கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: காதல்  
கதைப்பதிவு: April 18, 2013
பார்வையிட்டோர்: 25,850 
 
 

நன்றாக நினைவில் உள்ளது. நான் காதல் இல்லாமல் வாழ்ந்த நாட்கள் மிக மிகக் குறைவு. அப்படி நான் காதல் இல்லாமல் இருந்த ஒரு நாளின் காலையில்தான் அவளை பஸ்ஸில் பார்த்தேன். அன்று நான் செல்ல வேண்டிய டிரெயினை மிஸ் செய்துவிட்டதால், பஸ்ஸில் செல்ல வேண்டியதாகிவிட்டது. பின்பு தினமும் சில காலங்கள் நான் பஸ்ஸில்தான் செல்வேன் என்று நான் நினைக்கவில்லை.

அவள் பெயர் காயத்ரி. அவள் ரொம்ப அழகு என்று திருப்பித் திருப்பிச் சொன்ன பல்லவியையே சொல்லிச் சொல்லி உங்களை போரடிக்க விரும்பவில்லை. சாமி படம் பார்த்தீர்களா? அதில் திரிஷா பிராமணா ஆத்துப் பெண் போல வருவாளே? அவள் போல்தான் இருப்பாள். பார்த்த மாத்திரத்தில் நான் அவளைக் காதலிக்க ஆரம்பித்து விட்டேன். அன்றிலிருந்து காயத்ரி என் கனவில் வர ஆரம்பித்தாள்.

நான் சொல்லலியேதினமும் சரியாக அதே நேரத்தில் பஸ் ஸ்டாண்டு செல்ல ஆரம்பித்தேன். அவள் போகும் பஸ்ஸிலேயே போக ஆரம்பித்தேன். கூடுமானவரை அவள் அருகில் நிற்க முயற்சித்தேன். அவளிடம் எப்படிப் பேச ஆரம்பிப்பது என்று தெரியாமல் குழம்பிப் போனேன். அப்பொழுதுதான் எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. ஒரு நாள் அவள் பஸ்ஸில் ஏறுகையில் ஒரு புத்தகம் கீழே விழுந்தது. பஸ்ஸில் நல்ல கூட்டம் வேறு. அந்தப் புத்தகத்தை நான் எடுத்து அவளிடம் கொடுப்பதற்காகத் திரும்பினேன். அதற்குள் அவள் கூட்டத்தின் உள்ளே சென்று விட்டாள்.

மெயின்கார்ட் கேட் வந்ததும் அவசர அவசரமாக இறங்கி அவளுக்காகக் காத்திருந்தேன். அவள் இறங்கியவுடன் அவளை நெருங்கினேன். இருதயம் வேகமாக அடிக்க ஆரம்பித்தது. ஒருவித பதற்றத்துடன் அவளை நெருங்கி,
“ஹலோ’ என்றேன்.

என்ன? என்பதுபோல் என்னைப் பார்த்தவளை நெருங்கி,
“இந்தாங்க உங்க புக். நீங்க பஸ்ல ஏறும்போது கீழே விழுந்துடுச்சு’ என்று சொல்லி அவளிடம் புத்தகத்தை நீட்டினேன்.

வாங்கிப் பார்த்தவள், “சாரிங்க! இது என் புத்தகம் இல்லை’ என்று கொடுத்துவிட்டு, என்னைத் திரும்பிப் பார்க்காமல் அவள் கல்லூரியை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். அசடு வழிய நின்று கொண்டிருந்தவன் புத்தகத்தைப் பிரித்துப் பார்த்தேன். அதில் வேறு யாரோ பெயர் இருந்தது. வந்த கடுப்பில் அந்தப் புத்தகத்தைத் தூக்கி எரிந்துவிட்டு நான் என் கல்லூரிக்குச் சென்றேன்.

ஆனால், மனம் முழுவதும் ஒருவித சந்தோஷம் ஒட்டிக்கொண்டது. ஏனென்றால் என்னிடம் அவள் பேசினாளே? அவள் மட்டும்தான் அழகு என்று நினைத்திருந்த எனக்கு, எவள் குரலும் அழகு என்ற விஷயம் அன்றுதான் தெரிந்தது.

அன்று மாலையிலிருந்து ஒரு சிறு மாறுதல் அவளிடம் ஏற்பட்டு இருந்ததைக் கவனித்தேன். மெல்ல என்னைப் பார்த்து ஒரு புன்முறுவல் பூத்தாள். அது போதாதா, எனக்கு. உடனே சுவிட்சர்லாந்து சென்று சில டூயட்கள் பாட ஆரம்பித்தேன்.
நாளாக நாளாக பஸ்ஸில் அவள் அருகில் சென்று நிற்க ஆரம்பித்தேன். சிலமுறை அவளின் கால்கள் என் கால்களின் மேல் பட்டது. அப்போது ஏற்பட்ட மின்காந்த அதிர்வினால் என் உடல் டயர்டானது. அப்படியே நாட்கள் சில சென்றன. அவள் என்னிடம் நேரடியாகப் பேசவில்லையே தவிர, அவள் தோழியிடம் பேசுவதுபோல் என்னிடம் பேசலானாள்.

அவளை நினைத்து நினைத்து உருக ஆரம்பித்தேன். அவளும் அப்படித்தான் என்று நம்பினேன். ஒரு நாள் நண்பர்களுடன் சினிமா சென்றேன். அங்கே அவள் தோழிகளுடன் நிற்பதைப் பார்த்தேன். நான் பார்த்துக் கொண்டிருந்தபோதே அவள் என்னை நோக்கி வருவது தெரிந்தது.

நண்பர்கள் என்னை ஒருவிதமாகப் பார்ப்பது தெரிந்தது. அனற அவள் எனக்குப் பிடித்த நீல கலர் தாவணியும், வெள்ளைக் கலர் பாவாடையும் அணிந்து மிகவும் கவர்ச்சியாக இருந்தாள்.
நேராக என்னிடம் வந்தவள்,

“ஒரு நான்கு டிக்கெட் வாங்கித்தர முடியுமா?’ எனக்கேட்டாள்.

அதை விட வேறு எனக்கு என்ன வேலை?
உடனே எனக்குத் தெரிந்த நண்பர் மூலம் டிக்கெட் வாங்கினேன். அவர்கள் அனைவரும் எங்கள் சீட் அருகில் மர்கின்ற வகையில் டிக்கெட் வாங்கினேன்.

நினைத்தது போலவே என் அருகில் அமர்ந்தாள். படம் தொடங்கியது. சிறிது நேர டென்ஷனுக்குப் பிறகு மெல்ல பேச்சுக் கொடுத்தேன். அவளும் பேசத் தொடங்கினாள். என் கையை எடுத்து சேரின் கைப்பிடியில் வைத்தேன்.

என்ன ஆச்சரியம்! என் கையின் மேல் அவள் கையை வைத்தாள்.
சந்தோஷத்துடன் படம் பார்க்க ஆரம்பித்தேன். நாங்கள் இருவரும் அவ்வளவு நெருக்கமாவோம் என்று கனவில்கூட நான் நினைக்கவில்லை. சில சில்மிஷங்களுடன் படம் பார்த்து முடித்தோம். இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், படம் முடியும் வரை நாங்கள் இருவரும் ஒரு வார்த்தைகூடப் பேசிக் கொள்ளவில்லை. ஒர வேளை என் கைகள் அவளுடன் பேசியிருந்திருக்கலாம். சரியாக நினைவில்லை.
இப்படியே சில நாட்கள் போனது. நான் அவள் மேல் தீவிர காதலில் மூழ்கிப் போனேன்.

அவளும் காதலிப்பதாகத்தான் நினைத்தேன். தினம் பஸ்ஸில் அவளின் நெருக்கம் எனக்கு போதையைத் தந்தது. ஒரு நாள் பார்க்கவில்லை என்றால்கூட, மனம் கிடந்து அலைய ஆரம்பித்தது.

தினமும் நான் அவளைப் பார்த்து சிரிப்பேன். அவளும் என்னைப் பார்த்து சிரிப்பாள். இவ்வளவுதான் எங்களுக்குள் நடந்தது. மேற்கொண்டு லவ் லெட்டர் கொடுக்கவோ, ஐ லவ் யூ என்று சொல்லவோ என் மனம் விரும்பவில்லை. காரணம், என் மனம் தாங்காது. அதனால், கிடைக்கிற சந்தோஷமே போதும் என்று மேற்கொண்டு எந்த முயற்சியும் எடுக்காமல் இருந்தேன்.
யாரிடமும் சொல்லாமல் வைத்திருந்த என் காதலை ஒரு நாள் என் நண்பன் சாமுவிடம் சொன்னேன்.

“யாருடா அது? இன்னொரு காதலா? உருப்படவே மாட்டியா? எந்தத் தெருடா அவ?’ என்றான்.

நான் தெருவின் பெயரைச் சொன்னவுடன், “எனக்கு யார் என்று காமி?’ என்றான்.

அவனைக் கூட்டிக் கொண்டு அவள் இருக்கும் தெருவுக்குச் சென்றேன். அது ஒரு பெரிய நகர். பெரிய பெரிய தெருக்கள் மொத்தம் பத்து இருக்கும். அங்கே யார் புதிதாக நுழைந்தாலும், அங்கே இருக்கும் பையன்கள் ஆயிரத்தெட்டு கேள்விகள் கேட்பார்கள். அங்கே தாதா போல் ஒருவன் இருந்தான். அவனின் நண்பன் குமார் எனக்கும் நண்பன். அவனிடம் சொன்னேன்.

“மாப்பிள்ளை! ஜாக்கிரதை. நம்ம பசங்க எல்லாம் ஒரு மாதிரி. உண்மையான காதல்னா என்கிட்ட சொல்லு. சும்மா ஒரு தலைக் காதல்னா விட்டுட்டு ஓடிப் போயிடு. ஏன்னா, இங்க இருக்கற பசங்க சும்மா விடமாட்டாங்க’ என்று பயமுறுத்தினான்.

“இல்லை குமார். உண்மையான காதல்தான்’ என்று பொய் சொன்னவன், கடைசி வரையில் அவனிடம் “இன்னும் அவள் என்னிடம் காதலிக்கிறேன் என்று சொல்லவில்லை’ என்ற உண்மையைச் சொல்லவில்லை.

கடைசியாக அவள் இருந்த தெருவைக் கண்டுபிடித்து நண்பன் சோமுவிடம் அவளைக் காண்பித்தேன். அவள் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து அவள் தம்பியுடன் பேசிக் கொண்டு இருந்தாள். என்னைப் பார்த்தவள் ஒரு கணம் அதிர்ச்சி அடைந்து, உடனே உள்ளே போய் விட்டாள்.

உடனே சோமு, “வேண்டாம்டா. பிரச்னை வரும். அவளைப் பின் தொடராதே’ என்ற அட்வைஸ் செய்ய ஆரம்பித்தான்.

“ஏன்?’

“காரணம் அப்புறம் சொல்கிற÷ன். வேண்டாம்னா வேண்டாம். அவ்வளவுதான்’ என்றான்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை.

அடுத்த நாள். பஸ்ஸில் நல்ல கூட்டம் மெல்ல நகர்ந்து என் அருகில் வந்து நின்றாள். மிக நெருக்கமாக நின்றாள். உடலோடு உடல் உரசியது. என் உடல் வேதனை அடைய ஆரம்பித்தது. முதல் முறையாக என்னிடம் காயத்ரி பேசினாள்.

“எதுக்கு எங்க தெருவுக்கு வந்தீங்க?’

“உங்களைப் பார்க்கத்தான்’

“இனிமேல் வராதீங்க.’

“ஏன்?’

“வராதீங்கன்னா வராதீங்க. அவ்வளவுதான்’ என்று நகர்ந்து போனவளை இடுப்புடன் அணைத்து, முதுகில் ஒரு முத்தமிட்டேன். திரும்பி கண்களால் என்னைச் சுட்டெரித்தவள், உடனே கும்பலில் நகர்ந்து பஸ்ஸின் கடைசிக்குச் சென்றாள்.

எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. தப்பு பண்ணிவிட்டோமே என தவித்தேன். அன்று இரவு முழுவதும் தூக்கம் இல்லை.
அடுத்த நாள் காலை. அவளிடம் மன்னிப்பு கேட்கலாம் என்று சீக்கிரமே பஸ் ஸ்டாண்டு சென்றேன். அங்கே அவள் அருகில் நின்றவர்களைப் பார்த்து என் இதயம் வெடித்து விடுவதுபோல் இருந்தது.

அவள் இருக்கும் அந்த நகரத்தின் தாதாவும், குமாரும் இருந்தார்கள். ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது என்று என் உள்ளுணர்வு சொல்லியது. என்னை டின் கட்டப்போகிறார்கள் என்ற நினைப்பே என்னைத் தள்ளாட வைத்தது.

என்னைப் பார்த்த குமார், “கோபு, யாரோ காயத்ரிகிட்டே பஸ்ல தினமும் தொந்தரவு பண்றாங்களாம். யாருன்னு உனக்குத் தெரியுமா? நீயும் டெய்லி இந்த பஸ்லதானே போற?’ என்று கேட்டான்.

எனக்கு ஒரு கணம் இதயமே துடிப்பை நிறுத்திவிட்டதுபோல் ஆனது. நான் காயத்ரியை பார்த்தேன். அவள் என்னைப் பார்த்தாள்.

“தெரியலையே’ என்றேன்.

“கோபு! இவளை நான் காதலிக்கிறேன். நான்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன். இவ நான் கல்யாணம் பண்ணிக் போற பொண்ணு. எவனாவது கிண்டல் பண்ணினான்னா, நீ கொஞ்சம் கண்டிச்சு வை அவனை. ஏதாவது பிரச்னைனா, என் கிட்டயோ அண்ணன் கிட்டயோ சொல்லு’ என்று அந்த தாதாவைக் காட்டினான் குமார்.

எனக்கு ஒரு நிமிடம் என்ன செய்வது என்று தெரியவில்லை.
உடனே காயத்ரி பக்கம் திரும்பியவன், “இங்க பாரு காயத்ரி, கோபு என் நண்பன். எவனாலயாவது பிரச்னைனா இவன்கிட்ட சொல்லு’ என்றவன் பஸ் ஸ்டாண்டை விட்டு உடனே கிளம்பினான்.

போன் உயிர் திரும்பி வந்தது. என்னைக் காட்டிக்கொடுக்காததுக்கு பார்வையாலேயே நன்றி சொன்னேன். அன்றிலிருந்து அந்த பஸ்ஸில் செல்வதையே நிறுத்தினேன். பிறகு அப்பாவுக்கு மாற்றலாகவே குடும்பத்துடன் வேறு ஊருக்குச் சென்று விட்டேன்.
எனக்கு சில விஷயங்கள் மட்டும் அன்று புரியவே இல்லை.

“அவள் ஏன் என்னைக் காட்டிக்கொடுக்கவில்லை?’

“அவள் குமாரைக் காதலிக்கும் பட்சத்தில் என்னுடன் ஏன் நெருக்கமாகப் பழகினாள்?’

அதற்கான விடை இருபது வருடங்கள் கழித்து, சென்ற மாதம் கிடைத்தது.

பல வருடங்களுக்குப் பிறகு என் பூர்விக நிலம் சம்பந்தமாக என் ஊருக்குச் சென்றேன். நான் ஊரில் இருந்தபோது காயத்ரியையும், அவள் குழந்தையையும் கோயிலில் சந்தித்தேன்.

என்னைப் பார்த்தவள், சந்தோஷத்துடன், “எப்படி இருக்கீங்க?’ என்றாள்.

“நல்லா இருக்கேன். எங்கே உன் ஹஸ்பெண்ட்?’ என்றேன்.

பூக்கடையில் பூ வாங்கிக் கொண்டிருந்த ஒருவனைக் காண்பித்தாள். அது குமார் இல்லை. வேறு யாரோ ஒருவன். அவள் அழகுக்கு சம்பந்தம் இல்லாதவன்.

“என்ன காயத்ரி, அப்போ நீ குமாரை காதலிக்கலையா?’

“இல்லை.’

“அன்று அவன் உன் முன்னாலே என்கிட்ட சொன்னானே, உன்னைக் காதலிப்பதாய்?’

“அவன்தானே சொன்னான். நான் சொல்லலியே?’ என்றாள்.

– மார்ச் 2012

Print Friendly, PDF & Email

2 thoughts on “நான் சொல்லலியே?

 1. சிறுகதை என்று சொல்வதா?
  இழந்த அன்பு என்று சொல்வதா?
  உணர்ச்சி என்பதா?
  ஹார்மோன்களின் கலகம் என்பதா?
  அடடா…என் வாழ்வில் நடந்தது போன்றது போல் உள்ளதே என்பதா????
  படித்தேன்… ரசித்தேன்…மெல்ல மெல்லச் சிறகு விரித்து …20 வருடம் பின்னோக்கிப் பறந்தேன்…எனை மறந்தேன்…
  இதய வெடிப்புகளில் ஈரம் கசிந்தது….
  நீலத் தாவணி நினைவில் இருக்கத்தான்…
  இன்று நீல உடை அணிந்தீரோ!!!
  காரணம் புரிகிறது… காதலும் புரிகிறது…
  ஒன்று மட்டும் சரியாக விளங்கவில்லை…இடுப்புடன் அனைத்து முதுகில் எப்படி முத்தமிட்டீர்கள்???

  அன்புடன்
  காங்கயம் பிரபு
  TNPL , UNIT-௨
  Electrical

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *