குழல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: April 9, 2016
பார்வையிட்டோர்: 24,674 
 
 

அந்தி சாய இன்னும் சில மணி நேரங்களே உள்ளது, கடற்கரையின் மணற்பரப்பின் சூடு கொஞ்சம் கொஞ்சமாக தணியத் தொடங்கியது. கடல் அலைகள் சற்றும் அடங்கவில்லை. அதனுடன் இராட்டினம் சுற்றும் சத்தம், ஈரக் காற்றோடு சேர்ந்து அடிக்கும் மிளகாய் பஜ்ஜியின் வாசம், கையில் எட்டும் உயரத்தில் பறக்கும் வண்ணக் காற்றாடி, பஞ்சு மிட்டாய்க்காரன் அடித்துச் செல்லும் வெண்கல மணியின் மெல்லிய ஓசை, குறி சொல்ல கேட்கும் வரும் அந்த பெரியப் பொட்டு அம்மாவின் மங்களப்பேச்சு, திருநங்கைகள் கைத்தட்டி வசூலிக்கும் காட்சி, மழலைகள் எண்ணற்ற கனவுகளுடன் கட்டும் இரு அடி மணல் வீடு, மீன் வறுக்கும் வாசனை, துப்பாக்கி குண்டுகளால் துளையும் பலூன்கள், இவையெல்லாம் இன்று, அவனது கவனத்தை திசை திருப்பவில்லை. தூரத்தில் கருப்பு குதிரையில் சவாரி செய்யும் ஒரு குழந்தையின் அழுகை சத்தம் மட்டும் அந்நேரத்தில் அவனின் காதுகளுக்கு எட்ட, அவனது பார்வையை ஒரு முழு வட்டம் போட வைத்தது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் அந்த குழந்தையை குதிரையில் இருந்து இறக்கி அவளின் தாயிடம் செல்லும் வரை அந்த குழந்தையையே பார்த்து கொண்டிருந்தான் அன்பு.

இப்பொழுது சரியாக, மாலை நான்கு மணி அவனது கைக்கடிகாரத்தில், மறுபடியும் அவனது வெறித்த பார்வை அந்த நீலக் கடலின் மீது. அவனது கைக்கடிகாரத்தில் நேரம் நான்கரையை நெருங்கியது, அவன் எழுந்திருக்க தயாராக இருந்தான், நான்கரை ஆனது. கையில் இருந்த பையை எடுத்துக்கொண்டு கடல் அன்னையை பார்த்தபடி சென்றான், அலைகள் இப்பொழுது அவனது கால்களை மெல்ல நனைக்கத் தொடங்கியது. சிறிது தூரம் நடக்க முட்டி வரை நனைத்தது அந்த கடல் அலைகள். மீண்டும் நடந்தான் இப்பொழுது அலைகள் அவனது மார்பு வரை நனைந்தது. அதாவது கரையில் இருந்து சுமார் பத்து, இருபது மீட்டர் இருக்கும். அவனைச் சுற்றிலும் யாரும் இல்லை. இப்பொழுது அவனது பையை திறந்து அதிலிருந்த பிரத்தேகமாக வடிவமைக்கப்பட்ட அந்த எட்டு புல்லாங்குழலையும் எடுத்து ஒவ்வொன்றாக எட்டு திசையிலும் வீசினான். அந்த எட்டுப் புல்லாங்குழலும் அவனைச் சுற்றிலும் மிதக்க அவனது கண்கள் மெல்ல கலங்க ஆரம்பித்தது.

கடந்த எட்டு வருடத்தில் இது எட்டாவது முறை அன்பு கடற்கரைக்கு வருவது. அதாவது வருடத்திற்கு ஒரு முறை விகிதம், அதேபோல், குழலும் வருடம் ஒன்றாக சேர்த்து வந்தான் அன்பு. ஆகஸ்த்து மாதம் 16ம் தேதி, அன்புவின் முழு நாளும், ஒரு பகல் ஒரு இரவு என மொத்தம் இருபத்தி நான்கு மணி நேரமும் கடற்கரையில் தான் கழியும். யார் இந்த அன்பு? அவனுக்கும் இந்த கடற்கரைக்கும் என்ன சம்மந்தம்? ஏன் அவன் வருடத்திற்கு ஒரு முறை மட்டும் கடற்கரைக்கு வருகிறான்?

சற்று பின்னோக்கி பார்போம்.

2006’ம் ஆண்டு ஆகஸ்த்து மாதம் 8ம் தேதி திருச்சியில் உள்ள அன்புவின் வீட்டிற்க்கு வந்தது ஒரு பதிவிடப்பட்ட தபால். அவன் மிகவும் எதிர்பார்கப்பட்ட ஒரு பெரிய பன்னாட்டு நிறுவனத்தில் இருந்து வரும் வேலைக்கான நேர்காணல் கடிதம் தான் அது. அவன் அந்த நிறுவனத்திற்காக பதிவு செய்வது இது நான்காவது முறை.

இந்த நான்கு முறையில், இம்முறை தான் அவனுக்கு அந்த அழைப்பு வந்தது. நேர்காணலின் கடிதம் கையில் கிடைத்த உடனே அவனுக்கு தலை-கால் புரியவில்லை. அவனது அம்மா ரத்தினாம்பாளுக்கும் தான். அன்புக்கு அந்த நிறுவனத்தில் வேலை கிடைத்த உடன் வரும் பணி நியமன ஆணை போல் கையில் அந்த நேர்காணலின் தபாலை வைத்துகொண்டு கனவில் மிதந்து கொண்டிருந்தான்.

அன்பு, படித்தது மூன்று ஆண்டு தொழிற்படிப்பு “டிப்ளமோ இன் எலெக்ட்ரிக்கல் & எலெக்ட்ரானிக்ஸ்” படிக்கும் பொழுதே அவன் தந்தையை தவறியவன். அவன் அம்மாவின் குறைவான சம்பளம், ஸ்காலர்ஷிப், நண்பர்களின் உதவி இவை தான், அவன் படிப்பை முடிப்பதற்கு உறுதுணையாக இருந்தது. அவன் அப்பாவிற்கு அன்புவை “இன்ஜினியரிங்” படிக்க வைக்க வேண்டும் என்பதை இலட்ச்சியமாக கொண்டிருந்தார்.

சில நேரம், அவன் அம்மா வேலைக்கு போய் கஷ்டப்படுவதை அவனால் பார்க்க முடியவில்லை, ஆகவே இவனும் பகுதி நேரத்தில் ஒரு “டி.வி” பழுது பார்க்கும் கடையில் உதவி மெக்கானிக்காக வேலை செய்தான், தொழிலில் ரொம்ப கெட்டி.

அவனுக்கு காலையில் படிப்பு, மாலையில் வேலை என அந்த மூன்று ஆண்டை முடிப்பதே அவனுக்கு ஒரு பெரிய யுகமாக கழிந்தது.

இத்தனை, கஷ்டங்கள் மத்தியில், அன்புவிற்கு பல சமையங்களில் மருந்தாய் இருப்பது அவன் பெரிதும் நேசிக்கின்ற குழல், ஆம், புல்லாங்குழல் தான். அன்பு, மிக அற்புதமாக குழல் இசைப்பான், முறையாக கற்கவில்லை என்றாலும், நாட்டியமாடும் அவனது கை விரல்களில் இருந்து வரும் இசைக்கு அவ்வளவு விசிறிகள் அவனது கல்லூரியில்.

அன்பு, பொதுவாக சினிமா பாடல்களை, இசைப்பதில்லை, இவனே புது புது ராகங்களை கைக்கு வந்ததைப்போல இசைப்பான்.

அப்படித்தான், ஒரு நாள் இவன் கல்லூரி ஆண்டு விழாவில் இவன் இசைத்த இசையை கேட்ட நடுவர் எழுந்து வந்து, அவனை கட்டி அனைத்து அவரது தங்கச் சங்கிலியை அன்புவிற்கு போட்டு, அவர் சொன்னது “அன்பு வாசித்தது சாதரணமான ராகம் அல்ல யாராலும் அவ்வளவு சுலபமாக வாசிக்க முடியாது, நான் பத்து வருடம் முன்பு ஒரு கல்யாண கானசபாவில் “திருவாளர். விஜயசங்கர் பண்டித் வாசித்து கேட்டது பின் “காம்போதி” ராகத்தை யாரும் இவ்வளவு துல்லியமாக வாசித்ததில்லை.அப்பொழுது தான் அவனுக்கே தெரிந்தது, தான் வாசித்து “காம்போதி” ராகம் என்று. உடன் இருந்த நண்பர்கள் அன்புவை மிகுந்த உற்சாகப்படுத்தியதை அவன் தனிமையில் இருக்கையில் நினைவு கூர்ந்து தானாக சிரிப்பான்..

இன்றோடு, அவன் கல்லூரி முடித்து இரண்டு ஆண்டுகள் முடிந்தது, கல்லூரி முடிந்த இந்த இரண்டு வருடமும் அவனுக்கு ஒன்றும் அவ்வளவு பெரிய வேலை கிடையாது, ஊர் மெச்சும் அளவிற்கு சம்பளம் கிடையாது. மாதம் ரெண்டாயிரம் ரூபாய் ஊதியமாய் வாங்கிக் கொண்டிருந்தான்.

அப்படிபட்டவனுக்கு, இன்று நேர்காணலுக்கு அழைப்பு வந்த அந்த பன்னாட்டு நிறுவனத்தில் வேலை கிடைத்தால், அவனது வாழ்கை முறை முற்றிலுமாக மாறிவிடும். கை நிறைய சம்பளம், தங்கும் இடம், உணவு, வைத்தியச் செலவு, வந்து போகும் செலவு என அத்துணையும் அந்த நிறுவனமே பொறுப்பேற்கும். இதை விட அவன் அம்மாவை இனி வரும் காலத்தில் நன்கு பார்த்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையும் அவனது கண் முன் கானல்நீர் போல் வந்து மறைந்தது.அந்த நேர்காணலுக்கு தன்னை நன்கு தயார் செய்து கொண்டிருந்தான். நேர்காணல் ஆகஸ்த்து மாதம் 16ம் தேதி காலை பத்து மணி. அதற்க்கு முதல் நாள் இரவு அவன் மெட்ராஸ்க்கு கிளம்ப தயாராகிக்கொண்டிருந்தான்.

அவன் அம்மாவின் முகத்தில் அவனை வெளிநாடு அனுப்புவதுபோல், அப்படி ஒரு கவலை. அன்பு, ஒரு வழியாக அவன் அம்மாவை சமாதானப் படுத்திவிட்டு, அன்று இரவு திருச்சியில் இருந்து புறப்படும் “ராக்போர்ட்” ரயிலை பிடித்து மெட்ராஸ்க்கு வந்து சேர்ந்தான். அவன், அம்மா கொடுத்த புதிய உடை, புது ஷு என அன்பு, நேர்காணலுக்கு தன்னை இரயிலிலேயே தயார் செய்து கொண்டான்.

இரயிலில் இருந்து இறங்கும் பொழுது, அவனே அவனை ஒரு பெரிய அதிகாரி வருவது போல் நினைத்துக் கொண்டான். அதற்கு சான்றாக, போர்ட்டர் இவனது பையை எடுத்து செல்லவா என்று கேட்பதும், இயலாத பெரியவர்கள் தேநீர்க்கு பணம் கேட்பதும், “டாக்ஸி” டிரைவர் ‘என் வண்டியில் வாங்க சார்’ என்று அழைப்பதும் தான். இவன் அத்துணையும் நிராகரித்து தனது கால்களை சக்கரமாக கொண்டு நடக்கத் தொடங்கினான். இரண்டு மணி நேரம் இவனது தீராத தேடல், ரிக்.ஷா காரரின் வழிகாட்டல், என அன்புவை அந்த நிறுவனத்தை சேர்ந்தடைய உதவியது.

அந்நிறுவனத்தின் சேர்ந்தவுடன் நுழைவு வாயிலில் வைக்கபட்டிருந்த பிள்ளையார் சிலையை நன்கு வணங்கி வேண்டிக்கொண்டு, உள்ளே சென்றான். உள்ளே, சராசரியாக நூற்றி ஐம்பது பேர், நேர்காணலுக்காக காத்திருப்பது அன்புவிற்கு தெரிய வந்தது. அன்புவும் தனது பெயரை பதிவு செய்து விட்டு, அங்கிருக்கும் இருக்கையில் நம்பிக்கையோடு அமர்ந்தான்.

வரவேற்பறையில் பெயர்கள் வாசிக்க ஒவ்வொருவராக நேர்காணலுக்கு சென்று வந்தனர். மதியம் உணவு இடைவெளி முடிந்ததும், வாசிக்கப்பட்ட முதற் பெயர் “அன்பு”.

அறை மணி நேரம், கழித்து முகம் மலர்ச்சியுடன் நேர்காணலின் அறையை விட்டு வெளியே வந்தான் அன்பு. அதன் பின், இரண்டு மணி நேரமாக நேர்காணலின் முடிவை தெரிந்துகொள்ள ஆர்வமாக உட்கார்ந்து கொண்டிருந்தான். நீண்ட நேரத்திர்க்கு பின், உள்ளிருந்து வந்த குட்டை பாவாடை அனிந்த பெண் ஒருத்தி வெளியே வந்து வேலைக்குரிய ஆட்களின் பெயர்களை படித்தார், படித்து முடித்ததும், மற்றவர்கள் தங்களுடைய பெயர் மற்றும் விலாசத்தை பதிவு செய்துவிட்டு கிளம்ப கேட்டுகொண்டார்.

அந்த பெண் படித்ததில் அன்புவின் பெயர் இல்லை. அதிர்ச்சியில் நிலைகுலைந்து போனான் அன்பு.அத்துனை கனவுகளும் ஒரு நிமிடத்தில் கலைந்து போனது, இரண்டு மூன்று வருடங்களாக கட்டிய மனக்கோட்டை இடிந்து விழுந்தது, அவனும் இடிந்து போய் உட்கார்ந்தான். சிறிது நேரத்திற்கு பின் தன்னை சுதாரித்துக் கொண்டு எழுந்து வெளியே சென்றான். அவனின் மனக் குமுறலுக்கு யார் வந்து ஆறுதல் சொன்னாலும், அந்நேரம், அவனைச் சமாதானப் படுத்திருக்க முடியாது.

இப்பொழுது அவனது எண்ணமெல்லாம் யாருமில்லா ஒரு வெற்றிடத்தை தேடித்தான். கொடிநடையாக ஆத்திரம் தீர நடந்தான். உப்புக் காற்று அவனை மெல்ல திசை திரும்ப வைத்தது. திரும்பினான். அவனது கண்ணுக்கு நீலப் பெருங்கடல் புலப்பட்டது, சிறிது நேரமாக தேடிக்கொண்டிருந்த ஓர் வெற்றிடம், இந்நேரத்தில் அவனுக்கு தேவைப்பட்டது. இறங்கி நடந்தான். அவனது, காலில் உப்புத் தண்ணீர் சொட்டியபடி நடந்தான், இந்த உப்புத் தண்ணீர் அவனது கண்களிலிருந்து. ஒரு வழியாக கடல் அலைகளை நெருங்கி விட்டான்.

அங்கு “பைன்” மரத்தினாலான பழுப்பு நிறத்தில் ஓர் நீள படகை கண்டான். அந்த படகின், ஒரு முனையின் அடிவாரத்தில் முதுகை தேய்த்துக்கொண்டு உட்கார்ந்தான். கொஞ்சம் கொஞ்சமாக அவனது மனக்கோட்டை இடிந்து விழுவது போல, அவன் கண் முன் வந்து வந்து மறைந்தது. அவனது கண்களும் மெல்ல கலங்க ஆரம்பித்தது. கத்தினான், கதறினான். அவன் மேல் அவனுக்கு இருந்த நம்பிக்கையை பார்த்து ஏளனமாக சிரித்தான். இரண்டு மணிநேரம் விடாது அழுத அவன், தற்கொலை என்னும் முட்டாள் தனமான முடிவை எடுத்தான்.நேரம் சரியாக நான்கு இருக்கும், அவன் கையில் இருக்கும் பணத்தை, அங்கு அழுக்கு சட்டையுடன், மணல் வீடு கட்டி விளையாடிக் கொண்டிருந்த, ஒரு குழந்தையின் பையில், பணத்தை வைத்தான். பின் கொண்டு வந்த பலகாரங்களை சுற்றிருந்த அணைத்து குழந்தைகளுக்கு பகிர்ந்து கொடுத்தான். இப்பொழுது அவன் கடல் அலைகளை நோக்கி நடந்தான், கடல் அலைகள் கொஞ்சம் கொஞ்சமாக அவனை நனைக்க ஆரம்பித்தது. இந்நேரம் அவன் மார்பளவு தண்ணீர் நிறைந்து கொண்டிருந்தது.

அவன் அம்மாவை நினைத்து, கண்களை மூடினான் மெல்ல மெல்ல அவன் மூழ்கினான்.

காற்றில் இவனது காதுகளுக்கு வந்து எட்டியது குழலின் மெல்லிய ராகம். ஆம், அன்பு அன்று கல்லூரி ஆண்டு விழாவில் வாசித்த அதே “காம்போதி” ராகம் தான், தன்னை போல் இந்த ராகத்தை இவ்வளவு சுத்தமாக வாசிப்பதற்கு நிறைய பேர் உள்ளனரா? என்ற மமதையுடன் அன்பு, வாசித்தவரை பார்க்க கரைக்கு விரைந்தான். அந்த நிமிடமே அவனது தற்கொலை முடிவு, ஓர் முடிவுக்கு வந்தது.

அப்படியே, கரைக்கு தண்ணீர் சொட்ட சொட்ட அந்த இசை அலையின் நோக்கத்தில் வந்தான். அந்த குழலின் இசை இவன் கரைக்கு வர வர மெல்ல கறைந்தது.

இந்த கரைப்பகுதியில் இரண்டு, மூன்று புல்லாங்குழல் வியாபாரிகள், குழல் வியாபாரம் செய்து கொண்டிருந்தரார்கள். இங்கு யார் “காம்போதி” ராகத்தை வாசித்திருப்பார்கள் என்று குழம்பினான். அந்நேரம், அங்கிருந்த வியாபாரிகள் சிலர், திரைப்பட பாடலை வாசித்து கொண்டிருந்தனர், இவன் செவி சுவைத்ததோ அச்சுவை யல்ல.பின், அங்கிருந்த ஒரு வியாபாரியிடம் கேட்டான், எனக்கு இந்த ஒரு பாட்டு தான் தெரியும் என்று சொல்லி ஒரு பழைய `’சிவாஜி` கணேசன்’ பாடல் ஒன்றை இசைத்து காட்டினான். இங்கு யாருக்கும் அந்த ராகத்தை பற்றி தெரியவில்லை என்று பொதுவாக கேட்க ஆரம்பித்தான். இதுவல்ல, என்று பக்கத்தில் நரைத்த தாடியுடன் ஒற்றை காலுடன் மூங்கில் கழியை ஒரு கை சாய்த்தபடி ஒரு பெரியவர் குழல் வியாபாரம் செய்து கொண்டிருந்தார், அவரிடம் சென்று, “அண்ணே, இங்க கொஞ்சம் நேரத்துக்கு முன் ஒரு சினிமா பாடல் இல்லாமல் வேறு எதாவது இசையை நீங்கள் வாசித்தீர்களா?” என்று கேட்டான் அன்பு.

அதுவா ப்பா, இப்ப தான் ப்பா அந்த பாப்பா வாசித்தது, என்று கை காட்ட, அவள் கூட்டத்தில் கலைத்து போனாள், என் வாழ்கையில இந்த மாதிரி அற்புதமான ஒரு இசையை நான் கேட்டதில்லை. “காம்போதி” ராகத்துல இப்படியும் வாசிக்கலாம்னு அந்த பாப்பா நிரூபிச்சிருச்சு.அன்பு, சின்ன புண்முருவளிட்டான், அந்த ராகத்தின் பெயரை கேட்டதும்.அவர்களை உங்களுக்கு தெரியுமா? விலாசம் எனக்கு கிடைக்குமா? என்று அன்பு கேட்டான். ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்குல, இந்த பீச்க்கு ஆளுங்க வராங்க,போறாங்க ஒவ்வொரு ஆட்களிடமுமா விலாசம் வாங்கி வைப்பது, என் வேலை இல்ல தம்பி என்று பொறுமையாக சொன்னார் அந்த பெரியவர்.

திரும்பி, பேசாமல் நடந்து சென்றான் அன்பு.

தம்பி.. நில்லு ப்பா..

ஆமா, நீ எதுக்கு அந்த பொண்ணோட விலாசம் கேக்குற என்று, அந்த பெரியவர் கேட்டார்.

இந்த நிமிஷம், நான் உயிரோட இருப்பதற்கு அந்த பெண் தான் காரணம். அவள் வாசித்த அந்த அற்புத இசை தான் எனக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது. அவர்களிடம் நான் கட்டாயம் நன்றி சொல்ல வேண்டும்.

நன்றி, என்னை காப்பாற்றியதற்கு. ஏனென்றால் முன்பு ஒரு நாள் நான் இந்த ராகத்தை இசைக்கும் பொது ஒரு பெரியவர், தற்கொலை முயற்சியை கைவிட்டதாக என்னிடம் வந்து நன்றி கூறினார். ஓர் உயிரை காப்பாற்ற கூடிய சக்தி அந்த ராகத்திற்கு உண்டு. என்று அந்த பெரியவரிடம் கூறினான் அன்பு.

அந்த பெரியவர்க்கு இவன் மேல் சந்தேகம் எழுந்தது, இவன் உண்மையிலே குழல் கற்றவனா? அப்படியே கற்றவன் என்றால் ‘காம்போதி’ ராகத்தை வாசிக்கும் திறன் கொண்டவனா? என்று பல வினா அந்த பெரியவரிடத்தில் இருந்து எழுந்தது.

பெரியவர் இவனை பரிசோதிக்க “சரி நாளை இதே நேரம், இதே இடம் வா”, நான் உனக்கு அந்த பெண்ணை அறிமுகம் செய்து வைக்கிறேன் என்றார் அந்த குழல் வியாபாரி.

நாளை இந்நேரம், வரும் வரை அதே இடத்தில், அந்த நீள படகின் அடிவாரத்தில் படுத்துக் கிடந்தான். இரவு கழிய, வானம் மெல்ல, வெளுக்கத் தொடங்கியது.

அன்பு, புத்துணர்ச்சியுடன், இன்று எப்படியாவது அந்த பெண்ணை பார்த்து விடலாம் என்ற நம்பிக்கையில் அன்று காலை எழுந்து, சூரியனை வணங்கிவிட்டு கடலிலே குளித்து வந்தான்.

அன்புவினால், அந்த ‘ராகத்தை’ கொஞ்சம் கூட மறக்க முடியவில்லை. இரு செவிகளிலும் மாறி மாறி ஒலித்துகொண்டே இருந்தது. கையில் குழல் இருந்தால் இந்நேரம் அந்த ராகத்தை அவன் வாசித்திருப்பான். மாலை நேரம் வரும் வரை அந்த இசையை வாசித்தவள் இப்படி தான் இருப்பாள் என்று ஒரு அந்த பெண்னின் வடிவத்தை கற்பனையில் உருவாக்கினான்.

அவன் காத்திருக்கும் நேரம், குறைந்து கொண்டே வந்தது. மாலை நேரம் நெருங்கியது. கடற்கரையில் கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் சேரத் தொடங்கியது.

அன்பு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும், அந்த குழல் வியாபாரி தூரத்தில் வருவதை கண்டு ஆனந்தம் அடைந்தான். எப்படியாவது அவளை சந்தித்தவுடன், ஊருக்கு செல்ல முனைப்புடன் இருந்தான் அன்பு.

ஐயா, நீங்கள் சொன்னதுபோல் நான் அவர்களை பார்க்க மிகுந்த ஆவலுடன் உள்ளேன் ஐயா, என்றான் அன்பு. அவனின் நேர்த்தியான பேச்சும், செயலும் அந்த குழல் வியாபாரியை வெகுவாக கவர்ந்தது.

அந்த பலூன் கடையில், ஒரு பெண் சிவப்பு தாவணி போட்டிருப்பாள். அவள் தான் உன் செவி சுவைத்த ராகத்தை வாசித்தவள். பெயர் கயல்விழி. என்றார் குழல் வியாபாரி.

மிக்க நன்றி ஐயா..!

அந்த பலூன் கடைக்கு விரைந்தான் அன்பு.

கயல்விழி..!

யார் அது?? என்னை அழைத்தது, என்றாள் அவள்.

அன்பு, அவளிடம் நன்றி என் உயிரை காப்பாற்றியதர்க்கு என்று கூறினான்.

யார் நீங்க? எதற்கு என்னிடம் நன்றி கூறுகிறீர்கள்?

“என் மூச்சு இந்த காற்றில் கலக்க, உங்களின் மூச்சு தாங்க காரணம்”

சற்று விளக்கிச் சொல்லுங்கள், எனக்கு ஒன்றும் விளங்கவில்லை என்றாள் கயல்.

அன்பு, நடந்ததை கூறினான். பின் நன்றி தெரிவித்து கிளம்பினான்.

கடைசியாக, நீங்கள் ஒரு முறை “காம்போதி ராகம்” வாசிக்க கேட்டு சென்றான் அன்பு.

இதைவிட, வேறு யாரும் அவளுக்கு சான்றிதழ் தர முடியாது. இந்நிமிடமே அவள் பல விருதுகளுக்கு சொந்தக்காரர் ஆகிவிட்டார்.

அன்பு கடற்கரையை விட்டு கிளம்பும் வரை, அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை கயல்விழி ‘பார்வை இழந்தவள்’ என்று.

ஆம், கயல்விழி பிறவியில் இருந்து பார்வை இழந்தவள்.

“அவள் பெயரில் விழி கொடுத்த கடவுள், நிஜத்தில் வைக்க மறந்துவிட்டார் போல”

அன்றிரவு, அன்பு தன் ஊரான திருச்சிக்கு, எக்மோரில் இருந்து இரயில் ஏறிச் சென்றான்.

இரயில் பயணம் முழுவதும், கயல்விழியின் நியாபகம் தான்.

வட்ட வடிவிலான அவள் முகத்தை, நிலவுக்கு ஒற்றுமை படுத்தலாம். அப்படியானால், நீங்களே தெரிந்து கொள்ளுங்கள் அவளின் முக வடிவமைப்பை.

அன்புவும், கயலின் மீது காதல் வயப்பட்டான். அன்றிரவு இரயில் பயணம், அவள் நியாபகத்திலேயே கழிந்தது.

மறுநாள் காலை, திருச்சிக்கு வந்து சேர்ந்தான். நேற்றுடன் அவன் அம்மாவை பிரிந்து மூன்று நாட்கள் ஆனது.

“வீட்டின் கதவை தட்டினான்”

அம்மா… அம்மா… கதவை திறங்க..

சிறிது நேரம் ஆனது, கதவை திறக்கப்படவில்லை.

மீண்டும் தட்டினான்.

பின், ஒரு வலுவிழந்த குரலுடன், “வரேன் ப்பா”… ஒரு நிமிஷம்… என்ற சத்தம் கேட்டது. அவன் அம்மா அன்று உடல் நிலை சரியில்லாமல் இருந்தாள்.

தொட்டுப் பார்த்தால், உடம்பு நெருப்பாய் கொதிக்கிறது. அக்கம் பக்கத்தினரை, உதவிக்கு அழைத்து, பக்கத்தில் இருக்கும் “ஸ்ரீராம் க்ளினிக்” அழைத்து சென்றான்.

அங்கிருந்த மருத்துவர், பயப்படும் படி எதுவும் இல்லை. ஓய்வில்லாமல் உழைத்ததே இந்த காய்ச்சலுக்கு காரணம் என்று கூறினார்.

மருந்து, மாத்திரை வாங்கி வீட்டிற்க்கு அழைத்து வந்தான் அன்பு.

அவன் அம்மா, நேர்காணலின் முடிவைப் பற்றி கேட்டாள். அன்பு உடனே, அன்னையின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு, என்னை தேர்வு செய்து விட்டார்கள், இன்னும் இரண்டு மாதத்தில் பணி நியமனம் தான். அதுவரை அந்த நிறுவனத்திலேயே பயிற்சி ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்று கூறி தன் மனதை திடப்படுத்திக் கொண்டான்.

பிள்ளைக்கு, வேலை கிடைத்து விட்டது என்ற சந்தோஷத்தில், மகிழ்ச்சியில் அவன் அன்னையின் உடல் நிலை, சில நாட்களில் முற்றிலும் தேறியது.

தனிமையில் இருக்கும் அன்புவின் அன்னைக்கு, மனதில் ஏகப்பட்ட குழப்பங்கள். சரி, பிள்ளைக்கும் இப்பொழுது ஒரு நல்ல வேலை கிடைத்துள்ளது, நமக்கும் அடிக்கடி உடல் நிலை சரியில்லை, பேசாமல் நான் நன்றாக இருக்கும் பொழுதே, அவனுக்கு ஒரு திருமணம் செய்திடுவோம் என்று தீர்மானித்தாள் அவள் அன்னை ரத்தினாம்பாள்.

இந்த செய்தியை அறிந்த அன்பு, எனக்கு உண்டான பயிற்சி காலம் இன்னும் இரண்டு நாட்களில் துவங்குகிறது. என்று சொல்லி அன்று இரவே மெட்ராஸ்க்கு இரயில் ஏறிப் புறப்பட்டான்.

மறுநாள், மெட்ராஸ்க்கு வந்து அடைந்தான்.

அன்பு, தன் பொழுதை காலை முழுவதிலும் வேலை தேடுவதிலும், மாலை முழுவதும் தன் காதலை எப்படியாவது கயல்விழியிடம் சொல்லுவதிலும் செலவிட்டான்.

ஒரு வாரம் முடிந்தது, வேலையும் கிடைக்கவில்லை, தன காதலையும் அவளிடம் சொல்லவில்லை.

வெறுப்படைந்த அன்பு, மறுநாள் வேலை தேட செல்லவில்லை, காலையில் இருந்தே கடற்கரையின் மணற்பரப்பிலே படுத்து இருந்தான். பின், இன்று எப்படியாவது தன காதலை சொல்லிவிட வேண்டும் என்ற ஒரே முனைப்புடன் இருந்தான்.

மாலை மஞ்சள் வெயில் மெல்ல அவன் முகத்தை நினைத்தது. ஆம், அந்நேரம் சுடும் வெயில் கூட அவனுக்கு குளுமையாக தான் இருந்தது. அன்று சனிக்கிழமை என்பதால் கடற்கரையில் கூட்டம் எப்பொழுதும் விட சற்று அதிகமாகவே காணப்பட்டது.

இன்று, இவ்வளவு நேரம் ஆகியும் கயல்விழி அந்த கடைக்கு வரவில்லை. அந்த பலூன் கடையும் வேறு ஒருவரால் திறக்கப்பட்டது. அவரிடம் விசாரித்த அன்பிற்கு காத்திருந்தது ஒரு அதிர்ச்சி.

அந்த கடையை அவர்க்கு விற்றுவிட்டு, நாளை அவள் சொந்த ஊரான ‘மங்களூருக்கு’ அவள் தோழியை அழைத்து செல்ல இருக்கிறாளாம்.

அடடா, இத்தனை நாள் காத்திருந்தது வீணாயிற்றே, நேற்றே சொல்லி இருக்கலாமோ? என்று பல யோசனைக்கு மத்தியில் அன்பு.

பின், அந்த கடையில் கயல்விழியின் தனது புலாங்குழலை பலூன் கம்பிகளுக்கு மத்தயில் கட்டியிருந்ததை பார்த்தான், மிகவும் அழகாய் வடிவமைக்க பட்டிருந்தது. வழக்கத்திற்கு மாறாக இருந்த அந்த புல்லாங்குழலை சிறுது நேரம் உற்றுப் பார்த்தான்.

அண்ணா, இந்த புல்லாங்குழலை நான் எடுத்துக் கொள்ளவா? என்று கேட்டான். நான் வைத்து என்ன ப்பா செய்யபோகிறேன் என்று அந்த குழலை எடுத்து, அவனிடம் கொடுத்தான்.

அந்த குழலை, கையில் வாங்கியதும், அவள் பக்கத்தில் இருப்பது போல், அன்பு எண்ணற்ற மகிழ்ச்சி அடைந்தான், அந்த மகிழ்ச்சியோடு அவன் அந்த குழலில் தனக்கு மிகவும் பிடித்த, தனக்கு உயிர் கொடுத்த அந்த “ராகத்தை” வாசிக்க ஆரம்பித்தான்.

மறுமுனையில், தான் கடையில் வைத்த புல்லாங்குழலை, எடுத்து போவதற்காக கயல் வர, அவள் அன்பு வாசிக்கும் இசையை கேட்டாள், உடனே பக்கத்தில் வந்த தோழியை மறந்து விட்டு அந்த இசை அலையின் நோக்கில் அவள் கைகளை காற்றில் அசைத்துக்கொண்டே, நடந்து வந்தாள்.

தூரத்தில், கயல் வருவதை பார்த்த அன்பு, ஆனந்தம் அடைந்தான், மறுநொடியே அதிர்ந்து போனான். கயல் அன்புவிடம் நெருங்கி வந்து அவன் முகத்தை தடவி, யார் நீங்கள்? இவ்வளவு அழகாக இந்த ராகத்தை இசைக்கிறீர்கள் என்றாள்.

மறுபக்கம், துக்கத்தில் வாயடைத்து போன அன்பு, உங்களுக்கு…. கண்கள்…. என்று இழுத்தான்.

அன்று பார்த்த பெரியவர், பக்கத்தில் வந்து ஆமா ப்பா, இந்த பொண்ணுக்கு பிறவியில் இருந்தே பார்வை கிடையாது என்றார். நான் கூட அன்று உனக்கு குழல் வாசிக்க தெரியுமா என்று சந்தேகப்பட்டேன், அது தவறு என்று இப்பொழுது நான் அதை உணர்கிறேன் என்று அந்த பெரியவர் அன்புவிடம் மன்னிப்பு கேட்டார்.

சில, நிமிடங்கள் அந்த கடற்கரையின் ஓர் பகுதியை, அலைகள் இழுக்கவில்லை. அன்புவின் இசை தான் இழுத்தது. அங்கு சிறிது நேரத்திற்க்கு பார்வைகள் மட்டுமே பேசிக்கொண்டிருந்தது.

கயல்விழியின் தோழி அவளை ஊருக்கு அழைக்க, உடன் வர மறுக்கிறாள் கயல்விழி. காரணம் தான் சிறு வயதிலயே கண்ட கனவு இன்று நினைவானதை கண்டு. அப்படி என்ன கனவு என்றால்,

கயல்விழியின் தந்தை தான், அவளுக்கு குழல் இசைக்க கற்று கொடுத்தது, அப்படி சொல்லி கொடுக்கும் பொழுது, குறிப்பாக இந்த ராகத்தை சொல்லிக் கொடுக்கும் பொழுது, இந்த ராகம் அவ்வளவு சுலபம் அல்ல, அவ்வளவு சீக்கரம், யாருக்கும் பயிற்சி ஆகாது. ஆனால், இந்த ராகத்தை கற்கும் பொழுது, இசைக்கும் பொழுது மனம் தெளிவடைகிறது, அறிவு விரிவடைகிறது. மேலும் எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், நன்கு குழல் வாசிக்க தெரிந்தவனே உன்னை திருமணம் செய்ய போகிறான், முக்கியமாக இந்த ராகத்தை இசைக்க தெரிந்தவனே உன்னை திருமணம் செய்ய போகிறான். அப்படிதான் என் மனதிற்கு தோன்றுகிறது என்றார். அவர் சொன்னது போலவே அன்புவை சந்தித்ததும் கயல்விழிக்கு மனதில் அப்படிப்பட்ட ஒரு சந்தோஷம்.

அன்பு, தன் காதலை முதலில் சொன்னான், கயல்விழி பதில் புன்னகையாக அந்த கடற்கரையை வளம் வந்தது. அருகிலிருந்த பெரியவர் அவனை அழைத்து, நல்லா யோசித்து தான் இந்த முடிவை எடுத்தாயா? அந்த பெண் பார்வையற்றவள்.

நன்கு தெரியும் ஐயா.

காதலுக்கும், இசைக்கும் பார்வை தேவையில்லை. இரண்டிற்கும் நல்ல மனம் இருந்தால் போதும், இவை இரண்டும் பார்வை உள்ளவர்களுக்கு கூட அவ்வளவு அழகாக அமையாது. ஆயிரத்தில் ஒருவருக்கு தான் இப்படி அமையும், இல்லை “ஆயிரத்தில் இருவருக்கு தான் இப்படி அமையும்”.

உன் நல்ல மனசுக்கு நீ நல்லா இருக்கனும் தம்பி..!! என்று வாழ்த்தினார் அந்த பெரியவர்.

அவளின் தோழியோ, கயல்விழியின் அன்னையின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு ஊருக்கு அழைத்தாள். இந்த விஷயத்தை அறிந்த அன்பு, தன் கயல்விழியை சமாதானப் படுத்தி, “நீ இன்று உன் தோழியுடன் கிளம்பிப் போ, அம்மாவின் உடல் நலத்தை கவனி, நீ அருகில் இருந்தால் அவர்களுக்கு சற்று ஆறுதலாக இருக்கும் அல்லவா.”

முடிந்தவரை சீக்கிரம் வா, நீ வரும் வரையில் தினமும் மாலை, நான் இந்த கடற்கரைக்கு வருவேன், அதற்குள்ளே நானும் ஒரு நல்ல வேலையை தேடிக் கொள்கிறேன் என்றான்.

பல நிறுவனத்திற்கு ஏறி இறங்கிய, அன்புவிற்கு “பி-ப்பி-எல்” நிறுவனத்தில் ஒரு வழியாக வேலை கிடைத்தது.

வேலை கிடைத்ததும், அவன் அன்னைக்கு கடிதம் ஒன்று எழுதினான். இதுபோல், வேலையெல்லாம் நன்றாக சென்று கொண்டிருக்கிறது, அடுத்த வெள்ளிகிழமை ஊருக்கு வருகிறேன், உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள் என்று எழுதி இருந்தான்.

பிள்ளையை பிரிந்து, தனிமையில் இருக்கும் அந்த அம்மாவுக்கு அந்த கடிதம் பெரும் ஆறுதலாக இருந்தது. எந்நேரமும் அவன் திருமணத்தை பற்றியே, சிந்தித்து கொண்டிருக்கும் அவள், இம்முறை அவனது திருமணதிற்கு எப்படியாவது ஒரு சின்ன அடிக்கல்லாவது நாட்ட வேண்டும், என்ற நோக்குடன், அக்கம் பக்கத்தினர், சுற்றார் உறவினர் அனைவரிடத்தும், தெரிந்தவர்கள் அனைவரிடத்திலும் தெரிந்த பெண் ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள் என்று சொல்லி வைத்திருந்தாள்.

அன்பு, வியாழக்கிழமை இரவே ஊருக்கு வர, இரயிலில் ஏறிப் புறப்பட்டான், மறுநாள், காலை அவன் வீட்டின் வாசலில் கட்டபடிருந்த பந்தலை கண்டு அதிர்ந்து போனான், என்னமோ ஏதோ என்று பயந்து உள்ளே சென்றான். உள்ளே போனதும் தான் தெரிந்தது இவன் எதிர்பார்த்த அதிர்ச்சியை விட அது மேலானது என்று.

ஆம், அன்புவின் அம்மா, இவனுக்கு நிச்சயதார்த்தம் செய்ய ஏற்பாடு செய்திருந்தார்.

“என்னடா அன்பு இவ்வளவு நேரம் கழுச்சி வர??”

“என்னமா, இதெல்லாம்..”

“சரி, பின் பேசுவோம், பெண் வீட்டாரெல்லாம் வந்து கொண்டு இருக்கிறார்கள்..”

சீக்கிரம், குளித்து தயார் ஆகுப்பா, என்று அன்புவிற்கு அவன் அம்மா ஆசை வார்த்தைகள் கூறி அனுப்பி வைத்தாள். தோட்டத்தில் இருந்த சமையல் காரரிடம், இதோ எடுத்து வருகிறேன் என்று பேசியபடி சென்றாள் ரத்தினாம்பாள்.

அன்பு எது சொன்னாலும் அதை கேட்கும் மனநிலை, அவன் அம்மாவிற்கு இல்லை, அவன் அம்மாவிற்கு பிள்ளைக்கு எப்படியோ நல்ல இடத்தில் திருமணம் செய்யப் போகிறோம் என்ற மகிழ்ச்சியும், பூரிப்பும் மட்டுமே.

ஆனால், அன்புவிற்கோ மனம் முழுவதும் கயல்விழியின் நினைப்பு மட்டும் தான்.

நேரம் நெருங்கிகொண்டே இருந்தது, அன்பு இன்னும் தயார் ஆகாமல் இருந்தான், எப்படியாவது தன அன்னையிடம் சொல்லி இந்த நிச்சயத்தை நிறுத்த முயற்சித்து, அவன் அன்னையை தனியே அழைத்தான்..

“அம்மா.., ஒரு நிமிடம்..”

“டேய்.. அன்பு இன்னும் நீ தயார் ஆகவில்லையா.??”

“இல்ல மா, எனக்கு இப்ப இந்த நிச்சயம் வேண்டாம்”

“ஏன் ப்பா, உனக்கு இல்லனாலும் இந்த அம்மாவுக்காக செய்த்துக்கோ ப்பா என்றாள்”.

“நான் கயல்விழியை காதலிக்கிறேன்”, என்று சொல்ல அன்புவிற்கு அந்நேரம் மனதில் தைரியம் இல்லை.

சரி நடப்பது, எதுவாக இருந்தாலும் பார்த்துக்கொள்வோம், என்று உன்மையை சொல்ல ஆரம்பித்தான்.

அந்நேரத்தில் அன்புவிற்கு ஒரு சிந்தனை தோன்றியது.

பார்வையற்றவளை காதலிக்கிறேன் என்று சொன்னால், எந்த தாய் தான் ஒற்றுக்கொள்வாள்..!! அதனால், அதனை மட்டும் மறைத்துச் சொன்னான்.

எனக்கும், கயல்விழி என்ற பெண்ணுக்கும் ஏற்கனவே திருமணம் நடந்தது. அதை உங்களிடம் எப்படிச் சொல்வேன் என்று தான் இத்தனை நாள் தவித்துக் கொண்டிருந்தேன் என்று அன்பு சொல்ல, இந்த விஷயத்தை கேட்டவுடன் மயக்கம் அடைந்து கீழே விழுந்தான் அவன் அன்னை ரத்தினம்.

பின், அவளின் மயக்கம் தெளிய வைக்கப்பட்டு, அன்பு, அன்னையின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டான்.

பின், நிச்சயத்திற்கு வந்த அனைவரிடமும், மன்னிப்பு கேட்டு அந்த நிச்சயத்தை நிறுத்தினாள் அவன் அன்னை ரத்தினம்.இரண்டு நாட்கள் ஆனது, அன்புவும் அவன் அன்னையும் பேசி…

அன்பு மெல்ல, பேச அரம்பிதான்..

அதை காதில் கூட வாங்கவில்லை அவன் அன்னை. பின் கெஞ்சி, கதறி அவன் அன்னையை சம்மதிக்க வைத்தான்.

ஆனால், அவன் அன்னைக்கு கயல் பார்வை இழந்தவள் என்று மட்டும் சொல்லவில்லை.

ஒருவழியாக, பட்டணத்திற்கு சென்று தன் காதலியை சந்தித்து, அங்கு இருக்கும் ஒரு பெருமாள் கோவிலில், தாலியை கட்டி தன் வாழ்க்கையின் பிற்பாதியை துவங்கினான் அன்பு.

திருமணம் ஆன, முதல் நாள், கயல் உன் விருப்பமான இடத்தைச் சொல் அங்கு செல்வோம், என்றான் அன்பு.

கயல் சொன்னதை அடுத்து, அன்று அவர்கள் இருவரும், அவள் எப்பொழுதும் செல்லும் ஓர் அனாதை ஆசிரமத்திற்கு சென்றனர்.

அங்கிருக்கும், பிள்ளைகளுடன் நேரம் செலவிட்டு, கையில் கொண்டுபோன இனிப்புகளையும், பலகாரங்களையும் எல்லோரிடமும் பகிர்ந்து கொடுத்தான் அன்பு.

அங்கிருக்கும், மாமரத்தின் அடிவாரத்தில் கயல்விழியுடன் அந்த ஆசிரமத்தின் நிர்வாகியுடன் பேசிக் கொண்டிருந்தார்.

இந்த காலத்தில், உடம்பு நல்லா இருப்பவர்களே இங்கு வர ஆயிரம் முறை யோசிகிறார்கள், இருந்தும் நீ மட்டும் மாதம் இருமுறை வந்து, உன்னால் இயன்ற உதவியை செய்கிறாயே என்றார் அவர்.

ஒரு விவசாயின் கஷ்டம், இன்னொரு விவசாயிக்கு தான் தெரியும், ஒரு ஓட்டுனரின் கஷ்டம் இன்னொரு ஓட்டுனருக்கு தான் தெரியும், அதுபோல, ஒரு மாற்றுத்திறனாளியின் கஷ்டம் இன்னொரு மாற்றுத்திறனாளிக்கு தான் தெரியும். என்றால் அவள்.

உன்னை நினைத்தால் பெருமையாக இருக்கிறது என்றார் அந்த ஆசிரமத்தின் நிர்வாகி. அந்த நிர்வாகி கையில் ஒரு பச்சிளம் குழந்தை நெளிந்து கொண்டிருந்தது, அந்த குழந்தையின் பிஞ்சு விரல்கள், கயல்விழியின் கன்னத்தை தடவ. வெட்கத்தில் கயல்விழியின் கன்னங்கள் சிணுங்கியது.

கயல்விழி உடனே அந்த குழந்தையை பற்றி விசாரித்தாள், அதற்கு அந்த நிர்வாகி மதர். நான்சி ஜோசப், இந்த குழந்தையை நேற்று தான் நம் ஆசிரமத்தின் வாசலில் உள்ள, வரவேற்பறையில் இருந்தது.

குழந்தையை பற்றி காவல் துறையிடம், புகார் அளித்துள்ளோம், அதற்கு சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மாதேசன் அவர்கள், குழந்தையின் பெற்றோர் கிடைக்கும் வரை நீங்களே அந்த குழந்தையை பார்த்துக் கொள்ளுங்கள், என்று கேட்டதின் பேரில் இந்த குழந்தையை பார்த்துகொள்கிறேன். அப்படி அவர்கள் பெற்றோர் யாரும் கிடைக்கப்படவில்லை என்றால் கடவுளுக்கு இன்னொரு குழந்தை பிறந்துள்ளது என்று, நம் ஆசிராமத்திலே வளரட்டும்.

நான்சி, சொன்னதை கேட்டு மிகவும் மனவேதனைக்கு உள்ளானாள் கயல், பின் அன்புவை தனிமையில் கூப்பிட்டு, எனக்கு திருமணப் பரிசு தரக் கேட்டாள்.

என்ன வேண்டும் கேள்? என்றான் அன்பு.

கயல்விழி, எனக்கு அந்த நிர்வாகி கையில் இருக்கும் அந்த பச்சிளம் குழந்தை தான் வேண்டும்.

அன்பு உடனே, உன்னகென்ன பைத்தியமா??

ஏற்கனவே நான் உன்னை திருமணம் செய்ததற்கே என் வீட்டில் எனக்கு நல்ல மரியாதை, இதில் நீ வேறு..

கயல்விழி, மௌனமுற்றாள். அவளின் கண்களும் அந்த குழந்தைக்காக ஏங்கத் தொடங்கியது.

திருமணம் ஆகி, மனைவி கேட்ட ‘முதல் பரிசு’ என்பதால், என்று அந்த நிர்வாகியுடன் பேசினான் அன்பு.

சரி, ஊருக்கு போய் வந்தபின் குழந்தையை வாங்கிக்கொள்வோம், அதுவரை குழந்தை மதரிடமே இருக்கட்டும்.

ஒருவழியாக, கயல்விழி சமாதாமானாள்.

மறுநாள், கயல்விழியை ஊருக்கு அழைத்து செல்ல, அன்புவின் அம்மா அவர்கள் இருவரையும் ஆரத்தி எடுத்து உள்ளே வரவேற்றார்.

அக்கம் பக்கத்தினர், உறவினர்கள், அன்புவின் அம்மாவை புறம் பேசி வந்தனர். அதை துளியும் கண்டுகொள்ளாமல், பிள்ளைகளின் சந்தோஷத்தை எண்ணி தன் மனதை தானே ஆறுதல் படுத்திகொண்டாள்.

கயல்விழியும், ஒரு வழியாக சமாளித்து, அன்றைய தினத்தை கழித்தாள், எங்கு கயல்விழியை பார்வையற்றவள் என்று கண்டு பிடித்துவிடுவார்களோ என்று, அன்பு ஊரிலிருந்து வருவது போல் இவனே ஒரு தந்தியை, எழுதி அவன் வீட்டிற்க்கு அனுப்பினான்.

அந்த தந்தியை, படித்த அவன் அம்மா, அதிர்ச்சியுற்றாள். கயலின் அம்மாவிற்கு, உடல் நிலை மோசமாக இருக்கிறதாம், உடனே கிளம்பி வர சொல்லி தந்தி வந்துள்ளது. அன்பு, இந்த விஷயம் கயல்விழிக்கு தெரிய வேண்டாம், நீ அவளை வெளியே கூப்பிட்டு போவது போல், அவள் அம்மாவிடம் கூடிச் செல்.

அன்பு நினைத்தது போலவே, அவன் அம்மாவே அவளை ஊருக்கு கூடிச் செல்ல சொன்னாள். இருவரும் அம்மாவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி கிளம்பினார்கள்.

அன்புவை, அவன் அம்மா தனிமையில் அழைத்து…

அன்பு, உனக்கு உண்மையிலே அன்பான மனசு தான் ப்பா…

என்னம்மா சொல்றீங்க, எனக்கு எதுவும் புறியல..

போதும் ப்பா நடித்தது, இன்னும் எத்தனை நாளுக்கு தான் ரெண்டு பேரும் நடிப்பீங்க..கயல், பார்வையற்றவள் என்ற விஷயத்தை ஏன் என்னிடம் மறைத்தாய்.

இல்ல மா, நீங்க ஒப்புக்கொள்ளமாட்டீர்கள் என்று நினைத்தேன்…

நான் உன் அம்மா ப்பா, நீ அந்த பெண்ணுக்காக நீ உன் வாழ்கையே கொடுக்க முற்ப்பட்ட பிறகு, நான் எப்படி ப்பா ஒப்புகொல்லாமல் போவேன்..

கயல்விழியின் இரத்தப் பிரிவு என்னது என்று கேட்டு அறிந்தாள் அவன் அம்மா..

கயல் இங்கு இயல்பு நிலையில் இல்லை, ஒருவர் தன்னுடைய வீட்டில் மட்டும் தான் சுதந்திரத்தை எதிர்ப்பார்க்க முடியும். மேலும் அக்கம் பக்கம் பின் புறம் பேசி மகிழ்வார்கள். இதையெல்லாம் தவிர்க்க நீங்கள் இருவரும் பட்டனத்திர்க்கே செல்லுங்கள்.

அன்புக்கு, வீட்டை விட்டு வர மனதில்லை இருந்தாலும்,

“சில மெய், பொய்யாக இருந்தால் மட்டுமே, பொய் மெய்யாக இருக்கும்” என்ற அவன் அம்மாவின் கூற்றை மனதில் வைத்துக்கொண்டு, சரி ம்மா, நான் சென்று வருகிறேன். ஊருக்கு போனதும், வாடகை வீட்டின் விலாசத்தை தபாலில் அனுப்புகிறேன், நீங்கள் அடிக்கடி வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டு அன்பு அவன் மனைவியை கூட்டிக்கொண்டு மெட்ராஸுக்கு கிளம்பினான்.

இரயில் பயணங்களில், அன்பு தன் வாழ்கையின் பயணத்தை பின்னோக்கி பார்த்து, கயல்விழியிடம் பகிர்ந்துகொண்டான்.

அன்புவின் அம்மா, அவன் மேல் வைத்திருக்கும் அன்பையும், புரிதலையும் பார்க்கும் பொழுது, நான் தெரியாமல் அன்புவின் வாழ்கையில் குறுக்கிட்டேனோ என்று சிந்திக்க ஆரம்பித்தாள் கயல்.

அதிகாலை, இருவரும் மெட்ராஸ்க்கு வந்து அடைந்தனர். அன்பு வழக்கம்போல் வேலைக்கு கிளம்பி சென்று விட்டான்.

தனிமையில் இருந்த கயல், அன்புவின் வாழ்கையை நான் இருட்டாகிவிடேன் என்று, பல தவறான முடிவுகளை எடுக்கிறாள், பின் எதையோ யோசித்து அதை கைவிடுகிறாள்.

அவள் மனதில் இருந்த குழப்பங்கள், பல மணி நேரம் ஆகியும் அவளிடம் இருந்து அகலவில்லை.

தன மன நிம்மதியை தேடி, அவள் வழக்கமாக செல்லும் ஆசிரமத்திற்கு சென்றாள். பிள்ளைகளுக்கு குழல் கற்றுகொடுத்தாள்.அதில் ஒரு குழலின் சப்தம் மட்டும் இவள் சொல்லிக்குடுத்ததை இசைக்காமல், வேறு எதையோ இசைத்து கொண்டிருந்தது. அந்த இசை அலையை நோக்கி அவள் சென்றாள்.

தம்பி…

என்ன அக்கா….

யாரு உனக்கு இத வாசிக்க கற்று கொடுத்தது?

நான் சும்மா ஊதனன், நல்லா இருக்குது ல… என்றான் அந்த சிறுவன். அவளுக்கு தான் தெரியும், அதுவும் ஒரு வகை கீர்த்தனை என்று.

உன் பேர் என்னபா என்றாள் கயல்.

அவன் உடனே “அன்பு” என்றான். இவளுக்கோ எண்ணற்ற மகிழ்ச்சி…

என்னுடன் வீட்டுக்கு வருவாயா என்றாள்,

நீங்க எனக்கு என்ன தருவீங்க என்றான் அந்த சிறுவன். நான் உனக்கு நல்லா குழல் வாசிக்க கற்றுகுடுக்கிறேன் என்றாள் அவள்.

வேறு..?

உனக்கு என்ன வேண்டுமோ, அதை வாங்கி தருகிறேன், என்று அந்த சிறுவனை கட்டிப்பிடித்து அவன் எப்படி இருக்கிறான் என்பதை அறிந்து கொண்டாள் கயல்.

மாலையில், அன்பு வீடு வந்ததும் அவனுக்கு காத்திருந்தது அதிர்ச்சி. வீடு வாசற்படியில், அந்த சிறுவன் அன்பு உட்காந்து கொண்டிருந்தான், யாரப்பா நீ?

அன்பு என்றான் அவன்.

சற்று குழம்பியே உள்ளே சென்றான்.

அங்கு, கயல் ஊருக்கு கிளம்பிகொண்டிருந்தாள், உடன் அவள் தோழியும் இருந்தாள்.

என்ன நடந்தது, எங்கு போகிறாய் கயல், என்று கேட்டான் அன்பு.

நான் என் அம்மா வீட்டிற்கு போகிறேன், என்று சொன்னாள்.

என்ன திடீரென்று, அம்மாவிற்கு எதாவது உடல்நிலை சரியில்லையா ? என்னிடம் சொன்னால் நான் அழைத்து செல்வேன் அல்லவா என்றான் அன்பு.

இல்ல அன்பு.. நான் சொல்வதை சிறிது நேரம் பொறுமையாக கேளுங்கள்.

ஊரில், உங்கள் அம்மா பேசியதை நானும் கேட்டேன், பின் தான் தெரிந்தது உங்களுக்கும் உங்கள் அம்மாவிற்கும் இருந்த புரிதலை..

நானும் எல்லாரும் போல ஒரு உயிர் தான், நான் கேட்காததை கொடுத்த கடவுளுக்கு, எல்லோரிடமும் இருக்கும் பொருளை எனக்கு கொடுக்க தவறிவிட்டான்.

எனக்கே, என் மேல் தாழ்வு மனப்பான்மையாக இருக்கிறது, நீங்கள் ஏதோ தியாகம் செய்துவிட்டதாக தோன்றுகிறது, நீங்கள் பாவப்பட்டு தான் என்னை மனமுடித்தீர்கள் என்று தோன்றுகிறது. அதனால் உங்களை விட்டு நான் சிறிது காலம் பிரிந்து இருக்கலாம் என்று முடிவு செய்துவிட்டேன்.

இதில், பதட்ட படுவதற்கு ஒன்றும் இல்லை.

நான் எப்பொழுது வருவேன் என்று சொல்ல மாட்டேன், சில மாதங்களும் ஆகலாம், சில வருடங்களும் ஆகலாம்.

என்னில் இருக்கும் குழப்பம், அகலும் வரை, நீங்கள் சற்று பொறுத்திருக்க தான் வேன்டும்.

நான் உங்களை சந்திக்கும் அடுத்த சந்திப்பு தீர்மானிக்கும், என் வாழ்கை பயணம் உங்களுடனா என்று..?

அன்றும், நீங்கள் சற்றும் மாறாமல் என்னை ஏற்பதற்கு தயாராக இருந்தால், நாம் ஒன்றாக வாழ்வோம். அப்பொழுது எனக்கும் எண்ணில் இருக்கும் அந்த தாழ்வு மனப்பான்மை முற்றிலுமாக முறிந்து போகும். இதுவே என் எடுத்த முடிவு. இதற்க்கு நீங்கள் முழு மனதோடு சம்மதிக்க வேண்டும்.

அதுவரைக்கும் ஆசிரமத்தில் கண்ட, உங்கள் பேர் கொண்ட இந்த சிறுவனை நான் அழைத்து செல்கிறேன். இவன் நன்கு குழல் இசைப்பான் என்றாள் கயல்.

சரி, உன் முடிவிற்கு நான் சம்மதிக்கிறேன், ஆனால் இந்த வீடு உன் வருகைக்காக என்றுமே திறந்திருக்கும் என்றான் அன்பு.

மறுநாள், அன்பு வேலைக்கு செல்லவில்லை.

தனிமையில், படுத்து யோசித்து கொண்டிருந்தான். கயல்விழி இப்படி நினைக்க காரணம் என்ன என்று ஏதேதோ, கற்பனையில் மூழ்கி கிடந்தான்.

இரண்டு நாட்கள் பிறகு, அவன் வேலைக்கு கிளம்பினான்.

கிளம்பும் பொழுது, கயல் திருமண நாளன்று கேட்டது அவன் நினைவில் வந்தது.

உடனே ஆசிரமத்திற்கு சென்றான், மதர். நான்சியை சந்தித்து நடந்ததை கூறி, அன்று கயல் கேட்ட அந்த குழந்தையை கேட்டான் வளர்பதற்காக. வேண்டாம் அன்பு, பெண் துணையில்லாமல் நீ குழந்தையை வளர்ப்பது மிகவும் கடினம்.

நான் எப்படியாவது வளர்ப்பேன், நம்பி தாருங்கள் என்றான் அன்பு.

சரி, தருகிறேன், வாரம் ஒரு முறை நீ குழந்தையை கொண்டு வந்து காட்ட வேண்டும் என்றார் மதர்.நான்சி.

மதர் நான்சியிடம் உறுதி கூறி அழைத்து சென்றான் அன்பு.

இவன் ஊருக்கு செல்லும் பொழுது மட்டும் மதர் நான்சியிடம் விட்டுவிட்டு செல்வான். இப்படியே ஒரு வருடம் ஆனது.

அந்த குழந்தைக்கு, இவன் வைத்த பெயர் கயல். அன்று தான் கயல் முதன் முதலில் நடக்க ஆரம்பித்தாள், தட்டு தடுமாறி கைகளை காற்றில் அசைத்தபடி ஆடி வந்தாள் கயல்.

தூரத்தில் இருந்து பார்த்த எனக்கு கயல் கடற்கரையில், கைகளை அசைத்தபடி என்னை தேடி வந்ததை நான் நினைவு கூர்ந்தான்.

ஓடிப்போய் என் செல்ல மகளை வாரி அனைத்துக்கொண்டேன். அவளுக்கு முறையாக குழல் இசைக்க சொல்லிக்கொடுத்தேன்.

எனக்கென்று ஒரு வேலையே தேடிக்கொண்டேன். இப்படியே எட்டு வருடம் கழிந்தது.

கற்பனை மனைவியுடன், தன் தத்துப் பிள்ளையை, சொந்தப்பிள்ளை போல் அன்பாக வளர்க்க ஆரம்பித்தேன் அன்பு.

அந்த மழலை ஊதிய குழலில், உருவம் பெற்று

“காற்றுக்கும் வடிவம் உண்டு” என்பதை நிரூபித்து விட்டாள் அவன் மனைவி கயல்விழி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *