புரியாத பாடங்கள்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: November 4, 2012
பார்வையிட்டோர்: 13,480 
 
 

சில சமயங்களில் சினிமாவைவிட வாழ்க்கை வெகு சுவாரஸ்யமாகவே இருக்கிறது!

மகளிர் கல்லூரி ஒன்றில் அப்போதுதான் சேர்ந்து இருந்தேன். ஜெயஸ்ரீ எனக்கு கல்லூரியில் இரண்டு வருடங்கள் சீனியர். நான் படித்த பள்ளியில் ஜெயஸ்ரீ படித்தபோது ‘அவள் ஸ்டேட் லெவல் அத்லெட்’ என்பதைத் தவிர, வேறு எதுவும் அவளைப்பற்றி எனக்குத் தெரியாது. கோ-எஜுகேஷன் பள்ளியில் சுதந்திரமாகச் சுற்றித் திரிந்த எனக்கு, இந்த மகளிர் கல்லூரி அடிமனசில் பயப் பூச்சிகளைப் படபடக்கவைத்தன.

விளையாட்டுச் சிறுவனின் கைகளில் சிக்கி, வண்ணங்களைத் தொலைத்துக்கொண்டு இருக்கும் பட்டாம்பூச்சியாக என் மனநிலை இருந்த ஒரு மதிய நேரத்தில், ”ஹேய்! என்னை ஞாபகம் இருக்கா?” என்று கை நீட்டினாள் ஜெயஸ்ரீ.

அந்நிய தேசத்தில் தாய்நாட்டைச் சேர்ந்த ஒருவரைப் பார்த்துவிட்டால், ‘நம்ம ஊரு ஆளுப்பா’ என்று சிநேகம்கொள்ளும் மனசுடன் ஜெயஸ்ரீயுடன் ஒட்டிக்கொண்டேன். ‘உயிரே’ படத்தில் வரும் ‘பூங்காற்றிலே’ பாடல் முதல் தயிர் சாதம் வரை எங்களுக்குப் பிடித்த ஒற்றுமைகள் நிறைய இருந்தன. விளையாட்டாகக்கூட விளையாட்டு மைதானம் பக்கம் செல்லாத நான், ஜெயஸ்ரீ பிராக்டீசுக்குச் செல்லும்போது உடன் செல்லத் தொடங்கினேன்.

இதெல்லாம் இரண்டு மாதங்கள் வரைதான். எனக்கான நண்பர்களும் பாடச் சுமையும் அதிகரிக்க, எப்போதாவது மட்டுமே ‘ஹாய்!’ ‘ஹலோ!’ சொல்லிக் கொண்டோம். இப்படியே கழிந்தன அடுத்த இரண்டு வருடங்களும்.

ஜெயஸ்ரீ எங்கள் கல்லூரியிலேயே மேற்படிப்புப் படிக்கச் சேர்ந்து இருந்தாள். ஆனாலும், வகுப்புக்குத் தொடர்ந்து வருவது இல்லை என்பது தெரிந்தது. ஒருநாள் முச்சந்தி விநாயகர் கோயில் பக்கம் அவளைப் பார்த்ததும், ”என்னக்கா, ரொம்ப நாளா காலேஜ் பக்கம் வரலை. மேரேஜ் நடக்கப்போவுதா? பத்திரிகை கொடுப்பீங்கள்ல?” என்றேன் கிண்டலாக. ஆனால், கோயில் என்றுகூடப் பார்க்காமல் அழ ஆரம்பித்துவிட்டாள் ஜெயஸ்ரீ. விசும்பல்களுடன் தெறித்து விழுந்தன வார்த்தைகள்.

”நான் ஸ்டேட் லெவல் பிளேயர் ஒருத்தனை லவ் பண்றேன். அவன் வேறு சாதிங்கிறதால எங்க வீட்டுல சம்மதிக்கலை. அது மட்டுமில்லை. வீட்டைவிட்டு வெளியில போகக் கூடாதுன்னு அரெஸ்ட். கோயிலுக்குக்கூட சித்தியோடுதான் வந்திருக்கேன்” என்றாள்.

அவள் சித்தி ‘ஜெயஸ்ரீக்கு நல்ல புத்தி கொடுக்கச் சொல்லி’ விநாயகரிடம் விண்ணப்பித்துக்கொண்டு இருந்த கேப்பில்தான் இவ்வளவையும் என்னிடம் அவள் சொன்னாள்.

அடுத்த வாரத்தில் ஒருநாள்… நான் கல்லூரியில் இருந்து வீட்டுக்கு வந்தபோது என் வீட்டுக்கு முன்னால் சிலர் கத்திக்கொண்டு இருந்தார்கள். என்ன ஏதென்று புரியாமல் வண்டியை நிறுத்திவிட்டு, உள்ளே சென்றேன். அவர்களின் கோப வார்த்தைகள் என்னை நோக்கித் திரும்பியபோதுதான் புரிந்தது – ‘பெற்றோருக்குத் தெரியா மல் ஜெயஸ்ரீ, தான் காதலித்த பிளேயருடன் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டாள் என்பதும், அவள் அப்படி ஓடிப் போக நான்தான் உதவினேன்’ என்பதும்தான் அந்த சிலரின் ஆத்திரத்துக்குக் காரணமாக இருந்தது. அப்பா அவர்க¬ளைச் சமாளித்து ஒரு வழியாக அனுப்பிவைத் தாலும், அவரின் அர்ச்சனைகள் பல நாட்கள் வீட்டில் தொடர்ந்தன.

எனக்கு சுந்தர் என்று ஒரு நண்பன் இருந்தான். மின் நகரில் அவனது வீடு இருந்தது. அவன் அப்பா மின்சார வாரியத்தில் பெரிய அதிகாரி. வீட்டு வாட்ச்மேன், வேலை பார்க்கும் பெண் என எல்லோரும் அவன் நண்பர்கள். ‘என் நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே’ என்கிற கான்செப்ட் புரிந்துவைத்திருந்த எனக்கு, அவன் மூலமாக அவர்களும் எனக்கு நண்பர்கள். அவன் அப்பாவுக்கு வேறு ஊருக்கு டிரான்ஸ்ஃபர் வர, சுந்தர் வெளியூருக்குச் சென்றுவிட்டான்.

அவன் சென்ற சில நாட்கள் கழித்து நான் மின் நகர் பக்கம் சென்றபோது, அவன் வீட்டில் வேலை பார்த்த அபிராமி என்னை வழியில் பார்த்துப் பேசினாள். அன்று இரவு என் வீட்டுக்குச் சண்டைபோட வந்து விட்டார்கள் அபிராமியின் அம்மாவும் அக்காவும். சுந்தர், அபிராமியிடம் தரச் சொன்ன லவ் லெட்டரை கொடுக்கத்தான் நான் மின் நகர் பக்கம் வந்தேனாம். சண்டைக்கு அவர்கள் சொன்ன காரணம் இது. அடுத்த நாள் சுந்தரோடு போனில் பேசியபோது சிலஉண் மைகள் தெரிந்தன. அபிராமியின் அக்காவுக்குசுந்தரின் மேல் காதலாம். அவள் திடீரென்று ஒரு நாள் இவனைப் பார்த்து, ‘ஐ லவ் யூ’ சொல்ல, அதற்கு சுந்தர் ‘நோ’ சொல்லிவிட… அதிலிருந்து அவள் இவன் மீது கர்புர் என்று இருந்திருக்கிறாள். தன்னை மறுதலித்த சுந்தர் தனது தங்கை அபிராமியிடம் ஒட்டுதலாக இருப்பது அவளது ஆத்திர நெருப்பில் இன்னும் சாம்பிராணி தூவி இருக்கிறது. ஏதாவது ஒரு புள்ளியில் சுந்தர் சிக்குவான், அப்போது படையலை வைத்துக்கொள்வோம் என்று காத்திருந்த தருணத்தில்தான் சுந்தர் வேறு ஊருக்குச் சென்றுவிட்டான். சுந்தரின் மேல் உள்ள கோபத்தில்தான் என்னை மாட்டிவிட்டது தெரிய வந்தது. நல்லவேளை இந்த முறை என் அப்பா வீட்டில் இல்லை.

அதே கல்லூரி, மூன்றாவது வருடம். என் உயிர்த் தோழியாக அபர்ணா இருந்தாள். கேன்டீன், கம்ப்யூட்டர் லேப் என எங்கு சென்றாலும் இருவரும் ஒன்றாகத்தான் செல்வோம். பணக்கார வீட்டுப் பெண். வீட்டைவிட்டு வெளியே எங்கும் அனுமதிக்கப்படாமல் வளர்ந்தவள். கல்லூரிக்குக்கூட காரில்தான் வந்து போவாள். நான் அவளுக்கு அப்படியே நேர் எதிர். வீட்டில் இருந்ததைவிட வெளியில் சுற்றியது அதிகம். என் வீட்டில் வசதிக் குறை வில்லை என்றாலும் மெழுகுவத்தி, கிரீட்டிங் கார்டுவிற் பது என்று பார்ட் டைம் வேலை பார்த்து வந்தேன்.

நாங்கள் படித்தது கணிப்பொறிக் கல்வி. மூன்றாம் வருடம் ‘புராஜெக்ட் வொர்க்’ என்ற சம்பிரதாயத்தைக் கடக்க வேண்டி வந்தது. இரண்டு பேர் சேர்ந்து செய்யும் புராஜெக்ட் என்பதால் நானும் அபர்ணாவும் இணைந்து செய்ய முனைந்தோம். கல்லூரியில் நடத்தும் பாடம் மட்டும் போதவில்லை. எனவே, தனியார் கம்ப்யூட்டர் கிளாஸ் போக முடிவு செய்தோம். அதிலும் ஒரு பிரச்னை வந்தது. அவளை வெளியே அனுப்ப அவர்கள் வீட்டில் தயங்கினார்கள். அவள் வீட்டுக்கு அருகிலேயே உள்ள கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்தோம்.

எங்களுக்கு இன்ஸ்ட்ரக்டராக வந்தவன் ஜெயக்குமார். கறுப்புதான். ஆனால், வசீகரமாக இருந்தான். பள்ளியில் இருந்தே ஆண் நண்பர்களுடன் பழகிய எனக்கு ஜெயக்குமாருடன் பழகுவது எளிதாக இருந்தது. அபர்ணாதான் ஜெயக்குமாரைக் கண்டு நெளிந்தாள். அவனும் அவளை அவ்வளவாகக் கண்டுகொள்வது இல்லை.

என் சித்தி பெண் கல்யாணத்துக்குப் போய்விட்டு ஒரு வாரம் கழித்துத் திரும்பி வந்தேன். திரும்பி வந்த போது கதையே தலைகீழாக மாறி இருந்தது. எந்த ஜெயக்குமாரைக் கண்டு அபர்ணா நெளிந்துகொண்டு இருந்தாளோ… அதே ஜெயக்குமாருடன் குழைந்துகொண்டு இருந்தாள்.

தான் முதன்முதலாகச் சந்திக்கும் கலகலப்பான இளைஞன் என்ற காரணம் அபர்ணாவுக்கும், வெளி உலகம் தெரியாத மென்மையான பெண் என்ற காரணம் ஜெயக்குமாருக்கும் காதல்கொள்ளப் போதுமானதாக இருந்திருக்கிறது.

திரும்பி வந்த என்னிடம் தங்கள் காதல் காவியத்தை வார்த்தை மாறாமல் கொட்டினாள் அபர்ணா. இந்தக் கொஞ்சல்ஸ் அவள் வீட்டுக்குத் தெரிந்தால் ஜெயக்குமாரை மட்டுமல்ல; அபர்ணாவையும் சேர்த்தே வெட்டி பொலி போட்டுவிடுவார்கள்.

இவர்களின் காதல் உண்மையானதாகத் தெரியவில்லை. தங்களின் எதிர்காலம் பற்றி, வாழ்க்கையைப் பற்றி எதையும் அவர்கள் பேசி ஒரு முடிவுக்கு வந்ததாகவும் தெரியவில்லை. காதலிலேயே உலகம் முடிந்துவிடும் என்று நினைத்தார்களோ என்னவோ!

அபர்ணாவிடம் ‘இன்பாச்சுவேஷன் காதல் ஆகாது’ என்பதைப் புரியவைக்க முயன்றேன். என் வார்த்தைகள் எதுவும் அவளை ஒரு செ.மீ.கூடப் பாதிக்கவில்லை. இதே வார்த்தைகளை ஜெயக்குமாரிடம் சொன்னபோது, ”நீ என்னை லவ் பண்றே… அதான் எங்களைப் பிரிக்கப் பார்க்கறே” என்றான். அடுத்தவர் காதலுக்குள் மூக்கை நுழைத்தால் என்ன நடக்கும் என்பதை அப்போது உணர்ந்தாலும், நெருங்கிய தோழி என்பதால் அப்படியே விட்டுச் செல்ல முடியவில்லை.

”நான் உன்னைக் காதலிக்கிறேன்னு நீங்க சொன்னது உங்க மிஸ் ஜட்ஜ்மென்ட். எந்த வருமானமும் இல்லாம காதலிக்கக் கூடாதுங்கிறது என் பாலிசி. ஜெயக்குமார்… இன்னும் நல்ல வேலைக்குப் போங்க. கை நிறையச் சம்பாதிங்க. அப்போ நானே அபர்ணா வீட்டில் பேசறேன். அதுவரைக்கும் நீங்க ரெண்டு பேரும் பேசிப் பழகாம இருங்க” என்று அப்போதைக்கு, அந்தப் பிரச்னைக்கு அணை போட்டுவைத்தேன்.

கடன் வாங்கிப் பழகியவனின் கையும், காதலிப்பவர்களின் மனசும் சும்மா இருக்குமா? அவர்களின் அடுத் தடுத்த சந்திப்புகள் அபர்ணா வீட்டின் கதவைத் தட்ட, அதன் முதல் எதிரொலியாக ஜெயக்குமாருக்கு வேலை போயிற்று. அபர்ணாவைக் காலேஜ் அனுப்ப வேண்டாம் என்று அடுத்த தடா.

”இன்னும் ரெண்டு மாசம் காலேஜ் வந்தாப் போதும். டிகிரி முடிச்சிடுவா அங்கிள். இப்பப் போய் நிறுத்துனா… மூணு வருஷம் கஷ்டப்பட்டது வீணாப் போயிடும். நான் எந்தப் பிரச்னையும் வராமப் பாத்துக்கறேன்” என்று என் சொந்த ஜாமீனில் அபர்ணாவைக் கல்லூரிக்கு அனுப்பச் சம்மதிக்கவைத்தேன்.

ஜெயக்குமாரைத் தனியாகச் சந்தித்துப் பேசினேன். மொத்தம் ஐந்து கி.மீ. சுற்று வட்டாரத்துக்குள்ளேயே மொத்தமாக முடிந்துவிடும் எங்கள் சிற்றூருக்குள் ஓர் ஆணும் ஒரு பெண்ணும் தனியாகச் சந்திப்பது பிரச்னைதான். அப்படிப் பேசிக்கொண்டால் அவர்கள் நிச்சயம் காதலர்களாகத்தான் இருப்பார்கள் என்பது எல்லோருடைய கருத்துக் கணிப்பு. ஆனால், நான்தான் எதிலும் எப்பவும் ‘டோன்ட் கேர் மாஸ்டரி’ ஆச்சே!

”ஜெயக்குமார்… என்ன முடிவு பண்ணியிருக்கீங்க?”

”நாங்க ரெண்டு பேரும் ஊரைவிட்டு ஓடிப் போகப் போறோம். அபர்ணாவைச் சந்திச்சுப் பேச முடியலை. நான் ஒரு பிளான் சொன்னா அதை அபர்ணாகிட்ட போய் சொல்லிடறயா? அவளை வெளியே கூட்டி வர்றது உன் பொறுப்பு” என்றான்.

”என்ன விளையாடறீங்களா? நீங்க ரெண்டு பேரும் போயிடுவீங்க… அப்புறம் என் நிலைமை? சரி, அதைவிடு. எங்கே போவீங்க? எப்படிக் குடும்பம் நடத்துவீங்க?”

”அது பிரச்னை இல்லை. மதுரையில மீனாட்சி அம்மன் கோயில்லவெச்சு அபர்ணாவுக்குத் தாலி கட்டிட்டு, அப்படியே என் ஃப்ரெண்ட் வீட்டுக்குப் போயிடுவேன். அங்க போய் தங்கிட்டுதான் புது வேலை தேடணும்.”

”ஓ! காதலிக்கறது நீங்க… கஷ்டப்படறது நண்பர்களா?”

”நண்பர்கள்னா உதவி செய்யறதுக்குத்தானே?”

”அது சரிதான்… அதனாலதான் நான் இவ்வளவு ரிஸ்க் எடுத்து உங்ககூட பேசிட்டு இருக்கேன். நல்ல வேலைக்குப் போயிட்டு அப்புறமா இப்படி ஒரு முடிவெடுத்திருந்தா சந்தோஷமா அவளைக் கூட்டிட்டு வந்து உங்ககூட அனுப்பிவெச்சிருப்பேன். ஆனா, ஃபியூச்சரைப் பத்தி யோசிக்காம சந்திச்சுப் பேசறது மட்டுமே போதும்னு நினைச்சதாலதான் இருக்கற வேலையும் போச்சு. நாம இருக்கறது 100 கோடி ஜனத்தொகை கொண்ட நாடு. அவ்வளவு சீக்கிரம் நல்ல வேலை கிடைக்காது. புரியுதா?”

என் வார்த்தைகளில் தெறித்த உண்மையை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இன்னும் அரை மணி நேரம் நீண்டது வாக்குவாதம்.

”உங்க வீட்ல வேற யார் இருக்காங்க?”

”அம்மா மட்டும்தான்.”

”நீ அபர்ணாவைக் கூட்டிட்டு ஓடிட்டா உங்க அம்மாவை என்ன பாடுபடுத்துவாங்க தெரியுமா? நீங்க ஓடிப் போறப்ப உங்க அம்மாவையும் கூட்டிப் போவீங்களா?” என்ற எனது கேள்வி அவனைக் கொஞ்சம் அசைத்தது. நிஜ உலகுக்கு வந்திருக்க வேண்டும். கண்களில் கண்ணீ ரோடு கிளம்பிப் போனான்.

அதன் பிறகு ஜெயக்குமார் அபர்ணாவைச் சந்திக்க முயற்சிக்கவே இல்லை. எங்கே போனான். என்ன ஆனான் என்றே தெரியவில்லை.

கடைசி செமஸ்டர் பரீட்சை நெருங்கியது. பரீட்சைக்கு இரண்டு நாட்கள் முன்னால் அபர்ணாவிடமிருந்து போன், ”என்னால் ஜெய்யை மறக்க முடியலைடி… ஒரு வார்த்தைகூடப் படிக்க முடியலை.” தோழிக்குரிய கடமையில் அவளை ஆறுதல்படுத்தி, அத்தனை பாடங் களையும் தொலைபேசியிலேயே நடத்தினேன்.

பரீட்சை முடிந்த அன்று காரில் ஏறிய அபர்ணாவுக்கு அவள் வீட்டில் வேக வேகமாக மாப்பிள்ளை பார்க்கும் ஏற்பாடுகள் நடக்கத் தொடங்கின. இரண்டு மாதங்கள் கழித்து ரிசல்ட் பார்க்கக்கூட அவள் வரவில்லை.

கவலையோடு இருப்பாளே என்று ரிசல்ட் பார்த்துவிட்டு போன் செய்தேன். எங்களுக்கு இடையேயான உரையாடல் இப்படியாக அமைந்தது.

”அபர்ணா! நீ எல்லா சப்ஜெக்ட்லயும் பாஸ்.”

”ஹப்பா! ஒரு வழியா படிப்பு முடிஞ்சுபோச்சு. சரி! உன் மார்க்ஸ் எவ்வளவு?”

”அதை ஏன் கேட்கறே… மத்த எல்லா சப்ஜெக்ட்லயும் 75 பர்சென்ட் தாண்டிருச்சு. ‘சாஃப்ட்வேர் இன்ஜினீயரிங்’ல மட்டும் அரியர் விழுந்திடுச்சு. எப்படின்னே தெரியலை.”

”இதுக்குத்தான் ஒழுங்கா படிக்கணும்கிறது.”

”ஏய்! விளையாடறியா? இது என்ன சப்ஜெக்ட்னு ஞாபகம் இருக்கா?”

”ஓ… நல்லா தெரியுமே! எனக்கு எல்லாப் பாடத்தையும் போன்ல நடத்தினியே. அதானே. எனக்கு நடத்துன சரி… நீ படிச்சியா? சும்மா அடுத்தவங்க பிரச்னையை எல்லாம் இழுத்துப் போட்டுக்கிட்டா இப்படித் தான் ஆகும்!”

– ஜூலை, 2009

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *