அனுபமாவுக்கு இருபது வயது. எம்பிஏ படித்துக் கொண்டிருக்கிறாள்.
பார்ப்பதற்கு முகம் மட்டும் லட்சணம். ஆனால் உடம்பு வாளிப்பாக, புஷ்டியாக இருக்கும். எப்போதும் எதையாவது தின்றுகொண்டே இருப்பாள். அவளது வாய் அசைந்து கொண்டே இருக்கும்.
ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் ஆறு முறையாவது சாப்பிடுவாள். அது தவிர நொறுக்குத் தீனிகள் தனி. சுருங்கச் சொன்னால் சரியான தீனிப் பண்டாரம்.
“ஏண்டி அனு, இப்படி நாக்கை வளர்த்து வச்சிருக்கியே… இருபது வயசிலேயே இப்படி இருந்தியான்னா போகப் போக இன்னும் எப்படியோ ! உடம்பைக் குறைச்சாதான் உன்னை ஒருத்தன் கட்டிப்பான்…” – அம்மா அடிக்கடி எச்சரிப்பாள்.
“தட்டில் சாத்தை போட்டுட்டு உடம்பை பார்த்துக்கோடின்னு பயமுறுத்தி பரிமாறுகிற ஒரே அம்மா நீதான்மா… அட போம்மா, பையன்களை பெத்து வச்சிகிட்டு பொண்ணு கிடைக்காதான்னு நாயா பேயா அலைகிற நிறைய குண்டு மாமிகளை எனக்குத் தெரியும். பொண்ணு குண்டா, குள்ளமா இருந்தாலும் கொத்திண்டு போகத் தயாரா இருக்கிற பையனைப் பெத்தவா நிறையப் பேர் இருக்கா. நீ கவலையே படாத…. என்னால எதையும் குறைக்க முடியாது. எனக்கு வாய்க்கு வாய் வக்கணையா சாப்பிடணும்.”
“உண்டி சுருக்குதல் பெண்டிர்க்கு அழகுன்னு சும்மாவா சொன்னாங்க?”
“உண்டி, பெண்டின்னு; குண்டி காஞ்ச பரதேசிப் பன்னாட எவனாவது அடுக்கு மொழிக்காக சொல்லியிருப்பான். அது என்ன பெண்களுக்கு மட்டும் இந்த அறிவுரை? ஆண்கள் மட்டும் நிறைய சாப்பிட்டுவிட்டு தொந்தியும் தொப்பையுமாக ‘டைனோசர்ஸ்’ மிருகம் போல வலம் வரலாமா? ஏன் பெண்களை மட்டும் குறிவைத்து தாக்குகிறார்கள்?”
“அசிங்கமா பேசாதடி…”
“பின்ன என்னம்மா, சாப்பாட்டைத் தவிர நமக்கு எவ்வளவு வித விதமான தீனிகள்; எவ்வளவு விதம் விதமான இனிப்புகள், ஐஸ்க்ரீம்கள்? வாவ்… இதயெல்லாம் சாப்பிடத்தான் குடுத்து வைக்கணும்…நிறைய சாப்பிடனும்னு மனசு வேண்டும்…குண்டு என்பதற்காக பிடிச்சதை வேண்டாம்னு தள்ளியா வைக்கிறது?” அம்மாவின் வாயை அடைத்து விடுவாள் அனுபமா.
சினேகிதிகளோட சாப்பிடலாம்னு அனுபமா வெளியில் போனா, டயட்டிங் செய்கிற தோழிகளை பகிஷ்காரம் செய்து விடுவாள்.
நாக்கு நீளம் என்பதால் வக்கணையாகச் சாப்பிடுவாள். வீட்டில் இருக்கும்போது எப்போதும் எதையாவது மென்று கொண்டேயிருப்பாள். நொறுக்குத்தீனி வீட்டில் எப்போதும் இருக்க வேண்டும். அவ்விதம் இல்லாத நாட்களில் தன் அம்மாவை போட்டு நொறுக்கி விடுவாள். அவள் தூங்கும்போதுதான் அவள் வாய் அசையாது. அதுகூட அவளின் புறத் தோற்றத்தை வைத்துதான் சொல்ல முடியுமே தவிர, அசையாத வாய்க்குள் தட்டை, சீடை என்று ஏதாவது ஊறிக் கொண்டிருக்காது என்று நிச்சயமாகச் சொல்ல முடியாது.
அன்னிக்கு அவ சினேகிதியோட தங்கைக்கு ஸ்ரீரங்கத்தில் கல்யாணம். அவ கூப்பிட்டதால அனுபமாவும் தன் அம்மாகிட்ட சொல்லிட்டு முந்தைய நாள் ஜனவாசத்துக்கே வந்து நாக்கை சப்புக்கொட்டிக்கொண்டு செட்டில் ஆகிட்டா.
அவளும் அவள் க்ளோஸ் ப்ரென்ட் ஜெயசுபாவும் கேடரர் கிட்ட நைஸா போய் மெனு என்னன்னு கேட்டு தெரிந்து கொண்டார்கள்.
அவன் பெயர் அருணாச்சலம் என்கிற அருண். பி.ஈ படித்துவிட்டு சரியான வேலை ஒன்றும் கிடைக்காததால், கேடரிங் தொழிலில் தன் சித்தப்பாவுக்கு உதவியாக இருந்தான்.
மிகுந்த அக்கறையுடன் மெனுவை கேட்டுத் தெரிந்துகொள்ளும் அனுபமாவை வித்தியாசமாகப் பார்த்தான். மெனுவில் ‘அக்காரவடசல்’ பெயரைச் சொன்னதும் கண்கள் விரிய அவள் நாக்கைச் சப்புக் கொட்டியதை கவனித்துக் கொண்டான்.
அருணுக்கும் வித விதமா சாப்பிடப் பிடிக்கும். சித்தப்பாவோட சேர்ந்ததும் கல்யாணங்களில் கூடவே இருந்ததால விதம் விதமா சாப்பிட பிராப்தம் கிடைத்தது. தவிர, அவனுக்கும் சித்தப்பாவின் ஆசீர்வாதத்துடன் தானே சுயமாக கேடரிங் தொழில் செய்ய வேண்டும் என்கிற ஆர்வம் மேலோங்கியது.
மனுஷாளுக்கு இன்றியமையாதது மூன்று. சாப்பாடு; வீடு; துணிமணிகள். இதில் எதை நேர்மையாகச் செய்தாலும் வாழ்ந்து காட்டிடலாம்னு ஒரு நம்பிக்கை அவனுள் கனன்று கொண்டிருந்தது. செய்யும் தொழிலில் மிகுந்த ஈடுபாடும், ஜெயிக்கணும்னு வெறியும் இருந்தா ஜெயித்து காட்டிடலாம் என்று தோன்றியது. அதுவும் கேடரிங் தொழிலில் கொள்ளைக் காசு. ஒரு சாப்பாட்டின் அடக்க விலையே நூறு ரூபாயைத் தாண்டாது. அதையே முன்னூறு ரூபாய் என்று பரிமாறும்போது, ஏகப்பட்ட லாபம். க்வாலிட்டியை தக்க வைத்துக்கொண்டால் போதும்.
அனுபமா முதல் பந்தியிலேயே, சாப்பிடும் ஆர்வத்துடன் அமர்ந்துகொண்டாள். அருண் வேண்டுமென்றே அக்காரவடசல் பரிமாறினான். அனுபமாவின் இலையில் ஒரு கரண்டி ஊற்றியபோது, “இன்னும் ரெண்டு கரண்டி போட்டுடுங்கோ” என்றாள். அவன் சிரித்துக்கொண்டே நான்கு கரண்டிகள் பரிமாறினான்.
எதுவானாலும் அவள் அதிகமாகவே கேட்டு வாங்கிச் சாப்பிட்டாள். அருண் அவள் சாப்பிடும் அழகை சற்றுத்தள்ளி இருந்து ரசித்தான். இவளை கட்டிக்கப்போறவன், இவளுக்கு சாப்பாடு போட்டே நாஸ்தியாகிடுவான்னு அவனுக்குத் தோன்றியது. தனக்குள் சிரித்துக்கொண்டான்.
சாப்பாடு முடிந்ததும் அவளிடம் வலியப்போய், “சமையல் எல்லாம் எப்படி இருந்தது?” என்றான்.
“பேஷ்.. பேஷ்… அந்த அக்காரவடசல் பண்ணின கைகளுக்கு தங்கத்தில் பிரேஸ்லெட் போடலாம். இனிமேல் உங்களைத்தான் எல்லோருக்கும் ரெக்கமன்ட் பண்ணுவேன். உங்க விஸிட்டிங் கார்ட் கொடுங்கோ.”
அருணாச்சலம் ஆர்வத்துடன் எடுத்து அவளிடம் நீட்டினான்.
“அக்காரவடசல் கொஞ்சம் பார்சல் எடுத்துண்டு போறேளா?”
கண்கள் விரிய “ஓயெஸ்…” என்றாள்.
உடனே ஒருத்தனிடம் பார்ஸல் சொல்லிவிட்டு அனுபமாவிடம் பேசி, அவளைப்பற்றி நிறைய தெரிந்துகொண்டான்.
அனுபமாவுக்கு அவனை மிகவும் பிடித்துவிட்டது.
பார்சல் வந்ததும் அதை வாங்கிக்கொண்டு அவள் விடைபெற்றாள்.
அருணுக்கு அவளோட பேசினது அத்தனை சந்தோஷமாய் இருந்தது. அவள் போனபிறகு, அண்டா சாம்பாரில்; அப்பளக் கூடையில்; கலந்த சாதப் பாத்திரங்களில் என எங்கே பார்த்தாலும் அவளோட அகன்ற முகமும், பெரிய கண்களும் அவனை விடாது துரத்தின. திடீர்ன்னு அவன் தொழிலில் ஜென்ம சாபல்யத்தை அடைந்த மாதிரி மனசு லேசாகப் போனது.
மறுநாள் முகூர்த்த சாப்பாட்டுப் பந்தியில் அருணாச்சலம் அவளை பிரத்தியேகமாக கவனித்தான்.
அவனுக்குத் தெரிந்து ரசத்தை கையில் வாங்கிக் குடித்த முதல் இளம் வயதுப்பெண் அனுபமாவாகத்தான் இருக்கும். வழக்கமா கல்யாணங்களில் வயதான தொந்தியும் தொப்பையுமா இருக்கறவாதான் ரசத்தை கையில் வாங்கிக் குடிப்பார்கள். இவள் ரசத்தை குடிக்கக் கையை நீட்டியதும் அருண் ஆடிப் போய்விட்டான். இருப்பினும் சமாளித்து இரண்டு கரண்டிகள் அவள் கையில் விட்டான்.
கை நிறைய வளையல் குலுங்க, விரலில் தங்க மோதிரம் அணிந்திருந்தாள். பட்டு போன்ற குண்டுக் கையை நீட்டி நீட்டி, ஐந்து தடவைகள் ரசம் விட்டுண்டா. ரசம் உறிஞ்சுகிற சத்தமே கேட்கலை. ரசத்தோட கார சாரத்தை உதடு, நாக்கு, தொண்டை அனுபவிக்க; முகம் அந்த சந்தோஷத்தை காமிக்க; கண்ணில் லேசாக பளபளப்பு மின்ன – அருண் சொக்கிப் போய்விட்டான்.
அருணை அவளது அழகிய நிர்மலமான முகமும்; படபடக்கும் கண்களும் அலைக்கழித்தன. பல இரவுகள் தூங்காது தவித்தான்.
அவளுக்கும் அம்மாதிரி எண்ணங்கள் தோன்ற, அவனை முகூர்த்தம் இல்லாத ஒரு நாளில் மொபைலில் அழைத்துப் பேசினாள். அடிக்கடி இருவரும் பேசிக்கொண்டார்கள். நேரம் கிடைக்கும்போது வெளியில் சந்தித்துக் கொண்டார்கள்.
அருண் அவளுக்குப் பிடித்தமான திரட்டுப் பால்; பாஸந்தி; கஸாட்டா ஐஸ்க்ரீம்; பீச்மெல்பா போன்றவைகளை அடிக்கடி வாங்கிக்கொடுத்து அசத்தினான். அவர்களின் காதல் தித்திப்புடன் சந்தோஷமாக வளர்ந்தது.
அனுபமா எம்பிஏ முடித்ததும், அவள் தன் காதலை அம்மாவிடம் வெட்கத்துடன் சொன்னாள்.
“அது எப்படி உன்னை மாதிரி ஒரு சாப்பாட்டு ராமியை ஒருத்தன் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறான்?”
“ஏன்னா, அவரும் ஒரு சாப்பாட்டு ராமர்….”
அடுத்த ஆறு மாதங்களில் இரு வீட்டுப் பெரியவர்களின் ஆசீர்வாதத்துடன் கல்யாணம் சிறப்பாக நடந்தது.
முதலிரவு….
அருண் அனுபமாவுக்காக ஆவலுடன் காத்திருந்தான். தோழிகளால் அறையின் உள்ளே அவள் தள்ளப் பட்டாள். அருண் எழுந்து நின்றான். ‘அவள் தன்னை நமஸ்கரிப்பாள். பால்சொம்பை எடுத்துத் தருவாள்…. பிறகு அவளை கட்டியணைத்து முத்தமிடலாம்’ என்று ஆசையாய் எதிர்பார்த்தான்.
“முதல்ல இங்க இருக்கிற ஸ்வீட்ஸ் எல்லாத்தையும் ஒவ்வொண்ணா நாம சாப்பிட்டு முடிச்சுரலாங்க….”