தாமரை இலையும் தண்ணீரும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: December 25, 2020
பார்வையிட்டோர்: 11,008 
 
 

சும்மா கிடந்த சங்க ஊதிக்கெடுத்தான் ஆண்டி என்பது போல, தூங்கிக்கொண்டிருந்த மகனை எழுந்திருடா, என்ன புள்ள நீ, மார்கழி மாசத்தில கோவில்ல இருந்து எத்தனை பாட்டு ச்சத்தம் கேட்டாலும் எழுந்திருக்க மாட்டேங்குற, பக்கத்து வீட்டு பிள்ளைங்கெல்லாம் காலையில எந்திரிச்சி குளிச்சிட்டு நல்ல பிள்ளையாட்டம் கோவிலுக்குகெல்லாம் போறாங்க, நீயும் இருக்கியே என்றாள் அம்மா

சும்மா இரும்மா எந்த பிள்ளைங்க போகும்? காலங்காத்தால தூங்க விடும்மா என்றான் வேண்டுமென்றே யார் யார் போகின்றார்கள் என்று தெரிந்துகொள்ள.

எந்த பிள்ளைகளா? உன் கூட படிக்கிற குமாரு, அப்புறம் எதிர்த்த வீட்டு பிள்ளை, அவ தங்கச்சி எல்லோரும்தான் போறாங்க. நான் என்ன சும்மாவா சொல்லுறேன் என்றாள் விவரம் தெரியாத அம்மா

செந்திலுக்கு தூக்கி வாரிப்போட்டது, அடே குமாரு துரோகி இரவு பத்து மணி வரைக்கும் என் கூடதானடா இருந்தே, கோவிலுக்கு போற விசயத்த சொல்லவே இல்ல நீ எப்படி டா சொல்லுவே உனக்கும் எனக்கும்தான் போட்டியாச்சே! யார் முதல்ல அவகூட பேசுறதுன்னு ரெண்டுபேருமே மீனுக்காக காத்திருக்கும் கொக்கு போல ரெம்ப நாளா காத்திருக்கோம் அவளை சந்திப்பதற்கு, உன்னிடம் எப்படி நியாய தர்மம் எதிர்பார்க்க முடியும்.

செந்தில் அவசர அவசரமாக குளித்து உடை மாற்றி கோவிலுக்கு ச்சென்றான்

செந்திலும் குமாரும் பி எஸ் சி பாட்டனி மூன்றாமாண்டு ஒரே கல்லூரி, ரெண்டுபேருக்கும் ஓரு எழுதப்படாத ஒப்பந்தம், தங்களின் மூலமாக அந்த பெண்ணுக்கு எந்த ஒரு தொந்தரவும் இருக்கக்கூடாது என்று,  அந்த பொண்ணு குண்டு மல்லி மாதிரி இருப்பா ஆனால் பேரு தாமரை, பி எஸ் சி பிஸிக்ஸ் முதலாமாண்டு, வேற கல்லூரி

செந்தில் முப்பது நாட்களில் ஆங்கிலம் கற்பது போல மார்கழி மாத முப்பது நாளில் காதல் படித்தும் கற்ப்பித்தும், ஒருவழியாக பாட்டனிக்கும், பிஸிக்ஸுக்கும் , கெமிஸ்ட்ரி ஒர்க்கவுட் ஆகி, தை ஒன்றாம் தேதி காதலுக்கு மரியாதையாய் தலைப்பொங்கலும் கொண்டாடப்பட்டுவிட்டது.

குமாராக இருந்தவன் இதயம் முரளியாக மாறிவிட்டான். செந்திலுக்கு படிப்பும் முடிந்தது. பணியும் கிடைத்தது. கல்யாண பேச்சு எடுத்ததும் ஜாதி வந்து தடுத்தது, காதலுக்கு லாக் டவுன் போட்டு காதலர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்

தாமரை பெயர் கொண்ட குண்டு மல்லி இப்போது ஜாதி மல்லியானதும், பூஜைக்கேத்த பூவிது, நேத்து தானே பூத்தது என்று புதுமாப்பிள்ளை வந்து பூவை அள்ளிக்கொண்டு போனான்

ஆண்டுகள் இரண்டோடின, தாமரை எனும் வாடா மல்லியின் தோட்டத்தில் இரு அல்லிகளும் பூத்தன, ஆனால் காதலித்தவன் மட்டும் தண்ணீரில் மிதக்கும் தாவரத்தை போல மிதக்கின்றான் டாஸ் மாக் எனும் குட்டையிலே.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *