சுபத்திராவிற்கு என்ன நடந்து விட்டது?

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினகரன் வாரமஞ்சரி
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: February 18, 2018
பார்வையிட்டோர்: 13,285 
 

அன்றைய அதிகாலைப்பொழுது வழக்கத்திலும் பார்க்க அழகாகவே புலர்ந்தது போலிருந்தது சுபத்திராவுக்கு. தூரத்துக் கோயிலிலிருந்து ண்ங்க்! ண்ங்க்! என்று மணியோசை காற்றோடு மெல்லியதாய்த் தவழ்ந்து வந்து யன்னல் திரைகளைச் சுண்டிச் சுருதி சேர்க்க முயன்றது. யன்னலினூடே வழுக்கியபடி விழுந்து சூரியன் முதலில் சுபத்திரா படுத்திருந்த கட்டிலின் கரையைத் தொட்டு அடுத்து அவளின்மீது ஏறித் தவழ எத்தனித்தவன்போல் ஊர்ந்து வந்தான்.

சுபத்திரா தன்னைச் சுற்றிப் பார்வையை ஓடவிட்டாள். இன்றோடு நான்கு நாட்கள். இப்படியே வெளியுலகை நோக்குவதும் பகலில் தன்னைக் காண வருபவர்களுக்குக் காட்டவெனச் சிரிப்பை வலிய வரவழைப்பதுமாய்ப் பொழுதைப் போக்கினாள். ஆனால் அன்று காலை மட்டும் உள்ளத்தில் ஏதோ இனமறியாத இன்ப ஊற்று ஊறுவதுபோலவும் உடல்முழுவதும் எண்ணற்ற பசிய விரல்கள் ஒரே சமயத்தில் ஊர்வதுபோலவும் உணர்ந்தபோது அவளின் கன்னங்களில் முகிழ்த்த சிரிப்பு கண்களெல்லாம் பூவாய் மலர்ந்தது.

சுபத்திராவின் அறை அந்த ஆஸ்பத்திரியில் இருந்த உயர்ந்த ரகங்களில் ஒன்று. அந்தத் தனியான அறைக்கென எல்லா வசதிகளும் கைக்கெட்டிய தூரத்தில் இருந்தன. ஆஸ்பத்திரியின் மருந்து மணமும் விருந்து மணமும் அறையின் உள்ளே எட்டிப்பார்க்கக் கூடாது என்பதில் மிகச் சிரத்தை எடுத்திருந்தார்கள், என்பதை அந்த அறையின் தோற்றம் தெள்ளென விளக்கியது. அதனால்தான் இவ்வளவு பணம் கறக்கிறார்களோ என்று அவளின் அப்பா ஒருமுறை சாதாரண விஷயத்தைச் சொல்வதுபோல் சொல்லிச் சிரித்தார். என்ன செலவானாலும் சுபத்திரா சுகமாக வீடு திரும்பவேண்டும். அதுவே அவள் குடும்பத்தினர் எல்லோரினதும் விருப்பமாயிருந்தது. அப்படி என்ன நடந்துவிட்டது அவளுக்கு?

அறைக்கு வெளியே பசுமையான வேறு மரங்களோடு நின்ற ஒரு மாமரத்தை அவள் அங்கே வந்த நாளிலிருந்து யன்னலினூடே கவனித்து வந்தாள். அது தனது முதிர்ச்சிக்கு முன்னமே கருகத்தொடங்கியதால் எந்த வேளையும் செத்துவிடலாம் என்று அசைத்துத் தன் ஜீவனைக் காக்க முயற்சித்துக்கொண்டிருந்தது. அங்கேயே நிச்சயமாக ஒட்டியிருந்ததுபோல் அவளுக்கும் பட்டது. அம்மரம் தான் படிப்படியாக இழந்துகொண்டிருக்கும் உயிரை நிலைகொள்ள வைக்க உதவும்படி கோரும் செய்தியைத் தனது ஓரிரண்டு இலைகளில் எழுதிப் பதிலுக்காகக் காத்திருந்ததென நினைத்தாள். அதேவேளை எங்கிருந்தோவொரு குருவி கியூச் கியூச்சென ஒலியெழுப்பியபடி ஒரு கிளையில் வந்தமர்ந்து தன் துணையைத் தேடுவதுபோல் தலையை இருபுறமும் திருப்பிப் பார்த்து நிலைகொள்ளாமல் தவித்தது.

நேற்றைய இரவு முழுவதும் நான் கண்டது கனவா? கனவாக இருந்தால் என் உடலைச் சுற்றிவளைத்த வலிய கரங்கள் நிஜம்போல் இப்போதும் என்னைச் சிலிர்க்கவைக்கிறதே! என்னைக் கனவில் வந்து சுகம் விசாரித்தவன் யாராய் இருக்கலாம்? அவனோ? அவனாகத்தான் இருக்கவேண்டும்! அவனின் ஆண்மைமிக்க கரங்கள்தான் என் நெற்றியைத் தடவி ஆறுதல் அளித்தன, உடலெல்லாம் வெள்ளமாய் ஓடிய வியர்வையை ஒற்றியெடுத்தன என்பது இப்போது நன்றாக நினைவுக்கு வருகிறது. அவனின் விரல்கள் என்மீது மௌன வீணையை மீட்டியதும் முற்றிலும் நிஜமாகத்தான் இருக்கவேண்டும். அந்த விரல்கள்தான் இப்போதும் என் உடலில் இந்த அதிர்வுகளை ஏற்படுத்துகின்றனவோ? இது என்ன மாயம்!

பராசக்தியின் திருமணத்தின்போதுதான் அவனை முதலில் நேரே கண்டாள் சுபத்திரா. அன்று மதியம் நடக்கிவிருந்த திருமணத்துக்கு ஊரும் உறவும் திரண்டு வந்திருந்தன. திருமணப் பந்தல் களைகட்டியபோது அவன் தன்னைக் காணவே அங்கு வந்திருந்தானென அவள் மனம் அடித்துச் சொல்லியது. அந்தக் கணத்திலேயே அவள் தீர்மானித்துவிட்டாள். “இவனை நான் எப்படியும் அடைந்தே தீருவேன்!” இவ்வளவுக்கும் பராசக்தி சுபத்திராவின் ஒரேயொரு தமக்கை. அவனோ பராசக்தியை இன்னும் சிறிது நேரத்தில் சடங்குகள், சாட்சிகள் மத்தியில் திருமணம் செய்யப்போகிறவன். அன்றிலிருந்து பராசக்தியின் கணவனாக, மரியாதைக்குரிய தனது குடும்ப உறவினனாக வரப்போகிறவன் என்பதைப் பற்றிச் சிறிதேனும் சிந்தியாமல் இப்படியொரு நியாயமற்ற தீர்மானம் எடுத்துவிட்டாள். அவள் தான் சுபத்திரா!

திருமணச் சந்தடிக்குள் வேளையோடு வந்து கலந்துகொண்ட சுபத்திரா தன்னைச் சுற்றி நடப்பவற்றை அவதானித்து அவற்றில் லயித்தவள்போல் மெல்லிய சிரிப்பைத் தவழவிட்டாள். திருமணக் கூட்டத்தில் நின்ற ஆண்கள் பெண்கள் உட்பட வயது வேறுபாடில்லாமல் அவளை அதிசயமாய் நோட்டம் விட்டுக்கொண்டிருந்த அத்தனைபேரும் சுபத்திரா தம்மைத்தான் பார்த்துச் சிரித்ததாக எண்ணி இறக்கை கட்டிப் பறக்க ஆயத்தமானார்கள்.

திருமண மண்டபத்துக்கு மணமகனாக வந்திருந்த முகுந்தனும் அப்போதுதான் முதன் முதலாகச் சுபத்திராவைக் கண்டான். அவளின் எழிலில் ஒரு கணம் மெய்மறந்து நின்றவன், திடீரெனப் பராசக்தி தனக்குச் சொன்னது நினைவுக்கு வரவே சுபத்திராவை நோக்கி ‘உங்கள் வருகையை மதிக்கிறேன்’ என்பதுபோல் மரியாதையான சிரிப்பை அவிழ்த்துவிட்டு மெல்லமாய்த் தலையைக் குனிந்துகொண்டான். “சுபத்திரா உங்களைப் பார்த்தாளென்றால் நீங்களும் அவளை ஒருமுறை பார்த்துச் சாட்டுக்குச் சிரித்துவிட்டு மற்றப்பக்கம் திரும்பிவிடுங்கள். அவளைக் கண்டுகொண்டதாகவும் இருக்கும், மரியாதை செய்ததாகவும் இருக்கும்”. பராசக்தி இந்தப் புத்திமதியை மீண்டும் மீண்டும் அவனுக்கு நினைவூட்டவேண்டிய தேவையிருக்கவில்லை. அவளுக்கு நன்றாகவே தெரியும் முகுந்தனுக்கு ஒருமுறை சொன்னாலே போதும் அவனின் அறிவுக்கும் சிந்தனைச் செறிவுக்கும் மேலாக அவன் பராசக்தியின்மேல் கொண்டிருந்த அளவற்ற காதல் அவள் முன்வைக்கும் எந்தக் கோரிக்கையையும் நிறைவேற்றிவைக்கும் ஆற்றல்கொண்டது.

இவன் பல்கலைக்கழகத்தில் லெக்ஸரராக இருக்கிறான் என்றார்களே! இவனின் கல்வியும் கேள்வியும் நெற்றியிலேயே எழுதி ஒட்டியிருந்தது போலிருந்தது. போதாததற்கு மாவட்டத்தில் சடசடவெனப் பெயரெடுத்த டெனிஸ் ப்ளேயராம். அதுதான் இவன் இப்படி ஆறடி உயரத்தில் அற்புத ஆண்மை தெறிக்கும் படி நிற்கிறானோ. பார்த்தால் அடக்கமானவன் போலவும் இருக்கிறான். இவளைப் பராசக்தி உயிரையே விட்டுக் காதலிப்பதற்கு வேறென்ன தகுதி வேண்டியிருக்கிறது? இவன் என்னை இன்னொருமுறை பார்க்கமாட்டானா? சுபத்திராவின் மனவோட்டத்தைப் படம்பிடிக்க மணப்பெண் பராசக்தி இன்னமும் மணமேடைக்கு வந்து சேரவில்லை. அவள் மட்டும் அந்நேரம் அங்கே இருந்திருந்தால் தங்கை சுபத்திராவைக் கண்களினாலேயே மண்டியிட வைத்திருப்பாள்.

உள்ளத்தை உருக்கும் நாதஸ்வர இசை தனக்காகத்தான் என்று எண்ணிச் சுபத்திரா உருகிக்கொண்டிருக்க, இல்லை அது எங்களுக்காகவேயெனத் திடமாகக் கூறுவதுபோல் மணப்பெண் பராசத்தி மெல்ல மெல்ல ஆனால் உறுதியோடு அடியெடுத்து மணமேடையை நோக்கி வந்தாள். அவளின் கண்கள் முகுந்தனின் கண்களைச் சந்தித்துக் கதைகள் பேசிய கையோடு சுபத்திராவையும் கூட்டத்தில் சல்லடைபோட்டுத் தேடின. பராசக்தி தோழியர் சூழ வருவதைக் கண்ட சுபத்திரா பத்திரமாகப் போய் மணமகனின் பின்னே மணமகளை வரவேற்க ஒரே மந்திரத்தைப் பல தடவைகள் உச்சரித்துக்கொண்டிருந்தன. “முகுந்தன், ஒரேயொரு முறையாவது என்னைத் திரும்பிப் பார்க்கமாட்டாயா?”

கைகளில் மாலையோடு வந்த பராசக்தி, பெரியோர்கள் வழிகாட்ட மணமேடையில் அமர்ந்திருந்த முகுந்தனின் கழுத்தில் மாலையிட்டு நிமிர்ந்தபோது பின்னால் புன்முறுவலுடன் நின்ற சுபத்திராவைக் கண்டுகொண்டாள். அவளைத் தன் ஓரக்கண்ணால் விழித்து ‘எப்படி இருக்கிறார் என்னுடைய ஆள்?’ என்பதுபோல் பாவனை காட்டினாள். சுபத்திரா மட்டுமல்ல மணமகனுக்குப் பின்னால் நின்ற எல்லாப் பெண்களுமே குலுங்கிச் சிரித்து “உம்முடைய ஆள் உமக்கு மிகப் பொருத்தம்” என்பதுபோல் ஆளுக்கொரு செய்தியை அபிநயித்து அமர்க்களப்படுத்தினர். பராசக்திக்கு வெட்கமாய்ப் போய்விட்டது. சுபத்திரா நான் நினைப்பதுபோல் இல்லாமல் விட்டால், கடவுளே, எவ்வளவுக்கு நல்லது. ஆனால் துப்பரவாக நடிக்கத் தெரியாதவளா சுபத்திரா?

தமக்கு ஆண் சகோதரங்கள் இல்லையென்ற குறையைத் தாமே தம்மை அண்ணனாகவும் தங்கையாகவும் கருதி நேசித்துக் கொள்வதன்மூலம் தீர்த்துக் கொள்ளச் சின்ன வயதிலிருந்தே பழகிக்கொண்டனர் இந்த இரு சகோதரிகளும். ஒருபோதும் இணைபிரியாது அப்படியொரு இதயப் பிணைப்பால் தம்மைக் இறுகக் கட்டிக்கொண்டார்கள். ஒருவர்க்கொருவர் அன்பு காட்டுவதும் விட்டுக்கொடுப்பதும் அவர்களின் வயது ஏற ஏற இன்னும் பக்குவமடையத் தொடங்கின. ஆனால் சுபத்திரா தனது உடல் அழகின்மீதும் கல்வித் திறமைகளின் மீதும் கொண்ட அளவுக்கு மீறிய தன்னம்பிக்கை படிப்படியாக அவள் தன்னால் ஆகாதது எதுவுமில்லையென்ற இறுமாந்த நிலைக்கு அவளைத் தள்ளியபோது சுபத்திராவிலும் பார்க்கப் பெரிதும் பாதிக்கப்பட்டவள் பராசக்திதான். நாளுக்கு நாள் தான் தங்கைகயை இழந்துவருவதுபோல் உணரத்தொடங்கியபோது அவளின் போக்கைத் திருத்தமுடியாமல் தவித்தாள்.

பராசக்தியும் அழகிதான். ஆனால் தான் சுபத்திராவின் அழகுக்கு முன்னால் வரவேமுடியாது என்பதை நன்கறிந்தவள். அதுமட்டுமன்றித் தன் தங்கையின் அழகையும் திறமைகளையும் பெற்றோர்களிலும் பார்க்கப் பெருமிதமாகப் பேசுவாள். முகுந்தனை அவள் காதலிக்கத் தொடங்கியதும் அவன் எப்படி இருப்பான் என்பதை அறிந்துகொள்ளாமலே வீட்டில் முதல் வரவேற்பு தெரிவித்தவள் சுபத்திராதான். இதனால் பராசக்திக்கு அவள்மீதிருந்த அன்பும் மதிப்பும் பன்மடங்காகியது. ஆனால் பின்னர் இருவரும் பூட்டிய அறைக்குள்ளிருந்து தமது காதல் உலகத்தின் ரகசியங்களை நண்பிகள்போல் பரிமாறிக்கொண்ட நாட்கள் வரவரக் குறைந்துபோயின.

சுபத்திராவின் புதிய போக்குகளால் அவளைப் பிரியவோ வெறுக்கவோ வேண்டி வந்துவிடுமே எனப் பயந்தாள் பராசக்தி. தன்னிடம் மண்டியிட்ட அப்பாவிகளையும் தான் இடையறாது துரத்திக்கொண்டிருக்கும் இளவரசர்களையும் பற்றி அவள் அன்றாடம் வந்து சொல்லும் கதைகளைக் கேட்டுச் சுபத்திரா இறுதியில் ஆபத்தான வழியில் இறங்கிவிடுவாளோவென்று கலங்கினாள்.

மாங்கல்யதாரணம் ஆயிற்று. அந்த அரை மணி நேரத்துக்குள் பராசக்தி இன்னும் பல மடங்கு பொலிவடைந்துவிட்டாள்போல் தோன்றியது. முகுந்தனின் கண்களில் மட்டுமல்ல கரங்களிலும் சிறைப்பட்டவளாய் அவள் இன்னொரு உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள். முகுந்தன் அவளின் கரத்தை இறுக்கி அவளை இந்த உலகத்துக்குக் கொண்டுவந்தபோது சடங்குகளெல்லாம் தனக்குத் தெரியாமலே முடிந்துபோயிருந்ததை அவதானித்தாள். அப்போதுதான் சுபத்திரா முகுந்தனைக் கண்கொட்டாமல் தரிசித்துக் கொண்டிருந்ததைக் கண்டு துணுக்குற்றாள்.

சுபத்திரா மாறிவிடவில்லை. மாறப்போவதுமில்லை. இவள் இதுவரை எத்தனை ஆண்களைக் கண்ணால் மட்டுமே கொத்திச் சீரழித்தவள்? தன் அழகுக்கு முன் ஆண்களெல்லாம் அடிமைகள் என்ற சித்தாந்தத்தைச் சிறிதாவது எவருக்கேனும் விட்டுக்கொடுத்திருப்பாளா? நாளைக்கு முகுந்தனையும் அடிமைப்படுத்திவிட முயற்சிப்பாளெனப் பராசத்தி உணர்ந்து எதற்கும் தன்​ைனத் தயாராக்கிக்கொள்ள வேண்டுமென்று அப்போதே தீர்மானித்துக்கொண்டாள்.

முகுந்தனை எப்படியும் அடைந்தே தீருவேன் என்று சுபத்திரா எத்துணை வலிய தீர்மானம் எடுத்துக் கொண்டாளோ இவளின் ஆசை நிறைவேற விடுவதேயில்லையென்று பராசக்தியும் அதேவேளை இன்னும் வலிய தீர்மானத்தை எடுத்துக்கொண்டாள். இது சுபத்திராவுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. அதுதான் அவளிடமிருந்த ஒரேயொரு பலவீனம். மற்றவர்களின் அறிவும் ஆற்றலும் எப்போதும் தனக்குக் குறைவானதேயென்று எண்ணித் தானே எல்லாரிலும் உயர்ந்தவள் என்று நினைப்பதிலேயே அக்கறை கொண்டதால் தன்னையும் ஒருத்தி மீறக்கூடுமென அவள் ஒருபோதும் சிந்தித்ததில்லை. கடந்த ஆறு மாதங்களாக சுபத்திரா முகுந்தன் மீது அடுக்கடுக்காய் எய்த கணைகள் பராசக்தியின் மீது அவன் கொண்ட ஆழ்ந்த காதலையும் மீறி அவனைத் தாக்கச் சக்தியற்று அவளையே திரும்பி வந்து தாக்கின. அது ஏற்படுத்திய தாக்கம் எவ்வளவு பாரதூரமானது என்பதை அவள் முழுவதுமாய் உணருமுன்பு அந்த எதிர்பாராதது நிகழ்ந்தேவிட்டது.

அன்று மாலை பிறந்த வீட்டுக்கு ஒரு சர்ப்பிரைஸ் விசிட் போகவேண்டுமென்று பராசக்தி காலையே முகுந்தனுக்கு நினைவூட்டியிருந்தாள். அவனுக்கும் இப்படியான எதிர்பாராமல் கிடைக்கும் சந்தோசங்களில் பெருவிருப்பம். இருவரும் திட்டமிட்டபடி வீட்டுக்கு வந்து வாசல் கதவைத் தட்டியும் ஒருவரும் வந்து திறக்கவில்லை. பராசக்தி “அம்மா” என்று கூப்பிட்டபடி சாத்திக்கிடந்த கதவைத் தள்ளித் திறந்துகொண்டு முகுந்தன் பின்தொடர வீட்டினுள்ளே நுழைந்தபோது அங்கே எவரும் காணப்படவில்லை. “அம்மாவும் அப்பாவும் வெளியே போயிருக்க வேண்டும். அவர்களை ஆச்சரியப்படுத்தவென்று எண்ணி முன்பின் சொல்லாமல் வந்த எங்களுக்குத்தான் ஆச்சரியம் காத்திருக்கிறது” என்று சொன்ன பராசக்தி, “கதவு திறந்து கிடந்ததே, அவர்கள் வெளியே போகும்போது பூட்டாமல் போவதில்லை. ஒருவேளை சுபத்திரா மட்டும் வேளைக்கு வந்து வீட்டில் நிற்கிறாளோ?” என்று சொல்லி பராசத்தி முகுந்தனை விழித்தபோது, “அங்கே பாத் ரூமில் தண்ணீர் ஓடும் சத்தம் கேட்கிறது. போய்ப் பார், பார்” என்று முகுந்தன் சொல்லவும் அவள் ஆவல் மேலிட பாத் ரூமை நோக்கி ஓடினாள். அவளுடைய ஆவலும் மகிழ்ச்சியும் ஓரிரு விநாடிகளில் அடங்கிப்போயின.

பூட்டிக்கிடந்த பாத் ரூம் கதவின் அடியிலிருந்து தண்ணீர் வெளியே வீட்டுக்குள் ஓடி வந்துகொண்டிருந்தது. விறைத்து விதிர்த்துப்போன பராசக்தி, “சுபிக் கண்ணு, எவ்வளவு நேரமாய்க் குளிக்கிறாய். இங்கே தண்ணீர் வீட்டுக்குள் வந்துவிட்டது” என்று உரக்கச் சத்தமிட்டாள். ஆனால் உள்ளேயிருந்து ஒரு பதிலும் வரவில்லை. தண்ணீர் மட்டும் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தது. முகுந்தன் விரைந்து வந்து கதவைப் பலக்கத் தட்டினான். அதற்கும் உள்ளிருந்து பதில் இல்லை. பராசக்தி இப்போது “ஓ” வென்று அழ ஆரம்பித்து விட்டாள். அழுகையினூடே “சுபி, கதவைத் திற, சுபீ, ப்ளீஸ்!” இன்னும் பதிலெதுவும் இல்லை. கதவு உள்ளே இறுக்கிப் பூட்டியபடி கிடந்தது.

“உள்ளே ஏதோ நடந்திருக்கவேண்டும் அதுதான் சுபத்திரா வந்து கதவைத் திறக்கமுடியாமல் இருக்கிறாள். முகுந்தன், கதவைத் தள்ளித் திறவுங்கோ!”

முகுந்தன் கதவைப் பலமாகத் தள்ளினான். ஆனால் கதவு இறுகிப்போயிருந்தது. இனியும் தாமதிக்கக்கூடாது என்று கண்டவுடன் முகுந்தன் கதவின் மீது விட்ட உதையில் அதன் பூட்டுச் சிதறி “ஆ” வெனத் திறந்துகொண்டது. ஏற்கனவே கொண்ட அதிர்ச்சியோடும் பயத்தோடும் உள்ளே நுழைந்த பராசக்தியும் முகுந்தனும் பதறிப்போனார்கள். சுபத்திரா மார்பில் கட்டிய டவல் கழன்று போய் நீரில் மிதக்கப் பிறந்த மேனியாய்க் குளியல் தொட்டியில் தலையைச் சாய்த்து மயங்கிப்போய்க் கிடந்தாள். குழாயிலிருந்து தண்ணீர் அவளின் உடம்பெல்லாம் சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது.

“சுபீ!” என்று அலறிக்கொண்டு சுபத்திராவிடம் ஓடினாள் பராசக்தி.

சுபத்திரா ஆடையேதுமின்றித் துவண்டுபோயிருந்த நிலையைக் கண்டதும் தான் அங்கிருப்பது நியாயமில்லையெனக் கண்டவன்போல் விசுக்கென வெளியே செல்ல முயன்ற முகுந்தனின் கையைப் பிடித்துத் தடுத்தாள் பராசக்தி. “எங்கே ஓடுகிறீர்கள். சுபி எனக்குத் தங்கையென்றால் உங்களுக்கும் அவள் தங்கைதான். நீங்களும் ஓடிப்போனால் நமக்கு வேறு யார் இருக்கிறார்கள். ஓடாதீர்கள், தூக்குங்கள் சுபத்திராவை!”

தன்னை ஒருவாறு தைரியப்படுத்திக்கொண்ட முகுந்தன் வேறொரு டவலைத் தேடி எடுத்து வந்து சுபத்திராவை மூடிக்கொண்டான். பூஞ்செடிபோன்று தன் கையில் சோர்ந்து கிடந்தவளை அணைத்துத் தூக்கி வெளியே கொண்டுவந்தான். சுபத்திரா உடலில் அசைவேதுமின்றிக் கிடந்தாள். மூச்சு மிகுந்த சிரமத்துடன் வந்துகொண்டிருந்தது. அதற்குமேல் ஒருகணமும் தாமதிக்காமல் அவளைத் தனது காரிலேயே ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோய்ச் சேர்த்தபோது பராசக்தியிலும் பார்க்க முகுந்தனே கூடிய அதிர்ச்சியடைந்தவன்போல் நின்றான். ஒருபோதும் அப்படியொரு பெண்ணை அப்படியொரு கோலத்தில் அவன் கண்டதுமில்லை கைகளால் அணைத்துத் தூக்கியதுமில்லை. ஆஸ்பத்திரியில் மனைவியுடன் ஒட்டி நின்றபோதும் அவனின் நடுக்கம் மட்டும் தீர்ந்தபடில்லை. பராசக்தி தன் அழுகையின் மத்தியில் முகுந்தனைத் தேற்ற முடியாமல் திணறிப்போனாள். அதற்குள் வெளியே போன தாயும் தந்தையும் வந்து சேர்ந்துகொண்டார்கள்.

எல்லாரும் தமது பதட்டத்தைத் தவிர்க்கமுடியாமல் தவித்துக் கொண்டிருந்தபோது சுபத்திராவைப் பார்த்துவிட்டு வந்த டாக்டரை தகப்பனார் வழிமறித்துக்கொண்டார். டாக்டர் சிரித்த முகத்துடன் பேசியபோதுதான் அனைவருக்கும் ஒழுங்காக மூச்சு வந்தது. “இனிப் பயமில்லை. நல்ல காலம், வேளையோடு பேஷன்டைக் கொண்டுவந்தீர்கள். இல்லையேல் நாங்களும் மிகவும் சங்கடப்பட்டிருப்போம்” என்று முகுந்தனைப் பார்த்து டாக்டர் சொன்னபோதுதான் அவர்களிடமிருந்து நிம்மதிப் பெருமூச்சு வந்தது.

அடுத்த நாள் காலையே சுபத்திரா எழுந்து உட்கார்ந்துகொண்டாள். ஆனால் கண்கள் சிவந்து உடம்பும் பெரிதும் சோர்ந்து போயிருந்தது. தன்னைச் சுற்றிக் கலக்கத்துடன் நின்றவர்களைக் கேட்கக் கேள்விகள் மட்டுமே அவளிடம் இருந்தன. பதில் தெரியாதவர்களிடம் கேட்கும் கேள்விகள்.

சுபத்திராவுக்கு டிப்பிறெஷன்! எப்போதிருந்து பாதிக்கப்பட்டாள்? எவருக்கும் எதுவுமே தெரிந்திருக்கவில்லை. இந்த நோய் முற்றி அவள் தூக்க மருந்தை உள்ளங்கை நிறைய அள்ளிப் போடுமளவிற்கு என்னதான் அவளுக்கு நடந்திருக்கும்? குடும்பத்தில் ஒருவரையொருவர் பார்வையால் கேள்விகளை அடுக்கிப் பதில் வராமல் அழுவதைத் தவிர வேறு எந்த மார்க்கமும் இல்லையெனக் கண்டுகொண்டார்கள். ஆஸ்பத்திரிக்குள்ளேயே ஸ்பெஷலிஸ்டுகளைக் காண அவளைக் கூட்டிச் செல்வதும் புதுப்புது மருந்துகளை அவளுக்கு அறிமுகப்படுத்துவதுமாக நான்கு நாட்கள் ஆமையாய் ஊர்ந்து சென்றன. பராசக்தியும் முகுந்தனும் வேலைக்குப் போகாமல் அங்கேயே சுற்றிச் சுழன்றுகொண்டு நின்று டாக்டர்களைக் கண்டு விசாரிப்பதோடு சுபத்திராவுடனும் பொழுதைக் போக்கினார்கள்.

இன்று காலை பெரிய டாக்டரும் அவரது பரிவாரங்களும் சுபத்திராவைக் காணவந்தபோது அவளின் வீட்டிலிருந்து இன்னும் ஒருவரும் அங்கு வந்திருக்கவில்லை. அவர்களைக் கண்டதும் கட்டிலில் எழுந்திருந்த சுபத்திராவை எல்லாரும் முகம் மலர நோக்கினார்கள். “உங்கள் உடம்பு முழுவதும் தேறிவிட்டது. இனி நீங்கள் செய்ய வேண்டியது உங்களுக்குத் தந்த மருந்துகளை ஒழுங்காகச் சாப்பிடுவதும் உங்கள் டாக்டரை சொன்ன நேரத்துக்கு வந்து காண்பதும்தான். இன்னொருமுறை அன்றைக்கிருந்த நிலைக்கு உங்களைத் தள்ளுவீர்களானால் அதற்குப் பிறகு இங்கே வந்தும் பயனில்லாமல் போய்விடும். ஆனபடியால் வீணாகக் கவலைப்பட்டு மனதை மேலும் நோகடிக்காதீர்கள். உங்கள் இளம் வயது வாழ்க்கையில் இனித்தான் நிறையச் சந்தோசங்களை அனுபவிக்கப்போகிறீர்கள் என்பதை மறவாதீர்கள்” என்று அவள் முகத்தையே பார்த்து முறுவலித்தபடி ஒவ்வொரு சொல்லையும் நின்று நிதானித்துச் சொன்ன டாக்டரை விழிகளை விரித்தபடிநோக்கிய சுபத்திரா தனக்கு நன்றி கூறிப் பழக்கமில்லையென்பதை அப்போதுதான் உணர்ந்தபோதிலும் அவருக்குத் தட்டுத் தடுமாறி நன்றிகூற முயன்றாள். அதற்கிடையில் டாக்டர் வாசலடிக்குச்சென்றுவிட்டார்.

நான்கு நாட்களுக்கு முன்னர் பாத் ரூமில் பராசக்தி சேலையை நனைத்த வெள்ளத்தின் மத்தியில் நின்றுகொண்டு கீச்சிட்டு அலறிய ஓசையும் முகுந்தன் வந்து தன்னை அணைத்துத் தூக்கியதும் அப்போது அவள் நினைவில் மேகமாய் வந்து அமர்ந்தது. “எங்கே ஓடுகிறீர்கள். சுபி எனக்குத் தங்கையென்றால் உங்களுக்கும் அவள் தந்கைதான். நீங்களும் ஓடிப்போனால் நமக்கு வேறு யார் இருக்கிறார்கள். ஓடாதீர்கள், தூக்குங்கள் சுபத்திராவை!” என்ற மந்திரத்தில் கட்டுண்டு என்னைத் தூக்கித் துடைத்து வேளையோடு ஆஸ்பத்திரியில் சேர்த்தவன், முன்பு நான் அணைக்க ஆசைகொண்ட முகுந்தனா அல்லது என்னைத் தங்கையாகக் கண்ட அண்ணனா?

சுபத்திரா இப்போது வாய்விட்டே சிரித்தாள். கலகலவெனச் சிரித்தாள். அறைச் சுவர்கள் எதிரொலிக்கும்படியாகச் சிரித்தாள். ஆயிரம் சிறுமணிகள் உள்ளங்கையிலிருந்து சிதறிப் பளிங்கு நிலத்தில் விழுந்து சிலுசிலுத்தனபோல் சிரித்தாள்.

அவளின் சிரிப்பலைகள் சாத்திக் கிடந்த வாசல் கதவுகளின் இடுக்குகளுக்கூடாகச் கசிந்து வராந்தாவெங்கும் இசையாய் வழிந்தோடின. இப்படி அவள் சிரித்துக் களித்தது சிறுவயதில் மட்டுமே என்ற உணர்வு மேலிட்டதால் இன்னும் கூட வாய்திறந்து சிரிக்க வேண்டும்போல் அவளுக்குத் தோன்றியது.

அடுத்த சில நிமிடங்களில் அவளின் குடும்பத்தினர் முழுப் பேரும் வந்து குவிந்துகொண்டார்கள். இன்றைக்கே சுபத்திராவை வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள் என்ற நம்பிக்கையைச் சுமந்தபடிதான் வந்தார்கள். அவளின் கட்டிலைச் சுற்றி நின்ற அத்தனைபேரும் அவளின் சிரிப்பின் சுருதியோடு சேர்ந்து சிரித்தார்கள். இந்தத் தினம் எவ்வளவு இனிமையானது! சுபத்திரா அழகுப் பதுமையாய் இப்போதுதான் பிறந்தாள் போன்ற மகிழ்ச்சி. எல்லார் இதயங்களிலும் இனிய நாதம் எழுப்பியது. இன்னும் சிறிது நேரத்தில் சுபத்திரா வீட்டுக்குப் போகலாமென்ற டாக்டரின் தீர்ப்பை அறிந்ததும் இது உண்மைதானா என்பதுபோல் ஒருவரையொருவர் பார்த்துச் சொல்லுக்குப் பஞ்சம் ஏற்பட்டதுபோல் மௌனமாய் அவளை அணைத்துக்கொண்டார்கள். சுபத்திரா முகுந்தனையும் பராசக்தியையும் ஏறிட்டு நோக்கினாள். அவள் கண்களில் கசிந்தது நன்றியா புதியதாய் முகிழ்த்த பாசத்தின் பிரதிபலிப்பா என்பதை அறியமுடியாமல் பராசத்தி திகைத்தாள். இத்தனைக்குள் இவளிடம் இத்துணைப் பெரிய மாற்றமா? இவள் என் பழைய சுபிக் கண்ணு, என்னைச் சுற்றி எப்போதும் வளைய வந்துகொண்டிருந்த வெள்ளைப் புறா! முகுந்தன், இந்தப் பெரிய மாற்றம் உன்னால்தான் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று எண்ணியவள்போல் அவனின் கைகளைப் பற்றிய பராசக்தி அவனைக் கண்களினூடே நன்றியுடன் பார்த்தாள்.

சுபத்திராவும் குடும்பமும் ஆஸ்பத்திரி விறாந்தைக்கு வந்து வீடு நோக்கிப் புறப்பட்டபோது அவ்வழியாக வந்த அவளின் டாக்டர் அவர்களைப் பார்த்து அர்த்தமுள்ள புன்முறுவலுடன் கடந்து சென்றார். அவர் அன்று காலை அறையின் வாசல் கதவடியில் நின்று சொன்ன ஒரே வாக்கியம் அப்போது அவளின் நினைவில் வந்து மோதியது.

“உங்கள் நன்றியை முதலில் உங்கள் பிரதர் இன் லாவுக்குச் சொல்லுங்கள், அவர்தான் உங்களை இங்கே நேரத்தோடு கொண்டுவந்து சேர்த்தவர்.”

“முகுந்தன்!” மணியொன்று குலுங்கியது! எல்லாரும் சுபத்திராவை ஆவலுடன் திரும்பிப் பார்த்தார்கள்.

“தேங்க்யூ, பிரதர்!”

– பெப்ரவரி 2016

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *