குறுஞ்செய்தி

 

கல்லூரி இறுதி ஆண்டின் தொடக்கத்தில் ஏதோ ஒரு சூழ்நிலையில் இருவருக்கும் பூத்த காதல் முழுதாய் புரிந்தது அவள் ப்ராஜெக்ட் சம்பந்தமாய் சென்னை போன அந்த ஒரு மாத காலத்தில். கிண்டலும் கேலியுமாய் வளர்ந்த எங்கள் நட்புக்குள் காதல் வந்து சிம்மாசனமிட்ட தருணம் புரியாமல் தான் இருந்தோம் அந்த பிரிவு வரும் வரை.

சிறு நாட்களின் அவளது பிரிவு எனக்கு வெறுமையை கொடுத்தது. அவளோ சென்னையில் நானோ கோவில்பட்டியில். கல்லூரி செல்லவே பிடிக்காமல் போன அந்த நாட்கள் நத்தை போல ஊர்ந்தது. என் கண்கள் எப்போதும் காலியாய் இருந்த அவள் இருக்கையை பார்த்தபடி ஏங்கியது. எப்போது அந்த இருக்கையும் என் கண்களும் நிறையும் என்ற எதிர்பார்ப்பு அவள் சென்னை போன ஒரு வாரத்திலேயே என்னை முழுதாய் ஆக்ரமித்தது.

கண்கள் வளைய அவள் பேசும் அழகும் தேத்துப்பல் தெறிக்கும் சிரிப்பும் நாக்கை சின்னதாய் வெளியே நீட்டி கடித்து செய்யும் கண்டிப்பும் பின்னம் வரை நீண்ட கூந்தலும் இல்லாமல் நான் பட்ட அவஸ்தை என்னுள் நன்றாய் புரிய வைத்தது இது காதல் தான் என்று.

எனது ஏக்கத்திற்கு வடிகாலாய் அப்போது இருந்தது கைபேசி மட்டுமே. வகுப்பு நேரம் உட்பட அணைத்து நேரங்களையும் அவளுடனே கைபேசியில் கழித்தேன். பெரும்பாலும் எங்களது சம்பாஷனைகள் குறுஞ்செய்திகளிலேயே இருந்தது.

அப்போதிருந்த ஒரு நாளைக்கு நூறு குறுஞ்செய்திகள் இலவசம் என்ற வசதி எங்களுக்கு மதியம் வரை தான் உதவியது. இருந்தும் பரிமாறினோம் செலவுகளை கணக்கில் கொள்ளாமல். அவளிடம் கிண்டலும் கேலியுமாய் நகர்த்த உதவிய அலைபேசியில் எனது ஏக்கங்களை வெளிப்படுத்த ஏனோ தயக்கம் என்னுள் நட்பிற்கு பங்கம் விளையுமோ என்று.

“ஐ மிஸ் யு… உன்ன பாக்கணும் போல இருக்கு….” இந்த குறுஞ்செய்தியை எத்தனை முறை தட்டச்சு செய்து அவளுக்கு அனுப்ப தைரியம் இல்லாமல் அழித்திருப்பேன் என்பது எனக்கு மட்டுமே தெரியும். அவளும் என்னை போன்றே அவதிப்பட்டு கொண்டிருப்பாளோ என்ற யோசனை அவ்வப்போது என்னுள் எழுந்து சந்தோஷம் கொடுத்தாலும் அப்படியெல்லாம் இருக்காது என்ற பயமும் கொடுத்தது.

“குட்மார்னிங் டா செல்லம்” படுக்கையில் இருந்து எழுந்த எனக்கு அன்றைய குறுஞ்செய்தி குறுகுறுப்பை கொடுத்தது. காரணம் செல்லம் என்ற அந்த ஒற்றை வார்த்தை. என்றும் அவளிடம் இருந்து வராத வார்த்தை. இப்போதே அவள் உதட்டில் இருந்து அந்த வார்த்தை உதிரவேண்டும் என் காதால் அதை பருக வேண்டும் என்ற எதிர்பார்ப்பு என்னுள் எகிறிகுதித்தது. தலை கால் புரியாமல் பதில் என்ன சொல்ல என்று அறியாமல் வழக்கமாய் சொல்லும் காலை வணக்கம் கூட சொல்லாமல் கல்லூரிக்கு கிளம்ப ஆயத்தமானேன்.

“என்ன டா பண்ணிட்ருக்க…. ரிப்ளைய காணோம்..” கல்லூரிக்கு செல்லும் பேருந்தின் ஜன்னலோரத்தில் அமர்ந்து அவளுக்கு என்ன பதில் அனுப்புவது என்று யோசித்துக்கொண்டே பயணப்படும் நேரம் அவளிடம் இருந்து வந்த இரண்டாம் செய்தி இது.

அவள் என்முன்னே அமர்ந்தது போன்ற பிரம்மை ஏற்பட்டது. அவள் முகத்தில் சின்ன பொய் கோபம் தெரிந்தது என் பதில் இல்லாமல்.

“காலேஜ் போய்டு இருக்கேன் டி… ஆமா என்ன புதுசா செல்லம் எல்லாம்…” இம்முறை பதில் அளித்தேன் கேள்வியுடன் கொஞ்சம் தைரியத்தை வளர்த்துக்கொண்டு.

“ஏன் நான் கூப்ட கூடாதா….” அவள் புருவம் உயர்ந்தது என்முன்னே

“அப்டில்லாம் இல்ல தெரிஞ்சுக்கலாம்னு கேட்டேன்….”

“இல்ல சும்மா தான்… கூப்டனும்னு தோனுச்சு….வேணாம்னா சொல்லு கூப்டல….” அவள் முகம் வாடிய மலராய் தெரிந்தது இப்போது.

“வேண்டாம்னு சொல்ல நான் என்ன முட்டாளா…” இதை படித்தவளுக்கு அவளறியாமல் அவள் உதட்டில் புன்னகை பூத்திருக்கும். ஏனெனில் என்முன்னே இருந்த அவள் உருவம் புன்னகை உதிர்த்ததே.

“சரி டா…. சாப்டியா குட்டிமா…” அடுத்த வார்த்தை என்னை காற்றில் மிதக்க செய்தது. சிறு சிறு கொஞ்சல் வார்த்தைகள் என்னை திக்குமுக்காட செய்தது.

“முடியல டி என்னால… நீ தான் மெசேஜ் பண்றியா….”

“போ டா…” சிணுங்கலாய் வந்த குறுஞ்செய்தி என்னை சில்லு சில்லாய் சிதறடித்தது.

“ஏன் டி குட்டிமா….” நானும் கொஞ்சும் வார்த்தை உதிர்த்தேன் முதன்முறையாய் அவளுக்கு குட்டிமா என்ற வார்த்தையை கைபேசியில் தட்டிய போது இருந்த சந்தோஷமும் படபடப்பும் கண்டிப்பாய் அவளுக்கும் ஏற்பட்டிருக்கும். ஆனால் என்னுள் இருந்த அளவிற்கு கண்டிப்பாய் இராது.

“டேய் நான் காலேஜ் வர்ற வரைக்கும் பேச வேண்டாம் சரியா….” அவளின் குறுஞ்செய்தி தந்த ஆனந்தத்தை குரலில் கேட்க அழைத்த போது அதை துண்டித்து இதை அனுப்பினாள்.

ஏன் இப்படி சொல்கிறாள் இல்லை வேறு யாரோ அவளது கைபேசியில் இருந்து அனுப்புகிறார்களோ அதனால் தான் சமாளிக்க இப்படி சொல்கிறார்களோ என்று சிறு நேரத்தில் பயம் தொற்றியது. இருந்தாலும் அவள் தான் அனுப்பி கொண்டிருக்கிறாள் என்று என்னுள் ஒரு நம்பிக்கை இருந்தது.

காரணம் அவள் கைபேசி அவளறியாமல் எவர் கைக்கும் செல்லாது சென்றாலும் என்னை வைத்து விளையாட அவர்களை அனுமதிக்க மாட்டாள். குருட்டு நம்பிக்கை தான் இருந்தாலும் முழுதாய் நம்பினேன்.

“ஏன் டி… செல்லம் குட்டிமானு கொஞ்சிட்டு பேசக்கூடாதுன்னு குண்ட தூக்கி போட்ற….”

“இல்ல டா… உன் குரலில் நீ முதன்முதல்ல என்ன செல்லம் குட்டிமான்னு சொல்லும்போது நான் உன் கண்களை பார்த்துட்டு இருக்கணும் அதான் டா….” கவிதை போல் வந்த குறுஞ்செய்தி அவளது ஆசை எவ்வளவு அழகானது என்பதை உணர்த்தியது. அவளுக்குள் காதல் துளிர் விட்டுருக்கும் என்ற சுடர் ஏற்றியது. அவளை போலே நானும் அவள் கண்கள் காண ஆசைப்பட்டேன். ஆதலால் பேசவேண்டாம் என்ற முடிவையும் செய்தேன் அவளுக்காக.

“சரி டி செல்லக்குட்டி….”

“தேங்க்ஸ் டா….”

திடீர் என்று இவளுக்குள் ஏற்பட்ட மாற்றங்கள் அடுத்து வந்த நாட்களில் எங்களுக்குள் இறுக்கத்தை கூட்டியது. கொஞ்சல் வார்த்தைகள் நாட்களை அழகாய் நகர்த்தியது. இப்போதெல்லாம் அவளை நான் தேடுவதில்லை அவள் உருவம் தான் அவள் குருஞ்செய்தியுடன் என்முன்னே வந்து விடுகிறதே. அவள் நிழல் முகம் கண்டதிலேயே இவ்வளவு ஆனந்தம் என்றால் அவள் நிஜ உருவம் பார்க்கும் தினம் அப்பப்பா நினைக்கும்போது பேரானந்தம் என்னுள்.

“ஏதோ மிஸ் பண்ண மாத்ரி ஒரு பீலிங் டா…. உன்ன பாக்கணும் போல இருக்கு டா…” பின்னொரு நாளில் அவள் அனுப்பிய குறுஞ்செய்தி அவளுக்கும் காதல் உண்டென்பதை உறுதி செய்தது.

“எனக்கும் தான் டி… எப்போ வர்ற நீ…” நானும் கூறினேன் அவளை போலே.

“இன்னும் டூ வீக்ஸ் டா… எப்படா முடியும்னு இருக்கு….” அவள் முகத்தில் என்னை காணாமல் தவிக்கும் தவிப்பை பார்த்தேன் அன்று. நிழல் உருவம் நிஜமாக இன்னும் இரண்டு வாரங்கள் காக்க வேண்டும் என்று உணர செய்தாள்.

இரண்டு வாரங்கள் கவிதையாய் கரைந்தது என் வாழ்வில். எங்களது குறுஞ்செய்திகள் அணிவகுப்பு இரவுபகல் பாராமல் தொடர்ந்தது. இரவில் தூக்கத்தை விட ஏக்கங்கள் நிறைந்திருந்தது. கண்கள் மூடாமல் கைபேசியில் சிறைபட்டது. அவளிடம் இருந்து பதில் வர சிறு நாழிகை தவறினாலும் மனம் தவிப்பாய் தவித்தது. அவளிடம் பேசாமல் இருப்பது இன்னும் வேதனை அளித்தது. வலிந்து வந்த காதலை இரண்டு வாரங்கள் அடக்கி வைக்க முடியும் என்ற நம்பிக்கை தகர்ந்தது.

நான் உன்னை காதலிக்கிறேன் அல்லது ஐ லவ் யூ இப்படி சின்ன வார்த்தைகளில் முடித்துவிட மனமில்லை எனக்கு. என்றும் அழியாமல் அதுவும் எங்களுக்குள் இருந்த காதலை விளங்க செய்த இந்த குறுஞ்செய்தியிலேயே சொல்ல வேண்டும் ஆனால் எப்படி புரியவில்லை. காதல் சொல்ல நான் பட்ட தடுமாற்றம் அவளுக்குள்ளும் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பதை சொல்ல வந்து முடியாமல் தவித்த அவளது மனம் கண்ணாடியாய் அவள் குறுஞ்செய்தியில் தெரிந்தது.

“என்ன டி எப்போ கெளம்பற….” அவள் வர இன்னும் மூன்று நாட்களே மீதம் இருந்த நேரத்தில் இந்த கேள்வியை தொடுத்தேன்.

“நாளகழிச்சு நைட் பியர்ல் சிட்டி எக்ஸ்பிரஸ்ல டா….”

“ஓகே டி… வெய்டிங் போர் யூ மேட்லி….”

“இங்கயும் அதே தான் டா….”

“மிஸ் யூ குட்டிமா”

அவள் வர இன்னும் மூன்று நாட்களே இருந்த நிலையில் எனக்குள் அவசரம் தொற்றிக்கொண்டது. அவளை நான் பார்க்கும் நேரம் அவள் என் காதலியாக நான் அவள் காதலனாக இருக்க வேண்டும் அவள் என் கண்கள் காணும்போது அதில் காதல் இருக்கிறதா இல்லையா என்ற சந்தேகம் அவளுக்கு கண்டிப்பாய் இருக்ககூடாது என்று எண்ணியதால் எந்த சின்ன வார்த்தையில் முடிக்கவேண்டாம் என்று நினைத்தேனோ அதையே அனுப்ப முடிவு செய்தேன்.

காதல் சொல்ல நல்ல நேரம் நாளை இரவு எட்டு என்று முடிவு செய்தேன் முருகன் படம் போட்ட காலேண்டர் அட்டையின் பின்னில் பார்த்து. குறுஞ்செய்தி பரிமாற்றங்களுடன் அடுத்த நாள் இரவின் எட்டு மணிக்கு இப்போதிருந்தே தயார் ஆனேன். அடுத்த நாளும் வந்தது இரவும் வந்தது.

“ஒரு சின்ன வொர்க் இருக்கு…. ஓன் ஹவர் கழிச்சு மெசேஜ் பண்றேன்….” மணி ஏழு ஆகும்போது இந்த குறுஞ்செய்தி அனுப்பினேன். காதல் சொல்வதற்கு முன்பு ஒரு சிறு இடைவெளி இருந்தால் நன்றாய் இருக்கும் என நான் நினைத்த காரணத்தால்.

ஒரு மணி நேரம் நத்தையாய் நகர்ந்தது. அந்நேரம் நான் சென்றுகொண்டிருந்த பேருந்து கூட கம்பளிபூச்சி போல் மெதுவாய் ஊர்வதாய் ஒரு பிரம்மை. அவளது பழைய குறுஞ்செய்திகளை படித்துக்கொண்டே நேரம் நகர்த்தினேன். நான் பேருந்தில் இருந்து இறங்கவும் நேரம் எட்டை தொடவும் சரியாய் இருந்தது. வாகன இரைச்சலுக்கு நடுவே என் காதலை தெரிவிக்க கைபேசி தட்டச்சு செய்ய ஆயத்தமானேன். அதற்குள் அவளது குறுஞ்செய்தி வந்தது.

“நான் ஒருவனை காதலிக்கிறேன். அதை சாதகமாக்கி கொண்டு என் இதயம் திருடியவன் அவன் இதயத்தின் வலப்பக்கம் வைத்துக்கொண்டு தரமறுக்கிறான். அவன் கண்கள் காண்பிக்காமல் கண்ணாமூச்சி ஆடி இம்சை செய்கிறான். எனக்காக அவனை விரைவாய் கண்டுபிடித்து தண்டிப்பாயா… இப்படிக்கு உன் குட்டிமா…”

அந்த ஒருவன் நான் தான் என்பதை படித்த மாத்திரத்திலேயே தெரிந்துகொண்டேன். தமிழுக்கும் அமுதென்று பெயர் என்று சொல்ல கேட்டிருக்கிறேன் அதில் காதலும் கலந்தால் தேவாமிர்தம் என்று அப்போதே உணர்ந்தேன். தூயதமிழில் கவிதை நடையில் முயற்சித்து அவள் அனுப்பியது நான் நினைத்ததை விட பலமடங்கு பெரியது.

உலகிலேயே அந்நேரம் அதிக சந்தோஷம் என்னை தவிர எவருக்கும் இருந்திருக்காது. வாகன இரைச்சல்கள் இனிய இசையாய் மாறி காதிற்குள் தேன் வார்த்தது. அந்த இரவு நேரத்தில் அதை படித்த என்னுள் பிரகாச வெளிச்சங்கள் அனந்த துள்ளல்கள் காதல் நிரம்பிய கண்கள். விவரிக்க முடியாத சொர்க்கத்தில் மகிழ்ச்சியாய் பறந்தேன் சிறகு முளைத்து.

அதே நேரம் அவள் என் பதிலுக்காய் காத்திருப்பாள் என்ற நினைப்பும் என்னுள் எழாமல் இல்லை. அதற்காக நான் அதிக நேரம் எடுத்துக்கொள்ளவும் இல்லை. காதலின் வெற்றியில் அவளுக்கான பதிலை எழுதினேன்.

“நீ சொல்லிய திருடன் கண்டேன் அவன் இதயம் உன்னிடம் இருப்பதால் உன் இதயத்தை தரமறுக்கிறான். உன்னை போலவே அவனும் உன் கண்கள் காணாமல் இம்சை அடைகிறானாம். ஆதலால் எவ்வளவு விரைவாய் முடியுமோ அவ்வளவு விரைவாய் நீங்களும் உங்கள் கண்களும் ஒன்றாய் சேரவேண்டும் என்பதே உங்கள் இருவருக்கும் நான் தரும் தண்டனை.”

அவள் போலே எழுத முடியவில்லை இருந்தாலும் முடிந்தளவிற்கு என் மனதில் தோன்றியதை சிறு திருத்தம் கூட செய்யாமல் அப்படியே எழுதினேன் அவளுக்கும் அனுப்பினேன்.

“தங்கள் உதவிக்கு நன்றி. நான் அவனையும் அவனது கொஞ்சும் இம்சைகளையும் ரசிக்கிறேன். அவனை உயிரினும் மேலாய் காதலிக்கிறேன்..” வழக்கமான காதல் வரிகள் தான் எத்தனையோ புத்தகங்களில் திரைப்படங்களில் பார்த்து கேட்டது தான் ஆனால் அது நமக்காய் சொந்தம் ஆகும்போது அதில் இருக்கும் ஆனந்தம் தனி தான் என்பதை அந்நேரத்தில் நான் உணர்ந்தேன்.

இருந்தாலும் அந்த அவன் நான் என்பதை இன்னும் வெளிப்படையாய் கூற அவள் தயங்கிய தயக்கம் உடைக்க என்ன செய்வதென அறியாமல் யோசித்தேன். அதற்கும் அவளே வழிவகுத்தாள்.

“இப்போது ஒரு மணி நேரம் காக்க வைத்துவிட்டான். இதிலாவது அவனுக்கு மட்டும் தண்டனை கிடைக்குமா..” என் தயக்கம் உடைத்தாள் காதலன் நான் என்பதை என்று உறுதியாய் சொல்லாமல் சொல்லி.

“கண்டிப்பாக…. உன் இஷ்டம் போல் எந்த தண்டனை தந்தாலும் அவன் ஏற்றுக்கொள்வான்.”

“அவன் கண்கள் பார்த்து கொண்டே அவன் முகம் சிவக்க முத்தங்கள் பதிக்க வேண்டும்…” என் முகம் முழுதும் அவள் இதழின் ஈரம் உணர்ந்தேன் வழக்கம்போல் என்னுடன் வரும் அவளது நிழல் உருவத்தின் உதவியுடன். ஒரு சந்தோஷத்திற்கு மேல் மற்றொரு சந்தோஷம் என்ன சொல்ல நான் எங்கே இருக்கிறேன் என்பதை முழுதுமாய் மறந்தேன்.

“எப்போது தண்டனை தருவதாய் உத்தேசம்…”

“என் அருகில் இருந்தால் இப்போதே….”

“ஒ அப்படியா…. அப்படியானால் உன் அறைக்கதவை இப்போதே திறந்து அவனை உள்ளிழுத்து உன் தண்டனை நிறைவேற்று..”

“டேய் என்ன டா சொல்ற… விளையாடாத….” நான் தந்த அதிர்ச்சியில் அவளது தூயதமிழ் வழக்கமான தமிழுக்கு தடம் புரண்டது.

நான் சொன்னதை நம்பாமல் அவள் தந்த பதில் வந்து சேரும்போது உண்மையாக இருக்குமோ என்ற நப்பாசையில் திறந்தாள் கதவை. அவளது கண்கள் ஆச்சர்யத்தில் நிலை குத்தின. உதட்டில் இருந்து வார்த்தை தடைபட்டன. கண்களில் சந்தோஷ கண்ணீர் துளிர்விட்டன.

ஆம் எப்போது நாளை இரவு எட்டு மணி என்று முடிவு செய்தேனோ அப்போதே குறுஞ்செய்தியுடன் நானும் அவள்முன் நிற்க வேண்டும் என்று முடிவு செய்தென். அவளது அறை தோழிகளின் உதவியுடன் அவளறியாமல் முகவரியை பெற்று சென்னை கிளம்பினேன் இரவோடு இரவாய். இப்போது அவள் அறை முன் அவள் கண்கள் நிறைந்து நிற்கிறேன் அதன் விளைவாய்.

நான் வரும் நேரம் அவளின் தோழிகளை நான் வெளியே செல்ல சொல்லியிருந்ததால் எங்களுக்கான தனிமை அவள் அறை முழுதும் படர்ந்திருந்தது.

சிறிதும் யோசிக்காமல் என் சட்டை பிடித்து உள்ளிழுத்தாள். கட்டி அணைத்தாள். முத்தங்கள் அவசரமாக அழுத்தமாக பல பதித்தாள். என் முகத்தில் அவள் உதட்டுச்சாயம் பூசினாள். திகட்ட திகட்ட சிறு வார்த்தைகள் கூட பேசாமல் நான் அங்கு எப்படி வந்தேன் என்பதை கூட கேட்காமல் சந்தோஷத்தில் மன நிறைவில் கண்களில் கண்ணீரும் காதலும் சேர்ந்து வழிய அவளது தண்டனையை மட்டும் கண்ணும் கருத்துமாய் நிறைவேற்றினாள் என் கண்களை இமைக்காமல் பார்த்தவாறே. 

தொடர்புடைய சிறுகதைகள்
“ஏன் டா இப்படி ஏன் உசுர வாங்குற…. இதுக்கு பேசாம ஆனந்தி கிட்டையே உன்ன விட்டுட்டு வந்துர்கலாம்…” எனக்கு விவரம் புரியாத வயதில் இருந்தே என் அம்மா என்னை திட்டுவதென்றால் இந்த வார்த்தையை உபயோகிக்காமல் இருந்ததில்லை. என்னை திட்டும்போது மட்டுமல்லாமல் எங்களை ...
மேலும் கதையை படிக்க...
"என்ன மாமா மஞ்ச தண்ணி ஊத்தவா இல்ல சாணிய கரைச்சு ஊத்தவா" கிண்டல் தொனியில் கேட்டாலும் அதில் பழைய காதலும் அன்பும் கலந்தே இருந்தது அவளிடம். இன்று திருமணமாகி வேறொருவன் மனைவி ஆகிவிட்டாலும் அவளின் பால்ய வயது குறும்புத்தனம் மட்டும் இன்னும் ...
மேலும் கதையை படிக்க...
ட்ரிங் ட்ரிங்...... ட்ரிங் ட்ரிங்...... எதோ யோசித்து கொண்டிருந்த பத்ரி என்கிற பத்ரிநாதன் தனக்கு அலுவலகத்தில் கொடுக்கப்பட்டிருந்த இண்டர்காமின் சத்தத்தால் தொலைபேசியின் ரீசிவர் எடுத்து சத்தத்துடன் தனது யோசனையையும் துண்டித்தார். தனது காதில் போனை பதித்து "ஹலோ" என்றார். அவரது குரலில் பயம் ...
மேலும் கதையை படிக்க...
வெகு நாட்களுக்கு பிறகு என் நெஞ்சம் கணப்பதை இப்பொது உணர்ந்து கொண்டிருக்கிறேன். தயக்கம் பயம் சோகம் பிரிவு வரும் நேரங்களில் இந்த கணம் எல்லோரையும் போல் என்னையும் தாக்கும். ஆனால் இவை எல்லாம் மறந்தநிலையில் மனதில் நினைத்ததை பேச எப்பொதும் எனக்கு ...
மேலும் கதையை படிக்க...
நான் பணிபுரியும் அலுவலகத்தில் ஆறு மாதங்களுக்கு முன்பு சேர்ந்தவள் தான் மம்தா. வந்த நாளிலேயே அனைவரையும் தனது குழந்தைத்தனமான கன்னக்குழி பேச்சில் கவர்ந்தவள். அவள் வரும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான உடை அதற்கு தகுந்தாற்போன்று சிகை அலங்காரம் அவளை அனைத்து ...
மேலும் கதையை படிக்க...
என் தவறுகளும் அவள் கேட்கும் மன்னிப்புகளும்
"ஐ அம் கோயிங் டு கெட் மேரீட்.... ப்ளீஸ் டோன்ட் ட்ரை டு காண்டக்ட் மீ.... பை பார் எவர்.... சாரி" யாருக்கு வேண்டும் இவளது மன்னிப்பு. என்னை பிரிவதற்கான காரணம் சொல்லாமல் என்னை விட்டு பிரிகிறேன் என்பதை மட்டும் சொல்லி ...
மேலும் கதையை படிக்க...
"அங்கிள் அங்கிள்...." ஏதோ சிந்தனையில் முழ்கிபோயிருந்த அவனை அந்த மழலை பெண் அவன் பின்னங்கால்களை சுரண்டியபடி அழைத்து கலைத்தாள். பின்னால் திரும்பியவன் அந்த மழலை பெண்ணை கண்டதும் அவளது அழகில் ஈர்க்கப்பட்டான். எதை பற்றி சிந்தித்துக்கொண்டிருந்தோம் என்பதையே மறந்தான் அச்சிறு பெண்ணின் ...
மேலும் கதையை படிக்க...
ஆனந்தியம்மா
மஞ்ச தண்ணி
ஆட்குறைப்பு
நெஞ்சில் கனத்துடன் ஓர் கடிதம்
சிகரெட் தோழி
என் தவறுகளும் அவள் கேட்கும் மன்னிப்புகளும்
மாயை

குறுஞ்செய்தி மீது ஒரு கருத்து

  1. Murugan says:

    Super….. I too feel my college days…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)