மனசே… மனசே… கதவைத்திற!

2
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: காதல்  
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 19,947 
 
 

அனு, ஒரு முடிவுக்கு வந்து விட்டாள்… இந்த வேதனையை சுமக்க மனதிலும், உடலிலும் தெம்பில்லை எனத் தோன்றியது. உண்மையை, நந்துவிடம் சொல்லி விட்டால், நிம்மதியாகவாவது இருக்கலாம் என்ற எண்ணம், அவளை தூண்டியது. மொபைல் போனில், குறுஞ்செய்தியில் வந்த முகவரியை, மீண்டும் சரி பார்த்து, ஆட்டோவை விட்டு இறங்கினாள்.
மனசே... மனசே... கதவைத்திற!எதிரே, நிறைய மரங்கள் சூழ, அந்தக் கட்டடம் உள்ளடங்கி நின்றது… “சிலு சிலு’வென லேசான காற்று, வேப்பம்பூ மணத்தை ஏந்தி வந்து, நாசியில் மோதியது. பக்க வாட்டிலிருந்து, “அனு… அனு…’ என்ற குரல் கேட்டு, திரும்பினாள்.
நந்து தான் நின்று கொண்டிருந்தான்; அவனை நெருங்கினாள்.
“”ஒரு நிமிஷம்… உட்காருங்க!” என்றவன், யாரையோ அழைத்து, ஏதோ சொன்னான்.
சின்ன, சின்ன பூவால் டிசைன் போட்டது போல, உதிர்ந்து கிடந்த வேப்பம் பூக்களை ஒதுக்கி குவித்து, கைகளில் அள்ளி, அந்த சிமென்ட் பெஞ்சின் மீது அமர்ந்தாள் அனு.
சில நிமிடங்களில், ஆவி பறக்க காபி வந்தது.
“”எடுத்துக்குங்க அனு!” அனுவுக்கும், அந்த சமயம் அந்த காபி தேவையாகத் தான் இருந்தது. காய்ந்து போன தொண்டை ஏங்கியது.
எதும் பேசாமல் வாங்கிக் கொண்டாள். அவள் குடித்து முடியும் வரை காத்திருந்தவன்… “”சொல்லுங்க அனு,” என்றான்.
“”வந்து… நான்…நீங்க… எனக்கு…” தடுமாறினாள் அனு.
“”ரிலாக்ஸ் அனு… நிதானமா சொல்லுங்க!”
“”வந்து… நீங்க ஏதாவது காரணம் சொல்லி, இந்தக் கல்யாணத்தை நிறுத்திடுங்களேன், ப்ளீஸ்!”
“”ஏன்… என்னாச்சு?”
“”உங்கக்கிட்டே நான் ஒரு பெரிய விஷயத்தை மறைச்சுட்டேன். அதான், உண்மையை சொல்லிடணும்ன்னு வந்தேன். இந்தக் கல்யாணம் வேணாங்க!”
அவளே பேசட்டும் என்பது போல, மவுனமாயிருந்தான் நந்து.
“”உங்களுக்கு எப்படி புரிய வைக்கிறது… ஒரு பெண்ணுக்கு எது புனிதமோ, அதை நான் தொலைச்சிட்டு வந்து நிக்கறேன். உங்களுக்கு ஏத்த பொண்ணு நான் இல்லே… மன்னிச்சிடுங்க; உங்களுக்கு நான் வேணாம்,” என்று கை கூப்பினாள்.
கூப்பிய கைகளை சேர்த்து பிடித்தான் நந்து; அவளால் விடுவித்துக் கொள்ள முயலவில்லை.
“”அனு…” இந்த அழைப்பு, அவளின் உள்ளத்தின் அடி விளிம்பு வரை தொட்டது. நிமிர்ந்து, குளம் கட்டிய விழிகள் மினுமினுக்க, தீர்க்கமாய், அவனை ஒரு நிமிடம் பார்த்தவள், தலையைக் குனிந்து கொண்டாள்.
“”அனு… எதையெதையோ எண்ணி குழம்பாதே… எனக்கு எல்லாம் தெரியும்.”
“ஹக்’கென்று அதிர்ந்தது அனுவின் இதயம். அவன் விழிகளை ஏறிட்டாள்.
“”தெரியும் அனு… அன்னிக்கு நீ ஊருக்குத் திரும்பினியே டிரெயின்லே, அதே நாள் நானும், என் நண்பனை வழியனுப்ப, ஸ்டேஷனுக்கு வந்திருந்தேன். பெண்கள் பெட்டியை ஒட்டி ஒரே கூட்டம். என்ன, ஏதுன்னு எட்டிப் பார்த்த போது தான், உன்னை பார்த்தேன். மனசு தவிச்சு போச்சு. கிழிஞ்ச நார் மாதிரி கிடந்த உன்னை அப்படியே அள்ளிக்கிட்டு போய், என் பொறுப்புலே மருந்துவமனையிலே சேர்த்தேன்…
“”நீ, கொடூரமான பாலியல் வன்முறைக்கு ஆளாகி இருக்கிறதா டாக்டர் சொன்னார். அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் எனக்குத் தெரிஞ்சவர் என்கிறதாலேயும், நீ எனக்கு நிச்சயிக்கப்பட்ட பொண்ணுன்னு தெரிஞ்சதுனாலேயும், விஷயத்தை அவர் அடக்கி வாசிச்சார்…
“”டாக்டரை விட்டே, உன் அப்பாவுக்கு செய்தி அனுப்பி, நீ இறங்கும் போது தடுமாறி கீழே விழுந்துட்டதா சொல்ல வைத்து, நம்ப வைத்தோம். நீ, “டிஸ்சார்ஜ்’ ஆகிப் போகும் வரை, யார் கண்ணிலும் படாமல் பார்த்துட்டு போயிடுவேன். நீ நிம்மதியா, அமைதியா இருக்கணும். எனக்காக எல்லாமும் மறந்து, இயல்பா இருக்கணும். ப்ளீஸ் அனு!”
இருவரிடையேயும் அமைதி, ஒரு விஷப் புகையைப் போல பரவியது கனமாக. அதன் கனம் தாங்காமலோ, என்னவோ, குலுங்கி, குலுங்கி அழுதாள் அனு.
சுழன்றடித்த சூறாவளிக் காற்றின் வேகத்தில் கூட்டை இழந்து, வேறு இடம் சென்று விட்ட பேர் தெரியாத பறவை ஒன்று, தான் தங்கிய, மரக் கிளையை திரும்பிச் சென்று பார்ப்பது போல், அழுகையின் நடுவே ஞாபகங்கள் பின்னோக்கி ஊர்வலம் வந்தன.
“அப்பாவோடு, அத்தையின் ஊருக்கு போனது, தாயில்லாத குறை தீர, பெண் துணையாக முன்னால் நின்று, கல்யாணத்தை நடத்தி தரவேணுமாய் அப்பா, தங்கையை வேண்டியது, அத்தை, அவளை சில நாட்கள் தன்னுடன் இருத்தி, தன்னோடு அவளை அழைத்து வருவதாய் சொன்னது…
“அப்பா கிளம்பியது, சில நாட்கள் கழிந்ததுமே, ஊருக்கு வந்துவிடும்படி, அப்படி வற்புறுத்தவே, புறப்பட ஆயத்தம் செய்தது, புறப்படுகிற முதல் நாளன்று, அத்தை புழக்கடையில் வழுக்கி விழுந்து, காலை முறித்துக் கொண்டது, அனு பயணத்தை ரத்து செய்து, அத்தையின் மகளை ஊரிலிருந்து வரவழைத்து, ஒப்படைத்து, மனசே இல்லாமல், முன் பதிவு கிடைக்கா விட்டாலும் பெண்கள் பெட்டி பாதுகாப்பானது என்று அத்தை சொன்னதைக் கேட்டு, ரயிலில் கிளம்பியது…
“ஓடும் ரயிலில் என்ன பயம் என்று, அதுவும் பெண்கள் பெட்டியில் என்று நிச்சிந்தையாய், மெல்ல உறக்க வசப்பட்டது, யாரோ, திடீரென்று மேலே விழுந்து வாயைப் பொத்த, கத்தக் கூட முடியாமல் தத்தளித்து… திணறியது, அவளை அந்த உருவம் சின்னா, பின்னப்படுத்தி, குற்றுயிரும்… குலை உயிருமாய்…’
– முகத்தில் அறைந்து கொண்டு கதறினாள் அனு . அவள் அழுது முடியட்டும் என்பது போல் காத்திருந்தான் நந்து.
மெல்லத் தன் நினைவுகளின் அழுத்தத்தில் இருந்து, தன்னை மீட்டுக் கொண்டவள்…
“”தெரிஞ்சுமா… எல்லாம் தெரிஞ்சுமா… என்னை கல்யாணம் கட்டிக்க நினைக்கிறீங்க? நான் கசங்கிப் போயிட்ட பூ; பூஜைக்கு உதவாது!”
“”அய்யோ… போதும். பூ, பூஜைன்னு இப்படி பேசி பேசியே தான்… இதோ பார் அனு, நாம மனுஷங்க. வாழ்க்கைய நமக்கு விதிக்கப்பட்ட காலம் வரை வாழணும். நான் கடவுளுமல்ல… நீ பூவும் அல்ல… நான் மனுஷன்; நீ மனுஷி. அவ்ளோதான்!”
“”என்ன பேசுறீங்க… என் மனசு ஒப்புக்கலை… என்னவோ, நான் தான் உலகத்துலேயே கடைசி பொண்ணுங்கற மாதிரி… கெட்டழிஞ்ச என்னத் தான் கல்யாணம் செய்துப்பேன்கறீங்க. நான் சாக வேண்டியவ. நான் எதுக்குமே லாயக்கு இல்ல!” மீண்டும் நொறுங்கிப் போனாள் அனு.
அவள் முகத்தை மெல்ல நிமிர்த்தினான் நந்து. அவள் விழிகளுடன் ஊடுருவி பார்வையை செலுத்தினான். அவள் இமைகளை தழைத்தாள்…
“”என்னைப் பார் அனு… போதும் இந்த சுய பச்சாத்தாபம். வேண்டாம் இது. இந்த கழிவிரக்கமும், சுய பச்சாத்தாபமும் தான் கொல்ற விஷயம். எதையும் யோசிக்க விடாம, கீழே தள்ளி குழி பறிக்கும். என்ன கேட்ட… “உலகத்துல நான் தான் கடைசி பெண்ணா?’ என்றா… ஆமா அனு… நீ தான் கடைசி பெண்ணா இருக்கணும். இந்த மாதிரி ஒரு வன்கொடுமைக்கு ஆளான கடைசி பெண்ணா நீ இருக்கணுமங்கறது தான் என் ஆசை!”
“”இந்த கட்டடத்தோட பேரைப் பார்த்தியா… “கஸ்தூரிபா பெண்கள் மையம்!’ எங்க தாத்தா ஆரம்பிச்சது… எங்க தாத்தா காந்திஜியின் பரம பக்தர். தேசப் பிரிவினையின் போது ஏற்பட்ட கலவரத்துலே, மனித மிருகங்கள், பெண்களை வேட்டையாடி நிலைகுலைய வச்சுதாம். அப்போதே, மனசு உருக ஒரு வேண்டுகோள் விடுத்தாராம் பாபுஜி…
“”இளைஞர்கள்… அந்த பெண்களை முழு மனசோட ஏத்துக்கிட்டு, குடும்பம் நடத்தணும்ன்னு கேட்டுகிட்டாராம்…
“”என் பாட்டி அப்படி பாதிப்புக்குள்ளான ஒரு வட நாட்டு பெண்மணி தான். தற்கொலைக்கு முயன்ற அவரை தடுத்து நிறுத்தி மணந்து கொண்டாராம். அவர் ஏற்படுத்தியது தான் இந்த மையம்.
“”அவர் காலத்துலே, 10 – 12 பேர் இருந்தாலே அதிகமாம். எங்கப்பா காலத்துல, 100 – 150ன்னு ஆச்சுது! இப்போ, இதுலே, ஆயிரத்துக்கு மேலே இருக்காங்க… இது, மையத்தின் வளர்ச்சிய காட்டலை அனு; இந்த நாட்டின் அவலத்தைக் காட்டுது. கீழ்த்தரமா போய்கிட்டு இருக்கிற கேவலத்தை தோல் உரிச்சு காட்டுது! பெண்மைய ஒரு பக்கம் கொண்டாடிக்கிட்டே சிதைக்கிற குரூரத்தைக் காட்டுது…
“”நீயா, உன்னை அவனிடம் இழக்கலை. இது, உன் மீது திணிக்கப்பட்ட வன்முறை. உன் மீது எந்தக் களங்கமும் இருக்கறதா எனக்குப் படலை. சேறு பட்டா காலையே வெட்டிடணுமா என்ன… உண்மையைச் சொல்லி கதறுனியே… அப்பவே எல்லாமும் போயாச்சு… ஜலம் விட்டு அலம்பின வீடு மாதிரி ஆயாச்சு…
“”ஒரு வேளை நம்ம கல்யாணத்துக்கு அப்புறமாய் இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தா… நான் எப்படி நடந்துக்குவேனோ. அப்படித்தான் இப்பவும் இருக்கேன்…
“”எந்த மன உறுத்தலும் இல்லாம, சந்தோஷமா என் வாழ்க்கை முழுவதும், ஒரு சிநேகிதியா, ஒரு சகியா என் கூடவே நீ வரணும்ங்கறது தான் என் விருப்பம் அனு. இந்த வரம் தந்தா போதும். என்ன தருவியா?” என்று தலையை வருட, சமாதானமான குழந்தையைப் போல், அவன் தோள் மேல் சாய்ந்து விசும்பினாள் அனு.
“”பெண்மைங்கறது, உடம்புலே இல்லே; அது, மனசுலே இருக்கு. அதன் கம்பீரத்துலே, அதன் மென்மையிலே, வள்ளல் தன்மையிலே, வன்மையிலே, சத்தியத்துலே, கனிவுலே இருக்கும்மா… அதுக்கு ஒருநாளும் குறைவு வராது, களங்கம் வராது; அது, அட்சய பாத்திரம் மாதிரி. அழக்கூடாது அனு. ப்ளீஸ்டா… மனசைக் திற, கதவைத் திறந்தால் தான் காற்று வரும்; கூடவே சந்தோஷத்தையும் துணைக்கு அழைச்சு வரும்!” என்றான் நந்து.
சிறிது நேரம் இருவரும் ஏதும் பேசிக் கொள்ளவில்லை. ஏகாந்தமான அந்த நேரத்தில், மவுனத்தின் இழைகள்… கண்ணுக்குத் தெரியாமலேயே, இருவரையும் பின்னிப் பிணைத்து, இறுகக் கட்டுவதை காற்று கூட வீசுவதை நிறுத்தி, கவனிப்பது போல தோன்றியது.
அவனை அப்போது தான் புதிதாய் பார்ப்பது போல ஏறிட்டு பார்த்தாள் அனு. அந்த ஆண்மை நிறைந்த அன்பு துலங்கும் முகம், அவளை காதல் ததும்ப பார்ப்பதைக் கண்டதும், கன்னக் கதுப்புகள் சிவந்து போயின… பெரிய காம்பில் விரிந்த மலர் போல பெண்மை விகசித்தது தெய்வீக அழகு பொலிய…
வார்த்தைகள் இல்லாத அந்த நிசப்தம் இங்கிதமாய் தழுவி நிற்கையில், அவளின் காதோரமாய், நந்துவின் குரல், “”ஐ லவ் யூ கண்ணம்மா!” என்று கிசு, கிசுப்பாய் கேட்டது.
காது மடல்கள், “ஜிவ்’ வென்று சூடேற, அந்தியின் செம்மை, மீண்டும் அவள் கன்னங்களில் குடியேறியது…
அருகிலிருந்த வேப்ப மரக் கிளைகள், தம் பங்குக்கு பூக்களை உதிர்த்து, அவர்கள் தலைமேல் அட்சதை தூவியது!

– செப்டம்பர் 2011

2 thoughts on “மனசே… மனசே… கதவைத்திற!

  1. சொல்ல வார்த்தைகள் இல்லை அவ்வளவு அருமையான கதை ..
    இக்கதை நமது நாட்டில் பெண்களின் சீரழிவு பற்றியும் அதே நமது நாட்டில் பெண்மையை போற்றுவது பற்றியும் ஒரு சேர காட்டுகிறது ..

    எத்தனை பெண்கள் இவ்வாறு பாதிக்க பட்டிருப்பார்களோ .. ஆனால் பெண்மை என்பது உடலில் இல்லை அது மதில் உள்ளது என்பதை அழகாக கூறிவிட்டிர்கள் ஐயா ..

    அருமையாக உள்ளது தங்கள்கது படைப்பு ..

    மேலும் இது போன்ற அருமையான பதிவுகள் இட வாழ்த்துக்கள் ஐயா …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *