இன்று ஓர் ஆச்சர்யம் நடந்தது. ஆபீஸில் இருந்து திரும்பி வரும்போது, பார்க் ஸ்டேஷனை ரயில் நெருங்குவதை உணர்ந்து எழுந்தபோதுதான் கவனித்தேன். எனது ஸீட்டில் அந்த டைரி கிடந்தது. சுற்றும்முற்றும் பார்த்ததில் கம்பார்ட்மென்ட்டில் என்னைத் தவிர யாரும் இல்லை. முதலில் அது ஏதோ ஒரு புத்தகம் என்றுதான் நினைத்தேன். புத்தகத்தின் உள்ளே அடையாளத்துக்காக வைக்கப்படும் சிவப்பு நிற நாடா வெளியே நீண்டிருந்தது. நீல நிற அட்டை, பைபிளோ எனச் சந்தேகிக்கச் சொன்னது. கையில் எடுத்துப் பிரிக்க… டைரி. யார் விட்டுப்போயிருப்பார்கள்? எல்லோரும் இறங்கிப்போய்விட்டார்கள். நான் மட்டும்தான். அங்கேயே டைரியை விட்டுவிட்டு வந்திருக்கலாம். முதல் பக்கத்தில் எழுதப்பட்டிருந்த பெயரைப் பார்க்காமல் இருந்திருந்தால்… வேறு எந்த விவரமும் எழுதாமல் பெயர் என்பதற்கு நேரான கோட்டில் ‘கிருபாகரன்’ என்று மட்டும் எழுதியிருந்தது. நான் என் பிளட் குரூப் முதற்கொண்டு எழுதியிருக்கிறேன்… என் டைரியில். என் பெயரில் ஒருவன் இருக்கிறான். அவனின் டைரி என்ற சுவாரஸ்யமே, அதை வீட்டுக்கு எடுத்துவர வைத்துவிட்டது. இனிமேல் டைரி எழுதும் முன் அந்த கிருபாகரன் டைரியை ஒரு புரட்டுப் புரட்டவேண்டியதுதான்.
நேற்று கிடைத்த கிருபாகரனின் டைரியில் எல்லா நாட்களும் எழுதப்படவில்லை. அதுவும் இல்லாமல் அந்த கிருபாகரன் யார், என்ன வயது, எங்கு வேலை, எந்த ஊர் இப்படி எந்த விவரமும் தெரியாமல் அதைப் படிக்க எனக்கு ஆர்வம் இல்லை. ஆபீஸில் வேறு தமயந்தி டார்ச்சர். எத்தனை தடவை சொன்னாலும் அறிவே இல்லாமல் சாட்டில் வந்து வழக்கமான பல்லவி. நான் எதற்கும் பதில் சொல்லாமல் ‘ம்’ என்று மட்டும் டைப் செய்துகொண்டிருந்தேன். எல்லாவற்றையும் விளக்கிச் சொன்ன பின்னாலும் தமயந்தியின் தொந்தரவு, எனக்கு வெறுப்பை மட்டுமே உண்டாக்குகிறது. ஈவ்னிங் ஜி.எம் மீட்டிங். இரவு திரும்பும்போது ஸ்டேஷனில் இறங்கும் முன்பு அனிச்சையாக கம்பார்ட்மென்ட்டில் வேறு எதுவும் டைரி இருக்கிறதா எனப் பார்த்ததை இப்போது எழுதும்போது சிரிப்பு வருகிறது.
இன்று அந்த கிருபாகரன் டைரியில் ஒரு பக்கம் படித்தேன். பிப்ரவரி 14 அன்று எழுதியிருக்கிறான். டைரி கிடைத்து மூன்று நாட்களுக்குப் பிறகுதான் வருடத்தையே பார்க்கிறேன். 1995. இருபது வருடங்களுக்கு முந்தைய டைரி. அந்தப் பக்கத்தைப் படித்ததும் குழப்பம் ஏற்பட்டது. கிருபாகரன் இயல்பானவன்தானா, எழுத்தில் கண்ட முதிர்ச்சியும் அந்தச் செய்தியும் ஏதோ ஒரு புள்ளியில் நானும் அந்த கிருபாகரனும் ஒன்றுசேர்வோம் என்பது மட்டும் புரிந்தது. இன்று ஆபீஸில் அதிகம் வேலை இல்லை. ஃபேஸ்புக்கில் சும்மா ஒரு விசிட் அடிக்கலாம் என லாக் இன் செய்தால், அடுத்த செகண்டே தமயந்தி சாட்டில்…
‘சாப்புட்டீங்களா?’
சாட் ஆஃப்லைனில் வைத்த பின்னும் மெசேஜ் வந்தபடிதான் இருந்தது. வீட்டுக்குப் புறப்பட்டுவிட்டேன். ச்சே!
1995, பிப்ரவரி 14
காலை 12 மணிக்கு அவ்வளவாக வெயில் இல்லை. உன்னியேட்டன் கடை தேநீருக்குப் பசி கொல்லும் வலிமை உண்டு. தொண்டையில் தேநீர் தீ நீராக நழுவியபோதுதான், அந்த ஹம்மிங் எழுந்தது. இதோ இதை எழுதும் இந்த நடுநிசியில் எங்கோ தொலைவில், ‘எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம்…’ லதாவின் குரலுக்கும் எனக்கும் அப்படி என்ன பூர்வஜென்ம பந்தம் அல்லது விரோதம்? கல்லூரி நாட்களில் காதலாகிக் கசிந்திருக்கலாம் இந்தப் பாடல். பின்னர் எங்கே மாறியது? இத்தனை நடுக்கத்தைத் தருவதாக இந்தப் பாடல் என்று உருமாறியது? ‘சேர்ந்திடவே உனையே… ஏங்கிடுதே மனமே…’ என் கையில் இருந்த டீ கிளாஸ் நடுங்கியதை எத்தனை பேர் கவனித்தார்களோ! நான் குரலின் விரல் பிடித்து சாலையில் இறங்கியிருந்தேன். என்னை ஏதுமற்ற வெளியில் தள்ளிவிடும் சக்தி அந்தக் குரலுக்கு உண்டு. என் அத்தனை சோகத்தையும் அடித்து விரட்டியபடி, ‘உனக்கு நான் இருக்கிறேன்’ என்பதாக என்னை அணைத்துச் சென்றது அந்தக் குரல். அருவியாக வீழ்ந்து… மலையுச்சி உயர்ந்து… நான் நின்ற தார்ச்சாலையில் இத்தனை குளிர் எங்கிருந்து வந்தது? ‘நீயின்றி ஏது வசந்தம் இங்கே..?’ எனக்குக் கண்ணீர் துளிர்த்தது. ஏதோ ஓர் அநாதை மனம் என்னை மீட்டெடுக்கத் துடிக்கிறது. இந்த உலகத்தை என்னிடம் இருந்து பிய்த்து எறிந்துவிட்டு அந்தக் குரலுடன் நான் கலக்கப்போகிறேன். எல்லாமே பொய்யோ? இந்தக் குரல், இந்தக் கணம், என் ஆத்மா மட்டும்தான் உண்மையோ! முதுகுத்தண்டில் அச்சம் கோடு என இறங்கியது. இன்று முழுவதும் என்னை தன் வசம் இறுக்கிக்கொண்ட பாடல்தான், மறுபடி மறுபடி மண்டைக்குள் ஆயிரம் கால்களுடன் இசைநடை போட்டது. சில வரிகளுடன் காற்றில் நிரந்தரமாகிவிடும் இந்தப் பாடலை, கட்டிப்பிடித்துக்கொண்டு இனி அழப்போகிறேன். இந்த இரவு என்னுடையது இல்லை.
தமயந்தியிடம் முதன்முறையாக போனில் பேசினேன். முதலில் ரிங் மட்டுமே போய்க்கொண்டிருந்தது; எடுக்கவில்லை. சிறிது நேரம் கழித்து அங்கு இருந்து போன் வர கட் செய்து, பின்னர் நானே போன் செய்தேன். எடுத்தவுடனே சொல்லிவிட்டேன்.
”உங்க விசிட் எனக்கு ரொம்பத் தொந்தரவா இருக்கு”. பதில் சட்டென வந்தது…
”தொந்தரவா… பயமா?”
என்ன திமிர்! என் ஆண் ஈகோ, ”உங்ககிட்ட எனக்கென்ன பயம்? என் ஸ்கேல் என்னனு எனக்குத் தெரியும்; என் லிமிட்டும் தெரியும்” எனச் சொன்னேன்.
”அப்புறம் ஏன் என்னை அவாய்டு பண்றீங்க? நான் உங்ககிட்ட என்ன எதிர்பார்க்கிறேன்… கொஞ்சம் பேசணும். வேறு ஒண்ணும் வேணாம்” என்றது பதில்.
அது, நான் வீழ்வதற்கான அத்தனை ஆயத்தங்களும் நிரம்பிய பதில்.
1995, மார்ச் 13
‘நாம் சொல்வதெல்லாம் பொய், பொய்யைத் தவிர ஒன்றும் இல்லை’ என்ற உண்மையை அலட்சியமாக நாம் கடக்கிறோம். ஒரு நாளில் நாம் எத்தனை பொய்கள் சொல்கிறோம். அவசியமாகவோ, அவசியமற்றோ, திட்டமிட்டோ எவ்வளவு பொய்களை நாம் பிரசவிக்கிறோம்?! குடும்பத்தில், பயணத்தில், பணி இடத்தில், நண்பர்களிடத்தில், தோழமைகளிடத்தில், ஏன் கடவுளிடம்கூட நாம் பொய் சொல்லிப் பழகிவிட்டோம். ஒரு நட்பு, ஒரு பொய்யில் கதறுகிறது. ஒரு காதல், ஒரு பொய்யில் சிதைகிறது. குழந்தைகளின் உலகில் பொய் இல்லை. அதனாலேயே அவர்களின் கண்கள் பால் நிறத்தில் உள்ளன. முதல் கள்ளத்தில் இருந்து தொடங்குகிறது கண்களின் நிற மாற்றம். யார் சொன்னது உடம்பை மெய் என்று? மெய் இல்லை. பொய் என்பதே உண்மை. இந்தப் பொய்யைத்தான் நாம் நெய்யூற்றி வளர்க்கிறோம்; போஷாக்குகிறோம்; கட்டிக்கொள்கிறோம்; முத்தம் தருகிறோம்; பிரிகிறோம். பொய்யைப் பிரியும் வலியைத் தாங்க முடியாமல் அழுகிறோம்; மனிதனின் கண்டுபிடிப்புகளில் மகத்தானது அன்பும் நன்றியும் என்பது எல்லாம் சுத்த ஹம்பக். அவனின் ஆதி உன்னதக் கண்டுபிடிப்பு, பொய். பொய்யைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.
1995, மார்ச் 15
கை, கால், தலையை வலிக்குதுனு சொன்னா உங்களால் அதைப் புரிஞ்சுக்க முடியுது. ஏன்னா, உங்களுக்கும் கை, கால், தலை வலிச்சிருக்கும். ரெண்டு நாளா மனசே சரியில்லை. ரொம்ப லோன்லியா இருக்கு. மென்டல் ஸ்ட்ரெஸ்னா, ‘ச்சும்மா கனவிலே இருக்காதே… நார்மலா இரு’னு சொல்வீங்க. அது கனவு இல்லை; பயம்னு புரியறது இல்லை. இனிமே வேற யாராவது உங்ககிட்ட இப்படிப் பேசுனாங்கன்னா,‘You are an abnormal’ னு சொல்லி, ரெண்டு நாள் ஸ்ட்ரெஸ்ஸை இன்னும் ரெண்டு நாளுக்கு எக்ஸ்டென்ட் பண்ணிராதீங்க.
இன்று எனக்கும் தமயந்திக்கும் கடுமையான வாக்குவாதம்… சாட்டில்தான். ‘உங்க ஸ்டேட்டஸ் எல்லாம் எனக்காகப் போட்டது மாதிரி இருக்கு. என்னோட உணர்வுகளை அப்படியே பிரதிபலிக்குது’னு ஒரே புலம்பல். ‘நான் ஏதாவது கிறுக்கிவெச்சா, அதை உங்களுக்காகனு நீங்க நெனச்சா, நான் பொறுப்பு இல்லை’னு சொன்னதுக்கு ரொம்ப நேரம் பதில் இல்லை. நேற்று ஜீவா மொபைல்ல எடுத்த போட்டோவை புரொஃபைலா வெச்சதும், உடனே சாட்டில் வந்து ‘உங்க ஸ்மைல் சூப்பர்’னு மெசேஜ்… ஷிட். கிருபாகரனின் டைரியில் சுவாரஸ்யம். அவனும் காதலித்திருக்கிறான். ‘பம்பாய்’ படம் வந்த சமயத்தில் வந்த காதல் என்பதில் அவனுக்கும் என் வயதுதான் இருக்கும் எனத் தீர்மானித்தேன். தொடர்ச்சியாக அவன் டைரியின் மற்ற பக்கங்களைப் படிக்கத் தொடங்கியிருக்கிறேன்.
1995, மார்ச் 22
இன்று வீட்டு வாசலில் பைக்கில் ஏறி அமர்ந்து ஸ்டார்ட் செய்யும்போது தெருமுனையில் நிவேதாவைப் பார்க்க நேர்ந்தது. பைக் தடதடக்க நிவேதா என்னைக் கடக்கும் வரை அப்படியே இருந்தேன். கடந்து சென்ற கண்களை நிறுத்தி, ‘நல்லாயிருக்கீங்களா?’ என்றாள். ‘நீ எப்படி இருக்கே?’ எனக் கேட்டதும் ‘ம்… நல்லா இருக்கேன்’ எனச் சொன்ன இதே நிவேதாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு வீதியில் சென்றிருக்கிறேன். நானும் நிவேதாவும் ‘பம்பாய்’ படம் பார்த்துவிட்டுத் திரும்பிவரும்போது, பைக் ஸ்டாண்டில் அமர்ந்திருந்த ஒருவன் எங்கள் இருவரையும் பார்த்ததும் விசிலடித்து, ‘செம ஃபிகர்… குடுத்து வெச்சவன்டா’ என்றது காதில் விழுந்தது. நிவேதா, பிடித்திருந்த என் உள்ளங்கையை இறுக்கினாள். என் முகத்தில் அத்தனை சிரிப்பு. பைக்கில் வரும்போது நிவேதா கேட்டாள்… ‘அவன் கிண்டல் பண்றான். ஒங்களுக்கு கோபம் வரலை?’ நான் சொன்னேன்… ‘ஏன் எனக்குக் கோபம் வரணும்? என் லவ்வர் எவ்ளோ அழகுனு அவன் எனக்கு சர்ட்டிஃபிகேட்தானே குடுத்தான். அதுல எனக்குச் சந்தோஷம்தான். ஹா… ஹா… ஹா…’ என்றதும் முதுகில் குத்தினாள் நிவேதா. பைக் வீலுக்கு இறக்கை முளைத்தது. என்னை இறுகப் பிடித்துக்கொண்டாள். காற்று, நிவேதாவின் கூந்தலால் என் முகத்தில் ‘நீ சிறந்த காதலன்’ என எழுதிக்கொண்டிருந்தது. இறுக்கமான என் வாழ்வில், போக்கிடம் இல்லாத காற்றில் விசிறிய இலையாக இருந்த என் வாழ்வில், ஓர் அர்த்தத்தை ஏற்படுத்தினாள் நிவேதா. காதல் என்பதெல்லாம் ஹம்பக் என்ற என் மனநிலையில் மண் அள்ளிப்போட்டாள். அதே நிவேதாதான் ஒரு வாரத்துக்கு முன்னால் வேறு ஒருவனைக் கல்யாணம் செய்துகொண்டு, என் தலையில் தீ அள்ளிப்போட்டாள்.
1995, மார்ச் 23
நீ என்றும் முடியாத என் கனவு.
தமயந்தியை இன்று மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு வரச் சொல்லி, சந்தித்தேன். மாலை 5 மணி இருக்கும். கோயில் வாசலில் அமர்ந்திருந்த யாசகர்களில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணும் இருந்தாள். கொடிமரத்துக்குக் கீழே நின்றிருந்தோம். மஞ்சள் வெயில் முகத்தில் பட, காதோரம் முடியை ஒரு கையால் ஒதுக்கிவிட்டவாறே பேசிய தமயந்தி அத்தனை அழகு. புரொஃபைலில் மட்டுமே பார்த்திருந்த முகம், நேரில் தூய்மையான சருமம்கொண்ட அழகான அழகு. மனம்விட்டுப் பேசிய தமயந்தி கடைசியில் வந்து நின்ற இடம் தனக்கான செக்யூரிட்டி. இன்பாக்ஸ் சாட்டில் சின்னச் சின்னதாகச் சொன்னது எல்லாம் சேர்த்துவைத்து மொத்தமாக. தன் டைவர்ஸ் தீர்மானமான நாளில் இருந்து தனக்கான பாதுகாப்பு என்பது எது என்பதில், தான் குழப்பமுற்று இருந்ததாகவும் ஃபேஸ்புக்கில் என் முகமும் பதிவுகளும் தமயந்திக்குப் பெரும் நம்பிக்கை அளித்ததைச் சொன்னாள். அதைவிட முக்கியமாக தான் தனிமையில் இருக்கிறோம் என்று தெரிந்ததுமே, ஃபேஸ்புக்கில் பல ஆண்கள் தன்னை மிஸ்யூஸ் பண்ண நினைத்ததாகவும், ஆனால் நான் ஒருவன்தான் அவளிடம் மிக ஜென்டிலாக நடந்துகொண்டதாகவும் தெரிவித்தாள். என்ன சொல்லி என்ன பண்ண… நான் கல்யாணம் ஆனவன், குழந்தையும் உண்டு என்றதற்கு தமயந்தி சொன்ன பதில் ஷாக். ‘நான் என்ன உங்ககூட குடும்பம் நடத்தவா போறேன்? உங்களைப் பார்த்துக்கிட்டே இருக்கணும்; உங்ககூடப் பேசிக்கிட்டே இருக்கணும்… அவ்ளோதான்’ இது எங்கே சென்று முடியப்போகிறதோ!
1995, மே 18
நேற்று இரவு அந்த மழை வந்திருக்கக் கூடாது. ஆனாலும் வந்தது. நான் புவனாவைச் சந்தித்திருக்கக் கூடாது. ஆனாலும் சந்தித்தேன். கலெக்டருக்குப் போத்தவேண்டிய சால்வையையும் நினைவுப்பரிசையும் வீட்டிலேயே மறந்து வைத்துவிட்டு வந்ததாக ஜி.எம் சொன்னபோது எரிச்சலாக இருந்தது. ஆனால், வாழ்க்கை ஒன்றும் கோடுபோட்ட நோட்டில் எழுதப்பட்டதைப்போல நேர்த்தியாக எதையும் நிகழ்த்துவது இல்லையே. மேலதிகாரி காலால் சொல்லும் வேலையை, தலையால் செய்வது புது ஊழியனின் கடமை. ஜி.எம் வீட்டுக்கு வந்து, அவர் மனைவி புவனாவிடம் விவரம் சொல்லி, சால்வையையும் அந்தப் பரிசையும் வாங்கிக்கொண்டு தெரு தாண்டவில்லை. மழை ஆரம்பம். அவசரமாகப் புறப்பட்ட இடத்துக்கே திரும்ப, லேசாக நனைந்து இருந்த என்னிடம் டவல் நீட்டினாள் புவனா. பெரும் இடி இடித்தது. ஆகாயத்தைக் கீறிய நனைந்த மின்னலின் வெளிச்சம் கண்ணாடி ஜன்னலைத் தாண்டி வீட்டுக்குள் எட்டிப்பார்த்தது. தலை துவட்டியபடி சோபாவில் அமர, கொஞ்ச நேரத்தில் சூடாக ஆவி பறக்க மழை வாசனையை எல்லாம் துடைத்து எறிந்தபடி காபி வந்தது. எவ்வளவுதான் நன்றாக இருந்திருந்தாலும், அந்த காபியை நான் அத்தனை சிலாகித்திருக்கக் கூடாது. காபி தயாரித்த நீண்ட கைகளின் வாளிப்பான வனப்பை, என் கண்கள் கவனித்து விலகியிருக்கக் கூடாது. விலகிய கண்களை புவனாவாவது கவனிக்காமல் இருந்திருக்கலாம். இரவு, மழை, குளிர், தனிமை, புவனாவின் தகிக்கும் இளமை, என் திமிறிய ஆண்மை… இவை மட்டும் காரணமாக இருந்திருக்க முடியாது. என் அருகில் அமர்ந்து, தன் உள்ளங்கைக்குள் என் கைகளின் சூட்டை நிரப்பியபடி புவனா பார்த்த பார்வையில் எல்லாமே விளங்கிற்று. சம்மணம்போட்டு அமர்ந்தபடி எங்களையே உற்றுப்பார்த்துக்கொண்டிருந்த காமம், தன் கால்களை விரித்தது. இளமை சிதையாமல் இருந்த புவனாவின் வலது கை விரல்கள் என் புறங்கழுத்தை வருடியபோது நான் முடிவெடுத்தேன். மேலதிகாரியின் மனைவி என்பது எல்லாம் மூளையில் இருந்து விடுபட்டுப்போக, புவனாவின் கண்களின் ஏக்கத்தைத் தீர்க்க எனக்குள் நானே ஆணையிட்டேன். வெளியே மழை விடிய விடிய கொட்டித் தீர்த்தது. நனைந்த ஓர் ஈர இரவை இருவருமே காவல் காத்தோம். என் கல்லூரிக் காதல், வேலையில்லா நாட்களின் வெறுமை, விரக்தி, நிவேதாவின் அவசரக் காதல், அவசரப் பிரிவு… எல்லாவற்றையும் புவனாவிடம் கொட்டித் தீர்த்தேன். என்னிடம் எதுவும் இல்லாமல், என் எல்லாமுமாக மாறியிருந்த புவனாவை நான் மறுபடி பார்க்கவே போவதில்லை என்பதை இருள் பிரியாத காலையில், சாலையில் தேங்கி இருந்த மழையில் என் பைக்கை விரட்டியபோது உணர்ந்திருந்தேன்.
இன்று சாட்டில் வந்த தமயந்தியிடம் நான் பழைய கிருபாகரனாகப் பேசவில்லை என்பது புரிந்தது. எது என்னை அசைக்கிறது? அரவிந்துக்கு ஜுரம் என சுகந்தி போன் செய்ததுமே ஆபீஸில் இருந்து அவசரமாக வந்து, டாக்டரிடம் அழைத்துச்சென்றதில் பொறுப்பான அப்பாவாகத்தானே நடந்துகொண்டேன்… சுகந்தியிடம் இதுவரை நல்ல ஒரு கணவனாகத்தானே நடந்துவருகிறேன்! இதில் தமயந்தி எங்கே வருகிறாள்? அந்த கிருபாகரன் வேறு குழப்புகிறான். எப்படி இன்னொருவன் மனைவியை எந்தக் குற்ற உணர்வும் இன்றி கையாள முடிகிறது? எந்தச் சட்டகத்துக்குள்ளும் அடக்கமுடியாமல் என்னைத் திணறடித்தான், முகம் தெரியா கிருபாகரன். இப்போதெல்லாம் டைரிகூட அவனைப்போலத்தான் எழுதிக்கொண்டிருக்கிறேன். என்னாகிறது எனக்கு? நான் ஏன் நியாயங்கள் கற்பித்துக்கொண்டு இருக்கிறேன்? தமயந்தியை நான் விரும்புகிறேனா? அப்படி என்றால் தமயந்தியின் பார்வையில் நானும் மற்றவர்களைப்போல ஆகிவிட மாட்டேனா… இல்லை. தமயந்தியும் என்னை விரும்புகிறாள். அவளின் விவாகரத்துத் தனிமை என்னை வசதிப்படுத்துகிறது. தமயந்தியின் தனிமைக்கு எந்தவிதத்திலும் குறைவானது இல்லையே புவனாவின் தனிமையும். இவ்வளவுக்கும் புவனாவுக்கு கணவர் உண்டு. தமயந்தி தன் இன்செக்யூரிட்டி உணர்வை என் மூலம் நீக்குகிறாள். நான் என்ன செய்ய? சுகந்தியைவிட என்னை அதிகம் நேசிக்கும் தமயந்திக்கு நான் பாதுகாப்புத் தரலாமா, இந்த உறவு சரிதானா? – குழப்பங்களும் கேள்விகளும். தீர்வு கிருபாகரனின் டைரியில் இருக்கலாம் என பக்கங்களைப் புரட்டினால், அந்த மே 18-க்குப் பிறகு பல நாட்கள் வெற்றுத்தாள்கள்தான். ஆனால், ஜூலை 20 அன்று எழுதியிருக்கிறான்.
1995, ஷூலை 20
வரிசையான அதிர்ச்சிகள். எவரிடமும் சொல்ல முடியாமல் இங்கே கொட்டித் தீர்க்கவேண்டியதாக இருக்கிறது. இன்று காலை வீதிமுனையில் சற்றே மேடிட்ட வயிற்றுடன் மெதுவாக நடந்து வந்த நிவேதாவைப் பார்த்தேன். கைகொட்டிச் சிரித்தது என் முன்னாள் காதல். ஆபீஸிலோ திடீர் டிரான்ஸ்ஃபரில் செல்கிறார் ஜி.எம். ஏன்? அலுவலகப் பேச்சு என் செவியில் அமிலத்தைக் கொட்டியது. ‘ஆறு வருஷமா குழந்தை இல்லாம இருந்த ஜி.எம் சார் இப்போதான் அப்பாவா புரொமோஷன் ஆனார். அதுக்குள்ள டிரான்ஸ்ஃபர் கேட்கிறார்…’ என் பூமி சரிந்தது. புவனாவைப் பார்க்க வேண்டும்போல் இருந்தது. அந்த மழை இரவின் சாட்சியா அது? ‘தலைவலி’ என பெர்மிஷன் சொல்லி வீடு வந்துசேர்ந்தால், அம்மாவின் இன்னொரு முகம். தன் தனிமையை ஞாபகப்படுத்தி என்னைத் திருமணத்துக்குத் தயார்ப்படுத்துகிறார். எனக்கு அவகாசம் கொடுக்கச் சொல்லிக் கேட்டிருக்கிறேன். எதற்கு அவகாசம்? தெரியவில்லை. அம்மாவிடம் ஏதாவது பொய் சொல்லிவிட்டு, எங்காவது ஒரு வாரம் சென்றுவர வேண்டியதுதான். எங்கே செல்ல? எங்கே சென்றாலும், என்னைத் துரத்த ஒரு பாடல் உண்டு. நிவேதாவின் இறுகிய காதல் உண்டு. புவனாவின் மார்பு இடுக்கில் உணர்ந்த புது வாசனை உண்டு. நான் எங்கே செல்வது?
1995, ஷூலை 24
கன்னியாகுமரியின் மடியில் வந்து விழுந்து மூன்று நாட்கள் ஆகின்றன. இன்னும் மனம் சமன்படவில்லை. எதைத் தேடி வந்தேன்? அமைதியையா… அது நிச்சயமாக இங்கே கிடைக்காது. சூரிய அஸ்தமனம் ஆகும் கடலை பார்த்தவாறு ஒரு ஹோட்டலில் அறை. நான் இயல்பானவன் இல்லை என்பதாகத்தானே ஆரம்பத்தில் இருந்து வாழ்க்கை என்னை நகர்த்திச் சென்றிருக்கிறது…
இன்றுவரை அப்படித்தானே! காந்தி மண்டபம், கன்னியாகுமரி அம்மன், விவேகானந்தர் பாறை… எதுவுமே எனக்குத் தீர்வு தரவில்லை. பைத்தியம் பிடித்துவிட்டால் இந்த கன்னியாகுமரியின் கரையெங்கும் அலையலாம்; கடல் பார்த்தபடி சாகலாம். எத்தனை பைத்தியங்களைப் பார்த்திருக்கும் இந்த முக்கடல் சங்கமம்! கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் வள்ளுவர் சிலை என் அவநம்பிக்கை குறித்து கேலிசெய்கிறது. இந்த அறையின் தனிமை என்னை தற்கொலைக்குத் தூண்டுகிறது.
மிகவும் அதிர்ச்சி தந்திருந்தது கிருபாகரனின் டைரி. ஜூலைக்குப் பிறகு எதுவுமே எழுதப்படவில்லை. அந்த டைரி அத்துடன் முடிந்துவிட்டது. என்ன ஆனான்… கன்னியாகுமரியில் கரைந்துவிட்டானா? எனக்கு அவனைப் பார்க்க வேண்டும்போல் இருந்தது. அவனிடம் அந்தப் பாடலும் லதா மங்கேஷ்கரின் குரலும் எனக்கும் மிகப் பிடிக்கும் எனச் சொல்ல வேண்டும். கல்லூரிக் காலத்தில் எனக்கும் ஒரு காதல் இருந்ததைச் சொல்ல வேண்டும். இதோ… சுகந்திக்கு துரோகம் இழைக்க நினைத்து, பின்னர் மருகும் என் மன நடுக்கத்தைச் சொல்ல வேண்டும். நேற்று தமயந்தியிடம் இருந்து போன் வந்ததுமே ஆபீஸில் இருந்து புறப்பட்டுவிட்டேன். ஆட்டோவில் செல்லும்போது மனதில் புரியா பயம் இருந்தது. சுகந்திக்குத் தெரிந்தால் என்ன ஆவேன்? தனியாக இருக்கும் தமயந்தியிடம் ஒரு சராசரி ஆணாக நான் வெளிப்பட்டுவிட்டால்… அதெல்லாம் தப்பு இல்லை என்கிறானா இந்த கிருபாகரன். ஆட்டோ, தமயந்தி இருக்கும் தெருமுனையோடு திரும்பிவிட்டது. எனக்கு தைரியம் இல்லை. வரும் சனி, ஞாயிறு சுகந்தியிடம் சொல்லாமல் கன்னியாகுமரி சென்று வந்தால் என்ன? எதற்கு எனத் தெரியவில்லை. போக வேண்டும்போல் தோன்றுகிறது.
கிருபாகரன் ஓர் அருவமாக நின்று என்னை வழிநடத்துகிறானோ எனத் தோன்றியது. அவன் டைரியில் எழுதியிருந்தபடியே சன்செட் வியூ அருகில் ஹோட்டல் எடுத்துத் தங்கினேன். ஆனால், அவன் தங்கியிருந்த ஹோட்டலாக இது இருக்காது. 20 வருடங்களுக்கு முந்தைய கன்னியாகுமரியை என்னால் மீட்டெடுக்க முடியாது என்பது உண்மை. இது த்ரீ ஸ்டார் ஹோட்டல். ஹோட்டல் முழுவதும் அங்கங்கே இருந்த புத்தனின் முக வடிவங்கள் எதையோ என்னிடம் குறிப்பாக உணர்த்துவதுபோல் இருந்தது. கடற்கரை எங்கும் அலைந்தேன் இன்று. என் வயதில் ஏதாவது பைத்தியக்காரனைப் பார்த்தால் கிருபாகரனோ எனத் தோன்றியது. நான் கொஞ்சம் கொஞ்சமாகப் பைத்தியமாகி வருகிறேனோ… சென்னையில் என்ன குறைச்சல்? மனைவி, குழந்தையுடன் நிம்மதியான வாழ்க்கை வாழாமல் எது என்னை இப்படி அலைக்கழிக்கிறது? தமயந்தியா… கிருபாகரனிடம் ஒரு கேள்வி கேட்டு, பதிலும் பெற்றுவிட்டால் எல்லாம் சரியாகிவிடும். அவன் கிடைப்பானா? அய்யோ… இறந்தாபோயிருப்பான்? வான் அளந்து நிற்கும் வள்ளுவனின் காலடியில் மோதும் அலையாக மனம். கிருபாகரனுக்குப் போலவே, எனக்கும் எந்தத் தீர்வும் சொல்லவில்லை கன்னியாகுமரி. நாளை இரவு சென்னை திரும்பவேண்டியதுதான். ஒரே ஒரு காரியம் முடித்துவிட்டால் மனம் தெளிந்துவிடும். கிருபாகரன் செய்த அதே காரியத்தை நானும் செய்ய முடிவெடுத்தேன்.
2015, நவம்பர் 13
இன்று ஓர் ஆச்சர்யம் நடந்தது. ஜனவரி மாதம் சென்னைக்கு மாற்றலாகி வந்தபோது காணாமல்போன என் பழைய டைரி கிடைத்தது. இலவச இணைப்பாக இன்னொரு டைரியும். இதே சென்னையில் இருக்கும் என் பெயரைக் கொண்டிருக்கும் இன்னொரு கிருபாகரன். போன் நம்பரில் இருந்து தன் ஜாதகத்தையே எழுதிவைத்திருக்கிறான். அடுத்தவர் டைரியைப் படிப்பது அவரின் படுக்கையறையை எட்டிப்பார்ப்பதற்கு சமம். போன் செய்து பேசினேன். நாளை வந்து நேரில் சந்தித்து வாங்கிக்கொள்வதாகச் சொல்லியிருக்கிறான். போன் பேசும்போது ஏன் அத்தனை ஆர்வமானான்? தெரியவில்லை. காத்திருக்கிறேன்.
– நவம்பர் 2015
Wow
Sema
கதையில் குழப்பம் இருக்கலாம் ஆனால் குழப்பமே கதையா இருக்க கூடாது ஒண்ணுமே புரியல.