராக இருக்கிறான். இப்பொழுது வெறுப்பேற்ற முடியாது என்று நினைத்தவளாய் மீண்டும் செல்போனை அனைத்துவிட்டாள்.

நான் நிம்மதியாக சென்று வேலையை பார்த்தேன். ஆனால் அங்கு வேலை முடிந்துவிட்டிருந்தது. என் உயரதிகாரியன் பார்வையில் அந்த வார்த்தைகள் மிக நன்றாக தெரிந்தது.

“எப்பொழுதும் இதுதானே நடக்கிறது. ஏதோ இன்றைக்கு மட்டும் இது நடப்பது போல் பயந்து கொண்டே வருகிறாய்” என்று அவர் மனதுக்குள் நினைத்தது சந்திரமுகி ரஜினியைப்போல் எனக்குமிக நன்றாக கேட்டது.

——————

அதிகாலை வேளை…

நான் பாத்ரூமுக்குள் இருந்து வெளியே வரும் போது வெளியே நின்றிருந்த 2 பேரும் என்னை ஜென்ம விரோதி போல முறைத்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். காரணம்…. நான் கடந்த அரை மணி நேரமாக என் அருமைக் காதலியுடன் பேசிக்கொண்டிருந்தது குளிக்கும் அறையிலிருந்து என்பதுதான்…

அவள் கேட்கிறாள். நேற்று மாலை அலைபேசியில் அழைத்த போது ஏன் பேசவில்லை என்று. எனக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. நான் என்ன கூறினால் அவள் என்ன கூறுவாள் என்று எனக்கு மிக நன்றாகத் தெரியும். அவள் நன்றாக ரிகர்சல் பார்த்துவிட்டுதான் என்னிடம் பேசவே ஆரம்பிப்பாள். நான் ஒரு அப்பிராணியைப்போல் அவளிடம் மாட்டிக் கொள்வேன்.

அவளிடம் நான் இப்படி கூறியிருந்தாள், அவள் என்னிடம் எப்படி கூறியிருப்பாள் தெரியுமா?

அவள் : ஏன் நேற்று போனில் பேசவில்லை.

நான் : நீதான போன் செஞ்ச, ஏன் பேசல

அவள் : அதெல்லாம் எனக்குத் தேவையில்லை. நீ ஏன் பேசவில்லை.

நான் : போன் பண்ணவங்க தான் பேசணும்.

அவள் : அப்படி ஒண்ணும் எந்த சட்டமும் இல்லையே. நீ ஏன் பேசவில்லை.

நான் : நீ பேசுவண்ணு நான் வெய்ட் பண்ணினேன்.

அவள் : நான் பேசலைன்னா நீ பேச மாட்டியா? ம்….

நான் : அப்படியெல்லாம் இல்லை. நீ பேசுற வரை வெய்ட் பண்ணலாம்னுதான்…

அவள் : உன்னை யாரு வெய்ட் பண்ண சொன்னது.

நான் : யாருமில்லை. நானாதான் வெய்ட் பண்ணினேன்.

அவள் : உன்னையா….. யாரு வெய்ட் பண்ணச் சொனன்து.

நான் : கடவுளே இப்ப என்ன பண்ணணும்னு சொல்ற..

அப்பொழுதுதான் அந்த முதல் இளைஞன் கதவை தட்டியிருக்கிறான் போல. நான் கவனித்திருக்கவில்லை.

அவளது அடுத்த ஆயுதம் அழுகையாக வெடித்தது. அதை சகிக்கவே முடியாது.

அவள் : அப்ப நான் பேசுனா உனக்கு கடவுள கூப்பிடனும் போல இருக்கு இல்ல

நான் : ஐயோ அப்படியெல்லாம் இல்ல. ஏன் புரிஞ்சுக்கவே மாட்டேங்கிற. சரி நான் தெரியாம பேசாம இருந்திட்டேன் என்னை மன்னிச்சிரு

அவள் : ஏன் பேசலன்னு காரணம் கேட்டா ஏதேதோ காரணம் சொல்ற. நல்லா காரணம் சொல்ல கத்துகிட்ட.

நான் : இல்ல அப்படியெல்லாம் இல்ல.

அவள் : நீ உங்க அம்மா பாத்து வச்சிருக்கிற பொண்ணையே கல்யாணம் பண்ணிக்க
…………
…………
கத்திக்கு 2 பக்கம் தான் முனை உண்டு. ஆனால் என் காதலியின் பேச்சுக்கு 4 பக்கமும் கூர்மையான முனை உண்டு. தப்பிக்கவே வழியில்லை. என் மேல் ஏற்பட்ட பரிதாபம் காரணமாகவே அவர்கள் இருவரும் என்னிடம் சண்டை போடாமல் இருந்திருப்பார்கள் எனத் எனக்கு தெரிகிறது. அவர்கள் இருவரும் ஆளுக்கு 2 சிகரெட் என 4 சிகரெட்களை ஊதித் தள்ளியிருக்கிறார்கள் என நான் கண்டுபிடித்திருந்தேன்.
——————–
இன்று திருமணமாகி 15 வருடங்களுக்குப் பிறகும் அவள் என் அம்மா பார்த்து வைத்திருந்த அந்த மர்மப் பெண்ணுடன் ஒப்பிட்டுப் பேசியே என்னை டார்ச்சர் செய்கிறாள். நான் என் அம்மா பார்த்து வைத்திருக்கிற பெண்ணை கல்யாணம் செய்திருக்கலாமாம். அவளை கல்யாணம் செய்து கொண்டு அவளுக்கு பெரிய துரோகம் செய்து விட்டேனாம். அவள் என்மீது தொடுத்திருக்கு இந்த போர் முடிவடையப் போவதே இல்லை என்பதை நான் மிக கடைசியில் தான் புரிந்து கொண்டேன்.

அருஞ்சொற்பொருள் :

மிகக் கடைசியில் : இனி ஒரு பெண்ணும் ஏறெடுத்து பார்க்காத நிலை

Print Friendly, PDF & Email

1 thought on “மிகக் கடைசியில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *