மனசுக்குள் மடியும் காதல்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: February 27, 2021
பார்வையிட்டோர்: 10,101 
 

சுந்தரேசனுக்கு வயது இருபத்தைந்து. கம்ப்யூட்டர் சயின்ஸில் டிஸ்டிங்ஷனில் மதிப்பெண்கள் பெற்றவன். ஊர் திண்டுக்கல் அருகில் தாடிக்கொம்பு.

அவன் ஒரு நல்ல வேலை கிடைத்து சென்னை வந்ததும், நண்பன் தங்கியிருந்த திருவல்லிக்கேணி மார்க்கபந்து மேன்ஷனிலேயே ஒரு தனி அறை எடுத்துத் தங்கினான். தனியறை என்பது மிகப்பெரிய விஷயம். மாதம் பத்தாயிரம் வாடகை.

சுந்தரேசன் இயல்பிலேயே மிகவும் தனிமையானவன். தவிர, பெரிய பண்ணையார் வீட்டுப்பிள்ளை என்பதால் இந்தப் பத்தாயிரம் வாடகை அவனுக்கு ஒரு பொருட்டே அல்ல.

மறுநாள் காலையிலேயே வேலைக்கு சேரப் புறப்பட்டான். முதல் வேலை. அண்ணா சாலையில் பெரிய மல்டி நேஷனல். இதமான ஏஸியின் முதல் தளத்தில் சுந்தரேசனை வரவேற்ற ஹெச்.ஆர் ரேவதி அவனை ஜெனரல் மேனேஜரிடம் கூட்டிச் சென்றாள்.

“இவரை உடனே அபிராமியிடம் அறிமுகப்படுத்தி சீக்கிரம் வேலையை கற்றுக்கொள்ளச் சொல்லுங்க…” ஜிஎம் கண்டிப்புடன் சொன்னார்.

ரேவதி அவனை எட்டாவது தளத்தில் இருக்கும் அபிராமியிடம் லிப்டில் கூட்டிச் சென்றாள்.

அபிராமி என்ற புனிதமான பெயரை மனதிற்குள் உச்சரித்துக்கொண்டே கல்லூரி பிரின்ஸ்பாலைப் பார்க்கப் போகின்ற நூதனமான தன்மையுடன் ரேவதியுடன் சென்றான் சுந்தரேசன்.

அபிராமியின் அறைக்குள் நுழைந்ததுமே மொத்தமாகச் சிலிர்த்தான்.

ஓர் அன்னப்பறவைக்கு உரிய எழிலுடன் ஆசனத்தில் அமர்ந்து யாருடனோ மொபைலில் பேசிக்கொண்டிருந்த அபிராமியைப் பார்த்த மாத்திரத்திலேயே ஓர் அபூர்வமான ஜன்னல் அவனுக்குள் பிரமிப்புடன் விசாலமாகத் திறந்து கொண்டது.

ஷாம்பூவில் உலர்ந்த கூந்தல் தளர்வாகக் கொண்டையிடப்பட்டு, மெலிதான நீல வர்ண வலைக்குள் அழகாகப் பொருத்தப் பட்டிருந்தது. உதடுகளில் மிக மெலிதாக ரோஜா வர்ண லிப்ஸ்டிக். அழகிய நேர்த்தியான செவிகளில் நீலநிற எளிமையான இலைத் தோடுகள். புஜங்கள் தெரியும்படியான நீலநிற ஜாக்கெட்கூட செளந்தர்யம் சற்றும் பிசகி விடாமல் தைக்கப் பட்டிருந்தது.

மொரமொரப்பான நீலநிற வார்ணாஸிப் புடவையில் பேரிளம் பெண்ணாக அபிராமி ஜொலித்தாள். அவளிடம் ஒரு கம்பீரம், ஒரு வாத்ஸல்யம் நிறைந்த பெண்ணுக்குரிய மென்மை இருந்தது. அழகிய பரந்த ஆகாயமே அவன் முன் விரிந்து காட்சியளிப்பதாகத் தோன்றியது.

சுந்தரேசனின் அற்புதமானதொரு பரிமாணம் அந்தச் ஷணமே தொடப்பட்டு விட்டது. தன்னுடைய அம்மா அன்னபூர்ணிதான் அபிராமியாகப் பிறந்து வந்திருப்பதாக உணர்வு வயப்பட்டு மயங்கினான். ஒரு பள்ளிச் சிறுவனுக்கு உரிய அறியாமை மிக்க பயபக்தியோடு தன்னை சுந்தரேசன் வணங்கியதில் அபிராமிகூட மெலிதாக ஆச்சர்யப்பட்டாள்.

ரேவதி சுந்தரேசனை அவளிடம் அறிமுகப்படுத்தி, “சீக்கிரம் இவருக்கு வேலையைக் கற்றுக்கொடு அபிராமி, யு நோ ஓய்…” என்றாள்.

பிறகு இவனிடம் திரும்பி, “ஆல் த வெரி பெஸ்ட்” சொல்லிவிட்டுக் கிளம்பிச் சென்றாள்.

அபிராமிக்கு அடுத்த நாற்காலியில் அமர்ந்து வெகு நேரமாகியும் சுந்தரேசனின் உணர்வுகள் சமனம் அடையவில்லை. ஓர் அன்னியோன்யம், அதே சமயம் ஒரு விகற்பமில்லாத தனித்திருப்பு ஆகிய இரண்டும் கலந்து நூதனத் தொகுப்பாகத் தோன்றிய அபிராமியை ஏறிட்டுப் பார்க்கக்கூட சுந்தரேசனின் உணர்வுகள் ஏனோ சந்கோஜப்பட்டன.

அவனுள் மிக இறுக்கமாக மூடப்பட்டிருந்த; மறுக்கப் பட்டிருந்த ஒரு சதுக்கம் அவனுள் உண்மையாகவே திறந்து கொண்டது. கூண்டு திறக்கப் பட்டுவிட்ட ஒரு காதல் பட்சி அவனுக்குள் சிறகுகளை சிலிர்த்து விரித்தது!

அழகிய பெண்ணின் அருகாமை என்ற உணர்வு பாலை வெளியாக அவனுள் பரந்து கிடந்ததே – அந்தப் பரப்பின் பிரம்மாண்ட சூர்யகாந்தி மலராக அபிராமியின் முகம் மலர்ந்து தெரிந்தது.

அவசரப் படாமல் இவளை மிக மெதுவாக; மிகப் பக்குவமாக அணுக வேண்டும். பன்னிரண்டு வயதில் அம்மாவை இழந்த சோகத்திற்குப் பிறகு, இவள்தான் தான் சந்திக்கும் முதல் செளந்தர்யமான பெண்…

அம்மா…

ஒரு மனிதனுக்கு அம்மாதான் அவனுக்கு மிக அருகில் பரிச்சயமாகிற, உறவாகிற , பாதுகாப்பாகிற முதல் பெண். அம்மா என்ற முதல் பெண்ணிலிருந்துதான் வேறு உறவின்முறை சார்ந்த பெண்களை நோக்கி விபத்து இல்லாமல் ஒருவன் பெயர்ந்து செல்கிறான்.

ஓர் இரண்டுங்கெட்டான் பருவத்தில், வேறு உறவின் முறைகளைச் சார்ந்த பெண்களிடம் சுந்தரேசனின் மனம் பரிவர்த்தனை அடையும்முன், அவனுடைய அம்மா என்ற முதல் பெண்ணை இழக்க நேரிட்டு விட்டதில், அவனின் வாழ்க்கையில் பெண்ணே இல்லையென்ற பாவனை கனமாக மனதில் பதிந்துவிட்டது. அந்தக் கடின படிமமே திருமணம் என்கிற அமைப்பின் மூலம் மட்டும்தான் தான் ஒரு பெண்ணால் காப்பாற்றப்பட வேண்டும் என்ற வினோதத் தன்மையை அவனில் அரும்பச் செய்திருப்பதை உணர்ந்து, அவன் தன்னை மிகவும் பக்குவப் படுத்திக்கொண்டான்.

தன்னுடைய சுபாவத்தில் நசுங்கிப் போய்விட்ட சில பரிமாணங்கள் மொத்த வீரியத்துடன் இயக்கமுற, தன்னுள் தேங்கிப்போன ஏதோ ஒன்று முழுமையாகத் திறந்துகொள்ள –- தான் முழுமையான மனிதனாக எழுச்சி அடைதல் அவசியமானதாக சுந்தரேசனின் அந்தரங்கம் சில வருடங்களாக அவனுக்கு உணர்த்திக்கொண்டே இருந்தது.

அத்தகைய எழுச்சி ஒரு நிகரற்ற பெண்ணின் மூலம்தான் நிகழ முடியும் என அவனுக்குள் ஒரு சோகம் கலந்த காதல் நிராதரவாக தளும்பிக் கொண்டிருந்தது.

திருமணம் புரிந்து கொள்வதற்காக ஒரு பெண்ணைப் போய்ப் பார்ப்பதில் அவனுக்கு விருப்பமில்லை. வலிமையும், வாஞ்சையும் மிகுந்த ஒரு பெண்ணைச் சந்திக்கவே ஆசைப்பட்டான். அது ஒரு அறிமுகமாக இல்லாமல் இயல்பான சந்திப்பாக நிகழ வேண்டும் என்று விரும்பினான். சந்திப்பே பரிவர்த்தனை.

தற்போது நல்ல வேலையும் கிடைத்தாயிற்று. ஒரு எழிலான பெண்ணின் அருகாமையில், அவளிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ளும் வாய்ப்பு. மிக ஏகாந்த நிலையில், ஒரு சந்தோஷப் படகில் பயணித்தான் சுந்தரேசன்.

அபிராமி அவனிடம் “எங்கு தங்கியிருக்கிறீர்கள் சார்?” என்று கேட்டாள்.

“திருவல்லிக்கேணி மார்க்கபந்து மேன்ஷனில்…”

“ஓ அப்படியா? எங்க வீட்டுக்கு அடுத்த தெருவில்தான் அந்த மேன்ஷன் இருக்கிறது… வரும் திங்கட்கிழமை ஆபீஸ் முடிந்ததும் என் வீட்டிற்கு வாருங்களேன்…”

“கண்டிப்பாக வரேன் மேடம்.”

சுந்தரேசனுக்கு உற்சாகம் கரை புரண்டது. அபிராமியின் பெற்றோர்களைப் பார்த்து அவர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துவிட வேண்டும்…

அபிராமி குரலில் சோகத்துடன் “வரும் சனிக்கிழமை வரையில்தான் நான் உங்களுக்கு வேலை கற்றுக் கொடுக்க முடியும். நான் இங்கு ஒரு தற்காலிக வேலையில்தான் இருந்தேன், நீங்கள் நிரந்தரமாக இங்கு வரும் வரையில்…அதனால்தான் ரேவதிகூட சீக்கிரமாக இவருக்கு வேலையைக் கற்றுக்கொடு, யு நோ ஓய்… என்றாள் உங்களுக்கு அது புரிந்ததா?” என்றாள்.

சுந்தரேசன் இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

அந்த சனிக்கிழமை வரை இவனுக்கு அன்றாட முக்கிய வேலைகளைத் திறம்பட கற்றுக் கொடுத்துவிட்டு, அவனிடம் விடை பெற்றாள். வவுச்சர் பேமெண்டில் அவளுக்கு கணக்கை முற்றிலுமாக செட்டில் செய்து அனுப்பி வைத்தார்கள்.

அவளின் பிரிவு சுந்தரேசனுக்கு மனம் வலித்தது.

அந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ஐந்து மணி வாக்கில் சுந்தரேசன் அருகிலுள்ள மெரீனா பீச்சுக்கு காலார நடந்து சென்றான்.

வெயில் முற்றிலுமாக தாழ்ந்துபோய் உடம்பை வருடிய பீச் காற்றில் ஈரப்பதம் நிறைந்து இருந்தது.

பல சமயங்களில், நம் மனதில் என்ன நினைக்கிறோமோ அது நாம் எதிர் பாராமல் நம் எதிரிலேயே தோன்றும். அதுவும் காதல் விஷயத்தில் இம்மாதிரி சம்பவங்கள் அடிக்கடி நடக்கும்.

சுந்தரேசன் சற்றும் எதிர் பாராமல் அபிராமி எதிரே வந்து கொண்டிருந்தாள். அவளுடன் ஒரு வாலிபன் வந்து கொண்டிருந்தான்.

சுந்தரேசனைப் பார்த்த சந்தோஷத்தில், “ஹலோ சார், எங்கே இந்தப் பக்கம்? மீட் மை எங்கர் ப்ரதர் ஜெயராமன்…” என்றாள்.

சுந்தரேசன் மரியாதை நிமித்தம் ஜெயராமனுடன் கை குலுக்கினான்.

அப்போது அங்கு திடீரென ஒரு இளைஞன் கைகளில் மூன்று கோன் ஐஸ்க்ரீம்களை பிடித்தபடி அங்கு வந்து, அபிராமியிடம் உரிமையோடு “அபி, டேக் ஒன்…” என்றான்.

அதில் ஒன்றை எடுத்துக்கொண்ட அபிராமி, “சார் மீட் மை அங்கிள்ஸ் சன் சரவணன்…ஹி இஸ் வித் அமேஸான், இன்பாக்ட் வி ஆர் கெட்டிங் மேரீட் திஸ் இயர்…” என்றாள்.

இதைச் சொன்னபோது அபிராமியின் கண்களில் ஏராளமான காதல் மின்னியது. அல்லது சுந்தரேசனுக்கு அப்படித் தோன்றியது.

அடுத்த கணம் அவனுக்கு அந்தச் சூழ்நிலையே கசந்தது.

சில வார்த்தைகள் அவர்களிடம் பேசிவிட்டு, அந்த இடத்தை விட்டு வேகமாக அகன்றான். அவனுள் இனந்தெரியாத ஒரு துக்கம் பீறிட்டது.

அவளைப் பற்றிய காதல் அபிப்பிராயங்கள் தன்னால் மட்டுமே தன்னுள் வளர்க்கப்பட்டு, அந்த அபிப்பிராயங்கள் வெறும் கானல்நீராகிப் போனது குறித்து மிகவும் வெட்கிப்போனான்.

புதிய வேலை கிடைத்த சந்தோஷம் அடிபட்டுப்போய், இந்தச் சம்பவம் சுந்தரேசனைப் பெரிதும் சுட்டது. இனந்தெரியாத ஏக்கமும் வேதனையும் இவனுள் கனன்று பொங்கியது.

கண்களில் திரண்ட கண்ணீரைக் கூட்டி விழுங்கினான்.

திங்கட்கிழமை கிழமை மதியம் அலுவலகத்தில் இருந்தபோது அபிராமி இவனை மொபைலில் தொடர்புகொண்டு, “மாலை எத்தனை மணிக்கு வீட்டிற்கு வருகிறீர்கள் சார்?” என்று கேட்டாள்.

“நோ மேடம். இன்று வேலை அதிகம். இன்னொரு நாள் கண்டிப்பாக வருகிறேன்… வருவதற்கு முன் தங்களிடம் சொல்லிவிட்டு வருகிறேன்…” குரலில் சுரத்தே இல்லை.

மனசுக்குள் அவன் காதல் சுத்தமாக மரித்துப்போனது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *