மத்தியான வெயிலின் சூட்டிலிருந்து தப்பிக்க எண்ணி ஜன்னல் வழியே வீட்டுக்கூல் நுழைந்த காற்று ஹால் சுவரில் அலங்காரமாக மாட்டியிருந்த மயில்பீலிகளை அசைத்தது. உள்ளேயிருந்து என் மனைவியின் குரல் கேட்டது.
“ஏன்னா ! லீவு போட்டுட்டு உக்காந்து இருக்கறப்பவே பாங்குக்கு போயிட்டு வந்துடுங்கோ. இன்னும் எவ்ளோ நேரம் அந்த புஸ்தகத்துலேயே மூழ்கி கெடக்கறதா உத்தேசம் ?”
அஞ்சாம் கிளாஸ் பாடத்தின் கேள்விக்கு பதில் கண்டுபிடிப்பது பட்டம் பெற்ற பிறகு இத்தனை கஷ்டமா ? நானும் தேடிக் கொண்டேதான் இருக்கிறேன். என் செல்போன் அடித்துக் கொண்டே இருந்தது. ஏதோ ஞாபகத்தில் கவனிக்கவே இல்லை. எடுத்துப் பார்த்தேன். திருச்சியில் இருந்து என் நண்பன் சூரி.
“ஹலோ சூரி. என்னடா விசேஷம் ? இந்த மத்தியான நேரத்துல கூப்பிடுற ?”
“எப்போதும் போல செல்போனை மறந்து வச்சுட்டு கிளம்பி இருப்பியோன்னு நெனச்சு டைரக்டா ஆபீசுக்கு •போன் செஞ்சேன். நீ லீவுன்னு சொன்னா. அதான் செல்லுக்கு செஞ்சேன். என்ன விசேஷம் ? ஏன் உடனே அட்டெண்ட் செய்யவில்லை ? தூங்கிக்கிட்டு இருந்தாயா ?”
“இல்லேடா. சின்னவனுக்கு நாளைக்கு கடைசி பரீட்சை. அதான் நான் படிச்சுகிட்டு இருந்தேன்”
சூரி ஒரு நிமிடம் மௌனமாக இருந்தான்.
“என்னடா விஷயம் ? ஒண்ணும் பேசாம இருக்கே ?”
“அது.. வந்து.. ரங்கா.. உன் கிட்டே ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்”
“சொல்லு”
“சகுந்தலாவோட வீட்டையும் தோட்டத்தையும் வித்துட்டாங்க. அங்கே ஃப்ளாட் கட்டப் போறாங்களாம். அதனால வீட்டை இடிக்கப் போறாங்க”
“என்னடா சொல்றே?”
“ஆமாம் ரங்கா. நீ காவேரிக் கரையிலே கடைசி நாளைக் கழிக்க ஒரு வீடு வேணும்னு சொல்லிகிட்டு இருந்தியே. உங்காந்தான் கையை விட்டுப் போயிடுத்து. இதிலே சின்ன்ச் சின்ன அபார்ட்மெண்ட்ஸ் இருக்கும்னு சொல்றாங்க. நம்ம பட்ஜெட்டுக்குள் வரும். அதுவும் உன் சகுந்தலா வீடு. அதான் சொல்லலாம்னு நெனச்சேன்”
“சரிடா சூரி. நான் யோசிச்சு அப்புறம் பேசறேன்”
ஃபோனை வைத்த பிறகு அப்படியே சிலை போல நின்று கொண்டு இருந்தேன்.
“ஏன்னா இப்படி பிரமை புடிச்ச மாதிரி நிக்கறேள் ? என்ன ஆயிடுத்து?”
“ஒண்ணுமில்லே பூமா.. ஸ்ரீரங்கத்துல புது அபார்ட்மெண்ட் ஒண்ணு வரதாம் சூரி சொன்னான். உடனே போய்ப் பாத்தா முதல்ல புக் செஞ்சுக்கலாம் இல்லையா. அதான்”
“உடனே கிளம்பணும்னா இப்ப்வேவா? பாங்குக்குப் போயிட்டு வந்துடலாமோல்லியோ ? அதுக்கு நேரமிருக்கோல்லியோ ? ”
“கடுப்படிக்காதே..இப்பவே ஒண்ணும் போகப்போறதில்ல. நாளைக்குப் கிளம்பிப் போய் பாத்துட்டு வந்துடறேன்
“ஏன் கோச்சுக்கறேள் ? பாங்கு வேலையை இன்னிக்கே முடிச்சாகணும்னு நேத்திக்கு நீங்கதானே சொன்னேள் ?” பூமாவின் குரலில் ஒரு தழுதழுப்பு தொரிந்தது. அவள் கையை அழுத்தியதில் அமைதியானாள்
“இதோ.. இப்பவே கிளம்பிட்டேன்”.
“சரி சரி.. ஜாக்ரதையா போயிட்டு வாங்கோ”
அடுத்த நாள் பஸ்ஸில் ஏறி திருச்சியில் சூரியின் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தேன்.
“என்னடா இன்னைக்கே வந்துட்டே ! இன்னும் அந்த வீட்டை இடிக்கக் கூட ஆரம்பிக்கலையே”
“நான் ஜஸ்ட் போயி அந்த இடத்தைப் பாத்துட்டு வரேன் சூரி”
“அங்கே யாருமே இருக்க மாட்டாளேடா. சகுந்தலா எங்கேயோ வெளிநாட்டுலே இருக்கறதா கேள்வி. அவ அப்பா போயி பல வருஷம் ஆச்சு. வீடுதான் அங்கங்கே இடிஞ்சு கிடக்கு. சரி சரி குளிச்சு சாப்பிட்டுவிட்டு போ”
“பரவாயில்ல.. சும்மா பாத்துட்டு வரேன். எனக்குத் தெரிஞ்ச இடம்தானே”
சூரி சிரித்தான். “ஆமாமா.. உனக்குத் தெரியாத இடமா?”
அதுதானே.. எனக்குத் தெரியாத இடமா ?
கிளம்பினேன். அம்மா மண்டபத்துக் காவிரியில் கரை ஓரமாக லேசாக ஓடிய தண்ணீரில் இரண்டு பேர் பெரிய பாத்திரங்களைக் கழுவிக் கொண்டு இருந்தார்கள். இந்த இடத்தில் மேலிருந்து தொபுக்கடீர் என்று தண்ணீரில் குதித்து நீந்திய காலம் நினைவுக்கு வந்தது. ஸ்ரீரங்கத்தின் முகம் மாறி இருந்தது. தாத்தாசாரியாரின் மாந்தோப்பு முழுவதும் மரத்துக்கு பதிலாக கட்டிடங்கள். திருவானைக்காவல் குளக்கரையில் இருந்த ஐயர் காபி ஹோட்டல் காணாமல் போயிருந்தது. அன்ன காமாட்சி கோயிலின் வாழைத் தோப்புக்கு மேலாக ஒரு புது பாலம் இருந்தது. வானை முட்டிக் கொண்டு நின்ற தெற்கு கோபுரத்தை நிமிர்ந்து பார்த்தபடி மேற்கு அடையவளைஞ்சானைக் கடந்து மேலூர் ரோட்டில் நடந்தேன். வயலும் வயல் சார்ந்த பகுதியாகவும் இருந்த இடங்கள் கான்கிரீட்டும் அது நிரம்பிய காடாகவும் மாறி இருந்தன. தெப்பக்குளத்தைச் சுற்றி அடுக்கு மாடி வீடுகள்.
அதோ தெரியுதே ..அதுதான்.. அங்கேதான் என் மார்புக்குள் ஏதோ ஒரு ஓட்டப்பந்தயம் நடந்தது. தோட்டமெல்லாம் மரங்களும் புதர்களுமாக அடர்ந்திருக்க நாயுடு பங்களா தெரிந்தது. ஒரு பெரிய பலகையில் குடியிருப்புக் கட்டிடங்கள் வரப்போகும் அறிவிப்பு இருக்க இரும்பு கேட் பூட்டப்படாமலே இருந்தது. நான் முன்னோக்கி நுழைய என் மனம் பின்னோக்கி ஓடி இருபது வருடங்களைக் கடந்தது.
திருச்சி சந்தானகோபால ஐயங்காரின் இருபது வயது ரங்கராஜன் என்கிற, கல்லூரியில் கடைசி வருடம் படிக்கும் எனக்கும் ஸ்ரீரங்கத்தின் விரல் விட்டு எண்ணக்கூடிய பணக்காரர்களில் ஒருவரான ஸ்ரீராமுலு நாயுடுவின் மகளான 19 வயது சகுந்தலாவுக்கும் தெய்வீகக் காதல் இரண்டு வருடமாக அம்மா மண்டபத்திலும், கொள்ளிடம் வண்ணான் படித்துறையிலும், உச்சிப் பிள்ளையார் கோவில் படிக்கட்டிலுமாக வளர்ந்து கொண்டே இருந்தது. அவள் அப்பாவுக்கு விவரம் தெரிந்தால் என் உடம்பு ஓயாமாரி சுடுகாட்டில் புகை மண்டலத்தில் சாம்பலாக இருக்கும் என்பது தெரிந்தும் அவள் என்னைப் பார்த்து சிந்தும் புன்னகைக்காகவே பயந்து பயந்து அவளைக் காதலித்துக் கொண்டிருந்தேன். அந்த மஞ்சள் முகத்தின் பளபளப்பில் குளித்தலை வாழைப்பழம் கூட அவமானப்படுமே !
அன்று..
என் கல்லூரி வாழ்க்கையின் கடைசிப் பரீட்சையை எழுதி விட்டு சக்குவை மாம்பழச்சாலை அனுமார் கோவில் வாசலில் சந்தித்தேன்.
“ரங்கா.. பரீச்சை நல்லா எழுதினியா ?”
காவிரிப்ப்பாலத்தில் இருந்து வீசிய காற்றில் அவள் தாவணி இடுப்பில் இருந்து விலகி பறக்க தெருவில் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று தடுமாறி பின் சீறிப் பறந்தது.,
“நன்னா எழுதிருக்கேன். எல்லாம் பெருமாள் பாத்துப்பார். முதல்ல நீ தாவணியை ஒழுங்கா சொருகிக்கோ”
அவள் முறைத்தபடி “அது சரி. இப்போ அவசரமா எதுக்கு என்னைப் பாக்கணும்னு சொன்னே ?” என்றாள்.
“நாளைக்கு காலம்பர பம்பாய் கிளம்பறேன். உன் கிட்ட ஏற்கனவே சொல்லி இருந்தேனே ! மறந்து போயிட்டியா ?”
அவள் முகம் ஃப்யூஸ் போன பல்பாக மாறியது.
“என்ன சக்கு ? ஏன் டல்லா ஆயிட்டே? ”
“போடா.. எனக்கு என்னமோ மாதிரி இருக்கு. நீ எப்போ திரும்பி வருவே?”
“அண்ணா ஆத்துக்கு போறேன். அங்கே வேலை கிடைக்கறதான்னு பாக்கணும். கிடைச்சதும் இங்கே திரும்பாம வேறே எங்கே போகப்போறேன் ? உன்னைக் கல்யாணம் செஞ்சுக்க எப்படியும் திரும்பி வரனுமில்ல”
அவள் காற்றில் பறந்த தாவணியைப் பிடித்துக் கொண்டு தூரத்தில் தெரிந்த மலைக்கோட்டையைப் பார்த்தாள்.
“நான் அதிக நேரம் இங்கே நின்னு பேசிகிட்டு இருக்க முடியாது. யாராவது பாத்தாலும் வம்பு பேசுவாங்க. நீ வீட்டுப் பக்கம் வந்தா தோட்டத்துல உக்காந்து பேசலாம் இப்போ வரியா ?”
நாங்கள் பழக ஆரம்பித்து வெகு நாட்களாகியும் எப்படி எங்கள் காதலை இன்னும் யாருக்கும் தெரியாமல் மறைத்தே வைத்திருக்கிறோம் எனும் ரகசியம் எங்களுக்கே பிடிபடவில்லை. . நான் ஒரு பயந்தாங்கொள்ளி என்பதாலும் சகுந்தலா வீட்டுக்கு அடங்கிய பெண் என்பதாலும் நாங்கள் எப்போதாவது பேசிக்கொண்டிருக்கும்போது யாராவது பார்த்தாலும் தப்பாக நினைப்பதில்லை. ஆனாலும் சக்குவின் அப்பாவுக்கு அவள் நடவடிக்கைகளில் எங்கோ சந்தேகப் புகை வாடை வந்திருப்பது எங்களுக்குப் புரிந்திருந்தது. அது என் மீதா என்பது எங்களுக்கே தெரியாது. ஆனாலும் எச்சரிக்கையாகவே இருந்தோம். சூரி போன்ற நண்பர்களுக்கு தெரிந்தாலும் அவர்கள் மூச்சு விடுவதில்லை.
பம்பாய் கிளம்பும் முன் சக்குவின் மஞ்சள் டாலடிக்கும் முகத்தை கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று எனக்குள் ஆடிப்பெருக்கின் வெள்ளம் போல ஒரு ஆசை இருந்தது. அவள் கூப்பிட்டதும் உடனே அவளுடன் அவள் வீட்டு தோட்டத்துக்குப் போய்விட்டேன். மாலை நேரத்தில் யாருமில்லாத தோட்டத்தில் சுவர் ஓரத்து மாமரத்து நிழலில் இருவரும் உட்கார்ந்திருந்தோம். மஞ்சள் சூரியனின் வெளிச்சம் மாமரத்தின் மேல் விளக்கு போட்டது போல விழுந்து கொண்டிருந்தது.
அவள் வீட்டிலிருந்து எடுத்துக் கொண்டு வந்த முறுக்கு பொட்டலமும் தண்ணீர் பாட்டிலும் ஒரு சாக்லேட் பெட்டியும் அருகே இருந்தன.
“என்ன இருக்கு இதிலே ? சாக்லேட்டா ?”
“ஊஹூம். மயில் இறகு”
“எதுக்குடி அது?”
“அது புத்தகத்துலே வச்சா குட்டி போடுமாம். இது புது சாக்லெட் பெட்டி. இதுல வச்சா என்ன ஆகும்னு பாக்கறதுக்காக வச்சிருக்கேன்”
“நீ இன்னும் எலிமெண்டரி கிளாசிலே இருந்து வெளியே வரவே இல்லையா” தலையில் தட்டிக் கொண்டேன்.
அவள் என்னைப் பார்த்து சிரித்தாள்.
ஒரு கையில் அந்த மயிலிறகை எடுத்து ஸ்டைலாக அவள் கன்னத்தில் வருடினேன்.
“இப்படி தடவினதாலே இந்த மயிலிறகுக்கு ஒரு ஸ்பெஷல் அந்தஸ்து வந்துடுதது சக்கு… நோக்கு தெரியுமாடி.. விஞ்ஞானிகள் எல்லாம் காலப்பெட்டகம் அப்படின்னு புதைச்சு வைப்பாளாம். ரொம்ப முக்கியமான வஸ்து எதையவது அதுக்குள்ளே வச்சிருப்பாளாம். எல்லா காலத்துக்கும் அது ஒரு சாட்சி மாதிரி இருக்குமாம். நம்ம காதலுக்கும் ஒரு காலப்பெட்டகம் வேணுமின்னு நெனச்சுண்டேன்.”
அவள் என்னைப் புரியாமல் பார்த்தாள்.. மரத்தின் மேல் தவிட்டுக் குருவிகள் கீச்கீச்சென்று கூவிக்கொண்டிருந்தன.
“இதுதான் நம்ம காதலுக்கு சாட்சி” என்றபடி அந்த மயிலிறகை சாக்லேட் பெட்டிக்குள் வைத்தேன்.
“இதை ஒரு காலப் பெட்டகம் போல வைக்கப் போகிறேன். என்னைக்கும் இது நம்ம காதலைச் சொல்லும்”
“என்ன செய்யப்போறே ரங்கா?”
நான் அந்த சுவரில் ஏறி பெரிய மாமரத்தில் படர்ந்திருந்த கொடியை விலக்கினேன். அதன் பின் ஒரு பொந்து இருப்பது தெரியும். அது ரொம்ப பாதுகாப்பானது. மழையோ பனியோ போகாது.
“இதோ இதுக்குள்ளே வைக்கிறேன். நம்ம கல்யாணம் முடிஞ்சு வந்து இதை எடுப்போம். அன்னைக்கு இதை எடுத்து இதே மாதிரி உன் கன்னத்துல இதாலே நான் தட்வுவேன்.”
அவள் என்னையே பார்த்துக் கொண்டு இருந்தாள். நான் அவள் முகத்தையே பார்த்தேன். மஞ்சள் கன்னத்தில் இருட்டு பரவியது. நிர்மலமான வானத்தை மேகம் மூடியது.
“அப்படி ஒரு வேளை நாம பிரியற மாதிரி ஆயிட்டா என்னைக்காவது நான் வந்து இதை எடுத்துண்டு போயி நம்ம ஞாபகார்த்தமா என்கிட்டே வச்சுப்பேன்”
“அப்படி சொல்லாதே ரங்கா. நாம நிச்சயம் கல்யாணம் செஞ்சிக்குவோம்”
நான் இறங்குவதற்கு வசதியாக பிடித்துக் கொள்ள சகுந்தலா என்னைப் பார்த்து கையை நீட்டினாள்.
அப்போது எங்கிருந்தோ “ராஸ்கல். யாருடா அது ? ” என்று ஒரு கர்ஜனை எழுந்தது.
சக்குவின் அப்பாவும் அவர் எடுபிடிகள் இரண்டு பேரும் தூரத்தில் வருவதைப் பார்த்ததும் அங்கே இருந்து சுவர் வழியாக வெளியே தாவிக் குதித்து ஓடி விட்டேன். தயிர் சாதத்தில் வளர்ந்த என் உடம்பு அவ்ர்களின் ஒரு அடியைக் கூட தாங்காது. அன்று ராத்திரி பயந்து போய் சூரி வீட்டில் தங்கினேன். அடுத்த நாள் பம்பாய் கிளம்பி விட்டேன். .அங்கே இருந்து பலமுறை முயற்சி செய்தும் யார் மூலமாகவும் எந்த விவரமும் தெரியவில்லை.
சில காலம் கழித்து விசாரித்தபோது சக்குவுடன் கூட இருந்தது யார் என்று அவள் தெரிவிக்காமல் இருந்து விட்டாள் எனபதும் ,சக்குவின் அப்பா அந்த விஷயம் வெளியே தெரிந்தால் அசிங்கம் என்று நினைத்து சக்குவை அவள் மாமனுக்கே கல்யாணம் செய்து கொடுத்து விட்டதாக சூரி உளவறிந்து சொன்னான். காலத்தின் ஓட்டத்தில் எனக்கும் கூட கல்யாணம் ஆனது. ஆனாலும் அந்த மயிலிறகு என் மனதை தடவிக் கொண்டே இருந்தது. இப்போது சகுந்தலாவின் வீடு இடிக்கப் படப்போகிறது என்று தெரிந்ததும் என் உடமையை எடுத்துக் கொள்ள வந்து விட்டேன். அவள் அப்பா இறந்து விட்டார் என்று தெரியும். எங்கோ வெளிநாட்டில் இருக்கும் சகுந்தலா இதை எல்லாம் மறந்து போய் வாழ்க்கையின் வேகத்தில் கலந்திருப்பாள். அந்த நாளும் அந்த மயிலிறகின் ஸ்பரிசமும் எனக்குள் இருப்பதைப் போல எல்லா காதலர்களுக்கும் இருக்குமா என்ன ?
இதோ என் சக்குவுடன் நான் அமர்ந்து இருந்த இடம்.
அங்கேயே நின்றபடி மாமரத்தையும் அதில் அடர்ந்து மூடிக் கிடந்த கொடியையும் பார்த்தேன். எல்லாமே இன்னும் அப்படியேதான் இருக்கு. இதோ நான் சாக்லேட் பெட்டியை வச்சதும் கீழேயிருந்து சக்கு கையை நீட்டியது நேற்று நடந்தது போலவே இருந்தது. என்ன ஆகியிருக்கும் ? மெல்ல உடைந்த ஓரச்சுவரில் நின்றபடி மரத்தில் படர்ந்திருந்த கொடியை நகர்த்தி பொந்துக்குள் பார்த்தேன். எத்தனை வருடங்கள் போய் விட்டன. இன்னும் அது அப்படியே இருக்குமா? கையை விட்டு தடவியபோது…
இருந்தது.
உள்ளே மங்கிய வெளிச்சத்தில் அது தெரிந்தது. அந்த சாக்லேட் பெட்டி.
“இந்த பங்களா உடைஞ்சு போயிடும். அதோட இந்த மரமும் கொடியும் அழிஞ்சு போயிடும். ஆனா என் முதல் காதலின் சாட்சியா இருந்த மயிலிறகு என்னுடன் இருக்க வேண்டும். சக்கு கிட்டே சொன்னது போல அதை என்னைக்கும் அழிய விட மாட்டேன். அவள் இப்போது எங்கே இருக்கிறாளோ.. என்ன நிலையோ.. ஆனால் நான் என் காதலின் சின்னத்தை என்னுடன் கொண்டு போகப் போகிறேன்”
மெதுவாக கையை நீட்டி அந்த சாக்லேட் பெட்டியை எடுத்தேன். கையெல்லாம் துரு ஒட்டிக் கொண்டிருந்தது. மெல்ல காலை ஊன்றி சமாளித்தபடி பெட்டியை லேசாக தட்டி விட்டு மூடியைத் திறந்து அதன் உள்ளே இருந்ததை எடுத்தேன்.
வண்ணங்கள் லேசாக மங்கி இருந்தபோதும் அங்கங்கே உதிர்ந்து இருந்தபோதும் லேசான தென்றலில் அந்த மயிலிறகு அசைந்து ஆடியது. கண்ணில் மெல்ல நீர்ப்படலம் திரை போட அதை பெட்டியில் வைத்துக் கொண்டு இறங்க வேண்டி பிடிப்புக்காக கையை கீழே நீட்டினேன்.
என் கையை இன்னொரு கை பிடித்தது.
குனிந்து பார்த்தேன்.
முன் நெற்றியில் நரையோடி இருக்க, காட்டன் புடவையில் தடித்த ஃப்ரேம் போட்ட மூக்குக் கண்ணாடிக்குள் ஈரமான கண்களுடன் …
சகுந்தலா !