சிங்கப்பூரில் காதல் கசமுசா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: August 13, 2018
பார்வையிட்டோர்: 10,336 
 

கம்பெனி ப்ராஜெக்ட் விஷயமாக சதீஷ் ஒருவாரம் சிங்கப்பூர் செல்ல சனிக்கிழமை இரவு பெங்களூர் ஏர்போர்ட் சென்றான். ஏர்போர்ட்டில் தன்னுடன் வேலை செய்யும் சரண்யாவைப் பார்த்தான். சரண்யா ஹெச்.ஆரில் வேலை செய்கிறாள்.

“ஹாய் சரண்யா… எங்கே சிங்கப்பூரா, ஜெர்மனியா?”

“சிங்கப்பூர்தான்…. ஒருவாரம் ட்ரெயினிங்.”

சதீஷின் மனதில் சின்னதாக ஒரு மின்னலடித்தது. ஆஹா ஒருவாரம் நானும் இவளும் சிங்கப்பூரில்… ட்ராவல் டிப்பார்ட்மென்ட் எங்களை ஒரே ஹோட்டலில்தான் போட்டிருப்பார்கள். இந்த ஒருவாரத்தில் இவளை எப்படியாவது மடக்கிட்டா எவ்வளவு நல்லா இருக்கும்?

இருவரும் சீமென்ஸ் பெங்களூரில் வேலை செய்கிறார்கள். இரண்டாயிரம் பேர் வேலைசெய்யும் அதில் சதீஷ் ஒரு ப்ராஜெக்ட் இன்ஜினியர் என்பதால் அடிக்கடி ஜெர்மனிக்கும், சிங்கப்பூருக்கும் பறந்து கொண்டிருப்பான். ஆனால் இம்முறைதான் முதல் தடவையாக ஒரு பட்சி அவனுடன் சேர்ந்து பறக்கிறது. சரண்யா திருமணமாகாத முப்பதுவயது முதிர் கன்னி. சதீஷுக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள்.

சதீஷ் சுறுசுறுப்பானான். முதல் காரியமாக தனக்கும் சரண்யாவுக்கும் அடுத்தடுத்த இருக்கைகளில் போர்டிங்பாஸ் வாங்கினான்.

விமானம் கிளம்பக் காத்திருந்தபோது சரண்யாவைக் கண்களால் அளந்தான். சரண்யா மதர்ப்பாக இருந்தாள். ப்ளூ ஜீன்ஸும், ப்ளாக் டாப்ஸும் அணிந்திருந்தாள். ஜீன்ஸ் டைட்டாக இருந்ததால் அவளது அகன்ற தொடைகளை கவர்ச்சியாகக் காட்டியது. பின்புறம் அவளது உருண்டை வடிவமான பெரிய பிருஷ்டங்கள் அம்சமாக இருந்தன. ஏராளமான மார்பகங்களில் வளப்பமாக இருந்தாள்.

விமானம் சரியான நேரத்துக்கு கிளம்பியது.

சதீஷ் அவளிடம் பேச்சுக் கொடுத்தான். “எப்ப சரண்யா கல்யாணச் சாப்பாடு போடப் போறீங்க?”

அவளுடைய கல்யாணத்தைப் பற்றி உண்மையில் எந்த அக்கறையும் அவனுக்குக் கிடையாது. இருப்பினும் ஒரு சகஜமான ஆரம்பத்திற்காக அப்படிக்கேட்டான்.

“இப்போதைக்கு இல்லை சதீஷ்… எனக்கு வீட்டில் பொறுப்புகள் மிக அதிகம். என் சம்பாத்தியத்தை நம்பித்தான் வீட்டில் என்னைத்தவிர ஐந்துபேர் இருக்கிறார்கள்…”

“ஓ…ஐயாம் சாரி சரண்… உங்களோட அழகான தோற்றத்தைப் பார்த்து நீங்க ரொம்ப வசதியானவங்க என்று நெனச்சி கேட்டுட்டேன்.”

“என் தோற்றத்தைப் பார்த்து ஏமாந்துறாதீங்க சதீஷ்… இதெல்லாம் வேலை பார்க்குற இடத்துக்காகப் போடற வேஷம். இந்த வேஷம்தான் என்னை மாதிரியான மிடில் க்ளாஸ் பெண்களைப் பிடிச்ச சாபம். அதுவும் நம்ம கம்பெனி பெரிய ஜெர்மன் மல்டிநேஷனல். பார்ப்பதற்கு ஸ்டைலா இருப்பது முக்கியம்…”

சரண்யாவின் பேச்சு வேலைக்கு போகிற பெண்களின் யதார்த்தத்தை சற்றுப் புரிய வைத்தது. அவளின் மேல் ஒரு வாஞ்சை பிறந்தது. ஏனோ அவனுக்கு தன்னுடைய மனைவி கமலியின் நினைவு வந்தது… சரண்யாவையும், கமலியையும் ஒப்பிட்டுப் பார்த்தான்.

சரண்யா தன் குடும்பத்தையே தாங்கி நிற்கிறாள். கம்பெனியில் உழைக்கிறாள்… ஊருக்காக வேஷம் போடுகிறாள். ஆனால் கமலி இரண்டு குழந்தைகளை மட்டும் மேய்த்துக்கொண்டு, மூன்று வேளையும் மூக்குப் பிடிக்க சாப்பிட்டுவிட்டு குறட்டைவிட்டுத் தூங்குகிறாள். சரண்யா ஒரு ஆதர்ஷ மனுஷி…

“நீங்க ரியலி க்ரேட் சரண்… தைரியமா நிஜத்தை சொல்றீங்க…”

“ஒரு உண்மையைச் சொல்றதே இவ்வளவு பெரிய விஷயமா இருக்குன்னா பாத்துக்குங்க… நாமெல்லாம் எவ்வளவு பொய்யா வாழ்ந்திட்டு இருக்கோம்னு?”

“நீங்க பேசப் பேச எனக்கு உங்களிடம் நிறையப் பேசணும் போலிருக்கு சரண்…”

“அதனாலென்ன அடுத்த ஒருவாரம் சிங்கப்பூரில் இருப்போமே… அப்ப நிறையப் பேசலாம் சதீஷ்…”

சதீஷுக்கு அவளுடைய இந்தப் பதில் ரொம்பப் பிடித்திருந்தது. அவனுடைய காதல் உணர்வுகள் சரண்யாவை நோக்கி உருளத் தொடங்கின. சரண்யாவையே கல்யாணம் செய்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? நினைக்கவே மெல்லிய மழைத்தூறல் விழுவது போலிருந்தது!

அவ்வளவு சின்ன வயதிலேயே அப்பாவிடம் தன் கல்யாணத்துக்கு தலையை ஆட்டியிருக்கக் கூடாது…. நிதானமாக நானே எனது மனைவியை ஜாதி, மதம் எதுவும் பார்க்காமல் காதலித்து மணந்திருக்க வேண்டும். குருட்டுக் கோழி தவிட்டை முழுங்கியது மாதிரி இப்படி அவசரப்பட்டு கமலியைக் கட்டிக்கொண்டு… ச்சே. சரி சரி… இப்ப சரண்யாவை எப்படிப் படிய வைக்கிறது என்பதுதான் முக்கியம்…

“நீங்க ஓப்பனா பேசின மாதிரி நானும் ஒரு உண்மையைச் சொல்றேன் சரண்… எனக்கு ஏண்டா கல்யாணம் செய்துக்கிட்டோம்னு இருக்கு! என் ஒய்ப் ரொமான்டிக்காகவே இருக்க மாட்டா, பேச மாட்டா.”

“என்னங்க சதீஷ் திடீர்ன்னு இப்படிச் சொல்றீங்க?”

“ஆமா சரண்… ஒண்ணுமே கிடையாது தாம்பத்திய வாழ்க்கைல. வெறும் சைபர். ஆணுக்கும் பெண்ணுக்கும் வாழ்க்கைல தனியா இருக்க முடியறது இல்லை… அதுக்காக கல்யாணத்தைப் பண்ணிக்கிட்டு காம்ப்ரமைஸ் பண்ணிகிட்டு; சுயமரியாதையை; சுதந்திரத்தை இழந்து; தெரிஞ்சோ தெரியாமலேயோ குழந்தைகளைப் பெத்துகிட்டு; அய்யோ அதை ஏன் கேக்குறீங்க… எல்லாமே வேஸ்ட்.”

“ஆக்சுவலா உங்க குடும்பத்துல என்ன ப்ராப்ளம் சதீஷ்?”

“எல்லாம் மெதுவா சொல்றேன் சரண்… நீங்க இப்ப தூங்குங்க.”

அக்கறையுடன் பட்டனை அமுக்கி சாய்வாக படுக்க வசதி செய்து கொடுத்தான்.

சரண்யா அவனை உரசியபடியே தூங்கிப்போனாள்.

சதீஷ் அவள் முகத்தையே அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தான். அவளிடம் நைச்சியமாகப் பேசி எப்படியாவது இந்த ஒருவாரத்தில் அவளைத் தன் வலையில் வீழ்த்திவிட வேண்டும்.

சிங்கப்பூர் ஆல்பர்ட் வில்லேஜ் ஹோட்டலில் சதீஷுக்கு அறை எண் 616; சரண்யாவுக்கு 618 ம் எதிரெதிரே ஒதுக்கப்பட்டது.

ஞாயிறு பகலில் நன்றாகத் தூங்கிவிட்டு மாலையில் இருவரும்.Night safari பார்க்க கிளம்பிச் சென்றனர். Night safari யின்போது ட்ராம் வண்டியில் இருவரும் அருகருகே அமர்ந்துகொண்டனர். சரண்யா ரம்யமான வாசனையில் சதீஷைக் கிறங்கடித்தாள்.

ஹோட்டலுக்குத் திரும்பி வரும்போது இரவு ஒன்பது மணியாகிவிட்டது. அருகேயிருந்த லிட்டில் இந்தியா பகுதிக்கு நடந்தே சென்று கோமள விலாஸ் ஹோட்டலில் இரவு உணவை ரசித்துச் சாப்பிட்டனர். பிறகு நடந்தே ஹோட்டலுக்கு திரும்பினர்.

எப்படியாவது இவளை தன்னிடம் இழுத்துவிட வேண்டும். ஆயிரம்பொய்கள் சொல்லியாவது தன்மீது அவளை காதல்வயப்படச் செய்துவிட வேண்டும். அவளின் அனுதாபத்தைப் பெற்று தம்மிடம் ஆர்வத்தைத் தூண்டவேண்டும்.

இருவரும் ஹோட்டல் லாபியில் அமர்ந்துகொண்டனர்.

“ஆங்… ப்ளைட்டில் என்னிடம் என்ன ப்ராப்ளம் என்று கேட்டீர்களே? குடும்ப வாழ்க்கையே எனக்கு ப்ராப்ளம் சரண். ஷி இஸ் நாட் அட்டால் ரொமான்டிக்… நாலு சுவருக்குள் ஏதோ வாழ்ந்துகிட்டு இருக்கோமே தவிர எங்களுக்குள்ள பிஸிகல் இன்வால்வ்மென்டே கிடையாது. பேசறதுக்கு கூட விஷயமே கிடையாது. நான் வீட்டுக்குப் போகும்போது குழந்தைகளுக்கு ஹோம் ஒர்க் சொல்லிக் குடுத்துகிட்டு இருப்பா; இல்லேன்னா டிவி பாத்துகிட்டு இருப்பா. இருபத்திநாலு மணி நேரமும் டிவி பாக்கச் சொல்லுங்க பாப்பா! குழந்தைகளுக்கு அம்மாவா இருக்காளே தவிர, எனக்கு மனைவியா அவ இல்லவே இல்லை சரண். இவகூட நான் எப்படிச் சந்தோஷமா குடும்பம் நடத்துவேன்? நீங்களே சொல்லுங்க. எனக்கும் பொண்டாட்டின்னு ஒருத்தி இருக்கா… அவ்வளவுதான். அதுக்கு மேல எனக்கும் அவளுக்கும் எதுவும் இல்லை! ரொம்ப லோன்லியா இருக்கேன் சரண்…”

இதைச் சொல்லும்போது சதீஷ் வேண்டுமென்றே தன் குரலை உடைத்து எமொஷனலாகச் சொன்னான்.

அன்று இரவு தனித் தனியாக தங்களது அறைகளில் உறங்கினர். சீக்கிரமே அவளைத் தன் அறைக்கு இழுத்து தன்னுடன் தூங்கச் செய்துவிட வேண்டும்.

மறுநாள் காலை இருவரும் சேர்ந்தே இரண்டாவது தளத்தில் buffet breakfast சாப்பிட்டுவிட்டு, ஒரே டாக்சியில் கம்பெனிக்குச் சென்றனர். பகல் முழுதும் சந்தித்துக் கொள்ளாது தங்களின் அலுவலக மும்முரத்தில் லயித்தனர். மாலை ஆறு மணிக்கு ஒன்றாக ஹோட்டலுக்குத் திரும்பினர்.

“ஓகே சதீஷ்… ஐ நீட் டு மேக் சம் கால்ஸ்… எட்டரை மணிக்கு டின்னருக்கு லாபியில் மீட் பண்ணலாம்…”

அறைக்குள் சென்று கதவைச் சாத்திக்கொண்டாள்.

அன்று இரவும் லாபியில் அமர்ந்துகொண்டு பேச்சைத் தொடர்ந்தனர்.

“வீட்டுக்கு பேசினீங்களா சதீஷ்?”

“அட நீங்க வேற…. என்ன இருக்கு பேசறதுக்கு?”

“ஏன் இப்படி அலுத்துக்குறீங்க? நான் ஒருநாள் உங்க மனைவியை சந்திச்சி பேசிப் பார்க்கட்டுமா?”

“வேற வினையே வேண்டாம்! என்னை உண்டு இல்லைன்னு ஆக்கிடுவா… சும்மாவே அவ ஒரு மாதிரியான ஹிஸ்டிரிக்கல்… நீங்க போய்க் கேட்டீங்கன்னா – கத்தி ஒப்பாரிவச்சி ஊரையே கூட்டிடுவா. எனக்கும் உங்களுக்கும் ஏதொ தொடர்பு இருக்குன்னு நாக்குக் கூசாம பழி போட்டுடுவா…”

“அப்ப உங்க பிரச்னையை தீர்க்கறதுக்கு என்னதான் வழி?”

“கடவுள் விட்ட வழி!”

“அப்புறம் சதீஷ்… இந்த வாரம் வெள்ளிக்கிழமை சைனீஸ் நியூ இயராம்…அதனால நமக்கு மூணு நாள் ஹாலிடே…நான் என்னோட ரிடர்ன் டிக்கெட்டை சண்டே நைட்டுக்கு மாத்திகிட்டேன். நீங்களும் நம்ம டிராவல்ல ரிக்வெஸ்ட் பண்ணி சண்டே நைட்டுக்கு மாத்துங்க. நாம சிங்கப்பூர சுத்திப் பார்க்கலாம்…”

“அட இது நல்லா இருக்கே?”

மறுநாளே டிக்கெட்டை மாற்றிக்கொண்டான்.

வெள்ளிக்கிழமை காலை இருவரும் சென்டோஸா கிளம்பிச் சென்றனர். அவள் மேடம் துஷாரில் நரேந்திர மோடியுடனும், ரித்திக் ரோஷனுடனும் நின்றுகொண்டு அவனை மொபைலில் போட்டோ எடுக்கச் சொன்னாள். நிறைய கேளிக்கைகளில் ஈடுபட்டனர்.

“உங்க லைப்ல இவ்வளவு பெரிய பிரச்னை இருக்கும்னு நான் நெனச்சே பாக்கலை சதீஷ்… மேட்ரிமோனியல் லைப்ல பிரச்னை வரக்கூடாது.”

“இது லட்சத்துல ஒரு வார்த்தை சரண். நான் கமலியை கல்யாணம் செய்திருக்கக்கூடாது… அவசரப்பட்டுட்டேன். இப்ப முழிக்கிறேன்…”

“நெறையப் பெண்களுக்கு புருஷன் நல்லவனா அமையறதில்லை. உங்க விஷயத்துல அது தலைகீழா இருக்கு.”

“சரண் நான் ஒண்ணு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே?”

“சொல்லுங்க சதீஷ்…”

“உங்களைக் கல்யாணம் பண்ணிக்கப் போகிறவன் ரொம்ப அதிர்ஷடசாலி…”

இந்த வார்த்தைகள் குறிபார்த்து வீசப்பட்ட கல். அதுவும் பஞ்சு போர்த்திய கல். சரண்யா அவனுடைய இந்தக் கல்லை எதிர்பார்க்கவில்லை. அவனுடைய கல் அவளைச் செம்மையாக தாக்கிவிட்டது தெரிந்தது. ஏனென்றால் அவளுடைய கண் இமைகள் அப்போது படபடத்துக்கொண்டன. அவன் அவளின் மனவெளியில் வேறொரு ஸ்பாஞ்ச் மேகத்தில் பரவிக்கொண்டிருப்பதை அவனால் உணர முடிந்தது.

சதீஷ் பித்துப்பிடித்த நிலைக்கு உந்தப்பட்டான். எப்படியாவது அவளின் மனவெளியில் முழுவதுமாகப் பரவிவிட வேண்டும். .

சரண்யா அவனுக்கு இன்னொரு மனைவியாக வேண்டியதில்லை. புரிதலுடன் கூடிய காதலியாக இருந்தாலே போதும். அவளிடம் உடல் சுகம்கூட வேண்டாம்… மனச்சுகமே போதும். அவளின் கூந்தல் வாசனையை வேண்டிய அளவிற்கு முகர்ந்து பார்த்தாலே போதும்!. சரண்யா வெகுதூரத்தில் இருந்தே மணக்கிற மல்லிகை மலர்!. கசக்கிப்பிழிந்து எடுக்கின்ற அத்தர் இல்லை அவள்…! அதற்காக மல்லிகை மலர் தூரத்திலேயே இருக்கவேண்டும் என்பதில்லை, கொஞ்சம் கொஞ்சமாக அது அவன் அருகில் வந்தாலும் அதில் அவனுக்கு மிக்க சந்தோஷமே!.

மறுநாள் இருவரும் யூனிவர்ஸல் ஸ்டூடியோஸ் சென்றனர்.

அங்கு மம்மி ரைடில் சரண்யா அவனருகில் அமர்ந்துகொண்டாள். இருட்டின் ரோலர்கோஸ்டர் அதிரடியில் அலறிக்கொண்டே பயத்துடன் சதீஷை கட்டிப்பிடித்தாள். அவனுக்கு கிளுகிளுப்பாக இருந்தது. அதன்பிறகு இருவரும் ட்ரான்ஸ்பார்மர் சென்றனர்.

மதியம் மூன்றுமணிக்கு ‘ஹாலிவுட் ட்ரீம்ஸ் பரேட்’ நடந்தது. அதைப்பார்த்த இருவரும் சொக்கிப்போயினர். அதை முழுவதுமாக அவள் வீடியோ எடுத்துக்கொண்டாள்.

அதன்பிறகு ஜூராசிக் பார்க்கில் அமர்ந்து சற்று ஓய்வெடுத்தனர்.

“என்ன சதீஷ் ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க?”

“ஆமா சரண். அதுக்கு காரணம் நீங்கதான். உங்களாலேதான் நான் இப்பக் கொஞ்சமாவது சந்தோஷமா இருக்கேன்…தாங்க்யூ சரண்.”

“நான் என்ன பண்ணேன் சதீஷ்?”

“என்னை நீங்க நல்லா புரிஞ்சிட்டு இருக்கீங்களே அதுவே எனக்குப பெரிய சந்தோஷம் சரண்… சரியான புரிதல் இல்லாமல் நான் கஷ்டப்பட்டேன்…”

“ரொம்ப சின்ன விஷயத்துக்குகூட எமோஷனலா ரியாக்ட் பண்றீங்க,”

“இதுக்கே இப்படிச் சொல்றீங்களே… இன்னும் நான் என் மனசு பூராவையும் திறந்து பேசினா என்ன சொல்லுவீங்களோ?

எந்தப் பதில் பாவனையும் காட்டாமல் சரண்யா அமைதி காத்தாள்.

ஆனால் சதீஷால் பேசாமல் இருக்க முடியவில்லை. பாசி பிடித்த குளக்கரைப் படிகளில் வழுக்கி விழுந்தாற்போல் பேச்சில் வழுக்கி விழுந்தான்.

“என் மனசு பூராவையும் இன்னிக்கி உங்களுக்கு திறந்து காட்டிடட்டுமா சரண்?” ஒரு ஆற்றாமையோடு கேட்டுவிட்டான்.

“நீங்க என்ன பேசினாலும் கேக்கறதுக்கு நான் ரெடி…”

“உங்களோட நட்பு கிடைத்தது எனக்கு சோலைவனத்தைப் பார்த்த மாதிரி இருக்கு சரண். டெய்லி உங்களைப் பார்த்து பேசணும்னு மனசு கிடந்து தவிக்குது. ஐ வேல்யூ யூ த மோஸ்ட்.”

உன்மத்த நிலையில் மிகவும் உணர்ச்சி வசப்பட்டான்.

“…………………”

“ஆனா ஒண்ணு; நீங்க வேற, உங்க பேச்சு வேறில்லையே? உங்க பேச்சு என்கிறது நீங்கதானே? ஸோ… நீங்க எனக்கு ரொம்பத் தேவையா இருக்கீங்க சரண்யா. ஐ நீட் யூ! ஐ நீட் யுவர் லவ் ஆல்ஸோ! யெஸ் சரண்… எனக்கு உங்களோட காதல் வேணும்.”

சரண்யாவின் முகம் கல்லடி பட்டாற்போல் முகம் பூராவும் சிவந்துவிட்டது.

“திஸ் இஸ் அட்டர் நான்சென்ஸ். என்ன காதல் கீதல்னு கடைசில உளற ஆரம்பிச்சுட்டீங்க. உங்கமேல மரியாதை வச்சிருந்தேன். அதனால மனம்விட்டுப் பேசினேன். ஏதோ மேட்ரிமோனியல் லைப்ல பிரச்சினையால அது இதுன்னு சொல்லி கஷ்டப் படறீங்களே; நம்மால் முடிஞ்சா ஏதாவது ஹெல்ப் பண்ணலாமேன்னு நெனச்சா, அழகான நட்போட புனிதத் தன்மையையே அசிங்கப் படுத்திட்டீங்களே… ரெண்டு குழந்தைகளுக்கு அப்பா நீங்க. கல்யாணமாகியே பத்துப் பன்னிரண்டு வருஷமாச்சி உங்களுக்கு. இந்த வயசில் உங்ககூட வேலை பார்க்கிற ஒரு கல்யாணமாகாத கல்மிஷம் இல்லாம பழகின ஒருத்திக்கிட்ட எப்படி இப்படி அநாகரீகமா நடந்துகிட்டீங்க..? ஸாரி உங்ககிட்டேயிருந்து இப்படி ஒரு அபத்தமான பேச்சை நான் எதிர்பார்க்கவில்லை. நீங்களும் எல்லா ஆம்பளைகள் போலத்தான்னு காமிச்சிட்டீங்க…”

சரண்யா பேசப்பேச அவனுக்கு அவமானமாக இருந்தது. வேலைக்கு உலை வைத்துவிடுவாளோ என்கிற பயமும் சேர்ந்துகொண்டது. கொஞ்சம் நயமாகப் பேசி அவளை சமாதானப்படுத்த வேண்டும்.

“ப்ளீஸ் நிறுத்துங்க சரண்யா… உங்கமேல எனக்கு தப்பான எண்ணம் எதுவும் கிடையாது. ஜஸ்ட் ஐ லவ் யூ. லவ் பண்றது ஒண்ணும் பாபமான காரியம் இல்லை. உங்க நல்ல மனசு புரிஞ்சதால எனக்குள்ள ஏற்பட்ட ஒரு மரியாதை உணர்ச்சி அது. பரவசத்ல ஏற்பட்ட நன்றி உணர்ச்சி என் காதல். எனக்கு மனைவி சரியில்லை. தேவையான காதல் அவகிட்ட இருந்து எனக்கு கிடைக்கல. கிடைக்காததுக்கு ஆசைப்படறதும் அதுக்காக ஏங்கறதும் மனுஷ மனசோட இயல்பு சரண்யா மேடம். என்னை நீங்க புரிஞ்சுக்கணும்னு ஆசைப்பட்டேன். அது தப்பா? தப்புன்னு நீங்க சொன்னா உடனே மன்னிப்பு கேட்டுக்கிறேன். நோ ப்ராப்ளம். நான் இழந்ததை வேற ஒருவர்கிட்ட கிடைக்குமான்னு ஏங்கினேன். நீங்க ரொம்ப புத்திசாலின்னு தெரிஞ்சதும் இயல்பா உங்கமேல காதல்வயப் பட்டேன். ரொம்ப இயல்பா அது வெளிப்படவும் செய்திருச்சி. ப்ளீஸ் டோன்ட் மிஸ்டேக் மீ…”

“புல்ஷிட்…”

எழுந்து சென்றுவிட்டாள்.

அவள் அமர்ந்திருந்தவரை அருகில் கமழ்ந்து கொண்டிருந்த நறுமணமும் அவளுடனேயே போய்விட்டது. அவன் மட்டும் தனியாக சற்றுநேரம் அங்கேயே அமர்ந்திருந்தான். உலகம் பூராவுமே அவனுக்கு யாரும் கிடையாது என்கிற மாதிரியான பிரமையில் உறைந்து போனான்.

சதீஷ் யுனிவர்சல் ஸ்டூடியோஸிலிருந்து தனியாக ஹோட்டல் வந்து சேர்ந்தான்.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மாலை சரண்யா ஹோட்டலைக் காலி செய்துகொண்டு நேராக எர்போர்ட் சென்றுவிட்டாள். சதீஷ் தனியாக பெங்களூர் திரும்பினான்.

திங்கட்கிழமை காலை பதினோரு மணிக்கு கம்பெனியின் ஹெச் ஆரில் இருந்து சதீஷுக்கு அழைப்பு வந்தது.

ஹெச் ஆர் வைஸ்-பிரசிடென்ட் அவனிடம், சிங்கப்பூரில் சரண்யாவிடம் அவன் மிஸ்பிஹேவ் பண்ணியதாக அவள் எழுத்து மூலமாகப் புகார் அளித்திருப்பதாகவும், அதன் அடிப்படையில் சதீஷ் உடனடியாக தன் வேலையை ராஜினாமா செய்யவேண்டும் இல்லையெனில் அவன் டெர்மினேட் செய்யப்படுவான் என்றும் சுருக்கமாகச் சொன்னார்.

வேறு வழியில்லாமல் சதீஷ் உடனே தன் வேலையை ராஜினாமா செய்தான். அன்று மாலை ஐந்து மணிக்கு அவனுடைய அக்கவுண்ட்ஸ் முற்றிலுமாக செட்டில் செய்யப்பட்டு; லேப்டாப், ஐடி கார்டை புடுங்கிக்கொண்டார்கள்.

சதீஷ் பாயசத்தில் விழுந்த அப்பளம்போல் தொய்ந்துபோய் வீடு திரும்பினான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *