தோற்றுவிட்ட சத்தியத்தில் சுடர் விடும் தரிசனம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: November 29, 2017
பார்வையிட்டோர்: 28,796 
 
 

துர்க்காவின் அம்மா கோவில் பூசை கண்டு திரும்பும் போது வீடு இருண்டு கிடந்தது. மணி ஏழாகிக் கிழக்கு வானம் வெளுத்த நிலையிலும், வீட்டில் கனக்கின்ற இருளை எதிர் கொண்டவாறே அவள் உள்ளே வரும் போது துர்க்கா சோகம் வெறித்த முகத்துடன் அறை வாசலில் நிழல் தரித்து நின்றிருந்தாள். நீண்ட நாட்களாகத் தூக்கம் பறி போனதால் கண்களின் கீழ படிந்த கருவளையம், ஒரு கருந்தீட்டு நிழற் குறி போல் அவளின் கண்களிலும் வெறித்தது/ அதையும் புறம் தள்ளி மறந்து விட்ட பாவனையோடு அவள் சொல்வது கேட்டது

“என்ன துர்க்கா! எட்டு மணிக்குக் கார் வரப் போகுது நீ இன்னும் வெளிக்கிடேலையே?’

“அம்மா தெரியாமல் தான் நான் கேக்கிறன் இது அவசியமே?”

“ நீ அவனை நினைச்சு உயிரை விடுகிறாய். ஒவ்வொரு நிமிடமும் பெத்த வயிறு பத்தி எரியுது வேறென்ன செய்யச் சொ;ல்கிறாய் எங்களை?”

“சரியம்மா உங்கடை திருப்திக்காக மட்டுமல்ல எனக்காகவும் தான் இந்த அக்கினிப் பரீட்சை. ஒரு முன் பின் தெரியாத ஆம்பிளைக்கு என்னை நான் காட்டித்தான் வெற்றி வர வேணுமெண்டால் எனக்குச் சம்மதமே நான் வெளிக்கிடுறன்?”

“ஓம் கெதியிலை வெளிக்கிடு பிள்ளை எட்டு மணிக்கு கார் வரப் போகுது” என்றபடியே அப்பா வராந்தவுக்கு வருவது தெரிந்தது. வெள்ளைவேட்டி சால்வை சகிதம் அவர் ஒரு கடவுளின் காட்சி தரிசனமாக வந்து நிற்பது போல் அதில் மூழ்கித் தன்னைக் கறை விழுங்க வந்த காட்சி நிழலும் கரை ஒதுங்கிப் போவதாக அவள் பெருமிதம் கொண்டாள். ஒரு கண நேர சிலிர்ப்புத் தான். மூழ்கி உணர்ந்த கண்களைத் திறந்து பார்த்த போது கல்யாண விலங்கு போட்டுத், தன்னை விழுங்க வந்த பூதமே காட்சி இருளாகக் கண்களில் வெறித்தது. விடாமல் துரத்துகிற இந்தப் பூதம் அவளை உயிரோடு விழுங்கினாலும் கேட்க நாதியில்லை. அது அவள் தலை விதி என்று உலகம் கூறும். உலகம் போகட்டும். இதோ நிற்கிறாரே எல்லாம் தெரிந்த பெரிய மனிதர் அப்பா! நீதி நியாயம் தெரிந்த மிகப் பெரிய அறிவாளியல்லவா அவர்! ஒட்டுமொத்தமாகவே என் பெண்மை நலன்களுக்கு குழி பறிக்கவே, இப்படி ஒரு தர்ம யுத்தத்திற்கு நான் முகம் கொடுக்க நேர்ந்திருக்கிறது. எதையும் நான் இழக்கலாம். என் மானத்தையே பணயம் வைத்து இது என்ன சோதனை? என் கற்புக்கே இது ஒரு சவால். இதிலே பங்கம் நேர்ந்தால் ஆருக்கு நட்டம்? எனக்கா? அப்பாவுக்கா? அல்லது இப்படி என்னை தீக்குளிக்க வைக்கிற இந்தக் கயவர்களுக்கா?அப்படித்தான் தீக்குளிக்க நேர்ந்தாலும் வெற்றி வருமா எனக்கு ? இதை அப்பாவிடம் தான் கேட்க வேண்டும்

பாண்டவர் கதையில் வரும் சாட்சாத் தருமனே அவர் , இதற்கு அவர் என்ன சொல்லப் போகிறார்? நான் துகில் உரிந்து காட்டுகிற இந்தக் குரூரம் கண்ட பின்னும் இதற்கு நீதி கிடைக்காமl; போனால் அவர் வாயே திறக்காமல் போனால் நான் எங்கே போய் முட்டிக் கொள்வது”?

என்ன பிள்ளை யோசிக்கிறாய்? வெளிக்கிடாமல்” கடைசியாக அவர் சொன்ன வார்த்தையில் வேறு பொருள் கொண்டு உயிர் மயங்கிச் சரிந்த நிலையில் சோகம் முட்டி அவள் சொனாள்

“இனி வெளுக்க என்ன இருக்கப்பா? எல்லாமே இருண்டு போச்சு “

‘’ சீ வாயை மூடு உலகம் ஒரு புறம் நீ வேறாக இருக்கிறாய் உன் இருப்பு எதற்கும் மாறுபடாத ஒளியில் தான் என்பதைப் புரிஞ்சு கொண்டால் துக்கம் ஏது ?” என்றார் அவர் தன் நிலையில் இருந்தவாறே,

அதைப் புரிந்து கொள்கிற அளவுக்கு அவள் இன்னும் பக்குவப்படவில்லை மூச்சு ஒரே மந்த கதியில் ஓடிக் கொண்டிருக்கையில் எதைத் தான் புரிந்து கொள்வது? நான் யார் என்ற கேள்வியே இன்னும் வரவில்லை/ அது வந்தால் தான் இந்தப் புரிதல் நடக்கும். பெண்ணாக இருக்கும் வரை அது முடியாத காரியம், உடல் கொதிப்புக்கு வடிகால் தேடப் போய்த் தான் இந்த நிலை.. ஒரு பெரிய சவாலை எதிர் கொண்டு ஆஸ்பத்திரிக்குப் போக இருக்கிறாள்

அங்கு அவள் தன் சுயத்தையே பணயம் வைத்துத் தீக்குளிக்க நேர்ந்த கொடுமை எதனால் வந்தது? யார் கொடுத்த தண்டனை இது?மங்கி வெறித்த இருள் நடுவே அதோ அவன் முகம் தெரிகிறது. இன்னும் கிட்ட …… மிக அருகில், அவன் சுவாசம் கேட்கிறது. அவன் ஒரு மிருகம் போல் மாறி மூச்சு இரைக்கவும் மார்பு குலுங்கவும் அவளை வெறியோடு கட்டிப் பிடித்து ஒன்று சேர முயலுகையில், எதற்கோ அவன் தோற்று விட்ட பாவனையில் வெறுப்போடும் பெரும் கோபத்தோடும் கட்டிலில் அவளைப் புறம் தள்ளி எறிந்து விட்டுப் போன அந்த ஒரு தருணம்?

அதன் பின் அவனின் நடத்தையிலும் திடீர் மாற்றம்.. பகலில் கூட ஒட்டாமல் அவன் ஏன் கரை ஒதுங்கிப் போகிறான் என்று புரியாத மயக்கம் அவளுக்கு. அந்தக் குழப்பத்துடனேயே அவள் தன் வீடு வந்து சேர்ந்தாள். அவன் கொண்டு வந்து விட்டுப் போய் விட்டான். அதற்குப் பிறகு அவனுக்குப் பதிலாக அவனின் கிரிமினல் தகப்பனிடமிருந்து ஒரு கடிதம் தான் வந்தது. அவளைப் பற்றி மிக மோசமான, ஒரு குற்றப்பத்திரிகை பெரிய அளவில்/ தாம்பத்ய உறவுக்கே அவள் தகுதியில்லை என்றும் அதற்கும் மேலாக அவள் இருடி என்றும் அவளைத் தோலுரித்துப் போடவே வந்த அந்தக் கடித்தத்திற்குப் பிறகு, தன் புனித இருப்பினாலான சத்தியக் கோட்டையே தகர்ந்து தலைசரிந்து விட்டது போல அவள் வெறும் நடைப்பிணம் போலானாள்.

சரியான சாப்பாடு இல்லை. நிலையான தூக்கமில்லை. ஒரே இருள். அந்தகார இருள்/ இனி விடியுமா என்று தெரியவில்லை அதை வேண்டித் தான் ஒரு சத்திய சோதனை. தீக்குளிக்க வேண்டுமாம். அவள் அங்கே பெரியாஸ்பத்திரியில் கட்டிலில் கிடந்து துகிலுரிந்து காட்ட ,,,,,,,,,,,,,,,,,,,,சீ ! நினைக்கவே மனம் கூசுகிறது இனிக் கற்பு எடுபடுமா? காதல் வாழுமா? அப்படி இது சரி வந்தாலும் இது என்ன வாழ்க்கை என்ற கேள்வி தான் மிஞ்சும்.

அங்கே பற்றியெரிகிற அந்தச் சோதனைக் களத்தில் விடை அறிந்து முடிவு சொல்ல அவன் வருவானா? அப்பன் வருவானா தெரியவில்லை யாராக இருந்தாலென்ன. கடவுளே ! என்னைக் காப்பாற்று! எல்லாம் நல்லபடி நடக்க வேண்டும். நான் நிரபராதி என்று அவள் மனம் அழுதது. அவர்களுக்கென்ன பாவ புண்ணியம் எதுவுமேயறியாத வரட்டு ஜென்மங்கள். பாவிகள்.

வந்தான் ஒரு பாவி. அவனல்ல. அவனைப் பெற்றுப் போட்ட அப்பன் தான் ஆஸ்பத்திரியில் நிழல் தூங்கும் மரத்தின் கீழ் காட்சி வெறித்த இன்னுமொரு நிழல் போல் அவன். வேளைக்கே வந்து விட்டான். பக்கத்திலே தான் அவன் வீடு. ஓர் இருள் பொந்து மாதிரி. ஒரு இரண்டு மாதம் அங்கு அவள் இருட்டிலேயே வாழ்ந்திருக்கிறாள். இதை விட நரகம் வேறு இல்லை. நரகமோ சொர்க்கமோ? அவள் காட்டு வெறித்த தீயில் கருகி மடிந்து போவதே விதியாக இருந்தால் யாரால் தடுக்க முடியும்?

பெரியாஸ்பத்திரியில் அவளைப் புடம் போட்டுப் பார்க்கவல்ல புனிதம் இழப்பதற்கே தயாராக அந்தக் கட்டில் வெள்ளை வெளேரென்ற விரிப்புடன் அவளைத் தோலுரிந்து போட அழைத்தது. டாக்டர் சதானந்தன் இன்னும் வரவில்லை. பெரிய மகப்பேற்று நிபுணன் அவர். எத்தனையோ குழந்தைக்கான சத்திர சிகிச்சைகளை நடத்தி வெற்றிவாகை சூடிய பெருமகன் அவர் அப்பாவுக்கு மிகவும் நெருங்கிய ஒரு நண்பரின் மகன் இருந்தாலும் இந்த விடயத்தில் உறவுக்குத் தலை வணங்கி, உண்மையை இருட்டடிப்புச் செய்யும் அளவுக்குத் திரை மறைந்து போகக் கூடியவரல்ல அவர். இதை உலகமே அறியும்.

கதவருகே கழுத்தில் மாட்டிய டெதஸ்கோப்புடன், ஆஜானுபாவானாய் அவர் வருவது தெரிந்தது. அவள் கண்ணை மூடிக் கொண்டாள் வெறும் பேச்சொலியும் கை நகர்வுமாகத் துரத்தி அடிக்கும் நிழல் படுக்கை மீது நடைப்பிணமாக அவள் நிலை சரிந்து கிடந்தாள். இருள் விலகி வெளிச்சம் வந்த போது எல்லாம் முடிந்து விடிந்து விட்டதாய் உணர்ந்தாள். டாக்டர் கையுறை கழற்றிக் கழுவித் துடைத்து விட்டு உள்ளே வந்த அப்பாவிடம் முகம் மலர்ந்த சிரிப்போடு கூறுவது கேட்டது

“ இறைவன் படைப்பிலே எல்லாம் சரியாகவே இருக்கு தாராளமாய் பிள்ளை பெறலாம்”

“ இதை வெளியிலை வந்து சொல்லுங்கோ” டாக்டர்” என்றார் அப்பா

டாக்டர் அதைக் கேட்டுத் தலை ஆட்டி விட்டு வெளியே வரும் போதும் அவளுக்கு நம்பிக்கை வரவில்லை வாசலில் நின்றவாறே அவனைக் கூப்பிட்டு அவர் சொல்வது மட்டும் துல்லியமாய்க் கேட்டது

‘இவவிடம் ஒரு பிழையுமில்லை உறுப்பெல்லாம் சரியாய் தான் இருக்கு“

“போங்கோ இவையின்ரை ஆள் நீர் இதை எப்படி நான் நம்புறது?”

அவன் கோபமாகச் சிவந்து வெறித்த கண்களுடன் இதைச் சொல்லி விட்டுச் சைக்கிள் உருட்டிக் கொண்டு போகும் சப்தம் கனதியான இடி போல் அவள் மனதின் மேல் வந்து விழுந்தது. உள்ளுக்குள் இக் கொடிய பாவிக்கே முகம் கொடுக்க நேர்ந்த மகத்தான சோகம் தாங்காமல் அவள் அப்படியே உயிருடன் பஸ்பமாகி எரிந்து கருகி ஒழிந்து போய் போய் விட்ட மாதிரி, அவளைத் தாங்கிய அந்த மண்ணும் இருளில் வெறித்தது. எந்தப் பெண்ணுக்குமே வராத இந்தச் சத்திய சோதனையில் பெரிதாக மானம் இழந்த அவளின் அந்தச் சோகம் கூட எடுபடாமல், சாத்தானின் வாய்க்குள் வந்து விழுந்து விட்ட மாதிரி இனி அவள் நிலைமை எடுபடுமா? அவன் இனிக் கனவிலும் வரப் போவதில்லை. ஏதோ வழியில் வெற்றி வந்து மீண்டும் அவனோடு கூட நேர்ந்தாலும் உள்ளெரிகின்ற இந்தப் பிரளய நெருப்பை யாரால் தான் அணைக்க முடியு,ம்? வேண்டாம் நான் இப்படியே இருந்திட்டும் போறன் அந்தக் கூடலும் குளிர் காய்ந்து வெறி தீர்க்கிற சங்கதிகளும் என்னை விட்டு விலகிப் போன மறை பொருள் மயக்கமாகவே இருந்து விட்டுப் போகட்டும்”அதைப் பிரகடனப்படுத்துகின்ற இந்தத் தாலி ஒரு கேடா? இருண்டு வெறித்த முகத்துடன் தன் உச்சக் கட்டக் கோபத்திற்கு ஒரு வடிகாலாய் காரில் ஏறக் கால் வைக்கும் போதே அவள் அதைக் கழற்றி மண்ணில் வீசி எறிந்ததைப் பார்த்து விட்டு அம்மா பதறினாள் தன்னைச் சுற்றியிருக்கின்ற துணை என்ற மயக்க வடுக்களின் வெறும் நிழற் புள்ளியாகவே அவளும் கண்களில் கரிக்க நிமிர்ந்த பார்வையில் தீட்சண்யப் பொறி பறக்க முற்றிலும் மாறி எல்லாம் உணர்ந்து ஒரு தபஸ்வினியாகவே மாறி விட்ட பெருமிதக் களையோடு குரலை உயர்த்தி அவள் சொல்வது மட்டும் கேட்டது

“விடுங்கோவம்மா! எல்லாம் ஒரு கனவு போல இப்ப தான் நான் உணர்கிறன் ஓர் ஆணின்ரை தொடுகைக்கு ஆசைப்பட்டு என்னையே நான் இழந்த மாதிரி எல்லாம் போச்சு இது எனக்குத் தேவை என்று நம்ப இனியும் நான் முட்டாளில்லை என்னை விட்டிடுங்கோ கரை ஒதுங்கிப் போய்ச் சூரிய நமஸ்காரம் செய்து புண்ணியம் சேர்க்கிற திருப்தியே எனக்குப் போதும்”

அவள் என்ன சொல்கிறாள் என்று பிடிபடாமல் அம்மா வெகுவாகக் குழம்பிப் போனாலும் அப்பாவுக்குத் தான் அறிந்து கொண்ட ஞானத்தில் மிக நன்றாகவே புரிந்தது மூடரோடு சாத்தான்களோடு போராடி மோதிச் சாவதை விட உயிர் பிழைக்கிற வழி இது தான் அதோ அவர் கண் முன் காட்சி தரிசனமாக ஒரு தேவதை தீயில் கருகி ஒழிந்து போனாலும் ஒழிந்தது வெறும் உடம்பு மட்டும் தான். ஆண்கள் ஆசைப்படுகிற உடம்பு, அது போனாலென்ன இருந்தாலென்ன எப்போதும் மடியில் நெருப்புத் தான் நெருப்புத் தின்றே அழிந்து போற, தன் பெண்மையை மறந்திட்டு மடியில் கனமற்ற சிறகு முளைத்த காற்றில் மிதக்கும் ஒளித் தேவதையாகி விட்ட பறத்தல் இவளுக்குக் கை கூடி வரவே, இந்தச் சத்திய சோதனை சவால் எதிர் மறையான இந்தச் சம்பவத் தீயில் புடம் கொண்டு எழுந்திருக்கிற இவளை வாழ்க்கையையே வெற்றி கொண்டு விட்ட பெருமிதத்தோடு தான் என்னால் தரிசிக்க முடியுது

வெற்றிகரமாக உடலையே வெல்கிற வீரம் தலை தூக்கத் தர்மாவேசத்தோடு அவள் கழற்றி எறிந்து விட்ட தாலி தன் பெருமையை இழந்து விட்ட கண்ணில் கரிக்கிற இருள் வந்து மூடிய ஒரு வெறும் பொருளாய், மண்ணிலே உயிர் விட்டுக் கிடக்கிற காட்சி வெறுமை கூட இப்போது அவர் கண்களை விட்டு வெறும் நிழலாய் கரைந்து போனது பெருமைக்குரிய ஒரு யுகத்தையே பொருளாகக் கொள்ளாமல், தான் எதிர் கொள்ள நேர்ந்த மிகப் பாரதூரமான பாவங்களையே செய்து பழகிய பாவிகளின் பொருட்டு தீக்குளித்து எழுந்த ஒரு புனித தேவதை போல் இப்போது அவர் மகள். அப்படி அவளைக் கண்டு கண் குளிர்ந்து போன காட்சி தரிசனத்தில் இம் மாய உலகின் அகண்டு விரிந்த பிரபஞ்ச இருப்பே, ஒரு கனவு போல அவருக்கு மறந்து விட்டது.

ஆம்! எப்படி உடல் சீரழிந்து சிதறிச் சின்னாபின்னமாகிப் போனாலும், அந்த இருள் குடித்த அந்தகார இருப்பினிடையே, அவள் எடுத்து நிற்கிற விசுவரூப தரிசன ஒளிக்கு முன், புற உலக மயமான நிழல் வாழ்க்கையின் இருள் இருந்த இடம் தெரியாமல் ஒழிந்து தான் போகுமென்று, அவர் பெருமிதமாக நினைவு கூர்ந்தார். அவர் போகிற அவ் வழியே தான் அவளின் நினைவும் இருந்தது, அப்படிப் பார்க்கிற போது காலில் விலங்கிட்டுச் சுழற்றி அடிக்கும் ஒரு மிருகம் போல் வந்து சேர்ந்த அந்த மனிதன் வந்து போன இடம் கூட, வெறும் நிழலாகக் கரைந்து போனது/ வாழ்க்கையின் சவாலாக வருகின்ற பொய்களில், இதுவும் ஒன்றெனத் தோன்றுகிற விழிப்பு நிலை ஒன்று மட்டும் தான் இப்போது அவளிடம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *