தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: March 31, 2020
பார்வையிட்டோர்: 33,594 
 

சிவா குடும்பத்து அப்பார்ட் மென்ட்டுக்கும் கௌரி குடும்பத்து அப்பார்ட்மென்ட்டுக்கும் நடுவே இருந்த குறுகிய நடையில் பலர் கூடியிருந்தனர். சிவா அவனது பாட்டியின் முகத்தின் மேல் தலையணையைப் போட்டு மூச்சு நிற்கும்படி அழுத்திப் பிடித்திருந்தான்.

சிவாவின் வீட்டு முன்னறையில், சுவரில் தொங்கிக்கொண்டிருந்த ஸ்ட்ரெட்ச்சர் போன்ற படுக்கையில்தான் சிவாவின் பாட்டியைக் கிடத்தியிருந்தார்கள். அவர் மீது கறுப்பு நிறத்தில் ஒரு போர்வை போத்தியிருந்தது. அவளது கைகளும் கால்களும் அதற்காகவே செய்யப்பட்ட பட்டைகளால் கட்டப்பட்டிருந்தன. பாட்டியின் அசைவு நின்றிருந்தது. பாட்டியின் தலை பக்கத்தில் தலையணையைப் பிடித்தபடி சிவா நின்றிருந்தான். கால் பக்கத்தில் த.தா.மு.க கட்சியின் வட்டச் செயலாளர் ஆதி, அந்தப் பாட்டியின் கட்டியிருந்த கால்களை ஒப்புக்குப் பிடித்துக்கொண்டிருந்தார். சிவாவின் அம்மாவும் அப்பாவும் அவர்களின் வீட்டு முன்கதவு அருகே எதிர்ப்பக்கம் பார்த்தபடி நின்றிருந்தார்கள். கௌரியும் அவள் அம்மா-அப்பாவும் கெளரி வீட்டு முன்கதவு அருகே நின்றிருந்தார்கள். அவர்கள் வீட்டு முன்னறையில் கௌரியின் தம்பி சுவரில் தொங்கிய நாற்காலிப் பலகையில் உட்கார்ந்திருந்தான். அவனுடைய முகத்தில் முன்புறமாக தொலைபேசி காட்சிப் பெட்டியை மாட்டிக்கொண்டிருந்தான். அவன் முகத்தின் அளவு இருந்த அந்தக் கறுப்புப் பெட்டியால், அவன் உடல் அந்தப் பெட்டியில் இருந்து கீழாக வளர்ந்து வாடியதுபோல் இருந்தது. கதவுகளில் கூடுதல் பாதுகாப்புக்காக எப்போதோ சுற்றியிருந்த முள்கம்பி துருப்பிடித்திருந்தது. எல்லோரும் அடுத்தது என்ன என்பது பற்றிய பேச்சில் இருந்தார்கள்.

சிவாவைத் திரும்பிப் பார்த்த சிவாவின் அம்மா, “ஆகிட்டிருக்கும்டா விட்டுடு” என்றாள். அவளது மெல்லிய வலது கையில் ஒரு வண்ணப்பட்டையை வளையல்போல போட்டிருந்தாள்.

எதிர்ப்பக்கத்தில் இருந்து, “இன்னும் அஞ்சு நிமிஷம் இருக்கட்டும்ஜி” என்றார் கௌரியின் அப்பா. அவரது வலது கையிலும் ஒரு வண்ணப்பட்டை இருந்தது. ஆனால், அது வேறு வண்ணத்தில் இருந்தது. அங்கு இருந்த எல்லோர் கைகளிலுமே வண்ணப்பட்டைகள் இருந்தன.

“ஆமாஜி, கொஞ்சம் நேரம் அதிகம் பிடிச்சா தப்பு இல்லை” என்றார் பாட்டியின் கால்களைப் பிடித்துக்கொண்டிருந்த ஆதி.

“ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, 2084-ல, காந்தாரி தெருவுல ஒரு கேஸ். அந்த ஆளு, ஐயன் மதுக்குடிலில் இருந்து நேரா வீட்டுக்குப் போகாம மெட்ரோ ரயில் நிலையத்துலயே உரக்க மேலவங்களை சாதி குறைவாப் பேசிட்டாரு. அது கேமராலயும் பதிவாகிருச்சு. அவரையும் `தியாகியாக்கணும்’னு காவல் நட்புத் துறையில் சொல்லிட்டாங்க. இப்படித்தான் தலைகாணி போட்டு அவரு சம்சாரம் புடிச்சாங்க. சொல்லச் சொல்லக் கேக்காம, `ஆகிருச்சு’னு விட்டுட்டாங்க. அவரு தியாகியாகிட்டார்னு டி.வி-க்கு விளக்கிக்கிட்டிருக்கேன்… அந்த ஆளு இருமிக்கிட்டே எழுந்து உக்காந்துட்டார். நல்ல காலமா அவங்க குடும்பத்துலேயே அந்த அம்மாவோட தம்பி இருந்தார். அவரை இன்னொரு தன்னார்வலரா நியமிச்சு, கத்தி கபடா எல்லாம் வெச்சு அந்த ஆளைத் `தியாகி’யாக்கி முடிச்சோம். வாசல் எல்லாம் ரத்தமும் சத்தமுமா ஒரே கலீஜு. அந்தக் குடும்பத்துக்கு அசுத்தக் கட்டணம் வேற போடவேண்டியதாப்போச்சு” என்றார் ஆதி.

“இல்லைஜி, `அடுத்த வாரம் தேர்தலை வெச்சுக்கிட்டு இப்படி உங்களை நேரத்தைக் கடத்தி அலைக்கழிக்கிறோமே’னு சொன்னோம்” என்றார் சிவாவின் அப்பா. அவருக்குத் தளர்வாக இருந்தது. தனது பாக்கெட்டில் இருந்து கருஞ்சிவப்பு வண்ணக் கோலா மாத்திரைக் குப்பியை எடுத்து, குண்டாக இருந்த ஒரு மாத்திரையை வாயில் போட்டுக் கொண்டு சப்பி உறிஞ்சத் தொடங்கினார்.

“அதுக்கு என்ன பண்றதுஜி? கடமை, சாதி, கட்டுப்பாடுனு ஆட்சிக்கும் பொறுப்பு இருக்குல?” என்றார் ஆதி.

இரண்டு வீடுகளிலும் முன் அறைச் சுவர்களில் இருந்த விளம்பரம் செறிந்த தொலைக்காட்சித் திரைகள், இரண்டு இரண்டு நிகழ்ச்சிகளை பாதிப் பாதித் திரைகளாகப் பிரித்துக் காண்பித்தபடி பளபளத்து ஓடிக்கொண்டே இருந்தன.

“ஜி, பாட்டி தியாகி ஆகிட்டாங்கன்னா, சான்றிதழ் மதிப்பெண்கள் உடனே கணக்காகிடுமா?” என்று ஆதியிடம் கேட்டார் சிவாவின் அம்மா.

“அப்படியா? எங்க குடும்பத்துக்கு 2070-ல் இருந்தே சரியா கணக்கு அப்டேட் ஆகலை” என்றார் கௌரியின் அப்பா.

“மொதல்ல இது முடியட்டும்ஜி. இதோ இன்னும் பத்து நிமிஷத்துல `தன்-டி.வி’காரங்க வந்துடுவாங்க. நம்ம கட்சிப் பசங்களை, தியாகிச் சான்றிதழும் தன்னார்வலர் சான்றிதழும் பண்ணிக் கொண்டுவரச் சொல்லிட்டுத்தான் இங்கே வந்தேன். வந்திருவாங்க. நேரடி ஒளிபரப்பே பண்ணியிருக்கலாம்… இன்னைக்கு என்னவோ நகைச்சுவைப் போட்டியோட இறுதிச்சுற்றாம். ஆனா, இன்னைக்கு ராத்திரியே போட்ருவாங்க” என்ற ஆதி, “தம்பி சிவா, நீங்கதான் தன்னார்வலர் சான்றிதழ் வாங்கிக்கணும். போயி வேற நல்லதா ஒரு டி-ஷர்ட் போட்டுக்கங்க” என்றார்.

காதல் 2086

தான் இரு கைகளாலும் அழுத்திப் பிடித்திருந்த தலையணையையும் அதன் கீழ் இருந்த பாட்டியின் முகத்தையும் கழுத்து அசைவில் சுட்டியபடி, “ஆகிடுச்சா… விட்டுடவா?” என்றான் சிவா. அவன் முகம் லேசாக வியர்த்திருந்தது.

எல்லோரும் `ஆகிட்டிருக்கும்’ எனச் சொன்னார்கள். தலையணை அவள் முகத்து மேலேயே கிடக்க, பாட்டி இறந்திருந்தாள். மிகவும் மெலிந்து காணப்பட்ட அவளது உடல் மீது இருந்த கறுப்புப் போர்வையும் த.தா.மு.க கட்சித் தலைவர் ஐயன் படம் பொறித்த தலையணையும் வெற்றுப் படுக்கையில் இருப்பதுபோல் இருந்தன. ஆட்சி மாறும்போது, புதுத் தலையணை உறைகள் மட்டும் விநியோகிக்கப்படும்.

கொஞ்ச நேரத்தில் `தன்-டி.வி’க்காரர்கள் வந்தார்கள். சாக்கடையில் கல் வீசியதுபோல அந்த இடத்தில் அவர்களைச் சுற்றி பரபரப்பு ஏற்பட்டது.

ஆதியும் டி.வி-க்காரர்களின் குழுத் தலைவர் ராமும் எந்த இடத்தில் கேமராக்களை வைப்பது என்பது பற்றி பேசினார்கள். அதற்குள் த.தா.மு.க கட்சியின் ஆட்கள், துப்பாக்கிகள் பொருத்தப்பட்டிருந்த காவல் நட்புத் துறை மினி வேனில் சான்றிதழ்களுடன் வந்துவிட்டிருந் தார்கள். தொலைபேசிக் காட்சிப் பெட்டியில் படம் பார்த்துக்கொண்டிருந்த கௌரியின் தம்பியை, தலையில் தட்டினார் ராம். அவன் அதிர்ந்து முகத்தில் இருந்து பெட்டியை விலக்கினான். பார்த்துக்கொண்டிருந்த திரைப்படத்தில் இருந்து ஏதோ ஒரு வசனம் சொல்லியபடி மிரள மிரள விழித்தான். அவன் நிலைமைக்கு வர சில நிமிடங்கள் பிடித்தன. பிறகு, சாதிப் பண்பாடு காத்த தியாகிச் சான்றிதழில் கீர்த்தனா என்கிற பாட்டியின் பெயரையும், தன்னார்வலர் சான்றிதழில் சிவாவின் பெயரையும் சரிபார்க்கச் சொன்னார். பாட்டியும் சிவாவும் ஒரே சாதி என்பதால், சான்றிதழ்களின் வண்ணத்தில் குழப்பம் இல்லை என்பது எல்லோருக்கும் ஆறுதலாக இருந்தது.

ராம், எல்லோருக்கும் படப்பிடிப்பு முறையை விளக்கினார்…

“தலைவர்ஜி-க்கு இதெல்லாம் நல்லா தெரியும். மத்தவங்க எல்லாருக்காகவும் ஒரு தடவை சொல்லிடுறேன். இந்தச் சிவப்பு லைட் எரிஞ்சா ரிக்கார்டிங்னு அர்த்தம். யாரு பேசினாலும், எல்லார் வலது கையிலயும் இருக்கிற அவங்கவங்க சாதி வண்ணப்பட்டை நல்லா தெரியுற மாதிரி கையை உயர்த்திப் பேசணும். இல்லைன்னா ஷாட் ரிஜெக்ட் ஆகிடும். மொதல்ல தியாகி குடும்பத்தைச் சேர்ந்தவங்கள்ல யாராவது தியாகியோட பேர், வயசு, சாதி விவரம் எல்லாம் சொல்லணும். அப்புறம் சாதிப் பண்பாட்டுக்கு என்ன ஆபத்து வர இருந்ததுனு தெளிவா விளக்கணும். அப்ப, அடுத்த சாதிக்காரங்கள்ல ஒருத்தரும் வந்து பேசி விளக்கலாம். அடுத்ததா தலைவர்கிட்ட நான் கேள்வி கேட்பேன். அவரு, தியாகி அவங்களாகவே சாதிப் பண்பாட்டுக்கு எதிரான குற்றத்தை ஒப்புக்கிட்டு, மனம் திருந்தி, தியாகியாக முன்வந்ததைப் பற்றி சொல்லி, சாதிப் பண்பாட்டை ஐயன் ஆணைப்படி காப்பாத்திட்டதா சொல்வார். அப்ப எல்லாரும் கை தட்டலாம். அப்புறம் `சாதிப் பண்பாடு காத்த தியாகி’ சான்றிதழ் கொடுக்கிறதை எடுப்போம். தியாகி சார்பா யார் வாங்கிக்கப்போறீங்க?” என்றார்.

“ஜி, நான் வாங்கிக்கிறேன்” என்றார் சிவாவின் அப்பா.

“மொதல்ல இவர் பேசட்டும். ஆனா, சான்றிதழை வாங்க யாராவது லேடீஸ் இருந்தா நல்லா இருக்கும்” என்றார் ராமின் ஒளிப்பதிவு உதவியாளர். சிவாவின் அம்மா சான்றிதழைப் பெற்றுக்கொள்வது என முடிவானது. விகசிப்புடன் புதுப் புடவை மாற்றிக்கொள்ள உள்ளே செல்லத் திரும்பியவரை ராம் நிறுத்தினார்.

“இருங்கஜி, முழுக்கக் கேட்டுட்டுப் போங்க. தனித்தனியா சொல்ல முடியுமா?” என்று நெற்றி சுருக்கினார் ராம்.

சிவாவின் அப்பா, சிவாவின் அம்மாவைக் கன்னத்தில் சப்பென அடித்து “பெரியவங்க பேசுறாங்கல!” என்று பல்லைக் கடித்தார்.

“விடுங்கஜி” என்று போனால் போகட்டும் என்பதுபோல கையை வீசினார் ஆதி.

“வேலூர் மாநாடு நடந்தப்ப ரொ.த.தா.மு.க கட்சித் தலைவியைப் பத்தி ஐயன் சொன்னதை கேட்டிருப்பீங்க. ‘பேதையர் உள்ளம் பெரும் இருட்பள்ளம்’னாரு. சொல்லிச் சொல்லித்தான் திருத்தணும் இதுங்களை.”

ராம் தொடர்ந்தார்…

“சான்றிதழை தலைவர்கிட்ட இருந்து வாங்கிக்கிட்டு, உங்க குடும்பம் சாதிப் பண்பாட்டைக் காப்பாத்த, `இந்தச் சிறு சேவை செய்ய முடிஞ்சதுக்கு சந்தோஷம்’னு சொல்லணும். அது மட்டும் நீங்க சொன்னா போதும். சொல்லிட்டு தலைவர் காலைத் தொட்டுட்டு போயிட்டே இருக்க வேண்டியதுதான். அடுத்ததா தன்னார்வலர் சான்றிதழ். அது ரொம்ப சிம்பிள்தான். யாருப்பா, நீயா? கேட்டுக்க…” என்று சிவாவைப் பார்த்துத் தொடர்ந்தார் ராம்.

“நேரா வந்து சான்றிதழை வாங்கிக்கிட்டு தலைவர் கால்ல விழுந்துட்டு எழுந்து போயிடணும். பேச எல்லாம் தேவை இருக்காது.”

சிவாவுடன் எல்லோரும் தலையாட்டி னார்கள். “எல்லாரும் போன் டி.வி-யைக் கழட்டிவெச்சிடுங்க. அதை மாட்டிக்கிட்டு கேமரா முன்னாடி வரக் கூடாது” என்றார் ராம்.

எல்லோரும் அப்போதுதான் உணர்ந்தது போல அந்த உறுதியான கறுப்புப் பெட்டிகளை தங்கள் முதுகுகளில் இருந்து கழற்றினார்கள்.

சிவாவின் அம்மாவுக்கும் சிவாவுக்கும் தோளின் குறுக்கே போட்டுக்கொள்ள தன்-டி.வி துணிப்பட்டை வளையங்கள் தரப்பட்டன. அதில் தன்-டி.வி-யின் சின்னமும், த.தா.மு.க-வின் சின்னமும், அந்த மாத விளம்பரதாரர் அதிசுகம் மாத்திரையின் படமும் போட்டிருந்தன.

“மகா மோட்டார் விளம்பரம் போட்ட துணிப்பட்டை இல்லையா?’’ என்று வினவினான் கௌரியின் தம்பி.

“அது மூன்று மாதங்களுக்கு முன்பே முடிந்துவிட்டது’’ என்றார் ஒளிப்பதிவாளர்.

ஒளிப்பதிவு தொடங்கும் முன்னர் எல்லோரும் அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார்கள். கௌரியின் தம்பி, மீண்டும் போன் டி.வி பார்க்கத் தொடங்கினான். அவனை சுவரில் ஆணி அடித்து மாட்டிவைத்ததுபோல இருந்தது. அந்தச் சிறிய வீட்டில் படுக்கைகள், நாற்காலிகள், மேஜைகள்… என எல்லாமே சுவர்களில் மடங்கித் தொங்கிக்கொண்டிருந்தன.

சிவாவின் அப்பா வலது கையை உயர்த்தி, சாதிப் பட்டை தெரியும்படி வைத்துக்கொண்டு கேமராவைப் பார்த்துப் பேசத் தொடங்கினார். வெகுநாள் பயன்படுத்தாத கதவு கீல்போல முதலில் அவர் குரல் இழுபட்டது. போகப்போக வேகமும் திடமும் கூடின. அவரே அவரை டி.வி-யில் பார்ப்பதுபோல காணப்பட்டார். அவரது தாயாரின் பெயர், சாதி, வயது விவரங்களைச் சொன்னார்.

“96 வயது என்பதால் இன்னும் நான்கு வருடங்களில் எப்படியும் அமரர் பேறு பெறுவதற்கு அந்த மாவட்டத்தின் அமரர் மஹாலுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பார் என்றாலும், அதற்குள் இந்தச் சம்பவம் நடந்தது ஆண்டவன் நற்கருணை என்றார். இதுவரை அந்தப் பாட்டி சாதிப் பண்பாட்டுக்கு எதிராக எதுவும் செய்ததாகப் பதிவாகவில்லை’’ என்றார். “ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக அவர் தனது பேரன் சிவாவுக்கும் பக்கத்து போர்ஷனில் வசிக்கும் வேறு சாதியைச் சேர்ந்த கெளரி என்னும் பெண்ணுக்கும் இடையில் சாதிப் பண்பாட்டுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் காதல் உண்டாக்க முயற்சித்த விஷயம் தெரியவந்தது” என்றார். “அவர்கள் இருவரிடமும் ஒருவரைப் பற்றி இன்னொருத்தரிடம் பேசுவதும், அவர்களை பரஸ்பரம் பேசச் சொல்லி ஊக்குவித்ததும் நடந்தது’’ என்றார்.

“இது எத்தகைய சமூகச் சீரழிவுக்கு வழிவகுத்திருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே’’ என்றார். “வீட்டில் இது குறித்து விவாதம் நடந்ததும் ஒருமுறை பாட்டியை நன்னெறிக் கருவிகள் கொண்டு சீர்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்றும், அதன் விளைவாக பாட்டி ஒரு வாரம் மருத்துவமனையில் இருந்தார். ஆயினும் இளைய தலைமுறைக்கு வழிகாட்டவேண்டிய பாட்டி, தொடர்ந்து அவர்களின் மனதில் தீய விஷயங்களை விதைத்தார்’’ என்றார். ஒருமுறை சிவாவையும் கெளரியையும் பார்த்து, ‘மாட்டுக்கு இல்லாத சாதி மனுஷனுக்கு ஏன்?’ என்று பாட்டி கேட்டதாகவும் சொன்னார்.

“கட்… போதும்ஜி. நிறுத்திக்கலாம்” என்றார் ராம். ஒளிப்பதிவாளரைப் பார்த்து, “கடைசி வரியை வெட்டிடு” என்றார்.

ஒளிப்பதிவாளர் கையை உயர்த்தி, ‘தெரியும்’ என்பதாகச் சைகைசெய்தார். பிறகு தொடர்ந்து, “பொண்ணு சைடுல, அந்தச் சாதியில் இருந்து யாருப்பா வர்றது?” என்றார்.

தானும் கோலா மாத்திரைகளைத் தொடர்ந்து சப்பி உறிஞ்சியபடி இருந்த கௌரியின் அம்மா, வாயில் இருந்த மாத்திரையை விழுங்கிவிட்டு கேமரா முன்வந்து நின்றார்.

“க்ளோஸப்பா எடுப்பீங்க?” என்றார்.

“அதை விடுங்க. சாதிப் பட்டை தெரியவேணாமா? கையைத் தூக்கிப்பிடிங்க” என்றார் ராம்.

கௌரியின் அம்மா, எப்படி கெளரி அந்தப் பாட்டியின் சீர்கெட்ட வலையில் விழ இருந்தாள் என்பதையும், எப்படி அவர்களது குடும்பம் சாதி உயர்வைச் சொல்லி அவளை நல்வழிப்படுத்தியது என்பதையும் சொன்னார். அவர் நிறுத்தியதும் ராம், ஆதியைப் பேட்டி காண அழைத்தார்.

அதற்குள் ஒளிப்பதிவாளர் குறுக்கிட்டு, “ஜி, ‘சாதிப் பண்பாட்டுக்கு ஊறு விளைவித்தல்’ வரி சொல்லலியே? க்ளியரன்ஸ் ஆகாது” என்றார்.

மீண்டும் கௌரியின் அம்மா அழைக்கப்பட்டார். சாதிப் பண்பாட்டுக்கு ஊறு விளைவிக்க நினைத்த பாட்டியிடம் இருந்து தங்கள் மகள் கௌரியை மீட்டதைச் சொன்னார். கெளரியின் கணினிப் பலகையில் இவர்கள் கண்டுபிடித்த காதல் மின்னஞ்சல்களையும் செய்திகளையும் வைத்து கௌரியின் அப்பா அவளை விசாரணை செய்ததையும் சொன்னார். கூடவே, கௌரியின் அப்பா அவளை ‘இளைஞர் நெறிப்படுத்தும் பிரம்’பால் அடித்ததில் அவளுக்கு முதுகில் இருந்து ரத்தமே வந்துவிட்டது என்பதையும் சொன்னார்.

காதல் 20862

அவர் முடித்ததும் ஆதி வந்து கேமரா முன்பு நின்று சிரித்துப்பார்த்துக்கொண்டார்.

ராம் தரையைப் பார்த்தபடி இருந்தார்.

“எப்ப ஆரம்பிக்கணும் சொல்லுங்கஜி” என்றார் ஆதி.

“ஜி, ஒரு நிமிஷம் வாங்க, உங்ககூடப் பேசணும்” என்றபடி படிகளில் இறங்கிப்போனார் ராம். ஆதி பின்தொடர்ந்தார். இருவரும் காவல் நட்புத் துறையின் வண்டியில் உட்கார்ந்து பேசினார்கள். காவல் நட்புத் துறை ஆட்களும் த.தா.மு.க கட்சி ஆட்களும் தள்ளிப்போய் நின்று கொண்டார்கள். இரண்டு பேரும் அவர்களது முதுகுப் பக்கம் இருந்த தொலைபேசிக் காட்சிப் பெட்டியை முன் பக்கம் தள்ளி, முகத்தின் மீது போட்டுக் கொண்டு, அப்போது தொடங்கிவிட்டிருந்த நகைச்சுவைப் போட்டி நிகழ்ச்சியைப் பார்க்கத் தொடங்கினார்கள். இடை இடையே சிரித்தார்கள்.

கொஞ்ச நேரம் கழித்து ஆதியும் ராமும் மேலே வந்தார்கள். சிவாவின் பெற்றோரையும் கௌரியின் பெற்றோரையும் அழைத்தார்கள். `வரப்போகும் தேர்தல் பணிகளையும் மீறி இதற்கு இவ்வளவு நேரம் செலவிடுவது மிக அவசியம்’ என கட்சியின் மேல் இடத்தில் இருந்து உத்தரவு வந்திருப்பதாக விளக்கினார் ஆதி. சிவாவின் கணினிப் பலகையும் கௌரியின் கணினிப் பலகையும் கொண்டுவரப் பட்டன. அவற்றின் தகவல்கள் உறியப்பட்டு, சுவரில் இருந்த தொலைக்காட்சித் திரையின் பாதியில் விரிக்கப்பட்டன. சற்று நேர அலசலிலேயே சிவாவும் கௌரியும் வேறு வேறு அலுவலகங்களில் வேலைசெய்தாலும், அரசு செய்து தந்திருக்கும் வசதிகளையும் மீறி வேண்டும் என்றே வெளியே செல்வதும், ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும் படியான சூழல்களை உருவாக்கிக்கொள்வதும் நடந்திருக்கும் என்பது தெரியவந்தது. அநாவசிய மனிதச் சந்திப்புகளே சாதிப் பண்பாடு மீறிய செயல்களுக்கு விஷ வித்துக்கள் எனத் தெரிந்தும், அவர்கள் அதில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று தெரியவந்தது. கடைசியில் 22 வயதான சிவாவும் 19 வயதான கௌரியும் ஒருமுறை அல்ல, பலமுறை சாதிப் பண்பாட்டு விதிமுறைகளைத் துச்சமாக மதித்து நடந்துகொண்டிருக்கிறார்கள் என்பதும், இந்த நடத்தை சிவாவின் பாட்டியின் தூண்டுதலால் மட்டும் நடந்திருக்க முடியாது என்பதும் முடிவானது.

நாற்காலியில் இருந்து எழுந்து பால்கனிக்குப் போய் கீழே எட்டிப் பார்த்தார் ஆதி. இப்போது காவல் நட்புத் துறை ஆட்கள் மினி வேனில் உட்கார்ந்திருந்தார்கள்.

“யோவ்… ஜி, மேல வாய்யா” என்று கத்தினார்.

வாயைத் துடைத்தபடி ஓர் அதிகாரி கடகடவென படிகள் ஏறி வந்தார்.

பிறகு சிவாவையும் கெளரியையும் அழைத்தார்கள். ராமும் ஆதியும் மாற்றி மாற்றிக் கேள்விகளைக் கேட்டார்கள். காவல் நட்புத் துறை அதிகாரி தனது கணினிப் பலகையில் எல்லாவற்றையும் குறித்துக்கொண்டார்.

“நீ உக்காந்துக்கிட்டே இருக்கே? டிபார்ட்மென்ட் கேள்வி எல்லாம் கேளுய்யா” என்றார் ஆதி.

காவல் நட்புத் துறை அதிகாரி, அவரது கணினித் திரையில் தட்டி, சாதிப் பண்பாட்டு விதிமுறைகள் பக்கத்தைப் பார்த்து சில கேள்விகள் கேட்டு, அவற்றின் பக்கத்திலேயே பதில்களையும் பதிந்துகொண்டார்.

“புணர்ச்சி நடந்துச்சா?” என்றார்.

சிவா `இல்லை’ எனத் தலையசைத்தான்.

“முத்தம் நடந்துச்சா?”

சிவாவும் கௌரியும் ஒருவரையொருவர் பார்த்தபடி `இல்லை’ என்பதாகத் தலை அசைத்தார்கள்.

“தழுவல்?”

இல்லை.

“உடல் தொடுதல்?”

சற்றே தயங்கிவிட்டு, உடல் தொடுதல், தழுவல் நடக்கவில்லையாயினும் ஒரே ஒருமுறை இருவரும் கைகளைப் பற்றியபடி பேசிக்கொண்டிருந் ததைச் சொன்னாள் கெளரி. நிமிர்ந்து எல்லோரையும் பார்த்துவிட்டு தலைகுனிந்து கொண்ட சிவா, மெள்ள ஆமோதித்துத் தலையசைத்தான். ஆதி சடக்கெனத் திரும்பி சிவாவின் அப்பாவைப் பார்த்தார். சிவாவின் அப்பா எழுந்து, சிவாவின் வயிற்றில் ஓங்கி உதைத்தார். சிவா முனகிவிட்டு அமைதியாக இருந்தான்.

அடுத்ததாக ஆதி, கௌரியின் அப்பாவைப் பார்த்தார். அவர் மடமடவென எழுந்து சுவரில் தொங்கிக்கொண்டிருந்த ‘நன்னெறிக் கருவிகள்’ என்ற பெட்டியில் இருந்து ஒரு பிரம்பை எடுத்துக்கொண்டு வந்து, கௌரியை மூன்று முறை ஓங்கி ஓங்கி அடித்தார். முதல் அடிக்கு கெளரி கத்தினாள். மற்ற இரண்டு அடிகளுக்கும் புடவையின் தலைப்பைச் சுருட்டி, வாயை அடைத்துக்கொண்டு சத்தம் வராமல் பார்த்துக்கொண்டாள்.

“ஜீமார்களே, ஒரே சிக்கலாக்கி வெச்சிருக்கீங்களே” என்றபடி தலைமுடியைக் கோதிக்கொண்டார் ஆதி. இரு பக்கப் பெற்றோரும் தீவிரமாக மன்னிப்புக் கேட்டார்கள். பண்பாடு காக்க பரிகாரமாக எதையும் செய்யத் தயார் என உறுதி சொன்னார்கள். பக்கத்து நகரில் நடந்த சாதிப் பண்பாட்டு விழாவில் கலந்துகொண்டு, தான் கொள்கைப் பாடல்கள் பாடிய விஷயத்தை எதிர்பார்ப்புடன் சொன்னார் கௌரியின் அம்மா. இதற்குள் படம் பார்த்து முடித்திருந்த கௌரியின் தம்பி போன் டி.வி-யை எடுத்து முதுகுப்புறம் போட்டுக்கொண்டு வந்து வேடிக்கை பார்க்கத் தொடங்கினான். தரையில் இருந்த பிரம்பைப் பார்த்துவிட்டு, “நல்லா அடி கெடச்சுதா… யாருக்கு?” என்றான்.

அவனையும் சிவாவையும் கெளரியையும் தூரப்போகச் சொல்லிவிட்டு பெரியவர்கள் தங்களுக்குள் கலந்து பேசினார்கள். அந்தக் குடும்பங்களின் அரசுச் சான்றிதழ் பெட்டிகளைக் கொண்டுவரச் சொல்லி கவனமாகப் பார்த்தார் ஆதி. ஒரு சாதிப் பண்பாட்டுத் தியாகிச் சான்றிதழும் ஒரு தன்னார்வலர் சான்றிதழும் கிடைத்தால் ‘ஐயன் இனிய இல்லத் திட்ட’த்தின்படி அவர்களின் இல்லத் தகுதி என்ன ஆகும் எனக் கணக்குப் போட்டார்கள். அதில் ராம் உதவினார். கௌரியின் குடும்பத்துக்கு இரண்டு படுக்கையறைகள்கொண்ட வீட்டுக்கு விண்ணப்பிக்கும் தகுதி கிடைக்கும் வாய்ப்பு இருப்பது தெரியவந்தது. சிவாவின் குடும்பத்துக்கு அப்படியும் ஒரு சான்றிதழுக்கான மதிப்பெண்கள் குறைந்தன. அடுத்த சான்றிதழ் வாய்ப்பு எப்போது கிடைக்குமோ தெரியாது என்பது சிவாவின் அம்மா-அப்பாவுக்குக் கவலையாக இருந்தது. ஆதியும் அவர்களும் ஒரே சாதி என்பதை நினைவுபடுத்தும் வண்ணம், சிவாவின் அம்மா வலது கையை உயர்த்திப் பிடித்துப் பேசினார். அமைதியாக
பல் தெரிய புன்னகைத்தார் ஆதி.

“ஜி, கட்சி ஒப்புக்கிட்டா சிவா அம்மா-அப்பா ரெண்டு பேருமே சிவாவுக்குத் தியாகித் தலைகாணி பிடிக்கலாமே? அப்ப, ரெண்டு சான்றிதழ் குடுத்திடலாமே?” என்று புருவம் சுருக்கிக் கேட்டார் ராம்.
ஆதி, கட்சி அலுவலகத்துடன் பேசினார். பின்பு, ஆதி கேட்டுக்கொண்டபடி கட்சி நிதிக்கு ஒரு தொகை தர தாங்கள் எப்போதுமே தயார் என்று உறுதி கூறினார்கள் சிவாவின் பெற்றோர். அப்படியே செய்வதாக முடிவானது. தங்களுக்கும் இரண்டு தன்னார்வச் சான்றிதழ்கள் தர முடியுமா என்று கௌரியின் பெற்றோர் கேட்டபோது, `முடியாது’ என உதட்டைப் பிதுக்கி மறுத்துவிட்டார் ஆதி.
கட்சி ஆட்களை மேலே வரும்படி கைகாட்டி அழைத்தார் ஆதி. மதிய வெயில் கனிந்து மாலையாகிக்கொண்டிருந்தது. அவர்கள் மேலே வந்ததும் இரண்டு சாதிப் பண்பாட்டுத் தியாகிகளின் சான்றிதழ்களும், மூன்று தன்னார்வலர் சான்றிதழ்களும் தயாரித்துக் கொண்டுவர வேண்டும் என்று விளக்கினார். அந்தச் சான்றிதழ்களில் எழுதவேண்டிய பெயர்களை சரியாகக் குறித்துக்கொள்ளச் சொன்னார். கட்சிக்காரர்கள் கீழே இறங்கிப்போனார்கள்.

“ஜி, இன்னைக்கு தன் டி.வி-யில் பத்துப் பதினஞ்சு நிமிஷத்துக்கு உங்க முகம்தான் தெரியப்போகுது” என்று முகம் விரியச் சிரித்தார் ராம்.

தலைகுனிந்து குலுங்கிச் சிரித்தபடி, “அப்படி பார்த்தா, உங்க புரொடக்‌ஷன் டீமுக்கும்தான் பேட்டா எகிறப்போவுது” என்றார் ஆதி. பிறகு சட்டென ஞாபகம் வந்தவராக பால்கனிக்கு ஓடினார். கீழே வண்டியில் ஏறிக்கொண்டிருந்த கட்சிக்காரர்களைப் பார்த்து, “டேய் ஜீங்களா! சான்றிதழ்ல சாதி கலர் மாத்திக் கொண்டாராதீங்க” என்றார்.

“தெரியும்ஜி…” என்று கீழே இருந்து பதில் வந்தது.

அதற்குள் ராம் அவரது உதவியாளரிடம் இன்னும் சில குறுக்குத் துணிப்பட்டைகளை வண்டியில் இருந்து மேலே கொண்டுவரச் சொன்னார்.

சிவாவும் கெளரியும் இருந்தவற்றுள் தேடி கறுப்பு நிற ஆடைகளை அணிந்துகொண்டார்கள். சிவா அவனது பாட்டியின் போர்வையை விலக்கி, அவளது கை, கால்களில் கட்டியிருந்த பட்டைகளை உருவிக்கொண்டு இன்னொரு படுக்கையைக் கொக்கி நீக்கி, விரித்துப்போட்டுத் தயாரானான். சிவாவின் அம்மா அவன் வாயில் ஒரு கோலா மாத்திரையைப் போட்டாள்.

எதிரே கெளரி வீட்டில், கௌரியின் அம்மாவும் அப்பாவும் ‘நன்னெறிக் கருவிகள்’ பெட்டியில் இருந்து கால், கை கட்டும் பட்டைகளை எடுத்து கௌரிக்கு மாட்டுவது தெரிந்தது.

தனது படுக்கையில் சாயும் முன்பு கெளரி திரும்பி சிவாவைப் பார்த்தாள். சிவா அவளைப் பார்த்துக்கொண்டிருந்தான்!

– பயணி, ஓவியங்கள்: ஸ்யாம் (ஏப்ரல் 2016)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *