கானல் வரி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: August 30, 2018
பார்வையிட்டோர்: 12,385 
 
 

எம் மேல கோபமா?

அலைகளின் மேல் தாழப்பறந்து விழுந்து பரவும் அலைகளின் இரைச்சலில் விலகி பின்னும் பறந்து காகமொன்று ஏதோ ஒரு சிவப்பு நிறப் பொருளை அலகுகளில் கவ்வி வந்தது. ஈரமணலில் அமர்ந்து பரவும் அலைகளுக்கு விலகி அலகுகளால் குத்தியது. சுற்றுமுற்றும் ஒர பார்வையை வீசி புரட்டிப் பார்த்தது. சில வினாடிகள தயங்கி க்ரா க்ரா என பறந்தது. பழைய எல்லைகளைத் தாண்டி வந்த அலையொன்று அநதப் பொருளையும் நனைத்து உறிஞ்சியபடி உள்நகர்ந்தது.
நான் கேட்டதுக்கு பதிலே சொல்லலையே?

ம்.

எம் மேல கோபமா?

விழிகளில் நீர் ததும்ப குற்ற உணர்ச்சியுடன் நிற்கும் குழந்தை போல கேட்டாள்.

பதில் பேசமுடியாமல் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

எல்லாம் முடிந்தது. திரை விலகியபின் கற்பூர ஒளியில் ஜ்வலிக்கும் புன்னகை போன்ற சிலிர்ப்பை உண்டாக்கும் இந்த அழகும் குழந்தை உள்ளமும் இனி நிரந்தரமாகவே பிரியப் போகிறது.

ஏதாவது பேசுங்க.உங்க வேதனை புரியாம இல்ல.திட்டியாவது தீத்திருங்க ப்ளீஸ் இப்படி அமைதியா இருக்கறதப் பாத்தா பயமாயிருக்கு.உங்க மனச எரிய விட்டுட்டு நான் நல்லாவே வாழ மாட்டேன்.

முதுகு குலுங்க தலை கவிழ்ந்து அழுபவளைப் பார்க்கையில் பலமெல்லாம் வடிந்து விட்டதைப் போல் உணர்ந்தான். என்ன செய்ய பழைய ஜானுவாயிருந்தால் ஒரு மாலையைப் போல் எடுத்து கண்களைத் துடைத்திருக்கலாம்.ஆனால் இன்னும் ஒரு மாதத்தில் ஜானகி ராகவனாகப் போகிறவளை எந்த உரிமையில் தொடுவது?
ஜானகி.

அவள் இன்னும் விசும்பிக் கொண்டிருந்தாள்.

ஜானகி இங்க பாரு…

நிமிர்ந்தவளின் கண்களின் பளபளப்பு ஈரத்தால் இன்னும் அதிகமாகி விட்டிருந்தது. உணர்வுகளின் கரையை உடைத்து விடும் அவளது பார்வையை தாங்க முடியாமல் வேறு பக்கம் திரும்பினான்.

என்னம்மா இது சின்னக்குழந்த மாதிரி. சத்யமா சொல்றேன். எனக்கு கொஞ்சம் கூட கோபமோ வருத்தமோ இல்ல. உண்மையிலே சந்தோஷமா கூட இருக்கு. விடிவே இல்லாத என்னோட வாழ்க்கையில உன்னையும் சேர்த்து கஷ்டப்படுத்தப் போறேனோன்னு என் மனசில உறுத்திக்கிட்டிருந்த முள் இப்போ விழுந்துருச்சு.
சிறிது நேரம் உணர்ச்சிகளின் கொந்தளிப்பில் பேசமுடியாமல் திணறினான்.

நீ நல்லாயிருக்கணும்.உன்னோட நல்ல மனசுக்கு நீ நிச்சயம் நல்லாயிருப்ப. என்னைப் பத்தி கவலைப்படாத. நாம பழகினத ஒரு இனிமையான கனவுன்னு நினைச்சுக்கிறேன். மறுபடியும் சொல்றேன்.எனக்கு கோபமோ வருத்தமோ இல்ல.காதல்ங்கறது விருப்பமானத எப்படியாவது அடையறது இல்ல. நேசிக்கறவங்களுக்கு எந்த துன்பமும் வராம நடந்துக்கறதுதான்.

சிறிது நேரம் அலைகளின் இரைச்சல் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது.

நான் கிளம்பட்டுமா?

வந்து விட்டது,நேற்று வரை இவன் கற்பனை கூட செய்து பார்த்திராத அந்த நிமிடம்.அவர்கள் மேல் கவிழ்ந்திருந்த அமைதி வேதனை தருவதாக இருந்தது.என்ன செய்வதென்று தோன்றாமல் அவளையை பார்த்துக் கொண்டிருந்தான்.

இவள் பழைய ஜானு இல்லை.இவனைக் கண்டதும் கண்களும் உதடுகளும் விரிய புன்னகைக்கும் ஜானு இல்லை.உயிரைக் கிறங்க வைக்கும் அந்தப் பார்வை அவள் கண்களுக்குள் எங்கோ ஆழத்தில் புதைந்து விட்டிருந்தது.இப்படி தொட முடியாத உயரத்தில் நெருங்க முடியாத துரத்தில் போய்விட அவளால் எப்படி முடிந்தது.நாலைந்து வயது கூடின மாதிரி முதிர்ச்சியுடன் ரொம்பவும் அன்னியமானது மாதிரி இருந்தாள்.

என்றாலும் அவளும் இந்த நிமிடம் வேதனையில் துடிப்பதை பற்களுக்குக் கீழ் அழுந்திய உதடுகளும்,ஈரத்தால் கனத்த இமைகளும்,இலக்கின்றி வெறித்த பார்வைகளும் உணர்த்தின.

சரி நீ புறப்படு

கல்யாணத்துக்கு அவசியம் வரணும் என்ற போது அவள் உதடுகள் நடுங்கின.

நல்லா ஏமாந்தீங்களா,நான் இப்படி சொன்னா உங்க ரியாக்ஷன் எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்கத்தான் செஞ்சேன்.ஏய் உங்கள பிரிஞ்சு என்னால இருக்க முடியுமாம்மா என்றபடி சிரிக்க மாட்டாளாவென்று ஒரு எண்ணம் பைத்தியக்காரத்தனமாக தோன்றியது.

மெல்ல எழுநது கடை கடையாய் ஏறி இறங்கி ஜானகியின் பிறந்தநாளுக்கு ப்ரஸன்ட் பண்ணின ஜானகிக்கு மிகவும் பிடித்த மெருன் வண்ண புடவையை சரி செய்தபடி மணலைத் தட்டிவிட்டு வரட்டுமா என்றாள்.இவன் தலையசைத்ததும் நடக்க ஆரம்பித்தாள்.

பிரிவின் வேதனை பாரமாய் அழுத்த அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.ஆயிரம் வருஷமானாலும் காத்திருப்பேன் என்றவள்,ஒருமுறையாவது திரும்பிப் பார்ப்பாள் என்ற இவனது நம்பிக்கையை மிதித்து மிதித்து நடந்து கொண்டிருந்தாள்.

எல்லாம் முடிந்தது.சாலையில் வரும்போது பார்த்து வீட்டில் மொட்டைமாடிக்கு போவதற்குள் கலைந்து விடுகிற வானவில் மாதிரி எல்லாம் கலைந்து விட்டது.இனி ஜானகி இல்லை.ஜானகி ராகவன்.இவனை மையமாகக் கொண்டு சூன்யவட்டமொன்று பரவத் தொடங்கியது.

கல்யாணத்துக்கு வரவேண்டுமாம்.போக வேண்டுமா?அந்த முகம் தெரியாத ராகவனைப் பார்க்கவாவது அவசியம் போகத்தான் வேண்டும்.

வழியும் வியர்வையை கைக்குட்டையால் ஒத்திக் கொண்டு பட்டுப்புடவையும் மாலையுமாய் தன் மேல் விழும் அவளின் பார்வையை பரிச்சயமில்லாததுபோல் விலக்கிக் கொண்டு விடலாம்.அல்லது கணவனிடம் நண்பனென்றோ,தெரிந்தவனென்றோ அறிமுகப்படுத்தலாம்.தன்னால் தவிர்க்கவே முடியாத அந்தக் காட்சி தந்த வலியும் வேதனையும் அவன் உயிரை இறுக்கியது.

எப்படி தன்னால் அவ்வளவு சுலபமாக சொல்ல முடிந்தது?இனிமையான கனவென்று நினைத்துக் கொள்கிறேனென்று.அவ்வளவு சுலபமா அது இ,ப்போதும் கூட கடலின் இரைச்சலும் காற்றின் குளிரும் இல்லையென்றால் சற்றுமுன் நடந்ததெல்லாம் ஒரு கெட்ட கனவென்றுதான் நினைத்திருப்பான்.

ஒரு பெருமுச்சு அனலாக வழிந்தது.தண்ணீரில் நிற்க வேண்டும் போல் இருந்தது.அப்படியே நடந்து சென்று காலடியில் அலைகள் புரள நின்றான்.தண்ணீரின் விஸ்வருபம் கண்களை அசத்தியது.அடிவானமும் கடலம் உரசமிடத்தில் ஒரு கப்பல் நின்றிருந்தது.நீலவானின் பின்னணியில் ஒரு ஒற்றைப்பறவை பறந்து கொண்டிருந்தது.திடீரென ஒரு பெரிய அலை அடித்து தடுமாற வைத்தது.தொடைகளிலெல்லாம் பேன்ட் நனைந்து ஒட்டிக் கொண்டது.மண் அரித்தபடி திரும்பிய போது காலடியில் பூமி நழுவியது.

மீண்டும் ஒரு அலை ஆவேசத்தோடு கரைக்கு வந்து நுரை கக்கித் திரும்பும் நிகழ்ச்சி எத்தனை நுற்றாண்டுகளாய் அலுப்பின்றி நடக்கிறது.

தன்னுடைய வாழ்க்க ஏன் இப்படி ஒரு சமுத்திரமாகிவிட்டது.போராட்ட அலைகள் ஓயவே ஒயாதா?ரிடையரான அப்பா,பொறுப்பில்லாத தம்பி,கர்யாணத்திற்கு காத்திருக்கும் தங்கை என வாழ்க்கை ஏன் இப்படி என் மேல் பாரமாக அழுத்தி விழிபிதுங்கி முச்சு திணறச் செய்கிறது?வார்வின் மிகப் பெரிய சந்தோஷம் என நம்பியிருந்த ஜானகியும் இனி இல்லை.இரண்டாவது முறையாக அம்மா இறந்தது போல் உணர்ந்தான்.

காலில் ஏதோ உரசியது.மிகச்சிறிய ப்ளாஸ்டிக் டப்பா.சிவப்பு நிறத்தில் சிதைந்து அலைகளின் அசைவில் மெல்ல அசைந்தபடி கிடந்தது.காகம்,ஈரமணலில் விட்டு விட்டுப் போனது இதைத்தானா?அந்த ப்ளாஸ்டிக் டப்பாவிற்கும் தனக்கும் அதிக வித்தியாசமில்லை என்று அவனுக்குத் தோன்றிய நேரத்தில்,

மணலில் கால்கள் புதைய நடந்து கொண்டிருந்த ஜானகி திரும்பிப் பார்த்தாள்.அலைகளுக்கு நடுவே சிறகொடிந்த பறவையைப் போல் சிவா நின்று கொண்டிருந்தது தாளமுடியாத வேதனையை ஏற்படுத்தியது.அடிவயிற்றிலிருந்து கிளம்பிய அழுகையை அடக்கிக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.

சிவா ஏன் இப்படி இருக்க,ரெண்டு வருணமா காதலிச்சுட்டு இன்னொருத்தர கல்யாணம் பண்ணிக்ப் போறேன்னு சொன்னதும் எப்படி உன்னால சாதாரணமா,சரி நல்லாருன்னு வழியனுப்ப முடியுது,என்னை விட்டுட்டு இன்னொருத்தடன கூட வாழ்ந்திருவியா பார்க்கறேன்டி என்று ஏன் கோபப்படல.வா எங்கயாவது போய் கல்யாணம் பண்ணிக்கலாம்னு கூட ஏன் சொல்ல முடியல

அத்தனை அற்புதமான பிம்பங்களும் உதிர்ந்து அற்புமான புழுவாக மாற அம்மாவால் எப்படி முடிந்தது?நல்ல நண்பனாக பழகி வந்த அப்பாவால் எப்படி சராசரி அப்பாவாக மாற முடிந்தது?

எல்லாம் உங்களால வந்தது.பொட்டப்புள்ளையா லட்சணமா வளக்காம ஒரேடியா செல்லம் குடுத்தீங்க.இப்ப அது நம்ம தலையில இடியா எறங்கியிருக்கு.ஏன்டி ரெண்டு வருஷ பழக்கம்னு சொல்றியே வெறும் வாய் வார்த்தைதானா இல்ல… அய்யோ என் வயிறே கலங்குதே என்று அம்மாவும், அந்தக் காலத்துல பெரிய மனுணியானதும் சட்டுப்புட்டுன்னு கல்யாணம் பண்ணி வச்சவனெல்லாம் பைத்தியக்காரனா?இன்னைக்கெல்லாம் டிவி சினிமான்னு ஒடம்பு மலர்றதுக்கு முன்னாலயே மனச மலர்ந்துருது.காலகாலத்துல கல்யாணம் பண்ணி வைக்காம படிக்க வைக்கிறேன் பாட வைக்கிறேன்னு நிங்க அடிச்ச கூத்துல அவ தானா ஆம்பளய தேடிக்கிட்டா என்று அத்தையும் இரைத்த நரகலைச் சொன்னால் உன்னால் தாங்க முடியுமா?

நொறுங்கிப் போயிருக்கிற உன்னோட வேதனை எனக்கு புரியுது சிவா.ஆனா,அன்பால,அதிகாரத்தால நுட்பமான விலங்குகளால குடும்பத்தோட பிணைக்கப்பட்டிருக்கிற பெண்ணோட அவஸ்தைகள் உனக்குப் புரியாது.

சிவா,கவிதையிலோ கதையிலோ உன்னோட சோகத்த இறக்கி வச்சிட்டு இன்னொருத்தியோட நீ நிம்மதியா வாழப்போற.நான் இப்படியே காலகாலத்துக்கும் உன்னோட நினைவுகளை சுமந்துகிட்டு நடைப்பிணமா வாழர் போறேன்.

ப்ரியமான அப்பா,அம்மா எல்லாத்துக்கும் மேல நீ எல்லாரையும் இழந்துட்டு அனாதையா நிற்கிறேனே அய்யோ

கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் வழிந்தது.இல்ல முடியாது.என்னால நீ இல்லாம வாழ முடியாதுன்னு ஓடிப் போய் அவன் மார்பில் சாய்ந்து கொண்டு கதற வேண்டும் என்று தோன்றிய போது அவள் செல்ல வேண்டிய பேருந்து நிறுத்தத்தில் வந்து நின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *