ஞாபகங்களை உண்ணும் மீன்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல் சமூக நீதி
கதைப்பதிவு: May 7, 2012
பார்வையிட்டோர்: 9,675 
 
 

நீ ஆற்றில் குளித்துக் கரையேறிய பகல் பொழுதை என்னால் மறக்க முடியாது செண்பகா. உனது நீள் கூந்தலும் வெளிர் நிறத்தில் மினுங்கும் சருமமும் விஷம் தடவிய குறு வாளைப் போல என்னைப் பய முறுத்துகிறது செண்பகா. உன்னுடன் ஒருமுறை கூடிவிட்டால் போதும் செண்பகா. இனி நெஞ்சை நிமிர்த்தி ஈட்டிகாணச் செல்வேன். மரண பயம் எனக்கில்லை. இந்த ஜமீனுக்கு என்னைவிடத் தைரியமான பட்டயக்காரர்கள் இருக்கிறார்கள். ஒருவருக்குப் பின் ஒருவராக வந்துகொண்டே இருப்பார்கள். வாளேந்துவார்கள். குதிரையில் காடு, கரை, வனம், மேடு என்று ஜமீனுக்குப் பின்பாகச் சுற்றுவார்கள். ஜமீனுக்கு முன் மண்டியிட்டு உண்டு விஷமிட்ட உணவு, விஷமிடாத உணவு என்பதை அறிந்து அவருக்கு உண்ணத் தருவார்கள். விஷமிட்ட உணவை உண்டவன் இறந்ததும் அடக்கத்திற்கு முன்பே தமுக்கடித்து வாளேந்தப் பட்டயக்காரனைக் கொண்டுவருவார்கள். ஒரு ஊர் முழுக்க பரம்பரை ஜனங்கள். பரம்பரையாகச் சாவும் பரம்பரையாக அடிமைத்தனமும் பரம்பரையாக வீரமும் ஜமீனுக்கு உயிரைக் காப்பாற்றிவருகிறது செண்பகா. உன்னை நான் காப்பாற்றுகிறேன் செண்பகா. நீயும் நானும் திருமணம் செய்துகொள்வோம். தொலைதூர நகரங்களில் வெள்ளைத்துரைமார் இருக்கிறார்கள். கூலி வேலைக்கு என்னைப் போல விரிந்த மார்புடையவர்களைக் கண்டதும் பணியமர்த்திக்கொள்வார்கள். அவர்களுக்கும் அடிமைத்தொழில் புரிய வேண்டும். ஆனால் விஷமிட்ட உணவை உண்ண வேண்டியதில்லை செண்பகா. வா போய்விடலாம். தொலைதூரத்திலுள்ள நகரத்திற்குப் போய்விடுவோம் செண்பகா. ஏன் பேசாமல் இருக்கிறாய். இந்தப் பாக்குமரங்களின் ஊடேயிருக்கும் கூடாரத்தில் ஒருத்தியோடு ஜமீன் உல்லாசித்திருக்க நானும் பத்து வீரர்களும் காவல்புரிகிறோம். இந்தக் கூடாரத்தினுள் அப்பெண் கதறிக்கொண்டிருக்கிறாள். அவள் யாரென்றும் எந்தக் கிராமத்திலிருந்து தூக்கிக்கொண்டுவரப்பட்டவள் என்றும் தெரியாது. ஆனால் நாங்கள் காவல் செய்கிறோம். ஜமீன் ஓய்ந்து உறங்கி எழுந்து இந்த ஆற்றில் நீராடி சாரட்டில் பயணித்து இல்லம் போகும்வரை காவல் புரிய வேண்டும்.

செண்பகா, என் கண்ணே, என் காதலியே, என்னை நீ திருமணம் செய்துகொள்வாயா. ஏன் போசமல் இருக்கிறாய். என்னை முத்தமிடேன். ஒருமுறை முத்தமிடேன். எனது கவலையெல்லாம் இந்த ஜமீனின் கண்களில் நீ தென்பட்டுவிடக் கூடாது என்பதுதான். உன்னை நான் காப்பாற்றப்போகிறேன். இந்தக் கூடாரத்தில் கதறும் பெண்ணைச் சுகிக்கக் காத்திருக்கும் வரிசையில் யாரையேனும் ஒருவரை நான் கொன்றுவிட்டாலும் போதும். உன்னை நினைக்கும்போது என் மனம் பதறுகிறது. தூரத்தில் எங்கோ பேயோட்டுபவர்கள் உடுக்கையடித்துக்கொண்டிருக்கும் சப்தத்தைக் கேட்க முடிகிறதா. காதைப் பொத்திக்கொள். ஓசைகளற்று நாம் சிறிதுநேரம் இருப்போம். சற்றுத்தொலைவில் ஒரு ஸ்திரியின் கற்சிலையொன்று இருக்கிறது. நீ பார்த்திருக்கிறாயா. அதுதான் காவல் தொழில் புரிபவர்களின் குலதெய்வம். அவள் இந்த ஜமீனுக்குப் பயந்துகொண்டு தன்னைக் கல்லாக உருமாற்றிக்கொண்டவள். கற்சிலையை இந்த ஜமீன் சம்போகம் செய்ய முடியுமா? செண்பகா என் கண்ணே, இக்கிராமத்திலிருக்கும் குமரிகளுக்கு நீ சிலம்பு பயிற்சி சொல்லிக்கொடுப்பதைக் காவலர்கள் ஒற்றறிந்துவிட்டார்கள். நீ தப்பிக்க முடியாது. உன்னை அவர்கள் எப்போதும் எதுவும் செய்துவிட முடியும். யார் எனது கண்களைப் பொத்துவது. அய்யோ அவளை விடுங்கள். எதற்காக நீங்கள் அவளை இழுத்துச் செல்கிறீர்கள். அவள் வேசியோ அநாதையோ அல்ல; என்னுடைய காதலி. நான் ஜமீனின் பட்டயக்காரன். காவல்காரர்களில் உயர் அந்தஸ்து உடையவன். உங்களுக்குக் கட்டளையிட எனக்கு அதிகாரம் உண்டு. எனது கட்டளையை மீறினால் நான் உங்களோடு சண்டையிட நேரிடும். அய்யோ ஏன் என் கண்ணைப் பொத்துகிறீர்கள். ஏன் என் வாளை உருவுகிறீர்கள். எனது கைகளை ஏன் கட்டுகிறீர்கள். அடிவயிற்றிலா கத்தியைப் பாய்ச்சுகிறாய் நண்பா. மார்பில் குத்து. இதயம் கிழிபடட்டும். ரத்தநாளங்கள் உடையட்டும். உங்களுடன் பழகியதற்குப் பரிசாக இருக்கட்டும் இந்த மரணம். என்னை ஆற்றிலா தூக்கிப் போட்டிருக்கிறீர்கள். அய்யோ செண்பகா உனது கதறலை என்னால் கேட்க முடிகிறதே. கண்களைப் பொத்தியவர்கள் காதுகளை அடைத்திருக்கக் கூடாதா. சாம்பல் ஆற்றின் மீன்கள் எனது உடலைத் தின்னுகின்றன. குருதி கசியத் தொடங்கிவிட்டது செண்பகா. நான் மரணமடையும் வரை உன்னை நினைத்துக்கொண்டேயிருப்பேன். என்னுடைய ஞாபகங்களை இந்த மீன்களும் உண்ணட்டும். மீன்கள் செண்பகாவின் ஞாபகங்களோடு ஆற்றில் திரியட்டும். செண்பகாதேவி ஒரு தடவை எனக்கு முத்தம் தாயேன். நீ தரும் முத்தத்தோடு இறந்துபோகிறேன். செண்பகாதேவி என் கண்ணே என்னை மன்னித்துவிடு. கூடாரத்தில் நீ கதறும் கதறலை நான் கேட்கக் கூடாது என்பதற்காகவே மரணிக்கிறேன் போல.

சோமுவிற்குக் கனவு கலைந்தபோது எங்கோ தூரத்தில் காட்டுப்புறாக்களின் சப்தம் கேட்டபடி இருந்தது. அவனுக்கு இன்னமும் உறக்கம் கலையவில்லை. நாள் முழுவதும் பயணித்த களைப்பும் உணவற்றுக்கிடந்ததும் அவனைக் கிறக்கம் கொள்ளச்செய்திருந்தது. விடுதியிலிருந்து வெளியே வர மனமில்லாமல் புரண்டு படுத்துக்கொண்டான். ஆடுகளை மேய்ச்சலுக்குக் கொண்டுபோகிறவர்களின் பேச்சொலி கேட்டு விடுதியில் உறங்கிக்கொண்டிருந்த சிலர் எழுந்து அமர்ந்துகொண்டனர். அவர்களுக்கு உறக்கம் கலைந்துவிட்டிருந்தது. ஒருவர் பீடியைப் பற்றவைத்துக்கொண்டதைச் சோமு பார்த்தான். சோமு தன் மேல் போர்த்தியிருந்த பழைய கம்பளியைச் சரிசெய்துகொண்டான். சற்று மங்கலாகத் தனது நினைவிலிருந்த கனவை நினைத்துக்கொண்டான். அவனால் தான் கண்ட கனவை நினைவுபடுத்திக்கொள்ள முடியவில்லை. மங்கலாகவும் அதே சமயத்தில் தொடர்ச்சியற்றும் கனவுகளின் பிம்பங்களும் நிகழ்வுகளும் ஞாபகத்திற்கு வந்தன. சோமு செண்பகனூர் ஆற்றிற்குப்போவதற்கென நடுஇரவிற்கு மேல் நகரத்திலிருந்து கொம்பமுட்டத்திற்கு வந்து சேர்ந்தவன் அங்கிருந்த பயணிகள் தங்கும் விடுதியில் உறங்கினான். இது குளிர்காலம்தான். விடுதியில் பாயும் கம்பளியும் வாங்கிப்படுத்துக்கொண்டான். இரவில் அவன் வந்து சேர்ந்தபோது விடுதியில் யாரும் இல்லை. நடுஇரவுக்கு மேலாகத் தான் கொம்ப முட்டத்திற்குப் போவதற்கென்று பாக்கு வியாபாரிகள் வருவார்கள் என்று விடுதியின் காவலாளி சொன்னான். விடுதியின் முன்பாகக் கழுதைகள் கூட்டமாக நின்றிருந்ததைப் பார்த்தான். கழுதைகள் விடிகாலையில் செண்பகனூர் ஆற்றிற்கு அடுத்துள்ள பாக்குத்தோப்பிற்கும் பலாத்தோப்பிற்கும் போவதற்கென ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறதெனக் காவலாளி சொன்னான். கொம்பமுட்டத்துப் பாலத்தின் வழியாகத்தான் ஆற்றிற்குப் போக வேண்டும். சோமு செண்பகநாச்சி கோவிலுக்குப்போவதற்கென வந்திருந்தான்.

சோமு தனது முகம்வரை கம்பளிப்போர்வையைப் போர்த்திக்கொண்டான். குளிர் கடுமையாக இருந்தது. அவனால் குளிரைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கால்களிலும் முதுகிலும் குளிரை உணரத் தொடங்கினான். அக்குளிரின் ஊடேதான் கனவில் தன் முன்பாகக் பேசிக்கொண்டிருந்த செண்பகத்தை நினைத்துக்கொண்டான். செண்பகத்துடன் என்ன பேசிக்கொண்டிருந்தோம். அவள் கனவில் தன்னிடம் என்ன சொல்லிக்கொண்டிருந்தாள். தான் கண்டது உண்மையிலேயே கனவுதானா என்று யோசித்தபடி இருந்தான். அவனுக்குக் கனவென்று நம்ப முடியவில்லை. செண்பகம் இதற்கு முன்பாக எத்தனையோ முறை கனவுகளில் வந்திருக்கிறாள். நகரத்தில் வீட்டிலிருக்கும்போது அவள் வராத கனவுகளும் இரவுகளும் இல்லை. அவளுக்காகவே கொம்பமுட்டத்திற்கு வந்தது போலிருந்தது அவனுக்கு. அவளைத் தான் காதலிக்கிறோமா?. இல்லை அவளைச் சுகிக்க வேண்டுமென்று அலைகிறோமா என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டான். அவள் இன்னும் சற்றுநேரத்தில் தேநீர்க் கடைக்கு வந்துவிடுவாள் என்று நினைத்துக்கொண்டான்.

சோமு விடுதியிலிருந்து பாலத்தைப் பார்த்தபோது சாம்பல், கருப்பு நிறக் கழுதைகள் குளிரைப் பொருட்படுத்தாமல் சுமைகளோடு பாலத்தின் மேல் அருகருகே நடந்துபோய்க்கொண்டிருந்தன. செண்பகனூர் ஆறு கொம்பமுட்டத்திலிருந்து ஐந்தாவது மைல் கல்லில் உள்ளது. நடந்தே சென்றுவிடக்கூடிய செங்குத்தான வளைந்த மலைப்பாதை தான். சோமசுந்தரம் பயணியர் விடுதியிலிருந்து எழுந்து வெளியே வந்தான். கொம்ப முட்டம் பெயர்ப் பலகைக்கருகில் வந்து நின்றான். மேகங்கள் தெளிந்து வானம் நீலநிறமாக இருந்தது. பாசிபடர்ந்த பாறைகளும் பாக்கு மரங்களுமாக ஊரைச் சுற்றி இருந்தது. அதிகாலைப் பனியில் கொம்பமுட்டத்து விவசாயிகள் பசுக்களையும் ஆட்டுக்குட்டிகளையும் மேய்ச்சலுக்கு ஓட்டிக்கொண்டு போனார்கள். காட்டுப் புறாக்களின் சப்தம் இடைவிடாது கேட்டபடி இருந்தது. பாக்கு மரங்களிலிருந்து பறந்துவந்த காட்டுப்புறாக்கள் கொம்பமுட்டத்துச் சாலையில் இறங்கி வந்து நின்றன. இளஞ்சிவப்பு நிறத்திலிருந்த அப்பறவைகள் மனிதர்களின் நடமாட்டத்திற்குப் பழக்கப்பட்டவைபோல் சாலையில் அமர்வதும் பிறகு பறப்பதுமாக இருந்தன. ஜாதிப் புறாக்களின் கண்கள் பிரகாசமாகத் தெரிவதைக் கண்டவன் அப்புறாக்களையே பார்த்தபடி இருந்தான்.

சோமு அந்தச் சாலையில் நடந்துகொண்டிருந்த புறாக்களைக் கடந்து தேநீர்க் கடைக்குச் சென்றான். தன்னிடமிருந்த சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்துக்கொண்டான். குளிரில் சிகரெட்டின் புகை உற்சாகத்தைத் தந்தது. வழக்கமாகக் கொம்பமுட்டத்திற்கு வரும் ஒவ்வொருமுறையும் இந்தக் கடையில்தான் தேநீர் அருந்துவான். அவனைக் கண்டதும் கடைக்காரர் சிகரெட்டும் தேநீரும் தந்தார். சோமு தேநீரை வாங்கியபடி கடைக்குள்ளாகப் பார்த்தான். அந்தக் கடையில்தான் அவன் வயதுடைய செண்பகம் இருந்தாள். கொம்ப முட்டத்திற்கு வரும்போதெல்லாம் அவனுடன் சிரித்துப் பேசுவாள். சோமுவிற்கு அவளைப் பிடிக்கும். செண்பகத்தின் அப்பாதான் தேநீர்க் கடை வைத்திருந்தார்.

“இந்தப் பௌர்ணமிக்கு நீ வருவேன்னு எனக்குத் தெரியும். உனக்கு போன் செய்து ஊரிலிருந்து வர்றப்போ சாமான்கள் வாங்கிட்டுவரச்சொல்லலாமுன்னு நினைச்சேன். உன் போன் நம்பரைத் தொலைச்சுட்டேன் சோமு. இந்தக் காலண்டர் பின்னாடி உன் நம்பரை எழுதி வைச்சிட்டுப்போயேன்” என்றார். சோமுவும் தேநீரைப் பருகியபடி தனது எண்ணை எழுதினான். அவனது குரலைக் கேட்டுவிட்டு செண்பகம் கடைக்குள்ளிருந்து வந்தாள். சோமு அவளைப் பார்த்தபடி நின்றான். அவள் சிரித்துக்கொண்டாள். தனது பாக்கெட்டிலிருந்த, வண்ணக்காகிதத்தில் சுற்றப்பட்ட மிட்டாயை அவளுக்குத் தந்தான். நசுங்கியும் ஒடிந்துமிருந்த மிட்டாயை அவள் வாங்கிக்கொண்டாள். உதட்டைக் குவித்து முத்தமிடுவது போன்ற பாவனையில் முகத்தை வைத்துக்கொண்டாள். சோமு அவளது அருகில் சென்றபோது அவள் பின்வாங்கியவளாகக் கடைக்குள் சென்றாள். அவளைப் பாக்குத்தோப்பிற்கு அழைத்துச்செல்ல வேண்டுமென்று, இங்கு வரும்போதெல்லாம் பிரயத்தனம் கொள்வான். ஒவ்வொருமுறையும் அவள் விலகியபடியே இருக்கிறாள். அவளை நகரத்திற்கு அழைத்துச்சென்று விடுவதென்று யோசித்துவைத்திருந்தான். அவளிடம் அது குறித்துச் சொல்லிவிடுவதென்றும் இரவில் அவளுடைய பெற்றோருக்குத் தெரியாமல் அழைத்துச் சென்றுவிடுவதென்றும் முடிவுசெய்திருந்தான். செண்பகனூருக்கு வரும் ஒவ்வொருமுறையும் அவளை அழைத்துக்கொண்டு இந்தப் பாக்குத்தோப்பிற்கு வரமுடியாமல் போய்விடுகிறதே என்று ஆதங்கம் கொண்டான். அவளைச் சுகிக்கவும் முடியாமல் அவளை விட்டுவிடவும் முடியாமல் இங்கு வரும்போதெல்லாம் தான் அவஸ்தையுறுவதை அவனால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அவளுடைய வனப்பான திரேகமும் நிறமும் தன்னைத் துன்புறுத்துவதை அவளிடமே ஒருமுறை சொல்லியிருக்கிறான். அவளும் அவனது ஆசையைப் புரிந்துகொண்டவளாகத் தோப்பிற்கு வருவதாகச் சொல்லியிருக்கிறாள். காலம் கடந்துகொண்டேயிருக்கிறது. ஆசையும் தாபமும் பெருகிக்கொண்டேயிருக்கிறது. காத்திருப்பும் ஒருவகை சித்திரவதைதான்.

காலை நேரத்து வெயில் வருவதற்கு முன்பாக நடந்து ஆற்றுக்குச் சென்றுவிடுவது நல்லது என்று சோமசுந்தரத்தின் மனத்தில் தோன்றியது. பாலத்திலிருந்து பிரிந்து செல்லும் பாதையின் தொலைவில் கோவிலுக்குச் செல்பவர்கள் நடந்துகொண்டிருந்தனர். சோமு அவர்களைப் பிடித்துவிடும் வேகத்தில் நடக்கத் தொடங்கினான். செண்பகநாச்சியம்மன் வனதேவதையாகக் கொம்பமுட்டத்தில் குடியிருக்கிறாள். இருநூறு வருஷ காலமாக எங்கெங்கிருந்தோ ஜனங்கள் பௌர்ணமி தோறும் செண்பகநாச்சியை வணங்க வருகிறார்கள். கொம்பமுட்டத்தில் செண்பகநாச்சி பலாத்தோப்பிற்கும் பாக்குமரங்களுக்கும் சுனை நீரோடைகளுக்கும் இடையே குடியிருக்கிறாள்.

செண்பகனூர் ஆற்றில் பௌர்ணமி தினத்தில் குளிப்பவர்கள் மறந்துவிடத் துடிக்கும் நினைவுகளை அவர்கள் அறியாது மனத்திலிருந்து ஆறு பிரித்தெடுத்துவிடுவதாக நம்பினார்கள். குளித்துக் கரையேறுபவர்களின் ஞாபகங்களைத்தான் ரகசியமாக ஆறு தன்னுள் படிய வைத்துக்கொண்டு ஓடுகிறதா என்று தெரியவில்லை. அதன் ஆழத்தில் கிடக்கும் கூழாங்கற்களும் பாசி படர்ந்த பாறைகளும் எண்ணற்ற மீன்களும் குளித்துக் கரையேறுபவர்களின் ஞாபகங்களைத்தான் அழுக்குகளைப் போலத் தங்களுள் சேகரித்து வைத்திருக்கின்றன. செண்பகனூர் ஆறு ரகசியங்களையும் அற்புதங்களையும் தன்னுள் மறைத்துக்கொண்டு ஓடிக்கொண்டிருப்பது போல் காட்சி தரக்கூடியது தான். ஆறு ஒருமுறை தன் அழகைத் திறந்துகாட்டிவிட்டு மூடிக்கொள்ளும். அன்றைய தினம் பௌர்ணமியாக இருக்கும். பௌர்ணமி தினத்திற்கு முன் தினம் வரை அழுக்கும் பாசியும் சேறும் சகதியுமாகக் கிடக்கும் செண்பகனூர் ஆறு முழு நிலவைக் கண்டதும் தன் குணத்தை மாற்றி வெண்மேகத்தைப் போன்ற நிறத்துடன் ஓடும். பிறகு நிலவு தேயத்தேய அதன் சுயரூபம் மாறிவிடும்.

சோமு பாலத்தைக் கடந்து வளைவில் திரும்பினான். பாக்குமரங்கள் வரிசையாக நின்றிருந்தன. குட்டையான சில மரங்கள் இடையிடையே நின்றிருந்ததை அவன் பார்த்தபடி நடந்தான். அவனுக்குப் பின்னால் வயோதிகர்கள் இருவர் நடந்து வந்துகொண்டிருந்தார்கள். முழு நிலா வானத்தில் தோன்றும்போது இரு மேகங்கள் செண்பகநாச்சியின் தலைக்கு மேல் நின்று நீரைப் பொழிந்து விட்டுச்செல்கிறது என்ற ஐதீகம் இன்றும் உள்ளது. அந்த மேகங்கள் இந்திரனுடைய பிரதான வாகனங்கள் என்றும் ஆற்றில் குளிப்பவர்கள் அவர்களை அறியாமலேயே அவர்களுக்குள் இருக்கும் நினைவுகளை இழந்து கரையேறுவார்கள் என்றும் அவர்கள் பேசிக்கொண்டு வந்தார்கள். சோமுவும் செண்பகனூர் ஆற்றைப் பற்றி அறிந்திருந்தான். செண்பகநாச்சிக் கோவிலுக்கு ஒரு மைல் கல் தொலைவிலுள்ளது செண்பகனூர் ஆறு. சோமு கோவிலுக்கு வரும் நேரமெல்லாம் ஆறு சகதியாகவும் நீரற்றும்தான் கிடக்கிறது. சோமு தொலைவிலிருந்தே ஆற்றைப் பார்த்துவிட்டுத் திரும்பிவிடுவான். ஆற்றிற்குச் சென்று வர அவனுக்குத் தோன்றியதில்லை. பௌர்ணமி தினத்தில் முழு நிலவு தோன்றும் சமயத்தில் ஆற்றில் நீர் பெருகியோடுமென்றும் மறுநாள் விடிவதற்குள்ளாகத் திரும்பவும் நீர் வற்றி ஆறு சகதியும் சேறுமாகிவிடுமென்றும் பலரும் சொல்ல அவன் கேட்டிருக்கிறான். ஒருமுறையேனும் நேரில் பார்த்துவிட வேண்டுமென்று அவனுக்கு ஆவல் உண்டானதில்லை.

சோமு அவர்களிடம் உண்மையிலேயே ஆற்றில் குளித்தால் மறந்துவிட வேண்டுமென்று விரும்பும் துன்ப நினைவுகளை இழந்துவிட முடியுமா என்று கேட்டான். வயோதிகர்களில் ஒருவர் தன்னுடைய நடையை நிறுத்திவிட்டு அவனிடம், “என்னுடைய மனைவி இறந்து இரண்டு வருடங்களுக்கும் மேலாகிவிட்டது. என் பிள்ளைகள் என்னை வீட்டைவிட்டுத் துரத்தியடித்துவிட்டார்கள். அநாதையைப் போல ஊர்ஊராகச் சுற்றிக்கொண்டிருக்கிறேன். என் பிள்ளைகளையும் மனைவியையும் முற்றாக மறக்க வேண்டித்தான் இங்கு வந்திருக்கிறேன். அவர்களுடைய நினைவுகள் என்னிடமிருக்கக் கூடாது என்று வேண்டிக்கொண்டு செண்பகனூர் ஆற்றில் முங்கியெழப்போகிறேன்” என்றார். அவனுக்கு அது நம்பமுடியாததாக இருந்தது. வயோதிகர் ஒருவர் தன்னுடைய இடது கையின் மேலிருந்த துணியை விலக்கிக்காட்டினார். அவரது முழங்கை துண்டிக்கப்பட்டிருந்தது. தனது கை துண்டிக்கப்பட்டதைப் பார்க்கும்போது தனது பழிதீர்க்கும் குணம் அதிகரித்துவிடுவதாகவும், துண்டிக்கப்பட்ட தினத்தையும் கையைத் துண்டித்த தன் சகோதரனை மறக்கவுமே தான் செண்பகனூர் ஆற்றுக்கு வந்திருப்பதாகவும் ஆற்றில் குளித்துக் கரையேறிவிட்டால் அந்த ஞாபகங்களும் அதன் வலியும் தன்னைவிட்டு நீங்கிவிடும்; முழங்கை துண்டிக்கப்பட்ட வேதனையும் மனஉளைச்சலுமின்றி எப்போதும் போல் சகோதரனுடன் வாழலாம்; அவனுடன் வாழும் அன்பான நாட்களே எனக்கு வேண்டும். பதிலாக இந்த வெட்டுப்பட்ட கையைப் பார்க்கும்போதெல்லாம் அவன்மீது கோபமும் பழி தீர்க்கும் வெறியுமே வருகிறது; அதிலிருந்து மீளவே செண்பகனூர் ஆற்றிற்கு வந்திருப்பதாகவும் சொன்னார். சொல்லியவர் சற்று தூரம்வரை நடந்து சென்று திரும்பிப் பார்த்துவிட்டுப் பிறகு, “செண்பகனூர் ஆறு துயரத்தின் ஞாபகங்களை மட்டும் நம்மிடமிருந்து விலகச்செய்யும் அதிசய ஆறு. இந்தக் கிராமத்தில் வாழ்ந்த பெண்கள் பலரும் இந்தச் செண்பகனூர் ஆற்றில் விழுந்துதான் தற்கொலை செய்துகொண்டிருக்கின்றனர். ஜமீனுக்குப் பயந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ளவும் காப்பாற்றிக்கொள்ளாமல் தங்களை இழந்துவிட்டு ஆற்றில் விழுந்து இறந்தவர்களுமாக ஏராளமானவர்களின் கண்ணீரைத் தான் தனக்குள் வைத்து ஓடிக்கொண்டிருக்கிறது இந்த ஆறு. ஆற்றில் விழுந்து இறந்தவர்களின் கண்ணீர்தான் ஓடும் நீர் போல. அவர்கள் ஒருமுறை தங்களை மறந்து இந்த ஊரைப் பார்க்க ஏதேனும் ரூபத்தில் வருவார்கள். அப்போதுதான் ஆறு தனது முகத்தை வெளிப்படுத்தும். அதுவரை ஆறு விழுந்து இறந்தவர்களின் துயரத்தைப் போல் சாம்பலாகத்தான் கிடக்கும். இந்த வனதேவதை செண்பகநாச்சியும் ஜமீனுக்குப் பயந்துகொண்டு தானே இந்தக் காட்டுக்குள் ஓடி வழி தெரியாமல் நின்ற இடத்திலேயே கற்சிலையாகிவிட்டவள் என்பது சிலருக்கு மட்டுமே தெரியும்” என்று ஒரு ரகசியத்தைச் சொல்வதைப் போல அவனிடம் சொன்னார்.

சோமு புல் மேவிய பாதையில் நடந்தபடி செண்பக நாச்சியை நினைத்துக்கொண்டான். அவனுடன் வயோதிகர்கள் இருவரும் இரண்டாவது மைல் கல்லைக் கடந்து நடந்து சென்றுகொண்டிருந்தார்கள். வெயில் இன்னமும் உதயமாகவில்லை. ஆனால் விடிந்திருந்தது. குயில்களின் சப்தம்தான் அந்த இடத்தில் அதிகமாக இருந்தது. இன்னமும் மூன்று மைல் கற்கள் இருக்கின்றன. சீக்கிரமாக நடந்து சென்றுவிடலாம் என்று வயோதிகர் சொன்னார். நாம் சீக்கிரமாகப் போனாலும் இன்று மாலை நேரத்திற்குப் பிறகுதானே ஆற்றில் குளிக்க முடியும். அதுவரை சென்பகநாச்சியின் கோவிலில்தான் அமர்ந்திருக்க வேண்டுமென்று அவர் கூறினார். அவர்கள் மூன்றாவது மைல் கல்லை நோக்கி நடந்தார்கள். அருகம்புற்கள் பாதையின் இரண்டு பக்கங்களிலும் வளர்ந்திருந்தன. வேலிகளற்ற நிலமாக இருந்தது. காட்டெருமைகள் சில மேய்ந்து கொண்டிருந்ததை அவர்கள் பார்த்தார்கள். மேகமற்ற வானம். நீலநிறத்தில் விரிந்துகிடந்த வானத்தைப் பார்த்தபோது சோமு பயந்துபோனான். மேகத்தின் ஒரு துணுக்குக் கூட வானத்தில் இருக்கவில்லை. நீலம் தடவிய வானத்தை அன்றுதான் முதன்முதலாகப் பார்க்கிறான். எங்காவது ஓரிடத்தில் ஒரு மேகம் இருக்குமென்று பார்த்தான். அவனது கண்களுக்குத் தெரிந்தவரை எங்கும் மேகம் தெரியவில்லை. இதற்கு முன்பாக எத்தனையோ முறை இங்கு வந்து சென்றிருக்கிறான். ஒரு தடவைகூட இப்படியான வானத்தை அவன் பார்த்ததில்லை. மூவருக்கும் எதிரே பெண்கள் இருவர் வந்துகொண்டிருந்தார்கள். அவர்களுக்கு முன்பாகச் சென்றுகொண்டிருந்த குதிரையில் பலாப்பழச்சுமை இருந்தது. அவர்கள் செண்பகநாச்சி கோவிலுக்கருகில் சென்றபோது மேலும் பெண்கள் இரண்டு மூன்று பேர் புற்கட்டுகளுடன் மேடேறி நடந்து வந்து கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. சரிந்து சென்ற பாதையின் முடிவில் மேட்டுப்பாங்கான இடத்தில் கோவில் இருந்தது. சோமு சரிவில் இறங்கும்போது அவனது காதுகளின் அருகில் குதிரைகள் கனைத்தபடி நடந்து வரும் ஓசை கேட்டது. குதிரைகளின் அருகில் தான் நிற்பது போன்ற பிரமையும் அவற்றின் வாசமும் தனக்குள் இருப்பதை உணர்ந்தான். சோமுவுக்குப் பழக்கமான சப்தம்தான். ஒவ்வொரு தடவையும் கோவிலுக்கு வரும்போது இதேபோல சப்தம் அவனுக்குக் கேட்கும். திரும்பிப் பார்க்கும்போது குயில்களைத் தவிர வேறு எதுவுமிருக்காது.

இரண்டு வயோதிகர்களைக் கடந்து அவர்களுக்கு முன்பாகச் சரிவில் இறங்கியவன் கோவிலின் வாசலில் நின்று மேட்டைப் பார்த்துக்கொண்டான். புற்கட்டுகளுடன் சென்ற பெண்கள் மேடேறிக்கொண்டிருந்தனர். இரண்டு கழுதைகள் ஓடி வருவதும் அதைத் தொடர்ந்து புழுதிபறப்பதும் புழுதியினூடே ஒரு சிறுவன் கழுதையை விரட்டியபடி வருவதையும் அவன் பார்த்தான். அவனுக்குக் குதிரைகள் ஓடிவருகின்ற சப்தம் அருகாமையில் கேட்டது. சோமு கோவிலை நோக்கிச் சென்றான்.

அடர்ந்த மரங்களின் ஊடே கல்மேடை ஒன்று இருந்தது. கருங்கற்களினாலான மேடை. அருகே சென்றபோது அம்மேடையினுள் விளக்கு ஒன்று எரிந்துகொண்டிருப்பதை அவனால் பார்க்க முடிந்தது. திரும்பி தான் வந்த பாதையைப் பார்த்தான். அவனுக்குப் பின்பாக வந்த வயோதிகர்கள் கைகூப்பியபடி கல்மேடையை நோக்கி வந்துகொண்டிருந்தார்கள். ஆலமரத்தின் இலைகள் உதிர்ந்து மண் தரையில் விழுந்து கிடந்தன. காய்ந்தும் காயாமலும் இலைகள். இலைகள் ஊடே சிவந்த எறும்புகள் ஊர்ந்துகொண்டிருந்தன. கல்மேடையின் பின்புறமாகச் சென்றான். பெரிய ஆலமரம் ஒன்று தன்னைச்சுற்றி விழுதுவிட்டு நின்றிருந்தது. மூதாட்டியொருத்தி தனது கேசத்தைப் பரப்பி அமர்ந்திருந்தது போலிருந்த அம்மரத்தின் நடுவே முகங்காட்டி நின்றிருந்தாள் செண்பகநாச்சி. இருட்டினூடே அவளது முகம் மட்டும் தெரியும்படியான ஒற்றை விளக்கு. சோமு அவனறியாது கைகூப்பி நின்றான். விளக்கின் சுடரைப் பார்த்தபடி அருகே சென்றான். சற்றுவரை இருந்த வெம்மை அகன்று நீர் சூழ்ந்த பகுதியினூடே அமர்ந்திருப்பது போல் பிரமை கொண்டவன் கூப்பிய கையை எடுத்துக்கொண்டான். ஒற்றைக்குயிலின் நீள் கூவல். எதற்கென்று தெரியாத அதன் கூவல். செண்பகதேவியே அழுகிறதுபோலத் தோன்றியது அவனுக்கு. அவளைக் குதிரைவீரர்கள் விரட்டிக்கொண்டு வரும்போது நின்று மூச்சுவாங்கியவள் அப்படியே சிலையாகிவிட்ட இடம் இது. ஆயிரம் பெண்கள் ஓடி வருவது போலவும் அவர்கள் நின்று மூச்சுவாங்குவது போலவும் சோமுவின் காதுகளில் கேட்டது. செண்பகநாச்சி ஓடி நின்ற சிலையை வேறெங்கும் நகர்த்திகூட வைக்கமுடியவில்லை. இரண்டு நூற்றாண்டுகளைக் கடந்த இந்நிலமும் செண்பகநாச்சியும் எத்தனையோ உயிர்களை வாழவைத்து, வாழ¢விழக்கச் செய்துகொண்டிருக்கின்றனர்.

சோமு விழுதுகளை விலக்கிக்கொண்டு மேலும் முன்னேறிச் சென்றவன் திரும்பிப் பார்த்தான். செண்பக நாச்சியம்மனுக்கு நேர் எதிரே மணலும் சாம்பலும் சகதியுமாக அழுகிய பொருளைப்போல நீண்டு கிடந்தது செண்பகனூர் ஆறு. காற்றில் சாம்பல் பறப்பதும் தேங்கிக்கிடந்த அழுக்கான நீரின் மேல் கொக்குகளும் நாரைகளும் அமர்ந்திருப்பதும் தெரிந்தது. அவன் செண்பகனூர் ஆற்றை நோக்கி நடக்கத் தொடங்கினான். வயோதிகர் அவனை மறித்து வேண்டாமென்பது போல ஜாடை செய்தார். ஏன் என்று அவன் கேட்டான். அவர்களில் மூத்த வயதுடையவரும் உயரமாக இருந்தவரும் இடதுகை மணிக்கட்டை இழந்தவருமான வயோதிகர் அவனிடம், “ஆறு சாம்பலாகக் கிடக்கிறது. இன்னும் சிறிது நேரத்தில் அது தனது நிறத்தையும் வடிவையும் குணத்தையும் மாற்றி, கண் திறந்துவிடும். அதுவரை யாரும் செல்லக் கூடாது. சாம்பலின் மணமோ, இல்லை சாம்பலோ காண்போரின் மீது விழுந்துவிட்டால் போதும், யாருடைய இறந்தகாலத்து நினைவுகளாவது நம்மேல் ஒட்டிக்கொள்ளும். பின்பு அந்த நினைவுகளைப் பிணத்தைத் தூக்கிக்கொண்டுச் செல்வது போல வாழ்நாள் முழுக்க அலைய வேண்டும். அவரவர் சொந்த நினைவுகளையும் ஞாபகங்களையும் மட்டுமே இந்த ஆறு தன்னுள் உள்வாங்கிக்கொள்ளும். உள் வாங்கிக்கொண்ட நினைவுகளே ஆற்றின் மேல் சாம்பலாகப் படர்கிறது. ஒவ்வொரு பௌர்ணமியிலும் படர்ந்திருக்கும் சாம்பலே ஆறாக ஓடுகிறது. பௌர்ணமி முடிந்த பிறகு திரும்பவும் சாம்பலாகத் தன்னை உருமாற்றிக்கொண்டு இப்படிக் கிடக்கிறது. இந்த செண்பகநாச்சிதான் ஆறாக ஓடுகிறாள். சாம்பலாக வெதும்பிப் போய்க் கிடக்கிறாள். இந்த செண்பகநாச்சிதான் இந்த நிலமும் இந்த ஆறும்.”

வயோதிகர் சொல்லி முடித்ததும் சோமுவிற்கு அந்த இடத்தின் மேலிருந்த பிரமிப்பு மேலும் கூடியது. தான் ஒரு விசித்திரமான இடத்தின் மேல் நிற்பதை உணரத் தொடங்கினான். விழுதுகளை விலக்கிக்கொண்டு மரத்தினுள் சென்று அமர்ந்துகொண்டான். குயில்களின் சப்தமும் உலர்ந்த சருகுகள் காற்றிலாடும் சப்தமும் தொடர்ந்து கேட்டபடியிருந்தது. பகல் நேரத்தில் ஆலமரத்திற்குள் அமர்ந்திருக்கும்போது இரவு போல இருளாகவும் அதே நேரம் மரத்திற்கு வெளியே வெயில் விழுந்து கிடப்பதையும் அவர்கள் பார்த்தபடி அமர்ந்திருந்தனர். மேலும் சில ஆட்கள் வரத் தொடங்கினார்கள். ஆலமரத்தைச் சுற்றி ஆட்கள் அமருவதும் தாங்கள் கொண்டுவந்த தின்பண்டங்களைச் சாப்பிடுவதும் உறங்குவதற்கு நிழல் தேடியவர்களாகவும் இருந்தார்கள். சோமசுந்தரம் மரத்தின் மேல் சாய்ந்து உறங்கத் தொடங்கினான்.

சோமு உறங்கி எழுந்தபோது அங்கு யாருமில்லை. ஆலமரத்தினுள் அமர்ந்திருக்கும் செண்பகநாச்சியைச் சுற்றிப் பகல் போன்று வெளிச்சமும் மரத்திற்கு வெளியே இருளும் கூடியிருந்தது. சோமு கண் விழித்தபோது மாலை நேரத்தைக் கடந்து இரவு சூழ்ந்திருந்ததைப் பார்க்க முடிந்தது. கூடடையும் பறவைகளின் ஓசையைக் கேட்க முடியவில்லை. காலம் நிசப்தத்தை முற்றிடச் செய்து இரவைக் கொண்டு வந்து நிறுத்தியிருந்தது. காலையில் வயோதிகர்கள் ஏற்றிவைத்திருந்த விளக்குகள் இன்னமும் எரிந்துகொண்டிருந்தது. அவன் ஏன் தான் இவ்வளவு நேரமாக உறங்கினோம். எப்படித் தன்னால் இப்படி உறங்க முடிந்தது என்று சுற்றிலும் பார்த்துக் கொண்டான். கோவிலுக்கு வரும் சரிவான பாதையில் கூட்டம் கூட்டமாக ஆட்கள் நடந்து வந்துகொண்டிருப்பதைக் கண்டு நின்றான் சோமு. இத்தனை நபர்களும் செண் பகனூர் ஆற்றில் குளிக்கப்போகிறார்களா? இத்தனை நபர்களும் தங்களது துயரமான நினைவுகளிலிருந்து விடுதலை கொள்ளவே இங்கு வந்திருக்கிறார்களா? ஏன் நினைவுகளைச் சுமந்துகொண்டு வாழ முடியவில்லை? நினைவு என்பது எதன் வழியாகத் திரும்பத் திரும்ப வந்துகொண்டிருக்கிறது என்று தனக்குள் கேட்டுக்கொண்டவனாக செண்பகனூர் ஆற்றை நோக்கி நடந்தான்.

வானத்தில் நிலவின் பால்வெளிச்சத்தைப் பார்க்க முடிந்தது. ஒரு தீற்றல் போல வானத்தின் இரண்டு பக்கமும், சூரியன் மறைவதும் நிலவு மேலெழுவதும் வர்ணங்களின் ஜாலமென நடந்துகொண்டிருந்தது. குளிர்ந்த காற்று வீசியதை உணர்ந்தவனாக நடந்தவன் வானத்தைப் பார்த்துக்கொண்டான். கோவிலிலிருந்து ஆற்றங்கரைக்குச் செல்லும் வழியில் நின்றிருந்த ஜனங்கள் வானத்தைப் பார்த்தபடி நின்றிருந்தனர். கண் தெரியாத சிறுமியொருத்தி சிரித்த உதடுகளுடன் தன் தாயின் கரங்களைப்பிடித்துத் துள்ளிக்கொண்டிருந்தாள். அவளைப் பார்க்கும்போது ஏனோ சோமுவிற்கும் ஆற்றில் இப்போதே குளித்துக் கரையேற வேண்டுமென்று தோன்றியது. அச்சிறுமியின் தாய் அவளை, “செண்பகா இன்னமும் சற்று நேரத்தில் நீ கண்கள் இழந்த துயரத்தை மறக்கப்போகிறாய். காட்டில் கண்கொத்திப் பாம்பு உனது கண்களைக் கொத்திப் பிடுங்கிய சம்பவத்தை இனி உன்னால் என்றும் நினைவிற்குக் கொண்டுவர முடியாது செண்பகா” என்று சொன்னாள். அச்சிறுமி துள்ளிக்குதித்தபடி சிரித்துக்கொண்டிருந்தாள். அவன் அச்சிறுமியைக் கடந்துசென்றான். வழிநெடுக அச்சிறுமி சிரிக்கும் சப்தம் கேட்டபடி இருந்தது. சூரியன் முற்றிலும் மறையத் தொடங்கியபோது ஆற்றங்கரையை நோக்கி ஜனங்கள் நடக்கத் தொடங்கினார்கள்.

செண்பகனூர் ஆற்றங்கரையில் கூடியிருந்த ஜனங்கள் சற்று நேரத்தில் சேறும் சகதியுமான ஆறு வெள்ளை ஸ்படிகமாக ஓடப்போவதைக்காண ஏக்கத்துடன் நடந்துகொண்டிருந்தனர். வானத்தில் முழு நிலவு இன்னமும் தோன்றவில்லை. சோமு நெரிசலற்ற ஓரிடத்தில் நின்றுகொண்டான். தன்னுடன் வயோதிகர்கள் எங்கேனும் இருக்கிறார்களா என்று சுற்றிலும் பார்த்தான். புதிய புதிய நபர்கள். புதிய புதிய முகங்கள். அழுகையும் சிரிப்பும் கொண்டாட்டமுமாக அவர்கள் நின்றிருந்ததை அவன் பார்த்தான். சற்று நேரத்தில் தங்களது உடலிலிருந்தும் மனத்திலிருந்தும் வெளியேறப் போகும் நினைவுகளை கடைசியாக நினைவுபடுத்திக்கொள்ளவோ திரும்பவும் வந்துவிட விரும்பாமலோ குதூகலத்தோடு நின்றிருந்தனர். கோவிலின் மேல் சூரியனின் வெளிச்சம் மஞ்சள் வர்ண மாகப் பிரியாவிடை தந்து நின்றிருந்தது. முற்றிலும் மறையாத சூரியனின் கதிர்கள். தூரத்து அடிவானத்தில் மஞ்சளும் இளஞ்சிவப்புமான வர்ணம் அவனைச் சற்று நிம்மதி கொள்ளச் செய்தது.

சோமசுந்தரம் சற்றுத்தொலைவில் இருந்த மரங்களின் அருகில் சென்று அமர்ந்துகொள்ளலாமென்று நடந்து சென்றான். செண்பகநாச்சி கோவிலுக்கு முன்பாகவும் இதே போல மரங்கள் இருந்தன. தரையில் உதிர்ந்து கிடக்கும் பூக்களின் வாசனையை முகர்ந்துகொண்டான். மரங்களினடியில் சென்றபோது சிலர் அமர்ந்திருந்ததைப் பார்க்க முடிந்தது. இரண்டு மூன்று பேர் அழுதுகொண்டிருந்தனர். தங்களுக்கு நெருக்கமான ஏதோ ஒன்றைச் சற்று நேரத்தில் இழந்துவிடப்போகிற அவஸ்தையிலும் மனக்குழப்பத்திலும் அமர்ந்திருந்ததை அவன் பார்த்தான். ஒரு மரத்தினடியில் சென்று அமர்ந்துகொண்டான். தூரத்தில் செண்பகநாச்சி கோவிலில் தீபங்கள் ஏற்றப்பட்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. செண்பகநாச்சி ஒற்றை விளக்கொளியில் மினுங்கிக்கொண்டிருந்தாள். அவளே பெரும் ஒளியென நின்றிருந்தாள். கருமைக்கு ஒளிரும் தன்மை இருக்கிறது போல. கருமையான ஒளி. அடிவானத்தைப் பார்த்தபடி அமர்ந்தவன் யாரோ தன்னைப் பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டு திரும்பினான். அவனுக்குச் சற்றுத் தள்ளிப் பூக்கூடையை வைத்துக்கொண்டு ஒரு பெண் அமர்ந்திருந்தாள். அவள் சோமுவைப் பார்த்துச் சிரித்தாள். கூடை நிறைய பூக்கள் வைத்திருந்தாள். புல்தரையில் அமர்ந்திருந்த அப்பெண் இவனுக்காகத்தான் காத்திருந்தவள் போலக் கூடையை நகர்த்தி வைத்துக்கொண்டாள். சோமு அமர்வதற்கான இடத்தைத் தந்தாள். அவன் அமர்ந்துகொண்டான்.

தனது மடியில் இருந்த உதிரியான பூக்களைத் தொடுத்துக்கொண்டிருந்தாள். அவளது விரல்களின் அசைவையும் சிவப்பான விரல் நுனியையும் பார்த்தபடி இருந்த சோமு தன்னை அவள் பார்க்கிறாள் என்பதை மறந்தவனாக ஒவ்வொரு பூவின் காம்பையும் எடுத்து அவள் தொடுப்பதையே பார்த்துக்கொண்டிருந்தான். அரிக்கேன் விளக்கை ஏற்றும் நேரம் என்று அவளாகப் பேசியபடி தொடுத்துக்கொண்டிருந்த பூக்களை மடியில் வைத்து விட்டுத் தீப்பெட்டியை எடுத்தாள். அவள் விளக்கைப் பொருத்தியது முதலில் நடந்ததா இல்லை நிலவு முழுமையாக வானத்தில் தெரிந்தது முதலில் நடந்ததா என்று தெரியவில்லை. ஆற்றில் நீரோடும் சப்தம் அவர்களுக்குக் கேட்கத் தொடங்கியது.

“ஆற்றில் நீ குளிக்கப்போகிறாயா. குளித்துவிட்டால் நீ சுமந்து திரியும் உனது நினைவுகள் உன்னிலிருந்து நீங்கிவிடுமென்று நம்புகிறாயா. உனது நினைவுகள் ஆற்றில் குளித்ததும் கரைந்துபோய்விடுமென்று நம்புகிறாயா. உன் நினைவுகள் நீர் போல ஓடக்கூடியதா, இல்லை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் கடந்து போகக்கூடியதா. இதையெல்லாம் நிஜம் என்றா நம்பி வந்திருக்கிறாய்” என்று கேட்டாள். சோமு அவளது கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாதவனாக அவளின் பேச்சைக்கூடக் கேட்பதற்கு மனமில்லாமல் அவளின் திரேகத்தைப் பார்த்தபடி இருந்தான். அவளது உதட்டின் அசைவையும் விளக்கின் வெளிச்சத்தில் கிறங்கடிக்கும் அவளது முகத்தின் அழகையும் பார்த்தபடி இருந்தான். அவனது கவனம் முழுவதும் தனது பேச்சில் இல்லையென்பதைத் தெரிந்துகொண்டவள் எழுந்து நின்று கொண்டாள். அப்போது சோமு அவள்மீதான மயக்கத்தின் உச்சத்தில் இருந்தான்.

“சரி தான் நேரமாச்சு. நீ போய்க் குளிச்சுட்டு ரா பூஜைக்குப் போகிற வழியைப் பாரு. நான் கோவிலுக்குப் போகணும்” என்று பூக்கூடையைத் தூக்க முயன்றாள். ஜனங்கள் ‘ஹேவென’ சப்தமிட்டபடி ஆற்றில் இறங்குவதைக் கேட்டபடி எழுந்துகொண்டான் சோமு. சோமு அவளை வழி மறித்தவனாக நின்றான். அவளது ஸ்தனங்களும் ஸ்திரமான திரேகமும் அவனை கிரக்கங் கொள்ளச் செய்தன. அவளும் அதைப் புரிந்தவளாகத் தான் இருந்தாள். அவளிடம் உன் பெயர் என்ன என்று கேட்டான். அவள் தனது பெயர் செண்பகம் என்று அவனைத் தழுவியபடி சொன்னாள்.

செண்பகனூர் ஆறு தீப வெளிச்சத்தைத் தன்னுள் வாங்கிக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தது. ஆறு தன்னுள் இறங்கும் அனைவரையும் ஏற்று ஓடிக்கொண்டிருந்தபோது பூக்கட்டும் பெண் அவனை அங்கிருந்த பாக்குத் தோப்பிற்கு அழைத்துச்சென்று தன்னுடன் கூடச் செய்தாள். இரவில் தோப்பில் கூடடைய வந்து சேர்ந்த பட்சிகளைத் தவிர வேறு யாருமில்லை அங்கு. சோமு அவளை அணைத்துக்கொண்டபோது தீபத்தின் சுடர் போன்ற அவளது கண்களைப் பார்த்தபடி இருந்தான். அவளது முதுகில் வரைந்திருந்த மீனின் சித்திரத்தைப் பார்த்தான். அவளது உடலே ஒரு ஆறாகவும் அதில் தான் ஒரு மீனாகவும் நீந்திக்கொண்டிருக்கிறோம் என்று தோன்றியது அவனுக்கு. அவன் மேலும் அவளை நெருங்கியபோது ஆற்றில் நீந்திக்கொண்டிருப்பது போன்ற உணர்வு இருந்ததைத் தெரிந்துகொண்டான். அவளது உடலுள் புகுந்து புகுந்து வெளியேறிக்கொண்டிருப்பது போன்ற பிரமை அவனுள் உண்டானது. அவனது நினைவுகளும் அவனது உடலும் நீரில் சுழலும் துரும்பாக மாறியது.

பூக்காரப்பெண் தன்மேல் மயங்கிக்கிடந்தவனை முத்தமிட்டாள். பின் அவனைத் தரையில் கிடத்திவிட்டு அவனிலிருந்து விலகி எழுந்துகொண்டாள். தனது உடைகளை நிதானமாக உடுத்தத் தொடங்கினாள். சோமு அவள் ஆடை உடுத்துவதையே பார்த்துக்கொண்டிருந்தான். அப்பெண்ணுடன் உறவுகொள்ளத் தான் ஏன் விரும்பினோம். எதற்காக அவள் தன்னை அழைத்துத் தன்னுடன் கூடச்செய்தாள் என்று யோசிக்கத்தான் செய்தான். அவளுடன் உறவில் இருந்தபோது ஏதோதோ நினைவுகள் தன்னுள் வந்து சென்றனவே ஒரு கனவைப் போல. அதெல்லாம் நிஜம்தானா என்று நினைத்துக்கொண்டான். செண்பகம் வந்து சென்றாளே. அது செண்பகம்தானா? ஒரு சிறுமிகூட வந்தாளே, கண் தெரியாத சிறுமி. தனது கண்களைத் திறந்து எனது சம்போகத்தை அருகில் நின்று பார்த்துக்கொண்டிருந்தாளே. இன்னமும் எத்தனையோ பெண்கள் என்னைச் சுற்றிலும் நின்று பார்த்துக்கொண்டிருந்தனர். யார் யாரென்று தெரியவில்லை. தெரியாத முகங்கள். ஆனாலும் அவர்களை எங்கோ எப்போதோ பார்த்திருக்கிறேன். செண்பகநாச்சியின் கற்சிலையின் கண்களையும் மூக்கையும் ஒத்த ஒருத்தி. இன்று அதிகாலையில் ஆற்றங்கரையில் நான்கு பேர் ஒருத்தியை வன் புணர்ச்சி செய்வதுபோலக் கண்ட கனவில் வந்த மங்கையின் முகத்தின் சாயலில் ஒருத்தி. இன்னும் எத்தனையோ பெண்கள். பெண்கள். பெண்கள். ஆற்றங்கரையிலிருந்து எழுந்து என்னை நோக்கி வருகிறார்கள். என்னைக் கடந்து செல்கிறார்கள். செண்பகநாச்சியை ஏசியபடியும் கேலிசெய்தபடியும் நடக்கிறார்கள். நான் அவளுடன் கூடியிருக்க முடியவில்லை. ஏன் எனக்கு இப்படி நேர்ந்தது என்று சோமு தன்னுடன் தானே பேசியவனாக இருந்தான். அவனது மனம் சமனற்றுத் தவித்துக்கொண்டிருந்தது. அதைப் புரிந்தவளாக அப்பூக்கட்டும் பெண் இருந்தாள்.

“நீ சம்போகத்தில்கூட உனது நினைவை எங்கெங்கோ பயணிக்கச்செய்கிறாய். அதனால்தான் எனது உடல் ஒரு ஆறாக உனக்குத் தோற்றங்கொள்ளச் செய்கிறது. நீ மீனைப் போல எங்கெங்கோ நீந்திப்பயணிக்கிறாய். உனது கண்களில் இன்னமும் கனவின் மிச்சம் இருக்கிறதை நான் பார்க்கிறேன். இன்னமும் சற்று நேரம் கூடியிருந்தால் உனது மனத்திரையில் வந்து சென்ற பெண்கள் அத்தனை பேருடனும் நீ பேசிவிடுவாய் போல” என்று அவள் சொன்னபோது சோமு அவளது முதுகில் வரையப்பட்டிருந்த இரண்டு மீன்களைப் பார்த்தபடி இருந்தான். தான் ஒரு மீனா? மீனைப் போலத் தான் எங்கெங்கோ நீந்திக்கொண்டிருக்கிறோமா? என்று அவனது மனம் துள்ளியது. அவள் அவனைப் பார்த்து, “ஆறு ஏதுமறியாது இன்று ஓடிக்கொண்டிருக்கிறது. இத்தனை நாட்களும் அது தன்னை ஒரு குழந்தையைப் போல, பிறந்த சிசுவைப் போல, தனது உடலைச் சுருக்கிவைத்திருந்த இடத்தை நான் உனக்குக் காட்டுகிறேன் வா” என்றாள். சோமு அவள் பின்பாக நடக்கத் தொடங்கினான். சோமுவின் அப்போதைய மனம் அவள் சொல்வதைக் கேட்கவே செய்தது.

பாக்குத்தோட்டத்திற்கு அவர்கள் இருவரும் சென்றபோது நிலவு முழுதாக வானத்தில் தெரியத் தொடங்கியது. எங்கும் நிசப்தம். மரத்தின் அடர்த்தியான கிளைகள் தோப்பை மூடியிருந்ததால் இருள் சூழ்ந்திருந்தது. நிலவின் ஒளி சிதறி விழுந்துகிடந்ததை சோமுவும் அப்பெண்ணும் பார்த்தபடி நடந்தார்கள். அவன் தன்னை மறந்தவனாகவும் சற்றுமுன்பாக நடந்து முடிந்த சம்போகத்தின் மயக்கத்திலிருந்தும், அதே நேரம் அந்நேரம் வந்து சென்ற கனவிலிருந்தும் விடுபட முடியாதவனாகவும் நடந்துகொண்டிருந்தான். அவள் பின்பாக நடந்து செல்வதே அவனுக்குப் புதுவிதமான அனுபவமாக இருப்பதாக உணர்ந்தான். அந்த உணர்வை அனுபவித்து நடந்தவன் தான் எதற்காக செண்பகனூர் ஆற்றிற்கு வந்தோம் என்பதை மறந்து நடந்துகொண்டிருந்தான்.

பாக்குத்தோப்பில் அவளைத் தொடர்ந்து நடந்து சென்றான். அவளது குதிங்காலும் அக்காலில் புரண்டபடி சப்தம் எழுப்பிக்கொண்டிருந்த வெண்கலத் தண்டையையும் பார்த்தான். அவளது பாதம் விழுந்த தடத்தில் இருந்த குழியில் தனது பாதம் பொருந்துவதாகவும் அவளது பாதத்தில் அடியெடுத்துவைக்கும் கணநேரத்தில் நீருக்குள் சென்று முங்கி பின் மீண்டெழுவதைப் போல உணர்ந்தவன் நடந்துகொண்டேயிருந்தான். அவள் அவனை அழைத்துச்சென்று கொண்டிருந்தாள். சுனையின் அருகில் அவர்கள் இருவரும் நின்றபோது முழுநிலவு நடுவானத்தில் நின்றிருந்தது.

அப்பெண் தான் உடுத்தியிருந்த ஆடையை முற்றிலும் அவிழ்த்துவிட்டுச் சுனையின் நீரை இரு உள்ளங்கையிலும் அள்ளியள்ளித் தனது உடலில் ஊற்றிக்கொண்டாள். அச்சுனையில் இரண்டு மீன்கள் ஒன்றையொன்று பின்தொடர்ந்தபடி நீந்திக்கொண்டிருந்ததைப் பார்த்த சோமு, அவளது முதுகில் இதைத்தான் சித்திரமாகத் தீட்டியிருக்கிறாள் என நினைத்துக்கொண்டான். இரண்டு ஒரே மாதிரியாக இருந்தது. பெரியதும் சிறியதுமாக, நிஜமும், பிரதியுமாக ஏதோ மாயத்தைத் தனக்குள் கொண்டிருப்பதாக உணர்ந்தான். அப்பெண் தனது உடல் முழுக்க நீரை ஊற்றிக்கொண்டாள். பின் மேனியிலிருந்து உலரவும் நீரை வடியவிடவும் சற்றுத் தள்ளியிருந்த மணல் மேட்டில் ஏறி நின்று கொண்டாள். ஆடையேதுமற்ற அவளை உயர்ந்த மேட்டின் மேல் முழு நிலவின் ஒளியோடு பார்ப்பது சிற்பத்தைப் பார்ப்பதுபோன்றே அவனுக்குத் தோன்றியது. புராதனமான ஸ்தலத்திலிருக்கும் சிற்பத்தைப் போன்று தனக்குப் பின்பாக நிலவை ஒளிரவிட்டு நின்றிருந்தாள். அவளது மேனியின் விளிம்புகளில் நிலவு தனது ஒளியை கசியச்செய்து நகர்ந்துகொண்டிருந்தது. நெற்றியில் விழுந்து கழுத்திலும் மார்பிலும் வயிற்றிலுமாக வடிந்த ஒளியின் வெண்கோடு அவளது தொடையின் முன்பகுதியில் இறங்கிக் காலின் பெருவிரலில் நின்று தரை இறங்குவதை அவன் பார்த்தபடி நின்றான்.

“நீயும் சுனை நீரை அள்ளி உடம்பில் ஊற்றிக்கொள். உடல் என்ற காண்கிற பொருளைச் சுத்தமாக்கிக்கொள். ஒருவேளை இப்போது நீ உன்னிலிருந்து அழிந்துவிட வேண்டுமெனத் துயருறும் நினைவுகளை இழந்துவிடக் கூடுமோ என்னவோ” என்று சொல்லியவாறு நிலவைப் பார்த்து நின்றாள். அவளது உடலிலிருந்த நீர் வடிந்து உலரத் தொடங்கியது. மேட்டிலிருந்து கீழே இறங்கியவள் சுனையருகே இருந்த தனது ஆடைகளையெடுத்து உடுத்தத் தொடங்கினாள். தற்செயலாக அவளது முதுகைப் பார்த்தவன் சித்திரமாகத் தீட்டியிருந்த மீன்கள் இல்லாதுபோயிருந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டவனாக சுனையையும் அவளது முதுகையும் பார்த்தபடி இருந்தான்.

உடல் என்கிற காண்கிற பொருளைத்தானே நாம் தூய்மை செய்கிறோம். கண்களால் காணமுடியாத ஸ்தூலமானதை எப்படித் தூய்மைப்படுத்துவது அல்லது அவ்வஸ்துகளின் மேல்படிந்துள்ள பாவத்தைப் போக்குவது என்று சுனையின் நீரைப் பருகினான் சோமசுந்தரம். உப்பு நீராகவும் கண்ணீரின் சுவையோடும் இருந்தது அந்நீர். சோமு நிமிர்ந்து அப்பெண்ணைப் பார்த்தான். அவள் அதைப் புரிந்துகொண்டவளாகத் தரையில் அமர்ந்து சுனையில் நீந்திக்கொண்டிருந்த மீன்களைப் பிடித்துக் கைகளில் ஏந்தினாள். பின் அதைத் தனது மேனியில் நழுவவிட்டுக்கொண்டாள். மீன்கள் இரண்டும் அவளது திரேகத்தில் நெளிந்தோடி எங்கோ மறைவதை அவனால் பார்க்க முடிந்தது. தனது கூந்தலை விரித்து விட்டு எழுந்துகொண்டவள் அவனைப் பார்த்து, “சற்றுத் தொலைவில் ஆயிரம் ஆயிரம் பெண்கள் ஓலமிட்டபடி ஓடிவருகிற சப்தம் உனக்குக் கேட்கிறதா” என்று கேட்டாள். சோமு அமைதியாக இருந்தான். அவள் சுட்டிக்காட்டிய திசையைக் கூர்ந்து அவதானிப்பவனாக நின்றுகொண்டான்.

“மரணித்தவர்களின் கண்ணீரும் குருதியும்தானே இந்த செண்பகனூர் ஆறு. மரணித்தவர்கள் இன்று உயிர்த்து, கண்விழித்துப் பார்க்கிறார்கள். அவர்களது அழுகையை நீ இப்போது கேட்கப்போகிறாய்” என்று சொல்லியபடி சுனையில் இறங்கினாள். சுனையின் நீரில் சிறு கூழாங்கல் விழும் சப்தம் கேட்பதுபோல அவள் இறங்கிய சப்தத்தை அவனால் கேட்க முடிந்தது.

தொலைவில் ஆயிரம் பெண்கள் ஒரே சமயத்தில் அழுவது போன்ற சப்தமும் குதிரைகளின் குளம்படிகளின் ஓசையும் தொடர்ந்து அவனது காதிற்கு மிக அருகில் கேட்கத் தொடங்கின. அழுகையின் பெரும் சப்தம். சோமசுந்தரத்திற்கு அச்சம் மிகுதியானது. அவன் அவசரஅவசரமாக உடை அணிந்துகொண்டான். உடையை அணிந்தபடி சுனையைப் பார்த்தான். மீன்கள் ஏதோ ஒன்றைத் தின்ன வாய் திறந்து நீந்திவருவதை அவன் பார்த்தான். அவன் தனது ஞாபகங்களைத் திரட்டி நினைவுகூர்ந்துகொண்டபோது எச்சம்பவமும் தனது நினைவுகளில் இல்லையென்பதை தெரிந்துகொண்டான். சுனையில் விழுந்த தனது நிழலைத்தான் மீன்கள் வாய் திறந்து தின்ன வருகிறதென்பதை அவன் புரிந்துகொண்டபோது மீன்கள் சுனையிலிருந்து மறைந்திருந்தன.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *