நான் கன்னத்தைத் தடவிப் பார்த்தேன்.
‘ஏன் வலிக்கவில்லை?’
‘என்கிட்ட வேண்டாம்’ என்பது போல் அவள் என்னை முறைத்தபடி நகர்ந்தாள். நல்ல காலம் கன்னத்தில் அறையவில்லை. அவள் என்னைப் பார்த்த பார்வை கன்னத்தில் அறைந்தது போல இருந்தாலும் ஏனோ எனக்கு அது வலிக்காத ஒருவித சுகத்தைத் தந்தது.
நான் என்னை மறந்து அவளைப் பார்த்தபடியே நின்றதை அவள் கவனித்திருக்க வேண்டும். அதனால்தான் இந்த முறைப்போ என்று நினைத்தேன். நாகரிகம் கருதி நான் அவளை அப்படி வைத்தகண் வாங்காது ஒரேயடியாகப் பார்த்திருக்கக்கூடாது என என்னை நானே சமாதானப் படுத்திக் கொண்டேன். ஆனாலும் என்ன செய்வது, பொம்மைகளுக்கு நடுவே பொம்மைபோல நின்ற, பிரமிக்கத்தக்க அவளது அழகுதான் என்னை அப்படி வெறித்துப் பார்க்க வைத்தது.
உள்ளக கணக்குப் பரிசோதனைக்காக நாங்கள் அந்த நிறுவனத்திற்கு அடிக்கடி செல்வதுண்டு. எங்களுக்காகத் தனியாக ஒரு தடுப்பறையை அவர்கள் ஒதுக்கித் தந்திருந்தார்கள். ஆடைகள் தயாரிக்கும் நிறுவனம் என்பதால் முன்பக்கத்தில் கண்ணாடி யன்னல்கள் ஓரமாக அழகான ஆடைகள் அணிந்த அலங்காரப் பொம்மைகளை வைத்திருந்தார்கள்.
அந்தப் பொம்மைகளுக்கு நடுவேதான், ஆடை மாற்றிக் கொண்டிருந்த அவள் தற்செயலாக எனது கண்ணில் பட்டாள். புதியவளாக இருக்கலாம், அவளும் ஒரு அழகிய பொம்மைபோலக் கண்ணாடி யன்னலுக்கு வெளியே எதையோ பார்த்துக் கொண்டு நின்றதால், முதலில் நான் அதில் கவனம் செலுத்தவில்லை. அவள் அசைந்த போதுதான் அவள் நிஜம் என்பதைப் புரிந்து கொண்டேன். புதிதாக அவர்கள் அறிமுகப் படுத்தும் ஆடைகளை இப்படித்தான் அடிக்கடி பொம்மைகளுக்கு மாற்றிக் காட்சிக்கு வைப்பார்கள். அன்று அதைத்தான் அவள் செய்து கொண்டிருந்தாள், அதாவது அலங்காரப் பொம்மைகளுக்கு ஆடை மாற்றிக் கொண்டிருந்தாள்.
அவளது அழகை நான் ரசித்தேன். இவ்வளவு கொள்ளை அழகை எங்கிருந்து இவள் பெற்றாள்? சொற்ப நேரம் பார்த்த அவளது அசைவுகள் ஒவ்வொன்றும் எனது மனத்திரையில் பதிந்து என் உணர்வுகளைத் தூண்டி எனக்குள் என்னவோ செய்தது.
அன்று மதியம் உணவருந்திய பின் ஓய்வெடுக்கும் அறையில் நாங்கள் சற்று நேரம் கரம் விளையாடினோம். தண்ணீர் எடுப்பதற்கு தற்செயலாக உள்ளே வந்தவள், அருகே வந்து எங்கள் ஆட்டத்தைப் பார்த்து ரசித்தாள்.
‘ஹாய். ஐயாம் தீபா’ என்று ஆங்கிலத்தில் தன்னை அறிமுகம் செய்தவள், ‘நானும் உங்களோடு விளையாட்டில் பங்குபற்றலாமா?’ என்று கேட்டாள்.
‘கோலக் குயிலோசை உனது குரலினிமையடீ!’ சட்டென்று பாரதியின் கவிதை வரிகள் ஞபகம் வந்தது. இவளுடைய நடையுடை பாவனையைப் பார்த்தபோது பாரதியின் புதுமைப் பெண்ணாக இவளும் இருப்பாளோ என்று எண்ணத்தோன்றியது.
ஆட்டம் நிறைவு பெற்றிருந்ததால் எனக்கு எதிரே இருந்தவள் எழுந்து செல்ல, அந்த இடத்தில் அமர்ந்து எனது சகாவாக அவளும் ஆடினாள். கரம்போட்டில் அவளது விரல்கள் நடனமாடியபோது அந்த விரல்களின் நளினத்தை ரகசியமாக ரசித்தேன்.
அதன்பின் அடிக்கடி அவளைச் சந்திக்கச் சந்தர்ப்பத்தை நானே அவளுக்குத் தெரியாமல் உருவாக்கிக் கொண்டேன்.
ஒருநாள் அழகான ஒரு இளைஞனுடன் அவள் ‘ஜோர்க்டேல் மோலில்’ கதைத்துக் கொண்டு நின்றதை, அவர்களைக் கடந்து போகும் போது தற்செயலாகக் கண்டேன்.
சற்றும் எதிர்பாராமல் என்னைக் கண்டதும் அவளது முகத்தில் கலவரம் தெரிந்தது. நான் எதுவும் தெரியாத மாதிரி மெல்லியதாக ஒரு புன்னகையை உதிர்த்து விட்டு மெல்ல நகர்ந்தேன்.
யாராக இருக்கும், அவளுடைய அழகுக்கு ஏற்றமாதிரி அழகான ஒருவனைத் தேடிப் பிடித்து விட்டாளே, ஜோடிப் பொருத்தம் நன்றாக இருந்தாலும் மனதுக்குள் சற்றுப் பொறாமையாக இருந்தது.
மறுநாள் மதியம் சாப்பிட்டபின் ஓய்வெடுக்கும் அறையில் தங்கி இருந்த போது, அவள் வந்தாள்.
‘என்ன நேற்று உங்களை மோல்ல பார்த்தேன், நீங்க அடிக்கடி அங்கு வருவீங்களா?’ என்றாள்.
‘இல்லை எப்போதாவது, தேவை என்றால் அங்கு போவேன்’ என்று சொன்னேன்.
சற்று நேரம் தயங்கியவள், ‘நேற்று என்னோட கதைத்துக் கொண்டிருந்தவர் முன்பு என்னோடு ஒரே இடத்தில வேலை செய்தவர்’ என்றாள்.
‘அப்படியா, மகிழ்ச்சி’ என்றேன்.
‘அதிலே மகிழ்ச்சி ஒன்றும் இல்லை, அவருடைய தொல்லை தாங்க முடியாமல்தான் அந்த வேலையை விட்டு விலகினேன், எப்படியோ நேற்று என்னைக் கண்டு பிடித்துவிட்டார்’ என்றாள்.
நான் எதுவும் பேசவில்லை. மௌனமாக இருந்தேன்.
‘மனம் விரும்பவில்லை – சகியே, மலர் பிடிக்கவில்லை
குண முறுதி யில்லை – எதிலும், குழப்பம் வந்ததடீ!’
‘எனக்கு அவனைப் பிடிக்கவே இல்லை, ஐ ஹேற்கிம், நேற்று முடிவாக அவனிடம் சொல்லிவிட்டேன்!’ என்றாள்.
‘இதையேன் இப்ப எனக்குச் சொல்கிறாய்?’ என்பது போல நான் அவளைப் பார்த்தேன். இவர்களுக்குள் வெறும் ஊடல் தான் நடக்கிறது என்றுதான் நான் முதலில் நினைத்தேன்.
‘ஏனோ தெரியவில்லை, என்னுடைய மனதில் இருப்பதை எனக்கு நம்பிக்கையான யாருடனாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் போல இருந்தது, அதுதான் சொன்னேன்’ என்று சொல்லிச் சமாளித்தாள்.
எனக்குள் மனக் குழப்பம், இவள் ஏன் என்னிடம் இதைச்சொல்ல வேண்டும்?
அன்று காதலர் தினம்.
வேலைக்குச் சென்றேன். ‘குட்மோணிங்’ சொன்னாள், நானும் பதிலுக்குச் சொன்னேன்.
அவளைக் கடந்து செல்லும் போது, அவளது மேசையில் அழகிய ரோஜாப் பூவொன்று நீண்ட தண்டுடன் இருப்பதைக் கவனித்தேன்.
ஆனால், அன்றலர்ந்த இந்த ரோஜாவிற்கு முன் நான் எம்மாத்திரம் என்று வெட்கப்பட்டதோ என்னவோ, மேசையில் இருந்த பொலித்தீன் கண்ணாடிப் பேப்பருக்குள் நிஜமான ரோஜா ஒளித்திருந்து மெல்ல எட்டிப் பார்த்தது.
இப்பொழுதெல்லாம் காதலர்கள் காதலர்தினத்திற்காகக் காத்திருப்பது முக்கியமானதொரு நிகழ்வாகப் போய்விட்டது. பெற்றோர்களின் கட்டுப்பாட்டைக் கடந்து, எந்த ஒரு பயமும் இல்லாமல் தனக்கு விருப்பமான ஒருவருக்கு தன் மனதில் உள்ளதைச் சொல்லிவிடக் கூடியதொரு தினமாகக் காதலர்தினம் இருக்கின்றது. அதுமட்டுமல்ல, சொல்லாத காதலை, அதாவது அனேகமான நட்புகள் அவர்களை அறியாமலே காதலாக உருவெடுத்ததை உறுதிசெய்ய இந்தத் தினம் தான் மிகவும் உதவியாக இருக்கின்றது.
இவளது அழகுக்குத் தங்கள் காதலைச் சொல்ல யாராவது இங்கேயே காத்திருந்திருப்பார்கள். அவர்களில் யாராவது காலையில் முதல் வேலையாக இவளுக்கு இந்த ரோஜாப்பூவைக் கொடுத்திருக்கலாம் என நினைத்தேன். யார் அந்த அதிஷ்டசாலியோ தெரியாது, மயக்கும் அவளுடைய அழகிற்குச் சமர்ப்பணம் செய்ய இன்னும் எத்தனை போர் காத்திருக்கிறார்களோ தெரியவில்லை!
‘முத்தில் மோகனப் பல்லெடுத்து
முழுமதியென்ன முகமெடுத்து
கத்தும் குயிலின் குரலெடுத்த – இந்த
சித்திரப்பாவை எனை என்செய்தாள்?’
வேலையில் கவனம் செலுத்த முடியாமல் கல்லூரி நாட்களில் கொப்பியில் கிறுக்கி வைத்த கவிதை வரிகள் மீண்டும் நினைவுக்கு வந்தது. என்னை ஏன் இந்த சித்திரப்பாவை இப்படிச் சித்திரவதை செய்கிறாள்?
அவளிடம் என்னவென்று சொல்ல முடியாத ஏதோ ஒருவித கவர்ச்சி என்னைக் கவர்ந்திழுப்பதை உணர்ந்தேன். மனதைக் கட்டுப்படுத்தி வேலையில் கவனத்தைச் செலுத்த முயற்சி செய்தேன். நிழல் தட்டுவது போல இருந்ததால், சிந்தனையில் மூழ்கிப்போன நான் சட்டென்று திரும்பிப் பார்த்தேன். என் பின்னால் அவள் நின்றாள்.
நான் திரும்பிப் பார்த்ததும் அவள் அருகே வந்து நின்றாள்.
‘ஹப்பி வலன்ரைன்’ என்றாள் புன்னகைத்தபடி!
நான் ஒரு கணம் அதிர்ந்து போனேன், ஆனாலும் சமாளித்துக் கொண்டு,
‘சேம் ரு யூ, ஹப்பி வலன்ரைன்’ என்றேன்.
‘அதை சிரிச்சுக் கொண்டு சொன்னால் என்னவாம்?’ என்று செல்லமாகச் சொன்னவள் சட்டென்று பின்னால் மறைத்து வைத்திருந்த ஒரு ரோஜா மலரை என்னிடம் நீட்டினாள்.
காலையில் அவளது மேசையில் தூங்கி வழிந்த அதே ரோஜாதான்!
நான் சற்றும் எதிர்பார்க்காத ஒன்று, என் கண்முன்னால் நிகழ்ந்த போது ஒரு கணம் என்ன செய்வது என்று தெரியாமல் உறைந்து போய் நின்றேன். மறுகணம் என்னைச் சுதாரித்துக் கொண்டேன். ‘தயங்காதே, சீக்கிரம் வாங்கிவிடு’ என்று உள்மனசு ஆசை காட்டியது.
‘எனக்கா?’ ஆச்சரியம் தாங்காமல் எழுந்து தயக்கத்தோடு கையை நீட்டினேன்.
‘ஆமாம், திஸ் இஸ் போ யூ, வித் லவ்’ என்றாள்.
சொல்லிவிட்டு நிமிர்ந்து என் கண்களைப் பார்த்தாள். அவளது கண்களில் காதல் ஏக்கம் தெரிவதை அவதானித்தேன்.
‘அன்று என்னைப் பார்த்த பார்வையிலேயே எனக்குப் புரிஞ்சு போச்சு!’ என்றாள்.
‘உங்க வீட்டிலே மறுப்பு சொல்ல மாட்டாங்களா?’ இந்த நாட்டில் இதெல்லாம் சகஜம்தான், ஆனாலும் அவளிடம் கேட்டேன்.
மூத்தவர் சம்மதியில் வதுவை
முறைகள் பின்பு செய்வோம்
காத்திருப் பேனோடி இதுபார்
கன்னத்து முத்த மொன்று!
அக்கம் பக்கம் பார்த்துவிட்டு அருகே நெருங்கிவந்து கன்னத்தில் முத்தம் ஒன்றைப் பதித்துவிட்டு ‘அனிதா யூ ஆ ஸோ ஸ்மாட், ஐ லவ்யூ’ என்றாள் தீபா.
நன்றி: தினக்குரல்
‘அனிதா யூ ஆ ஸோ ஸ்மாட், ஐ லவ்யூ’ என்றாள் தீபா.
சிகப்புப் பாவாடை மற்றும் தொட்டால் சுடுவது, அடுத்த வீட்டுப் பையன் ஆகிய ‘லெஸ்பியன்’ வகைக் கதைகளின் பட்டியலில் இந்தக் கதையும் சேர்கிறது.
எனி வே… வித்தியாசமான கதையாடல். எதிர் பாரா முடிவு.
வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.
ஜூனியர் தேஜ்