கம்பியூட்டர் கண் முன்னால், ஒரு நிழல் சித்திரமாக ஓடிக் கொண்டிருந்தது கடைசியில் மிஞ்சியது இப்படி வருகிற வெறும் வரட்டுச் சங்கதிகளைக் கொண்ட கணணி யுகம் தான் நகுலனின் வீட்டில் நாலைந்து கம்பியூட்டர்கள் ஆளுக்கு ஒவ்வொன்றாய்………….. எல்லாம் வெளிநாட்டுப் பணம் செய்கிற வேலை வெள்ளைத் தோல் கொடுத்த வரம் அங்கே கொடி கட்டிப் பறப்பதாய் எல்லோர் நினைப்பும்
புழு மாதிரிப் புதைகுழிக்குள் போய் விட்ட மண் நகுலனுக்கு அது புரிந்தபாடாயில்லை. மண்ணோ மனிதர்களோ எதுவும் நினைவில் நிற்காத ஒரு சலன ஓட்டம் யாழ்ப்பாண மண்ணைத் துறந்து வந்து எவ்வளவு காலமாகி விட்டது கப்பலேறிக் கள்ளமாகக் கனடா தேசம் வர என்ன பாடுபட்டிருப்பான். அதெல்லாம் பழங்கதை பிடிவாதமாக ஒரு சுத்தமான யாழ்ப்பாணத்துத் தமிழச்சி தான் மனைவியாக வர வேண்டுமென்று அவன் தவம் கிடந்தானே அப்படியொரு பெண்ணைத் தேடிக் கண்டு பிடிக்கவே ஒரு யுகம் பிடித்தது. லலிதா அவனுக்கு மனைவியாக வந்து ஒரு வருடத்திற்கு மேலாகிறது
முதலில் அவன் கனடாவுக்கு எடுத்தது தன் அம்மாவையும் மூன்று தங்கைச்சிமாரையும் தான். அவர்களும் வளர்ந்து விட்டார்கள் படிக்கிற வயது. படிக்கிற நேரம் தவிர மிகுதி நேரமெல்லாம் கம்பியூட்டருடன் தான் ஒவ்வொரு கணமும் இண்டர்நெட் பார்க்க வேண்டும் பேஸ் புக்கில் தகவல் சேகரிக்க வேண்டும் அதில் யார் யாரோவெல்லாம் வந்து சிக்குவார்கள் நகுலனுக்கு இது இஷ்டமான விளையாட்டு ஒரு பழக் கம்பனியில் வேலை லலிதா வேறு வேலைக்குப் போகிறாள், வீட்டுக் கடன் அடைக்க இருவருமே வேலைக்குப் போக வேண்டிய நிலைமை இன்னும் குழந்தை பிறக்கவில்லை. பிறந்தால் அது வேறு சுமை. இப்போதைக்கு வேண்டாமே என்றிருந்தது
ஒவ்வொரு நாளும் பேஸ் புக்கில் புதிய தேடல்களுடன் அவன் இருப்பான். யார் யாரோ வந்து போவார்கள் நினைவில் நிற்காத முகங்களாய் எல்லாம் கரைந்து போகும். வெகு நாளாய் ஆவலோடு எதையோ எதிர்பார்த்துத் தேடுவது போல அதுவே கதியென்று கிடந்தான். கடைசியில் அவன் தேடியது கிடைத்தது.
ஒரு தேவதை வந்து கிடைத்தாள் கேவலம் ஒரு பெண் எந்த நாட்டுக்காரியோ? அவுஸ்திரேலியா தமிழ் பெண் தான், ஓரு வெள்லைக்காரியாய் வளர்க்கப்பட்டவள் லலிதாவை விடக் கொள்ளை அழகு பேஸ்புக்கில், வார்த்தைகளைத் தொடுத்து அவளுக்குத் தொடுத்த முதற் கணை அவனுக்கு மாலையாய் வந்து விழுந்தது.. இனியென்ன காதலேதான்
வெட்கம் கெட்ட காதல் ஒரு யாழ்ப்பாணத்துத் தமிழச்சியைத் தேடி எடுத்தவனுக்கு ஏன் இந்தப் புத்தி இடறல்? அவன் வெகு நேரமாய் அவளுடனேயே பொழுதை இன்பமாகக் கழிப்பான். லலிதாவுக்குத் தெரியாமல் தான் இந்தக் கள்ளக் காதல் லீலை. இரவில் அடிக்கடி அதைப் பற்றி அபத்தமான கனவுகள் வேறு.. ஒரு நாள் பிடிபட்டான் கள்ளன் அதுவும் பின்னி விடப்பட்ட பேஸ்புக் மூலமே அவர்கள் கள்ள உறவு புரிந்தது லலிதாவுக்கு .அதை அறிந்து அவள் அப்படியே நொறுங்கிப் போனாள்.. இன்னும் கொஞ்ச நாள் போனால் இது நீடித்துக் கடைசியில் அவள் கழுத்துக்குத் தான் கத்தி. அவன் துணிந்து விடக் கூடும் இது யாழ்ப்பாணமல்ல கனடா மண்ணில் இது சகஜம். விவாகரத்து, மறுமணம் எல்லாவற்றுக்கும் வழி இருக்கிறது. ஆளுக்கொரு கம்பியூட்டரென்றால் நிலைமை இப்படித் தானே தடம் புரண்டு போகும் நகுலனுக்குள் புகுந்து கொண்ட சாத்தானை யார் விரட்டுவது? என்ன சொல்லி விரட்டுவது? நாங்கள் ஏன் இப்படியானோம்?
லலிதாவுக்கு ஒரே குழப்பமாக இருந்தது கனடா மாப்பிள்ளையென்று என்ன கம்பீரமாய் வந்து சேர்ந்தவளுக்கா இந்தக் கதி? வெள்ளை மண் எங்கள் தோலை உரித்துத் தான் விட்டது பெரிய வெட்கக் கேடு புலம் பெயர் மண்ணின் நாகரீக விழுக்காடு.
ஓ! தமிழா நீ எங்கிருக்கிறாய்? நகுலனோடு இதைப் பற்றி நிறையப் பேச வேண்டியிருந்தது பேச அவனுக்கு நேரம் கிடைத்தால் தானே. எப்பவும் அந்த அவுஸ்திரேலியாக் குமரியோடு தான் அவன் பேச்செல்லாம் இனி லலிதாவோடு பேச என்ன இருக்கிறது? அவள் வெறும் பூஜ்யம். அப்படியாகி விட்டதே அவள் நிலைமை. அவளுக்கு மின்னஞ்சல் போடத் தெரியாதா? பேஸ்புக் பார்க்கத் தெரியாதா? எல்லாம் தெரியும். ஆனால் அவள் தொடுவதில்லை. தொட்டால் சுடும் என்ற பயம். தன் கற்பின் மீது அப்படியொரு அபார பக்தி அவளுக்கு. அந்த மண்ணால் தானும் எங்கே மாறி விடுவேனோ என்ற பயம் அவளுக்கு
அவன் விரும்பிய மாதிரியே தூய்மை கெடாத ஒரு சுத்த தமிழச்சியாகவே தான் இருக்க வேண்டுமென்ற வைராக்கியம் அவளுக்கு. அவன் எப்படியிருந்தாலென்ன. அவன் கதை தான் நாறுகிறதே. அவன் முடிவு செய்து விட்டான்.. இனி அவள் தான் அந்த வெள்ளைக்காரத் தமிழச்சிதான் எல்லாம். அவளை மணப்பதற்காக இனி எதுவும் நடக்கலாம். அந்த வீட்டில் பூகம்பம் புயல் எல்லாம் வரலாம். நகுலனுடைய அந்த மதி மயக்கமான அந்தரங்க விழுக்கடும், லலிதாவே அறியாமல் நேர்ந்த கள்ளக் காதலும் அவளைப் பொறுத்த வரை எளிதில் ஜீரணமாகக் கூடிய ஒரு சாதாரண விடயமல்ல. கற்பின் புனிதமான பவித்திர உணர்வு இருவருக்குமே பொதுவான ஒன்று தான். அவர்களுக்கிடையே நேர்ந்த கல்யாண உறவு லேசில் அறுந்து போகக் கூடிய ஒன்றா? சாஸ்திர ரீதியாக அக்கினி சாட்சியாக இந்தக் கனடா மண்ணில் எவ்வளவு சீரும் சிறப்புமாக நடந்தேறியது அவர்களுடைய கல்யாணம். இதையெல்லாம் மறந்து அவன் இப்படி இடையில் தடம் புரண்டு போவானென்று யார் கண்டது
கொஞ்ச நாட்களாக அவன் அவனாகவே இல்லை .லலிதாவோடு சரியாக முகம் கொடுத்துப் பேசவே முடியாமல் ஒரு பின்னடைவு, எல்லாம் அந்தப் பாழும் இண்டர் நெட் காதலால் வந்த வினைதான்.. அவளுக்கு அது முதன் முறையாகத் தெரிய வந்த போது பெரும் அதிர்ச்சியாகத் தான் இருந்தது. எப்படி இதைப் பற்றி அவனோடு பேசுவதென்று புரியவில்லை. அவளைப் புறம் தள்ளி வைத்து விட்டு அந்த இண்டர்நெட் காதலிக்காக அவன் எதுவும் செய்யலாம்.
அவளை நேரடியாகவே வரவழைத்து லலிதாவின் கண் முன்னாலேயே அவன் அவளோடு குடித்தனம் கூட நடத்தலாம் பிறகு லலிதாவின் நிலைமையென்ன? உயிர் விட்ட நடைப் பிணம் தான் அவள் இப்படிச் செத்துப் போவதற்கா இந்தக் கனடா மண்ணினது நாகரீக வாழ்க்கை அவளுக்கு? எவ்வளவு உச்சக் கட்டக் கனவுகளோடு, அவள் அங்கு வந்து சேர்ந்திருப்பாள். இப்போது அந்தக் கனவுகளே கானலில் பற்றியெரிகிற நிலைமை தான்.. மனம் தாங்காமல் ஒரு சமயம் அவள் அவனைக் கேட்டாள். அவனோ அடியோடு அதைக் கேளாதவன் போலக் கம்பியூட்டரில் மூழ்கியிருந்தான். அவள் அழுகை குமுற உணர்ச்சியில் கரைந்து ஆவேசமாகக் கேட்டாள்
“இது உங்குளுக்கே நல்லாய்ப் படுகுதா?”
அவன் கனவுப் பிரக்ஞை விடாமலே கேட்டான்
“எது?”
“இப்படிக் கவனத்தைச் சிதறடிக்கிறது .கற்பை விடுறது”
“பெரிசாக் கற்பைக் கண்டிட்டாய்” என்றான் அவன் அவளை முழுவதும் நிராகரிப்பது போல
“இதற்கு நீங்கள் இஞ்சையே ஒரு பெண்ணை எடுத்திருக்கலாம். இப்படிக் கற்பழிஞ்சு போறதுக்கு அது தான் தகும்.நான் ஒரு மானமுள்ள தமிழச்சி என்னால் இதைப் பொறுக்கேலாது சராசரி மனிசனாயல்ல கற்பு நெறி தவறாத ஓர் உத்தமனாய் நீங்கள் இருக்க வேணும்”
அவன் இதற்கு ஒன்றும் சொல்லாமல் மெளனமாக இருந்தான். வேரறுந்து போன நிலையில் அவளுக்கு விசுவாசமாக எப்படி இருப்பதெறு புரியவில்லை. மேல் போக்கான இண்டர்நெட் காதலே முக்கியமென்று பட்டது. போயும் போயும் இவளுக்காக அதை நான் ஏன் மறுக்க வேண்டுமென்று அவன் சுய கர்வம் மாறாமல் நினைத்துக் கொண்டான். அப்படியென்றால் இனி என்ன? விவாகரத்துத் தான்”
“என்ன யோசிக்கிறியள்? மீண்டும் உணர்ச்சி சூடேறிக் கேட்டாள் அவள்
“லலிதா! நான் சொல்லப் போவது உனக்கு அதிர்ச்சியாக இருக்கும் நாங்கள் பிரிந்து போறது தான் கடைசி முடிவாக இருக்கு . ஏனென்றால் எனக்கு அவள் வேணும்”
“இதைச் சொல்ல உங்களுக்கு வெட்கமாக இல்லையா?”
“நான் ஏன் வெட்கப்பட வேணும்? எங்கடை வாழ்க்கை முறை எவ்வளவோ மாறியிரூக்கு. அதற்கேற்ப நாங்களும் மாறத் தான் வேணும்”
“எனக்குப் புரியுது நகுல். ஒரு விபரீத சூழ்நிலையிலை நாங்கள் சிக்குண்டு போனம். அதற்கு நீங்கள் விதி விலக்கல்ல. இந்த அலங்கோலம், அந்தரங்கமாய் நேர்கிற குடும்பப் பிளவு என்னை மட்டுமல்ல இன்னும் எத்தனையோ பேரைப் பாதிச்சிருக்கு. எனக்குப் புரியுது நகுல் மண்ணினுடைய சுபாவத்தை ஒட்டித் தான் மனமும் மாறும். இதை மாத்த ஏலாது. நிலைமை மாற வேண்டுமானால் பழையபடி வேர் அறுந்து போன மண்ணில் போய் இதுக்கு நாங்கள் புதிசாய் பிறக்க வேணும். அப்ப தான் கற்பு வாழும்.
அவள் உணர்ச்சி முட்டிப் பேசி முடித்து விட்டுத் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட போது மெளனம் நிலவிற்று
அவன் அவளின் பேச்சுப் பிடிபடாத அக்கரையிலிருந்து இன்னும் கம்பியூட்டர் பார்த்துக் கொண்டிருந்தான். வீடு வாழ்க்கை,அதன் தாற்பரிய சிறப்புகளெல்லாம் விட்டுப் போன கம்பியூட்டர் யுகமாய் தோன்றுகிற அந்தக் குறுகிய இருண்ட உலகினுள்ளேயே இன்னும் அவன் அடைபட்டுக் கிடந்தான். அவள் கூறுகின்ற அந்த விலைமதிப்பில்லாத கற்பின் தொனியென்ன அதன் சுவாசம் விட்டுப் போன, காற்ரின் நிழல் கூட அவன் காதுகளுக்குள் புகவில்லை, அதை அப்படி மறக்கும்படியாக அந்த இண்டர்நெட் கதாநாயகியே இப்போது அவனுக்கு எல்லாம் அந்த மயக்கம் தீரும் வரை அவன் அப்படித் தான் இருப்பான் கற்பு என்பது இனி அவனைப் பொறுத்த வரை காட்டில் எறித்த நிலாதான்
– மல்லிகை (ஒக்டோபர் 2010)