1.
கண்களை திறக்க முடியவில்லை.உடலெங்கும் பரவிய வலி கண்களில் குவிந்திருந்தது. பலமான காற்று வீசுவதும் மரக்கிளைகள் வேகமாய் அசைவதும் உணர முடிந்தது. மிகுந்த வலியுடன் கண்களை திறந்து பார்த்தான் இராவணன். தான் எங்கிருக்கிறோம் என்பது முதலில் புரிபடவில்லை. காய்ந்த புற்களும் இலவம் பஞ்சைப் போன்ற மென்மையான பொருள் ஒன்றின் மீதும் தான் விழுந்து கிடப்பது தெளிவானது. இரண்டடி தூரத்தில் மிகப்பெரிய மூன்று பழுப்பு நிற முட்டைகள் தென்பட்டபோது பயம் மனதெங்கும் கவியத் துவங்கியது. தடுமாறி எழுந்தவன் அந்த முட்டைகளில் பாதி உயரம் கூட அவன் இல்லையென்பதை உணர்ந்தான். அப்போதுதான் அது ஒரு மிகப்பெரிய கூடு என்பதும் புரிந்தது.முன்னூறு அடி உயர அந்த மரத்தின் உச்சிக் கிளையிலிருக்கும் கூட்டை நோக்கி தன் நீண்ட செட்டைகளை அடித்தபடி பறந்து வந்துகொண்டிருந்தது அந்த ராட்சத காகம். இராவணனுக்கு உடல் நடுங்கி வியர்த்துக் கொட்டியது. ஓடிச்சென்று முட்டைகளின் நடுவில் ஒளிந்து கொண்டான். கண்களை இறுக மூடிக்கொண்டு நின்றவனின் தலையை கொத்தாக கெளவிக்கொண்டு பறந்து சென்று ஒரு குன்றின் மேலிருக்கும் பாறையில் வீசியது. வீச்சின் வேகத்தில் தலைகீழாக செங்குத்தாக சென்று பாறையில் மோதி இராவணனின் முகம் ரத்தக்கூழாகி சிதறியது. முகம் சிதைந்த அவனது உடலைக்கண்டு சிரிக்க ஆரம்பித்தது காகம். திடுக்கிட்டு விழித்த நித்தியாவுக்கு உடலெங்கும் வியர்த்து மூச்சு முட்டியது. இதயம் பலமாக அடித்துக்கொண்டது. ஏனிந்த கொடூர கனவு என்று நினைத்தபடி விடியும் வரை உறங்காமல் கிடந்தாள் நித்தியா.
2.
இரண்டாவது முறையாக அந்த மின்னஞ்சலை படித்தாள் வதனா.
பேரன்புள்ள வதனா,
விலகிச்செல்லல் என்பது அவ்வளவு எளிதல்ல வதனா. இந்த இரு மாத தனிமைத்தவத்திலும் நீங்கள் மட்டும்தானே என்னுடனிருந்தீர்கள். பின்னிரவுகளில் யாருமற்ற அறையில் என்னோடு உரையாட நான் கொண்டிருந்தது உங்கள் நினைவு மட்டும்தானே வதனா? உங்களுக்கு நினைவிருக்கிறதா ஓர் அற்புத ரயில் பயணத்தில்தான் நீங்கள் அறிமுகமானீர்கள். அந்த இரவுப்பயணம் என் மனதெங்கும் சற்றும் மாறாமல் வியாபித்திருக்கிறது. எத்தனை வலியுடன் அன்றிரவு நீங்கள் பேசிய வார்த்தைகள் வெளிக்குதித்தன என்பது நீங்கள் அறியாததா? ஆறுதல் சொல்ல யத்தனிக்கையில் என் வார்த்தைகளைவிட என் எழுத்தே சுமைதாங்குகின்றன என்றீர்கள். உயரமான பாறையொன்றிலிருந்து அசைவற்று கிடக்கும் நீரின் நடுவில் குதிப்பது போலிருக்கும் உங்களது அதீதமான மெளனத்திற்குள் என்னை தொலைக்கும்போது. நான் விரும்பியதெல்லாம் தனிமைதான் வதனா உங்களது வருகைக்கு முன். நீங்கள் சிறியதாய் புன்னகைக்கும் தருணங்கள் ஓர் ஓவியத்தின் ஆழ்ந்த அமைதிபோலிருக்கும்.
மிகக்கொடிய மிருகம் நம் நினைவுகள்தானே வதனா? அந்த கறுப்பு நிற புடவையில் நீங்கள் என் வீட்டிற்கு வந்த நாள் நினைவிருக்கிறதா? சட்டென்று ஒரு மொட்டு மலர்ந்து உதிர்ந்து கருகி மறைகிறது இந்நிமிடம் என்னுள். நான் எதிர்பார்க்காத வாழ்வை எனக்கு பரிசளித்தீர்கள். அது ஓர் அதிசய உலகம். அங்கே நம்மைத் தவிர வேறு மனிதர்களில்லை. ஆளுயர பூக்களும் ஆழ்கடலின் நீண்ட மெளனமும் மட்டுமே நம்முடனிருந்தன. நாம் பேசிக்கொள்வதைவிடவும் பார்த்துக்கொண்டிருப்பதைதானே விரும்பினோம். கைகளில் உங்களை ஏந்திக்கொண்டு எத்தனை தூரம் நடந்திருப்பேன் அக்கடற் கரையில். நீங்கள் கண்கள் மூடி என் மார்பில் புதைந்துகொள்வீர்கள். நீங்கள் விரும்பும் மழையும் அப்பொழுதுதானே பெய்யத்துவங்கும் மனதிற்குள்ளும் கண்களின் இமைகளின் மேலும்.
ஏதேதோ நினைவுகள் இன்று எனக்குள்ளிருந்து மேலெழும்புகின்றன வதனா. ஓர் உயரமான மலையுச்சியிலிருந்து புரண்டு புரண்டு மலையடிக்கு வந்து விழுவதாக தோன்றும் இந்த வினோதத்தின் வலி உங்களுக்கு புரியப்போவதில்லை வதனா.
ஒரு சிறுமியென என் வாழ்வில் நுழைந்து என்னை சிறுவனாக்கி வெளியேறி விட்டீர்கள் வதனா. காயத்தின் வடுவுடன் வாழும் உங்களுக்கு மிகச்சிறப்பாய் காயப்படுத்தவும் தெரிகிறது வதனா. ஒவ்வொரு நட்சத்திரமாய் விழுந்து எரிந்து அணைந்துபோகின்றன. இக்காட்சியை என் யன்னல் வழியே பார்த்துக்கொண்டிருக்கிறேன். கண்கள் மட்டும் நீர் வடித்துக்கொண்டிருக்கிறது. விழுகின்ற நட்சத்திரங்களை அள்ளியெடுத்து நெற்றிமுத்தமிட யார் இருக்கிறார்கள்? வானம் நீங்கியவுடன் மண்ணாகித்தான் போகவேண்டும் போல. உங்களது ஒற்றை மருவுக்கு நானொரு பெயர் வைத்திருக்கிறேன். மிக ரகசியமான அநதப்பெயரை உங்களிடம் கூட நான் சொன்னதில்லை வதனா. அதோ மற்றொரு நட்சத்திரம் வேகமாய் விழுகிறது. மண்ணைத்தொடுவதற்குள் அதனை ஏந்திக்கொள்ள நான் ஓடுகிறேன்.
நிற்காமல் ஓடுகிறேன் வதனா. நீங்கள் வசிக்கும் இடத்திற்கு எதிர்புறமாய் ஓடுகிறேன். என்னருகே ஓடிக்கொண்டிருக்கும் காலம் என் வேகத்தில் தடுமாறி தலைசாய்த்து பார்க்கிறது. காலத்தை முந்தைய எனது ஓட்டத்தில் சற்று தொலைவில் சுற்றிக்கொண்டிருக்கும் உலகமும் ஒரு கணம் நின்று பின் சுற்றுகிறது. உடலெங்கும் நட்சத்திரமாய் உருமாறி நிரந்தர கருமையின் நடுவில் அசைவற்றவனாகிறேன்.
என்றேனுமொரு இலையுதிர் காலத்தின் பின்னிரவில் எங்கேனும் ஒரு நட்சத்திரம் விழக்கண்டால் கைதட்டுவீர்கள்தானே வதனா?
கண்களில் அருவியுடன்,
ராம்.
படித்து முடித்தவுடன் எவ்வித உணர்ச்சிகளும் அவளை ஆட்கொள்ளவில்லை. அவளுக்கு நன்றாக புரிந்திருந்தது எந்த வலை வீசினால் எந்தப் பறவை சிக்குமென்கிற சூத்திர தந்திரம். ராமின் நோக்கம் என்னவென்பது அவளுக்கு நன்றாக தெரியும். லேப்டாப்பை மூடிவிட்டு தன் அறையின் விளக்குகளை அணைத்தாள். ஏசியின் மென்குளிரின் அவளது உடல் லேசாக நடுங்கியது. ஆளுயர கண்ணாடியின் முன் நின்று உற்றுப்பார்த்தாள். அறைக்கு வெளியே நடந்து சென்ற பூனைவொன்று வாலை சடக்கென்று ஒருமுறை உயர்த்தி மிரண்டது.
3.
அந்த பெண்கள் விடுதியின் மூன்றாவது தளத்தில்தான் தங்கியிருக்கிறாள் சித்ரா. விடுதிக்கு பின் நீண்டதொரு ஏரியும் அதைத் தாண்டி சற்று தொலைவில் கரும்பச்சை நிறத்தில் மலைகளும் இருக்கின்றன. சித்ராவுக்கு தன் அறையின் ஜன்னல் வழியே இந்த ஏரியையும் மலையையும் பார்த்துக்கொண்டே இருப்பது பிடிக்கும். ஏரியை சிறுமியாகவும் மலையை யுவதியாகவும் நினைத்துக்கொள்வாள். மலை யுவதியின் முகத்திலும் ஏரிச்சிறுமியின் முகத்திலும் பொழிகின்ற மழையை ரசித்துக்கொண்டே வெகு நேரம் அமர்ந்திருப்பாள்.
இரவு பதினோரு மணிக்கு தசன் அழைத்திருந்தான். இன்னும் பத்து நிமிடத்தில் சித்ராவை கூட்டிக்கொண்டு போவதாக சொன்னான். போனை வைத்துவிட்டு நன்றாக முகம் கழுவிக்கொண்டாள். கட்டிலுக்கு அடியிலிருக்கும் பழைய மரப்பெட்டியை இழுந்து திறந்தாள். அதனுள்ளிருந்து வீசிய வெளிச்சத்தில் அவளது முகமெங்கும் ஒளிர்ந்தபோது ஜன்னலுக்கு வெளியே ஏரியும் மலையும் பயந்த முகத்துடன் அவளது அறையை பார்த்துக்கொண்டிருந்தன.
4.
காரணம் சொல்ல முடியாத துயரத்தில் உன் கண்கள் சிதறிக் கிடக்கும் கடற்கரையை வெறித்துக்கொண்டிருந்தன.
ஆர்ப்பரித்த அலைகள் உனது நீள் மெளனத்தின் அடர்த்தியை புரிந்துகொள்ளமுடியாமல் துடிதுடித்து அடங்கிய பின்னர் என் முகம் பார்த்தாய் நீ. இருள் கவிந்த அந்த கருக்கலில் என்னை நோக்கி மிதந்து வரும் உன் பார்வை பரிதவிப்புடன் கூடிய இயலாமையின் கலவையாயிருந்தது.
நீ அழத் துவங்கி இருந்தாய்.
மேகங்களினூடே பயணித்து பொல்லாத வானத்துடன் சண்டையிட்டு உனக்கென நான்
பறித்து வந்த நிலவுபொம்மை மீது விழுந்த உன் முதல் துளி கண்ணீரில் சட்டென்று நிமிர்ந்தது
நிலவு.
கண்ணீர் துடைக்க விரைந்த என் கைகளை பற்றிக்கொண்டு உள்ளங்கையில் முகம் புதைத்தழுதாய்.
தேவதைகளின் தேவதை உன் கண்ணிரின் மென்சூட்டில் வெந்துபோனது என் உள்ளம்(ங்)கை.
பதறிய நெஞ்சுடன் உன்னை இழுத்தணைத்து நெற்றியில் முத்தமிடுகிறேன்.
நெஞ்சில் சாய்ந்தபடி மெல்ல விம்முகிறாய்.உன் விழியின் விசும்பல் சப்தத்தில் துடிக்கும்
என் இதயம் விசும்ப ஆரம்பித்துவிடுகிறது.
நெஞ்சம் நனைக்கும் உன் கண்ணீர் கண்ணாடி யன்னலில் மழை வரையும் ஓவியமென என்னில் படர்கிறது.
சொட்டு சொட்டாய் உன்னிலிருந்து வெளியேறும் நீர்த்துளிகளில் கொஞ்சம் கொஞ்சமாய் தீர்கிறது கனத்த இதயத்தின் வலிகள்.
ஒரு நீண்ட மெளனத்தின் நடுவே நாம் அமர்ந்திருக்கிறோம்.
உன் குறுநகைக்காக சப்தம் தொலைத்து காத்திருக்கிறது அலை.
நாய்க்குட்டியின் தலையை வாஞ்சையுடன் தடவுவது போலுன் தலையை தடவிக்கொடுக்கிறேன்.
கன்னத்தில் நீர்க்கோடுகள் வரைந்த கண்ணீரை துடைக்கிறதென் கைகள்.
பட்டாம்பூச்சி பின்னோடும் பாவாடைச் சிறுமியின் குழந்தைமை நிரம்பிய மனதை ஒத்திருக்கிறது கடற்கரை மணலில் அழுதுகொண்டே நீ வரைந்த பூனைச் சித்திரம்.
அதிகரிக்கும் இருளின் காரணமாய் கலைந்து செல்கின்றனர் கடற்கரை மக்கள். நாம் மெல்ல நடக்க துவங்குகிறோம்.ரயில் நிலையம் வரை விரல்கோர்த்து ஏதும் பேசாமல் நடந்து வருகிறாய் நீ.
இருளை கிழித்தபடி வந்து நிற்கிறது ரயில். ரயிலேறும் வரை மெளனித்தவள், ரயிலேறிய பின்
நான் மட்டுமே உணர்ந்து கொள்ளும் பார்வையொன்றை வீசினாய். கிளம்பிச் சென்றது ரயில்.
கைகள் நனைத்த உன் கண்ணீரின் ஈரம் என்னுயிரில் படிந்திருக்க கனத்த நெஞ்சுடன்
வீடு திரும்புகிறேன் நான்.
சித்ரா கலங்கிய கண்களுடன் தசனின் டைரியை படித்துக்கொண்டிருந்தாள். இவ்வளவு நேசம் என் மீது கொண்டிருப்பவனா தசன்? தசனுக்கு என்ன கைமாறு செய்துவிடப்போகிறேன்?
தசனின் வீட்டில் அவனது அறையில் அமர்ந்திருந்தவள் குளித்துவிட்டு திரும்பிய தசனை இழுத்தணைத்து இதழோடு இதழ் பதித்தாள்.
5.
அரவம் குறைந்த அந்தத் தெரு முனையில்தான் ராமின் வீடு இருக்கிறது. வீட்டிற்கு முன்னால் நிற்கும் பன்னீர்பூ மலர் நிறைய மலர்களை உதிர்த்திருந்தது. ராமின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்தாள் அவனது அம்மா. படுக்கையில் புழுவாய் துடிதுடித்துக்கொண்டிருந்தான்.கண்கள் இரண்டும் பிடுங்கப்பட்டு ரத்தம் கொட்டிக்கொண்டிருந்தது.
மூன்று மாதங்கள் கழித்து, ராமின் வீட்டிலிருந்து அறுபது கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் அந்த மூன்று நட்சத்திர விடுதியின் நான்காவது தளத்தின் 143 வது அறையில் மயங்கிக் கிடந்தான் தசன். விடுதி ஆட்கள் அவனை மருத்துவமனையில் சேர்த்தார்கள். தீவிர சிகிச்சை பிரிவிலிருக்கும் அவனது அறைக்கு வெளியே கலங்கிய கண்களுடன் நின்றிருந்த அவனது அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தார் மருத்துவர். அப்பாவாகும் தகுதியை இழந்துவிட்ட தன் மகனின் நிலையறிந்து அழ ஆரம்பித்தாள் அம்மா.
6.
ஷாங்காய் நகரத்திலிருந்து காற்றைக் கிழித்தபடி பீஜீங் நோக்கி வேகமாய் சென்றுகொண்டிருந்தது அந்த அதிவிரைவு ரயில். முண்ணூற்றி இருபது கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும் அதனுள்ளிருந்து சீனாவின் வசீகர மஞ்சள் பூக்களை ரசித்தபடி அமர்ந்திருந்தாள் நித்தியா. ஆயிரத்து நானூறு கிலோமீட்டர்கள் தூரத்தை ஐந்து மணிநேரத்தில் கடந்துவிடும் ரயிலின் வேகம் அவளுக்கு பிடித்திருந்தது. விமானத்தில் சென்றால் வெளியே பஞ்சு பஞ்சாக மிதக்கும் மேகங்களை தவிர வேறெதுவும் பார்க்க முடியாது. அதனாலேயே ரயிலில் பயணிக்க முடிவெடுத்திருந்தாள். மேலும், இயற்கை வளமிக்க சீனா போன்ற தேசத்தின் நீர்நிலைகளும் அதன் அருகே நீண்டு படுத்திருக்கும் விவசாய நிலங்களும் ஒரே அளவிலான அச்சில் வார்த்தது போலிருக்கும் வீடுகளும் ரயிலில் இருந்தபடி பார்ப்பது மனதுக்கு இதமாக இருக்கும். ரயிலில் இவளைத் தவிர அனைவரும் சீனர்கள். சீனப்பெண்களின் மேற்கத்திய மோகம் இவளுக்கு ஆச்சர்யத்தை தந்தது. தங்களது உடை மற்றும் அலங்காரப்பொருட்கள் என அனைத்திலும் மாறியிருந்தார்கள். இருபது வருடத்திற்கு முந்தைய சீனாவை இப்போது பார்க்க முடியாது என்று தன்னுடன் வேலை பார்க்கும் யங் லீ சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. அது உண்மைதான் சீனாவும் தன் சுயத்தை இழந்து மேற்கத்திய மோகத்திற்குள் அமிழ்ந்து கொண்டுதானிருக்கிறது. சீனா மட்டுமா? அனைத்து ஆசிய நாடுகளிலும் இந்த மாற்றம் நடந்துகொண்டுதானே இருக்கிறது. ரயில் பீஜீங் நகரத்திற்குள் தன் உடலை நுழைத்தபோது கடும்குளிரால் நிறைந்திருந்தது அந்தப்பெரு நகரம்.
பீஜிங் நகரிலிருந்து ஒரு மணிநேர பயண தூரத்திலிருக்கும் சீனப்பெருஞ்சுவரை அடைந்தாள் நித்தியா. அடர்குளிரின் காரணமாக மிகக்குறைவான மனிதர்களே தென்பட்டனர். இந்த வார இறுதி நாட்களில் எப்படியேனும் சீனப்பெருஞ்சுவரை பார்த்தே தீருவது என்று முடிவெடுத்திருந்தாள். அதனாலேயே தன்னுடன் ஷாங்காய் நகரில் வேலை பார்க்கும் யங்லீ வராதபோதும் தனியே வந்திருந்தாள். நீண்ட மலைப்பாம்பை போல் மலையின் மேல் கிடந்தது சீனப்பெருஞ்சுவர். வேகமாக ஏறத்துவங்கியவள் ஆயிரம் படிகளுக்கும் மேலே ஏறிய பின்னர் சற்று ஓய்வெடுக்க அமர்ந்தாள். அப்பொழுதுதான் இவ்வளவு தூரம் யாரும் வரவில்லை என்பது புரிந்தது. குளிரும் ஒரு காரணமாக இருக்கலாம். மலையடிவாரத்தைவிட இங்கே பல மடங்கு அடர்த்தியாய் இருந்தது குளிர். காற்று மிதமாய் இருந்தது.
தன்னுடைய அலைபேசியை வெளியே எடுத்து அந்த* மின்னஞ்சலை மீண்டும் திறந்து பார்த்தாள். அதன் இணைப்பிலிருந்த ஆடியோ பைலை இயக்கினாள். ராமின் குரல். ‘”அவள எல்லாம் எவன் டா கல்யாணம் பண்ண போறான்? சுத்தற வரைக்கும் சுத்திட்டு ஆசை தீர தொட்டுட்டு விட்டுட வேண்டியதான். அவ மூஞ்சிக்கெல்லாம் என்னை மாதிரி ஹான்ட்சம் பையன் கேட்குதா? நீ பியரை ஊத்து மச்சான்'”. குடிபோதையில் உளரலான குரலில் ராமின் வார்த்தைகள். அதை தனக்கு ரிக்கார்ட் செய்து அனுப்பிய அவனது நண்பனுக்கு மீண்டுமொரு முறை மனதால் நன்றி சொன்னாள்.
தன்னுடலுக்காக தன்னைச் சுற்றிய சர்ப்பங்களை சிதைத்துவிட்டதை நினைத்துப்பார்த்தாள்.தன் அகத்தை புரிந்துகொள்ளாத ராமும் அதன் பின் வந்து ஆறுதல் வார்த்தைகள் பேசி தன்னுடலை குறிவைத்த தசனும் இனி எந்தவொரு பெண்ணையும் நெருங்க மாட்டார்கள் என்பதை நினைக்கையில் மனம் லேசாகியிருந்தது. வதனா என்ற முக-மூடியால் ராமையும் சித்ரா என்ற* முக-மூடியால் தசனையும் பழிவாங்கிய திருப்தியில் அமர்ந்திருந்தாள் நித்தியா.
சற்று உயரத்தில் யாரோ பேசுகின்ற சப்தம் கேட்டது. நம்மை விட யார் அதிக தூரம் ஏறியிருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டு மேலே ஏறினாள். அங்கே ஒரு பெண் மலையுச்சியை பார்த்தபடி உட்கார்ந்திருந்தாள். அவளது உடை நித்தியாவின் உடையை ஒத்திருந்தது. உடலமைப்பும் அவளைப் போலவே இருந்தது.அருகில் சென்று அவள் தோளை தொட்டாள் நித்தியா. திரும்பியவளின் முகம் ஒரு சீனப்பெண்ணின் முகமாக இருந்தது.
– அக்டோபர் 2014
Tamil uthavi seyyum ezhuththu pattai illathathaal aangilaththil ezhuthugiren manniyungal….
Ithu enakku romba pidiththirukkirathu