சொல்லிப் போடாதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 11,307 
 
 

பலாலி விமான நிலையத்தில் சம்பிரதாயமான பரிசோதனைகள் முடிந்து, கொழும்பு

செல்லும் விமானத்தின் வருகைக்காகப் பயணிகள் எரிச்சல் கலந்த களைப்புடன் காத்திருந்தனர். யுத்தம் முடிவடைந்ததாய் பெயர்தானே தவிர, பரிசோதனைக் கெடுபிடி கள் இன்னமும் மாறவில்லை. அதே முறைப்புடன் பரிசோதனை என்று கிண்டிக் கிளறிக் கடுப்பேத்தினார்கள். ஓடு பாதையில் ராணுவ விமானம் ஒன்று இரைந்துகொண்டு இருந்தது. ஆல்ட்றினா ஓல்ப்ஸ் ஒவ்வொரு பயணியையும் பார்த்துக்கொண்டு இருக்க… கஜன் அதீத சிந்தனையில் நனைந்திருந்தான். தூரத்தில் கருமேகங்கள் திரண்டு திடீர் மழைக் கோலம் காட்டிற்று. மழை வருமா, வராதா… சிந்தித்துப் புகைத்துக்கொண்டு இருந்தான். வளையம் வளையமாக வெண் புகை வெளியேறிக்கொண்டு இருந்தது. காலையில் இருந்து 10 தடவைக்கு மேல் புகைத்துவிட்டான். வழக்கமாக இத்தனை புகைக்கும் பழக்கம் அவனுக்கு இல்லை.

கஜனின் அந்த இனம் புரியாத தவிப்பை ஆல்ட்றினா ஓல்ப்ஸினால் புரிந்துகொள்ள முடியவில்லை. சில நாட்களாகவே அசாதாரணமாக நிலைகொள்ளாமல் அவன் தவிப்பதை அவள் கவனித்து இருந்தாள். சொந்த ஊரைவிட்டுப் பிரிவதால் ஏற்படும் தவிப்பு என்று எண்ணிக்கொண்டாள். அவசரமாக இலங்கையைவிட்டுப் புறப்படுவது அவளுக்குப் பூரண திருப்தியைத் தந்தது. அவளுக்கு இந்த இலங்கை வருகை இறுதி வரை இஷ்டமில்லாத ஒன்றாகவே இருந்தது. கனடாவில் பிறந்து வளர்ந்தவளுக்கு இலங்கையில் பாவிப்பதற்கு என்ன இருக்கிறது என்று குழப்பம் இருந்தது. அதுபோக, எப்போதும் யுத்தம், துப்பாக்கிக் குண்டு வெடிப்பது என்ப தும் அறவே பிடிக்கவில்லை. இந்தியாவுக்காவது போகலாம் என்று வற்புறுத்தியும் கஜன் உறுதியுடன் இலங்கைதான் போவது என்று முடிவு எடுத்துவிட… வேறு வழியே இல்லாமல் அவனுடன் புறப்பட்டாள்.

கஜனுடன் அவளுக்கு கனடா மதுபானச் சாலையில்தான் காதல் நுரை பொங்கி வழிந்திருந்தது. முதல் பழக்கத்திலேயே இருவரும் ஒரே பிராண்ட் குடிப் பவர்கள் என்பதால் இணைந்துகொண்டார்கள். குடித்துக் குடித்து அளவே தெரி யாமல் இரவு முழுவதும் உருண்டு புரண்டு உளறித் திரிந்தவள், அவனுடன் பழக்கம் ஏற்பட்ட பின்புதான் மாறிப்போனாள். அளவோடு குடித்துச் சந்தோஷ மாகக் குடியை அனுபவிக்கப் பழகி இருந்தாள். கஜனுடன் சிரித்துப் பேசிக் கொண்டே வீடு திரும்புவது வழக்கமாகிப் பிடித்திருந்தது. அந்தப் பிடிப்பு பின்பு காதலாக மாற… திருமணம் செய்யாமலே ஒன்றாக வாழத் தொடங்கினார்கள். 18 வயதில் இருந்து உயிருக்குப் பயந்து ஊரைவிட்டுப் பல நாடுகளில் மறைந்து திரிந்த வாழ்க்கையில் களைத்து வந்த கஜனுக்கு அவளின் அரவ ணைப்பு இதமாக இருந்தது. வாழ்க்கையில் ஒரு புதிய பிடிப் பைத் தந்தது.

“ஏன் ஒரு மாதிரி இருக்கிறீங்க? நீண்ட காலத்துக்குப் பிறகு யவ்னா வந்து பிரிவதாலயா?” ஆங்கிலத்தில் கேட்டுக்கொண்டு அவனின் தோளைப் பிடித்தாள். அவன் அவளை வளைத்து அணைத்துக்கொண்டான். இரைந்த விமானம் இன்னும் பலமாக இரைந்து வானத்தில் எழும்பியது.

‘நோ! அப்பிடி எதுவும் இல்லை!’ கூறிக்கொண்டே அவன் திரளும் கருமேகங்களையே வெறித்தான். மழை வரலாம்… வராமலும் போகலாம்!

அவன் மீண்டும் ஒரு குவளையை எடுத்து ஒரே மடக்கில் குடித்துவிட்டு அங்கும் இங்கும் நடக்கத் தொடங்கினான். ஆல்ட்றினா ஓல்ப்ஸ்க்கு அந்தப் புதிய கள்ளின் சுவை பிடித்திருந்தது. யாழ்ப்பாணம் வந்து இறங்கிய மாலையே விஸ்வலிங்கம் மாமா மூன்று போத்தல்கள் வாங்கிவைத்து இருந்தார். ஒரு மிடறு குடித்தவளுக்கு அதன் சுவை அமிர்தமாக இருக்க, மடமடவெனக் குடித்தாள். குடிக்கும் அவளை விஸ்வலிங்கம் அதிர்ந்து பார்த்தார். அவரால் அந்த அதிர்ச்சியைத் தாங்க முடியவில்லை. கஜன் சிரித்துக்கொண்டே அவரின் முதுகில் தட்டிய பின்தான், “வெள்ளைக்காரப் பொம்பிளைகள் குடிக்கிறதென்று கேள்விப்பட்டு இருக்கிறன். இங்கிலீஷ் படங்களில் பார்த்துமிருக்கிறன். ஆனா, நேரில் பார்த்தவுடன கொஞ்சம் நம்பக் கஷ்டமாக இருக்குது!”-சுய நினைவுக்கு வந்து சொன்னார்.

“ஆல்ட்றினாவை நான் முதலில் சந்திச்சதே கனடா பார் ஒன்றில்தான். இங்கே வரவே மாட்டனென்று நின்றவளுக்கு அவள் இதுவரை குடித்தே இருக்காத கள் எடுத்துத் தருவனென்று பிராமிஸ் பண்ணித்தான் கூட்டிக் கொண்டு வந்தனான்!” – புன்ன கைக்கும் கஜனையே விஸ்வ லிங்கம் அதிர்ச்சி மாறாமல் பார்த்தார்.

“சரியடாப்பா! வேற யாரும் பார்க்காம அறைக்குள்ளேயே வெச்சு எடுங்கோ! பார்த்தா பெரிய கதையாப்போகும்!”

“பிறகு, நீ சொன்ன கதைஎன்ன உண்மையா?” மறுநாள் கள் போத்தல்களைக் கட்டிலுக்குக் கீழ் இருந்து எடுத்துக்கொண்டே விஸ்வலிங்கம் கேட்டார். கஜன் சட்டை மாற்றிக்கொண்டு இருந்தவன் அவரைத் திரும்பிப் பார்த் தான்.

“அங்கிள்! நான் இத்தனை சிரமப்பட்டு யாழ்ப்பாணம் வந்ததே அந்த இறுதிக் கிரியைகளை செய்து முடிக்கத்தான். நீங்கள்தான் அதுக்கு ஹெல்ப் பண்ண வேணும்!” – அவரின் கைகளை இறுகப் பற்றிக்கொண்டான்.

“உனக்கு உதவுறது மட்டுமில்லை… என்ர தங்கச்சி அத்தானுக்குச் செய்ய வேண்டிய கடமையும் இருக்குதானே?”- விஸ்வலிங்கம் தழுதழுத்தார்.

“அங்கிள் முழுக்க முழுக்க உண்மை. நீங்கள் அந்த நேரம் திரிகோணமலையில இருந்ததால எதுவும் அறியவில்லை. நாங்களும் சொல்ல விரும்பயில்லை!”

“அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று தெரியுமே தவிர, இந்தக் கதை எனக்கு மட்டுமில்லை, என்ர குடும்பத்துக்கும் எதுவும் தெரியாது!”

“நடு ராத்திரி திடீரென்று ஆர்மி மூவ் பண்ணத் தொடங்கிட்டாங்கள். ஒரு காலமும் இரவில மூவ் பண்ணினது இல்லை என்பதால திகைச்சுப்போயிட்டம். ஷெல்லடி… துவக்குச் சூடு… எந்தப் பக்கம் ஓடுறதென்று புரியயில்லை. அப்பாதான் நிலமையைப் பார்த்து வர வெளியே ஓடினார். ஷெல் பக்கத்தில் விழுந்து வெடிக்கும் சத்தம். குளறும் சத்தம். நான் வெளியே பாய்ந்தேன். அப்பா ரத்த வெள்ளத்தில் குற்றுயிராய்க்கிடந்து துடிச்சார். அம்மாவும் அனுசாவும் குளறிக்கொண்டு ஓடி வர… மீண்டும் ஷெல் விழுந்தது. அம்மான்ர நெஞ்சைப் பிளந்துகொண்டு ஷெல் துண்டு போனது. அனுசாவுக்குக் கையில காயம். இரண்டு பேரிலயிருந்தும் ரத்தம் பெருகத் தொடங்க… யாருக்கு என்ன செய்யிறதென்று தெரியவில்லை. கொஞ்ச நேரத்திலேயே அம்மான்ர துடிப்பு அடங்கிற்று!”- கஜனின் கண்களில் இருந்து நீர் வழிந்தது. மூக்கைச் சீறிக்கொண்டான்.

“அயற்சனங்கள் எதுவும் உதவிக்கு வரலேல்லையா?”

“அந்த நேரத்துல யாரும் உதவி செய்வாங்களென்று எதிர்பார்க்கேலாது. அயல்சனங்கள் எல்லாம் தங்கட குடும்பங்களையும் கைக்குக் கிடைச்ச சாமன்களையும் கொண்டு ஓடுதுகள். கடைசியில எங்களின்ர நிலமையைக் கண்டு இரங்கி, பின் வீட்டு ராமண்ணைதான் ஓடி வந்தார். இவ்வளவுக்கும் அவரோடு கிணத்துப் பங்கு தகராறால பேச்சுவார்த்தை இல்லை. ஆனா, அதை மனசுல வெச்சுக்காம உதவி செய்தார். அப்பாவையும் அம்மாவையும் வெள்ளைத் துணியால மூடிக் கட்டி, வீட்டுக்குப் பின்னுக்குக் குப்பை போட வெட்டிவெச்ச கிடங்கில போட்டு, அனுசா தேவாரம் பாடப் பாட அரைகுறையாக மூடிட்டு ஓடினம்!

பிறகு ராமண்ணையோட வவுனியா வந்து கொஞ்ச நாளில் இருந்து கொழும்பு போக அனுசாவை அண்ணன் சுவிஸுக்கு கூப்பிட்டிட்டார். நான் கள்ளமாய் ஃபிரான்ஸுக்குப் போற வழியில ரஷ்யாவுல பிடிபட்டு கொஞ்ச காலம் ஜெயிலில் இருந்து, திரும்பவும் கொழும்பு வந்து இத்தாலி போய், அங்க இங்க என்று அலைஞ்சு இப்ப கனடாவுல இருக்கிறன்!”- சொன்ன கஜனுக்கு மூச்சு வாங்கியது.

“எங்களை வளர்க்க என்ர தாய்- தகப்பன் பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சம் இல்லை. அப்பிடிப்பட்ட தாய் – தகப்பனுக்கு இறுதிக் கடமை செய்ய முடியேல்லையே என்ர சோகம் அடிமனசில கிடந்து வாட்டுது!”- அவனின் கண்கள் கலங்கி இருந்தன.

“கவலைப்படாதை கஜன்! இங்கட தமிழினத்தில் துன்பப்படாதவன் யார்? உனக்கு அப்பா- அம்மாவைப் புதைச்ச இடத்தை அடையாளம் காட்டினா, மேற்கொண்டு ஆக வேண்டியதைப் பார்க்கலாம்!” என்றார் விஸ்வலிங்கம். உள்ளே இருந்து விஸ்வலிங்கத்தின் மனைவி வந்தாள்.

“ஏற்கெனவே அது பெரிய ஆர்மிக் காம்ப் இருந்த இடம். வெறும் பற்றைக் காடாய்க்கிடக்கு! இப்பவும் பக்கத்துல காம்ப் இருக்கு. அந்தப் பக்கம் சனங்கள் போய் வாறதில்லை! நினைச்சவுடன அங்க போய் தோண்டேலாது. ஆர்மிக்காரரைக் கேட்டாலும் தோண்டச் சம்மதிக்க மாட்டாங்கள்! லாண்ட்மைன்ஸ் கிடக்கலாம். ஏன், இந்தளவு ரிஸ்க் எடுக்க வேண்டும்? தாய் – தகப்பனை நினைத்து கோயில் குளத்துல அபிஷேகமோ, அன்னதானமோ செய்தாப் போதாதா?”

“தட்ஸ் கரெக்ட் அங்கிள்! தெ ஆர் ஸ்லீப்பிங்! டோன்ற் டிஸ்ரப் தெம்!” ஆல்ட்றினா ஓல்ப்ஸும் அதையே ஆமோதிக்க… கஜன் எழுந்துகொண்டான். முகத்தில் என்றும் இல்லாத உறுதி தெரிந்தது. ‘இது என்ர தாய் – தகப்பனுக்குச் செய்ய வேண்டிய இறுதிக் கடமை! யார் தடுத்தாலும் என்ன தடை வந்தாலும், இதைச் செய்யாமல் நான் கனடா திரும்பப்போறது இல்லை!’ – அவன் உள்ளே போக மெல்லிய காற்றுக்குத் திரைச்சீலை படபடத்தது. இவர்கள் கவலையுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.

கஜனின் விடாப்பிடியால் விஸ்வலிங்கமும் சேர்ந்துகொண்டார். இறுதிக் கிரியை மேற்கொள்ளும் புரோகிதரை ஆலோசிக்க… உடலின் எச்சங்களைக் கொண்டுவந்தால் கிரியையை மேற்கொள்ளலாம் என்றுகூறிவிட… எச்சங் களைப் பெறும் முயற்சியில் இருவரும் இறங்கினர்.

கிராம சேவையாளரும், பிரதேச செயலாளரும் போதிய விளக்கங்களுக்குப் பிறகு அனுமதியளித்தனர். அடுத்து ராணுவ முகாம்! நினைக்கும்போதே உள்ளுக்குள் விதிவிதிர்த்தது.

“கவலைப்படாதை கஜன். பெரிய கேம்ப்புல போய் கொமாண்டரோட கதைச்சு பொமிசன் எடுக்கச் சொல்லுறான். என்ர சிநேகிதன் ஒருத்தனுக்குப் பெரியவன் நல்ல பழக்கம். அவனைக் கொண்டுபோனால் சுலபமாக முடிக்கலாம். பேசிப்பார்ப்பம்!” என்று அந்த சிநேகிதனையும் அழைத்துக்கொண்டார் விஸ்வலிங்கம் மாமா.

ஆர்மி கேம்புக்குச் சென்றபோது யாழ் நகரத்தைவிட்டு வெளியே போவ தற்கான ‘கிளியரன்ஸ்’ அனுமதி பெற பலர் வரிசையில் காத்திருந்தார்கள். இவர்களும் வரிசையில் இணைந்துகொண்டனர். வரிசை ஆமை வேகத்தில் ஊர்ந்தது. நீண்ட நேரக் காத்திருப்புக்குப் பின்பு உள்ளே சென்றனர். அங்கு இருந்த நடுத்தர வயது ராணுவ அதிகாரி தன் சிநேகிதனைக் கண்டதும் மலர்ந் தான். பழைய கதைகள் பேசிச் சிரித்த பின் விடயத்தைப் போட்டு உடைத் தனர். விஸ்வலிங்கமும் சிநேகிதனும் கடுமையாக வாதாட வேண்டியிருந்தது. பலத்த சிந்தனைக்குப் பின் தனக்கு எந்தச் சிக்கலும் வராமல் சீக்கிரம் செய்து முடிக்க வேண்டும் என்ற உறுதி மொழியைப் பெற்றுக்கொண்டு, அரை மனதுடன் சம்மதித்தான். அந்த ராணுவ முகாம் பொறுப்பு அதிகாரிக்கு உடனேயே தொலைபேசியில் தொடர்புகொண்டு நீண்ட நேரம் அவனுடனும் வாக்குவாதப்பட்டு, பின் ஒத்துழைப்புக் கொடுக்குமாறு உத்தரவிட, நன்றிப்பெருக்கோடு எழுந்தார்கள். நேரே அந்த ராணுவ முகாமுக்கு வர, பொறுப்பு அதிகாரி உள்ளே உடனடியாக அழைத்து நாளை தோண்டுவதற்கான ஆயத்தங்களுடன் வருமாறு கூற மகிழ்ச்சியுடன் புறப்பட்டார்கள்.

காலை சகல ஏற்பாடுகளையும் பூர்த்திசெய்துகொண்டார்கள். தெரிந்த வேலையாளையும் தேவையான பொருட்களையும் கொண்டு முகாமுக்குச் சென்றார்கள். முகாமுக்குப் பின்னால் முகாமின் பின் காவலரண்களைத் தாண்டி சிறிது தூரம் வர வேண்டியிருந்தது. 18 வருடங்கள் தவழ்ந்து புரண்ட வீட்டைப் பார்க்க கஜனுக்கு நெஞ்சு பற்றி எரிந்தது. வெறும் சுவர்கள் மட்டுமே சிதிலங்களுடன் நின்றுகொண்டு இருக்க… வேறு எதையும் காணவில்லை. நிலம் ஆங்காங்கு தோண்டப்பட்டு கள்ளி மரங்களும் நெருஞ்சிப்பற்றைகளும் படர்ந்து இருந்தன. கூரை நிர்வாணமாகக் கிடந்தது. யன்னல்கள், கதவுகள் பிடுங்கப்பட்டு இருந்தன. கவனமாக அடியெடுத்துப் பின்னால் வந்தார்கள். மரங்களும் பற்றைகளும் நிறைந்திருந்தன. கஜன் நெஞ்சு அதிர ஆராய்ந்து அச்சாகப் பதிந்திருந்த அந்த இடத்தைக் காட்ட வேலையாள் விரைந்து தோண்டத் தொடங்கினான். பீறிட்டுக் கிளம்பும் அந்த மண் வாசத்தை நுரையீரலின் ஆழம் வரை இழுத்தான் கஜன். சிறிது நேரம் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு, கூட்டி வந்த ராணுவத்தினன் திரும்பிவிட்டான்.

மழை சில தினங்களுக்கு முன்பாகப் பெய்ததினால் மண் இளகியிருக்க, விரைவாகத் தோண்டக்கூடியதாக இருந்தது. இருவரும் பார்த்துக்கொண்டு இருக்க… கிடங்கு ஆழமாகிக்கொண்டு இருந்தது.

“எப்பிடியும் மூன்று நாலு அடியாவது இருக்கும். வெள்ளைத் துணி சுற்றித்தான் புதைச்சனாங்கள்! துணி தெரிஞ்சாப் பாருங்கோ!”- கஜன் பதற்றத்துடன் சொல்ல…

“20 வருடங்களுக்கு முந்திப் புதைச்சா, இப்ப எலும்பு கிடைக்குதோ அல்லது உக்கிட்டுதோ தெரியாது!” சொல்லிக்கொண்டே மூச்சு வாங்க வெட்டினான். வெட்ட வெட்ட பழைய பிளாஸ்டிக் பைகள், மக்கிப்போகும் குப்பைகள், கட்டட இடிபாடுகள் என்று வந்துகொண்டு இருந்தன. இன்னும் தோண்ட எலும்புகள் கிடைக்கத் தொடங்க… தொடர்ந்து தோண்ட மண்டை ஓடுகள் ஒவ்வொன்றாக நான்கும் அதற்குக் கீழே உக்கின துணியோடு இரண்டு மண்டை ஓடுகளும் சேர்ந்தன. தோண்டியவன் அதிர்ந்துபோய் நிமிர, இவர்களும் திகைத்துப்போனார்கள்.

“கிணறு வெட்டப் பூதம் கிளம்பின கதையாகீட்டுது! தோண்டத் தோண்ட வந்து கொண்டே இருக்கும் போலிருக்கு! என்ன செய்யிறதிப்ப? தொடர்ந்து தோண்டுறதா?” – வெட்டியவன் நடுங்கிக்கொண்டே கேட்க,

“இதை முதல்ல மீடியாக்களுக்குச் சொல்ல வேணும். பிறகு ஜிஎஸிட்ட சொல்லி போலீஸ்ல முறைப்பாடு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்!” – கஜன் பதற்றம் மாறாமல் சொல்ல… விஸ்வலிங்கம் ஆழ்ந்த யோசனையோடு தலையாட்டிக்கொண்டே அவனைப் பார்த்தார்.

“இதை நீயும் வெளியில சொல்லிப்போடாதை. ஆபத்து தோண்டின உனக்கும் சேர்த்துத்தான் வரும்!” – விஸ்வலிங்கம் கண்ணை உருட்டிக்கொண்டு சொல்ல… வேலையாள் பயத்துடன் தலையாட்டினான்.

“கிடைச்ச எல்லாத்தையும் கிடங்குக்குள்ள வெச்சே சாக்குல போட்டுக் கட்டு! வெட்டினது தெரியாமல் கிடங்கை வடிவாய் மூடு! இதுக்குள்ளால வெளியில கொண்டுபோய் மிச்சத்தை பிறகு யோசிப்பம்!” அக்கம் பக்கம் நோட்டம் விட்டுக்கொண்டே சொன்னார்.

சாக்குப்பையைத் தூக்கின வேலையாளை முன்னால் அனுப்பிவிட்டு, பின் முகாம் பொறுப்பாளனுக்கு நன்றி சொல்லி கனத்த நெஞ்சத்துடன் புறப்பட்டார்கள்.

“இங்க காலத்துக்குக் காலம் ஆட்கள் காணாமற் போறது வழக்கம். அவங்களில யாருமாய் இருக்கலாம்! சாக்குப்பையைத் திறக்காமலே கிரியைகளைச் செய்யச் சொல் லுவம். வீட்டுலயும் ஒருத்தருக்கும் தெரிய வேண்டாம்! இப்ப இதைச் சொல்லி வீண் குழப்பத்தை உண்டாக்காமல் அப்பிடியே மறைச்சிடுறதுதான் எல்லாருக்கும் நல்லது” கூறிக்கொண்டே விஸ்வலிங்கம் வேலையாளைத் தூர அழைத்துச் சென்று, அவன் காதில் எதோ ஓதினார். அவனும் புரிந்து கொண்டதைப்போல பலமாகத் தலையை ஆட்டினான்.

“எப்பிடி அங்கிள்! இப்பிடி அநியாயம் நடந்திருக்கு! எப்பிடி தெரிஞ்சும் பேசாம இருக்கிறது? நாங்களும் எங்களால முடிஞ்ச அளவுக்கு முயற்சி எடுத்துப் பார்ப்பம்!”- கஜனின் உதடுகள் துடித்தன.

“அது அப்பிடித்தான்! உனக்கு எப்பிடிப் புரியவைக்கிறதென்று தெரியேல்லை! புதைகுழி இருக்கிறது சொல்லி எதுவும் நடக்கப்போறது இல்லை. ஏற்கெனவே இப்பிடிப் பல புதைகுழிகள் தெரிந்தும் இதுவரை என்ன நடந்தது? எதாவது முடிவு கிடைச்சுதா? இல்லை கிடைக்குமா? கிடைக்கத்தான் விடுவாங்களா? செத்தவங்களின்ர குடும்பங்கள் தவிக்கும் என்பது உண்மைதான்! அதுக்காக இதைச் சொல்லி கோர்ட்டுல கேஸ் போட்டு ஆராவாரப்பட்டு நீதி கிடைக்கவே போறதில்லை! நாங்களும் காணாமற் போகவேண்டி வரும். அல்லது எங்கட குடும்பங்களுக்கும் உயிராபத்தைத் தேடினதுதான் மிச்சமாய்ப்போகும்! இந்த செத்தவங்கள் காணாமற் போனவங்களாகவே இருக்கட்டும்!”

“நடந்த அக்கிரமத்தைத் தெரிஞ்சு கொண்டும் தெரியாத மாதிரி இருக்கிறதும் பெரிய அக்கிரமம்தான்! எனக்கு ரத்தம் கொதிக்குது! எதாவது செய்து எதிர்த்தால்தானே வருங்காலத்திலயாவது இப்பிடி நடக்கிறதைத் தடுக்கலாம்!”

“தடுப்பியள்… தடுப்பியள்! அவங்களுக்குப் பூண்டோட அழிக்கிறதுதான் பழக்கம். தன்ர இனத்தையே அப்பிடிச் செய்யிறவனுக்கு எங்களைச் செய்யிறது சின்ன விசயம். தட்டிக்கேட்கவும் ஆளில்லாத இனத்தில பிறந்தது எங்கட கஷ்ட காலம்! நீ சொல்லி பிரச்னையைக் கிளப்பிட்டு கனடா போயிடுவாய்! நாங்கள் பிறகும் இங்கதான் வாழ வேண்டிய கட்டாயத்தில இருக்கிறம். அதனால அமைதியாக இருக்கிறதுதான் புத்திசாலித்தனம். ஏதோ தெரியாத்தனமாகப் பார்த்துவிட்டதால உன்ர தாய் – தகப் பனுக்குச் செய்கிற கிரியைகளோடு இவங்களுக்கும் சேர்த்துச் செய்திட்டு எரிச்சுடுவம். இதுதான் செய்யக்கூடிய ஒரே பிராயச்சித்தம்!”- விஸ்வலிங்கம் கஜனின் தோளைப் பற்றிக்கொண்டே சொன்னார். கஜன் அவசரமாக மறுத்து வாயைத் திறக்க… இரண்டு கைகளாலும் அவனின் வாயை இறுக்க மூடினார். கஜனால் அதற்கு மேல் எதுவும் செய்ய முடியவில்லை.

உயிர் வாழும் தேவை சகலருக்கும் இருப்பதை மறுக்க முடியவில்லை. வந்த புரோகிதரையும் சமா ளித்து பெற்றோரின் படங்களையும் எலும்புகளையும் எடுத்துக் கிரியைகளை செய்து முடித்தனர். பின், சுடலைக்குக் கொண்டுசென்று கஜன் எரியூட்ட… சாக்கில் பரவிய தீ கஜனின் நெஞ்சத்தைப்போலக் கொழுந்துவிட்டு எரிந்தது.

அதன் பிறகு கஜனால் அங்கு இருப்புக்கொள்ள முடியவில்லை. எங்கே உணர்ச்சிவசப்பட்டுப் பொங்கிவிடுவானோ என்று பயந்துதான் புறப்பட்டுவிட்டான். மிகுதிக் காரியங்களை விஸ்வலிங்கத்தைச் செய்யுமாறு கூறிவிட்டு, அடுத்த சில நாட்களிலேயே கஜனும் எதுவும் தெரியாத ஆல்ட்றினாவும் விமானம் ஏறிக்கொண்டார்கள்.

வேலையாளைக் காணும்போது எல்லாம் சொல் லிப்போடாதை என்று விஸ்வலிங்கம் கண்ணை உருட்டுவார் இப்போதும்!

– ஆகஸ்ட் 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *