மதுரஸா தேவி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: November 21, 2021
பார்வையிட்டோர்: 8,168 
 

(1955ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தினசரிப் பத்திரிகைகளில் சில தினங்களாக ஓர் ஆச்சரியமான விஷயம் “அடிபட்டுக்கொண்டிருக்கிறது. தேச சரித்திர ஆராய்ச்சிக்காரர்கள், மனிதவர்க்கத்தின் பண்டைய வாழ்வைச் சோதனை செய்பவர்கள், கற்பனை மன்னர்கள் ஆகியவர்களின் மூளையை மிகவும் குழப்பியுள்ள செய்தி அது.

நேபாளத்தின் எல்லைக் கோட்டுக்கு அருகிலே, ரூப்கந்த் ஏரியின் சுற்றுப்புறத்தில், ஏராளமான மனித எலும்புகள் நாலு புறமும் சிதறிக் கிடக்கின்றன என்பதே அந்தச் செய்தி. ஆயிரக் கணக்கான வருஷங்க ளாக அவை அங்கே கிடந்திருக்க வேண்டும் என்று ஆரம்பத்தில் *ஊகித்தார்கள் சிலர். மேலும் ஆராய்ச்சி செய்ததில், சுமார் நூறு வருஷந்தான் ஆகியிருக்கும்; ஏனெனில் செருப்புப் போன்ற தோலாலான பொருள்களும் அங்கே காணப்படுகின்றன” என்று திட்டமாகச் சொல் கிறார்கள். தற்போது உத்தரப் பிரதேசத்தில் உதவி மந்திரியாக இருக்கும் ஸ்ரீ ஜகன்மோகன் நேகி, ‘இவைகள் எல்லாம் சரியாக நூறு வருஷங்களுக்கு முன் திபேத்தைக் கைப்பற்றச் சென்ற ஜெனரல் ‘ஜோராவர் ஸிங்கினுடைய சைனியத்தைச் சேர்ந்த சிப்பாய்களுடையவையே. திபேத் வீரர்கள் இவர்களை முறியடித்துத் துரத்தி வந்தபோது பெரும்பாலானவர்கள் மாண்டுபோனார்கள். எஞ்சியவர்கள் இந்த வழியாக ஓடி வந்திருக்கிறார்கள். ஒரு பனிப் புயலில் சிக்கி, இந்தக் கதியை அடைந்திருக்கிறார்கள். பனிப் பிரதேசமாதலால், சடலங்கள் கெடாமல் வெகு காலம் இருக்கின்றன” என்று கூறுகிறார்.

அந்த விவரங்கள் எல்லாம் உண்மையாக இருக்கலாம். ஸ்தலத்தை ஆராய்ச்சி செய்யச் சென்றிருந்தவர்களில் ஓர் இளைஞர், எலும்புக் கூடுகளை யெல்லாம் ஒவ்வொன்றாகக் கவனித்திருக்கிறார்.எல்லாரும் ஆண்களே என்று அவர் முடிவு கட்டும் சமயம், ஒரே ஓர் எலும்புக் கூடு மட்டும் ஒரு பெண்ணினுடையதாக இருக்க வேண்டும் என்று அவருக்குத் தோன்றி யிருக்கிறது. “அந்தப் பெண்மணி யார்? அவள் மட்டும் அத்தனை பெரிய கூட்டத்தில் எப்படி வந்து சேர்ந்து கொண்டாள்? இந்தப் புதிருக்கு யாரேனும் பதில் சொல்ல முடியுமா?”- இதெல்லாம் நான் என்னையே ஒரு நாள் கேட்டுக் கொண்ட கேள்விகள்.

“முடியும்!” என்ற பதில் என் காதில் விழுந்தது.

திடுக்கிட்டுப் போனேன். யார் அது பேசுகிறது? – என் எதிரில் அற்புதமான ஒரு பெண் உருவம் நின்றது. ரூப லாவண்யம் மிகுந்தவள் என்று நான் அவளை வர்ணித்தால் போதவே போதாது. தந்தம் போன்ற மேனி, உருக்கி வார்த்த தங்கப் பதுமை, சந்திர பிம்பம் போன்ற – வதனம் என்று எப்படிச் சொன்னாலும், ஏதோ ஒன்று குறைவாக இருப்ப தாகவே எனக்குத் தோன்றுகிறது. மிகச் சன்னமான பட்டிலே உடை உடுத்திருந்தாள்; பரிபூர்ணமான அங்க அமைப்புகளை அவை விளம்பரம் செய்தன. கடல் போன்ற அவள் கண்கள், சதா சலித்துக்கொண்டிருந்தன; நெற்றியின் மீது புரண்ட குழல்கள், அதன் மேன்மையை மேலும் உயர்த்தின.

“தாங்கள் யார்?” என்று கேட்டேன்.

“நீங்கள் யாரைப் பற்றி நினைத்தீர்களோ, அவள்! மனிதர்களில் ஆணானாலும் பெண்ணானாலும், எலும்புக் கூட்டிலிருந்து உருவத்தைக் கற் பத்துக் கொள்ள முடியாது. இரண்டும் ஒரே பயங்கரந்தான்; ஆனால், படைத்தவன் தசையையும் குருதியையும் நரம்பையும் தோலையும் போட்டு மூடி விதம் விதமான ரூபங்களை அமைக்கிறான். ரூப்கந்த் ஏரியின் கரையில் இன்று எத்தனை எலும்புகளைப் பார்க்கிறீர்கள்! எங்கே, எந்தச் சித்திரகாரனாவது, அந்தக் கூடுகளைச் சேர்ந்த மனித உருவங்களைத் தீட்டட்டும்! ஏன், நான் ஒருத்தி எப்படி இருந்தேன் என்றாவது காட்டட்டுமே! முடியாது! நிச்சயமாக முடியாது! இன்னொரு வேடிக்கையை யும் பாருங்கள்: உலகத்தில் ஒவ்வோர் ஆணும் பெண்ணும் தான் வெகு அழத என்று எண்ணிக் கொண் டிருக்கிறார்கள்! ஆனால், தங்கள் எலும்புக் கூடு எத்தனை கோரம் என்று சிந்தித்துப் பார்ப்பதே இல்லை. ஏன், நான் கூட இன்று என் எலும்புக் கூட்டைக் கண்டு திகைத்துப் போனேன்!”

“ஓஹோ!” என்றேன்.

“நீங்கள் கேட்க விரும்பியது ஒன்று; நான் விவரித்துக்கொண்டிருப்பது வேறு ஒன்று. அத்தனை ஆண்களுக்கும் மத்தியில் நான் ஒருத்தி எப்படி வந்து சேர்ந்தேன்? – என்பது உங்கள் கேள்வி. ஏன் வந்தேன் என்பதும் இரண்டாவது கேள்வி. கொஞ்சம் அவகாசம் கொடுத்தால் சொல்கிறேன்.” ஒரு மாயப் புன்னகை; அது மயக்கியது. “சொல்!” என்று கூவ விரும்பினேன். முடியவில்லை. எதிரே விறைத்துப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தேன். அவள் என் பதிலை எதிர்பாராமலே கதையை ஆரம்பித்துவிட்டாள்.

***

சேனாபதி ஜோராவர் ஸிங் என்று நீங்கள் கேட்டிருக்க மாட்டீர்கள். சிம்மமேதான் அவர். அவருடைய தலைமையில் ஒரு பெரிய படை திபேத்தை நோக்கிச் சென்றது. வீரச் சீக்கியர்கள், பஞ்சாபிகள், காஷ்மீரிகள், டோக்ராக்கள், லடாகிகள் கொண்ட அந்தப் படையில் பெரும்பாலும் பராக்கிரமசாலிகள், பயம் அறியாதவர்கள் இருந்தனர். நிச்சயம் வெற்றியும் பெற்றிருப்பார்கள்; ஆனால், திபேத்தியர்களுக்கு முன்னதாகச் செய்தி எட்டிவிட்டது. சீனப் பட்டாளங்களைத் துணைக்கு அழைத்துக் கொண்டு தயாராக இருந்தார்கள். கால் வைத்ததும், அப்படி அப்படியே ஓடி வரவேண்டி வந்தது. எதிரிகள் வெட்டித் தள்ளினார்கள்; சுட்டுக் குவித்தார்கள்; துரத்தித் துரத்திக் கொன்றார்கள். நிடி கணவாயெல்லாம் பிணங்கள் அடைத்தன; ஆறுகள் சிவப்பாக ஓடின. தப்பின பேர் நூறு; அவர்களில் நான் ஒருத்தி!

என் பெயர் மதுரஸா தேவி. பிறந்த ஊர் காச்மீரம். நன்றாக நடனம் செய்வேன்; அற்புதமாகப் பாடுவேன்; என் அழகைக் கண்டு வியக்காதவர் இல்லை. சேனாபதி ஜோராவர் ஸிங்குக்கே என்மீது பிரேமை உண்டு. என்னை அவர்களுடன் வர அனுமதித்ததற்கு உண்மைக் காரணம் அதுதான் எனினும், போர் வீரர்களுக்குக் கானத்தினாலும் நடனத்தினாலும் உற்சாகம் கொடுக்க நான் ஒருத்தி வரவேண்டும் என்றார் அவர். பாதுகாப்புகள் எல்லாம் செய்து தருவதாகச் சொன்னார். “போனவுடன் மண்டியிடப் போகிறது திபேத்; அதற்கு ராணி நீ!” என்றார். நான் யோசனை செய்து விட்டு ஒப்புக்கொண்டேன். ஜோராவர் ஸிங் அன்புப் பிரேமையைக் கொடுத்தார்; எனக்காக உயிரைக் கொடுக்கச் சித்தமாக இருக்கும் வேறு வீரர்களும் அந்தச் சைனியத்தில் இருந்தார்கள்.

பழைய கதையைத் திருப்பிச் சொல்லப் போவதில்லை நான். ஒரே குழப்பம், கலவரம், ஓட்டம். என் கண்ணெதிரில் மனிதர்கள் வெட்டி வீழ்த்தப்படுவதைப் பார்த்தேன்; கும்பல் கும்பல்களாகச் சடலங்கள் குவிக்கப் படுவதைக் கண்டேன். சாவுக்கும் வாழ்வுக்கும் இடையே அதிக இடைவெளி இல்லை என்று விரக்தி ஏற்பட்டது. ஆனாலும் உயிர் தப்ப ஓடினேன். எத்தனையோ பேர் உதவி செய்தார்கள் வழி எங்கும். நான் அவர்களை மறக்கவில்லை. பிரதாப் ஸிங் நாலு ஆள் பலம் உள்ள வீரன். என்னை எத்தனை தூரம் சுமந்து வந்தான் அவன்! சுந்தர்ஸிங், எனக்காக எதையும் தியாகம் செய்வான். எவ்வளவு பணிவிடைகள் செய்தான்! ரக்பீர் ஸிங், (ஐயோ, எத்தனை அழகன் அவன்!) என் பக்கத்தை விட்டு அகலவே இல்லை. நான் வருகிறேன் என்றே இந்தச் சேனையுடன் அவன். வந்தான். இல்லாவிட்டால் வீட்டோடு இருந்திருப்பான்.

‘அப்பாடா! பிழைத்தோம். இனியும் எதிரிகள் துரத்த மாட்டார்கள்’ என்று ரூப்கந்த் ஏரியின் கரையை அடைந்தோம்.

மலைப் பிரதேசம் அது; சாதாரணமாக யாரும் அங்கே வர மாட்டார்கள். பெரும் பெரும் பாறைகளும் சரிவுகளும் நிரம்பி, ஒரு. விதப் பயங்கரத்தை உண்டாக்கியது. சிறு சிறு குகைகள் மனிதர்கள் ஒண்டுவதற்கென்றே ஏற்பட்டவை போல் உள்ளவை, ஏராளம். அந்தக் குளிரை, அம்மா, என்னவென்று சொல்வேன்! காற்றிலே பனிக் கட்டிகள் மிதந்து வந்தன; பனி மழை, பனிப் புயல், பனி வாடை, சர்வம் பனி மயம்! உடம்பைச் சுற்றி எத்தனை கம்பளிகளைப் போர்த்துக்கொண்டா லும், எப்படியோ உள்ளே குளிர் புகுந்து கொண்டு, சுரீர் என்று குத்தியது. சடசடவென்று பற்கள் ஓயாது அடித்துக்கொண்டன. குளிர் காய்வோமென்று சுற்றிச் சுற்றிப் பார்த்தாலும், ஒரு மரம், ஓர் இலை, ஒரு சருகு தென்படவில்லை. பாறையைத் தவிர வேறு எதுவும் அங்கு இல்லை. இந்தப் பிரதேசத்தை நாம் உயிருடன் தாண்டி மீளுவோமா என்று எல்லாரும் கலங்கினோம். உட்கார்ந்து யோசனை செய்தோம். வேறு வழியின்றி அநேகர் தங்களுடைய துப்பாக்கிகளின் மரக் கைப்பிடி களை ஒரு குவியலாகச் சேர்த்துப் போட்டு, நெருப்பு வைத்து, குளிர் காயத் தொடங்கிவிட்டார்கள்.

அங்கிருந்து உடனே ஓடினாலும், ஏரியைச் சுற்றிக்கொண்டு மலையைத் தாண்டுமுன் இரவு வந்துவிடும். இரவிலே பனிப் படலத்தில் அகப்பட்டுக் கொண்டால், நிச்சயம் இறந்த மாதிரிதான். அதற்கு, அங்கேயுள்ள குகைகளில் அன்று இரவைக் கழித்து விட்டு, விடியற்காலை பிரயாணம் துவங்குவதே புத்திசாலித்தனம். ஆனால், ஒன்றிரண்டு தவிர, எந்தக் குகையும் மூன்று நாலு பேருக்கு மேல் பிடிக்காது. ‘மூன்று நான்கு பேராகப் பிரிந்து, கோஷ்டி கோஷ்டியாகக் குகைகளில் இருந்து இரவைக் கழித்து விட்டுக் காலையில் சேர்ந்து கொள்ள வேண்டியது’ என்று முடிவு செய்தோம். “ஓர் எச்சரிக்கை! இரவில் இங்கே பனி மழை பெய்யத் தொடங்கிவிடும். யாரேனும் வெளியே தலையை நீட்டிவிட்டீர்களோ, பிறகு யாராலும் காப்பாற்ற முடியாது. உறைந்து போய்விட வேண்டும். நடுக்கடலில் விழுந்தவனாவது சிறிது நேரம் நீந்தலாம்; இங்கே வெளிப்பட்டவுடனேயே மரணம்!” என்று விஷயம் தெரிந்த குன்வார் பக்தா என்பவர் சொன்னார். அவ்வளவு பேரும், “எங்களுக்குத் தெரியும்” என்று ஒப்புக்கொண்டோம்.

அடுத்தபடி யார் யார் கோஷ்டி சேர்வது என்பது சர்ச்சையா யிற்று. நான் ஒரே ஒருத்தி தான் பெண். எனக்குத் துணைக்கு வருவதற்கு மன்று பேர் முன்வந்தார்கள்: பிரதாப்ஸிங், சுந்தர் ஸிங், ரக்பீர் ஸிங். இது யாவரும் எதிர்பார்த்ததே! மற்றவர்களில் ஏழு பேர் சேர்ந்த ஒரு கோஷ்டி இருந்தது. அவர்கள் சொன்னார்கள்: “எங்களுக்கு எட்டுப் பேர் இருக்கக்கூடிய குகை ஒன்று அகப்பட்டுவிட்டது. மிகவும் வசதி யாகவும் இருக்கிறது. மதுரஸா தேவி மட்டும் சம்மதம் தெரிவித்தால், அங்கே வந்து விடலாம்!” என்று அழைத்தார்கள்.

பிரதாப் ஸிங் உடனே, “நான் மூன்று பேர் இருக்கக் கூடிய அருமையானதொரு குகையைப் பிடித்துவிட்டேன். வெளியே என்ன புயல் அடித்தாலும், பனிப் பிரளயமே வந்தாலும் எங்களை அசைக்க முடியாது. மதுரஸா அங்கேயே தங்கலாம். அவர் என்னுடன் வேறு எவரையேனும் ஓர் ஆடவரை அழைத்துக்கொள்ளலாம்!” என்றான்.

நான் அவ்வளவு பேரையும் பார்த்துப் புன்னகை செய்தேன். ‘ஏ மூளை கெட்ட உலகமே! பெண்மேல் உனக்கு ஏன் இத்தனை மோகம்? ஒரு பெண் மனம் வைத்தால் உங்கள் அத்தனை பேரையும் அழித்து விடுவாள் என்பதை நீ ஏன் தெரிந்துகொள்ளவில்லை இன்னும்?’ என்று நான் நினைத்துக்கொண்டேன். ஏழு பேராக வந்து நின்ற கோஷ்டியைப் பார்த்து, “உங்கள் அன்புக்கு மிக வந்தனம். உங்கள் குகையில் இன்னும் ஒருவர் சௌக்கியமாக இருக்க வசதி இருக்கிறது. அது மிக நல்ல குகை என்று சொல்கிறீர்கள் அல்லவா? என் வேண்டுகோள் ஒன்று உண்டு. நான் அங்கே வரவில்லை; ஆனால், எனக்குப் பதிலாக அதோ நிற்கும் ரக்பீர் ஸிங் அவர்களுக்கு அந்த இடத்தைக் கொடுங்கள். நான் பிரதாப் ஸிங் கண்டு சொல்லும் குகைக்குச் சுந்தர் ஸிங்குடன் செல்கிறேன். காலையில் நாம் சந்திப்போம்” என்றேன்.

ரக்பீர் ஸிங் முகத்தை நான் அப்போது பார்க்கவில்லை. ஆனால், அவன் என்னை ஒரு விறைப்பு விறைத்து விட்டு, அந்தக் கோஷ்டியுடன் வெளியே சென்றான் என்பது மட்டும் தெரியும்.

எதிர்பார்த்தபடி கதிரவன் மலைவாயில் விழுந்தவுடனேயே குளிர் காற்று வீசத் தொடங்கியது. கையெழுத்து மறையும் நேரத்திற்கு நாங்கள் எல்லோரும் குகைகளுக்குச் சென்று ஒண்டிக்கொண்டோம். மேலும் ஒரு நாழிகைக்குள் ‘உர்ர்’ரென்று சூறைக் காற்று வீசியது. அந்தப் பிரதேசங்களில் எப்போது என்ன நேரும் என்று சொல்ல முடியாது. சுழன்று சுழன்று அடித்தது ஒரு புயல். ஓவென்ற ஓலம் ஒயாமல் கேட்டது. காற்றிலே பெரும் பனிக்கட்டிகள் பறந்தன. சற்று முன் அமைதி நிலவிய ஏரிகரைப் பிரதேசத்தில் வாயுவும் வருணனும் சேர்ந்து மல்யுத்தம் ஒன்று நிகழ்த்திக்கொண்டிருந்தார்கள்.

என்னுடன் வந்த பிரதாப் ஸிங்கும் சுந்தர் ஸிங்கும் தங்கள் போர்வைகளை என்னிடம் கொடுத்துவிட்டு, குகையின் சுவரோரமாக ஒண்டிக்கொண்டார்கள். பிரதாப்புக்கு நான் அவனுடைய இஷ்டப்படி குகைக்கு வந்ததில் அளவு கடந்த ஆனந்தம். தன்னை அடைய வேண்டும் என்ற கோரிக்கையை நான் நிச்சயம் அங்கீகரிப்பேன் என்று எண்ணிவிட்டான். சுந்தர் ஸிங்கோ என்னைப் பெண் தெய்வமாகவே கருதினான். பிரதாப் கூப்பிட்டான் என்றாலும், தன்னையும் அழைத்துக் கொள்ள வேண்டியே நான் சம்மதித்தேன் என்று அவன் நினைத்தான்.

குகையினுள்ளே நல்ல இருட்டு; எனினும், சிறிது சிறிதாக எங்கள் கண்கள் அந்த அந்த காரத்திலும் நோக்கப் பழகிக்கொண்டன. பிரதாப் பின் கைகள் பனியினால் கன்றிப்போய் விட்டன. சுந்தர் ஸிங்கோ, வெட வெடவென்று நடுங்கிக்கொண்டிருந்தான்.

“காலை வரையில் எப்படியோ இங்கே தள்ளியாக வேண்டும்!” என்றான் சுந்தர்.

“ஆம்; வேறு வழி?” என்று கேட்டான் பிரதாப், இரக்கமற்ற குரலில்.

“சிறிது நேரம் இருவரும் மௌனமாக இருந்தார்கள். பிறகு. “இங்கே நாம் வந்து புகுந்து கொண்டோமே! சிங்கம், புலி ஏதேனும் இதில் இருக்குமானால் -” என்று ஆரம்பித்தான் சுந்தர். குளிரடக்கமாக இருந்த நான் கூடப் பயத்தினால் நடுங்கினேன்.

“ஒன்றும் ஆகிவிடாது. எல்லாரும் துப்பாக்கிகளைத் துண்டு போட்டுக் குளிர் காய்ந்தார்கள். நான் என் துப்பாக்கியை இதோ வைத்திருக்கிறேன். சிங்கம் வந்தால், ஒரே ரவையில் தீர்ந்துவிடும்!” என்றான் பிரதாப், துப்பாக்கியை அருகில் நகர்த்திக்கொண்டு. அப்போதுதான் நானே அந்தத் துப்பாக்கியைக் கவனித்தேன்.

மறுபடி வெகு நேரம் மௌனம். நாங்கள் ஒருவருமே பேசவில்லை. நான் மட்டும் அவர்கள் முகத்தைக் கவனித்துக்கொண்டிருந்தேன். நேரம் ஓடிக்கொண்டிருந்தது; தூக்கம் என்பதோ வெகு தொலைவில் இருந்தது. என் மனத்தில் ஆயிரம் எண்ணப் புயல்கள்.

“பிரதாப்!” என்று மெல்ல அழைத்தான் சுந்தர்; “வெளியே புயல் பலத்துவிட்டது!”

“நாம் அதற்காக ஒன்றும் செய்து கொள்வதற்கில்லை. உன்னால் அதை நிறுத்த முடியுமானால் போய்ப் பார். அநாவசியமாகப் பேசாதே. விஷயம் எதுவோ அதைப் பேசு” என்றான் பிரதாப். அவன் குரல் வெகு கடுமையாக என் காதுகளுக்குத் தொனித்தது.

“நமக்குள் பேசிக்கொள்ள வேறு என்ன விஷயம் இருக்கிறது இப்போது?”

“ஏன் இல்லை? அந்த விஷயம் நம் முன்னாலேயே இருக்கிறது. இதோ இந்த அழகிய உருவம்; அதைப்பற்றிப் பேசுவோம்!”

“என்னைப் பற்றியா நீங்கள் பேசப் போகிறீர்கள்? ரசமாக இருக்கும் போல் இருக்கிறதே! எங்கே ஆரம்பியுங்கள்” என்றேன் நான், ஹாஸ்யமாகப் பேசுவதாக எண்ணிக்கொண்டு.

“ஆமாம்!” என்றான் பிரதாப்; “உன்னைப் பற்றித்தான். இந்தச் சுந்தர் உன் மீது ஆசை வைத்துக்கொண் டிருக்கிறான். நான் குருடன் அல்ல; நான் அதைக் கவனித்துக்கொண்டு வருகிறேன்!”

சுந்தர் உடனே, “நானே அதை மறுக்கப் போவதில்லை. எனக்கு மதுரஸாவின் மேல் உள்ள காதல் எழுத்தில் அடங்காது; மொழியில் அடங்காது. அவளுக்காக நான் எந்த ஆபத்தையும் எதிர்ப்பேன்” என்றான்.

பிரதாப் கனைத்தான். “நன்றாக, பொருத்தமாகச் சொல்லி விட்டாய். உனக்கு இப்போது ஆபத்துத்தான் காத்திருக்கிறது. ஏன் என்றால், நான் காதலிக்கிற ஒரு தெய்வ மங்கையை, எத்தனையோ இரவு பகலாகக் கண் விழித்து அவள் நினைவாக இருக்கும் நான், வேறு ஒருவன் காதலிக்கப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன். அதை இன்றிரவு நம்மிடையே தீர்த்துக் கொண்டு விடலாம் என்றுதான் உன்னை அழைத்து வந்தேன்” என்றான்.

“தீர்ப்பதற்கு என்ன இருக்கிறது? சௌந்தரியவதியான ஒரு பெண்ணைக் காதலிப்பது என் இஷ்டம்; என் உரிமை. உன்னைக் கேட்டுக் கொண்டு, உன் அநுமதியின் பேரில் தான் அவ்வாறு செய்ய வேண்டும் என்று சட்டம் இருக்கிறதா? என் காதலுக்குப் பதில் தெரிவிக்க வேண்டியது ஒரே ஒருவர்தாம்: அது மதுரஸா….எங்கே , உன் அபிப்பிராயத்தை இவனிடம் சொல்லிவிடேன், மது” என்று சுந்தர்ஸிங் அழுத்தம் திருத்தமாகக் கேட்டான்.

என் தர்ம சங்கடமான நிலைமையை நான் உணர்ந்துகொண்டேன்; எனவே மௌனம் சாதித்தேன். பிரதாப் கோபக் கண்களால் என்னை வெறிக்கப் பார்த்தான்; அவனுடைய புஷ்டியான கரங்கள் பரபரப்புடன் துடித்தன.

“சொல்லித்தான் ஆக வேண்டுமா?” என்றேன் நான்.

“ஆம்! இங்கே இரண்டு பேரும் இருக்கிறோம். நீ எங்களில் ஒரு வனைத்தான் ஏற்க முடியும். உன் தீர்மானத்தை இப்போதே சொல்லி விடு” என்றான் பிரதாப், பிடிவாதமாக. அவன் குரலே எனக்குப் பிடிக்க வில்லை.

மேலும் பேசாமல் இருந்தேன். என் குழப்பம் அதிகமாயிற்று. “இன்னும் என்ன தயக்கம், மதுரஸா? சிறிய கேள்வி: உனக்கு என் மேல் காதலா? அல்லது இந்தச் சுந்தர் ஸிங்மீது காதலா?” என்றான் பிரதாப்.

சுந்தர் ஸிங் தொண்டையைக் கனைத்து விட்டுக்கொண்டான். “சொல்லிவிடேன், மது. பிரதாப் அவசரப்படுகிறானே!” என்றான்.

நான் மேலும் சிறிது பிகு செய்து கொண்டேன்: “நீங்களே என்னை வற்புறுத்திக் கேட்பதால் சொல்கிறேன். நான் பிரதாப்பைத்தான் நேசிக்கிறேன்” என்றேன். வார்த்தைகள் என் வாயிலிருந்து வெளிப்பட்டதும், சுந்தர் ஸிங்கின் உடல் ஒரு முறை மின்சாரத் தாக்குதல் பெற்ற மாதிரி அதிர்ந்தது. எனக்கு அவன் முகத்தை நேர்க்கு நேர் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. தலையைக் குனிந்தபடி, “சுந்தர், சுந்தர், என்னை மன்னித்துவிடுங்கள்!” என்று ஏதோ குழறினேன்.

சமாளித்துக்கொண்டான் சுந்தர். வெகு நிதானமாக, “மன்னிப்பதா? உன்னையா? குற்றம் ஏதேனும் உண்டென்றால், அது என்னுடையது தான். பிரதாப் அழைத்த போது, இந்தக் குகைக்கு வரும்படி நீ என்னைக் கூப்பிட்டதை நான் தவறாக ஊகம் செய்து கொண்டேன். நீ என்னையே விரும்புகிறாய் என்று மனப்பால் குடித்தேன். ஆகாயக் கோட்டைகள் கட்டினேன்….பரவாயில்லை, மது. நான் அதிருஷ்ட ஹீனன், அவ்வளவே! இனி நாம் நிம்மதியாகத் தூங்கலாம்” என்றான்.

அவனுடைய ஒவ்வொரு சொல்லும் என் நெஞ்சில் ஒவ்வொரு கத்திக் குத்தைப் போல் பாய்ந்தது. வெளியே புயல் இன்னும் பலத்து விட்டது. “ஊ….. ஊ…..” என்ற ஓலம் குகையினுள்ளும் நுழைந்து எங்கள் காதை முட்டியது. இரண்டொரு பனிக்கட்டிகள் அந்த மறைவிடத்திலும் வந்து விழுந்தன. மூவரும் மேலும் நெருங்கி உட்கார்ந்து கொண்டோம். சுந்தர் உடல், பாவம், நடுங்கியது!

பிரதாப் இப்போது நெஞ்சில் ஈரம் இன்றிப் பேசினான் : “சீசீ! முன்னமயே தெரியாமல் போச்சு! மூன்று பேருக்கு இந்தக் குகையில் இடம் இல்லை” என்றான். பிறகு சுந்தரை வெறுப்புடன் பார்த்தான்.

சுந்தர் ஒன்றும் பேசவில்லை; நீண்ட பெருமூச்சு ஒன்றே அவன் அளித்த பதில்.

என்னையும் அறியாமல் நான் சற்று அயர்ந்திருக்க வேண்டும். சடார் என்று ஓர் அதிர்ச்சியுடன் விழித்துக் கொண்டேன். ஏதோ ஓர் அரவம் என்னை எழுப்பியிருக்கிறது. திடுக்கிட்டு நாலு புறமும் பார்த் தேன். சுந்தர் ஸிங்கை அங்கே காணவில்லை. அவன் வெளியே சென்று விட்டான். அந்த வேளையில் வெளியே செல்வதென்றால் என்ன அர்த்தம் அதற்கு என்பதை நான் அறியாதவள் அல்ல. ‘தற்கொலை!’

பிரதாப் என்னையே குறிப்பாகப் பார்த்துக்கொண்டிருந்தான். கண்களில், தன் இரையை வெறித்துப் பார்க்கும் துஷ்ட மிருகத்தின் கடுமை ஒளி. முகமெல்லாம் வேட்கை, காம வேட்கை அதீதமாகத் தென்பட்டது. அவனைப் பார்க்க எனக்கு அச்சமாக இருந்தது. “சுந்தர் ஸிங் எங்கே?” என்று நான் கேட்கவில்லை. அது அநாவசியமான கேள்வி; பதில் எதுவும் கிடைக்காது. ஆகையால், “பொழுது விடிய இன்னும் எத்தனை நேரம் இருக்கும், பிரதாப்?” என்று மட்டும் கேட்டேன்.

அவன் சொன்ன பதில் என்னை உலுக்கியது. “பொழுதே விடியாமல், மதுரஸா, நானும் நீயும் இப்படியே இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்” என்றான், சற்று நெருங்கி உட்கார்ந்தபடி.

நான் அதைக் கவனிக்காதவள் போலவே, “குளிர் அதிகமாகி வருவதைக் கவனித்தால், மூன்றாம் ஜாமமாக இருக்கும் என்று ஊகிக்கிறேன்” என்றேன்.

பிரதாப் மிகவும் கேவலமாக நடந்து கொண்டான். பல்லை இளித்தான். “நான் உன்னை அணைத்துக் கொண்டு உட்கார்ந்து குளிரை விரட்டுகிறேன், பார்” என்றான்.

இதை மேலும் வளர விடக்கூடாது என்று நான் தீர்மானித்து விட்டேன். தைரியத்தை வருவித்துக் கொண்டு, “சுந்தர் எங்கே?” என்று கேட்டுவிட்டேன்.

“அவனுக்கு நீ இல்லை என்றவுடன் மனம் உடைந்து போனான்; முனகினான். வாழ்வு கசந்துவிட்டது. சட்டென்று வெளியே எழுந்து போனான். கோழை! காலையில் தேடினால், எங்கேனும் விறைத்துக் கிடைப்பான்.”

“பாவம்!”

“மதுரஸா, இங்கே அவன் இருப்பதில் புண்ணியம் இல்லை. நெருக்கடிதான். நமக்குக் குறுக்கே நிற்பான். போனதே புத்திசாலித்தனம்” என்று சிரித்தான். பிறகு, மேலும் நெருங்கி, வெகு சுவாதீனமாக என் தோளில் கை வைத்தான். இதை எதிர்பார்த்தவளே ஆகையால், நான் அப்பால் நகர்ந்து கொண்டு, “பிரதாப், தொடாதே என்னை!” என்று கத்தினேன்.

“ஏன்? என் கண்மணியே, என்ன கோபம் உனக்கு?” என்று மறுபடி நகர்ந்தான் என் பக்கமாக.

“நில்!” என்று ஒரு கர்ஜனை செய்தேன். சட்டென்று கீழே அவன் போட்டிருந்த துப்பாக்கியைக் கையில் எடுத்துக்கொண்டேன். அவன் தலைக்கு நேரே நீட்டி, “இன்னும் ஓர் அடி முன்வைத்தாயோ, நிர்த்தாட்சியமாகச் சுட்டுவிடுவேன்; செத்தாய் நீ!” என்று எச்சரித்தேன்.

இதை அவன் எதிர்பார்க்கவே இல்லை. “இது எல்லாம் என்ன விளையாட்டு, மதுரஸா? சற்று முன்புதான் என்னைக் காதலிப்பதாகச் சொன்னாய்; இப்போது சுட்டுக் கொல்வேன் என்று மிரட்டுகிறாயே; நடக்குமா?” என்றான்.

“அதை நம்பினாயே, பிரதாப். அப்போது உன்னைக் காதலிக்கிறேன் என்று நான் சொல்லியிராவிட்டால், என்னையே நீ சுட்டுக் கொன்றிருப்பாயே . இப்போது சுந்தர் ஸிங்கை மட்டும் வெளியே விரட்டியிருக்கிறாய்”.

“நானா விரட்டினேன்? உன் வார்த்தை அல்லவா அவனை விரட்டியது?”

“நான் வேறு எதைச் சொல்லித் தப்ப முடியும்? வழி ஏதும் இல்லையே! நீ என்னை இந்தக் குகைக்கு அழைத்தாய்; உன்னிடமிருந்து தப்பவே அவனை அழைத்துக் கொண்டேன்.”

“அடி கள்ளி! அப்படி யென்றால் எங்கள் இருவரையும் தவிர, உனக்கு ஒரு காதலன் இருக்கிறான் என்று சொல்!”

“நிச்சயமாக இருக்கிறான்.”

“யார் அவன்?…யார் அவன்?”

“நகர்ந்து போ. இல்லையேல், சுட்டுத் தள்ளிவிடுவேன். போ அப்பால். அதுதான் சரி…நான் உண்மையில் காதலிப்பது ரக்பீர் ஸிங்கை!”

“அவன் பணக்காரன் என்றா, அழகன் என்றா? ஹூ!”

“இரண்டும் இல்லை. குணவான்; கண்யமானவர் என்றுதான். என்னை இருதய பூர்வமாக அவர் விரும்புகிறார். அவரை நான் உன்னுடன் இங்கே அழைத்து வந்திருந்தால், கட்டாயம் சுந்தர் ஸிங்கின் கதியே அவருக்கும் நேரிட்டிருக்கும். ஆகையால்தான் எனக்காகக் கொடுக்க வந்த நல்ல இடத்தை அவருக்குத் தரும்படி சொன்னேன்; எனக்குத் தேவைப்படாத உங்கள் இருவருடனும் வந்தேன். இப்படி ஏதேனும் ஒரு போட்டா போட்டி நடக்கும், இருவரில் ஒருவர் ஒழிய வேண்டி வரும் என்பதெல்லாம் நான் எதிர்பார்த்ததுதான்… நில்! என்னை நெருங்காதே! சுட்டுவிடுவேன்!”

பிரதாப் என் வார்த்தையைக் கேளாமல் வந்தான். ஒரு கணத்தில் துப்பாக்கியின் குதிரையை இழுத்துவிட்டேன். “டுமீல்!” என்ற பெருஞ் சப்தம், குகையினுள் இரட்டை ஆரவாரத்துடன் எதிரொலி செய்தது. பிரதாப் மீது ரவை படவில்லை; எனினும், அவன் பயந்துவிட்டான். இரண்டாம் முறை நான் சுடுவதற்குத் தயாராவதற்குள், அவன் திரும்பித் தலை தெறிக்கக் குகையினின்றும் வெளியே ஓடிவிட்டான்.

எதற்கும் அவன் மறுபடி வராமல் இருக்கட்டும் என்று நான் குகை வாசல்வரை, குளிரையும் லட்சியம் செய்யாமல் சென்று, பல முறைகள் சுட்டேன். நானாகச் செய்யவில்லை அதை. என்னை ஓர் ஆவேசமே பற்றிக் கொண்டிருந்தது. ரூப்கந்த் ஏரிப் பிரதேசமெங்கும் துப்பாக்கி வேட்டுச் சத்தம்; மலைச் சரிவுகளில் எல்லாம் எதிரொலியின் முழக்கம் கேட்டது.

நான் அவ்வாறு செய்தது எவ்வளவு பைத்தியக்காரத்தனமான காரியம் என்பதைச் சிறிது நேரத்திற்குப் பின்னரே தெரிந்து கொண்டேன். சுற்று வட்டாரக் குகைகளில் ஒண்டிக்கொண்டிருந்தவர்கள் அனைவரும் விழித்துக்கொண்டார்கள். எதிரிகள் தாம் தங்கள் மறைவிடத்தை எப்படியோ கண்டுகொண்டு, நிசி வேளையில் தாக்க வந்து விட்டார்கள் என்ற பீதி அவர்களை அகாரணமாகப் பற்றிக்கொண்டது. இன்னது செய்கிறோம் என்று நிதானியாமல், குகையிலிருந்து வெளிக் கிளம்பித் தாறுமாறாக நாலு புறமும் ஓடினார்கள். கவிந்திருந்த இருளில், ஒருவருடன் ஒருவர் மோதிக்கொண்டு மேலும் கிலி பிடித்துச் சிதறி ஓடினார்கள். இடையில், துப்பாக்கி வைத்திருந்த இரண்டொரு சிப்பாய்கள் தங்கள் ரவைகளைச் செலவு செய்யவே, குழப்பம் மேலும் அதிகமாயிற்று.

பனிப் புயல் அடித்தது. மேலும் மேலும், நிற்காமல் அடித்தது. காற்று உக்கிரமாக வீசியது. பல பேர்களின் கேலிச் சிரிப்பொலி போல் நாராசமாகக் கேட்டது. நானும் தடுமாறிக்கொண்டு வெளியே வந்துவிட்டேன். குகையினுள் தனியே இருக்க எனக்குப் பயமாக இருந்தது. என் நெஞ்சம் பட்பட்டென்று அடித்துக்கொண்டது.

முன்னே ஓர் அடி எடுத்து வைத்தால், காற்றுப் பின்னே நாலடி தள்ளியது. பனித் துளிகள் கோணி ஊசிகள் போல் சுரீர் சுரீர் என்று தைத்தன. நான் ஓர் ஆசாமியுடன் மோதிக்கொண்டேன். கீழே விழுந்து விடாமல் என்னைப் பிடித்து நிறுத்திவிட்டு அவன், “அடடா! மதுரஸா தேவியா!” என்றான் ஆச்சரியத் துடன். மறு பேச்சின்றி ஓர் ஓரமாக என்னை இழுத்துச் சென்றான். அங்கே அத்தனை குளிர் இல்லை.

அவனை நான் அடையாளம் கண்டுகொண்டேன். ஏழு பேர் அடங்கிய ஒரு கோஷ்டியாக வந்து என்னையும் அவர்கள் குகையில் தங்கும்படி அழைத்தவனே அவன்! எனது அந்தக் கேவலமான நிலையிலும் சிறிது ஆறுதல் மனத்திற்கு உண்டாயிற்று. அவனை நான் ஒரே ஒரு கேள்வி கேட்க விரும்பினேன். அதற்குப் பதில் கிடைத்துவிட்டால், அப்புறம் எனக்குக் கவலை இல்லை.

“ஐயா, அன்பரே, உங்கள் குகைக்கு நான் அனுப்பிய ரக்பீர் ஸிங், இப்போது அங்கே பத்திரமாக இருக்கிறாரா?” என்று கேட்டேன்.

அவன் தயங்கினான். தலையை மெள்ள ஆட்டினான். “ரக்பீர் ஸிங்கா? அவன் பெரிய முட்டாள். அம்மணி, எனனை மன்னியுங்கள். அவன் ஒரு மடத்தனமான காரியம் செய்தான்.”

“என்ன அது? சீக்கிரம் சொல்லுங்கள்!” – என் உடம்பெல்லாம் பதறியது. அத்தனை குளிரிலுங்கூட, ரத்தம் கொதிக்கும் நீர் போல் எரித்துக்கொண்டு கடுவேகமாக ஓடியது.

“உங்கள் பணியை நிறைவேற்ற நாங்கள் அவனை எங்களுடன் அழைத்துக்கொண்டு போனோம். வெகு நேரம் அவன் உன்மத்தம் பிடித்தவன் மாதிரி அங்கே உட்கார்ந்திருந்தான். உணவு கொள்ள மறுத்தான். அவனை அணுகி உபசாரம் செய்தபோது, ‘நான் எத்தனை பெரிய மடையன்! மதுரஸா என்னையே காதலிப்பதாக மனக்கோட்டை கட்டினேனே! இதைவிடப் பெரிய ஏமாற்றம் உண்டா? அவளுக்கு என் மீது எள்ளளவாவது பிரேமை இருந்தால், பிரதாப்புடன் வரும் படி என்னை அழைத்துப் போயிருப்பாள் இல்லையா? சீ! இதென்ன வாழ்க்கை? இந்த உயிர் தான் எதற்கு?’ என்றான். நாங்களும் எவ்வளவோ சமாதானம் சொன்னோம்; அவன் காதில் ஏறவில்லை. ஒரே நிலையில் உட்கார்ந்து, ஒரு மூலையையே பார்த்துக்கொண்டிருந்தான்.”

“ஐயோ! அப்புறம்…..அவர் இப்போது எங்கே? அவரிடம் ஓடி நான் உண்மையைச் சொல்ல வேண்டுமே! ஐயோ! ஐயோ! விரைவில் சொல்லுங்களேன்” என்று அலறினேன்.

“அவர் எங்கேயோ? யாருக்குத் தெரியும் அது? எங்களையும் அறியாமல் நாங்கள் சற்றுக் கண் மூடிவிட்டோம். அது சமயம் பார்த்து ரக்பீர் குகையை விட்டு வெளியேறிவிட்டார். அவரைத் தேடிக் கொண்டு செல்லும் துணிவு எங்களில் யாருக்கும் வரவில்லை. தவிர, நிச்சயமாக இறந்திருக்க வேண்டிய ஓர் ஆளைத் தேடிக்கொண்டு சென்று உயிரை விட எவன் தயாராக இருப்பான்? அதுவும் விவேகமான செயல் இல்லையே. அம்மணி, அம்மணி, நில்லுங்கள்!”

என் தலை சுழன்றது. நான் அந்த ஆசாமியின் பிடியிலிருந்து திமிறினேன். அவன் என்னைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, “நீங்கள் எங்கும் போகக் கூடாது. மேதா பஸ்திராமின் குகையில் அடக்கமாக இருக்கும். நான் அங்கு உங்களைக் கொண்டு போய்ச் சேர்த்து விடுகிறேன்” என்று மன்றாடினான்.

நான் குதி குதியென்று குதித்தேன்; அவனைத் தள்ளினேன்; வாயில் வந்தபடி திட்டினேன். கடைசியில் என்னைப் பிடித்திருந்த கரத்தையும் கடித்தேன். வலி தாளாமல், பிடியை இளக்கினான். “ரக்பீர்! ரக்பீர்!” என்று கூவிக்கொண்டு பனிப்படலத்தில், பனி மழையில், தலை தெறிக்க ஓடினேன். “ரக்பீர்!” – என் கேசம் அவிழ்ந்து புரண்டது. “ரக்பீர்…ரக்பீர்!”

என் கண்கள் அருவியாகக் கொட்டின. “ரக்பீர்! ரக்பீர்!”

பின்னால் அந்த ஆசாமி என்னைத் துரத்தி வருகிறான்; அவனிடம் அகப்படாமல் ஓடி என் ரக்பீரிடம் சேர வேண்டும். மேல்மூச்சு வாங்க ஓடினேன். கால்கள் துவண்டன. ஏதோ ஒரு கல் தடுக்கியது. குப்புற விழுந்தேன். மண்டையில் ஒரு பாறை மோதியது. காற்றும் மழையும் பனியும், “ரக்பீர்! ரக்பீர்!”, என்று காது செவிடுபட ஓலமிட்டன. எத்தனை நேரம் ஓலமிட்டனவோ! என் நினைவு இழந்தேன்.

நான் மறுபடியும் கண் விழித்தபோது, விடிந்திருந்தது. நிர்மலமான ஆகாயத்தில் கதிரவன் பிரகாசித்துக்கொண்டிருந்தான். இரவு இந்த அமர்க்களமா நடந்தது என்று வியந்தேன். ஏரிப்பக்கம் எல்லாம் நூறு சடலங்கள் இறைந்து கிடந்தன – பனியில் புதைந்தும் புதையாமலும். ரக்பீரைத் தேடிக்கொண்டே சுற்றினேன். பிரதாப் கிடந்தான்; சுந்தர் ஸிங் கிடந்தான். அடி அம்மா! என் உடலும் கிடந்தது! அப்போதுதான் நானும் இறந்து போய்விட்டேன் என்று உணர்ந்தேன். அத்தனை அழகி, ஒரு பட்டாளமே எனக்காக உயிரை விடும் ஒரு ரூபவதி, இதோ தலைவிரி கோலமாய் உடலெல்லாம் சிராய்த்துக் கீழே கவனிப்பாரற்றுக் கிடந்தேன். எனக்குப் பத்துக் கஜத்துக்கு அப்பால் ரக்பீர் கிடந்தான்.

நூறு வருஷமாக நான் ரூப்கந்த் ஏரிகரையில் சுற்றுகிறேன். ரக்பீரைக் கூப்பிடுகிறேன். என்னை ஏனென்று கேட்பார் இல்லை. இப்போது தான், ஓர் இளம் ஆராய்ச்சியாளர், என் எலும்புக்கூட்டைப் பார்த்து, “இதோ ஒரு பெண்!” என்று ஆச்சரியப்படுகிறார்.

ஐயா, நான் மிக மிக அழகி என்று எழுதுகிறீர்களா? நான் காதலித்த ரக்பீர் ஸிங் ஒரு ரூபவான் என்று வர்ணிக்கிறீர்களா? நூறு ஆண்களுடன் ஒரு பெண் ஓடிவந்த கதையையும், அந்த ஒரு பெண்ணால் நூறு பேரும் பனியிலே சிக்கி மாண்ட கதையையும் உலகுக்கு எடுத்துச் சொல்வீரா? எழுத்தாளரே, எனக்குப் பதில் கொடுங்கள்!

***

நான் தலையைக் குலுக்கிக்கொண்டேன். மதுரஸா தேவி என் சொப்பனத்தில் வந்தாளா, அல்லது விழித்த நிலையில் என்னை மயக்கித் தன் வரலாற்றைச் சொன்னாளா என்று எனக்கு நிச்சயமாகக் கூறத் தெரியவில்லை. என் மனைவி மட்டும், நான் வெகு நேரம் அயர்ந்து தூங்கினதாகச் சாதிக்கிறாள். அந்த முடிவை வாசகர்களுக்கு விட்டு விடுகிறேன்.

– நவம்பர், 1955 – கலைமகள் கதம்பம் (1932-1957), வெள்ளி விழா வெளியீடு, முதற் பதிப்பு: ஏப்ரல் 1957, கலைமகள் காரியாலயம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *