கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்  
கதைப்பதிவு: August 11, 2023
பார்வையிட்டோர்: 7,032 
 
 

அலைகள் அசைந்து அசைந்து நனைத்ததில் சுருட்டிவிடப்பட்ட நீலபேண்டில் வெள்ளை நூலாய் உப்புக்கோடுகள். இன்று பௌர்ணமி என்பதால் வெள்ளாற்றில் வங்காலவிரிகுடா நீரேற்றம். வழக்கத்திற்கு மாறாக கிழக்கில் இருந்து நீர் மேற்கில் பாய்ந்துக்கொண்டு இருந்தது. தோணித்துறையில் காலையில் மணலாகி கிடந்த இடமெல்லாம் இப்போது முட்டிக்கால் அளவு உப்புநீர்.

விஜயராகவன் விட்ட என்பத்தொன்பதாவது கப்பலும் வெள்ளாற்றில் நீந்த தொடங்கிவிட்டது. இன்னும் விஜயா வரவில்லை. காகித கப்பல்கள் எல்லாம் அல்லிப்பூப்போல அலைகளில் அசைந்து அசைந்து மிதந்தன. ஜெல்லிமீன்கள், கடல்குதிரைகள் நட்சத்திரமீன்கள் தண்ணீர்க்குள் அலைந்தன.

விஜயராகவன் விஜயா வருகிறாளா என்று பாதையைப்பார்த்தான். மணலும் புழுதியும் நிறம்பிய சிதம்பரம்செல்லும் கல்லூரி வீதி இருபுறமும் பச்சைவேலி மரகதசுவர். கலைக்கல்லூரி தூரத்தில் மேகத்தில் இருந்து இறங்கிய அரண்மனையென தென்னைகளுக்குமேலே வானைத்தொட்டு நின்றது.

விஜயராகவன் தோணித்துறைக்கு வந்த பிறகு மூன்றாவது முறையும் தோணி வந்து ஆட்களை ஏற்றிக்கொண்டு அக்கரை திரும்பி விட்டது.

அக்கரையில் வெள்ளாற்றுக்கு குடைப்பிடித்ததுபோல நின்றது புளியமரம். மழைகாலத்தில் வந்த வெள்ளாற்று வெள்ளம் பாதிகரையை அரித்து எடுத்துவிட்டதால் புளியமரத்தின் தொங்கும் வேர்கள் குடைக்குள் அமர்ந்திருக்கும் முகம் தெரியாத மனிதனின் கால்கள்போல ஆற்றுக்குள் நீண்டு கிடந்தன.

வீட்டில் இருந்து ஓட்டிவந்த அவனுடைய மிதிவண்டியும் அவளுடைய மிதிவண்டியும் இப்போது அருகருகே நின்றது புளியமரத்தடியில். தூரத்தில் இருந்த மிதிவண்டியை யாரோ தூக்கி வந்து சேர்த்து நிறுத்தி இருந்தார்கள்.

நீண்ட நேரமாக ஆற்றுக்கு நடுவில் உயரத்தில் நகராமல் தனது நீலசிறகுகளை அசைத்து குறிப்பார்த்துக் கொண்டிருந்த மீன்கொத்தி, சிறகு உள்ள அம்பென ஆற்றுக்குள் பாய்ந்தது. இமைக்கும் பொழுதில் அடியாழத்தில் இருந்து பெரிய தாய்மீன் துள்ளி மீன்கொத்தியை ஆற்றுக்கு மேல் மூணு முழ உயரத்தில் விரட்டியது. மீனால் பறவையின் வேகத்தை மிஞ்சும் வேகத்தில் எழமுடியுமா? மீன் இமைக்கணத்தில் செய்த சாதனை. தாய்மையின் சக்திதான் என்னே? மீன்கொத்தி இமைக்கணத்தில் திசை திரும்பியது ஆச்சர்யம். இயற்கையை வெல்வதுதான் வாழ்க்கையோ? உணவாக போவது எனக்கு நீயா உனக்கு நானா என்ற உயிர்களின் வாழ்க்கை விளையாட்டு ஏற்படுத்திய அதிசயத்தில் விஜயராகவன் ஆற்றில் உறைந்து நின்றான். பறந்துபோன மீன்கொத்தி புளியங்கிளையில் அமர்ந்து ஆற்றையே பார்த்துக்கொண்டு தியானத்தில் ஆழ்ந்தது.

விஜயராகன் கல்லூரி பாதையைப் பார்த்தான். ஆளில்லா பாதை நிலையில் நிற்கும் தேரின் வடம்போல நீண்டு கிடந்தது.

இன்று விஜயாவிடம் பேசிவிடவேண்டும் என்ற மனதின் ஆர்ப்பறிப்பு அவனை வீட்டுக்கு நகரவிடவில்லை. இன்றே பேசிவிடவிண்டும் இல்லை என்றால் நெஞ்சு வெடித்துவிடுவது போன்ற இம்சை. நாளை பேசுவாள். நாளை பேசுவாள் என்று நாற்பத்தைந்து நாட்கள் ஓடிவிட்டன. இனியும் முடியாது. மீண்டும் கல்லூரி பாதையைப் பார்த்தான் விஜயராகன்.

பகிரதியை தாங்க சடைவிரித்த சிவன்போல தூரத்தில் விழுது நிறைந்து நின்ற ஆலமரத்தடியில் யாரோ உட்கார்ந்து இருந்தார்கள். வயதான தாத்தாவும் பாட்டியும். வெள்ளை நாய் ஒன்றும் படுத்திருந்தது.

பாட்டி நீலபுடவையும் ஒட்ட வெட்டிய வெள்ளைமுடி தலையுமாக இருந்தது. தாத்தா சட்டைப்போடாமல் வேட்டியுடன் முண்டாசு கட்டி இருந்தார். தாத்தா கையை ஆட்டி ஆட்டிப்பேசினார். பாட்டி மூக்கை புடவை முந்தானையில் சிந்தியது. நாய் படுத்தபடியே

தலையை மட்டும் தூக்கி தாத்தா பாட்டியை பார்த்துவிட்டு மீண்டும் படுத்துக்கொண்டது.

கண்ணுக்கு எட்டிய தூரம்வரை விஜயாவை காணவில்லை. எப்போதும் அவன்தான் அவளிடம் முதலில் பேசுவான். அவள் பதில் சொல்வாள். அவளுக்கு கேள்வியே இல்லையோ? அவளாக எப்போது தன்னிடம் முதலில் பேசினாள் என்று நினைத்துப் பார்த்தான். ஞாபகம் வரவில்லை. இருந்தால்தானே வரும். இன்று பேசினாலும் பேசுவாளா?

அன்று நடந்த சங்கடம் அவனை அவளிடம் பேசவிடவில்லை. அவள் பேசட்டும் என்று இருந்துவிட்டான். ஒரு வாரம் ஆகியும் அவள் பேசவில்லை. இனி அவள் பேசமால் பேசப்போவதில்லை என்ற பிடிவாதத்தால் முதல்வாரம் நகர்ந்தது. நீயா நானா பார்ப்போம் என்ற அகங்காரத்தால் இரண்டாவது வாரமும் ஓடியது.

உண்மையில் அன்பு இருந்தாள் இப்படி இருப்பாளா? என்ற கோபம் மூன்றாவது வாரத்தை விழுங்கியது. அகங்காரசுமை பிடிவாதபித்தம் கோபக்கொந்தளிப்பு என்று நான்காவது வாரமும் கடந்தது.

இனி பேசவே மாட்டாளோ? என்ற நினைப்பு உள் நடுக்கம் கொடுத்து மூச்சு திணற வைத்தது. அகங்காரம், பிடிவாதம், கோபம் போன இடம் தெரியாமல் போனதும். மனம் வெறுமையில் தத்தளித்தது.

வெறுமையின் தத்தளிப்பில் மனம் அவளை மட்டும் பற்றிக்கொண்டு சுற்றி சுழன்றது. மனம் முழுதும் அவள்மட்டும். சொட்டுச்சொட்டாய் நெஞ்சிக்குள் பெய்த காதல் மழை சட்டென அருவியென கொட்டி அன்பு கடலென அலையடித்து அவளிடம் தள்ளியது. இன்று பேசியே தீரவேண்டும் என்ற தத்தளிப்பு. அன்று அப்படி நடந்திருக்கக்கூடாது என்ற குற்ற உணர்ச்சி. மனம் கனத்தது. பிடரியில் லேசாக தட்டிக்கொண்டான். வலது கையில் கட்டியிருந்த கேசினோ எலக்ட்ரானிக் வாட்ச் அவிழ்ந்து ஆற்றுக்குள் விழப்போனது பிடித்துக்கொண்டான்.

அக்கரையில் இருந்த தென்னந்தோப்பில் இருந்து ஒரு குயில் கூவ பதில் குரல் அப்பால் இருந்த மூங்கில் தோப்பில் இருந்து எழுந்தது.

இரண்டும் கூவிக்கூவி அழைத்து இசை நடனத்தை தோணித்துறை பிரபஞ்சவெளியில் நிகழ்த்திக்கொண்டு இருந்தன. செவியில் நுழைந்து பொங்கும் நெஞ்சை நிறைக்கும் பிசிறில்லாத ஒலி அமுது.

தோணி ஆட்களை கொண்டுவந்து இறக்கிவிட்டு மீண்டும் அக்கரை திரும்பியது. இன்னும் விஜயா வரவில்லை.

தோணியில் ஏறுவதே ஒரு லாவகம். தோணித்தள்ளும் தாத்தா இடுப்பளவு தண்ணீரில் நின்று தோணியை கரை ஓரத்திற்கு இழுப்பார். கரையில் நிற்கும் மாணவர்கள் தோணியின் மையத்தை பிடித்து இழுத்து தோணி தரையைத் தட்டும்படி பிடித்துக்கொள்வார்கள். மாணவிகள் தண்ணீருக்குள் கால்களை வைத்து காலும் தெரியாமல் புடவை பாவாடை நனையாமல் முழங்கால் வரைக்கும் துணியை சுருட்டி ஒருகையில் பிடித்துக்கொண்டு தோணிமீது உட்கார்ந்து, அப்படியே சுழண்று திரும்பி கால்மாற்றி தோணிக்குள் குதிப்பார்கள். தண்ணீரில் நிற்கும்தோணி உள்ளே குதிக்கும் ஆட்களின் அசைவிற்கு ஏற்ப சமநிலை குலைந்து தண்ணீரில் ஆடும். தோணியோடு தண்ணீருக்குள் மூழ்க போகின்றோம் என்ற பயம் முதல் நாள் ஏற்படும். போகப்போக பயம் தெளியும். தாத்தா தோணியை ஆடாமல் பிடித்துக்கொள்வார்.

அன்று தாத்தா தோணியை விட்டுவிட விஜயா தடுமாறி தோணிக்குள் விழப்போனாள். கரையில் நின்ற விஜயராகவன் கையில் வைத்திருந்த புத்தகங்களை எங்கு எறிந்தான், எப்படி தோணிக்குள் தாவிக்குதித்தான் என்று தெரியவில்லை. விழப்போன விஜயாவை அள்ளி தூக்கி தோணியின் உள்ளிருக்கும் குறுக்கு பலகையில் உட்கார வைத்தான். இமைப்பொழுதில் பிரளயம். அவள் சுதாரித்துக்கொண்டு அவனை லேசாக தள்ளினாள்.

ராகவன் தோணிக்குள் சென்றவேகத்திலேயே துள்ளி கரைக்கு வந்துநின்றான். தோணி ஏறும் அவசரத்தில் அங்கிருந்த சிலருக்கு என்ன நடந்தது என்றே தெரியாது.

அவன் நண்பர்கள். “என்னடா பண்றே“ என்று ஆற்று ஈரமணலில் கிடந்த புத்தங்களை சேகரித்து அவன் கையில் கொடுத்து நெட்டித்தள்ளினார்கள். புத்தகத்தில் இருந்த ஈரமணல் அவன் சட்டையில் படிந்தது. அவன் அதை தட்டிவிடவில்லை. அவன் முகத்தில் பித்தேறிய புன்னகை மலர்ந்து நிலைத்து நின்றது. எப்படி தோணிக்குள் போனோம் நினைத்து நினைத்துப்பார்த்தான் தெரியவில்லை. தோணித்தாத்தாவுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. தோணியை அசையாமல் பிடிக்காததால் இப்படி ஆகிவிட்டதே என்ற சங்கோஜத்தில். வெற்றிலை போட்டுப்போட்டு கறைபடிந்த பல்தெறிய வெளுத்த உதடு திறந்து விழித்து நின்றார். ஆறு கரை தோணி வெள்ளம் எல்லாம் மறைந்து அவனுக்குள் முழு மௌனம் கனத்தது. அவனும் விஜயாவைப் பார்க்கவில்லை அவளும் அவனைப் பார்க்கவில்லை. அவர்கள் இருவரையும் தோணியில் இருந்த சிலர் ஓரக்கண்ணால் அடிக்கடிப்பார்த்தார்கள்.

அன்று முதல் அவன் முன்னால் வந்தால் அவள் காத்திருப்பாள். அவள் முன்னால் வந்தால் அவன் காத்திருப்பான். ஒருவர் இல்லாமல் ஒருவர் தோணி ஏறமாட்டார்கள் என்பது தோணித்தள்ளும் தாத்தவிற்கு தெரியும். அதுப்பற்றி தெரியாத யாராவது “தோணிப்போகபோவுது வா” என்று கூப்பிட்டாள். “அவுங்க அடுத்தநடை வருவாங்க“ என்பார் தாத்தா.

நாற்பத்தைந்து நாட்களாக அவனும் அவளும் ஒன்றாக தோணியில் செல்லவில்லை. அந்த நாள் அவர்களுக்கு இடையே சுவர் எழுப்பிவிட்டாது

அன்று பேராசிரியர் கே.ஆர் வரவில்லை. முன்னமே வீட்டுக்கு செல்ல கல்லூரி வளாகத்தில் நெருப்புக்கூந்தலோடு வரிசையாக நின்ற ப்பாரஸ்ட்பயர் மரத்தடியில் வந்து நின்றாள் விஜயா.

விஜயராகவன் முதல் மாடி வகுப்பில் இருந்துப் ஜன்னல்வழியாகப் பார்த்தான். சிறுசிறு மஞ்சள்பூப்போட்ட ரோஸ்வண்ண பாவாடைசட்டை, வெள்ளைத்தாவணி. பற்கள் தெரியாமல் கோடு இழுத்ததுபோல் புன்னகை. மஞ்சள் கன்னத்தில் மாலைவெயிலின் மரகதப்பொடித்தூவள்.

அவன் பார்த்ததை விஜயா பார்த்தாள். உதடுகள் மலர்ந்து பால் மின்னல் வீசினாள். பேரூந்தைபிடிக்க தோழிகளுக்கு விடைக்கொடுத்துவிட்டு அவள் தோணித்துறை நோக்கி எதிர்திசையில் மெல்ல நடந்தாள்.

கல்லூரியில் இருந்து தோணித்துறை வரை உள்ள ஒரு கிலோமீட்டர் தூரம் அவர்கள் உலகம். நிற்கிறார்களா? நடக்கிறார்களா என்பது தெரியாமல் பேசிப்பேசி தீரா பேச்சுடன் தோணிஏறி அக்கரையில் பிரிந்துப்போவார்கள். இந்த நடைப்பயணம் இந்த ஜென்மத்தின் இதய பொக்கிஷம். காதலின் கவிதை கணங்கள். அவன் தவறவிடுவதே இல்லை.

அவன் முடிந்தநேரத்தில் வகுப்பை துறக்கமுடியும். விஜயாவால் முடியாது. முடியாது என்பது இல்லை முடியாது என்றுவிடுவாள். வருகைப்பதிவிற்காக தாவரவியல் துறையில் முதலாம்ஆண்டு பரிசுவாங்கியள். மூன்று ஆண்டுகளும் விடமாட்டாள். வருகைப்பதிவிற்காக பரிசுவாங்கும் ஆச்சரியம் அவனுக்கு கனவில்கூட நடக்காது. இதுபோன்று காதலியுடன் பேசக்கிடைக்கும் அபூர்வ தருணங்களே பெரும் பரிசுதான். அது காதல்தேவதையால் அசிர்வதிக்கப்பட்ட கணங்கள். தனது வகுப்புக்கு ஆசிரியர் வரும்முன் வெளியேறிவிட்டான்.

அவன் கல்லூரிவளாகத்தை தண்டி சிதம்பரம் சாலைக்கு வந்ததும். பெட்டிக்கடையில் நின்ற நண்பர்கள் கைகாட்டினார்கள். அவன் கைகாட்டிவிட்டு நடக்க தொடங்கும்போது “விஜயராகவா” என்று மெதுவாக சொல்லிவிட்டு, விஜாவாவின் காதில்விழ வேகமாக ‘விஜயா ராகவா” என்று கத்தினார்கள். விஜயா திரும்பாமல் புன்னகைத்தாள்.

நண்பர்கள் பார்வையில் இருந்து மறையும் இடத்தில் இருந்த இலந்தைமரத்தருகில் இருந்த வேப்பமரத்தடியில் சாலைக்கு முதுக்காட்டி நின்றாள். அந்த மரத்தில் இருந்த இரண்டு தேன்சிட்டுகள் சிறுஅம்புபோல் வெளிவந்து புல்தரையில் விழுந்து கட்டிப்புரண்டு விளையாடி சுற்றிவந்து வேப்பங்கிளையில் மீண்டும் அமர்ந்து ஒன்றினை ஒன்று தழுவியது. வேப்பங்கிளை அசைந்து வேப்பம்பூ அவள் தலையில் பொழிந்தது. அவள் தலையில் விழுந்த பூவொன்றை எடுத்து நோக்கியப்படி அந்த கொஞ்சி தழுவும் சிட்டுகளை ரசித்தாள்.

அவன் அருகில் வந்து அவள் தோளை தனது நோட்டால் மெல்லத் தொட்டான். அவள் விழிகள் மலர்ந்து அந்த தேன்சிட்டுக்களைப்பார்க்க கண்காட்டினாள். அந்த சிட்டுகள் அலகோடு அலகு உரசியது அந்த நேரத்தில். “நாமும் சிட்டாகி

விடுவோமா?, வீட்டுக்குப்போகவேண்டாம்” என்று அவள் சிவந்த மூக்கின் நுனியை நோக்கினான்.

அவள் லேசாக தலையை ஆட்டி மறுத்து மூக்குசிவக்க “நீ சிட்டாகி அந்த கூட்டத்தில் கலந்துவிடு, நான் வீட்டுக்குப்போறேன்” என்று சிரித்தப்படி பாதத்தை எடுத்து வைத்து திரும்பினாள்.

வெள்ளி்க்கொளுசு அவளின் மருதாணி சிவப்பு பாதத்தை உரசி சிணுங்கியது. அந்த கணத்தில் அவளின் பூம்பாதத்தை எடுத்து தனது நெஞ்சில் வைத்துக்கொள்ளவேண்டும்போல் இருந்தது அவனுக்கு. தலையை உதறிக்கொண்டு அவளை நிறுத்துவதற்கு கையை நீட்டி அவளைத்தொடப்போனவன். கையை இழுத்துக்கொண்டு “மனுசனாவே இருப்போம். நில்லு விஜயா” என்றான் சிரித்தப்படி.

மரங்களும் கொடிகளும் நிறைந்த உயிர்வேலிக்கு அப்பால் உள்ள அரும்புத்தோட்டத்தில் இருந்து வந்த காற்று அவளை தழுவி, வேப்பங்கிளையை அசைத்து அவள் கூந்தலில் இருந்த மல்லிகை மணத்தோடு கோகுல் சாண்டல் பவுடர் மணத்தையும் அவளிடமிருந்து அள்ளி வந்து அவன் மூகத்தில் பூசிப்போனது.

முன்நெற்றியில் விழுந்து வலது கண்ணை மறைத்த முடியை ஒதுக்கியபடி காற்றில் பறக்கும் தாவணியை இழுத்து இடுப்பில் செருகிக்கொண்டு கீழிருந்து தலைவரை அவனை அளப்பதுபோல் பார்த்தாள். அவன் பிறந்த நாளுக்கு அவள் வாங்கிக்கொடுத்த வெள்ளைச்சட்டையில் நீளவாக்கில் சிறுபச்சைக்கோடு போட்ட முழுகை சட்டையை பச்சைபேண்டில் இன்செய்திருந்தான். அவள் வாங்கிக்கொடுத்தது என்று யாரிடமும் சொல்லவில்லை. நண்பன் வாங்கிக்கொடுத்தது என்று வீட்டில் சொல்லி வைத்திருந்தான்.

ஏதோ சொல்லவந்தவள் தனக்குள் சிரித்துக்கொண்டு தன்மீது இருந்த வேப்பம் பூக்களை எடுத்து அவன்மீது எறிந்தாள். அவன் சிரித்தப்படி மேற்கு வானத்தைப்பார்த்தான். சூரியன் பொன்னொளி பொடி தூவி வானத்தில் வண்ணக்கோலம் போட்டது. வயலில் நின்ற தென்னைகள் காற்றில் அசைந்து அசைந்து அதை வரைவது போல் இருந்தது. அப்பால் பனைமர ஓலையில் தொங்கிய தூக்கணாம் குருவிக்கூட்டில் இருந்து குருவிகள் கீச் கீச் என்ற ஒலி செய்து கூட்டை சுற்றிப்பறந்து ஆனந்தத்தை கொண்டாடின. அவன்

இதயம் பூப்போல இலகுவாகி மிதந்தது. நரம்புகளில் மகிழ்சியின் ஊர்வலம்.

இடது கையால் மார்போடு அணைத்திருந்த நோட்டுப்புக்கில் இருந்து ஒரு ரெக்காட் பேப்பரை எடுத்து அவனிடம் நீட்டினாள். அவன் அதை கையில் வாங்காமல் தலைகுனிந்து நோக்கினான். ரெக்காட் ஷீட்டில் செம்பருத்தி செடியின் கிளையில் மலர்ந்த மலரும், இலையின் நுண்ணோக்கி காட்சியின் குறுக்குவெட்டுத் தோற்றப்படமும் நேர்த்தியாக வரையப்பட்டு இருந்தது. படத்தைப்பார்த்து அவன் விழிகள் விரிந்தன. சித்திரமா! நிஜமா?

”முனைவர் கே.ஆர் கண்களும் இப்படிதான் விரிந்தது” என்றாள். ஒரு படத்தையே மூன்றுதரம் திருத்தி வரையச்சொல்லும் அவர் அந்த படத்திற்கு வி.வி.குட் போட்டு இருப்பதை சுட்டிக்காட்டினாள்.

விஜயராகவன் விழிவிரிந்தது என்பதற்கு அன்றுதான் பொருள் உணர்ந்தான். சாலை என்பதையும் மறந்து அவளை அப்படியே அள்ளி வாரி அனைத்து கன்னத்தில் முத்தமிட்டான். என்ன செய்கிறோம் என்பது அவனுக்கும் தெரியவில்லை. என்ன செய்கிறான் என்பதை அவளும் அறியவில்லை. அது ஒரு தியான கணம். மரா மரா மரா என்பது ராம ராம ராம என்று திரும்பும் நுண்கணம்.

அவள் பதறி அவனை உதறியபோது அவன் திறந்தவிழியில் தூரத்தில் அரும்புவயலில் பூவெடுத்த பெண்மணி வாயில் கைவைத்து சிலையாகி நிற்பது தெரிந்தது.

இவர்களை அந்த பெண்மணி முன்னமே பார்த்துக் கொண்டு இருந்திருக்கிறாள் என்பது அப்போதுதான் அவனுக்கு உறைத்தது. தலைக்குமேல் வெந்நீர் குழாயை திறந்தது போன்ற பதற்றம். அவனுக்கு அவன் மீதே வெறுப்பு. நின்ற இடத்தை காலால் தேய்த்து பந்தை உதைப்பதுபோல உதைத்தான். பாட்டா செருப்பு கழண்டு தூரப்போய் விழுந்தது. தொண்டைக்குழியில் துளிர்த்த வியர்வை நெஞ்சுக்குழியில் சொட்டி குளிர்ந்தது. வேப்பமர காற்றும் வியர்வையில் நனைந்த பனியனும் தொட்டுக்கொள்ளும்போது எழுந்த குளிர் சிலுசிலுப்பு. மயில் இறகால் காதுமடல்களை வருடியது போன்ற பரவசம்..

இதுவரை அறிந்திராத அற்புத சுகானுபவம். அறிவை தாண்டிய ஆனந்த உணர்ச்சி. உள்ளுக்குள் சுட்டுக்கொண்டே இறங்கும் குளிர்ந்த ஐஸ் கட்டிகள். முச்சுக்காற்றில் ரோஜாவின் மணம்.

அவள் சூடியிருக்கும் பூவிலிருந்து மல்லிகைமணம், அவள் பூசியிருக்கும் பவுடரில் இருந்து சந்தமணம் வர வாய்ப்பு உள்ளது. ஆனால் உள்ளும் புறமும் நிறையும் இந்த ரோஜாவின் மணம் எங்கிருந்து? எங்கிருந்து? கண்களால் துழாவினான். கண்களில் காட்சிகள் இல்லை பித்தேறிய விழிகள் ஆற்று மீன்போல நிற்கமுடியாமல் துடித்து அலைந்தன. உருவழிந்து மூச்சு மட்டும் ஓடும் பரவசம். எங்கும் நிறைந்த மலர்ந்த இதயம். இது அகம் பரப்பும் மணமா? என்ன ஒரு பேரனுபவம். காற்றில் கரைந்துவிடவேண்டும் போல் இருந்தது அவனுக்கு.

அவள் நெஞ்சு படப்படக்க ஒடுவதா? நிற்பதா விழுவதா என்று தெரியாமல் அப்படியே நெஞ்சில் ரெக்காட்பேப்பரை அணைத்துக்கொண்டு சாலையில் உட்கார்ந்துவிட்டாள். அவன் பதறி அவளை பிடிக்கப்போக அவள் விலக அவன் கையில் பாதியும் அவள் கையில் பாதியும் அந்த படம் இரண்டாகி படப்படத்தது. இதற்காகவா அந்த படத்திற்கு வி.வி.குட் கிடைத்தது?.

அந்த மரத்தில் உட்கார்ந்திருந்த தேன்சிட்டுகள் மீண்டும் பறந்துவந்து புள்வெளியில் விழுந்து புரண்டு கட்டி அணைத்துக்கொண்டு விளையாடியது. அவைகள் தன்னை மறந்து துள்ளிவிழுந்த இடத்தில் நிறைந்து கிடந்தன நெருஞ்சிமுட்கள். அவைகளை குத்திகீறின. விளையாடுவதை விட்டுவிட்டு அவைகள் கூடு உள்ள அந்த பனைமரத்தை நோக்கி உயரப்பறந்து மறைந்தன.

சில நாட்களுக்கு முன் மஞ்சள் மஞ்சளாய் பொன்பூத்ததுபோல அழகாக இருந்த அந்த இடத்தில் உதிரம் வரவைக்கும் நெருஞ்சி முட்கள் இன்று. அவன் மயிர்க்கால்களில் ரத்தம் வடிவதுபோல வலித்தது.

அவனுக்கு எங்கு இருக்கின்றோம் தனக்குள் என்ன நடக்கின்றது என்று தெரியவில்லை. அவன் தவித்து நகர்ந்துபோய் செருப்பை மாட்டிக்கொண்டு வேப்பமரத்தில் சாய்ந்து கொண்டான். மூச்சுவிடுவது கடினமாக இருந்தது. சற்று முன் மலர்போல இருந்த

இதயமா இது? ரயில் தண்டவாளம் போல அதிர்ந்து கனத்து அழுத்தியது அவனை. கையும் காலும் நடுங்கின.

அவள் விழிகளில் கண்ணீர் ததும்பி சொட்டியது. ஒரு கணத்திற்கு முன் பூக்களை பழித்த விழிகளா அவை?

அவன் கையில் இருந்த பாதி பேப்பரை வெடுக்கென்று புடுங்கிக்கொண்டு தோணித்துறையை நொக்கி ஓட்டமும் நடையுமாக பறந்தாள்.

ராகவன் நினைவு திரும்பி தோணித்துறைக்கு ஓடிவந்தான். அவள் நிற்பாளா?

விஜயா அக்கரையில் தனது மிதிவண்டியில் ஏறி வீட்டுக்குப்போய் கொண்டு இருந்தாள். அவன் மிதிவண்டி மட்டும் தனியாக நின்றது. ராகவன் கண்கள் கலங்கியது. வெள்ளாறு முழுவதும் நிரம்பி இருப்பது அவன் கண்ணீர்தானோ? முள் கதையை இதயத்தில் அழுத்தி இழுத்தது போன்ற வலி. உள்ளம் விம்ம தனிமையில் ஆற்று மணலில் நின்றான். விஜயாவோடு பேசிக்கொண்டு வருவான் என்பதாலேயே நண்பர்கள் வீட்டுக்குப்போகும்போது அவனுக்காக காத்திருப்பதில்லை.

நாற்பத்தைந்து நாட்கள் கடந்துவிட்டது. அன்றோடு அவன் வரும் தோணியில் அவள் வருவதில்லை. இது சரியாகும் என்று ராகவன் ஒதுங்கிப்போனான். ஒதுங்கிப்போனதே இப்போது பிரிவாகி விட்டது.

நாட்கள் நகரநகர அவர்களுக்கு இடையில் பிரிவு பெரும் சுவராக எழுந்து நின்றது. வகுப்பில் இடம்மாறி உட்கார்ந்து ஜன்னல் தரிசனத்தையும் மூடிவிட்டாள். இனியும் அதை உடைக்காமல் இருக்கக் கூடாது என்றுதான் ராகவன் தோணித்துறையில் கப்பல் விட்டுக்கொண்’டு காத்திருக்கிறான். மீண்டும் வழியைப்பார்த்தான் விஜயா இன்னும் வரவில்லை.

பெரியபெரிய கெண்டைமீன்கள் சிறு சிறு வெள்ளிக் கப்பல்கள் போல தண்ணீரை கிழித்துக்கொண்டு மேற்கே நீந்தின. தொடையளவு பெரிய வெள்ளிக்கெண்டை ஒன்று தண்ணீரை விட்டு நான்கடி துள்ளி காற்றை கிழித்துக்கொண்டு பாய்ந்ததும் கிழிப்பட்ட தண்ணீர் கைத்தட்டுவதுபோல ஆர்பரித்தன. கெண்டை வாய்திறந்து கண்கள் பிதுங்க திகைத்து புது உலகை கண்டு

மிரண்டு மூச்சுமுட்ட வால்சுழற்றி துள்ளி முன்னாள் விழுந்து நீந்தியது. அந்த அனுபவத்தைப்பெற மீண்டும் அது காற்றில் துள்ளி நீந்தியது. அதைப்பார்த்து இன்னும் சிலமீன்கள் துள்ளி காற்றில் பாய்ந்து நீந்தி விழுந்தன. ”நீரில் நீந்தும் மீன்தான் காற்றிலும் நீ்ந்துகின்றது. நீரில் நீந்தும் மீன்கள் அறியுமா காற்றில் நீந்திய மீனின் அனுபவத்தை. எனக்குள் நீந்தும் நானும் அவளுக்குள் நீந்தும் நானும் ஒன்றா? அது நானே அறியாத ஒன்று. நான் வேண்டும் என்றே அவளை முத்தமிடவில்லை. என்னைமீறி காற்றில் நீந்திய மீன் நான். இன்று இந்த ஆற்று மணலில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறேன்”. காற்றில் நீந்தாத மீனும் இருக்கத்தானே செய்யும் இந்த ஆற்றில். அவன் உதட்டில் புன்னகை நெளிந்தது.

ஆற்றில் மணிக்கணக்காக நின்றதில் பாதம் ஊறி நீர் குடித்த மைதா பிரட்டு போல நீருக்குள் வெள்ளையாக தெரிந்தன. நீரின் வேகத்திற்கு பாதத்தின் கீழே மணல் அறுபட்டு உருண்டது. உருண்ட மணலில் ஒன்று இரண்டு பொன் துகள்கள் என மின்னின. பொன்தானா?. ராகவன் திகைத்தான். ஆற்றில் நின்றபடியே கல்லூரிச்சாலையைப் பார்த்தான். வான் சோலையில் இருந்து இறங்கிவரும் பூப்போல விஜயா சிகப்பு தாவணி காற்றில் மெல்ல அசைய வந்து கொண்டிருந்தாள்.

ஆலமரத்தடியில் உட்கார்ந்து இருந்த தாத்தா எழுந்து வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு ஆலமரத்திற்கு பின்னால் சென்று பாட்டிக்கு முதுகுக்காட்டி மறைவாக குந்திருந்துவிட்டு எழுந்து வந்தார். பாட்டி சுருண்டு மரத்தடியில் மண்ணில் படுத்திருந்தது.

விஜயா ஆற்று மணலில் தனது செருப்பை கழட்டிவிட்டுவிட்டு அவன் நிற்கும் இடத்திற்கு சற்று தள்ளி கால்கள் ஆற்று நீரில் நனைய அரக்குவண்ணப் பாவாடையை சற்று உயர்த்திப் பிடித்தப்படி நின்றாள்.

நீருக்குள் தாமரைமொட்டு அமிழ்ந்து சாய்ந்து அசைவதுபோல அவள் வலது பாதம் தண்ணீருக்குள் அலைந்து அலைந்து அலை நெய்தன. நீருக்குள் மின்னிய வெள்ளிக்கொலுசின் முத்துகள் அவள் பாதத்தை சுற்றி மிதந்தன. சிறுசிறு மீன்குஞ்சுகள் அவள்பாதத்தை மொய்க்க நீந்தி வந்தன.

ஆற்றங்கரையில் யாரும் இல்லை. தோணி அக்கரையில் ஆற்றுக்குள் அடிக்கப்பட்ட முளையில் கட்டப்பட்டு ஆற்றுநீரில் இழுத்தபடி நின்றது. தாத்தா புளியமரத்தடியில் தனது வெற்றிலை பையை திறந்து வைத்து வெற்றிலைக்கு சுண்ணாம்பு தடவினார்.

கிழக்கே நடு ஆற்றில் தூரத்தில் மீன்படிப் படகில் நின்றவர் ஆற்றுக்குள் சுருக்கு வலையை வட்டமாக வீசினார். தோணி திரும்பி வர இன்னும் அரைமணிநேரமாவது ஆகும். இந்த நேரம் போதும். அவன் மெதுவாக அவள் அருகில் சென்று நின்றான். முறைத்துவிட்டு உதட்டை சுழித்தப்படி முகத்தை திரும்பிக்கொண்டாள். அந்த உதட்டு சுழிப்பும், மின்னல் வாளை சொடுக்கியது போன்ற முக திருப்பும். ஒரு புகைப்பட காட்சி என மனதில் பதிந்து அவனை பரவசப் படுத்தின. மாலை சூரியன் ஆற்றின் மையத்தை அடைந்து கீழிறங்கிக் கொண்டிருந்தான். சூடு இல்லாத மஞ்சள் சூரிய ஒளி நீரில்பட்டு வெள்ளாறே தங்க குழம்பாகிவிட்டது போல அலையடித்தது. நீரின் ஒளி அலைகள் அவள் மேனி முழுவதும் விளையாடின. கன்னம் மின்னியது.

ஆற்றில் இருந்து எழுந்த குளிர் காற்றில் தென்றல் சுகம் கடல் வாசம். அவள் எதுவும் திட்டாமல் இருந்தது துணிச்சலை கொடுத்தது. நெருங்கி அருகில் சென்று. தோப்புக்கரணம் போடுவதுபோல இரண்டு காதுகளையும் கைகளை மாற்றிப்பிடித்து குனிந்தபடி “சாரி“ என்றான். அவள் பார்க்கவில்லை. அவள் காதுக்கு அவன் வார்த்தைகள் விழுவதற்குள்.

“போடி..போடி” என்ற தாத்தாவின் குரல்கேட்டு இருவரும் திடுக்கிட்டு திரும்பினார்கள்.

வெள்ளி முள்ளாய் குத்திட்டு நிற்கும் தாடி, பெரிய வெள்ளை மீசையுடன் தாத்தா சிவந்த கண்களை விழித்துப்பார்த்து காறி எதிர்திசையில் துப்பிவிட்டு கோபமாக கத்தினார், பாட்டியின் உலர்ந்த கண்களில் அச்சமும் கண்ணீரும். பாட்டியின் கழுத்தும் தலையும் மெல்ல ஆடியது.

ஆற்றுக்கு முதுகு காட்டி பாட்டியை திட்டிக்கொண்டே ஆற்று மணலில் பின்பக்கம் நடந்து வந்த தாத்தா மணலில் கிடந்த கம்பு தடுக்க கால் புதைந்து தடுமாறி கீழே விழுந்தார். பாட்டி பதறி தவித்து தூக்க ஓடிவந்து தானும் விழுந்து எழுந்தது.

கோபத்துடன் எழுந்த தாத்தா கீழே கிடந்த கம்பை எடுத்து பாட்டியின் இடுப்புக்கு கீழே தொடையில் அடித்தார். பாட்டி கட்டியிருந்த நீல பழைய புடவையின் ஒட்டுத்தையலில் தொங்கிய பழுப்பேறிய வெள்ளை நூலில் கழி மாட்டி புடவையை மேலும் கிழித்தது.

பாட்டி தன்மீது விழும் அடியை தடுக்காமல், “வீ்ட்டுக்குவாயா..வீட்டுக்குவாயா, வீட்டுக்குப்போவோம் “ என்று கெஞ்சியபடி குழந்தையை அள்ளவரும் தாய்போல தாத்தாவிடம் தாவியது. தாத்தா குருடன் காற்றில் கழிவீசுவதுபோல பாட்டியின் மீது ஆவேசத்துடன் கழியை விசிக்கொண்டே இருந்தார்.

ஆத்திரத்துடன் ஓடிவந்த ராகவன் கழியை பிடிங்கிக்கொண்டு தாத்தாவை நெஞ்சில் கைவைத்து தள்ளினான்.

“ராகவ்! வேண்டாம்” என்று விஜயா ராகவன் முதுகில் கையில் வைத்திருந்த நோட்டால் அடித்துவிட்டு தாத்தாவை விழாமல் பிடித்துக்கொண்டாள். நோட்டு பறந்துபோய் தூரமாக ஆற்றுமணலில் விழுந்தது.

பாட்டி ஓடிவந்து தாத்தாவை கட்டியணைத்து தேம்பியபடி “வாயா வீட்டுக்குப் போவோம் “என்றது. சட்டை போடாததால் பாட்டியின் வரண்ட முலைகள் மாறாப்புக்கு வெளியே இரண்டு பக்கமும் கருப்பு சுருக்கு பைபோல தொங்கியபடி நெஞ்சில் ஆடியது.

விஜயா தாத்தாவை விட்டுவிட்டு பாட்டியை அணைத்து மாறப்பை இழுத்து பாட்டியின் நெஞ்சை மூடினாள். இருவரையும் அணைத்தபடியே மணலில் உட்கார வைத்து தானும் உட்கார்ந்தாள்.

ராகவன் கையில் இருந்த கம்பை பாதையைவிட்டு தூரத்தில் எறிந்துவிட்டு, தூரத்தில் கிடந்த விஜயாவின் நோட்டை எடுத்துவந்து ஒதுங்கி அமைதியாக நின்றான்.

தாத்தா தலையில் கட்டியிருந்த முண்டாசு துண்டை அவிழ்த்து பாட்டியின் முகத்தை கண்ணீர் கறை போக துடைத்துக்கொண்டே ‘நான் ஆம்பள எங்காவது கிடந்துடுவேன். நீயும் என்கூட வந்தா இந்த வயசுல நான் என்ன பண்ணுவேன். நீ வீட்டுக்குப்போ” என்று

தேம்பினார். வார்த்தை அடைத்து பேச்சு உடைந்து தேம்பல் அர்த்தமற்ற சத்தமாக வெளிப்பட்டது.

அடுத்தவர்கள் முன்னால் அழுதுவிடக்கூடாது என்ற கட்டுப்பாடு உடைந்ததின் வேதனையால் உடல் முழுதும் நடுக்கம். பாட்டியின் அடிப்பட்ட தொடையை தனது தோல்போர்த்திய எலும்பாகிவிட்ட நரம்பு நெளிந்த கறுத்த கைகளால் மெல்ல தடிவினார். அவர் கண்ணீர் பாட்டியின் மடியில் விழுந்தது.

விஜயா எழுந்து பாவாடையில் ஒட்டியிருந்த ஆற்றுமணல்போக தனது பின்பக்கத்தை தட்டினாள். யானையின் தும்பிக்கைபோல வலம் இடம் ஆடிய அவளின் நீண்ட சடையை எடுத்து முன்னாள் போட்டுகொண்டாள்.

அவள் உட்கார்ந்து இருந்த இடம் ஆற்றுமணலில் அரைநிலவடிவில் நான்குவிரல் ஆழத்திற்கு அமிழ்ந்து குழிந்து பாவாடை சுருக்கங்களின் கோட்டோவியம் நிறைந்து இருந்து. அந்த சித்திரத்தில் விஜயா தலையில் இருந்து சில மல்லிகை மலர்கள் விழுந்து அரசிப்பொறிபோல காட்சிக்கொடுத்தது.

விஜயா ராகவன் கையைபிடித்து இழுத்து தாத்தாப்பாட்டி பக்கத்தில் தனது அருகில் உட்காரவைத்துக்கொண்டாள்.

அவன் தனது கையில் இருந்த அவளுடைய பெரிய லாங்சைஸ் நோட்டை திறந்தான். அந்த பெரிய நோட்டின் இருநூறு பக்கம் முழுவதும் ‘ஐ லவ் யூ விஜயராகவன்’ என்று எழுதி இருந்தது. அவன் நெஞ்சுவிரிய அமைதியாக அந்த நோட்டின் பக்கத்தை ஆழ்ந்துப்பார்த்தான். அந்த “ஐ லவ் யூ விஜயராகவன்” என்ற வரிகளுக்கு இடையில் மெல்லமெல்ல ஒரு ஓவியம் எழுத்துக்களை குவித்துக்கொண்டு எழுந்து துளங்கி வந்தது. நுணுக்கமான ஓவியனின் கைவண்ணம். அது அவன் அவளுக்கு அன்று முத்தமிட்ட அந்த ஒருகண காட்சி. அவன் அழுதுவிட்டான்.

அவன் தவிப்போடு ஆற்றில் மிதந்த அவன் செய்துவிட்ட கப்பல்களைப்பார்த்தான். அத்தனை காகிதத்தை கிழித்து கப்பல் செய்தவனுக்கு ஒன்றில்கூட ‘ஐலவ்யூ விஜயா’ என்று எழுததோன்றவில்லை. ஏன்? அவளுக்கு முத்தமிட்ட உதட்டில் அமிலம் வழிவதுபோன்ற சூடு. உதட்டைக்கடித்து துப்பிவிடவேண்டும்போல் பற்களால் உதட்டைக்கடித்தான்.

“காமத்தைதான் காதல்“ என்று நினைக்கிறேனா? அவனால் அவள் முகத்தை ஏறிட்டுப்பார்க்க முடியவில்லை. அவள் தந்த நோட்டை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு வெள்ளாற்றைப் பார்த்தான்.

வெள்ளாற்றின் நீர் ஏற்றம் அவர்கள் உட்கார்ந்து இருந்த இடத்தை நெருங்கி வந்துக்கொண்டிருந்தது. தோணித்தள்ளும் தாத்தா கோலை ஊன்றி தோணியில் வடக்கும் தெற்கும் நடந்தபடியே தோணியை இக்கரை நோக்கி நகர்த்திக்கொண்டு இருந்தார்.

அவன் தாத்தா பாட்டியைப் பார்த்தான். தாத்தாவின் காப்பேறிய கை இயல்பாக பாட்டியின் பாதத்தை மெல்ல மெல்ல நீவி அழுத்தி பிடித்துவிட்டு கொண்டிருந்தது.

அவனுக்கு மட்டும் கேட்கும்படி மெதுவாக “துரை! சாரி கேட்க நாப்பத்தைந்து நாட்கள் ரிகர்சல் பார்த்திங்களா?” என்று மெல்ல சிரித்தாள். அவள் விழிமணி ஒளி அவன் நெஞ்சில் பட்டு அவனை பரவசப்படுத்தியது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *