சிந்தியாவும் சிவசங்கரும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: May 14, 2016
பார்வையிட்டோர்: 24,607 
 
 

சிவசங்கர் அவளுக்காகக் காத்திருக்கிறான். தன்னைச் சுற்றிய உலகை மறந்து அவளுக்காகக் காத்திருக்கிறான். கடந்த சில நாட்களாக மழை அடிக்கடி பெய்கிறது.அத்துடன் மார்கழிமாதக்குளிர், அவன் அணிந்திருக்கும் உடைகளைத் தாண்டி அவன் எலும்புகளில் உறைகிறது. அவன் தனது கைகளைக்குளிரிலிருந்து பாதுகாக்கத் தன் ஜக்கட் பாக்கட்டுகளுக்குள் புதைத்துக்கொண்டான்.

அவளைப் பற்றிய அவனின் நினைவுகளைப் புதைத்துக்கொள்ள அவனின் உலகத்தில் எந்த இடமுமில்லை.

அவளைச் சந்தித்த நாளிலிருந்து அவள் அந்த இடத்துக்கு வருவதற்;கு நேரம் தவறியதை அவன் அறியான்.

அவன் அவளைச் சந்தித்த நாளிலிருந்து அவள் சரியான நேரத்துக்கு இந்த பஸ் ஸ்டாப்புக்கு வருவது அவனுக்குத் தெரியும்..

இருவரும் ஒருத்தொருக்கொருத்தர் அறிமுகமாகிப் பேசத் தொடங்கி சில மாதங்கள்தானாகின்றன.

அவள் அவனைக் காப்பாற்றச் செய்த உதவிக்கு.அவன் சொன்ன நன்றிக்குப்பின் அவளைக் கண்டால்’ ஹலோ’ சொல்லத் தொடங்கியவன் இன்று அவள் வருகைக்காக் காத்திருக்கிறான்.

அவளின் காதலுக்காகக் காத்திருக்கிறான்

இன்னொருதரம் மழை தூறத் தொடங்கிவிட்டது.அருகிலிருக்கும் பாதாள ட்ரெயினுக்குப் போகிறவர்;கள் அவனைத்தாண்டி முண்டியடித்துக்கொண்டு விரைகிறார்கள்.

‘இவர்கள் யாராவது என்னைப்போல் யாரோ ஒருத்திக்காக எங்கேயோ காத்திருப்பார்களா?’

சிவசங்கர் தன்னைத்தானே கேட்டுக்கொள்கிறான்.

அவன் அவளைச் சந்திப்பதை அவனுக்குத் தெரிந்த இலங்கைத் தமிழர்கள் பார்த்து விடக் கூடாது என்ற அவன் அடிமனம் குறுகுறுக்கிறது.சங்கர் தவிப்புடன் அங்கும் இங்கும் பார்க்கிறான்.

பாதாள ட்ரெயினின் பாதைமுடிவில் ஒரு கிற்றார்வாத்தியக்காரனின் ஜோன் வில்லியத்தின் உருக்கமான ராகம் அவன் மனதை நெருடுகிறது. அவள் வராமலே விட்டு விடுவாளோ?

அப்படி நினைத்ததும் கிற்றார் ராகத்தில் ஏதோ அபஸ்வரம் விழுந்ததுபோல் அவன் மனம் குழம்புகிறது.

அவள் பெயர் சிந்தியா. அது ஆங்கிலப் பெயரா அல்லது ஐரிஷ், ஸ்காட்டிஷ் பெயரா என்று அவனுக்குத் தெரியாது.

‘எனது பெயர் சிந்தியா ஸடிவன்ஸன்’ என்று அவள் தன்னை அறிமுகம் செய்து கொண்டபோது,அது அவனுக்கு ‘இந்தியா’என்ற மாதிரிக் கேட்டது.

அதை அவன் தனது நண்பன் மனோகரனுக்குச் சொன்னபோது அவன் சங்கரை ஏறிட்டுப்பார்த்தான். மனோகரனுக்கு,’இந்திய அமைதிப்படை’ இலங்கைக்கு வந்து செய்த அக்கிரமங்களுக்குப் பின் ‘இந்தியாவைப்’ பிடிக்காது.

‘இந்திய வடக்கத்தியாரை’ அவன் சந்தர்பம் வந்தபோதெல்லாம் வைது முடிப்பான்.

சிந்தியாவின் பெயர்,’இந்தியா’மாதிரி ஒலித்ததால் அவளை ஒரு நாளும் நேரிற் பார்க்காமலேயே அவளைத் தனக்குப் பிடிக்காது என்பதை மனோகரன்; காட்டிக்கொண்டான்.

மனோகரனுக்கு,சிந்தியாவை மட்டுமல்ல,பெரும்பாலான மனிதர்களை மதிக்கவோ அல்லது புரிந்து கொள்ளவோ முடியாத அளவு தலைக்கனம் பிடித்தவன் என்பதை சங்கர் உணர்வான். ஆனாலும் அவர்கள் சினேகிதர்கள். நாட்டை விட்டோட, யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு வந்தபோது சங்கர் மனோகரனைச் சந்தித்தான். அவனும் நாட்டை விட்டோடும் முயற்சிகளில் அலைந்துகொண்டிருந்தான். தான் ஒரு இயக்கத்திலிருந்ததாகவும் இப்போது இவனை எதிரிகள்’போட்டுத் தள்ளத்’ தேடித்திரிவதாகவும் அதனால் நாட்டை விட்டோட அவன் நாயாய் அலைந்து கொண்டிப்பதாகச் சங்கருக்குச் சொன்னான்.

இலங்கையிலிருந்து வெளிநாடு செல்ல, ஏஜென்சிக்காரனைத்தேடி அவனிடம் பணம் கொடுத்து. அதைத் தொடர்ந்து பல விமானங்கள் ஏறி, பல ஆபிரிக்க நகர்கள் கண்டு லண்டன் எயார்போர்ட்டுக்கு வந்ததம் தங்கள் பாஸ்போர்ட்டைக் கிழிந்தெறிந்து விட்டு அகதிகளாக இங்கிலாந்தில் கால்பதிக்கும்வரை ஒன்றாகத்திரிந்தவர்கள்.

இப்போதும் தோழமை, அத்துடன் ஒருத்தருக்கொருத்தரான உதவிக்காக ஒன்றாக வாழ்பவர்கள்.

ஓரு மனிதனின் படிப்பு,படித்தவர்களின் ஆலோசனைகள்,புத்திசாலிகளுடனான நட்பு என்பன அவனின் சிந்தனையைச் சீராக்குகின்றன என்பது சிவசங்கரனுக்குத் தெரிந்தாலும் தன்னுடன் வாழும் மனோகரனின் பிற்போக்குத்தனமான சிந்தனைகளைப் பெரிதுபடுத்தாமல் வாழப் பழகிக்கொண்டான்.

லண்டனில் வந்திறங்கி புதிய சூழ்நிலை, புதியவாழ்க்கைமுறைகளைக் கிரகிக்க மிகவும் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும்போது தன்னுடன் வந்த,கிட்டத்தட்டத் தன்னை மாதிரியே லண்டன் அனுபமுள்ள மனோகரனைத் தவிர்த்துக்கொள்ள சங்கர் விரும்பவில்லை.மனோகரனின் பெண்கள் பற்றிய அல்லது தமிழ்த்தேசியம் பற்றிய வியாக்கியானங்கள் எரிச்சலைத் தந்தாலும் அவற்றைப் பொறுக்கப் பழகிக்கொண்டான்.

சிந்தியா சிவசங்கரனின் வாழ்க்கையில் நுழைந்தபோது சங்கருக்;கு அந்த புதிய அனுபவம் ஒரு புத்துணர்வைத் தந்தது. மனோகரனிடமிருந்து மனதளவில் தப்ப ஒரு வழிவந்தது அவனுக்குச் சந்தோசமாகவிருந்தது.

அவளைக் கண்டதும் பழகத் தொடங்கியதும் கனவுபோலிருக்கிறது.

லண்டனுக்கு வந்த நாளிலிருந்து, லண்டனின் மத்தியிலுள்ள ஒரு சீக்கிய முதலாளியின் கடையில் வேலை செய்கிறான்.இலங்கையில் பெரிய படிப்பு படிக்காத பையன்கள்செய்யும் கடையில் எடுபடிசெய்யம் வேலையை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் படித்த படிப்பை, சிங்கள அரசின் கெடுபிடியால் அரைகுரையாக முடித்துக்கொண்டு, உயிர் தப்ப நாட்டை விட்டோடி வந்த சங்கர் செய்கிறான்.

சுpவசங்கர் ஒரு சாதாரண ஆசிரியரின் மகன். அரசியல் என்று அலையாமல் பல்கலைக்கழகத்தில் தனது எதிர்கால மலர்ச்சியைக் கனவு கண்டுகொண்டு படிக்கும் காலத்தில், அவன் ஏதோ ஒரு இயக்கத்திலிருப்பதாக அரசாங்க புலனாய்வுத் துறைக்கு யாரோ ‘அள்ளி வைக்க’ அவனும் உயிரைக் காப்பாற்ற, பெற்றோர் உற்றோரைவிட்டு ஓடவேண்டி வந்தததை அவளுக்குச்; சொன்னான்.

அப்பாவின் உபதேசம், அம்மாவின் அழுகை சகோதரிகளின் நகைகள் எல்லாம் சேர்த்து அவனை லண்டனுக்கு அனுப்பி வைத்திருக்கிறது.

குடும்பப்பொறுப்பும் ஏஜென்சிக்காரனுக்குக்கொடுக்கவேண்டிய கடனும் கொடுக்க அவன் மாடாக உழைத்தான்.சீக்கிய முதலாளி ஒருநாளைக்கு அவன் செய்யம் பன்னிரண்டு மணித்தியால வேலைக்கு பதினைந்து பவுண்ஸ்கள் தருவதாகச் சொன்னபோது, ஆறுநாள் வேலைக்குத் தொண்ணூறு பவுண்ஸ்கள் கிடைத்தால், அதில் வாடகைக்கும் சாப்பாட்டுக்கும் நாற்பது பவுண்ஸ்கள் போனாலும் ஐம்பது பவுண்ஸ்கள் மிச்சம் பிடித்து எப்படியும் கடன்களை கொஞசம் கொஞசமாக அடைக்கவேண்டுமென்று கஷ்டப்பட்டான்;.

வாழ்க்கையில் எத்தனையோ கஷ்டப்பட்டு உயிர் தப்பிவரும் இலங்கைத் தமிழ் இளைஞர்களைச் சுரணடும் இந்திய முதலாளியை மனோகரன் வழக்கம்போல் திட்டித் தீர்த்தான்.

சீக்கிய முதலாளியின்; கடை, லண்டனின் மத்தியிலிருக்கிறது.உல்லாசப் பிரயாணிகளுக்கக் கவர்ச்சியான பொருட்களை விற்கும் கடை. ஓரே பிசியாகவிருக்கம். சங்கரின்வேல. பெட்டிகளில் வரும் சாமான்களை எடுத்து அடுக்கி வைப்பதாகும். பெரிய பெட்டிகளைத் தூக்குவதும் அடுக்குவதுமான கஷ்டமான வேலை செய்து விட்டு முதுகு வலியுடன் வீட்டுக்கு வரும்போது, எப்படி எனது கடனை அடைக்கப்போகிறேன் என்று அவன் பெருமூச்சு விடுவான்.

இப்படியான இயந்திர வாழ்க்கை வாழ்வதில் எந்த அர்த்தமும் இருப்பதாக அவனுக்குத் தெரியவில்லை.

அவன் பல்கலைக்கழக மாணவனாக இருந்த காலத்தில்,படித்து ஆளாகி, குடும்பத்தைக் கரையேற்றியபின் தான் ஒரு (அழகிய) பெண்ணைத் திருமணம் செய்து சந்தோசமாக வாழவேண்டுமென்ற பெரும்பாலான இளைஞர்களைப் போலப் பல கற்பனைகள் செய்தான்.அவையெல்லாம் லண்டன் வந்து ஒரு கடையில் வேலைசெய்யும்போது தகர்ந்து விட்டதாக உணர்ந்தான்.

‘ போடா மடையா, இலங்கையில படித்துப் பட்டம் பெற்றாலும் அவர்களுக்கு பெண்கொடுக்காத பெரிய பணக்காரர்கள் லண்டனில் வாழும் மாப்பிள்ளை என்ன வேலை செய்தாலும் பரவாயில்லை என்று இலட்சக்கணக்கில் சீதனம் கொடுத்துத் தங்கள் அழகிய பெண்களை திருமணம் செய்து கொடுக்க விழுந்தடித்து முன்வருகிறார்கள்’ மனோகரன் பெருமையுடன் சொன்னான்.

சுpவசங்கரனோ முன்பின் தெரியாத பெண்ணைச் சீதனத்துக்காகத் திருமணம் செய்வதில்லை என்று சொன்னபோது மனோகரன் ஓஹோ என்று சத்தம்போட்டுச் சிரிக்கத் தொடங்கிவிட்டான்.

‘ நீ வாழத்தெரியாத ஒரு முட்டாள்’ என்று சிவசங்கரைச் சீண்டினான் மனோகரன்.

மனோகரன் இப்படிப் பேசும்போது தனது கோபத்தை மிகக் கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டான் சிவசங்கர்.

எப்படியும் உழைத்துத் தன் பொறுப்புக்களைத் தீர்த்துவிட்டுச் சுதந்திரமாக வாழ தன்னால் முடியுமட்டும் கடினமாக உழைத்தான் சிவசங்கர்.அவன் ஒருநாள் வேலையால் களைத்துப்போய், வீட்டுக்கு வருவதற்கு பஸ் ஸ்டாப்பில் காத்திருக்கம்போது,’ஹலோ பிரதர்’என்று சொல்லிக்கொண்டு மூன்று கறுப்பு இளைஞர்கள் அவனை வளைத்தார்கள்.அவனுக்குப் பயத்தில் வயிற்றில் புழு நெழியத் தொடங்கி விட்டது.

ஆசிய நாட்டு மக்கள் தங்க நகை அணிந்துகொண்டு திரிபவர்கள் என்று கறுப்பு,வெள்ளையினக் குண்டர்கள் அவர்களைக் கொள்ளையடிப்பது லண்டனில் அடிக்கடி நடக்கும் விடயமாகும்.

வந்திருந்த மூவரில் ஒருத்தன், ஏதோ தான் வாங்கிக்கொடுத்த செயினைத் தடவுவதுபோல் சங்கரின் கழுத்தைத் தடவி அவன் போட்டிருந்த தங்கச் சங்கிலியை இழுத்தான். அது அவனின் அம்மா பிள்ளையார் பதக்கத்துடன் மகனுக்குப் போட்ட சங்கிலி. கறுப்புக் கொள்ளைக்காரன் கையில் பிள்ளையாhரின் பதக்கம் பதித்த சங்கிலி பளபத்தது.

இன்னொருத்தன் சங்கரின் மாமா பரிசாகக்கொடுத்த விலையுயர்ந்த கைக்கடிகாரத்தைத் தன்னுடைய மணிக்கட்டில் கட்டிக்கொண்டான். மற்றவன் அவனது ஜக்கட் பாக்கட்டுக்கள்ளிருந்து அவனது பர்சை எடுத்தான்.நேரம் இரவு பத்து மணி. அவர்கள் கொள்ளையடிப்பது மட்டுமல்ல, மிகக் கொடுமையாகத் தாக்குபவர்கள் என்றும் பத்திரிகைச் செய்திகளில் வரும். மோசமாகத் தாக்கப்பட்டு இந்த வழிப்பறிக் கொள்ளையர்களால் உயிரிழந்த சிலருமுண்டு.

அவன் கையில் அவனது மாமி போட்ட மோதிரத்தைக் கழட்ட அவர்கள் சிரமப்பட்டார்கள்.அவன் விரலில் இறுக்கமாக மோதிரம் போட்ட குற்றத்திற்காக அவன் முகத்தில் ஒரு குத்து விழுந்தது.

அவர்கள் எதையாவது எடுத்தாலும் பரவாயில்லை, தன்னை உயிருடன் விட்டாற்போதும் என்ற சங்கர் கடவுளை வேண்டிக்கொண்டான்.

இத்தனை நிகழ்ச்சியும் ஒரு சில நிமிடங்களில் நடந்து முடிந்து விட்டது.

அப்போது சட்டென்ற இரு போலிஸ் கார்கள் இருபக்கத்தாலும் வந்து அந்தக் கறுப்புக் கொள்ளைக்காரர்கள் தப்பி ஓடாதவாறு வளைத்தது. படபடவென சில போலிசார் இறங்கினார்கள். கறுப்பு இளைஞர்கள் இந்த அதிரடிப் போலிசாரின் வருகைiயால் கலங்கிவிட்டார்கள். போலிசார் ‘உனக்கு என்ன நடந்தது?’ என்ற சங்கரைக் கேட்டார்கள்.

அவன்,அவர்கள் அவனிடமிருந்து பறித்தெடுத்த அம்மா போட்ட பிள்ளையார் பதக்கமுள்ள தங்கச் செயின், மாமா தந்த கைக்கடிகாரம், பர்சிலிருந்து எடுக்கப்பட்ட இந்த வாரச்சம்பளம், அதில் சரியாக எவ்வளவு இருக்கிறது என்பது பற்றிய எல்லாவற்றிற்கும் சரியான விளக்கம் சொன்னான்.

போலிசார் வழிப்பறியாளர்களைச் சோதனை போட்டபோது அவன் குறிப்பிட்ட அத்தனையையும் எடுத்தார்கள். அத்தனையையும்,அவர்களின் விசாரணை முடிந்ததும் போலிஸ் ஸ்ரேசனினுக்கு வந்து எடுக்கலாம் என்ற சொல்லிவிட்டுப் போலிசார் வழிப்பறிசெய்தவர்களைத் தங்கள் போலிஸ்; காரில் ஏற்றிக் கொண்டுபோனார்கள்.

அடுத்த நாள் பயத்துடன் அதே பஸ் ஸடாப்புக்கு வந்தபோது,’ஹலோ’ என்று தன்னையழைத்தபெண்ணைப் பார்த்தான் சங்கர்.அவளை இந்த நேரத்தில் எத்தனையோதரம் இந்த பஸ் ஸடாப்பில் கண்டிருக்கிறான்.

அவன் இரவு பத்து மணிவரைக்கும் வேலை செய்து விட்டு வரும்போது அவளும் வருவாள்.

அவள் எங்கே வேலை செய்கிறாள் என்ற அவனுக்குத் தெரியாது.

அவன் லண்டனுக்கு வந்து சொற்ப மாதங்களே. அதனால் பல விடயங்களை இப்போதுதான் புரிந்து கொள்ளத் தொடங்கியிருக்கிறான்.

அவள் அந்தப் பகத்தில், எங்கு,என்ன வேலை செய்கிறாள் என்று கேட்க அவனுக்குத் துணிவில்லை. அவன் வேலை செய்யும் கடைக்கு வரும் வெள்ளையினப் பெண்களுடன் ஏதோ ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசியதைத் தவிர அவனுக்குப் பெண்களுடன் பழகிய அனுபவமில்லை.

‘எனது பெயர் சிந்தியா ஸடிவன்சன்’ அவள் தன்னை அறிமுகம் செய்தகொண்டாள்.

அவள் அழகான பெண் என்று அவனுக்குத் தெரியும். அடக்கமாக உடுத்திருப்பாள் பெரும்பாலான ஆங்கில இளம்பெண்கள்போலல்லாது மிகவும் அமைதியான பெண்ணாகத் தெரிந்தாள்.அவள் தன்னுடன் வலிய வந்தபேசியது அவனுக்கு ஆச்சரியமாகவிருந்தது.

அவன் தன் பெயரைச் சொன்னான்.

‘இரவில் இந்தப் பக்கத்தில் கவனமாகத் திரியவேணும்.. நல்லகாலம் நேற்று போலிசார் பக்கத்தில் ரோந்து போனதால் நீங்களும் உங்களது உடமைகளும் தப்பியது’ அவள் அவனுடன் பலகாலம் பழகிய மாதிரிப் புத்தி சொன்னாள்.

‘நேற்ற நடந்தது இவளுக்கு என்னவென்ற தெரியும்?’ அவன் தனக்குள் யோசித்தான்.அவனது ஆச்சரியம் அவளுக்குப் புரிந்தது.

‘நான் வரும்போது அவர்கள் உங்களை வழிப்பறிசெய்வதைக் கண்டு அந்த டெலிபோன் பூத்திலிருந்து போலிசுக்குப் போன் பண்ணினேன்’ என்றாள்.

அவன் அவளை நன்றியுடன் பார்த்தான்.அழகிய தேவதை தனக்குத் தரிசனம் தருவதுபோலிருந்தது.

‘ இந்த இடம் சோஹொ என்ற மிகவும் பிரசித்தமான இடம். டுரிஸ்டுகளும், நாடகக்கொட்டகைகளும், சினிமாத் தியேட்டர்களும், விபச்சார விடுதிகளும் நிறைந்த இடம். பிக் பாக்கட்டுகளும் வழிப்பறிக் கொள்ளையர்களையும் பிடிக்க இந்தப் பக்கப் போலிசார் மிகவும் திறமையான போலிஸ் படை வைத்திருக்கிறார்கள்’ அவள் சொல்லிக் கொண்டே போனாள்.

அப்படியான இடத்தில் இரவு பத்து மணிவரைக்கும் இவள் என்ன செய்கிறாள்?

‘என்ன செய்வது பரவாயில்லாத சம்பளத்தில் வேலை கிடைத்தபடியால் இந்த ஏரியாவில் செய்கிறேன்’ அவன் கேட்காமலே அவள் பெருமூச்சுடன் சொன்னாள்.

அதன்பின் அவர்கள் சந்திக்கும்போது ‘ஹலோ’வுக்கு அப்பால் பேசத் தொடங்கிக் கிட்டத்தட்ட தங்கள் வாழ்க்கை சுய சரிதத்தையே ஒருத்தருக்கு ஒருத்தர் சொல்லிக் கொண்டார்கள்.

அவள்.அந்த இடத்துக்கு அண்மையிலிருக்கும் ஒரு கலைக் கல்லூரி மாணவி என்றும் ஒரு சோஹோ நைட்கிளப்பில் றிசப்ஸனிஸ்டாக மாலை ஏழமணியிலிருந்து பத்து மணிவரைக்கும் பார்ட் ரைம் வேலை செய்வதாகவும், தான் இருக்கும் இடத்திறகு அருகில் இதைவிட நல்லவேலை கிடைத்தால தான் இந்த வேலையை விடுவதாகவும் சொன்னாள்.

அவன் தானொரு பல்கலைக்கழக மாணவனாக இருந்து அரசியற் பிரச்சினைகளால் படிப்பை நடுவில் முறித்துக்கொண்டு, லண்டனுக்கு வந்து வாழ்க்கைப் பிரச்சினையால்; ஒரு கடையில் ஒரு நாளைக்குப் பன்னிரண்டு மணித்திலயாங்கள் வேலை செய்வதாகத் தன் துயர் சொல்லி ஒப்பாரி வைத்துக்கொண்டான்..

மனோகரனிடம் மனம்விட்டுச் சொல்ல முடியாத துக்கத்தை அவளிடம் சொல்லவேண்டும்போல் வந்த உணர்வை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.

சிவசங்கரனை வழிப்பறி செய்ய வந்தவர்களையும் அவர்களிடமிருந்து காப்பாற்ற சிந்தியா செய்த உதவியையம் மனோகரனுக்குச் சொன்னபோது மனோகரன் சிவசங்கரை ஏற இறங்கப் பார்த்தான். ‘ சோஹோ என்ற இடத்தில அவள் நடுச்சாமத்தில் ஏன் வந்தாள்?’என்ற ஒருவிதமாகப் பார்த்துக்கொண்டு கேட்டான்.

சுpவசங்கர், சிந்தியா ஒரு நைட்கிளப்பில் றிசப்ஸனிஸ்டாக இருப்பதையும் அப்பாவித்தனமாகச் சொல்லிவிட்டான்.

சோஹோ தெருக்களில் ஒருபவுணுக்கு யார் பின்னாலும் போகத் தயாராகவிருக்கம் பெண்களைப் பற்றி ஒரு பெரிய பிரசங்கம் செய்தான் மனோகரன்.

விழியால் மருட்டி, முலையால் மயக்கும் பெண்களைப் பற்றி மனோகரன் செய்த வியாக்கியானத்தில்; சிந்தியா செய்த உதவியையும் ஒருகணம் மறந்தான் சிவசங்கர்.

அவள் அன்று உதவி செய்திருக்காவிட்டால் சிவசங்கருக்க என்ன நடந்திருக்கும் என்ற அவனாற் கற்பனையும் செய்யமுடியவில்லை.

அத்துடன் அவள் ஒருமாணவி, லண்டனில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் மாதிரி அவளும் பார்ட் ரைம் வேலை செய்து உழைக்கிறாள். அவள் நைட் கிளப்பில் வேலை செய்தால் என்ன ஒரு நாடகத் தியேட்டரில் வேலை செய்தால் என்ன?.உழைத்தப் பணம் சேர்த்துத் தன் படிப்பைத் தொடரும் ஒரு மாணவியை இப்படித் தரக்குறைவாக எடைபோடவேண்டுமா?

மனோகரன், தனது நண்பன் வழிதவறிப் போகாமலிருக்கத் தன்னால் முடியுமட்டும் உதவி செய்யப் போவதாகச் சபதம் செய்து கொண்டான்.

அதன்பின் மனோகரனிடம் சிந்தியாவைப் பற்றிச் சொல்வதைப் பெரும்பாலும் தவிர்த்துக்கொண்டான்.

‘வெளிநாட்டார் பேயர்கள் மடையன்கள் என்று பெரும்பாலான ஆங்கிலேயர்கள் நினைக்கிறார்கள். இவளும் உன்னுடன் விளையாடிவிட்டுப் பேய்க்காட்டி விட்டுப் போவாள் கவனமாக இரு’மனோகரன் மிகவும் அக்கறையாகத் தனது நண்பனுக்குப் புத்தி சொன்னான்.

அவன் ஏன் அப்படியெல்லாம் கற்பனை செய்கிறான் என்று சிவசங்கருக்குப் புரியவில்லை;.

அவளோ அல்லது அவனோ ‘ஏதோ’விளையாட்டகளில் ஈடுபடவில்லை. அப்படியான உறவு வளர்வதாகச் சிவசங்கருக்குப் புரியவுமில்லை.

சிவசங்கரும் சிந்தியாவம், சந்தித்துக் கொள்ளும்போது பெரும்பாலும் தங்கள் வேலை விடயங்களைப் பற்றிப் பேசி தாங்கள் கஷ்டப்பட்டுவேலை செய்யும் துயரத்தைப் பகிர்ந்து கொள்வார்கள்.

ஆனால் அவளைக்காணாமல் ஒருநாளும் இருக்கமுடியவில்லை என்ற உள்ளுணர்iவுயோ அல்லது அவளை அடிக்கடி நினைத்துக்கொள்ளும் தனது மனவோட்டத்தையோ அவன் மனோகரனுக்குச் சொல்லவில்லை.

தனது வாட்டசாட்டமான தோற்றத்தைக் கண்ணாடியில் பார்க்கும்போது சிந்தியா அவனைப் பார்த்த விதம் அவனுக்குப் புரியாமலில்லை.

‘அண்ணா நீங்கள் அழகான ஆண்பிள்ளை’ என்ற அவனின் சின்னத் தங்கை பெருமைப்பட்டதை அவன் மறக்கவில்லை.

சுpந்தியா இளமை பொங்கும் கவர்ச்சியான கலைக் கல்லூரி மாணவி. நண்பனின் போக்கில் கண்ட மாறுதல்களை அவதானித்த மனோகரன்,’நைட் கிளப்பில் றிசப்ஸனிஸிட்டாக வேலை செய்பவள் எப்படிக் கற்புடையவளாக இருப்பாள்?’ என்ற ஒரு பெரிய கேள்வியைக் கேட்டான்.

சிவசங்கருக்குக் கோபம் வந்தது. ‘நான் சீக்கிய கடையில் விஸ்கி போத்தல்களுடன் வேலை செய்கிறேன் நான் குடிகாரனில்லை’ என்ற பொருமினான். மனோகரன் சிந்தியாவைப் பற்றி அருவருப்பாகப் பேசியது அவனுக்கு மிகவும் கோபத்தைத் தந்தது.

‘ ஏனடா மச்சான் எகிறிக் குதிக்கிறாய் அவளுக்கு உன்னோட இன்பம் அனுபவிக்க விருப்பமென்பதை அவள்; சாடையாகச் சொன்னால் நீயேன் தயங்க வேணும். அனுபவித்து விட்டு மறந்து விடு’. மனோகரன் மிகச் சாதாரணமாக இருமனித உறவை இப்படி அசிங்கப் படுத்திப் பேசியது சிவசங்கருக்கு ஆத்திரத்தை மட்டுமல்ல அதிர்ச்சியையும் உண்டாக்கியது.

மனோகரன் அடிக்கடி இப்படிப் பேசியதால் சிவசங்கர் மிகவும் குழம்பி விட்டான்.

அடிக்க அடிக்க அம்மியும் நகரும்தானே?

‘மச்சான் அவள் சோசியலாகப் பழக விரும்பினால் அத்தோட சரி;, அளவுக்கு மீறிப்போய் ஆபத்தில் அகப்படாதே’ மனோகரன் முன்னுக்குப் பின் முரணாக ஏதோவெல்லாம் சொல்லிக் குழப்பிக் கொண்டிருந்தான். தான் தனது நண்பனைச் சரியான வழியில் கொண்டு நடத்தவதாக அவன் நினைப்பது சிவசங்கருக்குத் தெரியும்.

மனோகரன் கற்பனை செய்வதுபோல் சிவசங்கரனும் சிந்தியாவும் இதுவரையும் எந்த ‘அந்தரங்க’ உறவும் வைத்துக்கொள்ளவில்லை. அந்த அளவுக்கு அவர்களின் உறவும் வளரவில்லை.

அவள் ஒரு ஆங்கிலேயப் பெண். மிகவும் சுதந்திர உணர்வு கொண்டவள் ஆண்களின் தேவைகளுக்குப் பெண்கள் ஆடவேண்டும் என்ற தத்துவத்திற்கு எதிரானவள்.

இரவு பத்து மணிககு வேலை முடிய தனியாக வீட்டுக்குப்போகும் தைரியமுள்ளவள். தனது அழகை, தான் வேலை செய்யம் நைட் கிளப்புககு வருபவர்கள் வாயுறப் பார்ப்பதைத் தெரிந்தும் தெரியாதமாதிரி எடுத்தெறிந்து விட்டுத் தன் வேலையைச் செய்து விட்டுத் தன் வேலையிற் கவனமாக இருப்பவள்.

இங்கிலாந்தில் தனிமனித சுதந்திரத்துள்ள சட்டபாதுகாப்பகளைச் சரியாக உணர்ந்து கொண்டவள். அளவுக்கு மீறிப்போனால் அடுத்த கணம் சட்டத்தைத் துணையாக அழைக்கத் தயங்காதவள். அதைத்தான் சிவசங்கரரின் பாதுகாப்பக்கும் செய்தாள் அவனை வழிபறிக் கொள்ளைக்காரக் கும்பல் வதைத்தபோது வழிப் போக்கர்கள்போல் ஏனோதானோ என்ற தன்பாட்டுக்குப் போகாமல்,போலிசுக்குப் போன்பண்ணி அவனைபப் பாதுகாத்தவள்.

அதையொட்டி நடக்கவிருக்கும் வழக்கில் சாட்சியாக வந்து சிவசங்கருக்கு உதவப்போகிறவள்.

மனோகரன், கற்பனைசெய்யும் ‘இனிய அனுபங்களை;மிகச் சுலபமாக அவளுடன் நடைமுறைப் படுத்தலாம் என்பது முடியாத காரியம்.

சிவசங்கரன், ஒரு பழமையான தமிழப்பண்பாடுகளை இறுக்கிப் பிடிக்கும் கவுரமான ஆசிரியரின் மகன். பெண்களை மதிக்கவேண்டும்,பாதுகாக்க வேண்டும் என்று அவன் தாய் தகப்பனிடமிருந்து படித்துக்கொண்டவன்.

சந்தர்ப்ப சூழ்நிலையால்,’செக்ஸ்’ வியாபாரத்தின் முன்னிடமான ‘சோஹோ’ என்ற தர்மசங்கடமான இடத்தில் பெட்டிகள் தூக்கியடுக்கும் வேலைசெய்யும் பழைய பல்கலைக்கழக் மாணவன். ஆவனுக்குச் சிந்தியாவைப் பிடிக்கும் என்பது ஏனோதானோ என்ற வித்தில் சொல்வது அவன் மனதில் அவள் எடுத்தக்கொண்ட இடத்தை அவமானம் செய்வதாக அவன் நினைக்கிறான்.

மனோகரன் நினைப்பதுபோல் அவர்களின் உறவு இதுவரை எந்தப் பரிமாண வளர்ச்சியும் அடையவில்லை.

இருவருக்கும் விடுமுறையான ஞாயிற்றக் கிழமைகளில், பக்கத்திலுள்ள றீஜன்ட் பார்க்கில் ஒன்றாகப் போய் மார்கழிமாதக்குளிரில்,நீண்ட நேரம் நடந்து திரிந்து தங்கள் வாழ்க்கையில் நடந்த சில விடயங்களை, ஆரம்ப உறவு நிலையிலுள்ள பெரும்பாலான சோடிகள்போல் பகிர்ந்திருக்கிறார்கள்.

அவளை லண்டனின் மத்தியில் மிகப் பிரபலமான,’ ரவி சங்கர்’ உணவகத்தற்குக் கூட்டிக்கொண்டுபோனான். சாப்பாடு முடிய அவள் தான் சாப்பிட்ட உணவுக்;குரிய பங்கைக் கொடுத்தபோது அவன் திடுக்கிட்டான்.

; நான்தானே உன்னைச் சாப்பிடக் கூப்பிட்டேன். பில் கொடுப்பது என் பொறுப்பு ‘அவன் தர்மசங்கடத்துடன் முணுமுணுத்தான்’

.

‘ நான் உழைக்கும்பெண். நான் சாப்பிட்டதற்குப் பணம் கொடுக்க வசதியுண்டு’ தனது அழகிய விழிகளையுயர்த்தி அவனுக்குச் சிரித்தபடி பதில் சொன்னாள்.

உன்னுடன் இணைந்துகொள்ளவோ அல்லது நீ என் சுதந்திரத்தைத் தவறுதலாக எடுத்துக் கொள்வதை நான் விரும்பவில்லை’ என்று மறைமுகமாகச் சொல்கிறாளா?

அவனுக்குப் புரியவில்லை.

இன்று மனோகரன் மான்செஸ்டரிலிருக்கும் தனது உறவினர்களின் வீட்டுக்குப் போய்விட்டான்.

அவளைத் தனது வீட்டுக்குக் கூட்டிக் கொண்டுபோய்ச் சமைத்துக் கொடுக்கவேண்டுமென்று ஆசைப் பட்டான்.

அவளும் சரி என்று நீண்ட நேர யோசனையின் பின் சொல்லியிருக்கிறாள்.அவள் இவனின் வேண்டுகோளுக்கு, உடனடியாகச் சம்மதம் தெரிவிக்கவில்லை.

அவள் தயங்கியபோது,’என்னில் நம்பிக்கையில்லையா?’ சிவசங்கர் வாய்விட்டுக் கேட்டுவிட்டான்.

‘அப்படியெல்லாம் சொல்லவேண்டாம்’ என்று மழுப்பினாள்.

கொஞ்ச தயக்கத்தின் பின் இவனின் வீட்டுக்குச் சாப்பாட்டுக்குவரச் சம்மதித்தாள்;.

அவளுக்காகச் சிவசங்கர் காத்திருக்கிறான். மழையையும் குளிரையும் பொருட்படுத்தாமல் மனதில் பொங்கும் பல உணர்வுகளுடன் அவளுக்காகக் காத்திருக்கிறான்.

‘இறுக்கமாகவும் நெருக்கமாகவும் பழகச் சந்தர்ப்பம் வந்தால் விடாதே,ஆனால் பிடி கொடுக்காமல் நடந்து கொள்’ மனோகரன் தானொரு பாலியல் பேராசிரியர் மாதிரிச் சிவசங்கரின் காதல் எப்படி நடைமுறைப் படுத்தப்படவேண்டும் என்று புத்தி சொன்னான்.

மனோகரன் தன்னிடமுள்ள உண்மையான சினேகிதத்திற் சொல்கிறானா அல்லது மனோகரனுக்கு ஒரு பெண் சினேகிதிகளுமில்லாத ஆதங்கத்தில் சிவசங்கரைக் குழப்புகிறானா என்று அவனாற் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஆனாலும் அவளைக் கண்டதும் அவனைப் பற்றிப் பல விடயங்களை அவளுடன் பகிர்ந்து கொள்ளவேண்டுமென்று அவன் நினைத்தான் லண்டனுக்கு வர அவன் பட்ட கடன், குடும்பப் பொறுப்பக்கள் முடியவிட்டுத் தானும் படித்து லண்டனில் ஒரு பட்டதாரியாக வரும் தன் இலட்சியத்தை அவளுக்குச் சொல்லவேண்டுமென்ற நினைத்தான்.லண்டனில் அவனது உப்புச் சப்பற்ற வெற்று வாழ்வுக்கு அவள் ஒரு கலங்கரை விளக்காக வந்திருக்கிறாள் என்ற அவனது உண்மையான உணர்வை அவளுக்குக் கட்டாயம் சொல்லவேண்டும் என்ற நினைத்தான். அப்படிச் சொன்னால்,அவன் எவ்வளவு தூரம் அவளை நெருங்கிப் பழக விரும்புகிறான் என்பதை அவள் புரிந்து கொள்வாள் என்ற அவன் நம்பினான்.

மனோகரனிடம் அவற்றையெல்லாம் அவன் பகிர்ந்து கொள்வது கிடையாது.

அவனுக்குத் தான் சிந்தியாவைச் சாப்பாட்டுக்க அழைத்ததசை; சிவசங்கர் சொன்னான். சிவசங்கர் ஏன் புதிய சாப்பாட்டுத் தட்டுகளை வாங்கினான் என்ற மனோகரன் கேள்விக் குறியுடன் பார்த்தபோது, வேறு வழியில்லாமல் சிவசங்கர் உண்மையைச் சொல்லவேண்டி வந்தது.

அதைக்கேட்டதும் மனோகரனின் முகத்தில் பரவிய உணர்வு அவனது பொறாமையா அல்லது கிண்டலா என்று சிவசங்கருக்குப் புரியவில்லை.

‘ஐ லவ் யு என்று சொன்னால் இவளவை ஆரோடும் படுத்துப்போட்டுப் போவாளவை, உனக்குப் பெரிய பொறுப்புக்கள் இருக்கிறது என்பதை மறந்துபோகாதே ‘ மனோகரன் பெரிய அனுபவசாலியாகச் சொன்னான்.

சுpவசங்கர் தனது பாலியவயதில், சுரப்பிகளின் தூண்டுதல்களால், கோயிற் திருவிழாக்களிலும், நெருக்கமான கடைத்தெருக்களிலும் சாடையாக ‘உரஞ்சிப் பார்த்த’ குறும்புத்தனமான சேட்டைகள் ஞாபகம் வந்தன. சிந்தியாவுடன் பழகும்போது அப்படியொரு சேட்டைத்தனமான உணர்வுகளும் அவனுக்கு வரவில்லை.

மனோகரன் சொல்வதுபோல், அவனின் பாலியல் வெறிக்கு அவனுடன் அன்புடன்(?,), நேசத்துடன்(?),முக்கியமாக மரியாதையுடன் அவளைப் ‘பாவிக்கப் பார்க்கும்’ எந்த யோசனையும் எள்ளளவும் அவன் மனதிற் கிடையாது.

ஆனால் அவளில் அவனுக்குண்டான நுண்ணியமான இணைவான நெருக்கத்தை அவன் மறுக்கத் தயாராகவில்லை.

அவள் இன்னும் வரவில்லை. மழை சோ எனப் பெய்து கொண்டிருக்கிறது. வரமாட்டாளா? அவன் மனம் சிறகடித்தது.

என்னில் அவளுக்கு நம்பிக்கையில்லையா?

நான் கண்ணியமற்றவன் என்ற அவள் நினைக்குமளவுக்கு நான் பழகவில்லையே? அவன் பல கேள்விகளைத் தனக்குள் கேட்டுக் கொண்டான்.

அவன் தனது கேள்விகளுக்கு மறுமொழி தேடமுதல் அவள் மழையில் குடையைப் பிடித்துக்கொண்டு வருவது தெரிந்தது.

‘வெரி சாரி சங்கர்’ அவள் குடையை மடித்துக் கொண்டு சொன்னாள். அவள் முகத்தில் விழுந்த சில மழைத்துளிகள் முத்துக்களாக அவள் கன்னங்களில் உருண்டன.

அவன் கடிகாரத்தைப் பார்த்தான்.

‘ ஐ ஆம் வெரி சாரி’ உண்மையான மன்னிப்புக் கேட்கும் அவள் குரலில் அழகிய வீணையொலித்தது.

அவன் மறுமொழி சொல்லாமல் அவள் கன்னத்தில் உருளும் மழைத்துளிகளைப் பொறாமையாகப் பார்த்தான்.

அவள் தர்ம சங்கடத்துடன்,’ எதாவது குடிக்கப் போவோமா?’ அவள் பார்வை பக்கத்திலிருந்த ‘பப்பில்’ பதிந்தது.

அங்கு போனதும் அவன் தனக்கு பியரும் அவள் ஆரன்ஞ் சாறும் ஓர்டர் பண்ணிக் கொண்டார்கள்.

கடந்த ஒன்றிரண்டு மாதங்களில் சிலவேளைகளில் இப்படி அவர்கள் ஒன்றாகப் ‘பப்புக்குப்’ போயிருக்கிறார்கள்.

‘சங்கா’ அவள் குரலில் தயக்கம்.

அவன் அவளை ஏறிட்டுப் பார்த்தான்.

;நான் உன்னுடன் உனது வீட்டுக்குச் சாப்பிட வராவிட்டால் கோபித்துக் கொள்ள மாட்டாயே?’

அவன் தனது அதிருப்தியை மறைத்துக் கொள்ளத் தர்மசங்கடத்துடன் ஒரு புன்முறுவலைத் தன் முகத்திற் தவழவிட்டான்.

‘நான் உன்னைக் கட்டாயப் படுத்தவில்லையே’ அவன் எதிர்பார்ப்புக்குக் கிடைத்த ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு சொன்னான்.

அவன் ஒரு நடிகனல்ல. அவனது ஏமாற்றத்தை அவள் புரிந்து கொண்டாள்.

‘நான் நீண்டநேரம் யோசித்தேன்’ அவள் அவனை நேரே பார்த்துக்கொண்டு சொன்னாள். அவள் கண்கள் அழகானவை. பளிங்குபோன்ற அவள் முகத்தில் பதித்து வைத்த வைரம்மாதிரி அவனைப்பார்த்தன.

‘எதைப்பற்றி’

‘எங்களைப்பற்றி’ அவள பார்வை அவனில் இறுக்கமாகப் பதிந்து கிடந்தது.

‘எங்களைப்பற்றியா?’ அவன் குரலில் அவள் அவனையிணைத்து ‘ எங்களைப் பற்றியது’ என்ற சொன்னது அவனை நெகிழப் பண்ணியது.

‘ஆமாம் எங்கள் உறவைப் பற்றி’ அவள் அழுத்தமாகச் சொன்னாள்.

‘ நான் உன்னைச் சாப்பிடத்தான் என் வீட்டுக்கு அழைத்தேன்’ அவனுக்கு அவளின் பேச்ச தர்மசங்கடத்தையுண்டாக்கியது. மடமடவென்ற பியரைக் குடித்தான்.

‘கட்டிலுக்க வரச்சொல்லிய இன்விட்டேஷன் உனது கண்களிற் தெளிவாக இருந்தது’ அவள் நிதானமாக அவனைப் பார்த்தபடி சொன்னாள். அதற்காக நான் உன்னில் கோபப்படவில்லை என்ற மறைமுக ஆறுதல் அவள் தொனியில் பிரதிபலித்தது.

அவன் மௌனமானான். கொஞ்சம் புத்திசாலியாக இருந்திருக்கக் கூடாதா? தன்னைத்தானே தன் மனதில் திட்டிக் கொண்டான்.

‘சாரி சங்கர் நான் இப்போது உனது வீட்டுக்கு வரமுடியாது’

‘ ஏன் என்ற தெரிந்து கொள்லாமா?’ அவனது ஏமாற்றத்தை, அவமான உணர்வை மறைத்துக்கொண்டு அவன் கேட்டான்.

‘ நாங்கள் இப்போது நல்ல சினேகித்களாகப் பழகுகிறோம்..அப்படியே கொஞ்சக் காலம் இருக்கமுடியாதா?’

அவள் குரலில் ஏதோ ஒரு கெஞ்சல். வாழ்க்கை முழுதும் நல்ல சினேகிதர்களாக இருக்க முடியாதா என்று அவள் கேட்கவில்லை. கொஞ்ச காலம் இப்படியே இருக்க முடியாதா என்று கேட்கிறாள்.

‘ சிந்தியா ஐ லவ் யு’ அவன் பட்டென்று சொன்னான்.அவனையறியாமல் துள்ளி வந்த வார்த்தைகளின் பிரதிபலிப்பு எப்படியிருக்கும் என்று அவன் சிந்திக்கவில்லை. சிந்திக்கும் மனநிலையிலும் இல்லை.

அவன் அப்படிச் சொல்லவேண்டுமென்று கனவிலும் நினைத்திருக்கவில்லை. அநியாயமான மனோகரன் அப்படித்தானே சொல்லச் சொன்னான்ஃ

அப்படிச் சொல்வதற்கான விதை விதைத்த மனோகரனிலும், அதைத் தன் மனதிலிருந்து அகற்றாமலிருந்த தன்னிலும்; அவனுக்குக் கோபம் வந்தது.

அவன் அப்படிச் சொன்னதும் அவள் ஒருதுளியும் பதற்றப் படாமல் அவனை அன்புடன் பார்த்தாள்.

‘சிவசங்கர் லவ் இஸ் வெரி ஸ்பெசியல்’ அவள் கொஞ்ச நேரம் மௌனமானாள். இருவரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொள்ளவில்லை.

அவனுக்கு அங்கிருப்பதே தர்மசங்கடமாகவிருந்தது.

‘காதல் உடம்பின் இணைவு மட்டுமல்ல.. உள்ளங்களின் இணைவு’

உறவுகளை. இணைவுகளை, பாலியல் செயற்பாடுகளை ஆண்களின் பார்வையில், பரிணாமத்தில் பார்த்தும் வழக்கப்படுத்தியும் வந்த கலாச்சாரத்திலிருந்த சிவசங்கர் ஒரு மாணவன் மாதிச் சிலையாக அமர்ந்திருந்த அவள் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தான்.

(தாயகம் -கனடா பிரசுரம்-1.1.1993. இந்தக் கதை ‘ஐ லவ் யு’ என்ற பெயரில் வெளிவந்தது. சில திருத்தங்களுடன் மேற்கண்ட தலையங்கத்துடன் எழுதப் பட்டிருக்கிறது)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *