லியாங்கே அமரகீர்த்தி, தமிழில் : கவிதா
குலுப்பட்டியாவில் ஒரு சிறிய சமூகத்தில்தான் பிறந்து வளர்ந்தேன். அது ஒரு விவசாயப் பகுதி. எனது வீட்டின் மூன்று பகுதிகளையும் சுற்றி இருந்த நெல்
வயல்களுக்கு நீர் பாய்ச்ச மூன்று பம்புசெட்களும் உண்டு. எங்களது வயல், வீட்டில் இருந்து நடக்கும் தொலைவிலேயே இருந்தது. எங்கள் கிராமத்தில் மூன்று புத்த கோயில்கள் இருந்தன. அவையும் ஒன்றில் இருந்து இன்னொன்றுக்கு நடக்கும் தொலைவிலேயே இருந்தன. வட மேற்குப் பகுதியில், நெல் கிடங்கு என்று அறியப்பட்ட பகுதியின் ஒரு கிராமம். இந்தப் பகுதியில்தான் தென்னை மரங்களும் நிறைய இருந்தன.
கலாசாரரீதியாக இது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கிராமம். காரணம், சிங்களக் கிறிஸ்துவர்கள் கடலோரப் பகுதிகளில்தான் அதிகம் வாழ்வார்கள் என்கிற நம்பிக்கையை மீறி, இந்தக் கிராமத்தில் நிறைய சிங்களக் கிறிஸ்துவர்கள் வாழ்ந்து வந்தார் கள். பொருளாதாரரீதியாகவும் இந்தக் கிராமம் தனித்துவம் வாய்ந்தது. இங்கு மூன்று தேங்காய் நார் உரிக்கும் தொழிற்சாலை கள் இருந்ததால், கொஞ்சம் தொழில்ரீதியான அந்தஸ்தும் இருந்தது. உங்களுக்குச் சொந்தமாக நெல் வயலோ, தென்னந் தோப்போ இல்லை என்றால்கூட இந்த மில்களில் ஏதாவது ஒன்றில் வேலை செய்து பிழைத்துக்கொள்ளலாம். அந்த வகையில் இது ஒரு வழமையான கிராமம் இல்லை. ஆனால், ‘தன்னிறைவு’கொண்ட இந்தக் கிராமம் ஐந்து வருட அரசியல் வன்முறையில் உருக்குலைந்துபோனது.
எனது கிராமத்தில் மூன்று சாலைகள் சந்திக்கும் ஒரு முச்சந்தி இருந்தது. இந்த முச்சந்தியைச் சுற்றி கால் மைலுக்கும் குறைவான தொலைவில் மூன்று கடைகள் இருந்தன. ஊரின் பணக்காரர்களில் ஒருவர்தான் முதல் கடையின் முதலாளி. மூன்று கடைகளில் அது பெரிய கடை என்பதால், அதை மகா கடை என்று அழைத்தார்கள். உண்மையில் அதன் பெயர் மகேஸ்வரி ஸ்டோர்ஸ்.
இப்போது இந்தக் கதையில் வரலாறு நுழைகிறது. மகேஸ்வரி என்பது ஒரு தமிழ்ப் பெயர். கடையின் முதலாளி ஒரு தமிழர். பணக்காரரும்கூட. அவருக்குச் சொந்தமாக ஒரு பெரிய வீடு, மூன்று லாரிகள், தேங்காய் வியா பாரம், நார் உரிக்கும் மில், கொஞ்சம் நிலம் எல்லாம் இருந்தன. அவர் பெயர் ராமையா. ஆனால், எல்லோரும் அவரை மகேஸ்வரி முதலாளி என்றே அழைத்தார்கள். காரணம், அவரது மகள் பெயர் மகேஸ்வரி. எனது அப்பாவும் ராமையாவும் நண்பர்கள். ஆனால், நானும் மகேஸ்வரியும் நண்பர்கள் இல்லை. அவள், ஒரு தமிழ்ப் பெண், பணக்காரப் பெண். உயர்ந்த சுவர்களால் பாதுகாக்கப் பட்ட பெரிய வீட்டில் வாழ்பவள். ஆனாலும் எனக்கு மகேஸ்வரியை நன்றாக நினைவு இருக்கிறது. காரணம், அவள் அழகாக இருப் பாள்.
அப்போது எனக்கு வயது 14. தொலைக்காட்சி என்கிற மாய இயந்திரம் இலங்கையில் 1978-ல் அறிமுகமானதும், அதை எங்கள் கிராமத்துக்கு முதன்முதலில் கொண்டுவந்தவர் ராமையா. தொலைக்காட்சி வந்த புதிதில் கொழும்புவில் மட்டுமே பெரும்பாலும் ஒளிபரப்பாகும் என்பதால், நல்ல ஒளிபரப்புக்காக ஒரு தென்னை மரத்தில் ஆன்டெனாவை வைத்திருந்தார். இந்த மாயப் பெட்டி உங்கள் வீட்டுக்கு நேரடியாகத் திரைப்படங்களைக் கொண்டுவரும் என்கிற வதந்தி கிராமத்தில் காட்டுத் தீபோலப் பரவியது.
இரவானால், கிராமத்தினர் ராமையாவின் வீட்டில் கூடத் தொடங்கினார்கள். கிராமத்தினர் முற்றத்தில் பாய்களை விரித்து உட்கார்ந்தவண்ணம் பார்க்கும்படி டி.வி-யை வாசலில் வைத்திருந்தார் ராமையா. அதே சமயம், வீட்டில் உள்ளவர்கள் உள்ளே இருந்தவாறு பார்க்கும்வண்ணம் டி.வி. இருந்தது. முற்றத்தின் அன்றாட விருந்தினர்களில் நானும் ஒருவன். எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த படங்கள் எல்லாம் எனக்கு நன்றாக நினைவில் இருக்கின்றன. எங்களைப் பொறுத்தவரை அது ஒரு திரையரங்கம். ராமையாவின் குடும்பத்தைப் பொறுத்தவரையில், அது அவர்களின் வீடு. குடும்பத்தினர் வீட்டுக்குள் புழங்குவதை எங்களால் பார்க்க முடியும். அப்படித்தான் நான் மகேஸ்வரியையும் பார்த்தேன்.
அவள் அதிகம் வெளியில் நடமாட மாட்டாள். பணக்காரப் பெண். தமிழ்ப் பெண். பிறகு, அவள் ஒரு பெண். அழகாக இருந்தாள். நீண்ட கூந்தல், பால் நிறத்தில் தோள்கள். இப்போது எனது நடுத்தர வயதில் இதை நினைவுகூர்வது கடந்த காலத்தைப்பற்றிய ஏக்கத்தை அதிகப்படுத்துகிறது. சிங்கள பௌத்தர்கள் அதிகம் இருந்த ஒரு கிராமத்தில், ஒரு தமிழர் பணக்காரராக இருக்கக்கூடிய காலம்; சில நகரங்களில் அது இன்னும் சாத்தியம்தான். ஆனால், வட மேற்குப் பகுதியில் அது இனி சாத்தியம் இல்லை. குறிப்பாக, கறுப்பு ஜூலைக்குப் பிறகு!
ஜூலை 1983-ல் ஏற்பட்ட கலவரங்களில் ராமையாவின் வீடு, கடை, அவரது மில் எல்லாம் எரிக்கப்பட்டன. கொழும்புவில் இருந்து வந்த ரௌடிகள் அதைச் செய்ததாக நான் நினைக்கவில்லை. கொழும்புவில் நடந்துகொண்டு இருந்த கலவரங்களைக் கேள்விப் பட்டு, ராமையாவின் வீட்டில் வழக்கமாக டி.வி. பார்க்கும் யாராவதுகூட அதைச் செய்து இருக்கக்கூடும். தமிழர்கள் ‘துரோகிகள்’ என்று யாராவது புதிதாக அறிந்திருப்பார்கள், அல்லது உணர்ந்திருப்பார்கள். 1956, 58, 77 மற்றும் 79 ஆகிய வருடங்களில் சிங்களக் குண்டர்கள் தமிழர்களைத் தொடர்ந்து தாக்கிய வரலாறு உண்டுதானே.
ராமையாவின் குடும்பத்தினர் யாரும் இந்தத் தாக்குதல்களில் இறக்கவில்லை. அவர்கள் பாது காப்பான இடங்களுக்குத் தப்பி விட்டனர். என்ன நடக்கும் என்று அவர்கள் முன்கூட்டியே உணர்ந்து இருப்பார்கள் என்று தோன்று கிறது. அவர்களது நட்பு வட்டமும் பெரிது.
கலவரங்கள் வெடித்தபோது எனது குடும்பம் அங்கு வசிக்க வில்லை. குடும்பத்தில் ஏற்பட்ட ஒரு துர்நிகழ்வு காரணமாக, கலவரங்களுக்கு முன்பே நாங்கள் 30 மைல்கள் தள்ளி இருந்த ஒரு கிராமத்துக்குச் சென்றுவிட்டோம். ஆனால், ராமையாவைப்பற்றிய துயரச் செய்தி எங்களை வந்து சேர்ந்தது. ஜூலைக் கலவரங் களுக்குப் பிறகு நான் ராமையா வையோ, அவரது மகளையோ பார்க்கவில்லை. அவரது சொத்து கள் பின்னர் யாரோ ஒரு சிங்களத் தொழிலதிபருக்கு விற்கப்பட்ட தாகக் கேள்விப்பட்டேன்!
இரண்டாவது
கடையின் கதை!
மகா கடையில் இருந்து 100 மீட்டர் தொலைவில் இன்னொரு சின்னக் கடை இருந்தது. சோமஸ்ரீ மாயதுன்னே என்கிற இளைஞர் அந்தக் கடையை நடத்தி வந்தார். அப்போது அவருடைய வயது 20-களில் இருக்கும். அவர் ஒரு கத்தோலிக்கக் கிறிஸ்துவர். அவருக்கும் ராமையாவுக்கும் எப்படிப்பட்ட உறவு இருந்தது என்று எனக்குச் சரியாக நினைவு இல்லை. ஆனால், இருவரும் அண்டை வீட்டுக்காரர்கள். ராமையா எங்கள் கிராமத்துக்கு டி.வி-யை அறிமுகப்படுத்தினார் என்றால், சோமஸ்ரீ வேறு ஒன்றை அறிமுகப்படுத்தினார். அதுவும் கவர்ச்சிகரமானதுதான். இளைஞர்களுக்கு மத்தியில் அது கவர்ச்சியாக இருந்தது. அது ஜனத விமுக்தி பெராமுன (ஜே.வி.பி) அல்லது மக்கள் விடுதலை முன்னணி!
1981-ம் வருடம் என்று நினைவு. மகேஸ்வரி மற்றும் சோமஸ்ரீ கடைகளுக்கு இடையில் இருந்த சோமஸ்ரீயின் வீட்டுக்குச் சிவப்புச் சட்டை அணிந்த சில இளைஞர்கள் குடி புகுந்தார்கள். அந்த இளைஞர்கள் ஜே.வி.பி-யின் தொண்டர்கள். எங்கள் கிரா மத்தில் மட்டும் அல்லாமல்; பல தொலைவான இடங்களிலும் அரசியல் செயல்பாடுகளில் அவர்கள் ஈடுபட்டு இருந்தார்கள். அந்த வீடுதான் அவர்களது தளம் மற்றும் தங்கும் விடுதி. அவர்களில் ஒரு சிலர் அங்கேயேதான் எப்போதும் இருப்பார்கள் என்று ஞாபகம்.
போஸ்டர் தயார் செய்வார்கள். புத்தகங்கள் படிப்பார்கள். எங்களுடன் நன்றாகவே பழகினார்கள். அவர்கள் மது அருந்த மாட்டார் கள் என்றும் பின்னர் தெரிய வந்தது. எனது அப்பா சரியான குடிகாரர். அதனாலேயோ என்னவோ, ஜே.வி.பி சகோதரர்கள்பற்றி எனது அம்மா அடிக்கடி பேசத் தொடங்கினார். நான் பதின் பருவத்தில் இருந்தேன். அவர்கள் எனக்கு வேறு மாதிரி கவர்ச்சியாக இருந்தார்கள்.
சிரிமாவோ பண்டாரநாயகே அரசைக் கவிழ்க்க 1971-ல் ஆயுதப் புரட்சி செய்ய முயற்சி செய்த மார்க்சிய/மாவோயிசக் கட்சிதான் ஜே.வி.பி! பின்னர், அரச சக்திகளால் அந்தப் புரட்சி ஒடுக்கப் பட்டு, கட்சியின் பெரும்பாலான தலைவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டார்கள். சில பேர் கொல்லப்பட்டார்கள். 1977-ல் ஜே.ஆர். ஜெயவர்த்தனே ஆட்சிக்கு வந்தார். இந்தச் சம்பவம்தான் இலங்கையின் நவீன அரசியல் வரலாற்றைச் செதுக்கியது என்று சொல்லலாம்.
ஜெயவர்த்தனே எல்லா ஜே.வி.பி. தலைவர்களையும் விடுதலை செய்தார். ஜே.வி.பி. பொது அரசியலில் ஈடுபட்டு, தேர்தல்களில் தனது ஆட்களைப் போட்டியிடவைத்தது. 1982-ல் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜே.வி.பி-யைச் சேர்ந்த ரோஹன விஜவீர, ஜெயவர்த்தனேவுக்கு எதிராகப் போட்டியிட்டு மூன்றாவது இடத்துக்கு வந்தார். தவிர்க்க முடியாத ஓர் அரசியல் சக்தியாக ஜே.வி.பி. உருவெடுப்பதுபோலத் தோன்றியது.
தேர்தல் பிரசாரங்களின்போது ஜே.வி.பி-யின் ‘சிவப்புச் சட்டைகள்’ எங்கள் கிராமத்தில் படு சுறுசுறுப்பாக இயங்கினார்கள். அவர்கள் செய்த எல்லாமே, வண்ணமயமாக, கவர்ச்சியாக, சமயங்களில் நாடகத்தனமாக இருந்தது. பிறகு, அந்தத் துரதிர்ஷ்டமான 1983 வருடமும், கொடுமையான ஜூலை மாதமும் வந்தன. யாழ்ப் பாணத்தில் 13 ராணுவ வீரர்களை விடுதலைப் புலிகள் கொன்ற செய்தி கேட்டு அல்லது அதைத் தொலைக்காட்சியில் பார்த்து (அந்தச் செய்தி மிக வேகமாகவே பரவியது) சிங்களக் குண்டர்கள் கொழும்புவிலும் அதன் பகுதி களிலும் தமிழர்களைத் தாக்கத் தொடங்கினார்கள். வன்முறை நாடெங்கிலும் பரவியது. எங்கள் கிராமத்திலும்கூட.
ராமையாவின் வீடு, கடை, மில் எல்லாம் எரிக்கப்பட்டன. கிராம மக்கள், கலவரக்காரர்கள் ஆனார் கள். அப்போது இருந்த ஆளுங் கட்சிதான் கலவரம் தொடங்கிப் பரவக் காரணம் என்பது தெளிவாக ஆவணப்படுத்தப்பட்டு இருப்பதால், இதற்கும் ஆளும்கட்சியின் தொண்டர்களே காரணமாக இருந்திருக்கலாம். கலவரங்களில் ஈடுபட்டதாகச் சொல்லி பல அரசியல் கட்சிகளைத் தடை செய்தார் ஜெயவர்த்தனே. இந்தக் கட்சிகளோடு தொடர்பு உடையவர்களைக் கைது செய்ய போலீ ஸ§க்கு உத்தரவிடப்பட்டது. தடை செய்யப்பட்ட கட்சிகளில் ஜே.வி.பி-யும் ஒன்று. சிவப்புச் சட்டைச் சகோதரர்கள் எங்கள் கிராமத்தில் இருந்து காணாமல் போனார்கள். இரண்டாவது கடையின் முதலாளியான சோமஸ்ரீயும் தலைமறைவானார்.
1983-ல் நடந்த இன வெறிக் கலவரத்தில் ஜே.வி.பி-க்கு எந்த விதமான பங்களிப்பும் இருந்ததற்கான ஆதாரங்கள் இன்று வரை இல்லை. ஆனால், ஜெயவர்த்தனே தடையை விலக்க வில்லை. தடை செய்யப்பட்ட மற்ற கட்சிகளின் தொண்டர்கள் சரண் அடைந்ததுபோல ஜே.வி.பி -யின் தொண்டர்கள் செய்ய வில்லை. உண்மையில், அவர்கள் ஆயுதம் தாங்கிய போராட்ட உத்தியைக் கைவிடவில்லை என்று தோன்றியது. ஆயுதங்களைத் தயார் செய்யத் தடையைப் பயன் படுத்திக்கொண்டார்கள். நாடு எங்கிலும் தங்களுக்குப் பாது காப்பாக இருந்த மறைவிடங்களில் பதுங்கி, தடையை விலக்கக் கோரி தீவிரமான பிரசாரத்தில் ஈடு பட்டனர், யார் யாரோவால் எவ்வெப்போதோ ஒட்டப்பட்ட அவர்களது போஸ்டர்கள் எல்லாம் ஜே.வி.பி. மீதான தடையை நீக்கு என்று கோரின.
ஆனால், போஸ்டர்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவி சாய்க்கவில்லை. ஜே.வி.பி. மீண்டும் ஆயுதங்களைக் கையில் எடுத்தது. இரண்டாவது புரட்சிக்குத் தயாரானது. 1987-88வாக்கில் மீண்டும் ஜே.வி.பி. தவிர்க்க முடியாத சக்தியாக உருவானது. ராணுவத் தளங்கள் மீதும் காவல் நிலையங்கள் மீதும் அசாத்தியமானத் தாக்குதல்கள் நிகழ்த்தி நூற்றுக்கணக்கான நவீன ஆயுதங்களைக் கைப்பற்றினார்கள். ஜே.வி.பி-யினருக்கும் அரசப் படை யினருக்கும் இடையில் ஒரு போரே நிகழ்ந்தது என்று சொல்லலாம். ஜே.வி.பி-யின் போராளிகள் அரசாங்கத்தைச் சேர்ந்த பல முக்கியஸ்தர்களைக் கொலை செய்தார்கள்.
மூன்றாவது
கடையின் கதை
ராமையா, சோமஸ்ரீ கடைகளைத் தாண்டி அதே சாலையில் இன்னொரு கடையும் இருந்தது. அது ஒரு டீக்கடை. மால்ஹாமி என்பவர் அதன் முதலாளி. நாங்கள் அவரை மால்ஹாமி மாமா என்று அழைப் போம். அவர், சிங்கள பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்.
காலை உணவும், மதிய உணவும் வழங்கும் சின்ன ஹோட்டல்போலத்தான் அந்த டீக்கடை. தென்னை நார் உரிக்கும் மில்களில் வேலை பார்க்கும் தினக் கூலிகள் இங்குதான் சாப்பிடுவார்கள். ரொட்டி, இனிப்புகள், மிட்டாய், நோட்டு, பென்சில்கள் விற்றதால், பள்ளிக்குச் செல்லும் வழியில் நாங்களும் கடையில் நிற்போம்.
மால்ஹாமி மாமாவின் மகன் என்னுடன் பள்ளிக்கூடத்தில் எட்டு வருடங்கள் ஒன்றாகப் படித்தான். அதனால், எனக்கு அந்தக் குடும்பத்தை நன்றாகத் தெரியும். அவர்கள் யூ.என்.பி-யின் (ஐக்கிய தேசியக் கட்சி) ஆதரவாளர்களாக அறியப்பட்டவர்கள். அப்போது யூ.என்.பி. ஆளும் கட்சி.
ஜே.வி.பி. புரட்சியாளர்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான ‘போர்’ தீவிரம் அடைந்தபோது, ஜே.வி.பி-யினர் கிராமத்தில் இருந்து அரசு ஆதரவாளர்களையும் தாக்கத் தொடங்கினார்கள். அரசாங்கத்துக்கு ஆதரவாகச் செயல்பட்ட நூற்றுக்கணக்கான உள்ளூர்த் தலைவர்கள் நாடெங்கிலும் கொல்லப்பட்டார்கள்.
ஓர் இரவு… அடையாளம் தெரியாத நபர்கள் மால்ஹாமி மாமாவின் வீட்டுக்குள் நுழைந்து அவரைச் சுட்டுக் கொன்றார்கள். எல்லோரும் அது ஜே.வி.பி-யினரின் வேலை என்றுதான் நினைத்தார்கள். ஆனால், யாரும் கைது செய்யப் படவில்லை.
நாம் சம்பவங்களின் தொகுப்பை ஒரு முறை நினைவுகூர்வோம்: 1983-ல் மகேஸ்வரியின் கடை எரிக்கப்பட்டது. ஐந்து வருடங்கள் கழித்து போராளிகளால் மால்ஹாமி மாமா கொல்லப்பட்டார். அதோடு முடியவில்லை. வன்முறையின் வெறியாட்டம் தொடர்ந்தது. மால்ஹாமி மாமா கொல்லப்பட்டு ஒரு வாரத்துக்குள் அரசப் படைகள் இரண்டாவது கடையின் முதலாளியான சோமஸ்ரீயைப் பிடித்தார்கள். சில நாட்கள் கழித்துத் துண்டு துண்டாக வெட்டப்பட்டு ஆள் அரவமற்ற இடத்தில் வீசியெறியப்பட்ட சோமஸ்ரீயின் உடலை அவரது குடும்பத்தினர் அடையாளம் கண்டுகொண்டார்கள். அந்நாட்களில் அப்படிப்பட்ட குரூரமான காட்சிகள் சகஜம். குறிப்பாக, தென் இலங்கையில் புரட்சிக்கு எதிரான அரசாங்க அமைப்புகள் தீவிரமாகச் செயல்பட்டு, போராளிகளை அல்லது போராளிகளாக அவர்கள் நினைத்தவர்களைப் பிடித்துத் துன்புறுத்திக் கொன்றார்கள். சொல்லப்போனால், யாரையும் கொன்று, அப்படிக் கொல்லப்பட்டவர் ‘போராளி’ என்று அவர் கள் சொல்லலாம்.
அந்தச் சமயத்தில், சோமஸ்ரீ போராளிகளுடனான தனது தொடர்பை வெகு காலம் முன்பே துண்டித்துவிட்டார் என்று பெரும்பாலும் நம்பப்பட்டது. 1989-ம் வருடம் முடியும்போது, ஜே.வி. பி-க்கு எல்லாமே முடிந்துவிட்டது. ஒருவரைத் தவிர ஜே.வி.பி-யின் எல்லாத் தலைவர்களையும் அரசு கொன்றுவிட்டது. அந்த ஒருவரும் இந்தியாவுக்குத் தப்பி, பிறகு ஐரோப்பாவுக்குத் தப்பி, 10 வருடங்கள் கழித்தே இலங்கைக்கு மீண்டும் வந்தார்.
நான் பிறந்த இடம், மூன்று சாலைகள் சந்தித்த முச்சந்தியில் மூன்று கடைகள்கொண்ட ஒரு சின்னக் கிராமம். அங்கு பொருட்களை வாங்கவும், தங்களது தேங்காய்கள், அரிசி, காய்கறிகளை விற்கவும் கிராம மக்கள் கூடுவார்கள். ஐந்து வருட அரசியல் வன்முறை இந்த மூன்று கடைகளையும் சிதைத்துவிட்டது. உளவியல்ரீதியாகவும் அந்தக் கடைகள் சிதைந்துபோயின. எனது கிராமமே அதன் வெகுளித்தனத்தை இழந்துவிட்டது.
இன்றும்கூட அந்த முச்சந்தி என்னுள் தாங்க முடியாத துயரத்தை உண்டு பண்ணுகிறது. 1983-க்கு முன்பு இருந்த அமைதியும் ஒற்றுமையும் இனி ஒருபோதும் எனது கிராமத்துக்குத் திரும்பப்போவதே இல்லை. சிங்களர்கள் மத்தியில் வாழ்ந்துகொண்டு இருக்கும் ராமையாபோன்ற தமிழர்கள் உண்மையான பயத்தில் வாழ்கிறார்கள்.
சிதைக்கப்பட்ட மூன்று கடைகளைக்கொண்ட இந்தச் சின்ன முச்சந்தி, என்னைப் பொறுத்தவரையில் ஒரு வரலாற்றுப் பெட்டகம்.
‘அடிப்படை வாதங்கள்’ உருவாக்கக்கூடிய அழிவை நாம் எளிதாகப் பார்ப்பதற்கும் உணர் வதற்கும் இந்த இடத்தை வரலாறு உருவாக்கி இருக்கிறது. இன்று இந்த இடத்தை மக்கள் எளிதாகக் கடந்து செல்கிறார்கள். இந்த இடத்தில், எனது கிராமத்தில் சேமிக்கப்பட்டு இருக்கும் வரலாற்றை யாரும் வாசிப்பதாகத் தெரியவில்லை. ஒருவேளை வரலாறு அங்கு இல்லைபோலும். அது எனது நினைவுகளில் மட்டுமே இருக்கிறது. நாட்டில் பல இடங்களில் இதுபோன்ற கிராமங்கள் இருக்கும் என்று எனக்கு நிச்சயமாகத் தெரியும். காரணம், நிறையப் பேர் கொல்லப்பட்டார்கள். அவர்களும், முச்சந்தி களும் கடைகளும் இருந்த கிராமங்களில் வாழ்ந்தவர்கள் தான்.
மக்கள் முச்சந்திகளிலேயே கடைகளைக் கட்டினார்கள். அவர்களுக்கு ஒருவரை ஒருவர் அடிக்கடி சந்தித்துக்கொள்ள வேண்டும். கடந்த 25 வருடங்களில் பல முறைகள் நான் ராமையாபற்றியும், சோமஸ்ரீபற்றியும், மால்ஹாமிபற்றியும் நினைத்துப் பார்த்திருக்கிறேன். பல வருடங்களுக்கு முன்பு பல்கலைக்கழக மாணவனாக இருந்தபோது, ‘மகேஸ்வரி’ என்கிற தலைப்பில் ஒரு கவிதை எழுதியிருந்தேன். ஒரு சிங்களப் பத்திரிகையில் அது பிரசுரம்ஆனது.
மகேஸ்வரி நிச்சயம் அதைப் படித்திருக்க மாட்டாள்!
(கண்டியின் பெரடினியப் பல்கலைக்கழகத்தில் சிங்களத் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார் லியாங்கே அமரகீர்த்தி. இது, நேபாளத்தைத் தலைமை இடமாகக்கொண்டு வெளியாகும் ஹிமால் சௌத் ஆசியன் என்கிற பிராந்திய மாத இதழில் வெளியானது.)
– ஜூலை 2010
இலங்கையின் ஒருகாலகட்ட வரலாற்றுப் பின்புலம்…..