பிரிந்தோம்… சந்தித்தோம்!

1
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 16,431 
 
 

என்னோட பேரு சாரங்கபாணிங்க. காமதேனு அப்பார்ட்மென்ட்ல ஃப்ளாட் ஷி&1–ல குடியிருக்கேன். வயசு அம்பத்தி ரண்டு. ஸ்டேட் பேங்க்ல ஒர்க் பண் றேன். சம்சாரம் பேரு விமலா… ஹவுஸ் ஒய்ஃப். ஒரே பொண்ணு… பேரு காயத்ரி. எம்.பி.பி.எஸ். ரெண்டாவது வருஷம் படிக்கிறா. எனக்குக் கல்யாணம் ஆகி இந்த இருபது வருஷமா வாடகை வீட்லதான் குடியிருந்தேன். இப்ப இருக்கிற இந்த ஃப்ளாட் சொந்தமா வாங்கினது. ஒரு ஃப்ளாட் வாங்க ணும்கிறது என் ரொம்ப நாள் ஆசை, போன மாசம்தான் நிறைவேறுச்சு. ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. ஆனா, அந்தச் சந்தோஷமெல்லாம் நேத்தோட முடிஞ்சுபோச்சுங்க. நேத்து நைட் முழுக்கத் தூங்கவே இல்லை. இனிமேலும் தூங்குவேனான்னு தெரியலை. காரணம், என்னன்னு கேக்கிறீங் களா… எல்லாம் இந்தப் பாழாப்போன காதல் தாங்க!

என்னடா…அம்பத்திரண்டு வயசுல காதல்ங்கிறா னேன்னு கேவலமா பார்க்காதீங்க… இது பழைய காதல்ங்க. என்ன சிரிக்கிறீங்க? ஓ… பழைய துணி, புதுத் துணி மாதிரி காதலையும் ரெண்டாப் பிரிக்கிறானேன்னு தானே! என்னங்க பண்றது? வேறெப்படி சொல்றதுன்னு தெரியலியே!

பக்கத்து பிளாட் ஷி-2 ஓனர் ஒரு மார்வாடி. ஏனோ தெரியலை… அவங்க இன்னும் குடிவரலை. வேறொரு பார்ட்டியைக் குடி வெச்சுட்டாங்க. அங்கதான் எனக்குப் பிரச்னையே ஆரம்பிச்சுது. நேத்து அவங்க பால் காய்ச்ச வந்தாங்க. அவங்கன்னா, அதாங்க… எனக்குத் தூக்கம் வராமப் பண்ணின, அதாவது நான் காதலிச்ச பொண்ணு. ஸாரிங்க… இப்ப பொம்பளை. பேரு சந்திரா. எனக்கு பயங்கர ஷாக். முதல் காதல் மறக்காதும்பாங்க. ஆனா, காலம் மறக்கடிச்சிருச்சு. இப்ப சந்திராவைப் பார்த்ததும் மறுபடியும் அந்த காலேஜ், ஸ்கூட்டர், லிஃப்ட், மாடிப்படி, கேன்டீன், லைப்ரரி எல்லாம் ஒரு மின்னல் மாதிரி மனசுக்குள்ள வந்து வந்து போகுதுங்க.

பால் காய்ச்ச எங்க ளையும் கூப்பிட்டாங்க. போகவேண்டியதாப் போச்சு! என் சம்சாரத் தைப் பொறுத்த வரைக்கும் ஷி-2-ல பால் காய்ச்சுறாங்க. அவ்வளவுதான்! சந்திரா வீட்லயும் எங்களை ஷி-1 ஆளுங்கன்னு மட்டும் தான் தெரியும். நாங்க காதலிச்சது இங்க யாருக்குமே தெரியாதே!

எல்லா சடங்கும் முடிஞ்சப்புறம் அறிமுகப்படலம். சந்திராவின் கணவர் பேரு மாதவனாம். ஹார்பர்ல ஒர்க் பண்றாராம். கார்கில்ல இருக்கவேண்டிய ஆளு. அவ்வளவு வெறைப்பு. ஒரே ஒரு மகனாம். பேரு அரவிந்த். டி.வி.எஸ்&ல ஒர்க் பண்றானாம்.

ஒரு வழியா எல்லாம் முடிஞ்சு, ஒரு கூட்டம் கிளம்புச்சு. அதுல நானும் ஒருத்தனாகி, என்னோட ஃப்ளாட்டுக்குள்ள நுழைஞ்சுட்டேன். நேரா கண்ணாடி முன் வந்து நின்னேன். காதல் எவ்வளவு பெரிய சக்தி பாருங்க… நான் தலை சீவிப் பார்த்தேன்… சிரிச்சுப் பார்த்தேன்… சட்டைகூட மாத்திப் பார்த்தேங்க. கடைசியில, இதெல்லாம் ஏன் செஞ்சேன்னு தெரியாம அழுதுட்டேங்க. இன்னும் ஆறு வருஷத்துல எனக்கு ரிட்டையர்மென்ட். அப்புறம், மகளுக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணி வெச் சுட்டு, பேரன்& பேத்தின்னு நிம்மதியா இருக்கலாம்னு பார்த்தா, எல்லாம் போச்சு! உயிருக்குயிராக் காதலிச்சவ பக்கத்து ஃப்ளாட்ல இருந்தா, எப்ப டிங்க ஒரு மனுஷனால நிம்மதியா இருக்க முடியும்?

காதல்னா சாதாரண காதல் இல்லீங்க. ரெஜிஸ்டர் ஆபீஸ் வரைக்கும் போய் நின்ன காதல் அது. ப்ச்… அந்த சோகக் கதையெல்லாம் இப்ப எதுக்கு? அதே பொண்ணு பக்கத்து ஃப்ளாட்ல வந்து நிக்குதேன்னுதான் திக்குதிக்குன்னு இருக்கு. இது எங்கே போய் முடியப் போகுதோ!

இன்னியோட ரெண்டு மாசம் ஓடிப்போச்சுங்க. நரக வேதனைங்க. அம்பத்திரண்டு வயசுல இதெல்லாம் எனக்குத் தேவையா? ஆண்டவன் ஏன் என்னை இப்படிச் சித்ரவதைப்படுத்து றான்னு தெரியலை. இந்த ரெண்டு மாசத்துல எனக்கும் சந்திராவுக்கும் பல சந்திப்புகள். என்னோட பேங்க்குக்கு வந்து, அவளோட… ஸாரி, அவங்க ளோட பேர்ல புது அக்கவுன்ட் ஓப்பன் பண்ணினாங்க. அப்புறம், என்னோட ஒய்ஃப் காய், கொழம்பு தர்றது, பதிலுக்கு சந்திரா ஏதாவது செஞ்சு தர்றதுன்னு… தாங்க முடியலீங்க!

சந்திராவின் ஹஸ்பெண்ட் மாதவன் ரெண்டு, மூணு தடவை என் பொண்ணு காயத்ரிகிட்டே பேசினதோட சரி. சந்திராவின் மகன் அரவிந்த் என் ஒய்ஃப்கிட்டே ஆன்ட்டி, ஆன்ட்டின்னு அப்பப்ப பேசுவான். நான் யார்கிட்டேயும் எதுவும் பேசுறதில்லீங்க. நான் உணர்ச்சிவேகத் துல ஏதாவது உளறப் போக, அதுஇதுன்னு வெளியே தெரிஞ்சிருச் சுன்னு வைங்க… பெரிய பிரச்னையாகிடுமே! பொண்ணுக்கு சம்பந்தம் பண்ணப் போற வயசுல இதெல்லாம் எனக்குத் தேவையா?

இன்னிக்குக் காலையில நடந்தது தாங்க மனசைப் போட்டுக் குடைஞ்சுக் கிட்டே இருக்கு. நான் ஆபீஸ் கிளம்ப, படிக்கட்டுல இறங்கிட்டு இருந்தேன். சந்திரா பால் பாக்கெட்டோ ஏதோ வாங்கிட்டு, மேலே வந்துட்டிருந்தாங்க. எனக்குத் தூக்கிவாரிப்போட்ருச்சுங்க. காலேஜ்ல இப்படித்தான்… படிக்கட்ல ஏறி இறங்கும்போது, எங்களுக்குள்ள ஒரு சின்ன விளையாட்டு. நானும் சந்திராவும் ஒருத்தருக்கொருத்தர் வேணும்னே இடிச்சுக்கிட்டு ஸாரி சொல்வோம். திங்கட்கிழமை சந்திரா இடிச்சான்னா, செவ்வாய்க்கிழமை நான் இடிக்கணும். அப்படி ஒரு விளையாட்டு எங்களுக்குள்ள. திடீர்னு அந்த விளையாட்டு எனக்கு இப்போ ஞாபகம் வந்திருச்சு. நல்லவேளை, இன்னிக்குத் திங்கட்கிழமை. சந்திரா தான் இடிக்கணும். அந்த வகையில நான் தப்பிச்சேன்!

சே… எவ்வளவு கேவலமான எண்ணம் பாருங்க! சந்திரா ரொம்பப் பக்கத்துல வந்துட்டாங்க. சந்திராவுக்கும் அந்த விளையாட்டு ஞாபகத்துக்கு வந்தி ருக்கணும்னு நெனைக் கிறேன்… லேசா சிரிச்சுட்டு, மேலே போய்ட்டாங்க.

பேங்க்ல போய் உட்கார்ந்தா, அம்பது ஐந்நூறாத் தெரியுது. நூறு ரூபாயெல்லாம் வெள்ளையாத் தெரியுது. லீவு போட்டுட்டு, பீச்சுக்குப் போய் சுத்திட்டு, வீட்டுக்கு வந்தேன். எனக்குன்னா பி.பி. கன்னாபின்னான்னு எகிறுது. எப்ப ஹார்ட் அட்டாக் வருமோனு பயமா இருக்கு.

இன்னிக்கு இதுக்கு ஒரு முடிவு கட்டியே ஆகணும். விமலாவும் காயத்ரியும் நகை வாங்கணும்னு தி.நகர் போயிருக்காங்க. இன்னிக்கு எப்படியாவது சந்திராகிட்டே பேசிடணும். மொட்டை மாடியில சந்திரா வீட்டுத் துணியெல்லாம் காய்ஞ்சுட்டிருந்தது. எப்படியும் அதை எடுக்க வருவாங்கிற நம்பிக்கையில மொட்டை மாடிக்குப் போய்க் காத்திருந் தேன். செருப்புச் சத்தம் கேக்குது. சந்திராவாதான் இருக்கணும். ஆமாம், சந்திராவேதான்! ஒண்ணு சொல்ல மறந்துட்டேனே… நான்தான் இந்த ரெண்டு மாசமா காதல், சந்திரான்னு பழைய ஞாபகத்துல புலம்பிட்டி ருக்கேனே தவிர, சந்திராகிட்டே எந்தப் பதற்றமும் இல்லை; பயமும் இல்லை. பொம்பளைங்க இந்த விஷயத்துல வல்லினம் தான். பாருங்களேன், நான் நிற்பதைப் பார்த்தும் கண்டுக்காம, சந்திரா அவங்கபாட் டுக்குத் துணிகளை எடுத்துட்டு இருந்தாங்க.

நான்தான் கிட்ட போய்த் தொண்டையை செருமிக்கிட்டுப் பேச ஆரம்பிச்சேன். ‘‘சந்திரா, நீ… நீங்க ஷி-2 &க்கு வந்ததிலேர்ந்து என் சந்தோஷம், நிம்மதி எல்லாமே போச்சு! காரணம், உங்களுக்கே தெரியும். சரி… காலி பண்ணிட்டு போய்டலாம்னு பார்த்தா, என் ஒய்ஃப் சம்மதிக்க மாட்டா. முடிஞ்சா, நீங்க காலி பண்ணிடுங்க. நீங்க வாடகைக்குத்தானே வந்திருக்கீங்க! சுயநலமா யோசிக்கிறேனேன்னு நினைக்காதீங்க, ரெண்டு குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயம் இது. அதனாலதான்…’’

ஒருவழியாகக் கோவையாகச் சொல்லி முடித்தேன். சந்திரா எல்லாத் துணிகளையும் எடுத்துக்கிட்டு என் பக்கம் வந்தாள். ‘‘சாரு! (அப்பவும் என்னை இப்படித்தான் சுருக்கிக் கூப்பிடு வாள்) உங்க நிலைமை எனக்கு நல்லாவே புரியுது. பழசை நினைச்சு ஏன் குழப்பிக் கிறீங்க? நாம ரெண்டு பேரும் காதலிச்சோம் கிறதுக்காக பக்கத்துப் பக்கத்து ஃப்ளாட்ல இருக்கக் கூடாதா? நீங்களும் காலி பண்ண வேணாம். நானும் காலி பண்ண மாட்டேன். சொல்லப் போனா, நீங்க இங்கே இருக்கீங் கன்னு தெரிஞ்சேதான், நான் குடி வந்தேன்’’ என்றாள்.

எனக்குத் தலை சுற்றியது. தெரிஞ்சே வந்திருக்கான்னா இவங்களை… இவளை என்ன பண்றது?

‘‘ஆமா சாரு… தெரிஞ்சுதான் வந்தேன். என் மகன் அரவிந்த், உங்க பொண்ணு காயத்ரியை லவ் பண்றானாம். என்கிட்டே வந்து சொன்னான். யாரு, என்னன்னு கேட்டப்போதான் அது உங்க பொண்ணுன்னு தெரியவந்துச்சு. அது எனக்கு ஷாக் அண்ட் சர்ப்ரைஸ்.

அரவிந்த் அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட். அவர்கிட்டே பேசவே மாட்டான். அப்படியே சொன்னாலும் அவர் ஒத்துக்கப் போறதில்லை. என்ன பண்றதுன்னு யோசிச்சேன். காதலிச் சவங்க கிடைக்கலேன்னா எப்படி வலிக்கும்னு எனக்கு நல்லாவே தெரியும்..’’

சந்திரா விசும்புற மாதிரி இருந்தது. பொம்பளைங்க வல்லினம் இல்லை… மெல்லினம்தான்!

‘‘அதான், உங்க வீட்டுக்குப் பக்கத் துலயே வந்து, உங்க பொண்ணு காயத்ரியை அவருக்குப் பிடிக்க வைக்கணும்னு நெனைச்சேன். பாதிக் கிணறு தாண்டியாச்சு. உங்க மனைவியும் அரவிந்த்கிட்டே நல்லா பாசமா இருக்காங்க. நம்ம ரெண்டு பேரை யும் சேர்த்துவைக்காத காதல், நம்ம பிள்ளை களையாவது சேர்த்து வைக்கட்டும். நாம இப்படியே இருந்துடு வோம். நீங்க ஷி-1… நான் ஷி-2.’’

அதற்கு மேல் பேசினால், உடைந்து அழுதுவிடுவோம் என நினைத்தாளோ என்னவோ, விறுவிறு வெனக் கீழே போய் விட்டாள்.

சந்திரா சொல்லியதை நெனைச்சுப் பார்த்தேன். ‘நம்ம ரெண்டு பேரையும் சேர்த்துவைக்காத காதல் நம்ம பிள்ளை களையாவது சேர்த்துவைக்கட்டுமே!’

ரொம்ப நாளைக்குப் பிறகு, அன்றிரவு நானும் நிம்மதியாகத் தூங்கிப்போனேன்!

வெளியான தேதி: 21 மே 2006

Print Friendly, PDF & Email

1 thought on “பிரிந்தோம்… சந்தித்தோம்!

 1. Dear Writer,

  Ex lovers children are loving each other.

  It is supported by them.

  What a ridiculous end ?

  Regards….
  Kannan
  7061901800

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *