(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
வானம் கறுத்து இருண்டிருந்தது. காற்றுப்பலமா கச்சுற்றிச் சுழன்று அடித்தது. நீலக்கடலலைகள் மடிந்து வெண்ணுரை கக்கி கரையில் மோதித் திரும்பின.
அவனும், நந்தகுமாரும், பொன்னுத்துரையும் கடற்கரைத் தாழை மரமொன்றின் நிலம் நோக்கிச் சாய்ந்த கிளையில் அமர்ந்திருந்தனர். அவன் ஏதோ நினைவில் மனத்தைப் பறிகொடுத்த இலயிப்பில், மனத்தில் அடங்காது கட்டுமீறிக் கொப்பளிக்கும் குதூ கலத்தில், வார்த்தைகளில் சிறைப்பிடிக்க முடியாத அந்த உணர்ச்சிகளின் சுகானுபவத்தில் மூழ்கி ஏதேதோ இராகக் கோலங்களை மனத்துள் வரைந்து – அவற்றுக்கு ஒலி அர்த்தம் கொடுக்கும் முனைப்பில் எதை எதையோ முணுமுணுத்துக் கொண்டு – அந்த முணுமுணுப்பின் சுருதி பேதங்களில் மனத்தைச் சஞ்சரிக்க விட்டு அந்த சுருதிபேதங்களே தனது குதூகல உணர்ச்சிகளை வார்த்தைகளில் சிறைப்பிடிக்க முடியாத அந்த உணர்ச்சிகளை அப்படியே அலாதியாக வெளிக்கொணர்கின்றன என்று நினைத்து, அந்த இன்பத்தில் மூழ்கியிருந்தான். அவன் சுற்றாடலை மறந்திருந்தான். இசை மயமான தன் உணர்ச்சி வெளிப்பாடுகளினாலும், இயற்கையின் அழகுக் கோலங்களினாலும் அவன் தன்னை மறந்து இயற்கையுடன் ஏகமாகி இருந்தான்.
மலையில் பிறந்து கடலில் கலக்கும் நதியின் வாழ்க்கை வழியினை அவன் எண்ணிப் பார்த்தான். அதன் வழியில் குறுக்கிடும் செங்குத்தான பள்ளங்களில் வைரத் தொங் கல்களாக அவை விழுந்து, வெள்ளி மணிகளாகச் சிதறி. மீண்டும் ஒருங்கிணைந்து ஓம் என்ற நாதமெழுப்பி ஓடும்! மலர் சுமக்கும் காடுகளில் சிறு குழந்தைகளாகச் சிரித்து அவை தவழும்; பாறைகளில் முட்டி மோதிச் சுழித்துப் பாயும்; கிராமங்களின் வயற்கால்களில் புகுந்து. மெல்லிய நீர் வளையங்களாகத்துள்ளி விளையாடும் ; சங்கமத் துறையில் இவ்வுலக பந்த பாசங்களேதுமற்ற யோகியைப்போல அமை தியாக ஆர்ப்பாட்டமில்லாது கடலோடு கலந்து ஏகமாகும்.
நதியின் உயிர்துடிக்கும் அந்த இயக்கங்களை இசைக் கோலங்களில் அவன் கற்பனை செய்து பார்த்தான். அவன் மனத்தின் நாத அலை ஏற்ற இறக்க சுருதி பேதங்களில், நதி ஓடிற்று. நீர் வீழ்ச்சிகளாய் வீழ்ந்து நாதமெழுப்பிற்று. மலர் சுமந்து சிரித்திற்றுப் பாறைகளில் மோதி ஒலித்திற்று. வயல் களில் விளையாடிற்று. இறுதியில் கடலுடன் அமைதியாயிற்று. அவன் களிப்பில் மிதந்தான்; ஆகாயத்தில் உயர உயரப் பறப்பது போல் உணர்ந்தான். உடல் லேசாகி விட்டமாதி மியும் – உணர்ச்சியேயில்லாத பஞ்சுப் பொதி போலவும் அவறுக்குப்பட்டது. உரத்துக் குரலெடுத்துப் பாடவேண்டும் போல அவனுக்குப் பட்டது. தாழம் புதர்களின் ஈரலிப்பான அந்தப் பச்சையில் படுத்துப் புரளவேண்டும் போல அவனுக்குப்பட்டது. அலை அடித்து வடிந்து செல்ல, வானத்தின் வண்ணக் கோலங்களைப் பிரதிபலிக்கும் கடற்கரையின் பளிங்குபோன்ற ஈரமணலில் எழுந்து நின்று துள்ளித்துள்ளி ஆட வேண்டும் போல அவனுக்குப்பட்டது. இறுதியில் தலையைச்சுற்றி மயக்கம் வருவதாக அவன் உணர்ந்தான்.
தாழைமரக் கிளையைக் கரங்களினால் இறுகப் பிடித்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான். தன் கவித்துவமான – ஆழமான அந்த மயக்கினின்றும் விடுபட்டு அவன் நண்பர்களைப் பார்த்தான். நந்தகுமார் ஏதோவோர் தமிழ் சஞ்சிகையின் கதையொன்றில் ஆழ்ந்திருந்தான். வலக்கையில் சஞ்சிகையை வைத்துக்கொண்டு, இடது கையால் தலையைக் கோதிக்கொண்டு தன்னை மறந்திருந்தான் அவன். அவன் முகத்தில் சாந்தம் ததும்பிற்று. அந்த நிலையில் அவன் மிக அழகாக இருந்தான். அவளது கோடிட்டாற்போன்ற அந்த அரும்பு மீசை. அவன் முகத்திற்கு ஒரு தனிக்களையைக் கொடுத்துக் கொண்டிருந்தது.
பொன்னுத்துரை கிளையின் உயரமான பகுதியில் அமர்ந்திருந்தான். காலிரண்டையும் அந்தரத்தில் தொங்கவிட்டு ஆட்டிக்கொண்டிருந்தான். ஒரு கையால் கிளையைப்பிடித்துக் கொண்டு, வாடி வதங்கியிருந்த ஒரு தாழம்பூவை அவன் முகத்தருகில் வைத்து முகர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான்.
கணங்கள் ஊர்ந்தன. கரையோரத் தண்டவாளத்தில் தெற்கு நோக்கி வண்டியொன்று விரைந்தது. மாலை நேரத்து மஞ்சள் வெய்யில், பச்சைத் தாழம்புதர்களில் படர்ந்து பளபளத்தது : வெண்ணுரை கக்கும் அலைகளினூடாக மினு மினுத்தது. பருவத்தின் தலைவாயிலில் வந்து நிற்கும் பன்னிரண்டு பதின்மூன்று வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருத்தி அலைக்கரங்களின் போக்குக்கேற்ப துள்ளித்துள்ளி விளையாடிக் கொண்டிருந்தாள்.
அவன் அந்த அழகுகளில் மயங்கினான். இந்தப் பிரபஞ்சத்தின் ஆத்மாவே இப்படியான அழகுக் கோலங்கள் தானென அவன் எண்ணினான். பொங்கும் புதுப்புனலாக – பச்சை, சிவப்பு, நீலம், மஞ்சள் நிறங்களாய்ச் சொரியும் மத்தாப்பின் வரவை ஜாலங்களாக – வசந்தகாலத்து உயிர் துடிக்கும் பெரிய பூங்காவாக – மாலை நேரத்து வயல் வெளியின் பறவைக் கூட்டங்களாக அவன் மனதில் ஏதேதோ இசைக்கோலங்கள் மிதந்தன ; மனத்தை வருடி இதம் கொடுத்தன ; பூரித்து முணுமுணுப்புகளாகச் சிதறின.
அவன் அவளை நினைத்துக்கொண்டான்; அவள் கடைக்கண் பார்வையின் குளுமையை நினைத்துக் கொண்டான்; அவள் நடையின் பாவத்தை நினைத்துக்கொண்டான். அவள் புன்சிரிப்பின் மோகனத்தை நினைத்துக் கொண்டான் ; நெஞ்சின் ஆழத்திலிருந்து பிறக்கும் அவள் குரலின் இனிமையான கம்பீரத்தை நினைத்துக் கொண்டான்; எல்லாருடனும் சகஜமாகப் பழகும் அந்த லாவண்யத்தை நினைத்துக்கொண்டான்.
அவன் உணர்ச்சிவசப்பட்டவனாக நண்பர்களைத் திரும்பிப் பார்த்துத் திடீரெனச் சொன்னான்.
“கலைகளின் பிறப்பின் அடிப்படை. அழகு இலயிப்புகள் தான் : அழகுகளின் வசீகரங்களே மனித மனங்களைக் கிறு கிறுக்கச் செய்து, உணர்ச்சி வசப்பட வைத்து, அவனை கலைக் கோலங்களை ஆக்கத் தூண்டுகின்றது. இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?”
பொன்னுத்துரையின் முகத்தில் மெல்லிய புன்னகை அரும்பிற்று.
சஞ்சிகையில் பதிந்திருந்த கண்களைத் தூக்கி ஒருகணம் தயங்கிய நந்தகுமார். தனது வலதுகை மோதிர விரலில் இருந்த தங்கமோதிரத்தை இடது கையால் சுழற்றிக் கொண்டே சொன்னான்.
“அழகுகள் தான் கலையின் அடிப்படை என்ற வாதத்தை ஏற்க முடியாது. மனித மனத்தின் உணர்ச்சிக் குமுறல்களும். கொந்தளிப்புகளும் சோகங்களும் கூட உயர்ந்த படைப்புகளின் கருப்பொருளாகியிருக்கின்றன தானே!”
அவன் இடைமறித்தான். “உண்மைதான்; ஆனால் மனி – தன் குதூகலமாக இருக்கும் போதுதான் ஆத்மார்த்த ரீதியாக அவனின் உணர்ச்சிகள் பொங்கிப் பிரவாகிக்கின்றன. ஆதி மனிதன் மகிழ்ச்சியாய் இருக்கும் போதுதான் கலைகளின் அடிப்படையைச் சமைத்திருப்பான். அபிநயம், இசை, ஓவி யம், சிற்பம் என்கின்ற ஒவ்வொரு கலைக்கோலமும் ஏதோ வோர் உணர்ச்சியின் வெளிப்பாடாகத்தானே அமைந்திருக் கும்: இப்போதும் அமைந்திருக்கின்றன”.
“அதைத்தான் நானும் சொல்கிறேன்! அழகு இரசனை தான் கலைகளின் அடிப்படை அல்ல; மனிதனின் உணர்ச்சிகள் இன்பம், துன்பம், சோகம், சந்தோஷம் என்கின்ற உணர்ச்சிகளின் வெளிப்பாடு – அதாவது நவரச வெளிப் பாடே கலையின் அடிப்படை” என்ற நந்தகுமார் தான் சொன்னவற்றின் அர்த்தத்தைப்பற்றி நினைத்துக்கொண்டே சஞ்சிகையின் ஒற்றைகளை ஒவ்வொன்றாகப் புரட்டினான்.
அதுவரை மௌனமாக இருந்த பொன்னுத்துரை, கிளையினின்றும் இறங்கி, கால்களை நிலத்தில் பதித்து, கிளையில் சாய்ந்துகொண்டு, கைகளை நெஞ்சின் மேல் கட்டிக்கொண்டு. புன்னகை பூத்த வண்ணம் தன் கம்பீரமான குரலில் சொன்னான்.
“உணர்ச்சிகளின் வெளிப்பாடுகள் தான் கலை என்கிறீர்கள். சமுதாய உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் கலைப்படைப்புகளே உன்னதமானவை என்று நான் சொல்வேன். அவைதான் சமுதாய வளர்ச்சியைத் துரிதப்படுத்தும். அவைதான் அடக்குமுறைகளுக்குள்ளாகி அடிமைகள் போல இன்னலுறும் மனிதர்களைச் சிந்திக்க வைக்கும், சமுதாயசமத்துவம் காணும் முயற்சியில் அவர்களை ஊக்குவிக்கும். இன்றைய சமுதாய அமைப்பில் அடக்கு முறையால் அல்லலுறும் மனிதர்களின் அவல உணர்வுகள்தான். இன்றைய கலைப்படைப்புகளின் ஊடுபாவாக திகழ வேண்டுமென்பேன். வெறும் தனிமனித உணர்வுகளையும், சோகங்களையும் கலைப்படைப்புகளில் கையாள்வதால் சமுதாய முனைப்புகள் திசைதிருப்பப்பட்டுப் பாழாகின்றன”.
“இந்த வாதத்தை என்னால் ஏற்க முடியாது. சமுதாய வளர்ச்சி என்னும்போது வெறும் உணவுக்கும் – உடைக்கு மான போராட்டங்களும், அவற்றின் வெற்றிகளும் தான் சமுதாய வளர்ச்சியாகாது: உணவையும், உடையையும், சுகபோகங்களையும் அனுபவித்து காலங்கழிக்கும் அந்த ‘வேடிக்கை’ தான் உன்னத வாழ்க்கையுமாகாது. வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் இருக்க வேணும் நண்பனே. உணவும். உடையும் தேடுவதுதான் வாழ்க்கையின் அர்த்தமாகாது”
இருவரின் கருத்துக்களையும் மௌனமாகக் கேட்டுக்கொண்டிருந்தான் நந்தகுமார். வட்ட நிலாவாக வரையப்பட்டிருந்த பெண்ணின் முகலாவண்யத்தை சஞ்சிகையின் அட்டையில் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.
கடலலைகள் ஓங்கரித்தன. சமுதாயத்தைப்பற்றிப் பேசும்போதெல்லாம் கடல் கொந்தளிப்பதுமாதிரி . தார்மீக ஆவேசம் கொண்டு பேசும் பொன்னுத்துரை அன்று மிக அமைதியாகவே சொன்னான். குரலில் உறுதியும் ஒருவித நையாண்டியும் தொனிக்கச் சொன்னான். “உணவும் உடையும் மறுக்கப்படுகிற மனிதன் அதைப்பற்றித்தானே சிந்திக்க வேணும்; உணவிலும், உடையிலும் காணும் திருப்திதான் அவன் வாழ்வின் அர்த்தம். உணவில்லாவிட்டால் அவனுக்கு வாழ்க்கையே இல்லை.”
அவனும் அமைதியாக இருந்தான் ; வலது காலினால் கீழேயிருந்த கருங்கல்லில் முண்டு கொடுத்துக் கொடுத்து கிளையை ஆட்டிக்கொண்டிருந்தான்; கடலில் அடிவானத்தை வெறித்துக் கொண்டிருந்தான். சிவப்புக் கோளமாக சூரியன் கடலில் அஸ்தமிப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
கறுத்த மேகக் கூட்டங்கள் கலைந்து கொண்டிருந்தன.
அவன் தனக்குள் சிந்தனையுள் மூழ்கியிருந்தான். இந்த வாழ்க்கையின் தாற்பரியம் என்னவாக இருக்குமென அவன் எண்ணினான். இந்த உலக சிருஷ்டி இரகசியத்தின் புதிர் முடிச்சு என்னவாக இருக்குமென அவன் எண்ணி வியந்தான். ‘எத்தனை எத்தனை ஜீவராசிகள் : எத்தனை புல் பூண்டுகள் ; எத்தனை மரங்கள் : எத்தனை செடி கொடிகள் ; எத்தனை வண்ண வண்ண மலர்கள்; எத்தனை ஜந்துக்கள்; எத்தனை பறவைகள், எத்தனை விதமான மனி தர்கள்; எத்தனை அழகுகள்’ என்றெல்லாம் எண்ணி அவன் ஆச்சரியப்பட்டான்.
“இந்த வாழ்க்கையே ஒரு போராட்டந்தான். வலியதற்கும் மெலியதற்குமான போராட்டத்தில் தான் இவ்வுலக வாழ்வே இயங்குகிறது. சிருஷ்டியே வலியதும் மெலியதுமாகப் படைத்துப் போராட வைத்து வேடிக்கை பார்க்கின்றது. சில சந்தர்ப்பங்களில் ஒன்றன் அழிவில்தான் மற்றதன் வாழ்வே தங்கியிருக்கின்றது. அழிவுகள் சோகங்களாகும் போது, இந்த உலகமே ஒருவித சோகச்சாயை பெற்றுத் தானே மிளிர்கின்றது” இப்படியெல்லாம் அவன் எண்ணினான்
பொன்னுத்துரை கைகளை மார்பில் கட்டிக்கொண்டு மரக்கிளையில் சாய்ந்தபடியே ஏதோ யோசனையில் மூழ்கியிருந்தான். நந்தகுமார் கால்களை அகல விரித்து இருந்து கொண்டு. சஞ்சிகையைச் சுருட்டி வலது கையில் வைத்துக் கொண்டு, கால்களுக்கிடையில் குனிந்து நிலத்தில் எதையோ தேடுவதுபோல் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.
அவன் அவர்களைப் பார்த்து மெல்லிய குரலில் சொன்னான்.
“வலியவருக்கும் மெலியவருக்கும் இடையிலும், இயற்கைக்கும் மனிதருக்குமிடையிலும் நிகழும் போராட்டங்களே சமூக வாழ்வின் நாகரீக வளர்ச்சிப் பரிணாமத்தை இயக்குகின்றன. அது தவிர்க்க முடியாததும் உண்மையானதும் தான்; உணவும், உடையும் குறைந்தபட்ச வாழ்க்கைக்கு வேண்டிய வசதிகளும் இல்லாமல் எத்தனையோபேர் மற்ற வர்களால் சுரண்டப்படுகின்றார்கள் தான் ; அவை பற்றிய கலைப்படைப்புகள் அவர்களைச் சிந்திக்கவைத்து அவர்கள் விமோசனத்திற்கு வழிவகுக்கலாம் தான்; ஆனால், அதற்காக அதையே மட்டும் தான் கலைப்படைப்புகளில் கையாள வேண் டும் என்று இல்லைத்தானே. இந்த உலக சிருஷ்டியின் அழகுகளையும், சோகங்களையும், இன்பதுன்பங்களையும் ‘கலை’ களாக்கலாம்தானே!”
ஒருகணம் தயங்கிய அவன் மீண்டும் தன் மெதுவான – பண்மையின் இலயம் நிறைந்த குரலில் சொன்னான்.
“புறவாழ்வுப் போராட்டங்கள் தவிர்க்கமுடியாதவை : கலைப்படைப்புகளில் அது கையாளப்படத்தான் வேண்டும். அதற்காக மனம் பற்றிய அகவாழ்வு அம்சங்களைக் கலையாக் கக் கூடாது என்று வாதிடக்கூடாது. மனிதன் இயற்கையிடத்துக் காணும் அழகுகளும், இயற்கையாகவே அங்க வீனர்களாகப் பிறந்துவிட்ட பிறவிகளில் கொள்ளும் இரக்கங்களும், அழிவுகளில் காணுகின்ற ஆத்மார்த்தமான சோகங்களும், அழகுகளை அனுபவிக்க வேண்டுமென்ற ஏக்கங்களும், அவற்றில் காணும் தவிப்புகளும் மகத்தான ஏமாற்றங்களும் அருமையான – நித்தியமான கலைச் சிருஷ்டிகளாகின்றன; ஆகிக்கொண்டுமிருக்கின்றன. அழிந்த நாகரீக எச்சங்களிலும் இதைத்தானே நாம் காண்கிறோம்.”
அவர்கள் ஒன்றும் கூறாது மௌனமாக இருந்தனர். கணங்கள் ஊர்ந்தன. அவர்களிடையே மௌனம் கனத்தது.
அவன் அவர்கள் ஏதும் கூறுவார்கள் என்று எதிர்பார்த்தான். அவர்கள் முகச்சாடைகளிலிருந்து அவர்கள் ஏதும் கூறமாட்டார்களென்று நினைத்த அவன், வடகீழ்த்திசையில் தாழம் கிளைகளினூடே தெரிந்த இடைவெளியினூடாக வானவெளியை வெறித்தான்.
ஸ்ரேஷனின் தென்புற மதிலோடு நிமிர்ந்து நின்ற ஒற்றைத்தூணில், உயரத்தில் மின்விளக்கு மஞ்சளாய் அழுது கொண்டிருந்தது. தூணிலிருந்து புறப்பட்டு மின்விளக்கைத் தாங்கி நிற்கும் கைகாட்டி போன்ற இரும்புக் கம்பியில் இரண்டு காகங்கள் உட்கார்ந்திருந்தன. அவற்றின் பின் னணியில் ஸ்ரேஷன் கட்டடத்தில், கிழக்கு மேற்காக ஓடிய முகட்டின் இருபுறங்களிலும், பழைய பாணிக் கட்டட முறையைப் பிரதிபலிக்கும் இரு கூர் நுனிக்கம்பங்கள் நிமிர்ந்து நின்றன.
அவன் கண்களை மூடிக்கொண்டான்.
வேதனையின் சாரமெலாம் இழைத்த ஏதோ ராகம் அவன் வாயிலிருந்து முணுமுணுப்புகளாகக் கிளம்பின.
இந்தச் சமுதாய வாழ்வின் அவலங்களை அவன் எண்ணி னான். ஒழுக்கங்கள், அறங்கள். தர்மங்கள், மதங்கள், நம்பிக்கைகள் என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே பிதற்றிக்கொண்டே — கூக்குரலிட்டுக்கொண்டே, இந்தச் சமுதாயம் ஒழுக்கவீனமாகவும், அறங்கள் – தர்மங்களைப் புறக்கணித்துக் கொண்டும் மனிதனின் தார்மீக நம்பிக்கைகளைச் சிதைத்துக்கொண்டுந்தானே வாழ்கின்றது. சமுதா யத்தின் பெரும்பகுதி ஒழுக்கவீனங்கள் விளையும் விளைநில மாகவும், அறங்கள் – தர்மங்கள் – நம்பிக்கைகள் பலியிடப்படும் பலிக்களமாகவும் தானே மாறியிருக்கிறது. அதோடு… இவை பற்றிய பல்லவிகள் ……!
ஒழுக்கவீனம் செய்கிறேன் என்று சொல்லிக்கொண்டு ஒழுக்கவீனம் செய்யலாம்; அறங்கள், தர்மங்கள், நம்பிக் கைகளைச் சிதைக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு சிதைக்கலாம். அவை முன்னதிலும் பார்க்க மேலானவை. இவ்வாறெல்லாம் அவன் எண்ணினான்.
உண்மையில் அவளின் அழகில், அது தந்த மோகனத்தில், அந்த நளினத்தில் அவன் மயங்கித்தானிருந்தான். அவளிலும் அவன் நண்பர்களிலும் அவன் நம்பிக்கைவைத்திருந்தான். “நானும் நீயுமொன்று ; என் வாழ்வின் சாரமே உன்னோடு வாழ்வதில் தான் இருக்கிறது” என்று அவள் சொன்னதின் பின்னால், அவளும் அவன் நண்பர்களும் பழகுவதை அவன் பூரணமாக அனுமதித்துத்தானிருந்தான்.
அவள் என்னிடம் சொல்லியிருக்கலாம். “உன்னிலும் பார்க்க உன் நண்பன் தான் எனக்குப் பிடித்த மானவனாயிருக்கிறான்” என்று;
அவன் எனக்கு உணர்த்தி இருக்கலாம்; “மச்சான் அவள் என்னை விரும்புகிறாள் – நானும் தான் அவளை விரும்புகிறேனென்று.”
அவன் தனக்குள் முணுமுணுத்தான். ஒழுக்கங்கள் நம்பிக்கைகள், தர்மங்கள், அறங்கள், சிதையும் போது நான் உண்மையில் உணர்ச்சிவசப்படுகின்றேன்; ஆத்திரப்படுகின்றேன் ; கழிவிரக்கப்படுகின்றேன்; வேதனைப்படுகின்றேன்.
தாழம் புதர்களின் இடையிலும், கடலும், வானமும் சங்கமிக்கும் மேற்குவானச்சரிவிலும் இருள் சிரித்தது. கறுத்த மேகத்திரள்கள் ஒன்றையொன்று துரத்தின.
அவர்கள் தாழம் கிளையைவிட்டு இறங்கி நடந்தனர்.
அவன், நண்பர்களுக்குப் பின்னால் கடற்கரை மணலில் பதியும் அவர்கள் காலடித் தடங்களைப் பார்த்துக்கொண்டே நடந்தான்; அந்த வேதனையான இராகத்தை முணுமுணுத்துக்கொண்டே நடந்தான்.
– 1977- கோடுகளும் கோலங்களும் – அலை வெளியீடு – மார்கழி 1976
– சாதாரணங்களும் அசாதாரணங்களும், முதற் பதிப்பு: அக்டோபர் 1983, நர்மதா பதிப்பகம், சென்னை.