பாவமா? பாடமா?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: May 12, 2012
பார்வையிட்டோர்: 12,020 
 
 

அந்த அதிபர் அலுவலகத்திற்குள் நுழைந்தவுடன் திடுக்கிட்டு விட்டேன். “இருங்கோ, நீங்க தானே மதுமிதாவுடைய அப்பா?” அந்தக் குரல் எனக்குப் பரிச்சயமானது. பத்து வருடங்களிற்கு முன்பு என் காதுக்குள் சிணுங்கலாய், செல்லமாய்த், தேனாய் இனித்துக்கொண்டு என் உள்ளத்தை நனைத்த அந்தக் குரலை, அந்தக் கண்களை, அந்தப் பார்வையை, சட்டென்று நான் அடையாளம் கண்டுகொண்டேன். என் லாவண்யா. பிரபல பாடசாலையொன்றில் எனது மகள் மதுமிதாவினுடைய தரம் 06 க்கான அனுமதிக்காக விண்ணப்பித்திருந்தேன். அது தொடர்பாக அதிபருடன் கதைப்பதற்குச் சென்றிருந்தேன். ஆனால் அதிபர் இருக்ககையில் அவளா? சுற்றும் இதை நான் எதிர்பார்க்கவில்லை.

நேர்த்தியாய்க் கட்டப்பட்ட நீலநிற கொட்டன் சாறி,
நெற்றியில் சின்னதாய் ஸ்டிக்கர் பொட்டு,
கழுத்தோடு ஒட்டியதாய் மெல்லிய தங்கச்செயின்.

யார் நல்லாயிருக்கோணுமென்று நான் அனுதினமும் பிரார்த்திக்கின்றேனோ, யாருடைய திருமணவாழ்வு சிறப்பாயிருக்க வேணுமென்று நினைத்தேனோ, அந்த அழகுச்சிலை இப்படியா வாழவேணும். என் உள்ளத்தைக் கவர்ந்த முழுமதி, திருமதி ஆகவில்லை என்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. செல்வி லாவண்யா சாபரட்ணம், அதிபர்; அவளுக்கு முன்னாலிருந்த பெயர்ப்பலகை என்னை ஏளனம் செய்தது. “திருமணம் தான் ஒரு பெண்ணிற்கு வாழ்க்கை அல்ல மணவாழ்வு, தாய்மை என்பன ஒரு பெண்ணிற்கு அவசியம் தான், ஆனால் அவற்றிற்கும் அப்பால் கல்வி பதவிகளிற் சிறந்து ஓர் உயர்ந்த பெண்மணியாக வாழ்ந்து காட்ட ஒரு பெண்ணால் முடியும்” என அன்றொரு நாள் அவள் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. லாவண்யா பெயரைப் போலவே அவளும் அழகானவள், என் நெஞ்சத்தில் பூத்த முதல் பூ….. காதல் என்றால் என்னவென்று எனக்கு காட்டித் தந்தவள்.

அன்றைக்கு சரியான மழை, அந்த பரமேஸ்வரா Bus Halt இல் தான் அவளைச் சந்தித்தேன். நீண்ட நேரமாக இருவரும் மௌனமாகத்தான், 764 பஸ்ஸ|க்குக் காத்திருந்தோம், பொறுமையிழந்து “சே……….இதைவிட நடந்து போயிருக்கலாம்”, அவளைப் பார்த்தேன், பதிலாகத் தந்த அந்த ஒற்றைச் சிரிப்பில் என் உள்ளத்தில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து விட்டாள். அறிமுகம் காதலாகியது. ஏத்தனையா காதலர்களைக் கண்டுகொண்ட பல்கலைக் கழக வளாகம் எமக்கு சொர்க்க பூமியாகியது. பெரிய கடல் வந்து அழிக்கப்போகின்றது என்பதை அறியாமலேயே எங்கள் மனங்களில் சின்னச் சின்ன மணல்வீடு கட்டிக் குடியிருந்து குதூகலித்தோம்.

அப்போது தான் சாதி, சமுகம் என்ற கட்டுப்பாடு எங்களுக்கு சாவுமணி அடித்தது.

“என்ன பிரச்சினை வந்தாலும் உன்னைக் கைவிடமாட்டனம்மா”.

எத்தனை முறை அவளுக்குச் சொல்லியிருப்பன்.

“நீங்க கட்டுற தாலி குங்குமத்தோடை நான் செத்துப் போகோணும், அது ஒண்டு மட்டும் எனக்குப் போதும்”, அடிக்கடி அவள் சொல்லுவாள்.

“அப்பிடி மட்டும் கேளாதையம்மா, எனக்கு முதல் உன்னை அனுப்பியிட்டு நான் மட்டும் இந்த உலகத்திலை தனியா வாழமாட்டன்”.

என் வார்த்தைகள் வெளிவருமுன்பே என் கையணைப்பில் கட்டுண்டு, நெஞ்சில் முகம் சாய்த்து அழுவாள். ஊரவர்களின் பரிகசிப்பு, பிரிந்து விடுவோமோ என்தின்ற பயம், நாங்கள் இருவரும் சந்திப்பதில் கண்ட இடர்ப்பாடுகள், இவையெல்லாம் ஒருவரையொருவர் கண்ட போது நிகழும் அழுகையிலும், ஆசுவாசப்படுத்தலிலும், மெல்லக் கரைந்துவிடும். உண்மையிலேயே நான் அவளில் வைத்த அன்பு பவித்திரமனது தான்.

சாதி என்கின்ற யாழ்ப்பாணத்துச் சமூகத்தின் படிக்கட்டுக்களில் மிகவும் மேல்நிலையிலுள்ளது எங்கள் குடும்பம். தவறி விழுந்தாற்கூட எங்கள் சமுகம் ஏற்றுக்கொள்ளாத நிலையில், என்னை இறங்கிவர என் குடும்பம் விடவில்லை. காரணம் காட்டி என் காதலை மறுத்தது. என் நினைவோடு எனக்காக வாழும் என் லாவணி ஒருபுறம், என்னை வளர்த்து ஆளாக்கி நம்பிக்கையோடு வாழும்; என் குடும்பம் மறுபுறம். என் ஒருவன் வாழ்வுக்காக என் தாய் தந்தையரைத் தவிக்க விடலாமா? என் தங்கை திருமணம்? எல்லாவற்றுக்கும் மேலாக அம்மா, அப்பாவை விட்டு நான் திருமணம் செய்து போவதென்றாலும், அவர்களிற்கு ஒரு பொருளாதார பலத்தையாவது ஏற்படுத்திவிட்டுத் தான் செல்லவேண்டும்.

யாழ்ப்பாணத்தில் இருந்துகொண்டு எதையும் செய்யமுடியாது. வேலை கிடைக்காத விரக்தி வேறு. எப்படியாவது என் அன்புக்குரியவளை அடையவேண்டுமென்ற ஆசையோடு வீட்டு உறுதியை ஈடு வைத்து, பற்றாக்குறைக்கு அம்மாவின் நகைகளை அடகுவைத்து, கிடைத்த வாய்ப்பொன்றைப் பயன்படுத்தி, வெளிநாடு புறப்பட்டேன். அந்தக் கடைசிச் சந்திப்பு, ஆண்களைக்கூட அழவைக்கும் சக்தி பெண்களிற்கு உண்டு என்பதை அன்றுதான் கண்டுகொண்டேன். என்னைக் கட்டியணைத்து அழுதாள் என்பதைவிட கதறினாள் என்றுதான் சொல்லவேண்டும். எங்கள் கல்யாணக் கனவுகள் அந்தக் கண்ணீரிலேயே கரைந்துவிடப்போவதை அறியாமலேயே, பயணமாகினேன்.

பாதிக் காசை கொழும்பு லொட்_{க்கள் தின்றுவிட மீதிக்காசை ஏஜென்சிக்கு கொடுத்து, பிரான்ஸ்ஸ{க்குப் போகும்போது பாதியிலேயே பிடிபட்டு, கஸ்ரப்பட்டு ஊருக்கு வந்துசேர்ந்தேன். விதி இப்படியா விளையாடவேண்டும். தலையில் இடிவிழுந்தாற் கூடத் தாங்கியிருப்பேன். என் வாழ்க்கையிலல்லவா விழுந்துவிட்டது. பட்ட கடனுக்குப் பதில் சொல்லவேண்டிய பொறுப்பு.

“நீ இனி வெளிநாடு போனது காணும்” என்று என் தந்தை கல்யாணச் சந்தையிலே வியாபாரம் செய்யப் புறப்பட்டுவிட்டார். நான் ஒரு பட்டதாரி என்பதால் என்னைப் பணங்கொடுத்து வாங்கப் பல பணக்கார பெற்றோர்கள் முன்வந்தார்கள். ஏற்கனவே எதிர்ப்புக்கு மத்தியில் இருந்த என் காதல் சமாச்சாரம் எழுந்து நிற்கக்கூட முடியவில்லை. நானும் யோசித்துப்பார்த்தேன், என் அப்பா,அம்மாவை அம்போ என்று விட்டுவிட்டு நான் அவளுடன் சேர்ந்து வாழ முடியுமா? இதுதானா காதல்? இது தானா வாழ்க்கை? காதல் ஒரு கோவில் போன்றது, அதில் காதலர்கள் மட்டுமல்ல பெற்றவர்களும் தெய்வங்கள் தாம். நான் அன்பு வைத்த குற்றத்திற்காக நொந்துபோன என் குடும்பத்திற்கு நெருப்பு வைக்க என்னால் முடியவில்லை.
லாவண்யா படித்தவள், புத்திசாலி, என் நிலமையைப் புரிந்து கொள்ளுவாள். இப்பெல்லாம் வெளிநாட்டு மாப்பிளையள் படித்த அழகான பெண்களைத்தானே கேட்கினம், கொஞ்ச நாள் போக என்னை மறந்து வேறை கல்யாணம் செய்துகொள்ளுவாள். காதல் ஒரு குற்றமில்லையே, இது அவளுக்குத் தோல்வி இல்லை ஒரு அனுபவம். அவளின் காயங்களை காலம் ஆற்றிக்கொள்ளும், என என் சுயநலத்திற்கு நானே முலாம் பூசிவிட்டு, என் லாவண்யாவை என் மனசுக்குள் உயிரோடு புதைத்துவிட்டு, இன்னொருத்திக்கு மாலையிட்டுவிட்டேன். இரண்டு மாதங்கள் கழித்து வேலை கிடைத்து லாவண்யா வெளிமாவட்டம் சென்றுவிட்டதாக அறிந்துகொண்டேன். அதற்குப் பிறகு விதி என்னை அவளைச் சந்திக்க வைக்க முயற்சிக்கவில்லை.

ஆனால் இன்று……அந்தப் பிரபல கல்லூரியின் புது அதிபராக………எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. “உங்க மகள் மதுமிதாவுக்கு திருப்தியான Marks இருப்பதால், அவவுக்கு எங்கள் School இல் அனுமதி வழங்குகிறோம்; உங்களுடய Particulars ஐ Management assistant இடம் கொடுத்திட்டுப் போங்கோ” நீங்கள் போகலாம் என்ற அவள் பார்வையைத் தாங்குகின்ற சக்தி இல்லாதவனாக வெளியில் வந்தேன்.

உண்மையில் இங்கு தோற்றுப் போனது யார்? நான் கொடுத்த தோல்வியைச் சவாலாக ஏற்று, இன்று புகழ், பதவி என்ற அந்தஸ்தை அவளல்லவா வென்றிருக்கிறாள். திருமணமான ஒரு வருடத்திலேயே மதுமிதாவை என் கையில் தந்துவிட்டு என் மனைவி மறைந்து போனதை இவள் அறிவாளா? இன்று தோற்று நிற்பது நான் தானே?

லாவண்யாவின் காதலை, அவளின் மனத்திடத்தை என்னால் வெல்லமுடியுமா? இன்றுங்கூட அவளைத் திருமணம் செய்து கொண்டாலென்ன? சமூகம் விட்டுவிடுமா? பெட்டையும் குமர்ப்பிள்ளையாகப்போகுது, இப்ப இவருக்கு ஒரு கலியாணம். சூழ்நிலைக் கைதியாக 10 வருடங்களுக்கு முன்பு நான் விட்ட பிழைக்கு இன்றுங்கூட தண்டனை அனுபவிப்பதை, என் மனதுக்குள் நிகழும் போராட்டத்தை அறியமுடியாத இந்த சமுதாயம் எதைத் தான் சொல்லாது? திருமணம் என்பது வெறும் ஆண் பெண் உறவுக்காக மட்டுமல்ல, அதையும் தாண்டி ஒருவருக்கொருவரான, நேயத்தை, துணையை நிலைநாட்டும் பந்தம் என்பதை இந்தச் சமூகம் உணர்ந்து கொள்ளுமா? மேலை நாடுகளைப் போல மறுமணத்தை சாதாரணமாக ஏற்றுக் கொள்ளும் பக்குவம், யாழ்ப்பாணத்துச் சமூகத்துக்கு வந்துவிடுமா? அவளைக் கைவிட்டுச் சென்ற குற்றத்திற்காக உண்மையில் இன்று தான் அவள் எனக்குத் தண்டனை தந்திருக்கிறாள். அவள் வேறு திருமணம் செய்திருந்தால், நான் வென்றிருப்பேன். ஆனால் அவள் என்னைத் தோற்கடித்து விட்டாள். யோசித்துக் கொண்டே வந்து பஸ்ஸில் ஏறினேன். இந்திய சினிமாப்பாடலொன்று ஏளனம் செய்தது.

“நேசம் வைச்ச பாவத்துக்கு நெஞ்சமே அனுபவி
நீரை விட்டு அழிச்சுப்புட்டா நீங்குமா தலைவிதி”

– இலங்கையிலிருந்து வெளிவரும் ஞானம் சஞ்சிகையில் இக்கதை ஏற்கனவே பிரசுரமானதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *