நான் உன்னை நேசிக்கிறேன்

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: December 17, 2019
பார்வையிட்டோர்: 21,408 
 

கௌசிக் பதினெட்டு வயதே நிரம்பிய பட்டுப்போன்ற அழகுத் தோற்றமுள்ள இளைஞன்.

துடிப்பும் சுறுசுறுப்பும் கல்வியில் ஆர்வமும் காட்டிய அவன் ஒரு நாள் விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்தன. வெளியில் கடும் வெயில் வேறு சுட்டெறித்துக் கொண்டிருந்தது.

அவனை விளையாட்டு மருத்துவர் பரிசோதித்த போது அவன் மூக்கிலிருந்தும், வாயிலிருந்தும் சற்றே இரத்தம் வெளியேறியிருப்பதனை அவதானித்தார்.

உடனேயே பெற்றோருக்கு அறவித்து அவனை மருத்துவமனையில் சேர்த்தார்கள்.

மருத்துவர்கள் ஆரம்பத்தில் ஒன்றும் சொல்ல முடியாதென்றும் பரிசோதனைகள் செய்து பார்க்க வேண்டும் என்றும் கூறி விட்டனர். சில நாட்களின் பின்னர் அவர்கள் கௌசிகனின் பெற்றோர்களை அழைத்து அவனுக்கு சுவாசப்பையில் புற்றுநோய் வந்து வியாபித்துவிட்டதென்றும் அதனைக் குணப்படுத்தும் சாத்தியம் இல்லையென்றும் இருக்கும்வரை அவனை சந்தோஷமாக இருக்கும்படி வைத்துக் கொள்ளுமாறும் கூறி விட்டனர்.

அன்றிலிருந்து அவனது மகிழ்ச்சி, சுறுசுறுப்பு, உற்சாகம், துடிப்பு என்பன அவன் வாழ்க்கையில் இருந்து மறைந்து போய்விட்டன. அவன் வீட்டின் மூலையில் இருந்த ஒரு அறையில் தனியனாக முடங்கிப் போய்விட்டான். ஆரம்பத்தில் நண்பர்களும், உறவினர்களும் வந்து பார்த்து அவனை ஆறுதல் படுத்தினாலும் பின் படிப்படியாக அதுவும் குறைந்து போய்விட்டது. அவனது அம்மா மட்டுமே அவனுக்கு விடாப்பிடியாக அன்புடன் பணிவிடை செய்யதுவந்தாள்.

அவனுக்குத் தொடர்ந்தும் அந்த அறையில் முடங்கிக் கிடந்து அழுத்துப் போய் விட்டது. அவன் ஒரு நாள் தன் சோகங்கள் அனைத்தையும் மறந்து உற்சாகமாய் எழுந்திருந்தான். வெளியே உலாவிட்டு வந்தால் என்ன என்று நினைத்தான். அவன் அம்மாவிடம் சென்று அனுமதி கேட்டான். அவளும் அவனது உற்சாகம் கண்டு மகிழ்ந்து அனுமதி வழங்கினார்.
அவன் சற்றே வெட்ட வெளியில் நடந்து பின் கடைத் தெருவில் நடந்தான். அங்கே ஒரு இருவெட்டு விற்பனைக் கடையைக் கண்டான். அதன் பெயர்ப்பலகை அவன் மனதைக் கவர்ந்தது. அவன் ஏதோ நினைத்தவனாய் அந்தக் கடையை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான். அங்கே ஒரு அழுகிய ஆரணங்கு போன்ற இளம் பெண் அக்கடையைக் கவனித்துக் கொண்டிருந்தாள். எடுத்த மாத்திரத்திலேயே அவளில் பொதிந்திருந்த ஏதோ ஒன்று அவன் மனதில் தைத்துவிட்டது. அவனால் அவள் முகத்தில் வைத்த கண்ணை எடுக்க முடியவில்லை.
அவளது அந்த மை பூசிய கருத்த துருதுருத்த கூரிய கண்ணும் கருவிழிகளும் புண் முறுவள் செய்த போது சற்றே எட்டிப் பார்த்த முத்துப் போன்ற வெண் பற்களும் காதோரம் நீண்டு திரண்டு ஆடிக் கொண்டிருந்த கூந்தலின் ஒரு கற்றையான முடியும் பரந்த நெற்றி, தீட்டிய புருவங்கள், அவற்றுக்கு நடுவில் நேர்த்தியாக இடப்பட்டிருந்த பொட்டும் இதில் அவனைக் கவர்ந்தது. இன்னதுதான் என்று எதனையும் உறுதியாகக் கூற முடியவில்லை.

அவன் வைத்த கண் வாங்காமல் தன்னையே கவனிப்பதை உணர்ந்த அவளுக்கும் ஏதோ சங்கோஜ உணர்வு தோன்றியது. மனதுக்குள் இருந்து வெட்க உணர்வு மெல்ல வெளிப்பட்டு மேலெழுந்து வந்தது. வேறு எத்தனையோ ஆண்களை பார்த்து பழகியிருந்த போதும் இத்தகைய மென்னுணர்வு அவளுக்கு ஏற்பட்டதில்லை. எனினும் அதனை வெளிக்காட்டாமல் தன்னை சுதாகரித்துக் கொண்டு என்ன வேண்டும் உங்களுக்கு என்று கேட்டாள் அவளது இந்தக் கேள்வியால் சுயநினைவுக்கு வந்த கௌசிக், தனது இந்த உணர்வு மேலீட்டால் சற்றே கண்ணம் சிவந்தான். பின் அவளை ஓரக் கண்ணால் பார்த்தவாறே “ எனக்கு இறுவட்டு ஒன்று வேண்டும்” என்று கூறியவாறே இயந்திர கதியில் ஒரு இருவட்டைத் தேடி அவளிடம் கொடுத்தான்.
அதனைப் பெற்றுக்கொண்ட அவள் அதனை கவரில் போட்டு சுற்றி எடுத்துக் கொண்டு வருவதற்காக உள்ளே சென்றாள். அவன் அவளையே உண்ணிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவளுடன் ஏதோ பேச வேண்டுமென அவன் மனது துடித்தாலும் அவனால் வாய்திறக்கவே முடியவில்லை. அவன், அவள், அழகாக இருப்பதாக அவளிடம் சொல்ல வேண்டுமென்று நினைத்தான். ஆனாலும் அவனுள் எழுந்த தயக்கம் அவன் நாக்கை பேச விடாமல் கட்டிப் போட்டுவிட்டது. அவன் இருவட்டுக்கான பணத்தைச் செலுத்திவிட்டு மௌனமாகவே வெளியேறினான். அவளும் அவன் இன்னும் சில நிமிடங்கள் அங்கிருக்க மாட்டானா என ஏக்கத்துடன் பெருமூச்சுவிட்டாள்.

அதன் பின் ஒவ்வொரு நாளும் அவளைப் பார்க்க அந்தக் கடைக்குச் செல்வதை அவன் வழக்கமாக்கிக் கொண்டான். அவளும் அவன் வருவானா? என ஆவலுடன் எதிர்பார்ப்பார்த்திருந்தாள். ஆனால் ஒவ்வொரு நாளும் அவளுடன் எப்படியும் பேசிவிட வேண்டும். தான் அவளை நேசிக்கிறேன் என்று தெரிவித்துவிட வேண்டும் என்று அவனது மனது துடிக்கும். அப்படி நினைக்கும் போதெல்லாம் கூடவே அந்தத் தயக்கம் அவனை பேசவிடாமல் தடுத்துவிடும். அவனும் ஒரு இருவட்டை எடுத்து அவளிடம் கொடுப்பான். அவளும் உள்ளே சென்று அதனை அழகாக சுற்றி கவரில் போட்டு ஒட்டி எடுத்துக் கொண்டு வந்து கொடுப்பாள். தினம் இது ஒரு நாடகம் போல் நடந்து வந்தது.
ஒரு நாள் அவன் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவள் இருவட்டை கவரில் போடுவதற்காக உள்ளே சென்ற சமயம் அவன் ஒரு கடதாசி துண்டில் தன் பெயரையும் தொலைபேசி இலக்கத்தையும் எழுதி அவள் அமரும் மேசை மீது வைத்தான்.

பின் கவரைப் பெற்றுக் கொண்டு அவசர அவசரமாக வெளியேறி வந்து விட்டான்.

அடுத்த சில தினங்களில் நோய் அதிகரித்து அவனை மேலும் வாட்டி வதைத்து.

அவனால் வெளியே உலாவச் செல்ல முடியவில்லை. அந்த இருவட்டுக் கடைக்கும் அவனால் போக முடியவில்லை. இப்படிப் பல தினங்கள் சென்றன. அந்த இருவட்டுக் கடையில் இருந்த பெண் அவன் முதல் நாள் வராமல் இருந்த போதே வாடிப் போய்விட்டாள். அடுத்த நாள் வருவான் தானே என்று மனதைத் தேற்றிக் கொண்டாள்.
ஆனால் அவன் அடுத்த நாளும், அதற்கடுத்த நாளும் வராமை கண்டு அன்னந் தண்ணி அவள் குரல்வளைக்குள் போக மறுத்தது. அவள் மிகுந்த சோகம் கொண்டு மேலும் சில நாட்கள் பொறுத்துத்தாள் அவள் அவன் எழுதிவைத்து விட்டுப் போயிருந்த தொலைபேசி இலக்கத்தை எடுத்து தொடர்பு கொள்ளலாமா என்று யோசித்தாள். ஆனால் என்ன பேசுவதென்று தெரியவில்லை. அவனுக்கும் தனக்கும் என்ன உறவு என்று யோசித்தாள். ஆனால் அவன் தன் மனதுக்குள் மிக இருக்கமாக வந்து குந்தி இருந்து கொண்டுவிட்டான் என்பது மாத்திரம் புரிந்தது.

அடுத்து வந்த நாட்களை அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அவள் அந்த தொலைபேசி இலக்கங்களை கழற்றினாள். எதிர்முறையில் இருந்து ஒரு பெண் குரல் பேசியது. கௌசிகனின் அம்மா தான் பேசினாள். அவள்குரல் மிக சோகம் கப்பியதாக ஒலித்தது.

கௌசிகன் வீட்டில் அவனது இறுதிக் காரியங்கள் எல்லாம் முடிவடைந்த பின் உற்றார் உறவினார் எல்லாம் சென்றுவிட்டனர். அவன் அம்மா மாத்திரம் இன்னும் சோகத்தில் இருந்து விடுபடவில்லை. அவர் தன் அன்பு மகனின் நினைவுகளைச் சுமந்து கொண்டு அலங்கோலமாகக் கிடந்த அவனது அறையை சுத்தமாக்கி ஒழுங்குபடுத்தினார். அப்போது புத்தக ராக்கையில் ஒரு தட்டு நிறைய மிக நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த அந்த இறுவட்டுக்களை கண்ணுற்றார்.

அவை ஒன்றுமே ஒட்டப்பட்ட கவர்கள் பிரிக்கப்படாமலேயே இருந்தன. அவர் அதில் ஒன்றைப் பிரித்தார். அதில் இருந்து ஒரு சிறு துண்டுக் கடிதம் வீழ்ந்தது.

அவர் அதனை எடுத்துப் படித்தார். அதில் ‘நான் உங்களை நேசிக்கிறேன்’ என்று முத்தான கையெழுத்தால் எழுதப்பட்டிருந்தது.

Print Friendly, PDF & Email

2 thoughts on “நான் உன்னை நேசிக்கிறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *